வியாழன், நவம்பர் 06, 2014

--ஜோலிக்கே பீச்சே கியா ஹே?--

+2வில் நல்ல மதிப்பெண்களின் மூலமாக காலேஜில் சீட் பெற்ற பழங்கள், டப்பின்னால் சீட் பெற்ற கோமான்களின் புதல்வர்கள், சிபாரிசின் பெயரால் சீட் வாங்கிய சீமான், சீமாட்டிகளின் பிள்ளைகள் எல்லாம் முதலாமாண்டில் A, B, C, D என அனைத்து பிரிவுகளிலும் இடம்பெற்றுவிட, E பிரிவு மட்டும் ஈ ஓட்டிக்கொண்டிருந்தது. அது பின்பு தமிழகத்தில் பல பகுதிகளில் தேடிப் பொருக்கிய மகா புருஷோத்தம பொறுக்கிகளால் முழுமை பெற்றது. அதில் ஒருவன், 1990 களில் நடிப்பில் கோலாய்ச்சிக் கொண்டிருந்த நடிகரின் பெயர் கொண்டவன், ஒரு தமிழக முதல்வரின் தொகுதிக்கு உட்பட்ட சமையல் (குக்) கிராமத்துக்காரன். அந்த வகுப்பின் மற்றொருவன்தான் இதை எழுதிய யோக்கிய குல விடிவெள்ளி.

ஆங்கிலத்தில் புலமைவாய்ந்த ‘ஆல் அப்பாட்டக்கர்ஸ்’ எல்லாம் A, B, C, D யை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துவிட, E  பிரிவில் முக்கால்வாசிப் பேர் அப்போதுதான் தன்னுடய பெயரை ஆங்கிலத்தில் எழுதிப் பழக பயிற்ச்சி எடுத்துக்கொண்டிருந்தோம். எல்லோரும் டிக்சனரி சைசுக்கு இங்கிலீஸ் கில்மா புக் படித்துக்கொண்டிருக்கும் போது 15 பக்கம் கொண்ட ‘சரோஜா தேவி’க்கு கூட வழியில்லாமல் வாடிக்கொண்டிருந்தோம். இப்படி ஆங்கிலத்தின் அட்ரோசிட்டியினால் நொந்துபோயிருந்த எங்களுக்கு ஒரே அறுதல் நடிகரின் பெயர்கொண்டவன் மட்டும்தான். சொந்த கதை, சொந்தக்காரர்களிடமிருந்து கடன்வாங்கிய கதை, நண்பர்களின் கதை, நாட்டாமைக்காரரின் கதை.... என பல வெரைட்டியில் பலான பலான கதைகள் வைத்திருந்தான்.

அதைக் கேட்பதற்காகவே அவனைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். இவன் கூட்டிக்கொண்டு சென்ற கதை, இவனைக் கூட்டிக்கொண்டு சென்ற கதை என அவனுடய ஆட்டோ பயோகிராஃபிக்கு ஏக கிராக்கி. அவனுடய ‘முதல் அனுபவ கதை’ மட்டும் முன்னூறு முறைக்குமேல் சொல்லியிருப்பான். அவனுக்கு அதை சொல்லுவதில் அவ்வளவு ஆனந்தம், எங்களுக்கு அதை கேட்டு கிரங்கி கிடப்பதற்கு பேரானந்தம். என்னிடம் யாராவது ‘உனக்கு தமிழ்ல புடிச்ச பாட்டு என்ன?’ என்று கேட்டால், உடனே நான் ‘‘குக்குக்....குக் ஜோலிக்கே பீச்சே கியா ஹே... ஜோலிக்கே பீச்சே’’ என்றுதான் சொல்வேன். ‘’அது தமிழ் இல்லடா, தெலுங்கு’’ என்று என் அறிவுக்கண்ணை திறந்தது மட்டும் அல்லாது, அந்த பாடலின் உள்ளார்ந்த அர்த்தத்தையும் விளக்கி வகுப்பெடுத்த மகான் அவன், சாரி அவர்ர்ர்ர்.

ஒரு கட்டத்தில், நண்பனின் ‘’டெண்டுகொண்டாய்’’ பற்றி கேள்விப்பட்டு, ஆங்கில பீட்டர்கள் எல்லாம் ‘ஹேய் யூ...டமில்ல நீ காமம் டிராப்பாக, டிராப்பாக சொல்லும் ஸ்டோரிய எங்களுக்கும் சொல்லு’ என லுங்கியில் வந்து நிற்க, காலேஜில் தன் பெயர் பரவுவதற்காக பெருமைப்பட்ட நண்பன் முதல்முறையாக தன் பெயர் நாரிக்கொண்டிருப்பதை உணர்ந்து தன்னுடைய கொட்டாயை மூடி சீல் வைத்தான். சில்க் ஸ்மிதா செத்தபோது எப்படி கோட்டானக்கோடி ரசிகர்கள் திகைத்து நின்றார்களோ அதே போன்ற திகைப்பு எங்களுக்கு.

பின்பு இரண்டாவது வருடம், மெக்கானிகல், எலக்ரிக்கல், கம்யூட்டர்,.... என முதலாமாண்டு நண்பர்கள் அவர்ரவர் பிராஞ்சுகளுக்கு சென்றபின்பு, சிவில் டிப்பார்ட்மெண்ட்க்கு மட்டும் அவன் சொந்தாமாகிவிட்டான். நாங்க எல்லாம் இளையராஜாவின் ரசிகர்களாக இருந்தபோது, அவன் மட்டும் ராஜாவின் வெறியனாக இருந்தான். நாங்கள் கதைக்காக காத்திருந்து ‘‘அதெல்லாம் சொல்லமுடியாது’’ என அவன் முறுக்கிகொண்டு நிற்கும்போதெல்லாம் ராஜாதான் எங்களுக்கு உதவினார். ‘‘சே, ராஜா, ராஜாதாண்டா முதல்மரியாதை படத்துல எல்லாப் பாட்டுக்கும் என்னமா மியூசிக் போட்டிருக்காரு’” என்று ஆரம்பித்துவிட்டால் போதும், கொஞ்ச நேரம் இளையராஜா பெருமைகளை போற்றிவிட்டு, எங்களை கரும்புக்காட்டு இதிகாசத்துக்கும், சோளக்காட்டு சொர்க்கலோகத்துக்கும் அழைத்துச்செல்வான். நாங்களும் ஆளுக்கொரு தலவாணியை அமுக்கிப் பிடித்துக்கொண்டு, வாயில் வண்டி வண்டியாக நீர் வடிய (வாயில் மட்டும்) கேட்டுக்கொண்டிருப்போம்.

நான்காவது வருடம் ஹாஸ்டலில் கம்யூட்டர் வைப்பதற்கு அனுமதி கிடைத்தது. கம்யூட்டர், ஐ.டி டிப்பார்ட்மெண்ட் பசங்க எல்லோரும் புராஜெக்ட் ஒர்க் என்ற பெயரில் ’சகீலாவின் சபல சல்லாபங்களையும், ரேஷ்மாவின் ரகசிய இரவுகளையும் கண்டுவிட்டு கேண்டினில் நின்று அடுத்த சில்க் சகிலாவா? ரேஷ்மாவா? என்று பட்டிமன்றம் நடத்தி எங்களை வெறியேற்றிக்கொண்டிருந்தார்கள். நாங்களும் காதுவழியாக கதைகேட்பது, புத்தகமாக படிப்பது என்ற பரினாமவளர்ச்சியின் இறுதியில் சி.டியில் வந்து நின்றாலும், அதைக் காண கம்யூட்டர்?. ‘’சிவில் பசங்களுக்கு எதுக்குடா கம்யூட்டர்?’’ என்று எங்களுடய கோரிக்கைகள் பலமுறை நிராகரிக்கப்பட்டு, பின்பு ‘’ஆட்டோக்காடில் புராஜக் பண்ணுவதால் கம்யூட்டர் வேண்டும்’’ என்ற பலகட்ட போராட்டத்திற்கு இறுதியாக வெற்றிகிடைத்தது.

‘மைசூர் மல்லிகே’, ‘மைடியர் மனீஷா’ போன்ற இதிகாசங்களைக் காண பத்து நாள் விரதம் இருந்து ஒருகையில் சி.டி, மறுமையில் தலையணையுடன் பதினொராவது நாள் கம்யூட்டர் முன்பு புட்பால், கார் ரேஸ் என விடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்கும் சிருவர்களை தலையில் தட்டி படிக்க அனுப்பிவைத்துவிட்டு, படத்தை பார்த்து பரவச நிலையை அடைவதை சொன்னால் புரியாது அதை அனுபவிக்கவேண்டும். ஒரு நேரத்தில், அந்த கம்யூட்டர் இதுமாதிரியான சாமி சி.டி தவிர்த்து வேறு சி.டிகளைப் போட்டால் வேலைசெய்யவே இல்லை என்ற நிலைக்குப் போய்விட்டது. எவ்வளவுதான் படம்பார்த்து பாகம் குறித்தாலும், நடிகரின் பெயர்கொண்டவன் சொல்லும் கதை அளவிற்க்கு கிக் இருந்ததில்லை. களவாணி படத்தில் காட்டாத பல கோணங்களை எங்களுக்கு அந்த நண்பன் காட்டியிருந்தான் (சொல்லியிருந்தான்).

இவன் சொல்லும் கதைகளைக் கேட்ட பல பேர் மிரண்டு போய் நின்றார்கள், ‘’இவன் சாதாரண ஆள் இல்ல, நாடி, நரம்பு, சதை, ரத்தம், புத்தி என எல்லாத்துலயும் கில்மாங்கி கலந்திருக்கும் ஒருத்தனாலத்தான் இப்படி சொல்லமுடியும்’’ என பலபேரின் பாராட்டைப் பெற்ற இவனிடம் எக்கச்சக்க கதை இருந்தாலும், ஏட்டில் ஏற்றக்கூடிய அளவிற்கு தகுதியான அவன் சொன்ன ஒரு சம்பவம்.

அது ஒரு பலான விஷயத்துக்கான பஞ்சாயத்து. நாட்டாமை சொம்போடு வந்தார். சொம்புக்கு வலதுபுரம் பிராது கொடுத்த பெண், இடதுபுரம் குற்றம்சாட்டப்பட்ட ஆண். பிராது என்னவென்றால் பிராது கொடுத்த பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு காரணம் இவந்தான் என்று எதிர்நிக்கும் ஆளைக் காட்டினால் அந்த பெண். சின்னஞ் சிருசுகள் ஒரு பக்கம், பெண்கள் ஒருபக்கம், என மொத்த ஊரே கூடிநின்று வேடிக்கை பார்த்தது. ‘’எல்லோரு முன்னாடியும் பச்சையாக எப்படி இந்த விசயத்தை பேசுவது’’ என்று நாட்டாமை யோசித்து, அவருடைய சமயோஜித புத்தியினால் அந்த ஆணைப் பார்த்து ‘இங்க பாருப்பா, அந்த பாறையில நீ துவச்சதா அந்த பொண்ணு சொல்லுது, நீ துவச்சதுனால பாறை உடஞ்சு போச்சு அதனால நீதான் தெண்டம் கெட்டனும், என்ன சொல்லுற?” என கேட்க

அந்த ஆணும் “இல்ல சாமி, இத ஏத்துக்க முடியாது, நான் போகும் போதும், வரும் போதும் பாத்திருக்கேன், இந்த பாறையில நிரயப் பேரு துவச்சியிருக்கானுங்க. சரி எல்லோரும் துவைக்கிறாங்களேன்னு நானும் போயி துவச்சிட்டு வந்தேன். உண்மை இப்படி இருக்க நான் மட்டும் எதுக்குங்க தெண்டம் கெட்டனும்” என பதில் சொன்னான்.

பிராது கொடுத்த பெண்ணோ “இல்லீங்க நாட்டாமை, மத்தவனுங்க துவைக்குறதுக்கும், இந்தாளு துவைக்குறதுக்கும் ரெம்ப வித்தியாசமுங்க, பத்தாளு துவைக்குறத, இந்த ஒத்த ஆளு துவைப்பானுங்க. அதனால இவந்தான் பாறையைக் கெட்டிக்கணும் சாமி, பாறையப் பத்தி உங்களுக்கு தெரியாதது இல்ல... நீங்கதான் நல்ல தீர்ப்பு கொடுக்கணும்” என அவளுடய வாதத்தை ஸ்ட்ராங்காக வைக்க

இன்னும் கொஞ்ச நேரம் இவளை பேசவிட்டா ஊருப்பய பேரு பூரா வெளியவந்திடும் என பயந்து, நாட்டமை பெண்ணுக்கு சாதகமாக, அந்த ஆணை தெண்டம் கட்டவைத்து தீர்ப்பு வழங்கினார்.

இனி நாட்டாமை.....

“நீ சொன்னமாதிரி பல பேர் போய், வந்து துவச்சிருக்கலாம், ஆனா அவங்கெல்லாம் துவைக்கும் போது பாறை பாறையாத்தான் இருந்துச்சு, அந்த அளவுக்கு பதமா பார்த்து, பயந்து துவச்சிருக்கானுங்க. அதுபோக, அந்த பொண்ணு சொன்னதுமாதிரி, நீ துவச்சதுமாதிரி வேற யாரும் அடிச்சு துவைக்கலையாம், மேலும் நீ துவச்ச போதுதான் பாறை உடைஞ்சும் போயிருக்கு, அதனால நீதானப்பா தெண்டம் கட்டனும், இதுதான் இந்த நாட்டாமையோட தீர்ப்பு, பஞ்சாயத்தோட தீர்ப்பு”.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

செவ்வாய், அக்டோபர் 21, 2014

எதுக்குடா தீபாவளி கொண்டாடுறீங்க?

தலைப்பை பார்த்தவுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர் என்று என்னை எண்ணிவிடவேண்டாம் என்னருமை தமிழ் சொந்தங்களே. நான் தமிழன்தான் ஆனால் நாம் தமிழர் அல்ல (?!?!?!). பக்ரீத் பண்டிகையில் சமைக்கும் எண்ணெய் கறி, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாது, அது KFC போன்ற மல்டிநேசனல் கம்பெனிகளுக்கு கூட தெரியாத தொழில் ரகசியம். பண்டிகை முடிந்து ஒரு மாதங்களுக்கு மதிய உணவில், எண்ணெய் கறி, உப்புக்கண்டம், மிளகு கறி என ஏதாவது ஒரு மட்டன் வகை டிபன் பாக்ஸில் முக்கால்வாசி அடைபட்டிருக்கும், அங்கு இங்கு சாதம் கொஞ்சம் ஒட்டிகொண்டிருக்கும். பத்துப்பேர் படைசூழ வகுப்புத் தோழர்களுடன் மதிய உணவில் பகிர்ந்து உண்டதுண்டு.

அதன் பிறதிபலனாக, தீபாவளியில் சுட்ட வடை, முருக்கு, சீடை என பலகார ஐட்டங்கள் சமூக அறிவியல் பாடவேளையிலேயே காலிசெய்யப்படும். பத்துவீட்டு பலகாரத்தையும் நான் ஒண்டியாக திண்ணவேண்டும், என்பது கொஞ்சம் கஷ்டம்தான் என்றாலும் இங்கிலீஸ் பாட எஸ்ஸே அளவுக்கு கஷ்டமாக இருக்காது. சாயங்காலம் வீடு செல்லும் வேளையில் ஆளுக்கு இரண்டு கம்பி மத்தாப்பு, மூன்று புஸ்வானம், சக்கர வெடி என அதுவும் ஒரு பை நிறைய கிடைக்கும். முஸ்லீம்கள் இருக்கும் எங்கள் தெருவில் தீபாவளி மறுநாள் எங்கவீட்டுக்கு மட்டும் தனியாக ஒரு இரண்டுமணி நேரம் வந்துவிட்டு செல்லும். நம்ம நட்பு வட்டமும் என்னைப் போன்று மிக தைரியசாலிகள் என்பதால், டமால், டுமீல் வெடிகள் எல்லாம் கிடைக்காது. ‘என்னடா? இந்த வருசமும் இதுதானா?, ரெண்டு அணுகுண்டு, அஞ்சு லெட்சுமி வெடி கொண்டுவரலாம்ல?’ என வக்கனயாக வாய் பேசிக்கொண்டிருந்தாலும், கால்கள் கரகாட்டம் ஆடும்.

அவர்களுடன் முஸ்லீம் பண்டிகைகளை கொண்டாடுவதில் மிகப்பெரிய சந்தோசம் இருந்தாலும், மிகப்பெரிய துயரம் இஸ்லாத்தைப் பற்றியும், அதில் கொண்டாடும் பண்டிகைகளைப் பற்றியுமான கேள்விகள் மட்டும்தான். அதிகமுறை அப்பாவிடம் பதில்வாங்கி கொரியர் சர்வீஸ் செய்தாலும், எல்லாத்தையும் அப்பாவிடம் கேட்டால் ‘இஸ்லாத்தைப் பற்றி ஒன்னுமே உனக்கு தெரியவில்லை, அதனால அதிகாலையில குரான்னை எடுத்துக்கொண்டு ஊசிமண்ட அசரத்திடம் ஓதலுக்கு போ’ என அரசானை பிறப்பித்துவிட்டால்???? ஆபத்து என்பதை முன்கூட்டியே உணர்ந்து, நானாக ஏதாவது கதை, திரைக்கதை செய்து சமாளிப்பேன்.

‘எதுக்குடா பக்ரீத் பண்டிகையில ஆடு அறுக்குறீங்க?’ என்று ஒருமுறை என் நண்பன் கேட்டு கழுத்தை அறுத்தான். வாழ்க்கையில பொய் சொல்லலாம், பொய்யையே வாழ்க்கையா வச்சிருந்தா எப்படி?. ‘இறைவா இப்ப நான் சொல்லப்போகுற பொய்க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, பொய் சொல்பவனை விட பொய் சொல்ல தூண்டும் என் நண்பனுக்கு அதிகபட்ச தண்டனையான எண்ணெய் சட்டியில் போட்டும் என் சிறுவயதினை கருத்தில் கொண்டு மண்டயில் ஒரு கொட்டு மட்டும் கொடுப்பாயாக’ என்று பிராத்தனை செய்துவிட்டு

‘அதுவாடா....., ஒரு மாசமா காலையில இருந்து சாய்ந்தரம் வரை தண்ணி கூட குடிக்காம நோம்பு வைச்சிருப்போம்ல அதுக்காக ‘அல்லா’ இப்படி ஆட்டுக்குட்டி அறுத்து, நல்லா கறி சாப்பிடுவதற்காக கொடுத்த பண்டிகைடா, அதுனாலத்தான் இது நோன்பு பண்டிகை முடிந்து 70 நாள் கழித்து வருது’ என கூச்சமே இல்லாம பொய்சொன்னேன்.

‘அப்படின்னா, நோம்பு பெருநாள் முடிந்து மறுநாளே பக்ரீத் வந்திருக்கனும்ல? ஏன் 70 நாள் கழிச்சி வருது?’ என அடுத்த கேள்வியை கேட்டவுடன் ஆடிவிட்டேன். ‘இப்படியெல்லாம் உன்ன யாருடா கேள்விகேட்க சொல்லுறா? இதுக்காகவாடா சங்கரா உனக்கு ஈரல் கறி எல்லாம் தந்தேன்’ என மைண்ட் மல்டிமீடியா மெசேஜ் அனுப்பிக்கொண்டிருந்தது.

‘இல்லடா சங்கரு, நோம்பு இருப்பதால, குடல் எல்லாம் சுருங்கி போயிடும், நீ சொல்லுற மாதிரி நோம்பு பெருநாளுக்கு மறுநாள் ஆடு அறுத்து பக்ரீத் கொண்டாடினா கறி குடலுக்குள்ள போகாதுல்ல அதுனாலதான், 70 நாள் கழிச்சு பக்ரீத் கொண்டாடுறோம்’ என பதில் சொல்லிவிட்டு ‘நாளைக்கு போட்டிக் கறி கொண்டுவாரேன்’ என்று கூறி வாயை அடைத்துவிட்டேன். இல்லை என்றால் ‘30 நாள் நோம்பு இருந்ததுக்கு, குடல் விரிய எதுக்குடா 70 நாள் ஆகுது’ன்னு அடுத்த குண்டை போட்டுவிட்டால், பாவம் ‘அல்லா’ இருக்குற விலைவாசியில் எத்தனை முறைதான் சங்கரை எண்ணெய் சட்டியில் போடுவார்.

தீபாவளிக்கு நம்ம டேர்ன். பதினைந்து பேர் சுற்றி உட்கார்ந்து அதிரசத்தை அரைத்துக்கொண்டிருக்கும் போது ‘எதுக்குடா நீங்க தீபாவளி கொண்டாடுறீங்க?’ என்று கேட்டேன். கேட்டதுதான் தாமதம் அஞ்சு பேரு களண்டுவிட்டார்கள். அடுத்த அஞ்சு அப்ஸ்காண்ட் ஆகுறதுக்கு ரெடியானது மாதிரி தெரிந்தவுடன் ‘டேய் ஒழுங்கா பதில் சொல்லிட்டுப்போங்க இல்ல, பூராப் பய பேருலயும் காசுவெட்டிப் போட்டுருவேன்’ என மிரட்டியபின்பு வாய் திருந்தார்கள்.

‘அதுவாடா....., முன்னாடி ஒரு பெரிய்ய்ய பொல்லாதவன் இருந்தாண்டா, அவன் ரொம்ப கொடுமை பண்ணினான், அவன் பேரு நரகாசுரன், பாக்குறதுக்கு கொல்லக்கூட்டத்து தலைவன் மாதிரி இருப்பாண்டா......’ என சொல்லிக்கொண்டிருக்கும் போதே

‘கொ.கூட்ட தலைவன் மாதிரின்னா? நம்ம காந்தன் வாத்தியார் மாதிரி இருப்பானாடா?’ என என் சந்தேகத்தைக் கேட்டேன்.

‘ம்ம்ம்ம்..... இல்ல அவர் அண்ணன் சண்முகையா வாத்தியார் மாதிரி இருப்பான்னு வச்சிக்கோயேன், அவன் எல்லோரையும் இம்சை பண்ணிகொண்டிருந்தானாம், அதனால புள்ளையாருக்கு கோவம் வந்து, அவனை குத்தி கொல பண்ணிட்டாரு’ அதோட ஞாபகத்துலதான் இந்த தீபாவளிய நாங்க கொண்டாடுறோம்.’ என எல்லோரும் சேர்ந்து ஆளுக்கொரு வரியை பிச்சி பிச்சி சொல்லிமுடித்தார்கள். பத்து பேர்களை மொத்தமாக உட்காரவைத்து கேள்விகேட்டதால், ஆளு ஆளுக்கு ஒன்னு சொல்லுறது 3 பேர் நாரதர்ன்னு சொல்லுவானுங்க, 2 நாராயணர்னு சொல்லுவானுங்க, 5 பேர் நரகாசுரன்னு சொல்லுவானுங்க, யாருக்கு மெஜாரிட்டியோ அந்த பெயரையே எடுத்துக்குறது. அப்படித்தான் புள்ளையாரும், 7 பேர் அந்த பெயரை சொன்னதால நரகாசுரனை கொன்றது புள்ளையார் என முடிவெடுத்துக்கொண்டோம்.

பிற்காலத்தில், பக்ரீத் பண்டிகையின் உண்மையான நோக்கம் அறிந்த போது ‘ச்சே நண்பர்களிடம் பொய் சொல்லிட்டோமே’ என்ற குற்றவுணர்ச்சி இருந்தாலும், தீபாவளி பண்டிகையின் நோக்கத்தை அறிந்த பின்பு ‘கொலுக்கொட்டையை தின்றுவிட்டு செரிமானத்துக்கு ஆலமரத்தடியில ரெய்ஸ் எடுத்த புள்ளையாருதான் நரகாசுரனை கொன்றது’ன்னு நம்மகிட்டயே அள்ளிவிட்டவனுங்களுக்காக என்ன ஃப்பீலிங்க்ஸ் என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன்.

எங்க கூட்டத்துல ஏசுவின் ஏரியா மேனஜர் ஒருத்தரும் இருந்தாரு. அவரு பெயர் சத்திய சீலன் (வச்சான் பாரு பேரு). எல்லோரும் ஸ்கூலுக்கு  5 புத்தகத்தோடு வந்தால் இவர் பைபிலையும் சேர்த்து 6 புத்தகமாக கொண்டுவருவார் அதுவும் இங்கிலீஷ் பைபில். அப்போது எங்களுக்கு ஆங்கிலத்தில் வவ்வல்ஸாவது தெரிந்திருந்தது, ஏரியா மேனஜருக்கு அதுகூட தெரியாது. ஆனால் ஒரே ஒரு பாடல் மட்டும் தெரியும் (அதுவும் தமிழ்லதான்)

‘’பாலன் ஜனனமான பெத்தலேகம் என்னும் ஊரிலே
ஆச்சரிய தெய்வ ஜனனம் அனைவரும் போற்றும் ஜனனம்.......” என்ற பாடல் அது.  

ஏசுநாதர் யாருடா? என்று கேட்டால், உடனே ‘’பாலன் ஜனனமான பெத்தலேகம் என்னும் ஊரிலே.....” என்று ஆரம்பித்துவிடுவான். ஏண்டா அவர சிலுவைல அறைஞ்சாங்க? என்று கேட்டாலும் ‘’பாலன் ஜனனமான பெத்தலேகம் என்னும் ஊரிலே.....”தான். மீண்டும் மீண்டும் எதையாவது கேட்டு எதற்கு அவனையும் திரைக்கதை எழுதவைக்கவேண்டும் என்று எண்ணி விட்டுவிடுவோம். கோட்டான கோடி நன்றிகள் ஏசப்பா, கோட்டான கோடி நன்றிகள்.

பேஸ்புக் பார்த்து ஒன்றைப் பற்றிய தவறான முடிவுக்கு வருவதை விட்டுவிட்டால், இங்கு எல்லா மதமும் நல்ல மதமே, எல்லா மனிதர்களும் யாஸிரே (ஒரு சின்ன விளம்பரம்.....), யாரோ ஒருவர் சொன்னது போல ‘இப்போதெல்லாம் யானைகளுக்கு கூட மதம் பிடிப்பதில்லை. மனிதர்கள்தான் பாவம்...”


----- -------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

வியாழன், செப்டம்பர் 25, 2014

-மயிரே போச்சு-

‘ஏமாற்றுபவனை விட, ஏமாறுபவனை சுட்டுக் கொல்ல வேண்டும்’ என்ற பொன்மொழியை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், ஏதோ ஒரு போராளியோ, புரட்சியாளனோ சொல்லியதாக என் நினைவு. போராளி, புரட்சியாளன் என்றவுடன் சீமானோ, வைகோவோ என்று உங்களது எண்ணங்கள் உசேன் போல்டிற்கு போட்டியாக ஓடினால் நிர்வாகம் பொறுப்பல்ல. அந்த வாக்கியத்தின் படி பல குண்டடிகளைத் தாண்டி உயிர்வாழும் இந்த ஜீவன், கடைசியாகத் துளைத்த தோட்டாவைத் தாங்கியபடி கீ போர்டில் தட்டச்சு செய்துகொண்டிருக்கின்றது.

‘ஆசையே அனைத்து அழிவிற்கும் காரணம், ஆகையால் அனைவரும் ஆசையைத் துறக்கவேண்டும்’ என்று ஆசைப்பட்ட புத்தரைப் புத்தகத்தில் படித்தவன் நான். இருப்பினும், கூந்தல் விசயத்தில் கூடுதல் முறை காசை கரியாக்கியிருக்கின்றேன், முடி மேட்டரில் மோசம் போயிருக்கின்றேன், வராத கேசத்தை வரவழைக்க, வழுக்கைத்தலையுடன் மார்க்கெட்டிங் செய்யும் பலரிடமிருந்து எண்ணெய்களை வாங்கி இருந்ததையும் இழந்திருக்கின்றேன். ‘......த்தா மயிரே போச்சு, மூடிக்கிட்டு இருடா’ என்று இருமார்ப்புடன் இருந்தாலும், ஏமாற்றத்தின் ஆணிகள் ஏனோ எண்ணிக்கையிலடங்காமல் எகிறிக்கொண்டிருக்கிறது.

‘புடிங்கியதெல்லாம் போதும், இனி ஆணியே புடுங்க வேணாம்’...என்று முடிவெடுத்து திரும்பினால், நடு மண்டையில் ஆணி அடிப்பதற்காக சுத்தியலோடு காத்திருப்பான் ஒருவன். இம்முறை சுத்தியல் ஒரு ஆப்கானிஸ்தான் கையில் இருந்தது, எப்படி அவன் ஆப்கானிஸ்தானி என்று தெரியும்னு கேக்குறீங்களா?, அவனே சொன்னான். ஊர் சென்ற உடன்பிறப்பு, எனக்கென்று கொண்டுவந்த 5 ரூபாய் பெறுமானமுள்ள நேசனல் கடை அல்வாவையும், பால்காரன் கடை சேவையும் வாங்க 50 ரூபாய்க்கு பஸ்பிடித்து அபுதாபியில் இருந்து துபாய் சென்றேன்.

பார்த்திபன் சொன்ன, துபாய் பஸ்ஸெல்லாம் வந்து நிற்குமே அதே பஸ் ஸ்டாண்டிற்கு எதிரே இருந்த தியேட்டரில் ஒட்டப்பட்டிருந்த அஞ்சான் போஸ்டரில், தோரனையாக சூர்யா நின்றாலும், தொடை தெரிய நின்ற சமந்தாவை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். தண்ணீர் பாட்டில் கையிலிருந்தாலும், வாயில் வழிந்த நண்ணீரை அவன் கண்டிருக்க வேண்டும்.

பாசத்தோடு தம்பி என்று ஹிந்தியில் அழைத்தான், திரும்பினேன். இருக கையைப் பிடித்துக்கொண்டான், ‘க்க்கியா..., இத்னி....அய்சா...’ என ஒரு வார்த்தையை கூட முழுசாக முடிக்காமல், பிட்டு படத்துல வர்ற பிட்டுமாதிரி பாதி பாதியா பேசினான். அப்புறம்தான் புரிந்தது அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசுறாராமாம்.....எல்லா பிட்டுகளையும் பேஸ்ட் செய்து பார்க்கையில், அவன் சொன்னது என்னவென்றால், “இந்த சின்னவயசிலே இப்படி எல்லா முடியும் போயிடுச்சே?, என் தம்பிக்கும் இப்படித்தான் இருந்தது, அப்புறம் இங்க பக்கத்துல இருக்குற ஆயுள்வேத கடையில் ரெண்டு பொடிவாங்கி தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்து 2 மாதத்தில் நல்லா முடி வளர்ந்திருக்கிறது, அந்த எண்ணெய் வாங்கி நீயும் தேய். என்பதுதான், ஆனால் எல்லாத்தையும் நம்பும்படியாக பாடிலாங்குவேஜ்ஜுடன் சொன்னான். அவனுடன் மேலும் ரெண்டு பேர், எல்லாருக்கும் கோல்கேட் கம்பெனியை லீசுக்கு எடுத்து பல் தேய்த்துவிட்டாலும் போகாத கருப்பு கரை. சரி, கரை நல்லதுதானே என்று நானும் விட்டுவிட்டேன்.

இருந்தாலும் இது போன்ற பல பேரை, பல இடங்களில் பார்த்திருந்ததால், ‘இதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை, எனக்கு வேண்டாம்’ என்று நிராகரித்தாலும், ‘டிரை பண்ணித்தான் பார்க்கலாமே’ என்று என் உள்மனது கொஞ்சம் சத்தம் போட்டு சொல்லியது அவன் கண்ணில் விழுந்திருக்கவேண்டும், இந்த முறை கொஞ்சம் டியூனாகி, என்னை நம்ப வைக்க அவன் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் எங்கிட்ட இறக்கினான்.

‘எனக்கு என்ன தேவையா, உனக்கு இப்படி சொல்லவேண்டும் என்று, ஏதோ சின்ன வயசுக்காரனா இருக்கியே, என் தம்பி மாதிரி வேற இருக்குறதனால இதச்சொன்னேன். மற்றபடி உன் இஷ்டம், வெறும் பத்து ரூபாய்ல (திரஹம்) உன் அழகை மீண்டும் பெறலாம், போன வெறும் பத்து ரூபாய், வந்தா இளமை, யோசி...’ என்று பேசி ஆறாம் அறிவை ஆஃப் செய்தான். நானும் ‘ இல்லாத மயிற வச்சி மலையை இழுப்போம், வந்தா மயிறு, போனா பத்து ரூபாதானே.........’ யென யோசித்து அவனுடன் நம்பி போனேன். முதலில் ஒரு கடையில் போய் எண்ணெய் வாங்கினான், கடைக்காரன் 12 ரூபாய் என சொல்ல, ‘என்னடா, ஏமாத்தலான்னு பாக்குறியா? 10 ரூபா பொருளை 12 ரூபான்னு சொல்லுற, போலிஸ கூப்டுருவேண்.. போலிஸ கூப்டுருவேன்’னு கடைகாரனை மிரட்டி என்னை 10 ரூபாய் கொடுக்க சொன்னான்.

‘ஒரு வேள நல்லாவனா இருப்பானோ’ என்று மனது மூளையுடன் விவாதித்துக்கொண்டிருந்தது. ‘ஹரே பாய், தும் பத்துரூபா போலா?, எண்ணெய்க்கே பத்துரூபா ஓகயா?’ என சுத்த ஹிந்தியில் பேசியதும், என்னைப் பார்த்து ‘சத்தியமா உன்ன யாராலயும் ஏமாற்றமுடியாதுடா?’ என்று சொல்வதைப் போல ஒரு ரியாக்ஸன் கொடுத்தான், அந்த பூரிப்புல, பதிலை எதிர்பார்க்காமல் நான் அப்படியே ஆஃப்பாயிட்டேன். ‘நான் சொன்னது மருந்துக்குத்தான், எண்ணெய்க்கு இல்லை’ என்றும் சொன்னான்.

முதல்ல ஒரு மூத்தர சந்துக்குள்ள கூட்டிக்கொண்டு போனான், அங்கிருந்து இடது பக்கத்தில் திரும்பி இரண்டாவது மூத்திர சந்து அது, அப்படியே வலது பக்க மூன்றாவது மூத்திர சந்து..... என பல ரைட், லெப்டுகளுக்கு முடிவில் ஒரு மலையாளத்தில் எழுதிய ஆயுள்வேத கடையில் வாசலில் நின்றோம். முதல் மூத்திர சந்துக்குள் நுழையும் போதே தெரிந்துவிட்டது, இது பிம்பிலிக்கா பிலாப்பி என்று. சரி கொடுக்கவேண்டிய பத்து ஓவாவை கொடுத்துவிட்டு நடையைக் கட்டவேண்டியது தான் என்று எண்ணும் போது, கதையில் ஒரு டுவிஸ்ட்.

மலையாளத்தில் எழுதியிருந்த கடையில், சுடிதார் போட்ட பாக்கிஸ்தான்காரர்கள், நான் அப்படியே ஷ்ஷாக்காயிட்டேன்.....அத பார்த்தபின்னாடி கண்டிப்பா ஏமாந்துபோயிட்டோம் என்று முடிவுக்கே வந்தாச்சு. தப்பிச்சு போகலாமுன்னு பார்த்தா, கடைக்குள் ஏறும் போதே பின் பக்கமா, ஆஜானபாகுவா இரண்டு பாக்கிஸ்தானிகள் லாக் செய்துவிட, செய்கூலி கொஞ்சம் அதிகமானலும் பரவாயில்லை, சேதாரமின்று ரூம் செல்ல எத்தனித்ததால் ‘பீ கேர்ஃபுல்’ என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

கூட்டிக்கொண்டு சென்றவன் ஆப்கானில் டப் செய்யப்பட்ட சிவாஜி கணேசன் படங்களை பார்த்திருக்கவேண்டும், வாங்கிய 50 ரூபாய்க்கு 500 ரூபாய்க்கு நடித்துக்கொண்டிருந்தான். கடைக்காரனிடம் ‘போன முறை என் தம்பிக்கு கொடுத்த அந்த மருந்து கொடு, இத்தாலி மருந்து வேண்டாம், கொஞ்சம் பைசா ஜாஸ்தி என்றாலும் பரவாயில்லை ஜெர்மனி மருந்து கொடு’ என்று கேட்டுக் கேட்டு, கொண்டுப்போன எண்ணெயில் கலந்துகொண்டிருந்தார்கள். கடைகாரன் வாசிம் கான் நம்பூதரி ‘உன் வயசு என்ன?’ என்று வினாவினான், ‘எதுக்கு?’ என்றேன். ‘மருந்தை வயதுக்கு ஏற்றவாருதான் கலக்கவேண்டும் இல்லை என்றால், வளரும் முடியில் சில வெள்ளைமுடியாக மாறிவிடும்’னு சொன்னதைக் கேட்டபின்பு ‘இதுக்கு பி.ஜே.பிக்காரன் 100 நாளில் கருப்பு பணத்தை கொண்டுவருவோம்னு சொன்னதே பரவாயில்லடா’ என்று நினைத்துக்கொண்டேன். கலக்குற சாக்பீஸ் பவுடருக்கு, சயிண்டிஸ்மாதிரி விளக்கம் வேற.

எல்லாம் முடிந்து பாட்டிலை கொடுக்கும் போது, 10 ரூபாய் சில்லரை இல்லாததால் நான் பையில் இருந்த 50 ரூபாயை எடுத்துக் கொடுக்கொடுத்தேன். வாங்கியபின்பு, கடைக்காரன் ‘கியா?’ என்றான், நானும் ‘கியா?’ என்றேன், கூட்டிச்சென்றவனும் ‘கியா?’ என்றான். ‘மருந்தோட விலை 350 ரூபாய் என்றான், நீ வெறும் 50 ரூபா தார, மிச்சம் 300 எங்கே?’. என்று கடைக்காரன் கேட்க, ‘யோவ், நான் எப்படா 50 ரூபா தாரேன்னு சொன்னேன்? ஒழுங்கா 10 ரூபா எடுத்துக்கிட்டு மிச்ச 40 ரூபாயை திருப்பி கொடு?’ என்று நான் முரண்டுபிடிக்க, கூட்டிக்கொண்டு வந்தவனோ ‘ஒரு நாளுக்குத்தான் பத்து ரூபாய்ன’னு சொன்னேன், உனக்கு ஒரு மாசத்துக்கான மருந்து கலந்து இருக்கு, ஆக 30 X 10 = 350 (????)’ ன்னு சொன்னான். நல்லவேளையாக என் பர்சில் அப்போது அந்த ரூபாயை தவிர வேறு பணம் இல்லாததால், கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனாலும் அவர்கள் விடுவதாக இல்லை. அரை மணி நேரம் ஆகியும் விடுவதாக இல்லை, பின்பு, ATMமில் பணம் எடுத்து தருகிறேன் என்று கூறிவிட்டு, தப்பிச்சோண்டா சாமீ.... என்று பின்தலையில் கால்பட ஓடி தப்பித்தேன்.

‘சீலை இல்லன்னு சித்திக்கிட்ட வாங்கப்போனாலாம் ஒருத்தி, ஈச்ச ஓலையை சுத்திக்கிட்டு எதித்தாப்புல வந்தாலாம் சித்தி’ ங்குற கதையா, காலனா சம்பாதிக்கலாமுன்னு கடல்தாண்டி வந்தாலும் காவாலிப்பயலுக கப்பலேறி வந்து நிக்கானுங்க.
---------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

திங்கள், ஜூலை 07, 2014

நோன்பும், நோன்புக் கஞ்சியும்.

இசையமைப்பாளர் அனிருத் போன்ற தோற்றத்தில் நோஞ்சானாக இருந்த நான், நோம்(ன்)புக் கஞ்சிக்காகவே நோம்பிருந்த இனிமையான காலங்கள் அது. ஆறாவது வகுப்பு வரை இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் பயின்ற போது, வெள்ளிக்கிழமைகள் மட்டும் நோன்பு வைத்ததுண்டு (அப்போதெல்லாம் எங்களூரில் இருந்த இஸ்லாமிய பள்ளிகளுக்கு வியாழக்கிழமை மதியமும், வெள்ளிக் கிழமையும் விடுமுறை). நோன்பு என்றால் அதிகாலை ஸஹர் உணவை சாப்பிட்டு விட்டு ஒரு தூக்கம், விழிப்பது 12 மணி தொழுகைக்காக, பின்பு மறுபடியும் தூக்கம் அடுத்து விழிப்பது மாலை 6 மணிக்கு நோன்பு திறப்பதற்காக என்பதாகவே இருந்தது.

மற்ற நாட்களில் யாருக்கும் தெரியாமல் காலைப் பொழுதுகளில் தண்ணிரை குடித்துவிட்டு, மாலையில் நோம்புக் கஞ்சிக்காக அப்பாவுடன் குல்லாவை மாட்டிக் கொண்டு மசூதி சென்று ‘கள்ள கொட்றா’ குடித்ததுண்டு. கஞ்சு ஊற்றுவதற்கு மண்ணினால் செய்யப்பட்ட அந்த குவளைக்கு எங்கள் ஊறில் ‘கொட்றா’ என்று பெயர். ‘என்னப்பா உன் பையன் நோன்பா வச்சிருக்கான்?’ என ஆச்சிரியத்தோடு கேட்கும் கஞ்சி ஊற்றுபவனிடம், ‘ஆமாம், காலையில 4 மணியிலிருந்து 9 மணிவரை’ என வாய் கூசாமல் உண்மையை கூறிவிட்டு கொட்றாவைத் தூக்குவார், தாத்தா அரிச்சந்திரனின் அடுத்தவாரிசான என் தோப்பனார்.  என்னைப் போலவே சக பங்காளிகளும் அப்பா கைலிக்குப் பின்பாக பதுங்கி பதுங்கி வருவதைப் பார்த்தவுடன், அப்பா கையை விட்டு விட்டு ‘கள்ள கொட்றா அசோசியேசன்’ மெம்பர்களுடன் கூட்டாக உட்கார்ந்து நோற்காத நோம்பை கொண்டுவந்திருந்த வடை, ஊருகாய், ரஸ்னா, முருக்கு சமோசா போன்ற ஐட்டங்களுடன் முடிக்கமுடியாமல் முடித்துக்கொள்வோம்.  

'கோனன் பண்டாரி'யின் கைப்பக்குவ கஞ்சிக்கு, கொத்தடிமைகளாக மாறி கைமாறு செய்ய காத்திருந்த கனாக் காணும் காலங்கள். கறிக் கஞ்சிக்காகவும், போத்திஸ் கொடுக்கும் இத்துணூண்டு பூந்தி பொட்டலத்துக்காகவும் மட்டும் எங்கள் ஊரில் இருந்த அத்தனை பள்ளிவாசல்களையும் அறிந்து வைத்திருந்திருந்தோம். இன்ன தேதியில், இத்தனையாவது நோம்பு நாளில் மதினா நகர் பள்ளிவாசலில் பாயாசம் என்றும் அதன் மறு நாள் பெரிய தெரு பள்ளிவாசலில் பீப் சுக்கா எனவும், நஜாத் பள்ளிவாசலில் பஜ்ஜி சட்னி எனவும் பெரிய்ய ‘டேட்டா பேஸ்’ புத்தகமே எங்களிடம் இருந்தது.

அந்த இஸ்லாமிய பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் வரையில் முழுமையாக முப்பது நோன்புகளையும் வைத்திராத என்னை ஏழாவது வகுப்பில் வகையாக மாட்டிக்கொள்ள வைத்தது சுத்தி இருந்த சத்ய சீலன், மாணிக்க ராஜா, சங்கர், ஸ்ரீ ரங்க நாதன் எனும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் கடைசி கலிபாக்கள்தான். அந்தப் பள்ளியில் அலசி ஆராய்ந்து  பார்த்தால் ஐந்து முஸ்லீம் பசங்களுக்கு மேல் இருந்த நியாபகம் இல்லை. எனது வகுப்பில் நான் மட்டும்தான் இஸ்லாமியன் என்பது கூடுதல் தகவல்.

‘ஏண்டா நோம்பு வைக்கிறீங்க?’, ‘எப்படிடா தண்ணி கூட குடிக்காம இருப்பீங்க?’. ‘பள்ளிவாசல என்னடா பண்ணுவீங்க?’. ‘காலையில எத்தன மணிக்குடா சாப்பிடனும்?’ ‘ரொம்ப கிரக்கமா இருந்தா என்னடா பண்ணுவீங்க?’ என இஸ்லாத்தை கண்டுபிடித்த முகம்மது நபியின் முப்பதாவது வாரிசிடம் கேட்பது போல, கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் கேட்டும் கேள்வியும், காலாண்டு கேள்வித்தாளும் ஒன்று, எதுக்குமே எனக்கு பதில் தெரியாது. ‘நானே நோம்புக் கஞ்சிக்குத்தாண்டா நோம்பு வைப்பேன்’னு உண்மைய சொன்னா, பூரா ‘பாய்’ஸும் பேட் ‘பாஸ்’ன்னு நெனச்சிடுவானுங்களோன்னு பயந்து, ‘எனக்கு எழுத எக்கச்சக்கமா இருக்குது, நீ கேக்குறதுக்கு பதில் சொல்ல நிறைய நேரம் ஆகும் அதனால, நாளைக்கு ஒன்னுக்கு பெல் அடிக்கும் போது எல்லாத்தையும் சொல்லுதேன்’ என்று எஸ்ஸாகி, அப்பா முன்னாடி ஆஜர் ஆவேன்.

‘ஏம்பா நோம்பு வைக்கிறோம்?’, ‘எப்படி தண்ணி கூட குடிக்காம இருப்போம்?’. ‘பள்ளிவாசல என்ன பண்ணுவோம்?’. ‘காலையில எத்தன மணிக்கு சாப்பிடனும்?’ ‘ரொம்ப கிரக்கமா இருந்தா என்னப்பா பண்ண?’ என எல்லாக் கேள்விகளுக்கும் பதில் வாங்கி, மனப்பாடம் செய்து வைத்து, நண்பர்களுக்கு ஒப்பிப்பது என்பதுவாக இருந்தது என் பணி. அவர்களின் மூலமாகத்தான் எனக்கே இஸ்லாம் பற்றிய ஒரு சிறு அறிவு ஏற்பட்டது என்றால் அது கதையல்ல நிஜம்.

‘டேய், இனி முதல் பெஞ்சுல உட்காராத, நாலாவது பெஞ்சுல போய் குமார் பின்னாடி உட்காரு, அப்பத்தான் டீச்சர் பாக்காது’ என ரொம்ப அக்கறையாக நண்பன் சொல்ல,

‘எதுக்குடா’ன்னு நான் கேட்டேன்,

‘நோம்பு டயத்துல கிரக்கமா இருந்தா தூக்கிக்கோ’ என கறந்த பசும்பாலின் தூய்மையுடன் என் நண்பன் சொல்ல, அவர்களின் அந்த அன்புக்கு மட்டுமே கட்டுப்பட்டு முதல்முறையாக முப்பது நோம்புகளையும் நோற்றேன்.

ராமாயணம் பாடம் நடந்து கொண்டிருக்கும் போதே, ரமலான் மாதத்தின் சிறப்பை கேட்கும் நண்பர்களின் அறிவுப் பசி, சில நேரங்களில் வயிற்றுப் பசியை விட கொடுமையானதாக இருக்கும். அந்த மாதம் முழுவதும் தோழர்கள் என்னை எங்கும் தனியாக அனுமதித்ததே கிடையாது, ‘கெரங்கி கீழ விழுந்துட்டா?, ‘மயங்கி மண்ட போட்டுட்டா?’ என ரைமிங்காக எச்சரிப்பது திகில் படத்தைப் பார்ப்பது போல பீதியாக இருக்கும். வீட்டுப் பாடம் எழுதாமல் இருந்த போதும், கேள்விக்கு தப்பாக பதில் சொன்ன போதும், பாடத்தை கவனிக்காமல் இருந்த போதும் டீச்சர் அடிக்க வருகையில், ஒட்டுமொத்த வகுப்புமே எனக்காக எழுந்து “டீச்ச்சர்..........அவன்ன்ன்..... நோன்பு...........” என இழுத்து சொல்லும் போதுதான் நானே உணர்வேண், நான் நோன்பு இருப்பதை. அதற்கு தகுந்தாற் போல் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு டீச்சர் அடியிலிருந்து அந்த ஒரு மாசத்துக்கு விடுதலை.

நான் படித்த ஊரில் ஒரு சின்ன பள்ளிவாசல் இருந்தது, அங்கு எப்போதும் கஞ்சியுடன் ஒரு வடையும், ஒரு சமோசாவும் உண்டு. எங்களது ஊரில் எதுவும் ஸ்பெசல் இல்லை என்றால் சின்ன ஜமாத்தில் சகலத்தையும் முடித்துவிட்டுத்தான் வீட்டிற்கு செல்வது என வாடிக்கை. ஊரில் பாயாசம், பிரியாணி என ஸ்பெசல் ஐட்டங்கள் என கேள்விப்பட்டுவிட்டால் சொல்லி வைத்தாற்போல் 3 மணிக்கு கிரக்கமா..... வரும், டீச்சரும் ஒருவனை கூட அனுப்பி பஸ் ஸ்டாண்டில் என்னை விட்டு வரச் சொல்லும். இதுமாதிரி ஸ்பெசல் போடுகிற நாளில், புதுப் படம் ரிலீஸ் ஆன தியேட்டர் மாதிரி கூட்டம் அள்ளும், அந்த கூட்டத்தில், நமக்கும் ஒரு பாயாச கோப்பையையும், வீட்டுக்கு எடுத்துச் செல்ல கையோடு கொண்டு வந்த தூக்குச் சட்டிக்கு ஒரு கோப்பையையும் எடுத்து வெளியே வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

நோம்பு நேரங்களில் நல்ல அமல்கள் செய்யவேண்டும், நல்லதையே பேசவேண்டும் என காலையில் அஸரத் வகுப்பு எடுத்திருந்தாலும், கூட்டத்தில் முண்டி சண்டை போடும் போது ‘....தா காலை மிதிக்காதடா’ ‘....ம்மா வேட்டிய உருவாதடா’ என்ற பொன்மொழிகளே சம்சாரிக்கப்படும். இப்பவெல்லாம் மண் சட்டி மலையேறிப் போச்சு. பாயாசம் போயே போயிந்தி. இன்று எப்போதாவது பிரியாணி பொட்டலம் கொடுப்பார்கள், எங்களிடம் இருந்த போர்க்குணம் எல்லாம் இப்போது இருக்கும் வாண்டுகளிடம் சுத்தமாக இல்லை. பரிதாபமாக பார்த்தால் பார்சல் பிரியாணியை நமக்கே தந்துவிட்டுப் போகும் அளவிற்கு போர்க்குணம் மங்கிப் போய்விட்டது.

காலேஜ் படிக்கும் போது நிர்வாகம் நோம்பு நோற்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்திருந்தார்கள், ஆனாலும் நோன்பு முடிக்கும் போது கஞ்சி இல்லாமல் ரொம்ப குஷ்டப்பட்டேன். ஒரே ஒரு முறை காலேஜ்க்கு பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிவாசலுக்கு நோம்பு திறக்க சென்றாலும் கஞ்சியில் எங்க ஊரை மிஞ்ச இயலாமையால் வார வாரம் ஊருக்கே வந்துவிடுவேன். பெங்களூரில் வேலை செய்த இடத்திற்கு பக்கத்தில் இருந்த பள்ளிவாசலில் கஞ்சியுடன், வீட்டில் இருந்து கொண்டு வரும் பழங்களையும், இனிப்புகளையும் அனைவருக்கும் பங்கிட்டு அனைத்து தட்டுகளிலும் நிரப்பிவிடுவார்கள், சில சமயங்களில் இரவு சாப்பாடும் ஏற்பாடு செய்துவிடுவார்கள். இரவு சாப்பாடு என்று கேள்விப்பட்டுவிட்டால் அன்று பக்தி பழமாக, இல்லை இல்லை பக்தி பஞ்சாமிர்தமாகவே மாறிவிடுவேன்.

வெளிநாட்டில் இருந்து வரும் சொந்த பந்தங்களை திருவனந்தபுரம் ஏர்போட்டில் இருந்து தூக்கிவர ரமலான் மாதத்தில் மட்டும் முண்டியடித்து முன்னாடி போய் நிற்பதன் காரணம், அங்குள்ள பள்ளிவாசலில் கஞ்சியுடன், பயிறு, அப்பளம், துவையல் கொடுப்பதாக கேள்விப்பட்டதால்தான். அந்த கஞ்சியை கண்ணால் காண, கடல் கடந்துவருபவரை கூப்பிடச் சென்றால், அவரோ குடித்தால் கடையநல்லூர் கஞ்சியைத்தான் குடிக்கவேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்டு வண்டியை அடித்து ஓட்டிக்கொண்டு எங்க ஊர் பள்ளிவாசல் முன்னால் நிற்க, பாங்கு ஓசை கேட்க, என நேரம் கண கச்சிதமாக இருக்கும்.

‘முண்டாசுப் பட்டி’ முனீஷ்காந்த் மாதிரி சாப்பாடு போட்டா சம்பணம் போட்டு உட்கார்ந்துவிடுதன் காரணம் அனிரூத்தாக இருப்பவன் எப்படியாவது அர்னால்ட் மாதிரியான உடல்வாகுடன் உருவாக வேண்டும் என்ற லட்சிய வேட்கைதானின்றி வேறில்லை பராபரமே. ரமலான் மாதம் என்றாலும் கொண்ட கொள்கையில் தொய்வு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் கஞ்சியில் இருந்து அதிகாலை சாப்பாடு வரை வாய் அசை போட்டுக்கொண்டே இருக்கும். அபுதாபி வந்த பின்பு கஞ்சி கலாச்சாரம் இல்லை என்பதை அறிந்து ‘முஸ்லீம் நாடுன்னு சொல்லி வந்து இப்படி மோசம் போயிட்டோமே’ என கஞ்சிக்காக கதறியதுண்டு. ரமலானுக்கும், கஞ்சிக்கும் உண்டான பந்தத்தை எளிதாக விட்டுவிட என்னால் முடியவில்லை, அதனால் இப்போது நானே கஞ்சி சமைத்து நோன்பு திறப்பதுண்டு.

பழைய நல்ல விசயங்களில் சில, நம்முடய ஞாபகக் கதவுகளை தட்டுகிறது என்றால், அந்த நேரத்தில் ஒரு கெட்ட விசயம் நடந்திருக்க வேண்டும். அதுபோலத்தான் இந்த கஞ்சி மேட்டரும், நானே சமைத்த கஞ்சியை குடித்தபின்பு உருவான ஞாபகம் வருதே, ஞாபகம் வருதேதான் இது.


-------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

வியாழன், ஜூன் 26, 2014

ஏங்கித் திரிந்த காலம்.

ஊர் கூடி தேர் இழுத்து தெருவுல விடுவது போலவே, ஊர் கூடி முடிவெடுத்து “இங்க பாருல, உ மாமி பொண்ணுக்குத்தான் நீ புருசனா வேலை பார்க்கப்போற” என நிச்சயித்து தெருவில் விட்ட நேரம். திக்கு திசை தெரியா தி.மு.க காரன் போல அப்போது நான் இருந்தேன். கையில் துண்டு போட்டு விரல் பிடித்து, பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்பு உடன்பாடு ஏற்பட்டு உருவான பந்தம். உருக்குலையாமல் மேல் சொன்ன டயலாக்கிற்கு தைரியமாக தலையாட்டி வைத்திருந்தேன். அன்று ஆட்டிய தலைதான் இன்னும் ஆட்டி வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தை எவளிடமிருந்தாவது இன்று கேட்டிறாதா, நாளை கேட்டிறாதா என ஏங்கித் திரிந்த காலம். அந்த ஏக்கத்தினை வீட்டிலிருந்தோர் எட்டிப் பார்த்திருந்திருக்க வேண்டும், இனி விட்டால் ஏர்வாடிதான் என்றே எத்தனித்திருக்க வேண்டும். அதன் விளைவே துண்டுடன் கூடிய பேச்சுவார்த்தை. “ஈக்கினிசா” என்ற பட்டப்பெயருடன் இஞ்சினியரான தன் பையனுக்கு பெண் கொடுக்க பட்டத்து ராஜா பரிவாரங்களுடன் வருவார் என வாசலில் எட்டி எட்டி பார்த்து ஏமாந்து போன கதையை ஈஸ்ட்மெண்ட் கலரோடு பிளாஸ்பேக்கில் சென்று படம் காட்ட விருப்பமில்லை.

டிசம்பரில் ஒப்பந்தமான அக்ரிமெண்ட் படி குழி தோண்ட ஆரம்பித்து சரியாக ஒரு வருடம் இரண்டு மாதம் கழித்து தோண்டிய குழியில் தள்ளிவிட்டு மூடினார்கள். முன்வழுக்கை பின்னோக்கி முன்னேறிக் கொண்டிருந்த நேரம், பொண்ணுக்காக யாசகம் செய்யாததுதான் குறை. முப்பது வயது அல்மோஸ்ட் முதிர்கண்ணன் ரேஞ்சுக்கு போன எனக்கு தோண்டிய பள்ளம் அழகானதா, அம்சமானதா என்று யோசிக்க நேரமில்லை, விழுந்துவிட்டேன்.

கல்லூரி முடித்து பெங்களூருக்கு வேலைக்கு சென்றிருந்த நேரம், யாரும் என்னை முஸ்லீமாக ஏற்றுக்கொள்ள தயாரில்லை. “எங்கம்மா சத்தியாமா நான் முஸ்லீம், முஸ்லீம்” என முக்கிக் கொண்டிருந்தாலும் யாரும் நம்பத்தயாரில்லை. உறுதிப்படுத்த ஒரு வழி இருந்தது ஆனால் அதற்கு எனக்கு மனம் ஒப்பவில்லை. அவர்களின் சந்தேகத்திற்கு இரண்டு காரணங்கள் ஒன்று எனக்கு உருது தெரியாமல் இருந்தது, இரண்டாவது எனக்கு கல்யாணமாகமல் இருந்தது. அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் பார்த்த முஸ்லீம் ஆண்களுக்கு 22 வயதில் குறைந்தது 2 வயது குழந்தையாவது இருக்குமாம். உருது மொழி பற்றி ஏதோ சொன்னார்கள் உருப்படியாக நினைவில் வைத்துக்கொள்ளவில்லை (நமக்கு அதுவா முக்கியம்).

22 வயதில் கல்யாணம் என கேட்டவுடன், முஸ்லீமாக பிறந்ததற்கு பெருமையாக இருந்தாலும், தப்பாக வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ்நாட்டில் முஸ்லீமாக பிறந்துவிட்டோமே என்ற கோபம் தான் அதிகமாக இருந்தது. ‘நமது ஊரில் இஸ்லாத்தை தப்பாக பரப்பிவிட்டார்கள் பாவிகள்” என்று மேடை போட்டு முழங்க எண்ணினேன். பத்தாவது படிக்கும் போது புத்தகத்தை ஒரு கையிலும், பாவடையை மறு கையிலும் பிடித்துப் பார்த்த வகுப்புத் தோழிகளுகளை, நான் கல்லூரிக்குச் சென்று திரும்பிப் பார்க்கையில், புத்தகத்துக்கும் பாவடைக்குமான கை, கைக்குழந்தைக்கும் முதல் குழந்தைக்குமாக இருந்தது.

கல்லூரியில் கெமிஸ்ரி வகுப்பு வரும் போது எல்லாம் ‘சே நாமளும் பொட்டப்புள்ளையா பிறந்திருந்திருக்க கூடாதா?” என விட்ட பெருமூச்சிக்காற்று எந்த கார்பரேசன் தண்ணி குழாயிலும் வந்திருக்காது. “உங்களது பிள்ளைகளுக்கு சரியான வயதில் திருமணம் செய்துவிடுங்கள், இல்லையேல் அவர்களது குற்றங்களுக்கு நீங்களும் பொருப்பாவீர்கள்” என நபிகள் நாயகம் கூறியது எப்படி நம்ம தகப்பனாருக்கு தெரியாமல் போனது? என பல முறை யோசைனையில் இருந்ததுண்டு. எனக்கு எப்படி நபிகளார் சொன்ன இந்த ஒரு விசயம் மட்டும் தெரிந்ததோ, அது போல இந்த ஒரு விசயம் மட்டும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை என்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. ஒன்னு சொல்ல மறந்திட்டனே, எங்கப்பாவுக்கு 21 வயதிலேயே கல்யாணம் ஆகிவிட்டது (அது சரி).

‘”அந்த பொண்ணு உன்னத்தாண்டா பாக்குது” என என்னிடம் சொன்னவர்கள் எவரையும் வெறும் வயிற்றுடன் அனுப்பியது கிடையாது. பொய், சுத்தப் பொய் என தெரிந்தும் ஒரு அல்ப சந்தோசத்துக்கு அலைந்து கொண்டிருந்த அந்த காலங்களை திரும்ப கூப்பிட்டு மனத்திரையில் ஓட்டிப் பார்க்கும் போது, திரும்பி உட்கார்ந்து குலுங்கி குலுங்கி அழ தோன்றும். என் நினைவு சரி என்றால் அது என் 25 ஆவது வயது “வயசு போய்கிட்டே இருக்கு, நிறைய இடத்தில் இருந்து பொண்ணு எல்லாம் வருது, சீக்கிரமா கல்யாணத்தை நடத்திடனும்” என அம்மா சொன்னாள். “இம்புட்டு வெயில்ல நீ எதுக்கு ரேசன் கடைக்கு போற, குடு நான் வாங்கிட்டு வாரேன்” என துள்ளிக்குதித்து ஓடிச் சென்று ஒரு கிலோ மீட்டர் நீண்ட வரிசையில் மண்ணன்னெய்க்காக மணிக்கணக்காக நின்றேன். வரிசையில் நின்ற போதெல்லாம் “நிறய வீட்டிலிருந்து பொண்ணு வருவதாகச் சொன்னாளே, அந்த வீட்டுல இருந்து வந்திருக்குமோ, இந்த வீட்டிலிருந்து இருக்குமோ” என்ற எண்ண ஓட்டத்தில், வரிசையின் நீளம் பெரிதாக தோன்றவில்லை.

அம்மா இரண்டு வீட்டைப் பற்றி சொன்னாள், இரண்டுமே எனக்கு பிடிக்கவிலை, “பொண்ணு எதுவுமே படிக்கலியே?” என நான் கூற, “உங்க அண்ண மட்டும் என்ன ஐ.ஏ.எஸ்ஸா படிச்சிருக்காரு?” என தூக்குச்சட்டியை தூக்கியபடியே அக்கா பக்கத்தில் வந்து அமர்ந்தாள். ‘பொண்ணு அண்ணனுக்கா...............?” என இழுத்தேன், அப்போதுதான் வளைகுடாவில் எண்ணெய் கிணறு வைத்திருக்கும் உடன் பிறப்பும் ஒண்டியாக இருந்தது என் சிற்றரிவுக்கு ஞாபகம் வந்தது. சொந்தங்கள் கூடி பேசிய நேரத்தில் கூட்டத்தில், ஒரே ஒரு கண்ணியவானுக்கு மட்டும் என் கண்களில் ஊற்றெடுக்கும் கானல் நீரைப் பற்றி தெரிந்திருக்கும் போல “சின்னவனுக்கும் சேர்ந்து பொண்ணு பார்திடவேண்டியது தானே?” என ஒரு சரத்தை முன்மொழிய, அதை வழிமொழிய யாரும் இல்லாத்தால் திரும்பப் பெறப்பட்டுவிட்டது. என்ன சொல்வது, நான் நடந்து போனா, சனியன் சைக்கிள்ல போய் சைடு ஸ்டாண்ட் போட்டு நிக்குது.

அடுத்த ஒரு வருடம் மறந்தும் கூட ஒரு காதல் படங்கள் கூட பார்த்திடவில்லை. எல்லாம் ஆக்சன், ஆக்சன், ஆக்சன் என எந்த ரியாக்சனும் இல்லாமல் வாழ்க்கை உருண்டு ஓடியது. திடீரென “உனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுடுவோமா?” என முகத்தைப் பார்த்து மை டியர் டாட் கேட்க, பதட்டத்தில் “எனக்கு எதுக்குப்பா..., இப்ப அவசரம் கொஞ்சம் பொறுத்து” னு சொல்லித் தொலைத்துவிட்டேன். பொறுத்தாங்க, பொறுத்தாங்க............ பொறுமைக்கு பெயர் எடுத்த அன்னை தெரசாவையே மிஞ்சிர அளவுக்கு பொறுமையின் எல்லைக்கே போய்விட்டார்கள்.

அடுத்த வருடம் திருமணம் இல்லை என்றால், அட்டம்ட் ரேப் கேஸில் ஆயுள் தண்டனை கைதியாகி இருப்பேன் என எண்ண ஓட்டம் ஓடோ ஓடு என ஓடிக்கொண்டிருந்தது. அப்போது வேலை ஸ்டெடியானவுடன் தான் பெண் பார்ப்பது என்பது வழக்கமாக இருந்தது, ஆனால் இப்போது உள்ள தலைமுறைகள் அப்படியெல்லாம் எங்களைப் போல மங்குனி அமைச்சர்களாக இல்லை. பெண் பார்த்தால் தான் வேலைக்கே போவேன் என அடம்பிடிப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றது.

நம்ம கதைக்கு வருவோம்.

பொறுத்ததுதான் பொறுத்தோம் இன்னும் ஒரு 10 வருசத்துக்கு பொறுத்துவிட்டு, நேரடியா 60 தாவது கல்யாணத்தை பண்ணிடலாங்குற முடிவு செய்யப்பட்ட போதுதான் டிசம்பர் டுவிஸ்ட். டிசம்பரில் முடிவு பண்ணியவர்கள் போன் நம்பரை வாங்கி தருவார்கள் என வெயிடிங் லிஸ்டில் இருக்க, மீண்டும் அன்னை தெரசாவின் அதே பொறுமை. டிசம்பரில் டிரங்க் கால் புக் பண்ணியவனுக்கு பிப்பிரவரி 14ல் தான் கனெக்சனே கொடுத்தார்கள்.

அதுக்கு அப்புறமா மாலை 6 மணி முதல் 8 மணி வரை பேக்ரவுண்டில் எஸ்.ஏ. ராஜ்குமாரின் லா, லா...தான். இப்படியாக மணிக்கணக்கில் பேசியபோது ஒரு நாள் "உங்க ஹாபி என்ன?” என்று என் மனைவி கேட்டதற்கு, சமைக்கத்தெரிந்த ஆண்களை பெண்களுக்கு அதிகமாக பிடிக்கும் என்று எங்கயோ வடை மடித்து கொடுத்த பேப்பரில் படித்ததை வைத்து ‘சமைப்பதுதான் என் ஹாபி’ என்று சொல்லியிருந்தேன்.

கல்யாணத்திற்கு அப்புறமாக வாழ்க்கை ‘ஹேப்பி’யாக போகும் என்று நினைத்த எனக்கு, இப்போது ‘ஹாபி”யாக போய்கொண்டிருக்கிறது.


-------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.