வியாழன், செப்டம்பர் 29, 2016

இஸ்மாயில் எனும் ஆட்டுக்குட்டி

ஈத் பெருநாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக அப்பாவிடம் பேசும் போது ‘’ஆட்டுக்குட்டி பிடிக்கலியா?’’ என்று கேட்டேன். ‘’பிடிக்கனும்பா, பெருநாளுக்கு ரெண்டு நாளுக்கு முன்னாடி புடிச்சா போதும்னு பார்க்கேன், பாக்குறதுக்கு ஆள் இல்லை, புல்லு, கீரை விலையெல்லாம் வேற ரொம்ப ஜாஸ்தி’’ என்று பதில் வந்தது. நானெல்லாம் சின்ன பிள்ளையாக, சாரி (இப்போதும் அப்படியே இருப்பதால்)............. ரொம்ப சின்னப் பிள்ளையாக இருக்கும் போது எங்களுக்கு ‘ஈத்துல் பித்ர்’, ‘ஈத்துல் அதா’ என்று பெருநாளுக்கு அரபி பெயர்களைச் சொன்னால் தெரியாது. தெரிந்தது எல்லாம் ‘’நோம்புப் பெருநாள்’’ ‘’ஆட்டுக்குட்டிப் பெருநாள்’’ அவ்வளவுதான். பேவரேட் பெருநாள் என்றால் அது ‘ஆட்டுக்குட்டி பெருநாள்’’தான்.

நோம்பு பெருநாள் முடிந்து 75 நாட்களுக்குள்ளாக ஆட்டுக்குட்டி பெருநாள் வந்துவிடும். முன்பு, பெரும்பாலான வீடுகளில் குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஆடுகளை பிடித்துக்கொண்டு வந்துவிடுவார்கள். முன்னதாகவே வாங்கிவிட்டால் விலையும் மலிவாகக் கிடைக்கும், மேய்ச்சல் நிலங்கள் அதிகமாக இருந்ததால், ஆட்டுக்குத் தீணி போடுவதிலும் பிரட்சனை இருக்காது. மேய்ச்சலுக்கு கூட்டிக்கொண்டு போக, குளிக்க வைக்க என அனைத்தையுமே அந்த வீட்டுப் பசங்க தலையில் கட்டிவிடுவார்கள். அதை திணித்துவிடுவார்கள் என்றும் சொல்ல முடியாது, பசங்களாக அதை விரும்பி ஏற்றுக்கொள்வார்கள்.

ஒவ்வொரு வீட்டுப் பசங்களும், அதிகமாக ஒரு மாதம் வரை பொறுத்திருப்பார்கள், அதற்குள் ஆடு வீட்டிற்க்கு வரவில்லை என்றால், அப்பாக்களை நச்சரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். பசங்களின் விருப்பத்திற்கு இல்லை என்றாலும், அவரகளின் தொந்தரவில் இருந்து தப்பிக்க குறைந்தது 20 நாட்களுக்கு முன்பாகவாவது ஆடுகள் வீட்டு முற்றத்தில் நிற்கும். எந்த வீட்டில் முதலில் ஆடு வருகிறதோ அந்த வீட்டுப் பையனுக்கு அத்தனை பெருமையாக இருக்கும். ஒவ்வொருத்தனுக்கும் அவன் வீட்டு ஆடுதான் ஒசத்தி. அப்பா ஆடு வாங்க போகும்போதே லிஸ்ட் போட்டு அனுப்புவார்கள். ‘கொம்பு பெருஸ்ஸா இருக்கனும்’, ‘வெள்ளையா இருக்கனும்’, ‘முடி அதிகமா இருக்கனும்’, ‘உயரமா இருக்கனும்’..... என  அந்த லிஸ்டில் பல இருக்கனும் இருக்கும்.

ஆனால், எல்லா அப்பாக்களுக்குமே தெரியும் எப்படியான ஆட்டை கூட்டிக்கொண்டு போனாலும் பசங்களுக்கு பிடிக்கும் என்று. ஆட்டைப் பார்த்துவிட்டால் லிஸ்ட் போட்ட பாய்ண்ட்ஸ் எல்லாம் மறந்துவிடும், அல்லது எல்லா பாயிண்டும் மேட்ச் ஆவது போல தோன்றும். ‘’குழந்தை இல்லாதவள் உண்டாகி இருந்தால், ஆண் பிள்ளை என்ன?, பெண் பிள்ளை என்ன?’’ அதுமாதிரித்தான். ஆடு வேண்டும். பசங்க எதை மறந்தாலும் ‘’கொம்பு’’ விசயத்தில் கறாராக இருப்பார்கள். ‘’என்னப்பா கொஞ்சம் கொம்பு பெரிசா புடிச்சிருக்கலாம்ல’’ என செல்லக் கோபப்படுதலும் இருக்கும். எவ்வளவு பெரிய்ய கொம்பான ஆட்டை கொண்டுவந்தாலும் அவர்களுக்கு அது கொஞ்சம் கம்மியாகத்தான் தோன்றும்.‘’எங்க ஆட்டுக்குட்டிக்கு ரெண்டு சுத்து கொம்பு’’ ‘’என்னோடதுக்கு மூனு சுத்து கொம்பு’’ என்பது பெருமையான விசயம்.

கொம்புதான், தன்னுடய நண்பர்களிடம் தன் ஆட்டைக்காட்டி பெருமைப்பட்டுக் கொள்ளும் அஸ்திரம். சின்ன கொம்பாக இருந்தால் ஊசிக் கொம்பாக இருக்கவேண்டும், அப்படியென்றால்தான் ‘’இந்த கொம்ப வச்சி வயித்துல குத்துச்சோ, கொடலெல்லாம் வெளிய வந்திரும்’’ என பீத்திக்க முடியும். பெரியவர்களுக்குத்தான் அது ‘வெள்ளாடு’, ‘பொட்டாடு’, ‘செம்பரியாடு’, ‘மயிலம்பாடி’, ‘காட்டாடு’ என்ற பெயர்கள். பசங்களுக்கு எல்லா ஆட்டுக்குட்டியுமே ‘’இஸ்மாயில்’’தான். இன்னும் சொல்லப்போனால் ஆடு என்ற உச்சரிப்பே வராது. இது ‘’அவன் இஸ்மாயில்’’, இது ‘’இவன் இஸ்மாயில்’’, ‘’உன் இஸ்மாயில்’’, ‘’என் இஸ்மாயில்’’ என்றுதான் பேசிக்கொள்வார்கள்.

இஸ்மாயில் நபியை அருத்து பலியிடும் நிகழ்வை முன்னிட்டு கொண்டாடப்படும் பெருநாள் என்பதால், எல்லா ஆடுகளுமே அவர் பெயர்தான். பசங்களுக்கு, ஆட்டுக்குட்டி இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற லிஸ்ட்டைப் போல், பெரியவர்களுக்கும் ஒரு சில செண்டிமெண்ட் விசயங்கள் இருக்கும். எங்க அப்பாவுக்கு, ஆட்டின் நெற்றியில் வெள்ளை கலர் இருக்க வேண்டும், அல்லது வெள்ளை தலை ஆட்டுக்கு, நெற்றியில் வேறு நிறத்தில் கலர் இருக்க வேண்டும். அப்படியான ஆடுகள் எங்க ராதாவிற்கு (அப்பாவின் அப்பா) பிடிக்கும் என்பதால் அந்த சிஸ்டம் இன்றும் தொடர்கிறது. சிலருக்கு காலில் கருப்பு கலர், பன அரிவாள் கொம்பு, ஆட்டுத்தாடி.....என செண்டிமெண்ட்ஸ் உண்டு.

எப்படா ஸ்கூல் முடியும்?, இஸ்மாயில மேய்க்க எங்கடா கூட்டிக்கொண்டு போக? என ஸ்கூலில் அந்த ஒரு மாச கடைசி பிரியடும் இப்படியே கழியும். அப்பா, ஆட்டுக் கயிறை கையில் கொடுக்கும் போது ‘’இப்போ 12 கிலோ இருக்கு, பெருநாள் அன்னைக்கு 25 கிலோ ஆயிரனும்’’ என சொல்லிக்கொடுத்த வார்த்தை ‘’சொல்லுங், சொல்லுங், சொல்லுங்...... நீங்க யாரு? யாரு? யாரு? பாம்பேய்ல என பண்ணீங்க?’’ என்று பாட்ஷா பட டைப்பில் எக்கோ அடிக்கும். வீட்டுக்கு வந்து பையை தூக்கி வீசி எறிந்துவிட்டு ஆட்டுக்குட்டி கயிறை அவிழ்த்து மேய்ச்சலுக்கு கூட்டிக்கொண்டு செல்லும் போது வரும் ஆனந்தத்தை ஆயிரம் மலையாள பட சிடிகளால்கூட ஈடுசெய்ய முடியாது.

நாம போகுறதுக்கு முன்பாகவே அண்ணன் அவிழ்த்துக்கொண்டு போயிருந்தால், அவ்வளவுதான் ‘’இன்னிக்கி அண்ணனுக்கு ரேங்க் கார்டு கொடுத்திருக்காங்க, 3 பாடத்துல பெயிலு’’ என அப்பாவிடம் போட்டுக்கொடுத்து ‘’அப்படியா சேதி, நீ ஆட்டுக்குட்டிய வாங்கிட்டு அவன வீட்டுக்கு வரச்சொல்லு’’ என்ற நல்ல செய்தியோடு வயக்காட்டை நோக்கி ஓட வேண்டும். இதற்கு பயந்தே எந்த வீட்டிலும், தம்பி இருக்கும் போது அண்ணன்கள் ஆடுப்பக்கம் அண்டுவதில்லை. வரப்பு புல் சாப்பிட்டால் குட்டி நல்லா கொழு கொழு என்று வரும் என்று அறிந்து, நெல்லு போட்டிருந்தாலும், வரப்பில் காவலாளிக்கு தெரியாமல் மேயவிடுவோம். நீள கயிற்றை கட்டி ஆட்டை மேய விட்டுக்கொண்டே, கிரிக்கெட் விளையாடுவோம். கேட்ச் பிடிப்பதுபோல் தெரிந்தால் ‘’காதரு உன் இஸ்மாயில் அத்துட்டு ஓடுது பாருல’’ என பொய் சொல்லி அவுட் ஆவதிலிருந்து தப்பிப்போம்.

கிட்டி செடியை சாப்பிட்டுவிட்டால், ஆட்டுக்கு வயித்தால போகும். புளுக்கைக்குப் பதிலாக, பீய்ச்சி அடிக்கும். அப்படி இருந்தும் ஆடு தெம்பாகவே இருக்கும், நமக்குத்தான் வயித்தால போனதுமாதிரி சோர்ந்து போய் உட்கார்ந்திருப்போம். டாக்டர்ட காட்டலாமா?, மருந்து எதுவும் கொடுக்கலாமா? என தெருவில் திருயும் அத்தனை கிளவிகளிடமும் அலோசனை செய்து ‘’நீ சும்மா இருந்தாலே நாளைக்கு சரியாகிடும்’’ என்ற உண்மையை அறிந்துகொள்வோம். கீரை, ஆட்டுக்கு பிடித்த உணவு என்று கேள்விப்பட்டு பெரியாரு வரை 2 கி.மீ நடந்து சென்று வெரும்கையோடு வீடு திரும்புவோம். அந்த நாட்களில், சாய்ங்கால டியூசன், மதரஸா என எதுவும் கண்ணுக்கு தெரியாது. தெரிந்தது எல்லாம் ஆட்டுக்குட்டி, புல், களனித் தண்ணி..... என ஆடும், ஆடு சார்ந்த விசயங்களும் மட்டுமே.

ஆடு வாங்கிக் கொடுப்பது மட்டுமே அப்பா வேலை, மற்றபடி மணி வாங்கி கட்டுவது, ஜில் ஜில் சிலங்கை வாங்கி கழுத்தில் கட்டுவது, குளுப்பாட்ட 501 பிராண்ட் சோப் வாங்குவது (அதில்தான் அழுக்கு நல்லா போகும், குளத்தில் ஆட்டுடன் குளிக்கும் போது அதே சோப்பையே நாங்களும் தேய்த்துக்கொள்வோம்), பொரி கடலை வாங்குவது, கொம்பில் தேய்த்துவிட எண்ணெய் என லொட்டு லொசுக்கெல்லாம் எங்க பாக்கெட் மணிதான். அது பத்தவில்லை என்றால் மணிக்காக அப்பா பாக்கெட்டில் கைவைப்போம்.

எங்க தாத்தா காலத்தில் மாடுகள் இருந்தபோது அதற்கு கட்டியிருந்த செம்பு கிலுக்கு மணி ஒன்று இன்றும் எங்கள் வீட்டில் உண்டு. அதுதான் காலங்காலமாக எல்லா ஆட்டுக்குட்டிகளுக்கும் கட்டி அழகுபார்ப்பது. இப்போது இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பாக ஆடுகளை பிடிப்பதால் அது பயன்படாமலே இருக்கிறது. ‘’சாலாப்பேரி குளத்துல பாம்பு நிக்குது’’ என்று எவனாவது சொல்லிவிட்டால், ஆடுகளுக்கு தண்ணி காட்ட குளக்கரையிலேயே நிப்போம். அந்த வழியாக எவனாவது வந்து குளத்தில் கால் வைத்து, பாம்பு கடிக்கிறதா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பின்பு ஆட்டுடன் இறங்குவோம். அரை மணி நேரத்திற்கு மேலாக, யாருடனாவது,  எங்காவது நின்றுவிட்டால் மனசு பூரா இஸ்மாயில் சிந்தனையாகவே இருக்கும். வீட்டுக்கு வந்தவுடன் ‘’இவ்வளவு நேரம் எங்கடா போயிருந்த’’ என அம்மா கேட்பது, ஆடே கேட்பது மாதிரி இருக்கும்.

கொஞ்சம் நன்றாக பழகிவிட்டால் கயிரை பிடித்துக்கொண்டு போகவேண்டிய தேவையே இல்லை. அதுவா பின்னாடி வரும். அதை பயன்படுத்தி ''பெரியம்மா வீட்டுக்கு போய்ட்டுவா'', ''மாமா வீட்டுக்கு போய்ட்டுவா'' என பஸ் பிடித்து அனுப்பும் இடத்திற்கெல்லாம் அம்மா, இஸ்மாயிலோடு நடக்கவும், ஓடவும் விட்டு எடுபிடி வேலைகளை வாங்கியிருக்கிறாள். அம்மா கொடுத்துவிட்ட மாவை வாங்கிக் கொண்டு ‘’ஆட்டுக்குட்டி நல்லா பழகிடுச்சு போல, உன் பின்னாலேயே வருதப்பா, அம்புட்டு அன்பு’’ என சொந்தக்கார் சொல்ல, ஏதோ ராக்கெட்டை தனியா கண்டுபிடிச்சு விண்வெளியில பரக்கவிட்ட சந்தோசம் வரும்.

பெருந்நாளுக்கு முன் இரவில்தான் ஒருவன் சொல்லுவான், ‘’நாளைக்கெல்லாம் இஸ்மாயில அருத்துருவானுங்க இல்ல?’’. அதுவரை எதுக்கு வளர்க்கிறோம் என்பது தெரியாமலையே பாசத்தை புல்லாகவும், கருணையை களணித் தண்ணியாகவும், அன்பை அகத்திக்கீரையாகவும் கொடுத்து வளர்த்திருப்போம். ஆட்டை உரிக்கும் போது குடலில் கழிவு நிற்கும் என்பதற்காக அன்றய இரவில் ஆடுகளுக்கு வீட்டில் இரை கொடுக்க விடமாட்டார்கள். நைட்டு எல்லாம் பசியில கத்தும், அந்த சப்தம் கேட்டு அழுக அழுகயா வரும். ''ஒன்னுக்கு போறேன்னு'' பொய் சொல்லி, யாருக்கும் தெரியாம கீரை அள்ளிப்போட்டுவிட்டு வந்து படுத்துக்கொள்வோம். பெருந்நாள் காலை எல்லோருக்கும் சந்தோசமாக விடியும், ஆட்டோடு கிடந்த எங்களைத் தவிர. பெயரளவிற்கு புது துணி உடுத்தி, தொழுகைக்கு போனாலும், மனசு என்னவோ இஸ்மாயில் மேலேயே இருக்கும்.

பெருநாளுக்கான சிறப்புத் தொழுகை முடித்தபின்பு, ஆட்டை அறுக்கும் முன் குளிப்பாட்டுவார்கள், பிடித்துக்கொள்ளச் சொல்லி கயிறை எங்களிடம்தான் கொடுப்பார்கள். ‘’உருவிக்கிட்டு ஓடிருடா இஸ்மாயிலு’’ என மனதில் சொல்லிக்கொண்டு கயிற்றை லூசாக பிடித்திருப்போம், பாசக்கார பயபுள்ள அப்பவும் நம்ம காலையே சுத்தி நிக்கும். ‘’அறுக்க ஆள் கிடைக்கவில்லை’’, ‘’உரிக்க ஆள் கிடைக்கவில்லை’’ என்ற செய்திகளின் மூலமாக இஸ்மாயிலின் மரணம் சற்று தாமதப்படும். அந்த சிறு காலதாமதம் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தாலும் நிலைக்காது. அருப்பதை பார்க்கப் பிடிக்காமல் வீட்டிற்குள் நின்று அழுதகாலங்கள் உண்டு. வெட்டி கூறுபோட்ட பின்பு, கண் திறந்தபடி, தலை மட்டும் தனியாகக் கிடக்கும். அந்த கண்ணின் வழியாக அதனுடம் இருந்த அந்த முப்பது நாள் சந்தோசம் தெரியும்.

‘’என்னோட இஸ்மாயில இப்படி கொன்னுட்டீங்களேடா கொலகார பாவிகளா, இனி நான், எம்டன் ‘’மகன்’’ இல்லை, நீ, சமுத்திரக்கனியின் ‘’அப்பா’’ இளையராஜா இல்லை’’ என்று கோபம் கொண்டு அழுதுகொண்டே படுத்தால் அடுத்த ஒரு சில மணி நேரம் கழித்து பிரியாணி மணம் வந்து மூக்கையே வட்டமடிக்கும். ‘’இஸ்மாயில பாசமா வளர்த்த எனக்கே நாலு பீஸ்ஸுதானா? கூட ரெண்டு பீஸ் வைங்கடா?’’ என சாப்பிடும்போதும் இஸ்மாயில் ஞாபகத்தோடவே சாப்பிடுவோம்.. அரை மணி நேரம் கழித்து மறுபடியும் ‘’அய்யய்யோ இஸ்மாயில கொன்னுட்டாகளே’’ தான். ஆனால் அதுவும் நைட்டு பசி எடுக்கும் வரை மட்டுமே. இது, பத்தாவது நாள் இஸ்மாயிலின் தலைக்கறியை வைத்து ‘’தக்கடி’’ செய்யும் வரை நீடிக்கும். கொன்னா பாவம், திண்ணா போச்சுன்னு சும்மாவா சொன்னானுங்க. 

இது எல்லாம் ஸ்கூல் படிக்கும் காலங்களில் நடந்தது. காலேஜ் போன பின்பாக ஆட்டுக்குட்டியில் ‘’ஆடு’’ கட்டாகி, ‘’குட்டி’’களின் பக்கம் கவனம் திரும்பிவிட்டது.


----------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

திங்கள், செப்டம்பர் 26, 2016

அரபி வீட்டுக் கல்யாணம்.

அன்வர், ஜித்தா ஆபிசின் பி.ஆர்.ஓ வாக இருக்கிறார். சௌவுதிக்காரர். அரபி மொழி தவிர்த்து அவருக்கு வேறு எந்த மொழியும் தெரியாது. ஆங்கிலத்தில் நான் ‘ஒன்’ என்றால், ‘ஷீ?’ (என்ன?) என்று எதிர் கேள்வி கேட்கும் ஆள். என்னுடய விசா சம்பந்தமாக அவரிடம் பேசுவதாக இருந்தால், இரண்டு எனர்ஜடிக் டிரிங்க்ஸ் வாங்கி வைத்துக்கொள்வேன். சவுதிக்கு வந்த நாள் என்பதை அவருக்கு புரியவைக்க கையை விமானம் போல் இறக்கி ‘’ஆதா சவுதி டர்ர்ர்ர்ர்’’ என்றும், துபாய்க்கு சென்ற நாள் என்பதை அதே போல மேலே தூக்கி காட்டி ‘’ஆதா துபாய் சர்ர்ர்ர்’’ என்று மோனாக்டிங்க் செய்யவேண்டும்.

இப்படி பல டர்ர்ர்ர், புர்ர்ர்ர்களை செய்து காட்டினாலும் ரிசல்ட் என்னவோ டுர்ர்ர்ர்தான். அரபியில், அவர் சொல்வதில் எனக்கு புரிந்தது, நான் சொல்வதில் அவருக்கு புரிவது இரண்டு உண்டு என்றால் அது ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ ‘வ அலைக்கும் அஸ்ஸலாம்’ மட்டும்தான். ‘நேத்து விசா ரினிவல் பண்ணனும்னு சொல்லிவிட்டு ஏன் வரவில்லை?’ என மோன்-ஆக்டிங்கில் அரை மணிநேரம் விசாரித்தால், ‘’ஆதா கொர்ர்ர்’’ என தூங்கிவிட்டதாக, கண்ணை மூடி குரட்டை விட்டு காட்டுவார். 

இப்படித்தான் ஒரு நாள், பக்கத்து ரூமில் ஒருவனுடன் கையை குலுக்கி குலுக்கி பேசிவிட்டு, என் ரூமிற்கு வந்து கையை பிடித்து ‘’ஈஜி’’ ‘’ஈஜி லாஜிம் ஈஜி’’ என குலுக்கிவிட்டு அடுத்து மேனஜர் ரூமிற்கு போனார். மேனஜரிடம், என்னை கைகாட்டி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். அன்வர் குலுக்கியதில் பாதியும், நடப்பதை பார்த்து மீதியுமாக குலுங்கிப்போய் நின்றேன். வடிவேல் காமெடியில், தண்ணிக்குள்ள இருந்து திரும்பவந்து ‘சொல்லிறாதீங்க, அடிச்சி கேட்டாலும் சொல்லிறாதீங்க’ என்பது போல திரும்ப வந்து ‘’ஈஜி’’ ‘’ஈஜி லாஜிம் ஈஜி’’  என சொல்லிவிட்டு சென்றார்.

‘’மோன் ஆக்டிங்கில் ஏதும் தப்பா புரிஞ்சிக்கிட்டு கம்ளைண்ட் பண்ணுறாரோ?’’ என்ற பயம், அதே நேரத்தில் இந்த நாட்டின் தலை வெட்டும் தண்டனையும் எதேச்சையாக எண்ணத்தில் வந்து தொலைந்தது. மேனஜர் என்னிடம் வந்து ‘அவர் பொண்ணுக்கு கல்யாணமாம், கண்டிப்பா நாம எல்லோரும் கலந்துக்கனுமாம், உன்னையும் கூட்டிக்கொண்டு வரச்சொல்லிவிட்டு போகிறார்’’ என சப் டைட்டில் போட்டார். உயிர் வந்தது. ‘நாளைக்கு 11 மணிக்கு, நீ ரெடியா நில்லு நான் வந்து கூட்டிக்கொண்டு போகிறேன்’ என்றார் மேனஜர்.  
    
அபுதாபியில் ஏழு வருசம் இருந்தாலும், ஒரு முறைகூட அரபிகளின் கல்யாண கொண்டாட்டத்தில் கலந்துகொண்டது இல்லை. இதை, யாரும் என்னை கூப்பிடவில்லை என்றும் கூறலாம். 10.30 க்கு எல்லாம் ரெடியாகி மேனஜருக்காக காத்திருந்தேன். 10.45 ஆச்சு ஆளாக் காணோம். நாம போய் தாலி எடுத்துக்கொடுக்காம  மாப்பிள்ளை தாலி கட்டமாட்டானே என்ற பதட்டத்தில், மேனஜருக்கு போன் செய்தால் ‘’காலையில 11 மணி இல்ல, இரவு 11 மணி’’ என்றார். என்னது இரவு 11 மணியா? அடப்பாவிகளா, எங்க ஊர்லயெல்லாம் காலையில கல்யாணம் முடிஞ்சு, நைட்டு 11 மணிக்கு பாப்பாவுக்கு ரெடிபண்ணுற நேரம்மாச்சேடா????!!!!. தப்புப் பண்ண வேண்டிய நேரத்துல, தப்பு தப்பா பண்ணுரீங்களேடா. 
 
இரவு 11 மணிக்கு கல்யாண மண்டபத்திற்கு சென்றால், அங்கே இரண்டு வாசல், ஒன்னு பெண்களுக்கான ஹாலுக்கு, மற்றொன்று ஆண்களுக்கான ஹாலுக்கு. பெண்களுக்கான வாசல் வழியாக ஆண்களுக்கு அனுமதியில்லை. அரபிகளின் வழக்கப்படி, ஆண்களுக்கான வாசலில் அன்வர் நின்றுகொண்டு கன்னத்தோடு கன்னம் வைத்து முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் தெரிந்தது ஏன்? பெண்களுக்கான வழியில் செல்லக்கூடாது என்று. அரை தூக்கத்தில் உள்ளே சென்றால், அந்த அத்த ராத்திரியிலும் எல்லா அரபிகளும் டீயும், பேரிச்சம் பழம் கையுமாக ப்ரஷ்ஷாக இருந்தார்கள்.

என்னோட ஆபிஸில் இருக்கும் ஒருவனிடம் ‘’என்னடா? தி.மு.கவுல சேரவந்த தே.மு.க.காரனுங்க மாதிரி இவ்வளவு கூட்டம்? அதுவும் இத்தன மணிக்கு?’’ என்று கேட்டேன். இதுதான் சவுதியில் நடமுறையாம், 12 மணிக்கு ஆரம்பித்து, அதிகாலை 5 மணி வரை கல கல வென இருக்குமாம். என்னோட அகராதியில் கல்யாணத்தில் கல கல என்றால் அத்த பொண்ணுங்க, மாமன் பொண்ணுங்க பக்கத்துல உட்கார்ந்து பேசுறதுதான். அது இல்லாம என்ன மானங்கெட்ட கல கல?. சுத்தி சுத்தி பார்த்தா எல்லாம் உஜாலா விளம்பரத்துக்கு ஆடிசனுக்கு வந்தவனுங்க மாதிரி வெள்ள டிரஸ்ல அங்கயும், இங்கயும் சுத்திக்கிட்டு திரிஞ்சானுங்க. எல்லாமே வித்தியாசமாக இருந்தது / ரொம்ப புதுசாவும் இருந்தது.

சுத்தி ஷோபாக்களாக இருந்தது. ஒன்றில் அமர்ந்தவுடன், ஒரு சின்ன கிளாசில், இளம் பச்சை நிறத்தில் நல்ல வாசனையுடன் ஒன்றை தந்தார், ‘’சூப்பா?’’ என்று கேட்டேன், ‘’இல்லன்னா மட்டும் நீ வேணாம்னா சொல்லப்போற’’ என்ற அர்த்தத்தில் பார்த்துவிட்டு கொடுத்தான். அது ஒரு விதமான அரபிக் காவா டீ. குடித்தவுடனேயே குமட்டிக்கொண்டு வந்துவிட்டது. பின்பு அங்கு அடிக்கிவைக்கப்பட்ட பேரிச்சம் பழத்தில் ஒரு பத்து எண்ணத்தை பதம் பார்த்தபின்புதான், நாக்கு இயல்பு நிலைக்கே திரும்பியது.

நம்ம ஊர் கல்யாணத்திற்கும், அரபி கல்யாணத்திற்கும் ஒன்றைத் தவிர எல்லாமே வித்தியாசம். பொதுவான அந்த ஒன்று ‘’சாப்பிட வாங்க’’ என்றவுடன் மொத்தகூட்டமும் ராணுவ அணிவகுப்புடன் செல்வது. முதலில் எல்லோரும் எழுந்தவுடன், நான்கூட மாப்பிள்ளையை அழைத்துவருகிறார்கள் போல என எண்ணிக்கொண்டேன். பின்பு ஒவ்வொருவரின் வேகத்தைக் காணும் போதும் புரிந்துபோனது. பகலில் திருமணம் என்று எண்ணியபோது, அரபி சாப்பாட்டை ஒரு கை பார்த்திடவேண்டியதுதான் என்று நினைத்திருந்தேன். இரவு 11 மணி என்றவுடன், சாயாவும், பேரிச்சம் பழமும்தான் என்றுதான் நினைத்தேன். காரணம் ‘’12 மணிக்கு எல்லாம் யாரு சாப்பிடுவார்கள்?’’ என்று கப்பித்தனமான கால்குலேசன்தான்

டைனிங்க் ஹாலில் போய் பார்த்தால், யூ டூபில் பார்த்து, கீ போர்டில் எச்சிவிட்ட அரபி சாப்பாடு. ஒரு பெரிய்ய்ய தட்டில் இறைச்சியில் அங்க அங்க சில சாதங்கல் ஒட்டியிருந்தன, அதைச் சுற்றி ஜீஸ்கள், சோடாக்கள் என செரிமான அய்ட்டங்கள் வேறு. அன்னைக்கு என்று பார்த்து இரவுச் சாப்பாடை இரண்டுமுறை சாப்பிட்டிருந்தேன். வயிற்றில் கொஞ்சம் கூட இடம் இல்லை. ஒரு தட்டைச் சுற்றி என்னுடன் மேலும் இரண்டு பேர். பக்கத்து டேபில்காரகள் உட்பட அனைவரும் ஆக்ரோசமாக பந்தை மைதானத்திற்கு வெளியே பறக்க விட்டுக்கொண்டிருந்தார்கள். நானோ லெட்சுமணன் மாதிரி பந்தை காலுக்குள்ளேயே நிருத்திக்கொண்டிருந்தேன்.

 ‘’சாப்பாடு என்றால் இதுதாண்டி சாப்பாடு’’ என என் மனைவியை பிளைட் பிடித்துக்கொண்டு வந்து காட்டவேண்டும் போல இருந்தது. என்ன ஒரு டேஸ்ட். இந்த மாதிரி ஒரு விருந்து என்று அன்வர் சொல்லி இருந்தால், ஐந்து நாள் பட்டினி கிடந்திருப்பேனாடா. போச்சே.......போச்சே. சாப்பிட்டுவிட்டு வந்தவுடன் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற பெயரில் இசைக் கச்சேரி வைத்து கொன்று கொண்டிருந்தார்கள். பாடல்கள் எல்லாமே ‘’நின்னுக்கோர் ர்ரீஈஈஈ வர்ணம்’’ ரகம்தான். பாடலுக்கும், தாளத்துக்கும் சம்பந்தமே இல்லை. ‘’உங்களுக்கெல்லாம், சரணம், பல்லவி, அனுபல்லவி என்றால் என்னனு தெரியுமாடா?’’ என நாக்க புடுங்குறமாதிரி கேட்கணும் தோணுச்சு. ஆனால், ‘’அவங்களோட ரேட் என்ன?’’ என்று திருப்பிக் கேட்டுவிட்டாள்? நானெல்லாம் மானஸ்தன், தொங்கிருவேன்.

அன்வரை ''அவர்'' என்று மரியாதையோடு எழுதக் காரணம், ஆள் பார்க்க இரண்டு ஹல்க்கை இணைத்துவைத்ததுபோல் இருப்பார் என்பது மட்டுமல்லாது, அவருக்கு ரெண்டு பொண்டாட்டி. அதுவும் இருவரையும் ஒரே வீட்டில்வைத்துக் கொண்டு வாழுகிறார். இது போதாதா, ஒரு மனிதனுக்கு மரியாதை கொடுக்க. ஒருமுறை ‘’எப்படி அன்வர், ரெண்டு மனைவியையும் சமாளிக்கிறீங்க?’’ என்று கேட்டேன். அதற்கு அன்வரோ ‘நிறைய பாதாம் பருப்பு, பேரிச்சம் பழம், ஆவக்காடு ஜீஸ் சாப்பிடுவேன்’ என்றார். அடங்க்..... ‘’நான் அந்த சமாளிப்பைப் பற்றி கேட்கவில்லை, ரெண்டு மனைவியையும் ஒரே வீட்டில் எப்படி சமாளிக்கிறீங்கன்னு கேட்டேன்’’. அதற்கு அன்வர் ‘’ரெண்டிற்கும் சண்டை வரும் சமயத்தில் மூன்றாவது பற்றி பேசுவேன்’’ என்றார் கூலாக.

மண்டபத்தில் வலிமா எனப்படும் விருந்து மட்டுமே நடைபெருகிறது. திருமண ரிஜிஸ்டெர் பகலில் ஏதாவது ஒரு பள்ளிவாசலிலோ அல்லது அதற்கான கவர்மெண்ட் ஆபிஸிலோ சிம்பிளான கையெழுத்துடன் முடிந்துவிடுகிறது. இது அன்வரின் எத்தனையாவது மனைவியின், எத்தனையாவது மகள் திருமணம் என்று தெரியவில்லை, மேலும் எத்தனையாவதாக கட்டிக்கொடுத்தார் என்றும் தெரியவில்லை. வயிற்றில் இடம் இல்லாத போதும், அன்வரின் அன்புக்காக இறைச்சி மட்டும் இரண்டு கிலோ தின்று நடக்க முடியாமல் நடந்து ரூம் வந்து சேர்ந்தேன்.


------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.