இஸ்லாமிய சொற்பொழிவுகளை
பார்ப்பதற்கோ அல்லது கேட்பதற்கோ அதிக ஆர்வம் ஏற்படுவதில்லை. ‘’சொற்பொழிவு’’ என்ற
பெயரில் அத்தனையும் இரைச்சல். அவர்களின் அகராதியில் அது உணர்ச்சிவசப்பட்டு
பேசுதலாம். வெள்ளிக்கிழமை தொழுகையில்கூட இமாம்களின் உரை அதே பாணியில் இருப்பதால்,
குழந்தைகளைக்கூட வீட்டில் விட்டுச்செல்லும் நிலை. சுறா படத்தில் வெண்ணிற ஆடை
மூர்த்தி ஹைபிச்சில் பாடும்போது வடிவேலுவின் ரியாக்சன் போலவே என்னுடய ரியாக்சனும்
இருக்கும்.
எப்போதும் போல
எதார்த்தமாக பேசுவதில் அவர்களுக்கு அப்படியென்ன கஷ்டம்மென்றே தெரியவில்லை, மைக்
முன்பாக சென்றுவிட்டால் பாக்கிஸ்தான் தீவிரவாதியிடம் விஜயகாந்த் பேசுவது போல ஒரே காட்டுக்கத்தல்.
இதற்கு இடையில் மைக்கிலிருந்து ‘’குய்ய்ய்ய்.......’’ன்னு சவுண்ட் வேற. வீட்டிற்கு
வந்தபின்பும் அந்த குய்ய்ய்ய்ங்க் சவுண்ட் நிற்பதில்லை. நான் உங்களை விஜயகாந்த் மாதிரி
பேசவேண்டாம் என்று சொல்லவில்லை, ஏன் வல்லரசு விஜயகாந்த் மாதிரி பேசுறீங்க?
வானத்தைப் போல பெரிய விஜயகாந்த் மாதிரி அமைதியா பேசுங்கன்னுதான் கேட்கிறேன்.
இதைப் பற்றி, வீட்டுக் கக்கூஸில்
தண்ணீர் வரவில்லையென்றால்க் கூட, காவல்துறை கமிஷனர் ஆபிஸ் முற்றுகை போராட்டம் நடத்தும்
ஒரு இயக்கத்தைச் சார்ந்த ஒருவனிடம் ‘’ஏன் பாய், இப்படி கத்தி பேசுறீங்க? கொஞ்சம்
மெதுவா பேசுனா நீங்க சொல்லவரும் கருத்தும் விளங்கும், காதுக்கும் கொஞ்சம் நல்லா
இருக்குமே’’ என்று கேட்டேன். அவனோ ‘’நபி அவர்கள் மக்களிடம் உரை நிகழ்த்தும் போது
இப்படித்தான் சத்தமாகத்தான் உரை நிகழ்த்துவார், இது நபி வழி’’ என்று அறிவாளியாய்
பதில் சொன்னான். அவனுக்கு கத்தி பேசுறதுக்கும் சப்தமா பேசுறதுக்குமான வித்தியாசமே
விளங்கவில்லை. நபி காலத்தில் மைக், ஸ்பீக்கர் போன்ற சாதனங்கள் இல்லை, அதனால் அவர்
ஒரு குன்றின் மீது ஏறி, தன்னுடய உரையை சப்தமாகத்தான் மக்களிடம் சொல்லியாகவேண்டும்.
இந்த குறைந்தபட்ச அறிவுகூட அந்த கொள்கை குன்றுக்கு இல்லை.
மேலும் ஏதாவது சொன்னாலோ
அல்லது கேட்டாலோ, ‘’பாய், ‘பூ’வ ‘பூ’வுன்னும் சொல்லலாம், ‘புய்ப்பம்’ன்னும் சொல்லலாம்,
நீங்க சொல்லுறமாதிரியும் சொல்லலாம்’’ என்றே பதில் வருகின்றது. டாக்டர் ஹபிபுல்லா
அவர்களின் ‘’மானுட வசந்தம்’ நிகழ்ச்சி பார்த்தாவது இவர்கள் திருந்தவேண்டும்.
பி.ஜெய்னுலாபிதின் செயல்பாடுகளின் எனக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லாவிட்டாலும் அவரின்
எதார்த்தமான பேச்சு எனக்கு பிடிக்கும். பி.ஜெ தவிர்த்து அவரின் விழுதுகள் அனைவருமே
வெண்ணிடை ஆடை மூர்த்திகள்தான்.
கொஞ்ச காலத்துக்கு
முன்னாடி பேஸ்புக்கில், கிட்டத்தட்ட எல்லா பாய்களும் ஷேர் பண்ணிய வீடியோ ஒன்றில்
ஒரு இமாம் எதையோ கூறிக்கொண்டு அழுதுகொண்டிருந்தார். அந்த இமாம் ஒரு இளைஞர், சுமார்
30 வயதுதான் இருக்கும். தற்போது இவருக்குத்தான் கொஞ்சம் மார்க்கெட் அதிகம்போல,
அதிகமாக இவருடய உரைகள்தான் பேஸ்புக்கில் ஷேர் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
இவருடய பயான்கள் (உரைகள்) அனைத்தும் ‘’மெட்டி ஒலி’’ ரேஞ்சில் கண்ணீரும், கம்பளையுமாகவே
இருக்கும்.
அந்த வீடியோவை பேஸ்புக்கில்
முதலில் காணும் போது, அவருக்குத்தான் ஏதோ கஷ்டம்போல என்று எண்ணினேன். ஆனால், விஷயம்
என்னவென்றால், விஜய் டி.வி ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியில்
கலந்துகொண்ட ஒரு முஸ்லிம் பெண் தனக்கு நடிகர் சூர்யாவைப் பிடிக்கும் என்றும், தன்
தங்கைக்கு சிவகார்த்திகேயனை பிடிக்கும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் அந்த
தங்கை, தனக்கு சிவகார்த்திகேயனை ரொம்ம்ம்ம்ம்ப பிடிக்கும், அவர்மாதிரித்தான்
மாப்பிள்ளை வேண்டும் என்று தன் அம்மாவிடம் கூறிவிட்டதாகவும் கூறுகிறார். இவ்வளவுதான்
மேட்டர். புறாவுக்கு போரா? பெரும் அக்கப்போராக அல்லவா உள்ளது என்பதைப்போல இதுக்கு
ஒரு பஞ்ஜாயத்து.
‘’நம் இஸ்லாமிய சமூகம்
எங்கே செல்கிறது?, பெண்கள் சீரழிந்துவிட்டார்கள், பெண்களுக்கு மார்க்கத்தின் மீது
நம்பிக்கை குறைந்துவிட்டது, கண்ணியத்திற்க்கு கூட ஸ்பெல்லிங்க் தெரியவில்லை, நம்
சமூகம் எங்கே செல்கிறது, நம் சமூகத்துப் பெண்கள் எதை நோக்கிச்
செல்கிறார்கள்......’’ என கையை நீட்டி நீட்டி பேசிக்கொண்டிருந்தார். அவர் கை
நீட்டிய திசையில் நானும் ‘எங்கே செல்கிறது? எதை நோக்கி செல்கிறது?’ என்று எட்டிப் பார்த்தேன் ஒன்றும்
காணக்கிடைக்கவில்லை.
குரான், ஆண்களையும்
பெண்களையும் சமமாகவே கருதுகின்றது, ஆனால் இந்த இமாம்களோ, அறிவுரைகளை பெண்களுக்கு
மட்டுமே கூறுகின்றார்கள். கண்ணியம் என்பது பெண்களுக்கு மட்டும்தானா? ஆண்களுக்கு,
குரானில் கூறும் கண்ணியம் பற்றி ஏன் இந்த
இமாம்கள் அதிகம் பேசுவதில்லை. ஆடைக்கட்டுப்பாடு, விபச்சாரம் என எல்லா விதிகளும்
ஆண்களுக்கும் உண்டு. திருமணத்தில் ஆண்களுக்கு இருக்கும் உரிமை, பெண்களுக்கும்
இருக்கின்றது. பெண்கள், அவர்களுக்கு பொருத்தமான ஆணை / விரும்பும் ஆணை
மணக்கவேண்டும் என்றே இஸ்லாம் கூறுகின்றது.
தனக்கு விருப்பமில்லாத
ஒருவரை தன்னுடய தந்தை திருமணம் செய்துவைத்துவிட்டார் என்று நபிகளிடம் முறையிட்ட
பெண்ணின் திருமண ஒப்பந்தத்தை ரத்துசெய்யக் கூறிய ஹதீஸ் (வரலாறு) தெரியாதா?. ‘கணவர்களுக்கு
பெண்கள் மீது உரிமை இருப்பது போல பெண்களுக்கு அவர்களின் மீதும் உரிமை உண்டு (குரான்
2:228)’ என்பதை படிக்கவில்லையா?. திரும்ப, திரும்ப பெண்களின் ஒழுக்கம், கற்பு,
கண்ணியம் பற்றிமட்டும் பேசுவதாலேயே
இஸ்லாம் பெண்களுக்கு எதிரானது என்ற தோற்றம் உண்டாகிறது.
அந்த பெண் நடிகர்
சூர்யாவோ, சிவகார்த்திகேயனோ தனக்கு கணவனாக வரவேண்டும் என்று கூறவில்லை, சூர்யா
மாதிரி ஹேண்ட்சம்மாக, சி.கார்த்திகேயன் மாதிரி ஹீயுமரான, யாஸிர் மாதிரி ஸ்மார்ட்டான
(ஒரு விளம்பரம்....) ஒரு கணவன் வேண்டும் என்றுதான் கேட்கிறாள். இதில் எந்த
இடத்தில் அவள் இஸ்லாத்திற்கு மாறாக நடந்துகொண்டாள் என்பது புரியவில்லை. அந்த பெண்களுக்கு எதிராக, அந்த இமாமின்
சொற்பொழிவு வீடியோவை பேஸ்புக்கில் ஷேர் செய்த அத்தனை ஆண்களும் ‘அனுஷ்கா, ஹன்சிகா,
நயந்தாரா.....’ மாதிரி பெண்தான் வேண்டும்
என்று வீட்டில் மல்லுக்கு நின்றவர்கள்தான்.
சுருட்ட முடி, அடர்ந்த
கண் இமை, சராசரி அளவை விட கொஞ்சம் பெரிய கண் (பூனைக் கண் என்றால் கூடுதல் நலம்).
எடுப்பான மூக்கு, வட்டமான முகம், என்னை விட இரண்டு இஞ்ச் கம்மியான உயரம் என்று
பெண்பார்க்கும் போது என்னுடய எதிர்பார்ப்பைச் சொன்னேன். அப்படி எல்லா தகுதியுமுள்ள
பெண்கள் அனைவரும் ‘எடுத்து முடியுற அளவுக்கு முடி இல்லையென்றாலும் ஏத்தி சீவுற
அளவுக்காவது மாப்பிள்ளைக்கு முடி இருக்கனும்’ என்று சொல்லி
அசிங்கப்படுத்தியபோதுதான் தக்காளிச் சட்டினிக்கும், ரத்தத்திற்க்குமான வித்தியாசமே
எனக்கு புரிந்தது.
--------------------------------------------------------------------------------------------------யாஸிர்
அசனப்பா.