வியாழன், அக்டோபர் 27, 2016

நேரம் ரெக்கார்ட் டான்ஸ் ஆடியபோது.....

பொறந்த வீட்டுக்குப் போகும் புதுப்பெண் போல குவைத்திற்கு அவ்வளவு சந்தோசமாக சென்றுவிட்டு, புகுந்த வீட்டிற்கு திரும்புவது போல மூஞ்சை உர்ர்ர்ர் என்று வைத்துக்கொண்டு ஜித்தாவிற்கு திரும்பிச் செல்ல ஏர்போர்ட்டில் நின்றேன். (‘’இல்லன்னா மட்டும் உன் மூஞ்சு.....’’ என்ற மைன்ட்வாய்ஸ் வாலியூமை குறைத்துக்கொள்ளவும்). குவைத்தில் வந்து இறங்கிய போது முன்னழகால் முரட்டு முட்டு முட்டி ‘’வெல்கம் டு குவைத்’’ என்பதை உணர்த்திய அந்த பெண் இருக்கிறாளா? என பலமுறை திரும்பிப் பார்த்து ஏமாந்துபோனேன்.

பெட்டர்மாஸ் லைட்டேதான் வேண்டும் என்று அடம்பிடிப்பவன் அல்ல நான். ஒரு சிம்னி விளக்காவது இடிக்காதா? என்ற ஏக ஏக்கத்தில் ஸ்லோமோசனில் நடந்தேன். விளக்குகளின் அளவை வைத்து தவறாக எதையும் நினைத்து கற்பனைக் குதிரையை ஓடவிடவேண்டாம். துர்பாக்கிய துர்நாற்றத்தில் முகம் மேலும் உர்ர்ர்ர் என்று மாறியது (இங்கு மைன்ட்வாய்ஸை மியூட் செய்வது நலம்). பாஸ்போர்ட் கவுண்டரில் இருந்து வெயிட்டிங்க் ரூம் கிளீனர் வரை ஆணாதிக்க அசிங்கங்கள். எங்கே?, கடைசி ஆசை நிரைவேறாமல் தூக்குக் கயிற்றின் முன் நிற்கும் கைதிபோல சோகம் கவ்விய முகமாய் நின்றேன்.

விமானத்தில் ஏரியதும், ஏர் ஹோஸ்டர் ‘’உங்க பக்கத்து சீட்டு ஒரு லேடி, பரவாயில்லையா?’’ என்று கேட்டாள். ‘’மகாசக்தி மாரியம்மன்’’ பட கே.ஆர் விஜயாவே கேட்பது மாதிரி இருந்தது. ‘’தாயே உன் கருணையே கருணை’’ என்று கூறி சீட்டை நோக்கி உசைன் போல்டின் சாதனையை மிஞ்சும் வேகத்தில் ஓடினேன். இந்த சீட்டுதானா? என கன்பார்ம் செய்வதற்குள் அந்த லேடி எழுந்துவிட்டாள். தன்னால் ஒரு ஆண் பக்கத்தில் இருக்க முடியாது என கூறி வேறு சீட் கேட்டுச் சென்றுவிட்டாள். நான் இன்சல்ட் செய்யப்பட்டதாக நினைத்த அந்த ஏர் ஹோஸ்டர் என்னிடம் சில ‘’ஸாரி’’களைச் சொன்னாள். அப்போது மாரியம்மன் மார்டன் கேர்ள் கே.ஆர் விஜயாவாக காட்சியளித்தாள்.  உண்மையில் நான் தான் கே.ஆர்.விக்கு நன்றி சொல்லியிருக்க வேண்டும். பிரம்மனின் ஒர்க்-ஷாப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறின் பழைய மாடல் லாரி அந்த லேடி. ‘’நல்லவேளை தப்பித்தோம்’’ என முதலில் தோன்றினாலும், பின்பு ‘’ச்சே அந்த பாழடைந்த பங்களாகூட, நம்மை பால்காய்ச்ச வந்தவனாக நினைத்துவிட்டதே...’’ என்றெண்ணி மனது ரணமானது.

எனது தன்மானத்திற்கு ஏற்படுத்திய தவறுக்கு பிராயச்சித்தமாக கே.ஆர்.விஜயா அங்கும் இங்கும் போகும் போது என்னைப் பார்த்து சில சிரிப்புகளை சிதறவிடுவாள். நானும் பொறுக்கிக்கொண்டேன் என்பதை மெதுவாக கண்மூடி திறந்து தெரிவிப்பேன். இந்த சிம்பதியால், உணவு கொடுக்கும்போது ஒரு பன்னும் ஒரு ஆப்பிள் ஜீஸும் அதிகமாக வைத்துவிட்டுப்போனால். இது பிரம்மன் ஒர்க்ஷாப் தண்ணி லாரியில் அடிபட்ட வலியைவிட அதிகமாக இருந்தது. நான் மானஸ்தன் என்பதால் அவள் அதிகமாக கொடுத்த பன்னை தொடவில்லை. ‘’அப்போ, ஆப்பிள் ஜீஸ்?’’ என்றா கேட்டீர்கள்?, இல்லைதானே?.

ஜித்தாவில், எமிக்ரேசனின் லைனில் என்னை தள்ளிவிட்டு ஒருவன் முன்னேறினான். ஒரு ஸாரி கூட கேட்கவில்லை. ‘’இலியானா இடை இல்லையானா’’ பாடலில் விஜய்னா வைத்திருப்பது போன்ற மொன்ன தாடி வைத்திருந்தான். ‘’விஜய் மாதிரி இருந்தானா?’’ என்று கேட்டால், விஜய் அளவிற்கு இல்லையென்றாலும் கொஞ்சம் அழகாகவே இருந்தான். அவன் செய்ததுதான் சரி என்ற தொனியில் முன்னேறிச் சென்றான். பெரிய்ய லைன்னில் என் முறை வருவதற்கு ஒரு மணிநேரத்திற்கும் மேல் ஆனது. பாஸ்போர்ட்டைக் கொடுத்த பின்பு, கம்யூட்டர் கவுண்டருக்கு செல்லுமாறு கூறினார். என்னுடய சௌவுதி விசாவை கம்பெனி மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்திருந்தது. பொதுவாக இதுமாதிரியான கேஸ்கள் உடனடியாக கம்யூட்டரில் அப்டேட் ஆகாது என்பதை முன்பு அறிந்திருந்ததால், வேறு எதையும் யோசிக்கவில்லை. கம்யூட்டர் கவுண்டரில் இருக்கும் போலிஸ், கம்யூட்டர்ஜி உடன் பேசிவிட்டு என் முகத்தை பார்த்தார். கொஞ்சம் நேரம் உட்காரச் சொன்னார். பின்பு அரை மணி நேரம் கழித்து ‘’என் பின்னால் வா’’ என்று சைகையில் கூறினார். நானும் வீட்டுக்குத்தான் அனுப்புறானுங்களோன்னு நம்பி போனேன்.

‘’மச்சான் ஒருத்தன் சிக்கி இருக்காண்டா’’ ரேஞ்சில் என்னப் பார்த்துவிட்டு அண்டர் கிரவுண்ட்டில் நாலு போலிஸ் சுத்தி இருக்கும் வட்ட மேஜை மாநாட்டுக்கு கூட்டிச்சென்றார். என்னை, பக்கத்தில் இருக்கும் ஒரு சேரில் வெயிட் பண்ணச் சொன்னார்கள். எனக்கு முன்னாடி ஒருவனை வ.மேஜையில் வைத்து விசாரித்துக்கொண்டிருந்தார்கள். சினிமாவில் பார்த்த ஒரு சீனை நேரில் பார்க்கும் போது வயிற்றில் ஒரு பிரளயமே நடந்தது. கண்கள் சொறுகியது, காது அடைத்தது, தொண்டை வரண்டது. ‘’யாரை விசாரிக்கிறார்கள்?’’ என்பதை, பெண் பார்க்கும் படலத்தில் டீயை கொடுத்துவிட்டு தலையை தூக்கியும், தூக்காமலும் மாப்பிள்ளையைப் பார்க்கும் பெண் போல பார்த்தேன். மாப்பிள்ளை யாருமில்லை நம்ம தாடி விஜய்னா தான். அவனைச் சுற்றி சுறா, புலி, குருவி தயாரிப்பாளர்கள் போல போலிஸ் உட்கார்ந்து விசாரித்துக் கொண்டிருந்தார்கள். ‘’நான் யாரையும் தள்ளிவிட்டு முன்னாடி போகலியேடா?’’ என்ற நினைப்பில் பேந்த பேந்த முழுத்துக்கொண்டிருந்தேன்.

அவன் ஒரு மாத இடைவெளியில், லெபனான், எகிப்து, குவைத் நாட்டில் இருந்துவிட்டு இப்போது சவுதி வந்ததால், எதற்கு லெபனான் சென்றாய்?, எகிப்து சென்றாய்? யாரை பார்த்தாய், எங்கு இருந்தாய்? என்றவாரே கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதிலிருந்து இது ஒரு தீவிரவாத விசாரனை என்பதை உணரமுடிந்தது. கிட்டத்தட்ட நானும் துபாய், சவுதி, குவைத் என ஒரு மாதகாலத்தில் பயணித்துக்கொண்டிருந்ததால், வயிற்றில் புளி இல்லை புளியமரமே கரைத்தது. என் முறை வந்தபோது கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்த போலிஸ் குவைத் சென்ற காரணம்?, என்ன வேலை பார்கிறார்? என்பதைக் கேட்டார். காரணத்தைச் சொன்னபின்பும், இஞ்சினியர் என்பதை நம்பவில்லை என அவர் கண்ணிலிருந்து அறிந்துகொண்டேன். குவைத் விசாவிற்காக லேப்டாப் பேக்கில் இருந்த சர்டிபிகேட் காப்பியை காண்பித்தேன். மேலும் தீவிரவாதியா? என்ற கோணத்தில் விசாரிக்க ஆரம்பித்தால் ‘’சார் நான் அவ்வளவு ஒர்த் எல்லாம் இல்லை’’ என்ற எம்பெருமான் வடிவேலு வசனத்தைச் சொல்ல எத்தனித்தேன். பின்பு, அவரே, என் விசா வேலிட் முடிந்துவிட்டதாகவும், புது விசாவில்தான் இனி சவுதி வரமுடியும் என்றும் இது விசா விதிமீறல் எனவும் சொன்னார்.

என் விசா தேதி முடிய இன்னும் 15 நாட்கள் இருக்கிறது என்பதை கூறினாலும் எதையும் காதில் வாங்காமல் வெளியே கூட்டிச் சென்றார்கள். பின்னாடிசென்ற எனக்கு அதிர்ச்சி, பேரதிர்ச்சி. ஒரு அறையில் அடைத்துவிட்டு போய்விட்டார்கள். எனக்கு முன்பாகவே விஜய்னா கதை டிஸ்கஷனில் இருந்தார், மேலும் ஒரு பத்துப்பேர் இருந்தார்கள். தரையில் பெட் போட்டு, ஒரு கனமான ஜம்காளம் கொடுக்கப்பட்டது. என்னவென்றே தெரியாமல், கலங்கிப் போய் நின்றேன், கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது. போன் என்னிடமே இருந்ததால் இரவு என்றாலும் ஆபிஸின் அத்தனை பேருக்கும் போன் செய்து விஷயத்தைக் கூறினேன். அந்த ரூம் அண்டர் கிரவுண்டில் இருந்ததால் சிக்னெல் கொடுமைப்படுத்தியது.

நாக்கு வறட்சியில் தண்ணீர் தேவைப்பட்டது, சுற்றிப்பார்த்தேன் என் போலவே பலரும் தண்ணீருக்காக தவித்துக்கொண்டிருப்பது புரிந்தது. ஏ.சி குளிரில் உச்சா வேறு ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை முட்டியது. ஓரமான டாய்லெட் கொஞ்சம் பஸ்டாண்ட் பப்ளிக் டாய்லெட்டைவிட பரவாயில்லாமல் இருந்தது. இதற்கு அப்புறம் என்ன செய்வார்கள்?, எத்தனை நாள் அடைத்து வைப்பார்கள்? நரசிம்மா படம் போல ஆடை கழைந்து, ஐஸ் கட்டியில் படுக்கவைப்பார்களா?, கரண்ட் ஷாக் கொடுப்பார்களா? நகத்தை பிடுங்குவார்களா? என்ற பல கேள்விகளால் பைத்தியமே பிடிப்பதுபோல் இருந்தேன். ஆசுவாசமடைந்து சுற்றிப் பார்த்த போதுதான் தெரிந்தது, நான் ஒருத்தன்தான் பதறியபடியும், கண்ணீரோடும் இருப்பது, சுற்றி இருந்தவர்கள் எல்லாம் அப்பல்லோ ஆஸ்பிடல் முன் இருப்பவர்கள் போலவே கேஷுவலாக இருந்தார்கள். ஒரு பாக்கிஸ்தானி என்னிடம் வந்து, பிரட்சனையை விசாரித்தார். பின்பு ‘’இது ஒரு மேட்டரே இல்லை, நீ இப்போதே டிக்கெட் கொடுத்தால் உன்னை திரும்ப துபைக்கு அனுப்பிவிடுவார்கள், இல்லை என்றால் ஒரு நாள் வைத்திருந்து அவர்கள் செலவிலேயே இந்தியாவிற்கு அனுப்பிவிடுவார்கள் என்றார்’’. அதற்குப் பின்புதான் மூச்சே வந்தது. அவரிடம் பேசும் போது ‘’இந்த ரூம்’’, ‘’இந்த ரூம்’’ என்றே சொல்லிக்கொண்டிருந்தேன். அவர் சொல்லித்தான் தெரியும் அது ரூம் இல்லை ‘’ஜெயில்’’ என்று.

‘’நீ முன்பு சவுதியில் இல்லை என்பதால் கொஞ்சம் பய்ந்துவிட்டாய், மற்றப்படி இது அடிக்கடி நடக்கும் ஒன்று, சவுதிக்காரன் வந்து பேசினால் நாம் வெளியே போய்விடலாம், இல்லை என்றால் நம்மை திரும்ப அனுப்பிவிடுவார்கள்’’ என்றார். ஒவ்வொரு பிளைட் வந்து இறங்கும் போதும் இரண்டு, மூன்று பேர் வருவார்கள். அரபிகள் சிலர், இருந்தவர்களை கூட்டிக்கொண்டு போகவும் செய்தார்கள். இதுதான் சிறையா? என கண்கள் திறந்து பார்த்தேன். சிலருக்கு இப்படி அகப்படுவோம் என்று முன்பாகவே தெரிந்து சிகரெட் பாக்கெட் சகிதமாக வந்திருந்தார்கள். ஒரு பாயிண்டில் மூன்று, நான்கு பிளக்குகள் சொருகப்பட்டு மொபைல் சார்ஜ் செய்யப்படுகிறது. அதைக் கண்டு, சோக சீனிலும் புத்தி ‘’திரிசம்’’, ‘’போர்சம்’’மை நினைவுபடுத்தியது. எட்டும் உயரத்தில் இருந்த உடைந்த சுவிட்ச் பாக்ஸ் பயத்தை கொடுத்தது. சில ஒயர்கள் வெளியே நீட்டிக்கொண்டிருந்ததால் ‘’அந்த ஒயர கடிடா மாப்பிள’’ என ராம்குமார் கட்டளையிடுவது போன்ற மனபிராந்தி ஏற்பட்டது.
  
மறுநாள் அதிகாலை கம்பெனி டிக்கெட்டில் தனிவழியில் அழைத்துச்சென்று விமானத்தின் வாசலில் விட்டுச்சென்றார்கள். துபாய் இறங்கியபோது பார்த்தால், என்னுடய லக்கேஜ் மட்டும் வரவில்லை. என்னடா நம்ம நேரம் ரெக்கார்டு டான்ஸ் ஆடுது? என நொந்துபோனேன். ஒரே டிரஸ்ஸில் மூன்று நாட்கள் கழிந்தது, அதுவும் ஒரே ஜட்டி, பனியனில் மூன்று நாட்களில் இருப்பது நரகம். புரிந்தால் நலம் இல்லையென்றால் என்னைப் போன்று ஜட்டி, பனியன் அணிபவர்களிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்.

புது விசா அடிக்கும் பத்து நாட்களுக்கு துபை ஹெட்-ஆபிஸில் வேலைபார்க்கச் சொன்னார்கள். தீபாவளி நாட்களில் டி-நகர் மாதிரி பிஸியான ஆபிஸ் இப்போது புட்பால் விளையாடும் அளவிற்கு காலியாக இருந்தது. முக்கால்வாசிப்பேரை புது வேலை கிடைக்காததால் டெர்மினேட் செய்துவிட்டார்கள்.

துபை ஆபிஸில் வருகிறவன் போகிறவன் எல்லாம் வேலை கொடுத்து கடுப்பைக் கிளறினான். ‘’இது எல்லாம் எனக்கு பழக்கமில்லை’’ என்று சொல்லத் தோன்றினாலும் சொல்லவில்லை. சிறையில் இருந்த சிம்பதியை வைத்துக்கொண்டு பத்து நாட்களும் ஓப்பி அடித்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் நிலமையோ பருத்தி வீரன் கிளைமாக்ஸ் பிரியாமணி போல கண்டவனெல்லாம் வந்து என்னை கண்டம் செய்துவிட்டுப்போனான்.

-------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா. 

திங்கள், அக்டோபர் 24, 2016

தலாக் ³

உண்மையிலேயே தலாக் விஷயத்தில் மோடி அரசாங்கத்தை திட்டுவதை நிறுத்திவிட்டு முஸ்லீம் சமுதாயம் அவருக்கு ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்யலாம். மோடியின் மூலமாகத்தான் 98% முஸ்லீம்களுக்கே தாலாக்கின் உண்மையான நடைமுறையைப் பற்றி தெரியும். அதற்கு முன்பு இஸ்லாத்தில் தலாக் என்றால் ஏதோ ‘’ராஜாதி ராஜ, ராஜ குலோத்துங்க.......... வேடையன் ராஜா பராக், பராக், பராக்.....’’ என்பது போல தலாக், தலாக், தலாக் என்று சொல்லிவிட்ட அன்றே அடுத்த முதலிரவை கொண்டாடிவிடலாம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

இஸ்லாத்தின் படி ஒரு ஆண் விவாகரத்து செய்ய வேண்டும் என்றால் அந்த பெண்ணின் மூன்று மாதவிடாய் காலங்கள் வரை காத்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாதவிடாய் முடிந்தபின்பும் ஒவ்வொருமுறை தலாக் என்ற வார்த்தையை சொல்லவேண்டும். மூன்று கால இடைவெளியில் இப்படி மூன்று தலாக் கூறவேண்டும், இதுவே முத்தலாக். இதில் முக்கியம் என்னவென்றால் அந்த மூன்று மா.காலமும் அவள், அந்த கணவனின் பாதுகாப்பில்தான் இருக்கவேண்டும். அதிலும் ரொம்ப முக்கியம் என்னவென்றால் இடைப்பட்ட காலங்களில் ஏதேனும் கசமுசா நடந்துவிட்டால், டீ கேன்சல். (முன்னாடி இது எத்தனை முஸ்லீம்களுக்கு தெரியும்?)

முஸ்லீம்களுக்கான சட்டத்தைப் பற்றி முஸ்லீம்களின் அறிவே அடிமைப்பெண் எம்.ஜி.ஆர் மாதிரி இருக்கையில், மாற்று மதத்தவர்களின் சிந்தனையை குறைசொல்ல நமக்கு அருகதையில்லை. தலாக் பற்றி மட்டும் அல்ல, வரதட்சனை, சொத்துரிமை, கல்வி என எத்தனையோ விஷயங்களில் குரானில் இருக்கும் புஷ்பத்தை புய்ப்பம் என்றே கூறிக்கொண்டிருக்கிறோம். பிரட்சனை மற்றவர்களிடம் இருந்து ஆரம்பிக்கவில்லை நம்மிடமிருந்துதான் ஆரம்பமாகிறது. இன்ற தேவைக்கு ‘’இதுதான் இஸ்லாம்’’ என்று குரானை மற்றவர்களிடம் கொடுப்பதை விட, அதை ஒவ்வொரு முஸ்லீம்களும் புரிந்துபடிப்பது / தெரிந்துகொள்வதுதான்.

இஸ்லாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் ‘’சரி பாதி’’ உரிமையை வழங்குகிறது என்பதே தவறு. ‘’சரி நிகர்’’ உரிமையைத்தான் இஸ்லாம் போதிகின்றது. சரி பாதிக்கும் சரி நிகருக்கும் வித்தியாசம் உண்டு. இரண்டு ஆப்பிள், இரண்டு ஆரஞ்ச்சை இருவருக்கு பிரிக்கவேண்டும் என்றால், ஒரு ஆப்பிள், ஒரு ஆரஞ்ச் என பிரிப்பது சரி பாதி. அதே ஒருவனுக்கு ஆப்பிளை விட ஆரஞ்ச் பிடிக்கிறது, மற்றவனுக்கு ஆரஞ்ச்சை விட ஆப்பிள் பிடிக்கும் போது, ஒருவனுக்கு இரண்டு ஆரஞ்ச்சையும், மற்றவனுக்கு இரண்டு ஆப்பிளையும் கொடுப்பது சரி நிகர். சரி நிகர் என்பது விருப்பத்தின் படி அமைவது அதைத்தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது. சில உரிமைகள் ஆணுக்கு அதிகமாகவும், பெண்ணுக்கு குறைவாகவும் இருக்கும். சில உரிமைகள் ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக இருக்கும். கூட்டி கழித்து இரண்டால் வகுத்துப் பார்த்தால் கணக்கு சரியா இருக்கும். 

ஆண் விரும்பி விவாகரத்து (தலாக்) செய்வதற்கு அவன் குறைந்தது மூன்றுமாதங்கள் காத்திருக்கவேண்டும். அதே, பெண்கள் விரும்பி விவாகரத்து (குலா) செய்தால் அன்றே பிரிந்துவிடலாம். ஆனால் எத்தனை பெண்களுக்கு அப்படி நடந்திருக்கிறது?. இப்படி ஒரு சலுகை பெண்களுக்கு இருப்பதே அனேக பெண்களுக்குத் தெரியாது. அதை வேண்டுமென்றே மூடிமறைத்தது இந்த சமுதாயமே அன்றி மோடியோ அவருடைய அரசாங்கமோ இல்லை.

தலாக் விஷயம் இன்று இந்த அளவிற்கு வந்து நிற்பதற்கு யார் காரணம்? போனில், வாட்ஸ் அப்பில், பேஸ்புக்கில் தலாக் கூறிய செய்திகேட்டும் கும்பகர்ண தூக்கம்போட்டுவிட்டு இப்போது குய்யோ முய்யோ என கூப்பாடுபோடுகிறோம். ‘’முஸ்லீம் தனி நபர் சட்டவாரியம்’’ இதுவரை தின்ற மிச்சர்கள் அதிகம். தலாக் சொன்ன 60% முஸ்லீம் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது, ஜீவனாம்சம் முறையாக கொடுக்கப்படவில்லை என சில அமைப்புகள் ஆய்வு நடத்தி டிவி ஷோக்களில் விவாதித்துக்கொண்டிருந்த போதும் கூட மிச்சர்தானே தின்று கொண்டிருந்தது மு.த.ந.வா.

இன்னும் மசூதிகளில் ‘’பெண்களே அன்னிய ஆண்களுடன் பேசாதீர்கள்’’, ‘’ஆண் துணையின்றி வெளியே செல்லாதீர்கள்’’, ‘’ஹிஜாப் அணிந்துகொள்ளுங்கள்’’............ என்ற பெண்களுக்கான உபதேச பிரச்சாரங்கள்தான் நடக்கின்றன. எந்த பள்ளிவாசலிலாவது பெண்களே உங்களுக்கும் கல்வி கடமையாக்கப்பட்டிருக்கிறது, ஆண்களுக்கு சரி நிகரான உரிமைகள் உங்களும் உள்ளது என்று பிரசுகங்கள் செய்து கேட்டதில்லை. இஸ்லாத்தில் பெண்களுக்கு மட்டும்தான் ஹிஜாப்பா? மார்பும், தொடையும் தெரியும்படி எத்தனை முஸ்லீம் ஆண்கள் சிலிம் பிட்டில் சுத்திக்கொண்டிருக்கின்றார்கள்? ஏன் ஆண்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு கிடையாதா?. பெண்ணடிமைத்தன தோற்றத்தை நீங்கள் ஏற்படுத்திவிட்டு இஸ்லாம் இதயம் நல்லெண்ணெய் போன்று சுத்தமானது என சர்டிபிக்கேட் கொடுத்தால் மோடி பூச்சாண்டி காட்டத்தான் செய்வார்.

‘’முஹம்மது நபி கனவில் வந்து இனிமேல் இந்த பள்ளிவாசலில் தொழக்கூடாதுன்னு சொல்லிட்டாரு’’ சொல்லி எதிர்புறமே குடிசை போட்டு வீம்புக்கு தொழுகை நடத்தும் பல கோஷ்டி மற்றும் அதிலிருந்து பிரிந்து அடுத்த குடிசை போடும் சப்-கோஷ்டிகளை வைத்துக்கொண்டு நாம அடுத்த மதத்து கோஷ்டி சண்டையை பேஸ்புக்கில் லைக் பண்ண என்ன யோக்கியதை இருக்கிறது?. ரம்சான், பக்ரீத் வாழ்த்தை வாங்கிக்கொண்டு, ஹேப்பி தீபாவளி, ஹேப்பி கிரிஸ்மஸ் சொல்வது பாவம்ன்னு சொல்லுறது என்ன டிசைன்?.  

சுதந்திரத்திற்கு பிறகு முஸ்லீம்கள் தங்களைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொண்டு அந்த வட்டத்திற்குள்ளாகவே வாழ்க்கையை சுருக்கிக்கொண்டுவிட்டார்கள். பொதுவெளியில் பரவலாக கலக்காமல், தெருக்களில் நின்று குரானைக் கொடுத்துக்கொண்டும், பிரசுகங்கள் செய்துகொண்டும் ‘’இஸ்லாம் ஒரு இனியமார்க்கம்’’ என்றால் எல்லாம் சரியாகிவிடுமா?. இனிமேலும் என் பெயர் அப்துல்காதர், பெஸ்ட் பிரண்ட் பெயர் மசூது, ஸ்கூல் பெயர் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி, வாத்தியார் பெயர் ஷாஜகான், காலேஜ் பெயர் சதக்கத்துல்லாப்பா, மேனஜர் பெயர் பீர் முஹம்மது........................என வாழ்ந்தால் கடைசியா காதர்மைதீன் மையவாடி குழியில் அடுத்துவரும் தலைமுறையின் நம்பிக்கையையும் சேர்த்தே புதைக்கவேண்டியிருக்கும். இனியும் அந்த வட்டத்திலிருந்து வெளிவர அடம்பிடித்தால் பிரியாணி அண்டாக்கள் திருடு போவதை தடுக்க முடியாது.

ரெண்டு வருசத்துக்கு முன்னாடி என்னுடய நண்பன், ‘’மோடி ஆட்சிக்கு வந்தால் விஷத்தன்மை கொண்ட சீன பட்டாசுகளுக்குத் தடை’’ என்று போஸ்ட்போட்டு வோட்டு கேட்டான், இப்போது ‘’பிரதமர் விஷத்தன்மை கொண்ட சீன பட்டாசுகளை புறக்கணிக்க வேண்டுகோள்’’ என போஸ்ட் போடுகிறான். தடை செய்யமாட்டாராம், புறக்கணிக்க மட்டும் சொல்லுவாராம் என்ற உண்மையறிந்து. நாளை அவனே, அந்த சீனப் பட்டாசே மோடிதான்னு சொல்லுவான். மோடியைச் சுற்றி வருண்காந்திகளும், சுப்பிரமணிய சுவாமிகளும் இருக்கும் வரை நாம் அவ்வளவாக கெம்பத்தேவையில்லை. அதற்காக அடுத்த பிரதமர் ராகுல்காந்தியா? என்று கேட்டு என்னைக் கோவக்காரனாக்கவேண்டாம்.

பொது சிவில் சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவான சட்டம் அதற்கும் தற்போதய சட்டத்திற்கும் சிலவற்றைத் தவிர பெரிய வித்தியாசம் இல்லை என ''உருட்டிப் போட்டா போண்டா, தட்டிப் போட்ட வடை'' என்ற ரீதில் சொல்லிக்கொண்டாலும், இந்தியா போன்ற பன்முகம், பல கலாச்சாரம் கொண்ட நாட்டிற்கு சாத்தியமற்ற ஒன்று. பொ.சி.சட்டத்தில் ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டினால் ஆயுள்தண்டனை என்று வந்தால், யுவராஜ் சிங் ஒத்துக்கொள்வார், ஆனால் பாவம் ஹர்பஜன் சிங் என்ன செய்வார்?.

---------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

திங்கள், அக்டோபர் 17, 2016

நா.முத்துக்குமார்.

கவிஞனாய் இருந்து ‘’இதயப் பசி, இரைப் பசி போக்கியதால் நீ தமிழகத்தின் தலைமகன்’’ என எவருக்கும் சொம்படிக்கவில்லை. ‘’என்னாச்சும்மா உங்களுக்கு, பயம்மா இருக்குமா எங்களுக்கு’’ என காஞ்சனா படத்தை கவிதையாக்க் கூறி நடிக்கவில்லை. இது போதாதா நா. முத்துக்குமாரை நல்ல கவிஞன் என புகழ்வதற்கு. விஞ்ஞானம், பொருளாதாரம், புவியியல், வேதியல் என அனைத்தும் சினிமா பாடல்களாகி வரும் சூழலில், குடும்பம், உறவு, காதல், நட்பு, பட்டாம்பூச்சு இவைகளைக் கொண்டு மட்டும் தமிழின் ஆகச்சிறந்த பாடல்களை உருவாக்கியவர். 

அன்றைக்கு செய்திகளை வாசிக்க நேரமில்லை, மேலோட்டமாக நோட்டமிட்டதில் முத்துக்குமாரின் புகைப்படங்களாகவே இருந்தது. அதைப் பார்த்துவிட்டு மூன்றாவதாக கவிஞருக்கு தேசியவிருது அறிவிக்க்பட்டிருப்பதாகவே  நினைத்தேன். சில மணிநேரம் கழித்து செய்தியைப் படித்து நொறுங்கிப் போய் நின்ற பலரில் நானும் ஒருவன். முத்துக்குமாரை நேசித்த பலருக்கும் தோன்றிய அந்த ‘வாழ்க்கை’ கவிதையே எனக்கும் நினைவில் வந்தது. ‘’ஆம், முத்துக்குமார் வாழ்க்கை எனும் சீட்டாட்டத்தில் கடவுளிடம் தோன்றுப்போனார்’’ என்பதை உணரவே எனக்கு ஒரு மணி நேரம் பிடித்தது. இந்த கட்டுரையை பிழையின்றி எழுதவேண்டும் என்ற அக்கறை மட்டுமே தமிழை நேசித்த அந்த கவிஞனுக்கு நான் செய்யும் மரியாதை. 

‘’அனிலாடும் முன்றில்’’, ‘’வேடிக்கை பார்ப்பவன்’’ என நான் படித்த வெறும் இரண்டு புத்தங்களின் மூலமாக முத்துக்குமாரின் பக்கம் ஈர்க்கப்பட்டேன். ‘’எனக்காக மட்டுமே எழுதப்பட்ட புத்தகங்கள்’’ என்று இன்னும் நான் கொண்டாடுபவை அவை. உறவுகளின் உரசல், வாழ்க்கையில் உற்சாகமின்மை என பல துக்கமான நாட்களிலில் துணையாக நின்றவை அந்த புத்தகங்கள். தெரியாத ஊர், புரியாத இடம், தனிமையின் கொடுமை என வாழ்க்கை புதிர் போட்ட காலங்களை அந்த புத்தகங்களின் அத்தியாங்களைக் கொண்டு கடந்துவந்திருக்கின்றேன். இதுவரை நான் படித்த புத்தகங்களில் எதையும் திரும்ப படித்ததில்லை. ஆனால், இந்த இரண்டையும் திரும்ப திரும்ப படித்திருக்கின்றேன்.

சின்ன வயதில் தன் தாயை இழந்தவன் வலியை இதைவிட எளிதாக யாரால் உணர்த்திட முடியும்?.
'அழுது புரண்டு
நான் அலறிய ராத்திரிகளில்,
நிலா இருந்தது.
சோறும் இருந்தது.
ஊட்டத்தான் தாயில்லை!
தாயில்லா குழந்தையின் தந்தை எப்படி இருக்கவேண்டும்? என்பதை முத்துக்குமாரும் அவர் தந்தைக்குமான உறவு புரியவைக்கும். புத்தகத்தில் பத்து பக்கம் வாசித்தால் பல முறை ஒரு செய்தியாகவோ, சம்பவமாகவோ அவர் அப்பாவை மேற்கோள் காட்டியிருப்பார். லயித்த அப்பா பற்றிய வரிகள்
என் அப்பா
ஒரு மூட்டிய புத்தகம்
கிடைப்பதாக இருந்தால்
என்னையும் விற்றுவிடுவார். 

‘’அப்பா, இப்போது சொல்கிறேன், நான் படித்த புத்தகங்களிலேயே உங்கள் அனுபவம்தான் சிறந்த புத்தகம்’’

‘’இந்த உலகம் இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது; அதிசயமாக இருந்தது; அதிர்ச்சியாக இருந்தது; அச்சமாக இருந்தது; தன் தந்தையின் கைவிரல்களைப் பற்றியிருந்ததால், எல்லாமே அனுபவமாக இருந்தது.’’

பெண் பிள்ளைகள் இல்லாத வீட்டில் வளர்ந்த ஒருவன், பெண்களைப் பற்றி ‘’இனி அந்த வீடு அக்கா வாழ்ந்த வீடு அல்ல, அக்கா வந்து போகும் வீடு’’ என எப்படி எழுதமுடிகிறது? என்றெண்ணி பலமுறை ஆச்சர்யப்பட்டிருக்கின்றேன். வேடிக்கை பார்ப்பவன் என்ற புத்தகத்தில் தன் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளைப் பற்றி எழுதியிருப்பார். எல்லாமே அற்புதம் என்றாலும், பள்ளிக்கு கூட்டிச் செல்லும் மாட்டுக்காரன் தன் மீன் குழம்புச் சாப்பாட்டை எடுத்துச் சாப்பிட்டதை நிர்வாகத்திடம் கூறி வேலைவிட்டு அனுப்பியபின்பு, பெரியவனாகி அவரை தியேட்டரில் சந்திக்கும் போது மன்னிப்பு கேட்கும் அந்த நிகழ்வு நெகிழ்ச்சியாக இருக்கும். அவர் திருப்திக்காக ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிட்டு ‘’கோன் ஐஸை டேஸ்ட்டு பார்த்தான். அதில் மீன் குழம்பு வாசம் அடித்தது!’’ என்று கவித்துவமாய் முடித்திருப்பார்.
இறந்த அன்றே முத்துக்குமார் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்தேன். என்றாலும் ஏனோ துக்கத்தில் வார்த்தை கிடைக்காமல் தமிழுக்கு தூரமாகியிருந்தேன். மேலும், ஊரே பேனாவில் கண்ணீர் நிரப்பி அவரைப் பற்றி எழுதும்போது நான் எழுத யாரும் வார்த்தைகளை விட்டுத்தரவில்லை. சில வார்த்தைகள் கிடைத்தாலும் நா.முத்துக்குமார் பற்றி பலர் எழுதியதை படித்துத் துடித்துப்போகவே நேரம் சரியாக இருந்தது. ஒரே ஒரு முறை ‘’கவிதை நல்லா இருக்கு’’ என்று பாராட்டியதற்காகவே ஒரு புதுக் கவிஞன் பக்கம் பக்கமாக எழுதியிருந்தான். அண்ணனாக, ஆசானாக, நண்பனாக, சக கலைஞனாக, தம்பியாக.....தன்னுடன் வாழ்ந்த முத்துக்குமாரைப் பற்றி பெரிய பெரிய ஆளுமைகள் கணினியில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

முத்துக்குமார் இறந்தபின் மருத்துவம் படிக்காமேலேயே இங்கு நிறையப்பேர் கொடூற ஆயுதங்களால் உடற்கூறு செய்து மருத்துவ சான்றிதழ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். புகைத்துச் செத்தான், குடித்து அழிந்தான், காமாலையில் காலமானான், மன அழுத்தத்தில் மரணப்பட்டான், வேலைப் பழுவில் இறந்தான் என இன்னும் என்னன்னவோ... அவை பொய்களாகவோ அல்லது மெய்களாகவோ இருக்கலாம். ஆனால் அனைத்திலிருந்தும் நான் அறிந்தது ஒன்றுதான் ‘’முத்துக்குமார் திரும்பப்போவதில்லை’’. கவிஞர் இறந்த அன்று, தெரிந்தோ தெரியாமலோ எனது பையில் வேடிக்கை பார்ப்பவன் புத்தகம் இருந்தது. முதன்முறையாக ஏனோ அதைப் படிக்கப்பிடிக்காமல் கார்டூன் ஓவியமாய் இருக்கும் முத்துக்குமாரை திருப்பித் திருப்பி பார்த்துக்கொண்டிருந்தேன்.  

என்னோட மனைவிக்கு கல்யாண நாள், பிறந்த நாள் பரிசாக

நேரில் பார்த்து பேசும் காதல்
ஊரில் உண்டு ஏராளம்
நெஞ்சினுள்ளில் பேசும் காதல்
நின்று வாழும் எந்நாளும்

என்ற முத்துக்குமாரின் பாடல்வரிகளை களவாடி, நானே எழுதியதாகச் சொல்லி சேலை, மோதிரம் வாங்கிக்கொடுக்க ஆகும் பல ஆயிரம் ரூபாய்க்களைச் சேமித்ததுண்டு. ‘’நம்ம புருசன் கவிதை எழுதும் அளவிற்கு ஒர்த் இல்லையே’’ என்ற தோனல் வரும் போது அடுத்த கவிதையை திருட தூண்டுவாள்.
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி,
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இது போல் யாரும் இங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி !

வீங்கிய முகமாய், வெளுரிய உடையுடன், சிவந்த கண்களுடன், நரை எட்டிப்பார்க்கும் தாடியுடன் கவிஞர் இல்லாவிட்டாலும் அவர் எழுதிவிட்டுச் சென்ற ஆயிரம் பாடல்களைக் கொண்டு என் போன்ற திருட்டுக் கவிஞர்களின் மூலமாக ஒவ்வொருவர் வீட்டின் சந்தோசங்களிலும் வாழ்ந்துகொண்டே இருப்பார்.

--------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா. 

வியாழன், அக்டோபர் 13, 2016

குவைத் மஸாஜ் சென்டர்

வளைகுடாவில் நிதி நிலை நொண்டியடிப்பதால், புதிதாக துவங்க வேண்டிய ப்ராஜெக்ட் தள்ளிப்போனது. கம்பெனி கழுத்தை பிடித்து வெளியே தள்ளும்முன், ராஜினாமா செய்துவிடலாம் என்று எண்ணினேன். லீவ் லெட்டருக்கு எப்படி ‘அயம் சபரிங்க் ஃப்ரம் பீவர்’ரோ அதே மாதிரியான ஒரு ரிசைனிங்க் லெட்டர் டெம்லேட் இருக்கிறது. கம்பெனி பெயரை மட்டும் மாற்றினால் போதும், லெட்டர் ரெடி. இம்முறை டெம்லேட்டை கொஞ்சம் மாற்றி ‘இதைவிட நல்ல வேலை மற்றும் சம்பளம் கிடைப்பதன் காரணமாக’ என்று எழுத நினைத்தேன். நினைக்கும் போதே, லெட்டரில் கம்பெனி முதலாளி காரிதுப்பும் வாடை வந்தது.

லெட்டரை அனுப்புவதற்கு முன்பாகவே, துபாய் ஆபிஸில் இருந்து, நான்கு மாத ப்ராஜெக்டுக்காக என்னிடமும், என் மேனஜரிடமும் ஜித்தா செல்லவதற்காக கேட்டார்கள். முதலில் ‘’’சௌதியா?’’ என்று யோசித்தாலும், 4 மாசம் அதுவும் ஜித்தா என்பதால் அரை மனதுடன் ஒ.கே ஒ.கே சொன்னேன். ஜித்தா செல்வதற்கு முன்பாக இரண்டு வாரம் இந்தியா செல்ல லீவு கேட்டதற்கு கம்பெனியும் ஒ.கே ஒ.கே சொல்லியது. என் பையன் நினைப்பு அதிகம் இருப்பதால் அவனுடன் இந்தியாவில் கொஞ்ச நாள் இருக்கப்போவதாகவும், சவுதி அவ்வளவாக இஷ்டம் இல்லை எனவும் மேனஜரிடம் முன்பு ஒருமுறை கூறியிருந்தேன்.

நான் இந்தியா சென்றுவிட்டு ஜித்தா செல்வதற்கு முன்பாகவே என்னுடய மேனஜர் அங்கு சென்றுவிட்டார். என்றாலும் இரண்டு வாரம் கழித்தே அவரை நேரில் காண முடிந்தது. என்னைப் பார்த்தபோது ‘’பையன் பாசத்துல நீ வரமாட்டாய் என்று நினைத்தேன்’’ என்று கூறினார். மேலும் குடுபத்தினர் நலம் விசாரித்தார். இவ்வளவு அன்பாய் இருப்பவரிடம் என் மனைவி கருவுற்றிருக்கும் செய்தியைச் சொன்னேன். இந்தியா செல்வதற்கு முன்பு ‘’’என் மகனை அதிகமாக தேடுகிறது, அவனுடம் கொஞ்ச காலம் இருக்கவேண்டும்’’ என்று நான் அவரிடம் சொன்னது நினைவிற்கு வந்திருக்கக்கூடும். ‘’மகிழ்ச்சி’’ என்று சிரித்துக்கொண்டே சொன்னாலும், பற்களை கடிக்கும் ‘நற’ ‘நற’ ஷப்தம் என் காதில் நன்றாகவே கேட்டது.

இரண்டே வாரத்தில் இரண்டாவது ரெடி பண்ணிய விஷயத்தைக் கேட்டதில் இருந்து, ஆபிஸில் எந்த வேலையை முடித்துக்கொடுத்தாலும் ‘’நீ ரொம்ப வேகமானவன்’’ என்றே புகழ்கிறார். எனக்குத்தான் எதைச் சொல்கிறார் என்றே குழப்பமாக இருக்கிறது. ஒருநாள் ‘’கற்பமான மனைவியை பக்கத்தில் இருந்து கவனிக்கும் ஆசை இல்லையா?’’ என்று மேனஜர் கேட்டார். ‘’முதல் நாலு மாசம் ரொம்ப கவனமா இருக்கனும்’’ (இரண்டு முறை வாசிக்கவும்) என்று டாக்டர் சொன்னதைச் சொல்லி, ‘’அதனாலத்தான் நான் ஜித்தா வந்தேன்’’ என்றும் சொன்னேன். ‘’நீ நாலு மாசம் கைல புடிச்சிக்கிட்டு இருக்க இந்த கம்பெனிதானா கெடச்சது?’’ (ஒரு முறை மட்டும் வாசிக்கவும்) மைண்ட் வாய்ஸ்னு நினைத்து அரபியில் நிஜமாகவே பேசினார். நல்லவேளை அரபியில் பேசியதால் எனக்கு புரியவில்லை ?!?!?!. 

ஜித்தா வந்த இரண்டு மாதம் கழித்து எங்களுடைய குவைத் திட்டத்தில் ஒரு பொறியாளர் 15 நாள் அவசர விடுப்பில் செல்லவேண்டி இருந்ததால், அந்த 15 நாட்களுக்கு அங்கு செல்ல கம்பெனி என்னுடய விருப்பத்தைக் கேட்டது. ‘’5 வருச ப்ராஜெக்டின் டிராயிங்கை பார்க்கவே ஒரு மாசம் ஆகும், 15 நாளில் நான் எப்படி / என்ன / எவ்வாறு ???’’ என பல கேள்விகளைக் கேட்டேன். ‘’உன்னைப் பற்றி சொன்னோம் ‘நீ வந்தா மட்டும் போதும்’’னு குவைத் ஆபிஸில் சொல்லியதாகச் சொன்னார்கள். நம்மளப் பத்தி சொல்லியும், ‘’குவைத் உங்களை அன்புடன் அழைக்கிறது’’ என்று சொன்னதை என்னால் நம்பமுடியவில்லை.  
  
‘’என்னயப் பத்தி என்ன சொன்னீங்க?’’ என்று கேட்டேன். ‘’உன்னுடய அறிவு, ஆற்றல், திறமை.....’’ என்று அவர் சொல்லும் வார்த்தைக்கும், நமட்டுச் சிரிப்பிற்கும் ஸிங்க்கே ஆகவில்லை. புரிந்துவிட்டது. ஆரம்பித்த உடனே நிறுத்திக்கொள்ளுமாறு கூறினேன். ‘’குவைத்துக்கு போடான்னா போகப்போறேன், அதற்கு எதுக்கு இப்படி?’’ என மனதில் நினைத்துக்கொண்டு. ஜித்தாவிற்கு சொன்னது போலவே குவைத்திற்கும் அதே ஒ.கே ஒ.கே. விசா, டிக்கெட் ஏற்பாட்டை எல்லாம் ஜித்தா H.R செய்துகொடுத்தார். H.R ஒரு பாக்கிஸ்தானி. அவரிடம் குவைத்தைப் பற்றி தெரிந்துகொள்ள பேசியபோதுதான், பாக்கிஸ்தானிகளுக்கு குவைத் செல்ல அனுமதியில்லை என்று தெரிந்துகொண்டேன். அப்படியென்றால் கண்டிப்பாக குவைத் நல்ல நாடாகத்தான் இருக்க முடியும் என முடிவுக்கு வந்தேன். என்னைப் போலவே ஆபிஸிலிருந்து முன்பு சென்ற சிலர் குவைத்தைப் பற்றி சொன்னதைச் சொன்னார். நான் ஆர்வக்கோளாறில் ‘’அப்போ அங்க எல்லாமே ச்சீப்பா கிடைக்குமா?’’ என்று கேட்டேன். அவர் என்ன நினைத்தோரோ தெரியவில்லை. ‘’சைத்தான்கி பச்சா’’ என்று கூறி வெடுக்கென எழுந்து சென்றுவிட்டார்.

மறுநாள், விசாவுடன் டிக்கெட்டையும் கொடுத்துவிட்டு ‘’உன்னுடய டிரிப் ஒரு வாரமாக மாற்றப்பட்டுவிட்டது’’ என்று கூறிவிட்டு ‘’வேறு எதுவும் என்னிடம் கேட்கனுமா?’’ என்றார். ‘’அடப்பாவி, ஒத்தக் கேள்விக்கே ஒரு வாரத்த முழிங்கிட்ட, இன்னொரு கேள்வி கேக்கவச்சி கொடுத்த டிக்கெட்ட திரும்ப புடுங்கிட்டு போகலாம்னு பாக்குறியா?’’ என மனசுக்குள் முனங்கிக்கொண்டே ‘’டாங்கியூ’’ என தலையாட்டினேன். குவைத்தில் பார்க்கவேண்டிய இடங்களை குறித்துவைத்துக்கொண்டேன். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், குவைத் நாட்டுக்காரன் இந்தியாவைப் பற்றி கேட்டுவிட்டால்? அதனால் இந்தியாவின் பிரதமர், அவர் தற்போது எந்த நாட்டில் இருக்கிறார் என்பதையும் ‘’இந்தியா இஸ் மை கண்டிரி, நலல பிகர்களைத் தவிர ஆல் ஆர் மை பிரதர் அண்ட் சிஸ்டர்ஸ்’’ என்ற ரைம்ஸ்ஸையும் மனனம் செய்துகொண்டேன்.

குவைத் ஏர்போர்டில் இறங்கியதுமே, யாரோ ஒருவர் என்னை பின்புறமாக இடித்துவிட்டார். அந்த யாரோ?, ஒரு பெண் என்பதை திரும்பிப் பார்க்கமலேயே உணர்ந்துகொண்டதில் இருந்து, அவள் எப்படி என்னை இடித்திருப்பாள் எனபதை யூகித்துக்கெள்ளுங்கள். வயிரு எரிந்தால் உங்கள் யூகம் ‘’சரி’’ எனக் கொள்க, இல்லை என்றால், வயிரு எரியும்வரை முயற்சி செய்யவும். ஜித்தாவில் பெண்கள் தெரிந்து இடித்தாலும் தெரியாமல் இடித்தாலும் நாம் தான் 10 முறை ‘’மாலிஸ்’’ சொல்லவேண்டும். அதே பழக்கத்தில் ‘’மாலிஸ்’’ சொல்வதற்கு முன்பாகவே, அந்த பெண் இரண்டு முறை தோளைப் பிடித்து ‘’ஸாரி’’ கேட்டுவிட்டார். ‘’நோ பிராப்ளம், வேண்டும் என்றால் கூட இரண்டு முறை இடித்துக்கெள்ளுங்கள்’’ எனக் கூறி பேக் ஷாட்டில் திரும்பி நிற்பதற்குள் சென்றுவிட்டாள். அவளைக் கண்டபின்புதான் ‘’இந்த உலகம் எவ்வளவு பெருசானது........’’. ஸாரி, ‘’அழகானது’’ என்பதை புரிந்துகொண்டேன்.

குவைத் ஏர்போர்டில் ஒரு பன்னாட்டு கடையில் 2 K.Dக்கு காபி குடித்தேன், வெளியே வந்தபின்புதான், அந்த காபியின் சௌதி மதிப்பு 25 ரியால் என தெரிந்துகொண்டேன். அந்த நஷ்டத்தை ஈடு செய்யும் விதமாக 12 நாட்கள் காலை, மாலை டீ காசை மிச்சமாக்கினேன். ஒரு குவைத்தின் தினாரின் மதிப்பு, கிட்டத்தட்ட 12 சவுதி ரியால்களாம். K.D யில் அதாவது குவைத் தினாரில் செலவு செய்வதில் கடைசிவரை பெரிய அக்கப்போராகவே இருந்தது. சவுதியிலோ அல்லது துபாயிலோ ஒரு டீ குடித்தால் ஒரு திர்ஹம் ஆகும். ஆனால் குவைத்தில் அவர்கள் 100 கொடு 125 பில்ஸ் கொடு என குழப்பினார்கள் (நம் நாட்டில் பைசா போல அங்கு பில்ஸ்). எல்லா இடத்திற்கும் பஸ் வசதி இருந்தது. மாலை ஆபிஸ் முடிந்தபின்பு, ஏதாவது ஒரு பஸ்ஸில் ஏறி கடைசி ஸ்டாப் வரை சென்று சுற்றிப்பார்த்தேன். நான் இருந்த பகுதியில் (மஹ்பூலா) சலூன் கடைகளும், மஸாஜ் செண்டர்களும் அதிகம்.

முன்பு குவைத்தில் இருந்த ஒரு நண்பனை சாட்டிங்கில் பிடித்து, பேசிக்கொண்டிருந்தேன். ஆவனோ நான் எந்த மசாஜ் செண்டர் நன்றாக இருக்கும்? என கேட்பதற்குத்தான் சாட்டிங்க் செய்வதாக நினைத்து, இரண்டு மசாஜ் செண்டர்களின் பெயரை சொன்னான். அதற்கு ஒரு நாள் முன்பும் இதேபோன்ற ஒரு சம்பவம். எனது அப்பா, குவைத்தில் இருக்கும் எங்க ஊர்கார பையனின் போன் நம்பரை கொடுத்திருந்தார். அவரிடம் பேசும் போதும் கூட குவைத்தில் அதிகமாக செக்கிங்க் இருக்கும் அதனால் கொஞ்சம் உஷாராக இருக்கும்படி கூறினார். பொத்தம் பொதுவாக சொல்கிறார் என்று நினைத்து ‘’பிரட்சனை இல்ல பாய், எப்போதும் பாஸ்போர்டும், விசாவும் கையிலதான் இருக்கும்’’ என்று சொன்னேன். அதற்கு அவரோ ‘’இல்ல பாய், உங்க பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக ரொம்ப ரெட் லைட் ஏரியா இருக்கு அதான் சொன்னேன்’’ என்றார். அப்போதுதான் அந்த உஷாருக்கான அர்த்தமே விளங்கியது. இந்த உலகம் நம்மைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறது?. இப்படி தோளில் தொங்கப் போட்டுக்கொண்டு திருபவனாக அவர்களை நினைக்கவைப்பது எது?. இதையெல்லாம் யோசித்து யோசித்து தூக்கமே இல்லை.

அந்த கொடூற சம்பவத்திற்குப் பிறகு, பத்துமுறை முகத்தை கழுவி, மூஞ்சை கண்ணாடியில் பார்த்தேன். நூறு செல்பி எடுத்து நுட்பாமாய் ஆராய்ந்தேன். எந்த கோணத்தில் அவர்களுக்கு, என்னை அவ்வாறு நினைக்க வைக்கிறது?. விடையில்லை. நீங்கள் நினைக்கலாம், குவைத்தில் இருந்தது சைனிஸ் மசாஜ் செண்டர்கள், இப்போது சீனா பொருட்களை இந்தியர்கள் புறக்கணிப்பதால் நீ அங்கு செல்லவில்லை என்று. என்னைப் பற்றி இந்த உலகத்திற்கு நான் சொல்வது இதுதான் ‘’ஓ அறிவான சமூகமே, பாரதப் பிரதமரைப் போலத்தான் நானும், பேசுவேன் அன்றி செயலில் இறங்கமாட்டேன். இது நான் கடன் வாங்கிப் படித்த பல சரோஜாதேவி புத்தகங்களின் மீது ஆணை’’. 

ஜித்தாவிற்கு திரும்பிச் செல்ல குவைத் ஏர்போர்ட்டிற்கு வந்தேன். ‘’எங்கள் சேவையை பயன்படுத்துங்கள் வெறும் பத்து குவைத் தினார்’’ என்ற போர்டுடன் ஒரு பெண் நின்றிருந்தால். ‘’வெரும் பத்து தினாரா?’’ என்று அதிர்ந்து மறுக்கா வாசித்துப் பார்த்தபோதுதான் சேவைக்கு முன்பாக இருந்த ‘’விசா’’ என்ற வார்த்தை கண்ணில் தெரிந்தது. நல்லவேளை, மறுக்கா வாசித்தேன். இல்லையென்றால் ‘’உங்களுக்கு பத்து தினார் அதிகம் கொஞ்சம் குறைச்சிக்கலாமா?’’ எனக் கேட்டு மறுநாள்  ‘தினத்தந்தி’ தலைப்புச் செய்தியாகியிருந்திருப்பேன். ‘’ஆண்டவா இதேமாதிரி உன் புள்ளய பக்கத்துல இருந்து கடைசிவரை காப்பாத்துப்பா.......’’ன்னு பிராத்தனை செய்தே விமானத்தில் ஏறினேன்.

------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.