வியாழன், பிப்ரவரி 20, 2014

பிரியாணி கடை.

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
இதப் பற்றித்தான் பதிவு எழுதனும்னு முடிவு பண்ணி, எழுத ஆரம்பிச்சு, எழுதி முடித்தபின்னாடி படிச்சிப்பார்த்தா, வேறு ஒரு பதிவாக இருக்கும். மேல இருக்குற தலைப்பை வைத்துத்தான் முன் இரண்டு பதிவுகளையும் எழுத ஆரம்பித்தேன், படிக்கிறவனுங்களும் நம்மளமாதிரி பெரிய்ய விஞ்ஞானிகளாகத்தான் இருப்பார்கள் என்று எண்ணி (இல்ல முடிவே பண்ணி) எளிதாக புரிந்துகொள்ள ஒரு சில உதரணங்களையும் சம்பவங்களையும் எழுதும் போது, அதுவே ஒரு தனி பதிவாக போடவேண்டிய கட்டாயமாகிவிடுகிறது.

காலேஜ் படிக்கும் போது, சனிக்கிழமை மட்டும் ‘ஃப்பிரி நைட்’, அதாவது எங்க வேண்டுமானாலும் மேய்ந்துவிட்டு இரவு 12.00 மணிக்குள் ஹாஸ்டலுக்கு வந்து விடவேண்டும். மற்ற நாட்களில், இரவு 8.00 மணிக்குள் ஹாஸ்டலில் இருக்கவேண்டும். சனிக்கிழமை இரவு ஹாஸ்டலில் போடும் தக்காளி சாதத்துக்கு பயந்தே, பலபேர் ‘பகவதி’ படத்துக்கு பல வாரம் போயிருக்கிறோம். எவ்வளவு மோசமா இருக்கும் அந்த தக்காளி சாதம் என்பது பகவதி படம் பார்த்தவனுங்களுக்கு நல்லா புரிஞ்சியிருக்கும். அந்தமாதிரியான கஷ்ட காலத்தில்தான், ஒரு பாய் பிரியாணி கடையின் அறிமுகம் கிடைத்தது.

விருதுநகர் பழைய பஸ்டாண்ட் (அப்போ, அதுதான் புது பஸ்டாண்ட்) காம்பவுண்ட் சுவரை ஒட்டிய கடை அது. ராஜஸ்தான் மார்பிள் தரை, குளு, குளு ஏ.சி, சாப்பிடும் டேபிள் கிரானைடில் நம்ம முகமே தெரியும், அதுக்கு போடப்பட்ட சேரில் உட்கார்ந்தால் ஒரு அடி கீழே போகுற அளவிலான குஷன் இருக்கும். பரிமார வைக்கப்படும் தட்டு ஒவ்வொன்றும் முழங்கை அளவு விட்டமுடயது, ரம்மியமான அலங்கார விளக்குகள், பின்புறம் இளையராஜாவின் மெலோடி பாடல்களின் இசை........ என அசிங்கமாக இல்லாமல், அழகான கையேந்திபவன் அது.

சுத்தம், சுகாதாரம் என்றால் அங்க வந்துதான் கத்துக்கனும், “பாய் ஒரு பிளேட் 65” ன்னு சொன்னவுடனே, வேட்டியதூக்கிகிட்டு அரிப்பெடுத்த தொடைப்பகுதியை சொறிஞ்சிக்கிட்டே, சிக்கன் 65யை தராசில் எடைப்போடும் காட்சி இருக்கே, அட, அட, அட பம்பாய் படத்துல மனிஷா கொய்ராலா ஓடிவரும் காட்சியை விட படு கவர்ச்சியா இருக்கும். ஹாஸ்டல் சாப்பாட்டை திண்ணு திரிஞ்சபயலுகளுக்கு அப்ப எது கிடச்சாலும் தேவாமிர்தம்தான். அந்த நேரத்துல (சுத்தம் + சுகாதாரம்) ங்குற பார்முலா எல்லாம் எடுபடாது. அப்போ எங்களுக்கு இருந்த ஒரு பிரச்சனை என்னவென்றால், உட்கார்ந்து சாப்பிடும் இடம்தான். பாய் கடையில பிளாஸ்டிக் சேர் மட்டும்தான் இருக்கும், அந்த சேரில் உட்கார்ந்தால் பாதி “கு” வெளியிலதான் இருக்கும். ஒரு பிளேட் வெறும் பிரியாணி வாங்கி சாப்பிடுறவனுக்கு பரவாயில்லை, ‘கு....’ ய சேர்ல வச்சி, பிரியானிய கையில வச்சி திண்ணிட்டு போயிரலாம். ராஜ்கிரண் ஸ்டைல்ல சாப்பிடுற நமக்கு அது எல்லாம் ஒத்துவராது.

ஹாஸ்டல்ல டைனிங்க் டேபிலில் சாப்பிட்ட எங்களுக்கு, கொஞ்சம் சங்கூச்சமா இருந்தது. பிரியாணியை கையில வைத்திருந்தால், சிக்கன் 65 யை எங்க வைப்பது?, பக்கத்துல இருக்குறவனிடம் கொடுத்தால் திருப்பி கொடுப்பான், ஆனா தட்டுமட்டும்தான் இருக்கும், சிக்கன் 65?. இந்தமாதிரி பல கேள்விகுறிகளுக்கு பதிலாக தியேட்டர்கள் கிடைத்தன. அப்பவெல்லாம், விஜய், அஜித் போட்டி போட்டுக்கொண்டு மாசத்துக்கு ஒரு படம் விட்டுக்கொண்டிருந்தார்கள். முதல்வாரம் மட்டும் பயங்கர கூட்டமாக இருக்கும், இரண்டாவது வாரம் எங்களமாதிரியான ஆட்களுக்கு பிரியாணி திங்குறதுக்குத்தான். ‘அஜித். விஜய் படங்கள் ரிலீஸ் ஆன முதல்வாரத்துக்கு எங்க போவீங்க?’ ன்னு ஒரு டவுட் வரும், வரணும். அந்த ரெண்டு பேரும் மாசத்துக்கு ஒரு படம் விட்டா, இராம. நாராயணன் வாரத்துக்கு ஒரு படம் விட்டுக்கொண்டிருந்தார், ஸோ, முதல் வாரம் அங்க ஈ அடிக்க ஆள் இருக்காது, அதுனால அந்த தியேட்டரில்தான் விருந்து.

ஒரு சமயம், பதிவா போகுற எல்லா தியேட்டர்களிலும் கூட்டம், தேடி திரிஞ்சு ஒரு அதிக கூட்டமில்லாத தியேட்டருக்கு போயாச்சு, அவசரத்துல போஸ்டர பாக்காம டிக்கெட் எடுத்து உள்ளேயும் போயாச்சு. படம் போட ஆரம்பிக்கவும், நாங்க பார்ஸலை ஓப்பன் பண்ணவும் கரெக்ட் டைமிங். ஒரு வாய் சோற்றோடு நிமிர்ந்து பார்த்தா, படம் பார்க்க வந்தவங்க ஸ்கிரீனை விட்டு விட்டு எல்லோரும் எங்களையே பார்த்தாங்க, எங்களுக்கு முதலில் ஒன்னுமே விளங்கவில்லை. அப்புறமா என்னடான்னு பார்த்தா தியேட்டர்ல சாமி படம், சாமி படம் என்றால் ஷகீலா நடித்த சாமிபடம் இல்லை, இது உண்மையான சாமி படம், ஏதோ அம்மன் படம், கூட்டம் குறச்சலாக இருந்தாலும் எல்லோரும் குடும்பத்தோட விரதமிருந்து படம் பார்க்க வந்திருப்பானுங்க போல, பிரியாணி வாசனையை நுகர்ந்ததும், கண்ணு சிவக்க பார்க்க, தியேட்டரில் அம்மன் ஈட்டியோட குளோசப்ல காட்டுனது எல்லாம் ஒன்னாவந்து மிரட்ட ஆரம்பிச்சதனால, அங்க இருந்து எஸ்கேப். அதுல ஒருத்தன் வாயில பிரியாணிய வச்சிக்கிட்டே “நாம வேணும்னா, வெஜ்டபிள் பிரியானின்னு சொல்லுவோமா?” ன்னு சொன்னத எல்லாம் மறக்கவே முடியாது.

நவ் பேக் டு பாய் கடை

அந்த பாய்யிடம் 3 பெரிய அண்டா இருக்கும், அதுக்கப்புறம் இரண்டு சிரிய அண்டா இருக்கும். பெரிய அண்டா பிரியாணிக்கு, சின்ன அண்டா ஒன்று சிக்கன் 65, இன்னொன்னு மட்டன். ‘அஸர்’ எனப்படும் 4.00 மணி தொழுகைக்கு அப்புறமாக கடை போட்டு, பத்து மணிக்குள் அனைத்தையும் விற்று காலி செய்துவிடுவாராம். பாய் ரொம்ப பேசவே மாட்டார். ஸலாம் சொன்னால், ‘வ அலைக்கும் ஸலாம்” மட்டும் சொல்ல வாய் திறப்பார். என்ன வேணும், எவ்வளவு வேணும் என்பதைக்கூட நாமதான் சொல்லனும். பாய் பீஸ் அதிகமா வையுங்க என்று சொன்னாலும், பீஸ் அதிகமா வேண்டாம் என்று சொன்னாலும் பாய் ரியாக்சன் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும்.

ஸலாமுக்கு திரும்ப ஸலாம் சொல்வதனால், பாய் என்னமோ எங்கிட்டமட்டும்தான் பேசுறாரு, அதுவும் அரபில என சுத்தியிருக்கும் கூட்டம் நினைத்துக்கொண்டிருந்த விஷயமே எனக்கு ரொம்ப லேட்டாகத்தான் தெரிந்தது. பாய்யிடம் மூனு வெரைட்டியான பிரியாணி இருக்குது, நான்கு சிக்கன், மூன்று மட்டன், இரண்டு பீப் பிரியணி வாங்கலாம் என, 250 கிராம் சிக்கன் 65, 250 கிராம் மட்டன் பிரைக்கும் சேர்த்து ஆர்டர் கொடுக்கப்பட்டது. தியேட்டரில் போய் பிரித்துப்பார்த்தால் எல்லாம் ஒரே ஐட்டம். அதுக்கப்புறமாகத்தான் தெரிந்தது, பாய் 3 அண்டா பிரியாணி எல்லாமே ப்பீப் பிரியாணி என்று. மூச்சுவாங்கி ஆர்டர் சொல்லும் போது கூட மனுசன் வாய் திறந்து ஒன்னும் சொல்லவே இல்லை.

பாய் பிரியாணியைப் பற்றி, அவர் பீப் கூட போடுவது இல்லை பன்னி கறிதான் போடுகிறார் என்றும், நாய் பிரியாணிதான் போடுகிறார் என்றும் தகவல் பரவ கொஞ்ச நாள், பாய் கடை பக்கம் தலைவச்சி படுக்கவில்லை. அந்த வீராப்பு எல்லாம் வெறும் மூன்று வாரம்தான் அதுக்கப்புறம் எல்லோருக்கும் பாய் கடையை தேட ஆரம்பித்துவிட்டது. ‘பாய் ஒரு முஸ்லீம், கண்டிப்பா பன்னி போடமாட்டார்”, “பாய் நல்லவரும் கூட அதுனால நாய் கறியும் போடமாட்டார்” என நாங்களே முடிவு செய்து மறுபடியும் படையெடுக்கத் துவங்கினோம். காலேஜ் எல்லாம் முடிந்து, விருதுநகரிலேயே கொஞ்ச நாளைக்கு வேலை கிடைத்தது. அந்த நாட்களில் வந்த ரமலான் நோன்பு அதிகாலை சாப்பாட்டை பாய் கடையில் இரவே வாங்கிவைத்துக்கொள்வேன்.

“பாய் ஸகருக்கு (அதிகாலை உணவு) சாப்பிடுவது, கெட்டுப்போவதுல்ல?” என்று கேட்டால்.

வலதுபுறமாகவும், இடதுபுறமாகவும் தலை ஆட்டுவார். (கெட்டுப்போவாதாம்மா)

“சாப்பிடுவதுக்கு நல்லா இருக்குமுல்ல?” என்று மறுபடியும் எதையாவது கேட்டால்

மேலிருந்து, கீழாக தலையை ஆட்டுவார், அதிலிருந்து ‘நல்லாத்தான் இருக்கும்’ என சொல்கிறார் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். பாய்கடை பிரியாணியின் ருசியைப் பற்றி சொல்லவே இல்லையே? என்று நீங்க கேட்டீங்கன்னா, வருசம் ஒன்பது ஆகியும் நாடுவிட்டு நாடுவந்து இந்த பதிவை எழுதும் போதுகூட வாய் ஓரமாக வடிகிற என் எச்ச்சி சொல்லும் அதன் ருசியை.


-----------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

செவ்வாய், பிப்ரவரி 18, 2014

அது ஒரு அழகிய நிலாக்காலம்.

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
எங்க ஊரில், பத்து பதினைந்து வருசத்துக்கு முன்னாடி திருமண விருந்து என்றால், நெய் சோறு, ஆட்டுக்கறி சால்னா, கத்தரிக்காய் குடல் சாம்பார், வெங்காய பச்சடி, என ஐட்டங்கள் இருக்கும். பண்டாரி அதாவது சமயல்காரர் வந்து நிற்பார், நாம அவரிடம் எத்தனை பேர் வருவார்கள் என்ற எண்ணிக்கையை சொன்னவுடன், மல, மல வென மேல சொன்ன ஐட்டங்களுக்கான சாமான்களை மூடையாகவும், கிலோவாகவும் சொல்லுவார். ஆடு பத்து, வெங்காயம் அஞ்சு மூடை, தக்காளி நாலு மூடை...... என பெரிய்ய லிஸ்ட் அது.

வெட்டுவது, நருக்குவது இந்த மாதிரியான வேலைகள் எதையும் அந்த சமையக்காரர் செய்யமாட்டார். அவருடைய வேலை விருந்து அன்னைக்கு வருவது, எடுத்து போடுவது, கிண்டுவது, இரக்கிவைப்பது அவ்வளவுதான். மசலாக்களை அறைப்பது, வெங்காயம் வெட்டுவது, இஞ்சு, பூண்டு நறுக்குவது, தேங்காய் சில் எடுப்பது, அதை மை போல அரைப்பது... என்று பெரிய்ய்ய்ய்ய வேலைகள் எல்லாம் அங்குள்ள பெண்கள் தலையில்தான் வந்து விடியும்.  

திருமணத்திற்கு முந்தய நாள் இரவு 10 மணிக்கு பந்தலுக்கு நடுவே, மேல் சொன்ன காய்கறி சாமான்கள் அனைத்தும் கொட்டி வைக்கப்படும் வெங்காயத்தை சுத்தி பத்து பெண்கள், இஞ்சியைச் சுற்றி பத்து பெண்கள், பூண்டினை சுற்றி பத்து பெண்கள் என அமர்ந்துகொண்டு, ஊர் கதை, உலக கதைகளைப் பேசியபடியே உரிக்கவும், வெட்டவும் ஆரம்பிப்பார்கள். கல்யாண பொண்ணு தவிர்த்து அனைத்து பெண்களும் அந்த இடத்தில் கூடியிருப்பார்கள். அதுவரைக்கும் நாம கண்டிராத பல 
முகங்களை அங்கு காண முடியும்.

“இவன் தான் கடக்குட்டி, பத்தாவது படிக்கிறான்” என அவர்களிடம் நம்மை அறிமுகம் செய்து வைப்பார்கள், உடனே நாமளும் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பதை “நீங்க யாருன்னு எனக்கு தெரியல?” என்ற டோனில் சொல்லனும். உடனே பக்கத்துல இருப்பவர் “இதுதான்டே, வீராநல்லூர் தோனுவி (திவான் பீவி) நன்னியோட (பாட்டி) மூத்த மகள் பரீதா பானு வீட்டுக்காரர், அப்துல்காதர்” என்று சொல்லுவார்கள். இத கேட்டவுடனே “யாரு அந்த திவான் பீவி நன்னி?" ன்னு கேட்க தோணும், அப்படி கேட்டுட்டா, தேங்காய் உரிக்க சொன்னவன, வெங்காயம் உரிக்கச்சொல்லிருவானுங்க. அதுக்கு பயந்தே “ஓ, நல்லாயிருக்கீங்கலா?, நன்னி நல்லா இருக்காங்கலா?” ன்னு ‘உங்களை எனக்கு ரொம்ப நல்லா தெரியும்’ ரேஞ்சில் சொல்லனும். ‘நன்னி 
இறந்து வருசம் மூனு ஆச்சப்பா’ ன்னு சொல்லாத வரைக்கும் எல்லாம் நல்லபடியா போகும்.

டீம் ஒர்க் என்பதை திருமண விருந்துக்கு ஏற்பாடு செய்யுற இந்த இடத்துல கண் கூட பார்க்கலாம். பெண்கள் எல்லோருக்கும் மேல சொன்ன வேலைகள் இருக்கும், ஆண்களில் ஒரு குரூப்புக்கு தேங்காய் வெட்டிக்கொடுப்பது மட்டும்தான், மேலும் பெண்கள் டயர்டாகிவிட்டால், டீ, காபி சப்ளை செய்வது. இந்த குரூப் வேலை நேரம் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 3 அல்லது 4 மணிவரை இருக்கும். ஆண்களில் அடுத்த குரூப் அதிகாலை 3 மணிக்கு எழுந்து, கொஞ்சப்பேர் ஆடு வெட்டும் இடத்திற்கு சென்று கறிக்கடைக்காரன் தண்ணி சேர்க்காமல் இருப்பதையும், எடை போடுவதையும் கண்கானிக்கவேண்டும். இன்னும் கொஞ்சம்பேர் அரைப்பதற்கு எடுத்து வைத்திருக்கும் தேங்காய், கச கச..... போன்ற சாமான்களை எடுத்துகொண்டு போய், அரைத்துக்கொண்டு வரவேண்டும். தேங்காயை சால்னாவுக்கு, மையாகவும், சாம்பாருக்குமாக, சத சதப்பாகவும் அரைக்கவேண்டும. இந்த மாதிரி விசேச விருந்துகளுக்கு அரைத்துக் கொடுப்பதற்கென்றே சில வீடுகளில் பெரிய்ய கிரேண்டர்கள் உண்டு.

ஆண்களுக்காவது அந்த இரவில் கொஞ்சம் ஓய்வு என்பது இருக்கும், பெண்களுக்கு அதுவும் இருக்காது, காய்கறிகளை வெட்டி முடிக்க 3 மணிவரை ஆகும். பின்பு காலை டிபன் இட்லி, சாம்பார், சட்னிக்கு தயார் ஆகவேண்டும். இந்த இட்லியப் பத்தி சொல்லியே ஆகவேண்டும். அத்தினி இட்லியும் அத்தாந்தண்டி  இருக்கும், ஒரு இட்லிய சாப்பிடிவதற்கே ஒரு மணி நேரம் ஆகும், நல்லா இருக்கக்கூடாது என்று நினைத்து செய்வார்களா? இல்லை எப்படி செய்தாலும் நல்லா வராதா? ங்குற டவுட்டு எனக்கு இன்னமும் இருக்கிறது. மதியம் ஒரு கட்டு கட்டவேண்டும் என்ற நோக்கம் வேறு மனசில் இருப்பதால், “பெரியத்தா, வெற்றிலை வாங்கச்சொன்னாங்க” ன்னு சொல்லி எஸ்கேப் ஆகவேண்டிய நிலை உண்டாகும்.

“ஊர் சொல்ல போகுறவங்கள எங்கடா?’’ என்ற சவுண்ட் எப்படா கேக்கும்னு காத்துக்கொண்டிருக்கும் வாண்டுகள் கூட்டம். விருந்துக்கு அழைப்பது என்ற முக்கிய பொறுப்பு அவங்ககிட்டத்தான் கொடுக்கப்படும். மாமா மகன், அத்தை பையன், சித்தப்பா மகன், பெரியப்பா மகன், மற்றும் அவர்களுடய நண்பர்கள் என கும்பலா வந்து நிப்பானுங்க. தெற்குத்தெருவுக்கு ஒரு மூனு பேரு, நடுத்தெருவுக்கு மூனு பேரு, வட்டாரம் சொல்ல மூனு பேரு..........இப்படி தெருவுக்கு, தெரு ஆளை பிரித்துவிட்டபின்பு, சைக்கிள் வாடகைக்கு 5 ரூபா கொடுக்கனும். ஆக்சுவலா, அந்த வாடகை சைக்கிளுக்குத்தான் அவ்வளவு ஆர்வம். ஒருத்தன் ஓட்ட, இன்னொருத்தன் பின்னாடி உக்கார, மற்றொருவன் வண்டியைத்தள்ள இப்படி மாறி மாறி சைக்கிளை ஓட்டி எல்லா வீட்டுகளுக்கும் போய் விருந்துக்கு அழைக்கவேண்டும்.

சாப்பாட்டு அழைப்பு லிஸ்டை கொடுத்த பின்பு எல்லா வாண்டுகளையும் உட்கார வைத்து 10 நிமிட வகுப்பு நடக்கும். லிஸ்டில் ஒரு ஒரு வீடாக வாசித்து ‘இந்த வீடு எங்க இருக்கு, தெரியுமா? மக்கி ஹாஜா கடைக்கு அடுத்த ரெண்டாவது வீடு’, ‘இந்த வீடு, டர்ன்னா சாவுல் வீட்டுக்கு மேல் வீடு..................... என லோகேசகள் சொல்லிக்கொடுக்கப்பட்டாலும், ‘இது நம்ம கூட அஞ்சாவது படிச்ச ஆமினா வீட்டுக்கு எதிர் வீடு, அது மதரஸாவில் நம்ம கூட ஓதுற பாத்திமா வீடு, இது அலிபாத்து வீடு...........” என அவர்களுடய டேட்டா பேஸ்படி ஞாபகத்தில் வைத்துக்கொள்வார்கள். எப்படி அழைப்பது என்பது முதற்கொண்டு சொல்லிக்கொடுக்கப்பட்டு, ‘ம்ம் எல்லோரு சேர்ந்து ஒரு தடவ மொத்தமா சொல்லுங்க பார்ப்போம்?’ என்று சொல்லிகொடுத்தவர் கேட்க “அஸ்ஸலாமு அலைக்கும், வீட்டுல ஆள் இருக்கா?, கத்தரிக்கா சட்டி வீட்டு கல்யாணத்துல சாப்பாடு வச்சிருக்கு, எல்லோரும் கண்டிப்பா வாங்க” ன்னு கோரஸா சொல்லனும்.

விருந்துக்கு, பந்தியில் உட்கார்ந்துவிட்டால் மாப்பிள்ளை அப்பாவோ, ஏன், மாப்பிள்ளையோ பக்கத்தில் இருந்தாலும் யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள். பந்தியில் இருந்தால் ஒரே ஒருவருக்குத்தான் ஏக போக மரியாதை கிடைக்கும், அவர்தான் பண்டாரி (சமையல்காரர்). ஏன் என்றால் கறி வாலி அவரிடம் மட்டும்தான் இருக்கும். சோறு, சாம்பார் வாலியை யாரு வேண்டுமானாலும் எடுக்கலாம், ஆனால் கறி வாலி பண்டாரி கை விட்டு எங்கும் போகாது. அதற்கு காரணம் மற்றவர்களிடம் கொடுத்துவிட்டால், ஆள் பார்த்து கறியை அதிகம் வைத்து விடுவார்கள், பிறகு பின்னாடி சாப்பிட வருபவர்களுக்கு கறி இல்லை என்றால், ‘நீயெல்லாம் என்னடா பண்டாரி, நான் தான் இம்புட்டு பேரு வருவாங்கன்னு உங்கிட்ட சொன்னேன், நீயும் புடிங்கி மாதிரி 10 ஆடு போதுமுன்னு சொன்ன, இப்ப பாரு, கடைசி பந்திக்கு கறி இல்ல” என்ற ஏச்சு பேச்சுக்கு ஆளாகக்கூடாது என்ற எண்ணம் மட்டுமே. மாப்பிள்ளையே மன்றாடினாலும் எக்ஸ்ரா கறி கிடைக்குறது ரொம்ப கஷ்டம்தான். சில சமயத்துல “பொண்ண வேணும்னா விட்டுட்டு போ, கறி எல்லாம் எக்ஸ்ரா கிடையாது” ங்குற டயலாக் எல்லாம் வந்து விழும்.

இவ்வளவு வேலைகளைச் செய்ய ஒரு குடும்பம் போதாது, இதற்காகவே கல்யாணத்திற்கு அழைக்கச் செல்லும் போது, “இரண்டு நாளுக்கு முன்னாடியே வந்திடனும், வந்து எல்லா வேலைகளையும் நீங்க தான் எடுத்துபோட்டு செய்யனும்” என்ற சிறப்பு அழைப்பு வேறு இருக்கும். அப்படி அழைப்பவர்கள் ரத்த சொந்தமாகவோ, நெருங்கிய சொந்தமாகவோ கூட இருக்கமாட்டார்கள், எங்க ஒன்னுவிட்ட சித்தியோட ரெண்டுவிட்ட நாத்தனாரை கெட்டின குடும்பமாக இருக்கும். சொன்னதுமாதிரியே அவங்களும் வந்து, இத செய், அதை செய் என்ற ஒரு வார்த்தயையும் எதிர்பார்க்காம தன் வீட்டு வேலை மாதிரி இழுத்து போட்டு செய்வார்கள்.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, இந்த முறை எல்லாம் மாறிவிட்டது. இப்போது எல்லாம் பிரியாணி மட்டும்தான், இதற்கு பெரிய வேலைப்பாடுகள் எல்லாம் இல்லை என்பதாலும், இதற வேலைகளுக்கு கூட இப்போது சமையல்காரரே அதற்கான ஆட்களையும் கூட்டிகொண்டு வந்துவிடுவதால், அதிகமானவர்கள் தாலி கட்டும் நேரத்துக்கு வந்து, சாப்பாடு சாப்பிட்டுவிட்டு பஸ் ஏறிவிடுகிறார்கள், இதனால் சொந்தங்களின் பரீட்சயம் என்பது ரொம்ப, ரொமப் குறைந்து போய்விட்டது. முன்னாடி, அப்பாவுடைய சின்ன பாட்டனாரின் மகன்களை கல்யாணத்திற்கு சேர்க்கவில்லை என்றாலே அது பெரிய்ய குறையாக இருக்கும், ஆனால் இப்போது கூடப்பிறந்தவர்களை அழைக்காமல் கூட திருமணங்கள் நடைபெறுவது ‘ஜஸ்ட் லைக் தாட்’ டைப்பாகிவிட்டது.

எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதற்கும் அதிகமான சந்தோசம் அப்போது இருந்தது, உண்மையிலேயே அது ஒரு அழகிய நிலாக்காலம், அந்த விசயத்தில் எங்கள் அண்ணன்மார்களும், அக்காமார்களும் ரொம்ப கொடுத்துவைத்தவர்கள்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

செவ்வாய், பிப்ரவரி 11, 2014

ஹாஸ்டல் சாப்பாடு.

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
இன்று இதுதான் நடக்கும் என்று முன்னவே நமக்கு தெரிந்திருந்தால், ஒரு சுவாரஸ்யம் இருக்காது. அதுமாதிரித்தான் எங்க ஹாஸ்டல் சாப்பாடும். உறவுக்காரங்க, நண்பர்கள் யாராவது காலேஜிக்கு வந்து பார்க்கவந்தால், ஹாஸ்டல் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு ‘அடேங்கப்பா,,,, என்ன டேஸ்டுடா, செமய்யா இருக்குதுடா சாப்பாடு, இது தான் நீ ஊருக்கு நாலு மாசத்துக்கு ஒரு தடவ வர்ற காரணமா?, அது சரிதான், இவ்வளவு நல்ல சாப்பாடு கிடச்சா எவனுக்கு சொந்த ஊருக்கு போகனும்னு தோணும்?” ன்னு சொந்தக்காரன் சுதி சுத்தமா சொல்லிக்கிட்டு இருக்கும் போதே பாய்ஞ்சு போயி குரல்வளையை கடிச்சி துப்பனும்னு தோணும்.

ஆனா, உண்மைய சொல்லனும்னா எங்க ஹாஸ்டல் சாப்பாடு ஓரளவுக்கு நல்லாத்தான் இருக்கும், சூப்ப்பரா இருக்கும்னு எவனாவது சொன்னான்னா, அவன் ஒன்னு நாக்கு செத்தவனா இருப்பான், இல்லன்னா சோத்துக்கு செத்தவனா இருப்பான். எங்களோட பிரட்சனை என்னன்னா, திங்கள் கிழமைன்னா, சாம்பார், செவ்வாய் கிழமைன்னா புளிக் குழம்பு, புதன் கிழமைன்னா வெஜ் பிரியாணி, வியாழக்கிழமைன்னா வெரைட்டி ரைஸ், வெள்ளிக்கிழமைன்னா சிக்கன் பிரியாணி, சனிக்கிழமைன்னா மீன் குழம்பு என்ற அட்டவனைதான். “ஆம்மா....இன்னைக்கு வெஜ் பிரியாணிதானே” என்ற சலிப்போடுதான் மெஸ்ஸுக்கே போகுறது. வெஜ் பிரியாணி உண்மையிலேயே நல்லா இருந்தாலும் கூட, அந்த மன்நிலையோட சாப்பிடுவது என்பது முடியாத ஒன்று. பசில கிடந்தா தூக்கம் வராது என்பதற்காக மட்டும், வயிறை நிறப்பிக்கொண்டு கிளாஸுக்கு போவோம்.

இதுமாதிரித்தான் ஒரு தடவ, சாம்பாருக்கு வாங்கும் மூலப்பொருட்களின் விலை கூடிருக்கும் போல, அன்னைக்குன்னு பார்த்து புளிக் குழம்பு வச்சிட்டானுங்க. “ஆம்மா........, இன்னைக்கு சாம்பாருதானே....” ன்னு சளிச்சிக்கிட்டு வந்த பங்காளிகளுக்கு புளிக்குழம்ப பார்த்ததும் பரம சந்தோசம். எப்பவும் வைக்கும் புளி குழம்பை விட அன்னைக்கு டேஸ்ட் ரொம்ப மட்டம்தான், ஆனால் சர்ப்ரைஸ் மெனு என்பதால், ஓப்பனிங்க் பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்புறதுக்கே பல மணி நேரம் ஆகிவிட்டது. இவனுங்க (நானுந்தேன்) சாப்பாடுவதை பார்த்துவிட்டு, கல்லூரி நிர்வாகம், புளிக் குழம்புன்னா பயலுகளுக்கு ரொம்ப இஷ்டம் போலன்னு தப்பா நினச்சிகிட்டு வாரத்துல மூனு நாளு புளிக்குழம்பா போட ஆரம்பிச்சிட்டானுங்க. பின்னாடி புளி விலை கூடிவிட்டதால், மறுபடியும் சாம்பாரே திரும்ப வந்து சேர்ந்திடுச்சு.

என்னதான் இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை சாப்பாட்டை மட்டும் அடிச்சிக்கவே முடியாது. வாரம் பூரா கிளாஸ் ரூமில் தூங்கி, தூங்கி ஏற்படுற டயர்டை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ரூமில் தூங்கி இழைப்பாரிக்கொள்வோம். ஆனால் காலையில சாப்பாட்டுக்கு எந்திருச்சா தூக்கம் கெட்டுருமே என்ற கவலை எங்களுக்கு இல்லை. ஏன் என்றால் காலை டிபன் ஸ்பெசல் தோசை, உருளைக்கிழங்கு குருமா சாப்பிட்டவுடன் கிடைக்கும் மசாலா பால். நான் நிறைய இடத்தில மசாலா பால் சாப்பிட்டிருக்கிறேன், ஆனா ஹாஸ்டல்ல கிடச்சமாதிரி எங்கயும் கிடைக்கல. டிபன் சாப்பிடுவதற்கு மூஞ்சை கழுவும் போது போகும் தூக்க கலக்கம், சாப்பிட்டு விட்டு மசாலா பாலை குடித்தபின்பு இரண்டுமடங்காக திரும்ப வருவதுதான் இதோட ஸ்பெசாலிட்டியே. எனக்கு தெரிஞ்சு, இதை குடிச்சிட்டு எவனும் தூங்காம, புத்தகத்தை தூக்கிகொண்டு திரிவதை பார்த்ததே இல்லை. இந்தமாதிரியான பெருமை கொண்ட பாலுக்கு எவண்டா மசாலா பால்னு வச்சான்? என்று எங்கள் ‘ஆல் இந்திய தூங்குமூஞ்சி மாணவர் பேரவை’ கண்டனத்தை பதிவு செய்தது மட்டுமல்லாமல், இனி அதை ‘மேட்டர் பால்’ என்றே அழைக்கவேண்டும் என்று தீர்மானமே நிறைவேற்றினோம். எங்களது தீர்மனம் இன்னும் நடைமுறையில் இருப்பதை கேள்விப்பட்டு பெருமையும் அடைகின்றோம்.

மேட்டர் பாலினுடய இன்னொரு ஸ்பெஷாலிட்டி, எவ்வளவு அசதியாக தூங்கினாலும் மதிய சாப்பாடு டைம் 1-2 க்குள் முழிப்பினை ஏற்படுத்திவிடும். கலை டிபன் சாப்பிட்டபின்னாடி அலாரம் எல்லாம் வைத்துவிட்டு மதிய சாப்பாட்டிற்கு எழவேண்டிய அவசியம் இருக்காது. மதிய சாப்பாடு பிரியாணி என்றால் சாச்சாத் பிரியாணி இல்லை, பிரியாணி மாதிரி. சனிக்கிழமை ஏதாவது புதுப்படம் வந்தாலோ, இல்லை சிவகாசி பழன்யாண்டவரில் ஒரு நல்ல ....... (புரிஞ்சிக்கனும்) படம் வந்தாலோ, சனிக்கிழமை நைட் தக்காளி சாதம் மிஞ்சிடும், அந்தமாதிரியான நாட்களில், அதே தக்காளி சாதம், ஞாயிற்றுக்கிழமை பிரியாணியாக பரினாம வளர்ச்சி பெற்று சில சிக்கன் பீஸ்களுடன் தட்டில் தாண்டவமாடும். மெஸ்ஸில் 20 டேபில் இருக்கும், டேபிலுக்கு ஒன்னு, ரெண்டு தட்டு ரொம்ப நேரமா காலியாக இருக்கும். அவர்கள் எல்லாம் சாப்பிட்டா ‘லெக் பீஸ்’தான் சாப்பிடுவேன்னு அடம்பிடிக்குற பிரஸ்பதிகள். கடைசியில லெக் பீஸ் முடிஞ்சி போச்சு, வேற சிக்கனும் இல்லன்னு தெரிந்து ரசம் ஊத்தி முனங்கிகொண்டே சாப்பிடும் கூட்டங்கள். வாரத்தில் 21 வேலை சாப்பாட்டில் சொல்லுறமாதிரி, இந்த இரண்டு வேலை மற்றும் வியாழக்கிழமை கொடுக்கும் புரோட்டா, சால்னா தவிர்த்து வேறு எதையும், எவனும் விருப்பப்பட்டு விழுங்குனதா எனக்கு தெரியலை.

நாங்க படிக்கும் சமயத்தில் மூன்று ‘பால்’கள். அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் மாதிரி. அதுல ஒன்னு மேலயே சொல்லியாச்சு ‘மேட்டர் பால்’, இன்னொன்னு ‘தியோடர் பால்’ இவன் EEE படித்துக்கொண்டிருந்த ஒருவன், (சாப்பாட்டைப் பற்றிய பதிவு என்பதால் இந்த நல்லவனைப் பற்றி இங்கு தேவையில்லை). மற்றொரு பால் ‘மிட் நைட் பால்’. பால் எல்லா இரவு நேர சாப்பாட்டுடனும் உண்டு என்றாலும், மி.நை. பால், எக்ஸாம் நேரங்களில் மட்டும்தான் கொடுக்கப்படும். தண்ணியில பால் கலந்து கொடுக்கும் மற்ற பால்களைப் போல அல்லாமல், சுண்ட காய்ச்சி எடுத்தா எப்படி கட்டியா இருக்குமோ அப்படி இருக்கும். மாணவர்கள் கண்விழித்து இரவு முழுவதும் படிக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் இரவு 12 மணிக்கு கொடுக்கப்படும் பாலுடன் பேரித்தம் பழங்களும் உண்டு.

பாலுடன் பேர்த்தம் பழங்கள், எவன் சொல்லிக்கொடுத்த காம்பினேசன் என்றே தெரியவில்லை. ஆனால் உண்மையில் வேலை செய்தது, அதைக் குடிச்சா தூக்கமே வராது. மேட்டர் பாலுக்கு நேர் எதிர் இந்த மிட் நைட் பால். ‘நாடி, நரப்பெல்லாம் புடச்சி, உணர்ச்சிகள் எல்லாம் மேலோங்கி படிக்கனும் என்ற வெறியை உண்டு பண்ணும் பால் இந்த மி.நை. பால்’ என்று ஏதோ ஒரு வார்டன், விளம்பரத்துல வர்ற நடிகன் சொன்னமாதிரி சொன்னதாக ஒரு கிசு கிசு இருந்தது. 12 மணி வரைக்கும் ஓரளவு படித்தவர்கள், மி.நை பாலுடன் பேரிச்சம்பழத்தை திண்டுவிட்டு, வார்டன் சொன்னமாதிரி நாடி நரம்பெல்லாம் புடைக்க, படிக்கனும், படிக்கனும்னு வெறி புடிச்சு ‘வண்ணத்திரை’, ‘சினிக் கூத்து’, ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ “திரை மசாலா’....... போன்ற புத்தங்களுடன் கட்டிப்புரண்டு கொண்டிருப்பார்கள். நடுப்பக்கம் கசங்கி இருக்குற கோலத்தைப் பார்த்தால் உங்களுக்கு புரியும் அந்த உணர்ச்சி வெறி. மதவெறி, ஜாதிவெறி எல்லாம் இந்த உணர்ச்சி வெறியிடம் பிச்சை எடுக்கனும்.

மிட் நைட் பால், மிட் நைட் மசாலா ரேஞ்சிக்கு மாறியதை அறிந்த நிர்வாகம், பின்பு பேரித்தம் பழங்களை தடைசெய்துவிட்டது. ‘வேணும்னா பாலை கேன்சல் பண்ணிக்கங்க, பேரீச்சம் பழத்தை தாங்க’ன்னு கண்ணீர் விட்டு கதறி கெஞ்சிப் பார்த்தோம், இரும்பு மனம் கொண்ட நிர்வாகம் இறுதிவரை இறங்கிவரவேயில்லை. மாசத்து ஒரு முறை பஃப்பே சிஸ்டம் உண்டு, எல்லா நாளும் நாங்க இருக்கும் இடத்துக்கு மாஸ்டர் வருவாரு, பஃப்பே சிஸ்டம்ன்னு பேரு வச்சி நம்மள மாஸ்டர் இருக்கும் இடத்துக்கு தட்ட தூக்க விட்டுவானுங்க, ஆனா சாப்பிடுற ஐட்டம்னு பார்த்தா எப்போதும் சாப்பிடுற அதே காஞ்சிபோன சப்பாத்தி, தீஞ்சு போன தோசை, ஊத்துப் போன சப்ஜியாகத்தான் இருக்கும், பெயருக்கு இரண்டு எக்ஸ்ரா ஐட்டங்கள் இருக்கும்.
சைவம், அசைவம் என ரெண்டு மெஸ் உண்டு. முதலிலேயே சைவமா, அசைவமா என்று பெயர் கொடுத்துவிடவேண்டும். சைவம் சமைக்குற மெஸ்ஸில் பேர் கொடுத்தவர்களுக்கே அனுமதி, அங்கு அசைவ பட்சிகள் போகமுடியாது, சென்னை ஏர்போட்டுல கூட அவ்வளவு செக்கிங் இருக்காதுன்னா பார்த்துக்கங்க. சிக்கன் போடுற அன்னைக்கு சைவ மெஸ்ஸில், காலி பிளவர் 65, ஐஸ்கிரீம், குலாம்ஜாம், புரூட் சாலட் இப்படி பல ஐட்டங்கல் உண்டு. அதனால் சைவம்னு பல பேரு பெயர் கொடுத்துவைத்திருந்தார்கள். அசைவத்துக்கு அந்தமாதிரி செக்கிங் எதுவும் கிடையாது, யாருவேணும் என்றாலும் வரலாம், சாப்பிடலாம், போகலாம். நாம நல்லவனா இருந்தாலும் சுத்தியிருக்கும் கூட்டம் “டேய் நீ பேசாம சைவத்துக்கு பேரு கொடு, சிக்கன் போடுற அன்னைக்கு முதலிலேயே போய் நான்வெஜ் மெஸ்ஸில் சாப்பிடுவிடு, அப்புறமா வெஜ் மெஸ்ஸுக்கு வந்து ஐஸ்கிரீம், குலாப்ஜாம் எல்லாம் சாப்பிடு, நாங்களும் அப்படித்தான் செஞ்சிக்கிட்டு இருக்கோம்”ன்னு ஒருத்தன் ஒத்து ஊத, பேர் கொடுக்க வார்டன் முன்னாடி போய் நின்னாச்சு.

‘என்னப்பா வேணும்?’

‘சார், நான் மெஸ் ஜேஞ்ச் பண்ணனும்’

‘அப்படியா, எந்த மெஸ்ஸுல இருந்து எந்த மெஸ்ஸுக்கு ஜேஞ்ச் பண்ணனும்?’

‘நான்வெஜ்ல இருந்து வெஜ்ஜுக்கு’.

‘சரி உன் பேரு என்ன?’

‘முஹம்மது யாஸிர்’ ன்னு சொன்னதுதான் தாமதம் மனுசன் மேல இருந்து கீழ வரை ஒரு கேவலமான பார்வை பார்த்தாரு பாருங்க அதை என்னால இன்னும் மறக்கமுடியல. போக்கிரி படத்துல வடிவேலு சொன்னதுமாதிரி, ‘மண்ட மேல இருந்த கொண்டய மறந்துட்டோமே’. எல்லாத்தையும் பிளான் பண்ணின நமக்கு பேரை கேட்பானுங்களேங்குற விசயமே ஞாபகத்துக்கு வரலயே?, ‘இனி இந்தமாதிரி தப்பு ஃபுயூச்சர்ல நடக்காம பார்த்துக்கனும்டா யாஸிரு’ என எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன்.

‘இல்ல சார், போன வாரம் புட் பாய்ஸன் ஆகிடுச்சு, அதனால டாக்டர், ஆடு, கோழி, மீன், முட்டை, மட்டன், சிக்கன், எக், பிஷ் என இந்த 8 ஐட்டங்களையும் தொடக்கூடாதுன்னு சொல்லிட்டாரு. அதுனாலத்தான் இந்தமாசம் வெஜ்ஜுக்கு மாறலாமுன்னு.......’ சொல்லும் போதே அவரு நம்பிட்டாரு எங்கிற சமிக்சை தெரிந்தது.

அந்தமாதம் பஃப்பே சிஸ்டத்தில், நான்வெஜ்ஜில் சில சிக்கன்களையும், சில பல பிஷ், மட்டங்களையும் திண்டுவிட்டு, வெஜ் மெஸ்ஸிற்கு சென்று அங்குள்ள ரசகுல்லா, ஜிலேபி, காலி பிளவர் 65, வெஜ் சில்லி புரோட்டா, புரூட் சாலட் வித் ஐஸ் கிரீம் என எல்லா அய்ட்டங்களையும் திண்டுவிட்டு ரூமில் கண்மூடியதுவரை ஞாபகம் இருந்தது. கண் திறந்து பார்த்தா விருதுநகர் ஹாஸ்பிட்டல், ‘எனக்கு என்ன ஆச்சுடா?’ என்று பிணத்த சுத்தி உக்கார்ந்திருந்தவனுங்க மாதிரி என் கட்டிலை சுத்தி இருந்த நண்பர்களிடம் கேட்க ரெண்டு நாள ஹாஸ்பிட்டல்லதான் இருந்தேனாம், காரணம் புட் பாய்ஸனாம்.

விதி வலியது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.