வியாழன், ஆகஸ்ட் 22, 2013

சலூன் கடை.

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
ஒருத்தன் எவ்வளவுதான் பெரிய வீரனாக இருந்தாலும் ஏதாவது ஒரு இடத்துக்கு போகுறதுக்கு அல்லு கலரும். எனக்கு, பள்ளிக்கூடம் படிக்கும் போது ஆங்கில வகுப்பு, காலேஜ் படிக்கும் போது கம்யூட்டர் லேப், இந்தமாதிரியா, லிஸ்ட் ரொம்ப நீளம். இப்படிப்பட்ட நீளமான லிஸ்டில முதல் இடத்துல இருக்குறதுதான் சலூன் கடை. பல பேருக்கு “அய்யோ முடிவளரமாட்டேங்குதே”ன்னு கவலை, எனக்கு “ஏண்டா முடிவளருது”ன்னு கவலை. நம்ம தலையில முடி வளர்கிறது என்பது அங்கொன்னு, இங்கொன்னு கேட்டகரியிலதான் வளரும்
.
கல்யாணத்துக்கு முன்னாடிவரை, “அச்சச்சோ, இப்டி ஆயுடுத்தே” என்று நினைச்சு, நினைச்சு விஜிகாந்த் கண்ணுமாதிரி ரெட் ஆகுறவரை அழுதிருக்கேன். கல்யாணத்துக்கு அப்புறம் அந்த கவலையே போயிருச்சு, ஏன்னா, இப்போது என்னை நினைத்து அதை என் மனைவி அழுதுகொண்டிருக்கிறாள். ஊருல இருக்கும் போது ஏதோ இழவு வீட்டுல துக்கம் விசாரிக்க வந்தவனுங்க மாதிரி “என்ன தம்பி இப்படி ஆயிடுச்சு?, போனதடவ பார்க்கும் போதெல்லாம் நல்லாத்தான இருந்துச்சு, எப்போ இந்தமாதிரி?, டாக்டர பார்க்கலியா?....”ன்னு கேட்டு கேட்டு கேவலப்படுத்துவானுங்க. எங்க நம்ம நண்பன், அவனுடய நண்பனை அறிமுகப்படுத்தி வச்சிருவானோன்னு வாழ்கை திகிலா போயிக்கிட்டு இருக்கும். “டேய், இது என் நண்பன் கதிர்”ன்னு நம்ப நண்பன் அவன் நண்பணை அறிமுகப்படுத்தி வைப்பான், நாமளும் சந்தோசமாக “ஹாய் பாஸ், நான் யாஸிர்”ன்னு கையகுலுக்குவேன். அடுத்த கேள்வி “எப்ப ப்ரோ உங்களுக்கு இதுமாதிர் ஆச்சு”ன்னு கேட்பான். “முந்தாநாள்தாண்டா முட்டாப்........”ன்னு வாயிலவருவதை மென்னு வயித்துக்கு அனுப்பிவைப்பேன். “கல்ஃப் கேட்டுக்கு போய்பாருங்க” “ஹேர் டிரான்ஸ்பிளாண்டேசன் செய்ங்கன்னு” நம்ம மேல அம்புட்டு அக்கரையையும் அன்னைக்கே காட்டுவானுங்க.

காலேஜ் படிக்கும் போது, இவனுங்க என்னமோ தலய சீவிட்டு ரோட்டுல இறங்கினா, பஸ்ட் இயர் பொண்ணுங்கல்ல இருந்து பைனல் இயர் பொண்ணுங்க வரைக்கும் மடில விழுந்துகிடக்கும்னு நெனப்பு, பொண்ணுங்க எதிர்த்தாப்புல வந்தா, “பாய் சீப்பு இருக்கா?”ன்னு கேட்டு நம்மகிட்ட ஹியூமர் வேற. இவனுங்க அக்கப்போருக்கு அஞ்சி, கிளாஸுக்கு போகும்போதும் சரி, கிளாஸ் முடிஞ்சபின்னாடியும் சரி தனியாகத்தான் போறது, வர்றது. கையோட இன்னைக்கு கூட்டிகிட்டு போகனும்னு ரூம்ல வந்து உட்கார்ந்து இருப்பானுங்க, குளிச்சி முடிச்சிட்டு வந்தவன், இவங்கள பார்த்தபின்னாடி “ஆயி போக மறந்திட்டேன், நீங்க போங்க நான் பின்னாடி வாரேன்”னு வாளிய தூக்கிட்டு மறுபடியும் பாத்ரூமுக்கு ஓடுவேன். கிளாஸ் முடிஞ்சா “கொஞ்சம் எழுத வேண்டியிருக்கு”, “டிராயிங்க் போடவேண்டியது இருக்குன்னு” வண்டி வண்டியா பொய் சொல்லி அவனுங்ககிட்ட இருந்து தப்பி பிழைப்பேன். சில சமயங்களில் மந்தையில சேர்றமாதிரி ஆகிடும், “1. தல முடிய தூக்கிவிடுறது, 2. மயிற முன்னாடி இழுத்து விடுறது, 3. இந்த சீப்பு கேக்குறது, இதயெல்லாம் பண்ணக்கூடாது” ன்னு சூடம் ஏத்தி சத்தியம் வாங்கிட்டுத்தான் சேர்ந்து நடப்பேன். ஒரு கை பேண்ட் பாக்கெட்டிலும், இன்னொரு கை புத்தகத்தை தூக்கிக்கொண்டும் இருக்கும். அர்னால்ட் படம் முதல் அல்போன்ஸா நடித்த பிட்டு படம்பற்றி நல்லாத்தான் பேசிக்கிட்டு வருவானுங்க, திடீரென கையில இருந்த புத்தகம் அக்குலுக்கு இடம் மாறும், ரெண்டு கையாலும் தலையை விஸ்கு, விஸ்குனு கோதிவிடுவானுங்க. “என்னடா எலி திடீர்னு அம்மணமா ஓடுது”ன்னு எதிர்ல பார்த்த, அங்க இருந்து ரெண்டு மூணு பாவட போட்ட எலிகள் எதிர்லவரும். என்னோட வருத்தம் எல்லாம் ஒரு நல்ல பிகருக்கு செஞ்சாலும் பரவாயில்லை, உலக லெவல்ல ஆடிசன் வச்சாலும் அந்த மாதிரி அட்டு பிகர பாக்கவேமுடியாது, அதுக்கு இவனுங்க அந்த முடியை வச்சிக்கிட்டு பண்ணுற அலப்பரை இருக்கே சடயாண்டி முனீஸ்வரனுக்கே பொருக்காது. இதயெல்லாம் அவனுங்க வாங்கிக்கொடுக்கும் ஆரிப்போன டீய குடிக்குறதுக்காக பொருத்துக்கொண்டு பின்னாடியே போகனும்.
ஒவ்வொருத்தனும் அவங்களுடைய சிறுவயது போட்டோவைக் காட்டிகொண்டிருந்தார்கள், “அப்ப விட இப்போ கொஞ்ச கருத்துட்ட மச்சி”, “கையில அப்பவே அந்த தழும்பு இருந்திருக்குடா” “ம்ம்ம்ம் அப்பவும் பிகருங்க கூடத்தான் நிக்குற” “உன்னய தூக்கிவச்சிருக்குறது யாருடா?” இப்படியாக பல கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம் என்னுடய பள்ளிப்பருவத்து போட்டோவைக்காட்டினேன். “யாருடா, உன் தம்பியா?”, “டேய், அது நான்தாண்டா”. “பொய் சொல்லாத யாஸிரு, சாமி கண்ண குத்திரும்”, “அடப்பாவி, சத்தியமா நான் தாண்டா அது” எல்லோரும் ஒன்னு கூடி ஒருதடவைக்கு ரெண்டுதடவ பார்த்திட்டு “பாய் அப்பெல்லாம் முடி இருந்திருக்குடா?” என்று சொல்லவும் “அமுல் பேபி மாதிரி இருக்கடா” “ரொம்ப குயூட்டா இருக்கடா” என்ற பதிலை எதிர்நோக்கி காத்திருந்த எனக்கு எப்படி இருந்திருக்கும். “நான் என்னடா பிறவிக் குருடு மாதிரி பிறவிச் சொட்டையாடா? நீங்கெல்லாம் ஹைட்ரோசீல் நோய் வந்துதாண்ட சாவீங்க” சாபம் விட்டுட்டு ♪♫♫”தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில மான் போல வந்தவனே யார் அடிச்சாரோ, யார் அடிச்சோரோ…..♫♫♪ சோகபாட்டை பாடிக்கிட்டே போட்டோவ தூக்கிகிட்டுவந்திட்டேன்.

இப்படியாக பல பல சோகக்கதைகள், எல்லாத்தையும் இங்க போட்டம்னா “கன்னித்தீவு” ரிகார்ட் எல்லாம் காணமல் போய்விடும். முடிவெட்டவேண்டும் என்ற நிலை வந்துவிட்டால், சலூன் கடையை செலக்ட் செய்யவே ஒரு மாதம் எடுத்துக்குவேன். முதல் வாரத்துல 3 கடைய செலக்ட் பண்ணி அடுத்த வாரத்துல, அந்த 3 கடையில ஒரு கடைய முடிவு பண்ணி, அதற்கு அடுத்தடுத்த வாரங்களில் அந்த கடைய பற்றி தெரிந்துகொண்ட பின்புதான் அங்க போயி முடியே வெட்டுவேன். கடயைப்பற்றி தெரிஞ்சுக்கிறதுன்னா “யாரு ஓனர்?” “ஒரு நாள் சம்பாத்தியம் எவ்வளவு” “வேறு எங்க எங்க பிரான்ஞ் இருக்கு” “பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் யார் யார்?”இப்படின்னு நீங்க நெனச்சா அது தப்பு, நான் தெரிந்துகொள்வது எல்லாம் “எந்த நேரத்துல கூட்டம் இருக்காது” “எந்த நேரத்துல முடிவெட்டுறவன் கேள்வி எதும் கேட்காமல் முடிவெட்டுவான்” இது ரெண்டுமட்டும் தான். எல்லாத்தையும் கலெக்ட் பண்ணி ஒரு சுபயோக சுபதினத்தில் போய் உட்கார்ந்து முடியவெட்டிட்டு வருவேன்.

குண்டுவைக்குறத விட அதிகளவு, சிரமப்பட்டு வேவுபார்த்து, நாம் திரட்டிய விசயங்களைக்கொண்டு தீட்டிய திட்டம், சில நேரங்களில் பெரும் திண்டாட்டத்துல போய் முடியும். எவனும் இருக்கமாட்டான் என்று நாம குறித்த நேரத்துலதான், நேர்த்திக்கடனை நிறைவேற்றவந்தவர்கள் மாதிரி லைன் கட்டி நிப்பானுங்க. எனக்கு சலூன் கடையில கூட்டத்தைப் பார்த்தால், கை, கால் எலாம் உதறி, கண்ணைக் கெட்டிவிடும். அதுக்கு காரணம், பாக்கிஸ்தான்காரன் இந்திய கிரிகெட் டீமில செலக் ஆனமாதிரி வெறிச்சுப் பாப்பானுங்க. சிலர் பார்க்குற பார்வை ஏதோ சோத்துக்கு இல்லாத அனாதையைப் பார்ப்பது போல ரொம்ப பரிதாபமாக இருக்கும், அது என்னை ரொம்ப சங்கடப்படுத்தும். இந்த மயித்துக்குத்தான் நான் கூட்டம்இருக்குற சலூனுக்கு எல்லாம் போறது இல்லை. நம்ம தலையில இன்னும் என்ன கேவலப்படுத்த இருக்குன்னு நெனச்சு, கேவலமா வெட்டுனாலும் பரவாயில்லைன்னு, புதுசா கத்திபுடிக்கிறவனை எல்லாம் நம்பி உட்கார்ந்த சம்பவங்கள் ஏராளம். சலூன் கடையில, அந்த சேர்ல உட்கார்ர வரைதான் கொஞ்சம் டெரர்ரா இருப்போம். உட்கார்ந்த பின், துணியைமூடி தலையில தண்ணி அடித்தவுடன் ஒரு சொக்கு, சொக்கும், அவ்வளவுதான் அப்படியே தூங்கிருவேன். அதுக்கு பின்னாடி முடிவளர, முடிவெட்டுகிறவன் சொல்லும் “கத்தாள தேய்ங்க சார்” “செம்பருத்தி, சீயக்காய் நல்லா அரச்சி...... தேய்ங்க’, “கேசவர்த்தினி எண்ண தேய்ங்க” “அமேசான்காடுகளில் இருந்து தயாரித்த எர்வோமேட்டின உபயோகிச்சு பாருங்க”................ன்னு எடுபட்டவனுங்க சொல்லுற எல்லாத்தையும் எட்டாம் வகுப்பு படிக்குறப்ப இருந்தே கேட்டு கேட்டு புளிச்சுப்போனது. அதை எல்லாம் லிட்டர் கணக்காகவும், டன் கணக்காகவும் உபயோகப்படுத்திவிட்டு, கடைசியா இப்போது இந்துலேகா எண்ணெயில வந்து நிக்குது.
பெரிய சலூன், நல்லா வெட்டுவான்னு எவங்கிட்டயாவது போனா, “எந்தமாதிரி வெட்டனும்”னு கேட்டு ஹோட்டல் மெனுகார்டு மாதிரி ஒன்னு குடுப்பானுங்க, அந்த அளவிற்கு என் இனத்தை எவனும் அசிங்கப்படுத்தமுடியாது. கடைசியா வெட்டிடோ, வழிச்சிட்டோ போகும்போது, தனியா அவன கூப்பிட்டு, “மூஞ்ச நல்லா பார்த்துக்கோ, அடுத்த தடவ வரமாட்டேன், அதையும் மீறி வேற வழியில்லாம வந்திட்டா, இந்த கேட்டலாக தயவுசெய்து கொடுத்துறாத”ன்னு புத்திமதி சொல்லி பத்து ரூபா டிப்ஸ் கொடுத்துட்டு அங்கிருந்து நகருவேன். எதுக்கு உள்ளூருல அசிங்கபடனும், முகம்தெரியாதவன் கிட்டபோய் அசிங்கபடுவோம்னு பெரும்பாலும் 10 ரூபா முடிவெட்ட, 25 ரூபாய்க்கு டாக்ஸி புடிச்சு, பக்கத்து ஊருக்கு போய்விடுவேன்.

“எந்தமாதிரி வெட்டனும்” “எப்படி வெட்டனும்” இந்த கேள்வியை கேட்கும்போது, அரிவாள எடுத்து அவன் கழுத்திலேயே வெட்டணும்னு தோணும். எங்க ஊருல முடிவெட்டுகிறவர் இருக்கிறார். அவரப்பார்த்து மற்றவர் எல்லாம் திருந்தனும். அவர் முடிவெட்டிவிட வீட்டுக்கே வந்திருவார், ஊருக்கு போனா அவரைத்தவிற பெரும்பாலும் எவங்கிட்டயும் முடிவெட்டுறது கிடையாது. முடிவெட்டனும்னு சொன்னா போதும், “தரயில உக்காருங்க” என்ற ஒருவார்த்தைக்கு அப்புறம் “முடிஞ்சிருச்சு எந்திரிங்க” என்ற இரண்டே வார்த்தைமட்டும்தான் வரும். இந்த நிலத்துல இதுதான் வளரும், இப்படித்தான் வளரும், இங்கிட்டுத்தான் வளரும், இவ்வளவுதான் வளரும், இதத்தான் அருவடைசெய்யமுடியும்னு அவனுக்கு தெரிந்திருக்கிறது என்னைப்பொருத்தவரையில் அவன் கலைஞன். அறகுறை கத்துக்குட்டிகள் சில கத்திரியை கையில புடிச்சிக்கிட்டு காட்டுற படத்த பாக்குறதுக்கு, பேசாம தலைவாவையே பத்துதர பாத்திரலாம்.

பத்து புள்ளைய பெத்தவங்கிட்ட போய், புள்ளய எப்படி பெத்துக்குறதுன்னு கேட்கலாம், பட்டப்படிப்பு படிச்சவங்கிட்ட பத்தாம்வகுப்பு பாஸாக ஐடியா கேட்கலாம், ஆனா சில ..............னுங்க, எங்கிட்ட வந்து “முடியெல்லாம் கழியுது என்னடா பண்ண?”ன்னு கேட்டா நான் என்ன சொல்லுறது. “ஆங்.....மூட்டப்பூச்சு மூத்திரத்தை எடுத்து மூஞ்சில தேயி”ன்னு கடுங்கோபத்துல பல்லக்கடிச்சிக்கிட்டு ரைம்மிங்ல சொன்னா. “போடாங்ங்......தலையில முடி வளர மூஞ்சில எதுக்குடா தேய்க்கணும், தலையிலதாண்டா தேய்க்கனும் லூஸு” ன்னு அறிவாளியா திட்டிக்கிட்டு போவானுங்க. “கவரிமான் பரம்பரை” பழமொழி, “தலைக்கு மேல பிரட்சனை” போன்ற சீரியஸ் வசனங்களைக் கூட ஆதித்யா சேனல பாக்குறமாதிரி பாக்குறது “வாட் கைண்ட் ஆஃப் சமுதாயத்துல நாம லிவ்விங்” என்ற எண்ணத்தயே ஏற்படுத்துகிறது.

__________________________________________________________________________________யாஸிர்.

6 கருத்துகள்:

  1. உங்க
    சோகக்
    கதையை
    படிச்சு
    நினைக்க,
    நினைக்க
    சிரிப்புத்தான்
    வருது.
    ஆனா...
    "முடி"யல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொழப்பு சிரிப்பா சிரிக்குது. மறுமொழியிட்டமைக்கு மிக்கநன்றி

      நீக்கு
  2. பதில்கள்
    1. இருக்குற பத்து பேருல நீங்களும் ஒரு ஆளு பாஸ். அசிங்கப்படுத்தாதீங்க.

      நீக்கு
    2. Followers ஆகி விட்டேன்... தொடர்கிறேன்... வாழிய வாழியவே...

      நீக்கு