திங்கள், அக்டோபர் 01, 2012

ரெண்டுங்கெட்டான்....

சில பேரை பார்க்கும் போது நமக்கு ரொம்ப பொறமையா இருக்கும், கையில பத்து பைசா சேமிப்பு இருக்காது, ஆனா அவ்வளவு சந்தோசமா இருக்கானுங்க, ஆனா பத்து லட்சம் பேங்க் பேலன்ஸ் இருந்தும் மனசு, பணத்துக்கு பல்லக்கு தூக்குகிறது. பணம் சார்ந்து வாழும் வாழ்க்கையில் ஒரு நிம்மதி இருப்பதில்லை. எனக்கு தெரிந்த ஒரு நண்பன், மத நம்பிக்கை அதிகமுள்ளவன், வெளிநாட்டில் தான் பார்த்த ஆசிரியர் பணியை துறந்து, உள்ளூரில் 50 மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் எடுத்துக் கொண்டிருக்கின்றான். என்னால நம்முடியாத, அதே சமயம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய ஒரு நண்பன் அவன். யோசிச்சிப் பார்த்தா, அவனுக்கு வேலையின்னு பெருசா எதுவும் இருப்பது மாதிரி தெரியவில்லை, யாரிடமும் போய் நின்று நான் பார்த்ததும் இல்லை, ஆனாலும் எந்த மூலையில் போராட்டம் என்றாலும் கொடியை தூக்கி பிடித்துக் கொண்டு முன்னாடி நிற்பான். எவனுக்காவது கஷ்டம் என்று வந்தால், கண் இமைக்கும் நேரத்தில் முதல் ஆளாக வந்து நிற்பான். அவனால் எப்படி முடிகின்றது என்றால், “எல்லாம் இறைவன் செயல்என்று பதில்வருகிறது.

இவனுடைய வாழ்க்கையில ஒரு சதவீதம் நாமும் வாழ்ந்து பார்திடலாமுன்னு, அக்காள் மகளுக்கு அல்ஜீப்ரா சொல்லிக் கொடுக்க ஆசைப்பட்டு புத்தகத்தை இரண்டு வாரத்துக்கு முன்னாடி வாங்குனவன்தான்,“சந்தைக்கு போகனும், ஆத்தா வைய்யும், காசு கொடு ஸ்டைல்ல காலாண்டு பரிட்சை லீவு முடிஞ்சிருச்சு, ஸ்கூலுக்கு போகனும் புக்க குடு ன்னு வாங்கிட்டு போயிட்டாள் என் மருமகள். 4 மணிக்கு அமெரிக்காவை எதிர்த்து நடக்கும் போராட்டதிற்கு செல்லவேண்டும் என்று நினைக்கும் போதுதான் பேய் தூக்கம் வருது. வாழ்க்கையில் எதை நோக்கிய இலக்கில் என் கால்கள் செல்கின்றது என்று நினைக்கும் போது ஒரு வித பயம் வருகின்றது.

ரோட்டில் பஜ்ஜி சாப்பிட்டு கொண்டிருந்த போது, மடித்துக் கொடுத்த பேப்பரில் ஒரு நடிகரிடம் கேட்ட கேள்வியை நான் என்னைப் பார்த்துக் கேட்டுக்கொண்டேன் அடுத்த பத்தாவது வருடத்தில் நீங்கள் எப்படி இருப்பீர்கள்?” சத்தியமா என்னால பதிலே சொல்லமுடியல. இத நான் என் நண்பனிடம் சொன்னேன். அவன் ரொம்ப கூலா சொன்னான் என்ன, நீ இப்ப கத்தார் வேலைக்கு டிரை பண்ணிக்கிட்டு இருக்க, பத்துவருசம் கழிச்சு பஹ்ரயினுக்கு டிரை பண்ணிக்கிட்டு இருப்ப, அப்புட்டுத்தான்”. கேட்டுவிட்டு ஹி, ஹின்னு சிரிச்சாலும், அப்படித்தான் இருக்குமோ என்ற நடுக்கம் இருக்கத்தான் செய்கின்றது.

5 லட்சம் கையில இருந்தால் தான், இந்தியாவுல சொந்த தொழில் பத்தி எதுவும் யோசிக்க முடியும் என்று சொன்ன பக்கத்து வீட்டுக்காரன் இப்போ ஆமாண்டே சொன்னேன், எப்போ…. டீ 2 ரூபாயா இருக்கும் போது, இப்போ டீ எம்பூட்டு தெரியுமுல, போ, போயி மேற்கொண்டு பத்து லட்சம் சம்பாதிச்சுட்டு வா, அப்பமும் டீ இதே ரேட்டுல இருந்தா பாப்போம்என்று மூஞ்சில அடிச்சமாதிரி சொல்லிட்டாரு. வரக்கூடிய காலங்களில், சிக்கனமா இருந்தால் தான் முடியும்னு சொல்லுறது எல்லாம் வேலைக்கு ஆகாது, வரும் காலங்களில் சிக்கன் என்பது முடியாத ஒன்று அதற்கு பதிலாக உழைப்பை அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும். எட்டு மணி நேரம் வேலை பார்த்தா, இனி பத்து மணி நேரம் வேலை செய்யனும் அப்பத்தான் வாழமுடியும் அத விட்டுட்டு, அஞ்சு புரட்டாவுக்கு பதிலா மூனு புரட்டா சாப்பிட்டு மிச்சம் புடிச்சா, பத்தாவது நாளு நோயில படுத்துருவஎன்று அவர் சொல்ல, சொல்ல, தாடியில்லாத தத்துவஞானி கார்ல் மார்க்ஸ் மாதிரி தெரிஞ்சாரு.

வாழ்க்கை என்பது மைண்ட் ஓரியண்டட், மணி ஓரியண்டட், என்ற இரண்டு வகைப்படுகின்றது, முதல் நண்பன் மைண்ட் ஓரியண்டட், தன்னுடைய மனதுக்கு பிடித்தமான வாழ்க்கை வாழ்கின்றான். அவனுக்கு ஜீன்ஸ் பேண்ட் போடனும் என்கின்ற வாழ்க்கை தேவையில்லை, சாதாரன வேஷ்டி சட்டை போதுமானது, அவனுடைய மனசை அவன் அப்படி பக்குவப்படுத்திக் கொண்டான், ஆகையால் அவனுடய வாழ்க்கைக்கு பணம் என்பது குறைவான தேவை. மனசு நிறைஞ்ச வாழ்க்கை என்பது மட்டுமே அவனது தேவை.

பக்கத்து வீட்டுக்காரர் மணி ஓரியண்டட். காசு இல்லன்னா கண்ணு இருட்டிரும். சாகும் போது பத்து வீட்டுக்கு சொந்தக்காரனா, பத்து கோடி சம்பாதிச்சவனா இருந்திருக்கவேண்டும் என்பது இவருடைய தேவை. நான் எந்த மாதிரி என்றால், இரண்டுமாதிரியும் கிடையாது அதுதான் என் பிரச்சனையே. எனக்கு வேஷ்டி உடுத்தமுடியாது, ஜீன்ஸ் தான் போடமுடியும், அதே சமயத்தில் பத்து வீட்டுக்கு சொந்தக்காரனா சாகவும் விருப்பமில்லை. இப்படி இரண்டும் கெட்டானுக்கு எப்போதும் பிரச்சனைதான். மேல் சொன்ன இரண்டு வகை மனிதர்களும் அவர்களுடைய வாழ்க்கையில் ரொம்ப தெளிவா இருப்பாங்க, நல்லபடியா போய் கொண்டிருக்கும்.

ஆனால், ஆடையுடனோ அல்லது அம்மண்மாகவோ நிற்காமல் மேல மூடிகிட்டு, கீழ தொறந்து போட்டு நிற்கிற என்னமாதிரி ஆளுங்களுக்கு ஒரு நாள் வாழ்க்கை என்பது ஒரு யுகம், பயந்து பயந்தே சாகவேண்டும். இந்த கேட்டகிரியில் உள்ள மக்கள் ரொம்ப அதிகம். அவனுடய வாழ்க்கைய வாழ்வதா? இவனுடைய வாழ்கைய வாழுவதா? என்று யோசிச்சு முடிவு பண்ணுவதற்குள், முடி நரைத்துவிடுகின்றது.

இவன் நல்லவன்னு சொல்லும் அளவிற்கு இல்லை என்றாலும், கெட்டவன் இல்லை என்று சொல்லும் அளவிற்கு வாழ்ந்து செத்துவிடவேண்டும் என்பதுதான் என்னுடைய இப்போதைய மனநிலை.


------------------------------------------------------------------------------யாஸிர்.