செவ்வாய், செப்டம்பர் 29, 2015

குற்றம் கடிதல்.

அஜித் குமார் படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால், இந்த படம் உங்களுக்கு அவ்வளவாக பிடிக்காது. விஜய் படம் உங்களுக்கு பிடிக்கும் என்றால், தயவு செய்து இந்த படத்திற்கு செல்லவேண்டாம். ஏனென்றால் இது அவ்வளவு நல்ல படம். நீ அஜித் ரசிகன் உனக்கு மட்டும் எப்படி இந்த படம் பிடித்திருக்கிறது என்று நீங்கள் நினைக்கக் கூடும். ஆனால், அஜித்தை பிடித்தவர்களுக்கு அஜித்தின் படத்தை பிடிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லையே.

புதன், செப்டம்பர் 09, 2015

மச்சினி நமிதாவுக்கு.

குசலம், நான் அதிகமாக யாருக்கும் கடிதங்கள் எழுதுவதில்லை, இதற்கு முன்பாக உங்கள் மாநிலத்துக்காரர் ஒருவருக்குத்தான் கடிதம் எழுதினேன். நல்லவேளை, அது அவர் கையில் கிடக்கவில்லை. ஒருவேளை அந்தக் கடிதம் அவருக்குப் போய் சேர்ந்திருந்தால் நானும் போய் சேர்ந்திருப்பேன்.  இப்படி சிலருக்கு நான் கடிதங்கள் எழுதினாலும், உங்களுக்கு மட்டும் தான் ‘’மனம் திறந்த’’ கடிதம் எழுத தோன்றியது.

தமிழ் நாட்டில் பிறந்த திரிஷா போன்ற நடிகைகள் கூட  ‘’ஆக்சுவல்லி’’ என ஆங்கிலத்திலேயே பேச ஆரம்பிக்கின்றார்கள். ஆனால் நீங்கள், எங்களை மஞ்ச மாக்கான்கள் என அறிந்தும் தமிழில் ‘’மச்சான்ஸ்’’ என்று அழைக்கின்றீர்கள். எல்லா நடிகைகளுக்கும் ‘’குஞ்சும் குஞ்சும் தமில் தெரியும்’’’ ஆனால் உங்களுக்கு மட்டும் தான் தமிழை கொஞ்சத் தெரியும்.

உங்களுடய சமீபத்திய புகைப்படங்களைக் கண்டேன். அதில் சிலவற்றை பிரிண்ட் எடுத்து, பார்த்துப் பார்த்து கதறி அழுது கண்ணீர் விட்டேன். 7 ஜி ரெயின்போ காலணியில் தன் உதவாக்கரைப் பையன் ஒரு திறமையான மெக்கானிக்  என்று அறியும் போது, ஆபர் லெட்டரை கையில் வைத்துக்கொண்டு அந்த தகப்பன் வடித்தது போன்ற ஆனந்த கண்ணீர் அது. குஜராத்தில் பிறந்தவர்களில் எனக்கு காந்திக்கு பிறகு உங்களைத்தான் பிடிக்கும். ஆனால் சில காலம்,  இரண்டு பேர் சேர்ந்தால்கூட (கட்டி) பிடிக்கமுடியாத சைஸ்ஸில் நீங்கள் வீங்கிப் போனதில் என் போன்றவர்களின் மனம் வாடிப்போனது.

‘’நயகரா நீர் வீழ்ச்சிக்கு முன்பாக நமிதா நின்றால், நயகராவே தெரியாது’’ என்று கூறி என்னை கேலி செய்தவர்கள் எல்லோருக்கும்,  முன்பு ஒரு காலத்தில் நீங்கள்தான் வயகராவாக இருந்தீர்கள். ஏன் என்றே தெரியவில்லை!!! நான் நேசிக்கும் அனைவரும், ஒன்று குண்டாகிறார்கள் இல்லை உண்டாகிறார்கள்.  நீங்கள் திரையில் தோன்றாத அந்த வறண்ட நாட்களில்,  என் இதயத்தில் உங்களுக்காக ஒதுக்கியிருந்த அந்த இடத்தை குறைந்த வாடகைக்கு அனுஷ்காவிற்கு ஒதுக்கியிருந்தேன். பாருங்கள் அவர்கூட குண்டாகிவிட்டார். அஜித், ஜோதிகா, மீனா, குஷ்பு...........இப்படி அந்த லிஸ்ட் பெரியது.

என்னை ‘’மச்சான்’’ என்று அழைப்பதற்கான உறவுமுறையில் பல அத்தை, /மாமன் மகள்கள் இருப்பினும் ஏனோ அவர்கள் என்னை பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள். அது அவர்கள் தவறு இல்லை. என்னைவிட வயது மூத்தவர்களாகிவிட்டதால் அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை. அவர்கள் திருமணமாகி தியேட்டரில் பார்த்த முதல் படம் ‘’தில்லானா மோகனாம்பாள்’’ என்றால் அவர்கள் என்னிலிருந்து எத்தனை வயது மூத்தவர் என்பதை விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

என்னைவிட வயது குறைந்த பெண்கள் அந்த லிஸ்டில் இருந்து மச்சான் என்று அழைத்தாலும், நீங்கள் “”ஸ்”” ஸோடு சேர்த்து ‘’மச்சான்ஸ்’’ என்று அழைக்கும் அழகே தனி. ‘’ஸ்’’ஸோடு நீங்கள் அழைக்கும் போது பத்து கிஸ் பெற்ற அல்ப சந்தோசம் எங்களுக்கு. அந்த வார்த்தைக்கு வசியப்பட்டு என் அத்தை மகளை திருமணம் செய்துகொண்டேன். நீங்கள் அழைக்கும் மச்சான்ஸ்ஸுக்கும், அவள் அழைக்கும் மச்சானுக்கும், ‘’♪♫அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட ♫♪’’ பாடலை எஸ்.ஜானகி பாடியதற்கும், கானக்குயில் கல்பனா அக்கா பாடுவதற்கும் இருக்கும் வித்தியாசம். கானக்குயில் கல்பனா அக்காவைப் பற்றி தெரியும் தானே? இல்லை என்றால் கூகுளில் தேடி என்னுடய நிலையை தெரிந்துக்கொள்ளுங்கள்.

எங்கள் அண்ணா படத்தின் போஸ்டரில் உங்களைப் பார்த்தவுடனே எனக்கு பிடித்துவிட்டது. அதுவும் விஜயகாந்தின் அருகில் நீங்கள் மேலும் அழகாகத் தெரிந்தீர்கள். ‘’ ♪♫ பம்பரக் கண்ணாலேய்ய்ய்ய் பச்சக்குத்த வந்தாலே ♪♫.’’ பாடலில் உங்கள் ஆட்டம் அபாரம் என்றால் ‘’ ♪♫ அர்ஜீனா, அர்ஜீனா..... ♪♫..’’ பாடலில் நீங்கள் ஆசெம். அந்த பாடலில் பொத்தான் இல்லாத சட்டையணிந்து நின்ற புரட்சி திலகா...., ஓ சாரி, புரட்சி திலகம் சரத்குமார் கொஞ்சம் டொங்கள் போல் தெரிந்தார். அடுத்த படத்தில் உங்கள் அப்பாவாகவோ/தாத்தாவாகவோ நடிக்க வரும் பு.திலகாவிடம் ‘’இப்போதெல்லாம் ஏன் பூமக்ஸ் பனியன் ஜட்டி விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவதில்லை?’’ என்பதை கேட்டுச்சொல்லவும்.

நீங்கள் வரும் கிஸ் கிஸ் கிஸ்கான் கம்பியைத்தான் நான் எல்லோருக்கும் ரெகமன்ட் செய்கிறேன். அவர்களை துபாயில் ஒரு பிரான்ச் ஓப்பன் பண்ணச் சொல்லவும். ‘’கிஸ்கான் ஸ்டீல் மவ்ஜீத் ஆதா அல்இமராத், கிஸ் கிஸ் கிஸ்கான்’’ என ஒரு விளம்பரமும் நீங்கள் நடித்து கொடுத்துவிட்டால் போதும். உங்களை, நாக்கில் நரம்பில்லாமல் பேசிய நயவஞ்சக கூட்டம் கொஞ்சம் துபாயில் இருக்கின்றார்கள் அவர்களிடம் நீங்கள் அரபியில் பேசும் விளம்பரத்தை காட்டிக் காட்டி எனது கோபத்தைக் குறைத்துக்கொள்வேன். எல்லோரையும் மன்னித்துவிடலாம், ஆனால் லட்சுமி மேணனுக்கு எல்லாம் ரசிகனாக இருக்கும் ஒருவன் உங்களை குறை கூறியதை மட்டும் என்னால் மன்னிக்கவே முடியவில்லை.

நீங்க எங்களை மச்சான்ஸ் என்று அன்போடு அழைப்பதை விரும்பாத நடிகர்/இயக்குனர் சேரன், தமிழை கேவலப்படுத்துகின்றார் என்றார். ஆனால் அவர் நடிகர் என்ற பெயரில் நடித்து சினிமாவை கேவலப்படுத்துவதை விடவா இது கேவலம்?. அன்று நீங்கள் ஆணையிட்டிருந்தால் சேரனுக்கு செருப்பு மாலை அணிவித்திருப்போம்.  ஆனால் உங்களுக்கோ உள்ளேயும் வெளியேயும் வெள்ளை மனசு, நீங்கள் அதை விரும்பவில்லை.

அஜித்துடைய எவ்வளவு மொக்கை படம் என்றாலும் அஜித் குமாரை படம் பார்த்துக்கொண்டு இருக்கும்போது திட்டுவதில்லை, உயிரை கையில் பிடித்துக்கொண்டு பல்லைக் கடித்துக்கொண்டு மீதிப் படத்தையும் பார்த்துவிடுவேன். நான் (படத்துக்கு) கூட்டிசென்றவர்கள் கேவலமாக திட்டுவார்கள் (அஜித்தையும் என்னையும்) என்பது வேற விசயம்.  ராஜா என்ற படத்தையே பார்த்துவிட்டேன் என்றால் என்னுடய பொறுமையையும், அஜித்தின் மேல் நான் வைத்திருக்கும் பாசத்தையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். ராஜா என்ற ஒரு படம் வந்ததா? என்றால் வந்தது.

இவ்வளவு அஜித் வெறியனான நானே ‘’பில்லா 1’’ ல் அஜித் உங்களை சுட்டுக்கொல்லும் காட்சியில் கட்டுப்பாட்டை இழந்து கடுமையான வார்த்தைகளால் திட்டிவிட்டேன்.  நீங்கள் இல்லாத மிச்ச காட்சிகளைக் காண எனது மனம் ஒப்பவில்லை. மேலும் ‘’பில்லா 2’’ படத்தில் உங்களை ஒப்பந்தம் செய்யாததை அறிந்த போது தெய்வ குத்தமாகிவிடும் என்று கத்தினேன், கதறினேன். கடைசியில் படம் பப்படம் ஆனது உலகம் அறிந்த செய்தி.

உங்களை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதற்கு, கத்தியால் என் கையை கிழித்து ரத்தத்தை இந்த லட்டரில் காட்ட இயலாது என்பதால் ஒரு சின்ன சம்பவத்தை கூற ஆசைப்படுகின்றேன். என் நண்பர்கள், ‘’பாபநாசம் படத்தில் வேறு யார் நடித்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்’’ என்பதைப்பற்றிப் பேசிக்கொண்டு இருக்கும்போது, நான் ‘’தலைவி நமிதாவை நடிக்க வைத்திருக்கலாம்’’ என்று சொன்னேன். ‘’ஏன் கவுதமி நல்லாத்தானே நடிச்சிருக்குது?’’ என்று ஒருவன் கூறினான். அதற்கு நான், ‘’கவுதமி கேரக்டருக்கு இல்ல, ஸ்கூல் படிக்கும் கமல்/கவுதமி பொண்ணு கேரக்டருக்குன்னு என்று சொன்னேன். அதுல என்ன குத்தம் கண்டுபிடிச்சானுங்கன்னு தெரியல. ஒரு வாரம் பொறுமையா வச்சி செஞ்சானுங்க.

உங்களின் உடல் எடை குறைந்த லேட்டஸ்ட் போட்டோவைத்தான் இதில் இணைக்கவேண்டும் என்று நினைத்தேன், ஏனோ அதிக நாட்கள் என் பர்சிலும், புத்தகங்களிலும், ரூம் சுவரிலும், பேண்ட் பாக்கெட்களிலும் ஆக்கிரமைப்பு செய்த இந்த போட்டோவை இணைப்பதே அதனிலும் சாலச் சிறந்தது என்று முடிவெடுத்தேன்.  அரசியலில் குதிப்பதற்கு முடிவெடுத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். குதிக்கும் போது பார்த்துக் குதிக்கவும், அதிக உயரத்தில் இருந்து, ஸ்கர்ட் போட்டுக்கொண்டு குதிக்கவேண்டாம், குறிப்பாக தி.மு.க பக்கம் குதித்திட வேண்டாம். குஷ்புவின் இடுப்பில் கை வைத்து, கடைசியில் கை சின்னத்தின் கட்சிக்கே கை மாற்றிவிட்டார்கள்.

உங்களின் பெருமைகளைப் பற்றி ஜொள்ளிக்கொண்டே போகலாம். உங்களின் எதிர்கால கணவர், பணக்காரராகவோ, அல்லது ரொம்ப அழகனாவராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீங்கள் கொடுத்த பேட்டியில் கண்டேன். மிகவும் சந்தோசம்  இறுதியாக,

ஒரே ஒரு முறை கல்யாணம் என்ற குற்றத்தை செய்தவர்களுக்கு ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா?


-----------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

திங்கள், ஆகஸ்ட் 24, 2015

கந்தூரி விழா

எழுத்தாளர் சுஜாதா, வீட்டில் எல்லா இடத்திலும் ஏதாவது ஒரு புத்தகம் இருக்கும்படி வைத்திருப்பாராம்.  எந்த இடத்தில் இருந்தாலும் படிப்பதற்கு ஏதாவது இருக்கவேண்டும் என்ற காரணமாம். அதனால்தான் அவரால் அதிக புத்தகங்களை படிக்கமுடிந்ததாக கேள்விப்பட்டிருக்கின்றேன். அதே போல நாமும் முயற்சிக்கலாம் என்று, ரூமில் ஒரு புத்தகம், ஆபிஸில் ஒரு புத்தகம், தினந்தோரும் செல்லும் மச்சான் ரூமில் ஒரு புத்தகம், பார்க்கிங்க் கிடைக்காமல் காரில் இருக்கும் போது படிப்பதற்காக ஒரு புத்தகம்...... என எல்லா இடத்திலும் வைத்திருந்தேன். காரில் புத்தகம் வைக்கும் போது கொஞ்சம் ஓவராத்தான் போறோம்மோன்னு எனக்கே தோணுச்சு. ஒரு புத்தகத்தையாவது படிச்சியா? என்று நீங்கள் தமிழில் கேட்டால், நான் ‘லா’ என்று அரபியில் பதிலுரைப்பேன்.

நேற்று, ரூமில் வைத்திருந்த சுந்தர ராமசாமியின் ‘’ஒரு புளியமரத்தின் கதை’’ புத்தகத்தை படிக்க திறந்தேன். இஞ்சினியரிங் முதலாமாண்டு கெமிஸ்டரி புத்தகத்தை முதன்முதலாக திறக்கும் போது உடலில் சில வேதியல் மாற்றங்கள் உண்டாகி வந்தது பாருங்க ஒரு தூக்கம்......அதே தூக்கம் திரும்ப தேடி வந்தது. ஆனால் படித்த அந்த இரண்டு பக்கங்கள் என்னை, ஏர்கண்டிசனுடன் கூடிய என்னுடய டவுஸர் காலத்துக்கு இழுத்துச்சென்றது.

அந்த புளியமரம் தர்ஹாவின் காம்பவுண்டுக்கு உள்ளே இருந்ததா? வெளிப்புறமாக இருந்ததா? என்ற ஞாபகம் கூட இப்போது எனக்கு இல்லை. அதில் தான் கந்தூரியின் இரண்டாவது கொடியை கட்டுவார்கள். ரொம்ப வயதான மரம், கிழம் தட்டிய மனிதனின் தோல் போல இருக்கும். மரம் முழுவதும் செதில் செதில்களாக இருக்கும். அடிக்கடி பொக்கு கிளைகள் கீழே விழுந்த வண்ணம் இருக்கும். ஆனாலும் அதன் புளியம் பூவும், பழமும் இன்னும் நாவில் எச்சிலை ஊறச் செய்கின்றது. கிடைக்கும் நேரத்தில் எல்லாம் நாங்கள் அதைச் சுற்றி சுற்றியே இருந்தோம். எங்களை விரட்டி அடிக்க எத்தனையோ கட்டுக் கதைகள் சொன்னாலும் புளியமரமே கதி என்று கிடந்தோம். பொக்கு மரமாக இருந்ததால், பாம்பின் புகழிடமாகிவிட்டது. பின்பு ஒரு நாளில் பள்ளிவிட்டு வீடு திரும்பும் போது கை, கால், தலை, உடல் என வெட்டிச் சாய்க்கப்பட்ட மனிதனைப் போல் துண்டு துண்டாக கிடந்தது.

எங்கள் தெருவில் ஒரு அவுல்யாவின் அடக்கஸ்தலம் இருக்கிறது. இதுபோன்ற அடக்கஸ்தலங்களுக்கு தர்ஹா என்று பெயர். இவருடய பெயரிலேயே நிறைய தர்ஹாக்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. எக்ஸாக்டாக எந்த இடத்தில் அந்த அவுல்யா முக்தியடைந்தார் என்பது யாருக்கும் தெரியாது. இருந்தாரா? என்பதுகூட கேள்விக்குறி. பண்டைய காலத்தில் பெரிய நிலபிரபுகளிடம், நிலத்தை ஜமாத்திற்கு ஆட்டயப்போடுவதற்காக இதுபோன்ற அவுல்யாக்கள் தேவைப்பட்டார்கள்.  இவர்கள்தான் இஸ்லாத்தை ஊர் ஊராக சென்று பரப்பியவர்கள். அவர்களின் ஞாபகாற்தமாக அவர் நின்ற, திண்ற, உறங்கிய இடங்களை சமதியாக மாற்றி ஜாமாத் நிறைய சம்பாத்தியம் செய்துகொண்டிருந்தது.

இதுபோன்ற தர்ஹாக்களில் தொழுகை நடக்காது, ஏதாவது வேண்டுதல் இருந்தால், 50 மில்லி எண்ணெயை அங்கு இருக்கும் விளக்கில் ஊற்றிவிட்டு அந்த அவுல்யாவிடம் அல்லாவிடம் ரெக்கமண்டேசன் பண்ணச் சொல்வார்கள். வேண்டுதலைப் பொறுத்து, மில்லி லிட்டரின் அளவு கூடும். எண்ணெய் வாங்குவதற்காக பக்கத்திலேயே ஒரு கடை இருக்கும். நாம் ஊற்றிய எண்ணெய் இரவில் திரும்ப பாதி விலைக்கே அந்த கடைக்கு வந்து சேர்ந்துவிடும். சிலபேர்கள் அவுல்யாக்களையே அல்லா என நம்பி, விம்பி விம்பி அழுது பிராத்தனை செய்வார்கள். இதுபோன்ற ஆர்வக்கோளாருகள் செய்யும் தவறுக்கு, பாவம் அவுல்யா அல்லாவிடம் அடிவாங்கிக்கொண்டிருப்பார். ப்ளஸ் ஒன் படிக்கும் போது மாதத் தேர்வில் ஆங்கிலத்தில் ஜஸ்ட் 45 எடுத்தா போதும் என்று பிராத்தனை செய்து நானும் எண்ணெய் ஊற்றினேன். ஆனால் எடுத்த மார்க்கிற்காக அந்த வாத்தியார் அடித்ததில், பால் ஊற்றும் நிலைக்கு முந்திய நிலை வரை சென்று தப்பித்தேன். அன்றிலிருந்து அவுல்யா என்னிலிருந்து அப்பிட் ஆகிவிட்டார்.

வருடம் தோறும் இதுபோன்ற தர்ஹாக்களில் கந்தூரி விழா நடக்கும். கொடி எடுப்பது, சந்தனக்கூடு எடுப்பது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். இது எதுவுமே இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது கிடையாது, தர்ஹா உட்பட. இதுபோன்ற கந்தூரிவிழாவிற்கான காரணம் ரொம்ப எளிது. நாங்க எல்லாம் சுமார் 5 அல்லது 6 தலைமுறக்கு முன்பாக இந்து மதத்தில் இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள்.  இஸ்லாத்திற்க்கு வந்த புதிதில், கோவில் திருவிழாக்கள் நடைபெறும் போது அனைவரும் கோவில் திருவிழாவிற்குச் செல்ல, பள்ளிவாசலில் கூட்டம் பல்லிழித்துக் கொண்டிருந்தது. மார்க்க அறிஞர்கள் கத்துக்கிட்ட மொத்த வித்தயையும் இறக்கிப் பார்த்தும் பயனில்லை. இன்னும் பயிற்ச்சி தேவைன்னு புரிந்துகொண்டார்கள்.

இப்படி போனால் சரிவராது என்பதை உணர்ந்து, இஸ்லாத்திற்க்கு மாறியவர்களை இஸ்லாத்திலேயே பெவிக்கால் போட்டு உட்காரவைக்க, அறிஞர்களின் போர்டு மீட்டிங்கில் உருவானதுதான் இந்த கந்தூரி விழா. கிட்டத்தட்ட ஆடல், பாடல் தவிர்த்து அனைத்துமே கோவில் திருவிழாவை ஒத்தே கந்தூரி விழாக்கள் இருக்கும். தேருக்கு பதிலாக சந்தனக்கூடு போல. சில ஏரியாக்களில் தீ மிதி விழாக்கள் கூட கந்தூரி விழாக்களில் உண்டு.  சென்ற முறை கந்தூரி விழாவில், எங்கள் ஜமாத் தலைவர் ஆடிய குத்தாட்ட வீடியோவை பார்த்த போது வரும் ஆண்டு, ஆடல் பாடல் நிகழ்ச்சி இருக்கும் என்றே தோன்றுகிறது. அப்படி உண்டு என்றால், ரீட்டாவை புக் செய்ய சில பல போராட்டங்களை கையிலெடுக்கவேண்டும். ரெண்டு கொடி ஏற்றுவார்கள் முதல் கொடிக்கும் இரண்டாவது கொடிக்கும் பத்து நாள் இடைவெளி. பதினோராவது நாள் வெடியுடன் கந்தூரி இனிதே முடியும்.

வீட்டுக்கு வீடு பிரசாதமாக, ‘’மால்ஸா’’ கிடைக்கும் மாவில், வெல்லம் எல்லாம் போட்டு கொடுப்பார்கள், துபாயில் எண்ணெய் கிணறு வைத்திருக்கும் பேமிலி என்றால் தேங்காய், பால், பழம் போட்டு ஒரு வகையான பிரசாதம் தருவார்கள். அதற்காகவே யானையில், கொடியை தூக்கிக்கொண்டு செல்லும் போது பின்னாடியே போகவேண்டும். இளவட்ட பசங்க எல்லோரும், தனது டாவு இருக்கும் வீட்டிற்க்கு முன்பாக வாத்தியக் கோஷ்டியை நிறுத்தி 10 ரூபாய் கொடுத்து நலந்தானா வாசிக்கச் சொல்லுவார்கள். எந்த வீடு, டாவு பெயர் என்ன? எனபதை விசாரித்து, அண்ணன் வரும் போது ‘’அண்ணேய் பாத்திமா அக்காவாண்ணே’’ என கோரஸாக சொல்லவேண்டும். இதெல்லாம் அவர் வாங்கி கொடுக்கும் கலர் தண்ணிக்காகத்தான் என்பதை நான் கூறி தெரியவேண்டியதில்லை. ஆண்கள், அக்கா-தங்கச்சி வீட்டிற்கு கந்தூரி ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து அனுப்புவார்கள். அந்த பாக்ஸ் ஓலப்பாயில் செய்ததாக இருக்கும் அதில் இத்துப்போன இனிப்பு சேவும், செத்துப்போன ஜிலேபியுடன், சில மைசூர்பாகுவு இருக்கும்.

கொடி எடுப்பதற்க்கு முன்பாக, யானைக்கு பட்டு துணி, அலங்காரம் எல்லாம் செய்து தர்ஹாவிற்கு முன்பாக கொண்டுவந்து நிறுத்துவார்கள். பெயருக்கு ஏதோ அரபியில் ஓதி பழம் கொடுத்து யானையை ஒதுங்க சொல்லிவிட்டு அடுத்த அரை மணி நேரம் அமைதியே உருவான அவுல்யாவின் கல்லறைக்கு பக்கத்தில் டிரம்ஸ் கோஷ்டி ‘’நேத்து ராத்திரி எம்மா,,,,’’ போன்ற இரவு பனிரெண்டு மணிக்கு ஒலிபரப்பும் பாடல்களை மதியம் ஒரு மணிக்கு தெரிக்கவிட்டுக் கொண்டிருப்பார்கள்.  கல்லறையில் மல்லாக்க படித்திருக்கும் அவுல்யா குத்துப்பாட்டை கேட்டு கவுந்துபடுத்துவிடுவார்.

இரவில் சந்தனக்கூடு கொண்டு வரும் போது அதனுள் ஒருவர் நடந்துவருவார். உள்ளே இருப்பதால் நமக்கு அவரின் முகம் தெரியாது,. சந்தனக்கூடைச் சுற்றி கலர் கலர் பேப்பர்களும், லைட்டுகளும் மின்னும். முதலில் நான் ஏதோ எலக்ட்ரிசன் என்று எண்ணிக்கொண்டேன். பின்பு ஒரு நாளில்தான் தெரிந்தது, ஏதாவது வேண்டுதல் நிறைவேற அப்படி செய்வார்களாம். தீ பந்தம் சுற்றுதல் என்ற பெயரில் ச.கூடு முன்பாக எதையாவது செய்துகொண்டிருப்பார்கள். சிலம்பம் சுற்றுவதற்கு வெளியூர் ஆள் கிடைக்கவில்லை என்றால், எங்கள் ஊரில் யாரையாவது செட்டப் செய்து, போக்கிரி படத்தில் வரும் பஜக், மொஜக், டொஜக்.... ஸ்டைலில் மாறி மாறி அடித்துக்கொண்டிருப்பார்கள்.

அந்தக் கால ‘’கல்யாண மாலை’’ நிகழ்ச்சியே இந்த கந்தூரி விழாக்கள்தான். ஊரில் இருக்கும் அனைத்து பெண் பிள்ளைகளும் வந்துவிடுவார்கள். பெண்கள் வெளியில் தலைகாட்டுவதற்கான ஒரே ஒரு நிகழ்ச்சி என்றால் அது இதுவாகத்தான் இருக்கும். பெண் போட்டோ கொடுத்து திருமணம் செய்யும் செய்யும் பழக்கமோ, மாப்பிள்ளை பெண் பார்க்கும் பழக்கமோ எங்கள் ஊரில் இல்லாததால், இது போன்ற சந்தர்பங்களில் பெண்களை செலக்ட் செய்து வீட்டில் பெரியவர்களிடம் கூறுவார்கள். அதனால்தான் கந்தூரி விழா முடிந்த மறு மாதம் கல்யாண சீசனாகவே இருக்கும்.

இஸ்லாத்தில் புரட்சி செய்ய கிளம்பியவர்கள், பெண்களின் கல்வி முன்னேற்றம் என பல காரணங்களினால் இப்போது கந்தூரி விழாக்கள் நீர்த்துப்போய்விட்டன. கந்தூரி விழா கூடாது என முழங்கும் புரட்சியாளர்கள்தான் பெண்களைக் காண முதல்வரிசைக்கு முண்டியடித்துக் கொண்டிருப்பார்கள். தர்ஹா காம்பவுண்டில் ஜமாத்தின் கல்யாண மண்டம் வந்துவிட்டது. கோடி, கோடியாய் முழுங்கிவிட்டு இன்னும் முழுமை பெறாத அந்த கல்யாண மண்டம், தனக்கும் முழுங்கிய கோடிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்ற தோறனையில் இருக்கின்றது.


---------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

செவ்வாய், ஆகஸ்ட் 18, 2015

டியர் மோடி

ஸ்ரீமான் மோடி அவர்களே.............. என்று தொடங்குவதற்கு என்னை மன்னிக்கவேண்டும், எனக்கும் தங்களை மோடிஜி என்றே அழைக்க ஆசை, ஆனால் அஜித்தின் தீவிர ரசிகரான நான் ‘’ஜி’’ படத்தை பார்த்ததிலிருந்து அந்த வார்த்தையை/எழுத்தை தவிர்க்கவே எண்ணுகின்றேன். தங்களுக்கு ஒரு வாய்ப்புக்கிடைத்தால் அந்த காவியத்தைக் கண்டு என் மனதை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். 

நான் அபுதாபியில் இருக்கின்றேன். பாருங்கள், நீங்கள் இங்கு வந்திருந்தபோது, நான் வேலை செய்யும் இடத்திற்கு மிக அருகில் தங்கியிருந்தது பற்றிய பொதுஅறிவுகூட இல்லாமல் இருந்துவிட்டேன்.  தாங்கள் இருக்கும் இடம் முன்பே தெரிந்திருந்தால், பிரட்சனைகளைப் பற்றி பேசவேண்டும் என்றால் அனுமதி கிடைத்திருக்காது, செல்ஃபி எடுக்கவேண்டும் என்று கூறி என் நண்பனின் ஆப்பில் ஐபோன் 6 எடுத்துக்கொண்டு வந்து உங்களை சந்தித்து இருப்பேன். காலம் நம்முடய சந்திப்பை காலதாமதப்படுத்துவதை எண்ணி வருந்துகின்றேன்.

தங்களின் வருகையால், அபுதாபியில் கோவில் வரப்போகும் செய்தி கண்டு மிக்க மகிழ்ச்சி. முன்பு கோவில் செல்ல வேண்டும் என்றால் என் நண்பர்கள் துபாய் வரை செல்லவேண்டி இருந்தது. மாலையில் கோவில் செல்லவேண்டும் என்றால், அன்றய தினம் காலை, மதியம் எங்கள் மெஸ்ஸில் சைவ உணவாகவே இருக்கும். ஒரு உண்மையான இஸ்லாமியனுக்கு வெள்ளிக்கிழமை மட்டன் பிரியாணி கிடைக்காதன் வலியை நீங்கள் உங்கள் கட்சியில் இருக்கும் முக்தர் அப்பாஸ் நக்வியிடமோ அல்லது நஜிமா ஹெப்துல்லாவிடமோ கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அபுதாபியில் கோவில் வந்துவிட்டால் காலையிலேயே, கடவுளை தரிசித்துவிட்டு, மதியம் மட்டன் பிரியாணிக்கு வழிசெய்தமைக்காக கோட்டான கோடி நன்றிகள்.

தாங்கள் இந்த நாட்டின் பட்டத்து இளவரசரின் உபசரிப்பை புகழ்ந்து பேசியதை என்னால் ஜீரணிக்க இயலவில்லை. இப்போதும் கூட இஞ்சிபருப்பான் பாக்கெட்டை பக்கத்தில் வைத்துக்கொண்டே டைப் செய்துகொண்டிருக்கின்றேன். தாங்களின் வருகையையொட்டி நகரில் ஒரு போஸ்டர் ஒட்டவோ, பிளக்ஸ் வைக்கவோ அனுமதியளிகவில்லை. இருந்தாலும் விடுவோமா? பேஸ்புக்கில், புர்ஜ் கலிபாவில் இந்திய கொடி லைட்டிங்க் செய்ததாக போட்டோ ஷாப் செய்து பரப்பினோம். குமரி முத்து கண்கொண்டு கண்டாலே அது ஒரு போட்டோஷாப் என்று அப்பட்டமாக தெரியும், ஆனாலும் ஆயிரத்துக்கு மேல் லைக்குடன் நல்ல ரெஸ்பான்ஸ். அடுத்தமுறை வரும்போது குஜராத்தில் இருந்து கைதேர்ந்த போட்டோஷாப் வல்லுனர்களை முதலிலேயே அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் நீங்கள் பேசியது போலவே, அபுதாபி ஐ-காட் லேப்பர் கேம்மில் வசிக்கும் லேபர்களிடம் ’’உங்களால் இந்தியா பெருமை அடைகிறது’’ என்று பேசியதை எண்ணி இங்குள்ளவர்கள் புலங்காயிதம் அடைந்தனர். சொகுசாக வாழ அமெரிக்கா சென்றவர்களிடம் அந்த வசனம் ஓகே, ஆனால், சொந்த நாட்டில் சோத்துக்கு வழியில்லாமல் அந்நிய நாட்டில் கொத்தடிமைபோல் இருப்பதற்கு இந்தியா ஏன் பெருமையடையவேண்டும்? மாறாக ஆட்சி செய்தவரகளும், ஆட்சி செய்பவர்களும் வெட்கப்படவேண்டும் .என்று எவனும் கேள்வி கேட்கவில்லை. ஏன் யோசிக்கக் கூட இல்லை. அதுதான் உங்களின் வெற்றி.

‘’தொழிலாளர் நலம் பேணப்படவேண்டும், மனிதாபிமானத்துடன் தொழிலாளர்களை நடத்தவேண்டும்’’ என்று நீங்கள் கட்டளையிட்டபோது, ஆசான வாயையும் சேர்த்து மூடியபடி அந்த அரபி அதிகாரி தலையாட்டியதாக ஒருவர் கூறக்கேட்டேன். அதைச் சொல்லும் போது அவருக்கு புல் அரித்திருந்தது, எனக்கோ....... ஃபுல் அடித்ததுபோல் இருந்தது. அந்திய நாட்டில் வந்து இவ்வாறு அறைகூவல் விடுக்கும் தாங்கள், சொந்த நாட்டில் நசுக்கும் தொழிலாளர் நல வாரியங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை. வைப்புத்தொகையில் கை வைப்பதில் இருந்து, ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை போன்ற தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டங்களை சட்டவிரோதமாக மாற்ற நினைப்பது, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், ஊனமடைந்த ராணுவ வீரர்களின் சலுகையில் கைவைப்பது  வரை, பாவம் இந்த அரபு நாட்டு அடிமைகள் அறியவில்லை.  அது உங்களின் அடுத்த வெற்றி.

பத்து வருடத்திற்கு மேல் இந்த நாட்டில் வசிக்கும் மக்களுக்கு, அமெரிக்கா, சிங்கப்பூரில் இருப்பது போல குடியுருமை வழங்க ஆவணசெய்வீர்கள் என்று எண்ணினோம். அது நடக்காமல் போனது சற்று ஏமாற்றம்தான். இருப்பினும் அடுத்த ஊழல் பிரட்சனை உருவெடுக்கும் போது தாங்கள் இன்னொரு முறை இங்கு வருவீர்கள் என்பதால் நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம். 50,000 பேர் கூடிய அந்த வரலாற்று நிகழ்வு புகைப்படங்கள் சிலவற்றை காணக்கண்டேன். கம்யூட்டரில் இமெயில் ஓப்பன் செய்ய அறியாதவர்கள், தங்களைக் காண ஆன்லைனில் புக்கிங்க் செய்திருப்பதாக அறிந்த போதுதான் தங்களின் ஆற்றலைக் கண்டு ஆடிப்போனேன். உங்களுக்கு கூட்டிய, மன்னிக்கவேண்டும் கூடிய கூட்டத்தையும், நீங்கள் ஆற்றிய உரையையும் உளவுத்துறையிடம் கேட்டு இந்த நாட்டு மன்னரும், இளவரசரும் மெர்சலாகிவிட்டதாக ஒரு செய்தி. ராசல் கைமாவில் வெங்கையா நாயுடு, அஜ்மானில்  அருண் ஜெட்லி, சார்ஜாவில் சாக்ஷி மகராஜ், உம்மல் குயினில் உமாபாரதி, புஜைராவில் ராஜ் நாத் சிங், துபையில் சுஸ்மாஸ்வராஜ் ஆகியோறை களம் இறக்கி ஆட்சியைப்பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம் போல உங்கள் பேச்சு இருந்தது. பலே.

நேற்று மதியம் ஒரு ஹோட்டலில் எனக்கு எதிர்தார்போல்  ஒரு தமிழர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். துபாயில் இருந்து ஆபிஸ் விசயமாக அபுதாபி வந்திருந்தார், பேச்சிற்கு நடுவே ‘’இன்னைக்கு சீக்கிரம் போகணும், மோடி பேச்சை கேக்கணும், எல்லோரும் அவரைக் காண ஆவலா இருக்காங்க, நீங்க வரலையா?’’ எனக் கேட்டார். ‘’இல்ல பாஸ், எனக்கு அதுல முன் அனுபவம் இருக்கு, அதனால நான் வரல’’ என்றேன். ‘’எப்படி, முன்னாடி மோடி மீட்டிங்கிற்கு போயிருக்கீங்களா?’’ என்று கேட்டார். ‘’இல்ல, ஆனா லிங்கா படத்திற்கு போயிருக்கேன்’’ என்று சொன்னேன். நான் கூறியதன் அர்த்தம் அவனுக்கு சுத்தமாக விளங்கவில்லை. கண்டிப்பாக நேற்று அவன் முன்வரிசையில் அமர்ந்து உங்கள் பேச்சை கேட்டிருப்பான். நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் ‘’நமக்கு கிடைத்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்’’ என்று.

முதலீட்டாளர்கள் கூட்டத்தில், காங்கிரஸின் மந்தமான செயல்பாடுகளால் இந்தியா வளர்ச்சியடையவில்லை, பல கோப்புகள்/திட்டங்கள் முடங்கிக்கிடக்கின்றன அதனை முடிக்கிவிடவே நான் வந்துள்ளேன் என நீங்கள் உள்நாட்டுஅரசியலை வெளிநாட்டில் வந்து பேசினீர்கள். ஆனால் தங்களின் கையெழுத்திற்காக ஆயிரக்கணக்கான கோப்புகள் பிரதமர் அலுவலகத்தில் காத்திருப்பது பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. இதை நினைத்து நீங்கள் வாயை மூடி நமட்டு சிரிப்பு சிரித்துக்கொள்ளலாம். சுதந்திர தின விழாவில், நாட்டில் ஊழலே இல்லை, கருப்பு பண நடவடிக்கை, சாதி, மத பேதம் பாராது........ என்று பேசியபோது தேமே என்று கேட்டுக்கொண்டு இருந்தவர்கள் உங்களை நோக்கி வேறு என்ன கேட்டுவிடமுடியும்?. பேலன்ஸ் ஜீரோ என்றாலும் கோடிக்கணக்கானவர்களுக்கு பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் செய்த சாதனை உலக வரலாற்றில் தங்களுக்கு மட்டும்தான். இனி, 15 லட்சம் ரூபாய் பற்றி எவனாவது பேசினால், அதற்காகத்தான் பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் செய்திருக்கின்றோம் என்று அடுத்த 4 வருடங்களை ஓட்டிவிடலாம். அப்புறம் அதுவே அவர்களுக்கு பழகிவிடும்.

தாங்கள் பிரதமராக தேர்வானபோது எனக்கு மனவருத்தம் இருந்தது. இப்போது இருக்கிறதா? என்று எதிர் கேள்வி கேட்டு என்னை இன்னலுக்கு ஆளாக்கமாட்டீர்கள் என்றே எண்ணுகின்றேன். அதே அளவு சந்தோசம் காங்கிரஸ் தோல்வியால் இருந்தது. தமிழில் வின்னர் என்ற படத்தில் வருவது போல ‘’அந்த பொண்ண நீ லவ் பண்ணினா என்ன?, நான் லவ் பண்ணினா என்ன? மொத்தத்தில் அந்த குடும்பம் நாசமா போகணும் அவ்வளவுதான்’’ என்று காங்கிரஸை எதிர்த்துக்கொண்டு இருந்தேன். உங்களின் வெற்றியை கண்டபோது அது சாத்தியமாகலாம் என்று தோன்றியது. ஆனால், தற்போது தாங்கள் மறைமுகமாக, காங்கிரஸுக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் ஆள் சேர்த்துக்கொண்டிருப்பதாகவே நினைக்கத் தோன்றுகின்றது. உடனடியாக ஆப்ரேஷன் ‘’போட்டோ ஷாப் போடுறோம் பார்’’ ஐ முடிக்கிவிட வேண்டும். ஆகையால் தாங்கள் அமெரிக்கா, ரஷ்யா, துபாயில் எடுத்த போட்டோக்களை, இது அஹமதாபாத், வதோத்ரா, ராஜ்கோட். சூரத் ன்ற கேப்சனுடன் உடனே தங்களது டுவிட்டர், பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யுமறு கேட்டுக்கொள்கிறேன்.

அபுதாபியில் கோவில் கட்ட 2013லேயே அனுமதியளிகப்பட்டுவிட்டதாமே?,
இதுவரை சென்ற நாடுகளில் இருந்து செய்யப்பட்ட முதலீடுகள் எவ்வளவு?
அபுதாபி ஷேக் கூறியிருக்கும் பல மில்லியன் டாலர் முதலீடு எதில்? எப்போது?
 ....................என்று கேள்வி கேட்பவர்களை தலைகீழாக தொங்கவிட்டு மூக்குப் பொடியை தூவும் ‘’பானபத்திர ஓனாண்டி’’ தண்டனைச் சட்ட மசோதாவை  உடனடியாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றவேண்டும்.

மேலும் நிலுவையில் இருக்கும், விவசாய நில புடுங்கும் சட்டத்தை போர்கால நடவடிக்கையில் அமல்படுத்தி, இந்தியாவை பாலைவனமாக மாற்றி அதன்மூலம் சவுதி, குவைத், அபுதாபி போன்று பெட்ரோல், காஸ் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தவேண்டும்.

தாங்கள் இங்கு இருக்கும் வரையில், அபுதாபி சுட்சர்லாந்து போல குளு, குளு என்று இருந்தது, ஆனால் இன்றிலிருந்து மறுபடியும் சூடு ஆரம்பித்து, சூ........ (காலில் போடும்) வழியாக புகைவருவதால் இங்கு நிறுத்திக்கொள்கின்றேன்.

பாரத் மாத்தாக்கீ ஜே.


--------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.