செவ்வாய், ஜனவரி 31, 2012

அன்புடன் அழைக்கின்றோம்....,

நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
என்னுடைய சொந்தக்கார பெண்ணாக இருந்தாலும், இந்த பொண்ணு தான் நமக்கு மனைவியா வரப்போகிறாள் என்று எனக்கு தோன்றியதே இல்லை. சொந்தத்தில் பெண் எடுக்க கூடாது என்று எனக்கு முன்னாடி ஒரு எண்ணம் இருந்ததாலோ என்னவோ, எனக்கு இந்த பெண் மீது அப்படி ஒரு எண்ணம் வந்ததே இல்லை. இதுல பெரிய கொடுமை என்னவென்றால், இந்த பெண்ணுக்கு எனக்கு முன்னாடி வந்த மாப்பிள்ளைகள் பற்றி, இவளின் அண்ணன் என்னிடம் விசாரிச்சது தான். இதுல நான் வேற இரண்டு பேரை ரெக்கமண்ட் செய்தது, கொடுமயின் உச்சம்.

இன்னும் அத நினைச்சா காமெடியாகத்தான் இருக்குது. சிகரெட் பிடிப்பான் என்ற ஒரே காரணத்திற்காக ஒருவனை வேண்டாம் என்று சொல்லிவிட்டவர்கள் என்னிடம் எப்படி ஏமாந்தார்கள் என்று எனக்கு இதுவரை தெரியவில்லை. யாருக்கு, யாருன்னு ஆண்டவன் எழுதிவைத்திருப்பான் என்பது உண்மைதான். சொந்தத்தில் பெண் எடுக்க கூடாதுன்னு இருந்த நீ, என்ன இதுக்க்க்க்க்கு இப்போ ஒத்துக்கிட்டன்னு நீங்க கேட்கலாம். எனக்கு வேற வழி தெரியல.

ஆமா, அதிக வித்தியாசத்துல பொண்ணு பார்க்க கூடாது, கூடுமான வரை வெளியூராக இருக்கவேண்டும், பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்ற மூன்று மட்டுமே என்னுடைய கட்டிசனாக இருந்தது. இதுல இரண்டாவது கண்டிசனுக்கு, என் அம்மாவால் ஆப்பு அடிக்கப்பட்டது. பொதுவாக எங்க ஊருல, ஒருத்தனுக்கு உள்ளூருல பொண்ணு கிடைக்கலன்னா, ஏதோ தெய்வ குத்தமாதிரி பேச ஆரம்பிச்சுடுவானுங்க, இது அக்மார்க், எங்க ஊருக்காரியான எங்கமாவுக்கும் பொருந்தும். வெளியூரில் இருந்து ஒரு பொண்ணு வந்தா, நமக்கு சொல்லுறதுக்கு முன்னாடியே, பொண்ணு வீட்டுக்கு முடியாதுன்னு சொல்லிவிடுவார்கள்.

ஆனா மற்ற இரண்டு ஆப்சன்களை நான் விட்டுக் கொடுப்பதாக இல்லை. அதிகமா போச்சுன்னா பெண்ணுக்கும், எனக்கும் 4 வருச இடைவெளிதான் இருக்கவேண்டும் என்று கண்டிப்பாக இருந்தேன். அது எங்க ஊரு மற்ற மணவான்களால் மண்ணல்லிப் போடப்பட்டது. எவனும் பொண்ணு காலேஜ் முடிந்தபின்னாடி கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு நினைக்கிறது இல்லை. கல்யாணம் முடிந்த பின்பு, காலேஜிக்கு அனுப்பிவைத்து அழகு பார்கிறார்கள். சில பேரு கொஞ்சம் இதிலும் பாஸ்ட், பொண்ணுங்க +2 படித்துக்கொண்டிருக்கும் போதே கல்யாண சாப்படு போட்டுவிடுவார்கள். நான் தேடி, தேடி அலைந்து அலுத்துப் போயி, 4 வருட இடைவெளி, 5 ஆகி, 6 ஆகி ..... ஒரு கட்டத்தில் பொண்ணு கிடச்சா போதுங்குற நிலமைக்கு வந்திட்டேன்.

பொண்ணு தேடி அலையும் போது நண்பர்கள் செய்யும் உதவிய மட்டும் மறந்திடவே முடியாது, முடியாது இல்ல கூடாது. அதுவும் ஊருல 5 வருசமா டாப்படிக்கும் நண்பர்களிடம், பாய்ஸ் படத்தில் வரும் செந்திலிடம் இருக்கும் டேட்டா பேஸ் மாதிரி பொண்ணுங்க இருக்கிற வீடு பத்தி, அவங்க குலம், கோத்திரம் பற்றிய ஒரு டேட்டா பேஸ் இருக்கும். அவங்களோட அந்த இன்பர்மேசன் இஸ் வெல்த். அவங்களிடம் நம்முடைய எதிர்பார்பை சொல்லிவிடவேண்டும், சொன்ன சில மணி நேரத்திலேயே ஒரு 10 வீட்டு பொண்ணுங்களைப் பற்றி சொல்லிவிடுவார்கள். அதுல நாம நல்ல குடும்பமா தேர்வு செய்து, பொண்ண பார்க்கலாமுன்னு முடிவு பண்ணி அவங்ககிட்ட சொன்னமுன்னா, அவங்க கூட்டிக்கிட்டு போற இடம் ஏதாவது, ஸ்கூல் முன்னாடி இருக்கும். மண்ட காய்ஞ்சிடும் எனக்கு,

“என்னடா........ இது எனக்கு வயசு 29, அந்த பொண்ணு +2 ன்னா, அவ வயசு 18, 11 வருச வித்தியாசமா??...... முடியாவே, முடியாது

“டேய் நீ சொன்ன கண்டிசனுக்கு, ஒத்துவருகின்ற பொண்ணுல அதிக வயசு இந்த பொண்ணுக்குத்தான், இவ வேணாமுன்னா அடுத்து நாம எலிமண்ரி ஸ்கூலுக்குத்தான் போகனும், பேசாம உன் கொள்கையை கொண்டு குப்பையில போட்டுவிட்டு உங்க அக்கா சொல்லுற உன் மாமி பொண்ணு பெனாசிரையே கட்டிக்க....

மூடிக் கிடந்த என் அறிவுக் கண்ண என் நண்பன் அன்னைக்கு திறந்து வச்சான். அதுக்கபுறம் இந்த பெண்ண பார்க்கும் போதெல்லாம், பட்டாம் பூச்சி பறக்கும், விளக்கு எறியும், வேதியல் மாற்றங்கள் நிகழும், காதுல மணி சத்தம் கேட்கும், ரேடியோவில் லவ் சாங்க் ஒலிக்கும்..................

முதல் பக்கம்
கவர் பேஜ்

கடைசிப் பக்கம்
திருமணத்திற்கு பொண்ணு கிடைக்கின்றது எவ்வளவு கஷ்டமோ அந்த அளவிற்கு கஷ்டம் கல்யாண பத்திரிக்கை அடிப்பது. கலர் செலக்ட் பண்ணுறதுல இருந்து, கார்டுக்கு டெக்ஸ்ட் (எழுத்து) செலக்ட் பண்ணுறவரைக்கும் நாக்குத்தள்ளிரும். நண்பர்கள் பல பேரின் திருமண அழைப்பிதலை, ஸ்கேன் செய்து அனுப்ப சொல்லி எதுவும் பிடிக்காத்தால், இன்னொரு நண்பனிடம், அவனுக்கு பிடித்த பத்து கார்டுகளை அனுப்ப சொல்லி, அதிலிருந்து ஒன்றை செலக்ட் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

லெட்டருக்கான விசயங்களை இங்கிருந்து அனுப்பி, பெங்களூரில் பிரிண்ட் செய்வதற்கு முன்பான டிராப்ட் காபியில் ஒரு 10 முறை கரெக்சன் செய்து முடிப்பதற்கு இரண்டு வாரங்களாகிவிட்டது.

நான் வேறு, அந்த பொண்ணு வேறு கிடையாது, ஆகையால் என் பெயர் எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ அதே அளவில் அவள் பெயரும் இருக்கவேண்டும். எழுத்து ஸ்டைலில் கூட எங்களுக்கிடையே வித்தியாசம் வந்துவிடக்கூடாது, ஆகையால் என்ன மாதிரியான பாண்ட் ஸ்டைல் எனக்கு யூஸ் பண்ணுகின்றாயோ, அதே மாதிரியான பாண்ட் ஸ்டைலில் பெண்ணுடைய பெயரையும் போடு........................., இப்படியா என்னமோ உருகி, உருகி காதல் செய்தவன் கல்யாணம் செய்வது போல, அத்தனை கரெக்சன்ஸ்.

எனக்கு எப்படி பொண்ணு கிடைத்தது என்பது மட்டும் பிரிண்டிங்க் பிரஸ்காரனுக்கு தெரிந்திருந்தால், கடுப்புல,  “உனக்கெல்லாம் எதுக்குடா கார்டு, பேசாம எல்லோருக்கும் கைல எழுதி கொடுன்னு கண்ணா பிண்ணான்னு திட்டியிருப்பான்".
நடுப்பக்கம்
பிரிண்ட் ஆகி துபைக்கு வர, மங்களகரமான வெள்ளிக் கிழமையில் இருந்து சொந்தக்காரர், தெரிந்தவர், அறிந்தவர், நண்பர், நண்பரின் நண்பர், நலம் விரும்பி என பார்த்து பார்த்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கின்றேன். எவ்வளவு தான் நெருக்கமாக பழகியிருந்தாலும், திருமணத்திற்கு அழைக்கும் போது ஒரு வெக்கம் வருது பாருங்க...........காலேஜ் ஹாஸ்டல்ல ஜட்டியோட ஓடுன போதுகூட நமக்கு வராத வெக்கம், நாம வெக்கப் படுவதை பார்த்து நம்மள நண்பர்கள் கட்டய கொடுக்கும் போது வழியிர வழியிருக்கே.........அதெல்லாம் நினைச்சுப் பார்த்தா, கூச்சத்துல மிச்சமிருக்கும் சிலருக்கு அழைப்பிதல் கொடுக்குறதுக்கே சங்கூச்சமா இருக்கு.

பிப்பிரவரி 19ல் நடைபெறவிருக்கும் கலயாணத்திற்காக ஆண்டவனி நாட்டப்படி, இங்கிருந்து (யு.ஏ.ஈ) பிப்பிரவரி 09ம் தேதி கிளம்பவிருக்கின்றேன். அனைவரையும் முடிந்தவரை நேரில் அழைக்க கடமைப்பட்டவனாக இருக்கின்றேன், ஆனால் திருமண வேலைகளில் காரணமாக சிலரை நேரில் அழைக்க இயலாவிட்டால், அவர்கள் இந்த அழைப்பினை என்னுடைய நேரடி அழைப்பாக கருதி ஏற்றுக்கொண்டு என் திருமணத்திற்கு வந்து எங்களை வாழ்த்துமாரு எனது சார்பாகவும், என்னவளின் சார்பாகவும் வேண்டிக்கொள்கின்றேன்.
.

.

.

அவள் என் முதல் மகளாக, நான் அவளின் முதல் மகனாக இருந்து என் வாழ்க்கையை ஆரம்பிக்க எல்லாம் வல்ல ஆண்டவனிடம் பிராத்தனை செய்தவனாக,

-----------------------------------------------------------------------------------யாஸிர்

ஞாயிறு, ஜனவரி 29, 2012

நீ பாதி, நான் மீதி


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின், சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
இந்த பொண்ணுங்ககிட்ட உரண்ட இழுக்குறது என்பதற்கு ஈடு இணையான ஒரு மகிழ்ச்சி, ஆம்பிளைங்களுக்கு இந்த உலகத்துலே இல்ல. எதையாவது ஒன்ன சொல்லி, கோபப்படவைக்கலன்னா, 2 மணி நேரமா பேசிகிட்டு இருந்த உரையாடலுக்கு ஒரு திருப்தி கிடைக்காது.

“என்னம்மா இது, எவ்வளவு வேலையிருக்கு, நான் கல்யாணம்னா சும்மா, பந்தல் போடனும், சாப்பாடு போடனும்னுதான் நினைத்தேன், இது என்னடான்னா கடல் அளவு இருக்குஅப்படின்னு நான் சொல்ல

பின்ன, கல்யாணம்னா சும்மாவா?, வீட்ட கட்டிப்பாரு, கல்யாணம் பண்ணிப்பாருன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க.

ஆமா, ஆமா.. இது கூட தெரியாம, நான் கூட கொஞ்சம் ஏனோ, தானோன்னு இருந்துட்டேன், அடுத்ததடவ கல்யாணம் பண்ணும் போது இந்த மாதிரியெல்லாம் தப்பு நடக்காம பாத்துக்கனும்.

உங்கிட்ட போயி சொன்னம் பாரு, என்னச்சொல்லனும். நீங்க ஒரு @@@@$$$$$^^^&&&******####,!!!!@@@@@@@&$%^@#$%&#&$!@#$&&&&&&&$%%%%%#$#$@#$@#$%$@#$%
இந்த மாதிரி சில செல்ல திட்டுகள் எல்லாத்தயும் வாங்கினாலும், அது தான் சுவாரஸ்யம். ஆனா இதுக்கெல்லாம் சேர்த்து மாத்து நமக்கு திருப்பி கிடைக்கும் பாருங்க.................ஸ்ஸ்ஸ்ஸ்யப்பா.........

மாமியார், மாமனார்கிட்ட எப்படி நடக்கனும் எல்லாத்தயும் உன் பிரண்ட்ங்க கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ

ம்ம்ம், என் பிரண்ட் வாஜிதாகிட்ட கேட்டு தெரிஞ்சிக்குறேன்.

யாரு அந்த வாஜிதா, பேரே சரியில்லையே.

சந்த தெரு பொண்ணு, நல்ல பொண்ணு, எங்கூட படிச்சா, ஆனா +1ல் கல்யாணம் ஆகிடுச்சு,

+1 ல்யா?????

ஆமா,

பாரு, எல்லோரும் 10, +1 படிக்கிற பொண்ணுங்கள கல்யாணம் பண்ணுறாங்க, ம்ம்ம்ம்ம் (பெரும்மூச்சியுடன்) எனக்குத்தான் கிழவிய கல்யாணம் பண்ணிவக்கிறாங்க, என்ன செய்றது, மாமி பொண்ணுங்குறதுனால........முடிப்பதற்கு முன்பு

அய்யய்யோ, அப்படியெல்லாம் பரிதாப படவேண்டாம், இப்பக் கூட ஒன்னு கெட்டுப்போகல, என்ன சொல்லுறீங்க, உங்களுக்கு பேச கூச்சமா இருந்தா சொல்லுங்க நான் வேணும்னா இரண்டு பக்கமும் பேசி............

(விட்டா பேசிருவாபோலன்னு பயந்து) அதெல்லாம் எதுக்கு விடு, எனக்கு இவ்வளவு தான்ன்னு மனச தேத்திக்கிறேன்.

அப்படியெல்லாம் ஒன்னும் தேத்திக்கவேணாம், என்ன நெனச்சீங்க என்னப்பத்தி, என்ன .............. வீட்டுல கேட்டாங்க, ...................வீட்டுல கேட்டாங்க....................... ன்னு கிட்டதட்ட எங்க ஏரியாவுல உள்ள எல்லா வீட்டயும் சொல்லிட்டா.

!!!!!!!!!!!!!!!!!!!! (இப்பவே கண்ணகெட்டுதே)

அது மட்டுமா, உங்கல அந்த வீட்டுல வேணாமுன்னு சொல்லிட்டாங்கலாமே, ..................... வீட்டுல இருந்து முதல்ல பொண்ணு கொடுக்குறன்னு சொல்லிட்டு, அப்புறமா, முடியாதுண்னு சொல்லிட்டங்கலாமே???????

ஆஅ.......து, கேட்டோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம், ஆ.........னா.............

என்ன இழுவ ஜாஸ்தியா இருக்கு?

சரி விடுமா, மத்தவங்கள பத்தி நாம ஏன் பேசனும், ஆண்டவன் யார் யாருக்கு எங்க எங்க நாடியிருக்கானோ அங்க அங்க தான் நடக்கும்னு சொல்லிவிட்டு உடனே போன கட் பண்ணிவிட்டு ஒரு லிட்டர் தண்ணி குடிக்கனும் (கேட்ட நமக்கே ஒரு லிட்டர், பேசுன பேச்சுக்கு அவ எத்தன லிட்டர் குடிச்சிருப்பா)

நியூட்டன் மூன்றாம் விதி பத்தி, ஒவ்வொரு வினைக்கும், எதிவினை உண்டுன்னுதானே சொன்னாரு, ஆனா நமக்கு எதிவினை இரண்டு மடங்காவுல கிடைக்குதுன்னு எனக்கு நானே நொந்துகிட்டேன். ஒன்னு கொடுத்தா, டபுளாக கிடைக்கும் அவளை புரிந்துகொண்டு, இப்போது அன்பு மட்டும் காட்டுகின்றேன் அவளிடத்தில், அது எனக்கு இரட்டிப்பாக திருப்பி கிடைக்கின்றது.
ஒரு பர்கர் கடைக்கு வயதான ஏழை தம்பதிகள் வந்தார்கள், இரண்டு பேருக்கும் சேர்த்து அந்த தாத்தா முதலில் ஒரு கோக்கும் வாங்கினார், இத பக்கத்துல இருந்த ஒரு இளைஞன் பார்த்துக் கொண்டிருந்தான். முதலில் கோக் வந்ததும், தாத்தா இரண்டாக பிரித்து பாட்டிக்கு கொடுத்து அவரும் குடித்தார், பின்பு ஒரே ஒரு பர்கர் வந்ததும் இரண்டாக பிரித்து ஒரு பாதியை பாட்டிக்கு கொடுத்துவிட்டு, சாப்பிட தொடங்கினார். இத பார்த்த்தும் அந்த இளைஞன், தாத்தாவிடம் சென்று,

இந்த தாத்தா காசு, ஆளுக்கு ஒன்றாக வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறி காசை நீட்ட,
அந்த தாத்தா சிறு புன்னகக்குப்பின் சொன்னார் “காசெல்லாம் இல்லாம இல்ல தம்பி, நாங்க இதுவரைக்கும் தனித்தனியா எதையும் வாங்கியதில்லை, கிடைப்பதை இரண்டா பிரித்துக்கொள்வோம் என்றார்.

இளைஞனுக்கு ஒரே ஆச்சர்யம், திரும்பி பாட்டியைப் பார்த்து “நீ எதற்கு இன்னும் பர்கரை சாப்பிடாமல் வைத்திருக்கின்றாய்? என்ற கேள்விக்கு பாட்டியின் பதிலைக் கேட்ட உடன் கண்ணீர் மல்க, காலையில் திட்டுவிட்டு வந்த தன் மனைவியைக் காண ஓட்டமாக ஓடினான்.

அப்படி என்ன பாட்டி சொல்லுச்சுன்னு கேக்கறீங்களா?

...

...

...

...

...

...

...

தாத்தா இன்னும் எனக்கு பல் செட்ட தரவில்லை....!!!!!!!!!!!!!!!!!!!!

-------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்.

புதன், ஜனவரி 25, 2012

ம்ம்ம்.... அப்புறம், ம்ம்ம்ம்... வேற................


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின், சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
தலைப்பில் குறிப்பிட்ட இரண்டு வார்த்தைகளை படித்தவுடன் உங்களுக்கு புரிந்துவிட்டால், கண்டிப்பாக ஒன்னு, உங்களுக்கு பொண்ணு பேசி முடிவாகியிருக்க வேண்டும், இல்லனா நீங்க கல்யாணமானவராக இருக்கவேண்டும். இப்போதுள்ள காலத்து பசங்களுக்கென்றே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பு தான் வாய்ப் கால். வெளி நாட்டில் இருந்து கொண்டு நமக்கென்று பேசிவைத்த பெண்ணிடம் மணிக்கனக்கில் பேசுவதெற்கென்றே இண்டர் நெட் கால் / வாய்ப் கால் உள்ளது. சுமார் 30 திர்கம்ஸுக்கு 8 மணி நேரம் வரை கடலைபோடலாம் ச்ச்சீ கலந்துரையாடலாம்.

நான் வெளி நாட்டிற்கு வந்து இந்த கம்பெனியில் சேர்ந்த போது, என்னுடம் வேலைசெய்யும் ஒரு நண்பருக்கு நிச்சயதார்தம் முடிந்திருந்தது. எங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் மனிதன், திடீரென்று காணாமல் போய் விடுவார். என்னனு பார்த்தா தனியா நின்று கொண்டு, ம்ம்ம்ம் அப்புறம் சாப்பிட்டாச்சா........ம்ம்ம்ம்ம்......வேற....... என்ற சப்தம் மட்டும் தான் வரும். பேச ஆரம்பித்தால் சுமார் 1 மணி நேரம் வரை பேசிக்கொண்டே இருப்பான்.

அப்ப நாங்க எல்லோரும் கேலி பண்ணுவதுண்டு அவனை, அப்ப அவன் சொல்லுவான், உங்களுக்கும் இப்படி ஒரு நேரம் வரும் அப்ப தெரியும்டா. எனக்கு பொண்ணு பார்த்து, அப்படியே அந்த பொண்ணுட்ட நான் பேசினாலும் உன்ன மாதிரி, ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரமெல்லாம் பேசமாட்டேன். அப்படி என்னதாண்டா பேசுவிங்க, அதுவும் டெய்லி, ஒரு மணி நேரம் பேசுறதுக்கு என்னதாண்டா இருக்கு???. இப்படியா கட்டய கொடுப்பதுண்டு. கன்னிப் பொண்ணுங்க சாபம் பலிக்குமோ என்னமோ தெரியாது, பொண்ணு பேசிப் போட்டவனுங்க விடும் சாபம் உடனே பலித்துவிடும்னு இப்பதான் தெரியுது.
இப்போ, சும்மா நான் யாரிடமாவது போனில் பேசிக்கொண்டிருந்தாலே, அவன் என் பக்கத்தில் வந்து ம்ம்ம்ம்.. அப்புறம்,,,,....ம்ம்ம்ம் வேறன்னு கேலி செய்துவிட்டு போவான்.
அதெல்லாம் சொன்னா புரியாது, அனுபவித்து தான் பார்க்கணும்னு அவன் அப்ப சொன்னான். ஹி ஹி ஹி இப்பதான் நமக்கு புரியுது, எவ்வளவு இருக்கு பேசுறதுக்கு. இரண்டு மணி நேரம் பேசினாலும் அதில் கால் மணி நேரம் ம்ம்ம்ம் அப்புறம், ம்ம்ம்ம் வேறன்னு சொல்லுரதிலேயே போய்விடுகின்றது.

இன்னைக்கு எதைப்பற்றி பேசுவது? என்று எண்ணிக் கொண்டே போன் பேசினால், எதப்பற்றி பேசினோமென்றே தெரியாத அளவிற்கு ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருப்போம். ஆனா, பேசுறதுல பாதி, சில நேரங்களில் எல்லாமே, பெரிய மொக்கையாகத்தான் இருக்கும். கேட்பதற்கும், தெரிந்து கொளவதற்கும் இனி ஒன்றும் இல்லை என்று முடிவானவுடன், சமைலைப் பற்றி டாபிக் மாறும். இப்படியா போய்கொண்டிருக்கும் போது ஒரு நாள், நான் போன் செய்த போது,

ஹலோ, அஸ்ஸலாமு அலைக்கும்,

வ அலைக்கும் ஸலாம்,

என்னம்மா, நல்லா இருக்கியா?

நான் நல்லா இருக்கேன், காலையில இட்லி, தேங்காய் சட்னி வக்கல, சாம்பார் தான், மதியம் புளிக் குழம்பு, எங்கத்தாவிற்கு மட்டும் மீன் பொறிச்சது எங்களுக்கு சிக்கன், நைட்டுக்கு சப்பாத்தி தான், குருமா வக்கனும் அப்படியில்லனா, சீனி வச்சி சாப்பிடனும்..............................

ஏய், நிறுத்து, நிறுத்து, இதயெல்லாம் எதுக்கு சொல்லுற?

எப்படினாலும் நீங்க அடுத்தடுத்து இதத்தான் கேட்கபோறீங்க, அது தான் முதல்லையே சொல்லிட்டேன்

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அய்யய்யோ, இப்படி ம்ம்ம்.... அப்புறம், ம்ம்ம்.... வேற என்ன சாப்பிட்டன்னு கேட்டு ஒரு அரை மணி நேரத்த ஓட்டிறலாமுன்னு பார்த்தா, இப்படி பல்ப் வாங்க விடுறாளேன்னு மனசுக்குள் நினைத்தாலும், மச்சான நல்லா புரிஞ்சி வச்சிருக்கியேன்னு சொல்லி மூணு புள்ளி, ஒரு ஆச்சிரியக் குறியோடு சொல்லி அசிங்கப்பட்டதை, அவள் புரிந்து கொள்ளமுடியாத அளவிற்கு மேக்கப் செய்ய படாத பாடு படனும்.
இனி கல்யாணம் ஆகும் வரை, இந்த மாதிரியான பதிவுதான், லவ் மூடு ஸ்டார்ட் ஆகிடுச்சு. ஒரு நாள் பேசலன்னா, மனசு கிடந்து அடிக்குது, கை, கால் நடுங்குது, கண்ணு மங்குது, நாக்கு உலருது.............. இதெல்லாம் அனுபவிச்சாத்தான் சார் புரியும், பொண்ணு பேசி போட்டவங்களுக்குத்தான், ஒரு பொண்ணு பேசி போட்டவங்களுடைய கஷ்டம் தெரியும்.

மன்னிக்கனும் மேடத்திடம் இருந்து மிஸ்கால் வந்திருக்கு, அடுத்த பதிவுல பார்க்கலாம்.

ஹலோ, அஸ்ஸலாமு அலைக்கும்

வ அலைக்கும் ஸலாம்,

நல்லா இருக்கியாம்மா?

நல்லா இருக்கேன், நீங்க நல்லா இருக்கீங்களா?

....
....
....
....
...
...

ம்ம்ம்ம்... அப்புறம், ம்ம்ம்... வேற....

--------------------------------------------------------------------------யாஸிர்

புதன், ஜனவரி 18, 2012

தானேக்கு தானே முன்வந்து உதவுவோம்.


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
டிசம்பருக்கு ஏனோ இத்தனை கோரப்பசி, அன்று ‘சுனாமி, இன்று ‘தானே. இந்த உலகில் உயிகளுக்கு மட்டும் தான் மதிப்பு போல, உயிரை மட்டும் விட்டுவைத்துவிட்டு அனைத்தையும் தனக்கு தானே கொண்டுசென்றுவிட்டது தானே புயல். சுனாமியால் ஏற்பட்ட உயிர்சேதங்களுக்கு எந்தவிதத்திலும்  குறைத்து மதிப்பிட முடியாத தானே புயலின் கொடுரத்தினை எந்த ஒரு மீடியாவும் மக்களுக்கு வெளிச்சமிட்டு காட்டமால் மறைத்துவிட்டன. ஒரு வேளை டிசம்பர் 31ல் ஏற்பட்டதாலோ என்னவோ, இதை விடுத்து, புது வருடத்தில் மார்பளகு காட்டிப் பேசிய நடிகைகளில் ஆரம்பித்து, தொப்புள் காட்டி நடித்த நடிகையின் படத்தில் தொலைந்து போனோம். நல்லவேளை புத்தாண்டுக்கு ஒருவாரம் முன்னாடி வந்தது சுனாமி, இல்லன்னா அதற்கும் இதே நிலைதான்.

புத்தாண்டு நிகழ்சிகளை ஒளிபரப்பி முடித்த பின்னர், சேனல்களில் நேரங்களும், பத்திரிக்கைகளில் பக்கங்களும் காலியாக இருக்க, சில மீடியாகள் முன்வந்தன, அய்யோ பாவம், அதற்குள் பொங்கல் வந்துவிட்டது, மீண்டும் அதே மார்பளகு மங்கயின் மயக்கம், தொடை நடிகையின் தொடர், ஓடவே ஓடாத படங்களின் விமர்சனம்.........
அறுவடைத் திருநாளில், அரி அருக்க, வயலைத் தொலைத்த தமிழனிடம் அரிவாள் மட்டும் தான் மிச்சமிருக்கின்றது இன்று. புத்தாண்டு, பொங்கல் நாளில் எதிர்காலத்தின் சிந்தனையை விடுத்து, அடுத்தவேளை சாப்பாட்டிற்கு ஏங்கி நிற்கும் இவர்களை எண்ணுகின்ற போது வைரமுத்துவின் வரிகள் தான் ஞாபக வருகின்றது எனக்கு,


அவன் ஒரு பட்டுவேட்டியைப்
பற்றிய கனாவிலிருந்தபோது
கட்டியிருந்த கோவணமும்
களவாடப்பட்டது!!!!!!!!!!!

எதை நினைத்து அந்த கவிஞன் எழுதினானோ தெரியாது, ஆனால் இயற்கை செய்த கோரச்செயலுக்கு, இது ஒத்துத்தான் போகின்றது.

திரு. தமிழருவி மணியனின், காந்திய மக்கள் இயக்கம் நடத்திய ஒரு கூட்டத்தில் சில ஆயிரங்களை பிரித்து, தானே புயலில் பாதித்த பகுதி மக்களுக்கு உதவிட அவருடய தொண்டர்கள் குலுக்கிய உண்டியலில் விழுந்தது 67,000 ரூபாய்களாம். இதிலும் அந்த கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் ஏழை, பாழைகள், கிடைத்த தொகையில் நெகிழ்ந்து அவர் சொன்னார், ஒரு ஏழைக்கு மட்டுமே தெரியும் இன்னொரு ஏழையின் பசி.

அனைவருக்கும், உதவிசெய்ய ஆர்வம் தான், ஆனால் தப்பானவர்களின் கையில் தம்முடைய பணம் சென்றுவிடுமோ என்ற அச்சமும், ஏமாற்றப்பட்டு விடுவோமோ என்ற அவமானமும் இன்று மானமுள்ள தமிழனை மண்ணை நோக்கவைக்கின்றது. உதவியை நாம் உள்மனதிலிருந்து செய்வோம், கண்டிப்பாக அது கிடைப்பவர்களின் கைகளில் கிடைத்திடச் செய்வதை ஆண்டவனின் பொறுப்பில் விட்டுவிடுவோம்.
நான் விகடன் மூலமாக எனது பணத்தினை அனுப்ப முயன்றுவருகின்றேன். உங்களுக்கும் விருப்பம் இருந்தால் கீழ்காணும் வங்கிகணக்கின் மூலமாக அனுப்பிவையுங்கள்.


வெளி-நாட்டவர் கீழ்காணும் முகவரியுலும்
INDIAN BANK,
CURRENT ACCOUNT
A/C = 443380918
IFSC CODE = IDIB000C032
ETHIRAJ ROAD BRACH.
CHENNAI - 600008

உள்-நாட்டவர் கீழ்காணும் முகவரியிலும் அனுப்பலாம்
Vasan Charitable Trust
I.C.I.C.I Bank
Saving Account
A/C = 000901003381
IFSC CODE = ICIC 0000009
NUNGAMPAKKAM, CHENNAI -600034


கை தூக்கிவிடுவோம், உலகில்
கடைசித் தமிழன் இருக்கும் வரை.


--------------------------------------------------------------------------யாஸிர்.

திங்கள், ஜனவரி 16, 2012

அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்.


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
கல்யாண தேதியை அறிந்துகொண்டதிலிருந்து அரண்டுபோயிருக்கும் எனக்கு, மேலும், மேலும் பீதியை கூட்டிக்கொண்டிருக்கின்றது இணையதளங்கள். ஏதாவது ஒரு விசயத்திற்கு நான் கம்யூட்டரில் உட்கார்ந்து, எதையாவது தேடும் போது, திருமண சம்பந்தமான விசயங்களே மேல்நோக்கித் தெரிகின்றன. மனைவியிடம் நடந்து கொள்வது எப்படி?, மனைவியிடம் நற்பெயர் வாங்குவது எப்படி? என்பனவாக இருக்கின்றது. பொண்ணு பார்பதற்கு முன்னாடி கூட இந்த மாதிரியான கட்டுரைகள் வந்திருந்திருக்கலாம், ஆனா என் கண்ணுலபட்டது என்னவோ, இப்பத்தான்.

சரி இதயெல்லாம் படித்திவிட்டு நம்ம வீட்டம்மாவ அசத்திடலாமுன்னு பார்த்தா, பத்து பாய்ட் இருக்கும் ஆபிஸர்ஸ், அதுல ஒன்னக் கூட நம்மால செய்யவே முடியாது. உதாரணத்துக்கு, காலை காபி கண்றாவியாக இருந்தாலும், ஆஹா, பேஷ், பேஷ், ரொம்ப நன்னா இருக்கு!!!! என்று ஆரம்பிக்க வேண்டுமாம். இப்படி ஆஹா, ஓஹோன்னா, சரி, அய்த்தானுக்கு நம்ம காபிமேல அம்புட்டு இஷ்டமுன்னு அதே மாதிரியல்லவா, தினமும் காபி கிடைக்கும்!!!!!!!!!!!. (கூறுகெட்டவனுங்க ஏதாவது எழுதனும்னு எழுதிடுறானுங்க).

ஒரு கட்டுரையில் மனைவியிடம் கணவன் எதிர்பார்பது, கணவனிடம் மனைவி எதிர்பார்பது என்று ஒரு 30 விசயங்களை எழுதியிருந்தார்கள். அந்த 30ல் எனக்கு பிடித்த (கணவன் எதிர்பார்ப்பது) ஒரு 15 பாயிண்டை (மீதமுள்ள 15 குணங்கள், எனக்கு ஒன்றும் பெரியதாக தெரியாததால், அதனை விட்டுவிட்டேன்). போல்ட், மற்றும் அண்டர் லைன் செய்து என்னவளுக்கு அனுப்பியிருந்தேன். அதே போல நீ எதிர்பார்கும் குணங்களை (மனைவி எதிர்பார்பது) அந்த 30ல் என்னைப் போல அண்டர் லைன், போல்ட் செய்து அனுப்பு என்று மெயில் செய்திருந்தேன். மாலையில் பதில் வந்தது. சும்மா சொல்லக் கூடாது, இந்த காலத்து பொண்ணுங்க ரொம்ப விபரம், கொடுத்திருந்த 30 பயிண்டுடன் இவள் ஒரு 6 பாயிண்ட் சேர்த்து மொத்தம் 36 ஐயும் போல்ட் செய்து, இடாலிக் செய்து, அண்டர் லைன் செய்து, ஃபான்ட் சைசை பெரிதாக்கி அனுப்பி வைத்தாள்!!!!!!!!!!?????????????!!!!!!!!!!!!!!!!!!!!
இது நமக்கு சரிபட்டு வராது, வேறு ஏதாவது இணையதளத்தில் சென்று திருமணம் பற்றிய நல்ல தகவல்கள் இருக்கின்றனவா? என்று தேடிப்பார்த்ததில்................. ஒன்னுமே கிடைக்கலை. தத்துவங்கள் மட்டும் கொட்டிக்கிடக்கின்றன. தத்துவங்கள் வாழ்கயில் ஏதாவது ஒரு காலத்தில் ஒத்துப்போகும், சிலவற்றிர்க்கு கொஞ்சம் நாள் ஆகும். கீழ் காணும் தத்துவத்தில் மூன்றாவது நிலையை நான் கடந்துவிட்டேன்.

தத்துவம் 1
கல்யாணம் என்பது பப்ளிக் டாய்லட் மாதிரி, வெளியே நிக்கிறவனுக்கு உள்ள போகனுமுன்னு அவசரம், உள்ளே போனவனுக்கு நாத்தம் தாங்கமுடியாம வெளியே வந்திடனுமுன்னு அவசரம்.

தத்துவம் 2
என் மனைவியிடம் கூற எனக்கு ஒரு வார்த்தை உள்ளது, ஆனால் அவளிடம் ஓராயிரம் வாக்கியங்கள் உள்ளது.

தத்துவம் 3
உன் மனைவியின் பிறந்த நாளை ஞாபகம் வைத்துக்கொள்ள எழிய வழி, ஒரே ஒரு முறை பிறந்த நாளை மறந்துவிடுவது தான்.

தத்துவம் 4
உனது தவறு என்றால் காலில் விழுந்துவிடு
நீ சரி என்றால் மூடிக்கிடு இருந்துவிடு.

தத்துவங்களை படித்தபின்பு, ஒரே பட படபடப்பாக வந்தமையால், கொஞ்சம் ரிலாக்ஸுக்காக ஜோக்ஸ் படிக்கலாமுன்னு போனா, அங்கேயும் கல்யாணம் சம்பந்தமான ஜோக்ஸ்தான் அதிகமாக இருக்கின்றது. உண்மையிலேயே நீங்க நல்லா பார்த்திருந்தால் தெரியும், சர்தார்ஜி ஜோக்ஸை விட திருமணம் சம்பந்தமான ஜோக்ஸ், கணவன்-மனைவி ஜோக்ஸ்தான் இணையத்தில் அதிகமாக இருக்கும். ஜோக்ஸ் நனைத்து படித்தால் சிரிப்பு வருவதற்கு பதில் ஒரு மரண பயமே வந்துவிடும் அப்படியா நான் படித்த ஒரு ஆங்கில ஜோக்
கொஞ்சம் நன்றாக கூர்ந்து பாருங்கள் (ஏதாவது புலப்படுகிறதா?)
அது ஒரு சிறிய கிராமம், அங்க யாருமே கணவன் மனைவியாக அதிக வருடங்கள் இருந்ததில்லை. அதிகமா போனா ஒரு 10 வருசம் வரை தான் இருப்பார்கள் அதன் பின்பு ஏதாவது சண்டை வந்தோ அல்லது உருவாக்கிக்கொண்டோ பிரிந்துவிடுவார்கள். ஆனால் அங்கேயும் ஒரு ஜோடி 50 வருசம் சேர்ந்து வாழ்ந்திருந்தது கேள்விப்பட்டு, கல்யாண வயதுள்ள இளைஞர்கள், இவர்கள் நமக்கெல்லாம் ரோல் மாடல், ஆகவே இவர்களின் 50வது கல்யாண நாளை வெகு விமர்சியாக கொண்டாடவேண்டும் என்று எண்ணி, தடபுடலாக ஏற்பாடு எல்லாம் செய்தார்கள். அந்த நாளும் வந்தது அனைவரும் விழாவினை சிறப்பித்து வீட்டுக்கு செல்ல, ஏற்பாடு செய்த இளைஞர்கள், தாத்தவை மட்டும் தனியா தள்ளிக்கொண்டு போய், சீக்கிரட் ஆப் தி சக்சஸ் என்னனு கேட்டார்கள். அதற்கு தாத்தா சொன்னார் “பொறுமை தான், மனைவி என்ன செய்தாலும் அதை பொறுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இளைஞர் கூட்டம் கேட்டது “அதெப்படி தாத்தா தப்பு செய்தாலும் பொறுமையா இருக்கிறது? உங்களால் எப்படி அது சாத்தியமானது?

தாத்தா தன்னுடைய தேனிலவு காலத்திற்கு நினைவை ஓடவிட்டார். நானும், எனது மனைவியும் தேனிலவிற்காக ஊட்டி சென்றிருந்தோம், அப்போது என் மனைவிக்கு குதிரை சவாரி செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டதால், எனக்கொரு குதிரை, அவளுக்கொன்று என்று வாங்கிக்கொண்டு, சவாரி செய்துகொண்டிருந்தோம். அப்போது திடிரென்று என் மனைவின் குதிரை பிளிரிக்கொண்டு வேகமாக குதித்து என் மனைவியை கீழே தள்ளிவிட்டது, எழுந்து குதிரையைப் பார்த்து அவள் சொன்னால்

இது “முதல் தடவை

பின்னர் ஏறிக்கொண்டு சிறு தூரம் சென்ற பின்னாடி மறுபடியும் குதிரை என் மனைவியை கீழே தள்ளியது, மீண்டும் எழுந்து குதிரையைப் பார்த்து சொன்னாள்

இது “இரண்டவது தடவை

பின்பு மறுபடியும் குதிரையின் மீது ஏறிக்கொண்டு சவாரி செய்து கொண்டிருந்த போது, மூன்றாவது முறையும் குதிரை அவளை கீழே தள்ளிற்று. பயங்கர கோபம் கொண்ட என் மனைவி, தன் கை பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து ‘டுமீல், டுமீல் என்று குதிரையை சுட்டுவிட்டால்,

இதனை சற்றும் எதிர்பார்க்காத நான், “அறிவிருக்கா உனக்கு, ஒரு வாயில்லா ஜிவனை இப்படி சுட்டுகொன்னுட்டியே, ராட்சசி, உனக்கு ஒழுங்கா உட்காரத் தெரியலைனா பாவம் இந்த குதிரை என்ன செய்யும், பைத்தியக்காரி, பொரம்போக்க்கு,.........

அத்தனை திட்டுகளையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு என் மனைவி என்னிடம் சொன்னால்,

இது “முதல் தடவை

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

----------------------------------------------------------------------------யாஸிர்