மஞ்சள், பச்சை, ஊதா, பிங்க்.......
என கலர் கலரா அந்த கோழிக் குஞ்சுகளைக் காணும் போதே மனசுக்கு, புது ரெண்டாயிரம் நோட்டுக்கு
சில்லரை கிடைத்த மாதிரியான சந்தோசம் ஏற்படும்.
ஒரு காலத்தில் அதுதான் எங்க உலகம். கரடி பொம்மை எல்லாம் எப்படி மெஷினில்
தயாராகிறதோ அதே போலத்தான், கரண்டின் மூலமாக ‘’கரண்ட் குஞ்சு’’ உருவாகிறது என்று
எண்ணிக்கொண்டிருந்தோம். ‘’பச்ச சுட்சை போட்டால் பச்ச குஞ்சு வரும்’’, ‘’மஞ்ச சுட்ச
போட்டால் மஞ்சள் குஞ்சு வரும்’’ என அரையடி அப்துல் கலாம்கள் கூறுவதை ‘’ஆ’’ ன்னு
வாய் திறந்து கேட்டு நம்பிக்கொண்டிருந்தோம்.
டபுள் மீனிங் என்றால் ‘’எந்த
ஊர்?’’ என்று எதிர் கேள்வி கேட்ட அந்த பால்யத்தில் ‘’என்னோட குஞ்சு வளந்திருச்சு”,
‘’உன்னோடது சின்ன குஞ்சு’’ ‘’அவன் குஞ்சு வெள்ளையா இருக்கும்’’ என பொது இடத்தில்
பேசி பெரியவர்களிடம் மரண அடிவாங்கி இருக்கிறோம். ‘’எதுக்கு அடிக்கிறாரு?’’, ‘’அவர்
குஞ்சு செத்துப்போயிருக்கும் அந்த கோவத்துல நம்மள அடிக்கிறாரு’’ என்று எங்களுக்கு
நாங்களே சமாதானம் சொல்லிக் கொள்வோம். பின்பாக, அடிக்கான உண்மையான காரணம் தெரிந்து
அதிகம் கோவம் வந்தது. ‘’வராதா பின்ன...., நேத்திக்கு வரைக்கும் அந்த மர்ம தேசத்தை
‘’சக்கரை’’ என்ற பெயரில் அழைத்துவிட்டு, திடீரென 500, 1000 செல்லாது இனி 2000
தான்னு சொன்னா நாங்க என்ன தொக்கா?’’. என கோபத்தில் கத்தியபோது, சில நல்லுள்ளங்கள்
எல்லை ராணுவ வீரர்களின் கதைகளைச் சொல்லி சமாதானம் செய்தனர்.
குஞ்சு என்பது கெட்ட
வார்த்தையாகிவிட்டதால், இனி கோழிக் குஞ்சை, கோழிக் குட்டி என்றா சொல்லமுடியும்?.
விவாதத்துக்கு சரி என்றாலும் ‘’கலர் கலரான
குட்டிகள்’’ என்று சொல்லும் போது, அது ‘’அண்டர் ஈவ்டீசிங் ஆக்ட் 420’’ பிரிவில்
வரும். (என்னடா தமிழுக்கு வந்த சோதனை).
காலையில் குரான் கிளாஸுக்கு
போய்விட்டு திரும்பும் போது, பள்ளிவாசலுக்கு பக்கத்தில் அந்த டீ கடை எதிரில்
தான், கலர் கலரான குஞ்சிகள் விற்கப்படும்.
ஒவ்வொரு சல்லடைப் பெட்டியிலும் ஒவ்வொரு கலர் குஞ்சிகள் இருக்கும், இப்படியாக 4
அல்லது 5 அடுக்கு பெட்டிகளை டி.வி எஸ் 50 ல் கொண்டுவந்து பெரிய வட்டமாக அட்டையை
தடுப்பாக வைத்து, அந்த குஞ்சிகளை சல்லடைப் பெட்டியில் இருந்து திறந்துவிடும் போது
மெல்லிய ‘’கீச் கீச்’’ சப்தத்தோடு, அந்த சின்ன கால்கொண்டு குதித்து குதித்து வெளியில்
ஓடி வரும் அழகே அழகு. எத்தனை கலர் இருந்தாலும், எனக்கு என்னவோ பிங்க் கலர்
குஞ்சுகள் கூடுதல் அழகாகத் தோன்றும்.
ஒரு குஞ்சின் விலை 3 ரூபாய். பெரும்பாலும்
யாரும் அப்படி 3 ரூபாய் கொடுத்து வாங்குவதில்லை. எல்லோருக்குமே, குலுக்கல்
முறையில் வாங்குவதற்குத்தான் அவ்வளவு இஷ்டம். ஒரு டோக்கனுக்கு 50 காசு,
குலுக்கலில் நம்பர் வருபவனுக்கு ரெண்டு கோழி குஞ்சு கிடைக்கும். ஆறு முறை
தோற்பதற்குப் பதில், 3 ரூபாய் கொடுத்து ஒரு குஞ்சு வாங்க யாருக்கும் மனசு வராது.
பத்து ரூபாய் போனாலும் குலுக்கலில் ஜெயிச்சு குஞ்சு வாங்குறதுதான் திரில்லே. அந்த
இன்பம் அலாதியானது.
என்னோட முதல் குஞ்சுகள் அப்படி
கிடைத்தவைதான். ரெண்டுமே பிங்க் கலரில் கொடுக்க மறுத்ததால், ஒரு பிங்க், ஒரு பச்சை
என வாங்கிக்கொண்டேன். ‘’அந்த சின்ன வாயில் எப்படி முழு அரிசி போகும்?’’ என யோசித்து,
அரிசியை ரெண்டாக உடைத்த சம்பவங்களும் உண்டு. இந்த விஞ்ஞானத்தை வீட்டில் செய்தால்
வூடு கட்டிவிடுவார்கள் என்பதால் பள்ளியில் வைத்து செய்ய, பள்ளிக்கூடம் போகும் போதே
கொஞ்சம் அரிசியை அள்ளிக்கொண்டு போவேன். இப்படி உடைக்கும் போது, லைட்டா பசி
எடுக்கும் ஆகையால், வீடு திரும்பும்போது, அரிசியில் பாதிதான் இருக்கும்.
இந்த குஞ்சியோட ஸ்பெஸாலிட்டியே
அஞ்சு நாளைக்கு மேல் உயிரோட இருக்காது. அதற்கு மேல் இருந்தால் பெரிய்ய ஆச்சர்யம்/திறமை/யோகம்.....தான்.
என்னோட முதல் குஞ்சில் ஒரு குஞ்சு, வாங்கி வந்த ரெண்டாவது நாளே இறந்துவிட்டது.
பச்சை கலர் குஞ்சி என்பதால் பெரிய துக்கம் ஏற்படவில்லை. ஒருவேளை, பிங்க்
செத்திருந்தால் பச்சையை நானே கொன்டிருப்பேன். அம்புட்டு பாசம் ‘’பிங்கி’’ மேல்.
ஆம் அது தான் அவள் பெயர். பச்சைக்கு என்ன
பெயர் வைத்தேன் என்று ஞாபகம் இல்லை. ஒரு வேளை பெயர் வைப்பதற்கு முன்போ போய்
சேர்ந்திருக்கலாம்.
பச்சை குஞ்சு செத்தபின்னாடி,
எல்லோரும் பிங்கியும் செத்துவிடுவாள் என்றார்கள். அதற்கு காரணம், கலர் குஞ்சுகள்
ஜோடியாகவோ அல்லது கூட்டமாகவோ இருந்தால்தான் உயிரோட இருக்குமாம். தனியாக இருந்தால்
உடனே செத்துவிடும் என்பார்கள். அதனால்தான் இந்த கோழிக்குஞ்சுகளை வாங்கும்போது
இரண்டாகவோ, மூன்றாகவோ வாங்குவார்கள்.
பூனை, காக்கா, அக்கா...... என
எல்லோரிடமிருந்தும் என் பிங்கியை காப்பாற்ற படாத பாடு படவேண்டும். இந்த
குஞ்சிகளுக்கு அதிகமா குளிரும் ஆகாது, அதிக வெயிலும் ஆகாது. நாம குஞ்சி வாங்குன
சமயத்துலதான் வராத ‘’வர்தா’’ புயல் எல்லாம் வரும், ‘’அக்னி நட்சத்திரம்’’ ரி
ரிலீஸ்ஸாகி ஓடும். என் கூட்டத்தில் எல்லோரிடமும் இந்த கலர் குஞ்சிகள் இருக்கும்.
டெய்லி ஒவ்வொருத்தன் வீட்டிலும் ஒரு இரங்கல் கூட்டம் நடக்கும்.
கொஞ்ச நாட்களுக்கு அப்புறம்,
வீட்டிற்குள் எங்கு போனாலும் என் பின்னாடியே வரும். பூனையிடமிருந்து தப்பித்து
அந்த சின்ன காலால் குதித்து குதித்து உசுருக்கு பயந்து ஓடி வந்தது, கோபத்தில் பூனையை அடிக்க கிளம்பி குப்புற
விழுந்தது, நண்பனோட குஞ்சை காக்கா தூக்கிச் சென்றபோது, பத்து தெருவரை காக்காவை
துரத்திச் சென்றது என எல்லாமே கண்முன் நிற்கிறது.
இதுதான் பிராய்லர் கோழி என்று தெரிந்திருக்கவில்லை. இது தனி இனம், வளர்ந்த
பின்னாடியும் பிங்க் கலராகவே இருக்கும் என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன். பிங்கி கொஞ்சம் வளர்ந்த பின்பு,
சாயம் வெளுக்க ஆரம்பித்தது. அதற்கு பின்பாகத்தான் இது வளர்ந்த பின்பு பிராய்லர்
கோழியாக வரும் என்ற உண்மை தெரிந்தது. சாயம் போகப் போக பிங்கியும் வளர்ந்தாள், சாயம்
மொத்தமாக போன பின்னாடி ‘’பிங்கி’’ என்று அழைக்கமுடியாது, ஆகையால் ‘’வெள்ளச்சி’’
என்ற பெயரும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
பிங்கி வளர்ந்து பெரியவளா ஆனபின்பு
பிராய்லர் கோழியாகத்தான் வருவாள் என்று தெரிந்த பின்பு, மூளையில் பிஸினஸ் ஹார்மோன்
அதிகமாக சுரக்க ஆரம்பித்தது. அப்போது பிராய்லர் கோழியின் விலை கிலோ 50 ரூபாய்.
இன்னும் ஐந்து மாதம் பிங்கியை வளர்த்தால் எப்படியும் ஒரு கிலோ தேரிவிடுவாள்,
அப்படியென்றால், ஐந்து மாதத்தில் லாபம் 47
ரூபாய். இதையே பத்து பிங்கி வாங்கினால் பிங்கி பிங்கி பாங்கி...............என்று
லாபக் கணக்கை கைகொண்டு எண்ணி ‘’சொக்கா’’ ‘’சொக்கா’’ என சந்தோசம் அடைந்தேன். கனவில்
பெரிய காரில் வந்து இறங்குவது போலவும், கதவை திறக்க ரெண்டு பாடிசோடாக்கள்,
குளிர்சாதன அறையில் என் பெரிய சேருக்கு பின்னால் பெரிய சைஸ் பிங்கியின்
போட்டோ....................என கனவு கன்னா பின்னாவென்று கரைபுரண்டு ஓடியது.
ஒரு முறை, கதவு பக்கத்தில்
விளையாடிக் கொண்டிருக்கையில் பிங்கியின் ஒரு கால் நஞ்சிவிட்டது. களத்தூர் கண்ணம்மா
கமல் மாதிரி தத்தித் தாவி நடந்த பிங்கியை 16 வயதினிலே சப்பாணி கமல் மாதிரி விஸ்கி
விஸ்கி நடப்பதைப் பார்த்து கண்ணில் ஜலம் வச்சுட்டேன்.
எனக்கு ஒரு முறை காய்ச்சல் வந்த
சமயம், பக்கத்து வீட்டு தாய் கிழவி அம்மாவிடம், ‘’தைலத்தை நல்லா ஆவி பறக்க தேச்சுவிட்டு,
கணத்த போர்வையால நல்லா வேக்கும் வரை மூடி தூங்க வையு, மறுநாள் பேய்க்
காய்ச்சனாலும் பின்பக்கமா ஒடிரும்’’ ன்னு சொல்லிச்சு, அதேமாதிரி காலையில்
காய்ச்சலும் காணாமல் போச்சு. அதே முறையில் ‘’குணப்படுத்துறேன் பார்’’ என்று
இருக்குற ‘கோடரி தைலம்’, ‘மீசைக்கார தைலம்’, ‘டைகர் பாம்’ என எல்லாத்தையும்
எடுத்து பிங்கிக்கு தேய்த்துவிட்டேன். போர்வையால் பிங்கியை மூட முடியுமா? அதனால்
ஒரு சின்ன பானையை வைத்து மூடினேன். ‘காற்று போகாமல் இருந்தால் தானே வேர்வை வரும்’
என்பதை யோசித்து பானைக்கு மேல் ஒரு 2 கிலோ எடைப் படியையும் வைத்துவிட்டு
தூங்கினேன்.
மறுநாள் காலை, பிங்கி மர்கயா.
ப்பிங்கிய்.................ன்னு
நான் கத்தும்போது கனவில் என் சீட்டிக்குப் பின்னால் இருந்த பிங்கியின் போட்டோ
சைடாக தொங்கியது, பாடி சோடாக்கள் திறந்த கதவு மூடியது, வந்த கார் பின்னாடி நோக்கிச்
சென்றது. ஸோ சாட். பிங்கியை எங்கள் வீட்டு தொழுவத்தில் புதைக்கும் போது, கோழி
வியாபாரத்தில் கோடிஸ்வரனாகும் ஒருவனின் கனவும் சேர்ந்து புதைந்து போனது. KFC கடைகளைப் பார்க்கும் போதெல்லாம் ‘’பிங்கி
மட்டும் இருந்திருந்தா இவனுங்க எல்லாம் இந்தியாவுக்குள்ள காலெடி எடுத்து வச்சிருக்க
முடியுமா?’’ என்ற எண்ணம் வரும்.
ம்ம்ம்.........
இப்பவும் எங்காவது கரண்ட்/கலர்
குஞ்சுகளைப் பார்க்கும் போதெல்லாம் பிங்கி ஞாபகமாகம் வரும். அதை தூக்கி தலையில்
வைத்துக்கொள்வேன். அந்த பிஞ்சு கால் நகங்கள், வரண்ட என் தலையை வருடும்போது, இருண்ட
இந்த உலகின் இனிமையான நினைவுகளை கிளரிக் கொடுக்கும்.
--------------------------------------------------------யாஸிர்
அசனப்பா.