செவ்வாய், மே 23, 2017

அப்துல்லா

நான் இப்போது, ஜித்தாவில் ஒரு பர்னீச்சர் ஷோ ரூம் புராஜெக்டில் இருக்கிறேன். அது ஒரு ஸ்வீடன் கம்பெனி என்றாலும் வியாபார ஒப்பந்தப்படி சவுதி நாட்டில் ஒரு பெரிய பணக்காரரின் கீழ் வருகிறது. கான்ட்ராக்டரை மேற்பார்வை இடும் வேலை எங்கள் கம்பெனிக்கு. எங்களை மேற்பார்வை இடுவதற்காக கிளைண்டில் இருந்து இரண்டு பேர் உண்டு. அதில் ஒருவன் பெயர்தான் அப்துல்லா.
அப்துல்லா, சென்ற வருடம்தான் இஞ்சினியரிங் முடித்துள்ளான். வயது என்ன 23 இருக்கும். எனக்கு அவனுக்கும் கிட்டத்தட்ட 10 வயது வித்தியாசம். (‘’அப்படியென்றால் உன்னோட வயது 13 தானா?’’ என்று கேட்கவேண்டாம்). ஆனால் பார்பதற்கு எனக்கு அண்ணன் போல் இருப்பான். அவனுக்கு அரபி மொழியைத் தவிற எதுவும் தெரியாது. எனக்கு அரபியில் எதுவுமே தெரியாது. என் பெயரையே நான் தமிழில்தான் சொல்லுவேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
என் மேனாஜர் என்னிடம் ‘’இன்று என்ன வேலை நடந்தது? நாளை என்ன வேலை ஆரம்பம்? என்பதை அவனிடம் விளக்கவேண்டும்’’ என்றார்.
‘’விளங்கிடும்’’ என்றேன்.
‘’என்ன?’’ என்று திரும்பக் கேட்ட மேனஜரிடம், ‘’இல்ல, விளங்குவது போல் விளக்கிவிடலாம்’’ என்று தலையை ஆட்டி ஆட்டிக் கூறினேன். சீமான் ‘’பச்சை தமிழன்’’ என்றால், அப்துல்லா ‘’அடர் பச்சை அரபி’’. இஞ்சினியரிங்க் கூட அரபி மொழியில்தான் படித்திருக்கிறான். ‘’டைல் புளோரிங்க்’’ ‘’வால் பிளாஸ்டரிங்க்’’ என்பது கூட அவனுக்கு அரபியில்தான் தெரியும்.
அவனை சமாளிக்கும் வேலை என் தலையில் வந்தபின்பு, நான் செய்த முதல் காரியம் அரபி டிரான்ஸிலேட்டர் டவுன்லோடு செய்ததுதான். ‘’ஆங்கிலம் தெரியாது, இவனெல்லாம் என்ன படித்திருப்பான்’’ என்று எதிலும் அவனை அலட்சியம் செய்த என் போன்றவர்களுக்கு செருப்பால் அடித்தது போல் ஒரு சம்பவம் நடந்தது. ஷோ ரூமில் சில மாற்றங்கள் செய்யும்படி கிளைண்ட் சொன்னார்கள். நாங்களும் காண்டிராக்டரிடம் சொல்லி அதை முடிக்கச் சொன்னோம்.
ஆனால் அப்துல்லா, ‘’இதை இப்படி செய்தால் இங்கிருக்கும் மொத்த எடையும் இந்த பகுதிக்கு வரும், அங்கு ஒரு கதவு வேறு இருப்பதால் அதனால் அந்த எடையை எடுத்துக்கொள்ள முடியாது.....................’’ என படம் வரைந்து பாகங்கள் குறிக்க ஆரம்பித்துவிட்டான். அவன் அரபியில் சொன்னாலும், எனக்கு அவன் வரைந்த படத்தைப் பார்த்து புரிந்துகொண்டேன். எல்லோரும் ஆடிப் போய்விட்டோம். அன்னைக்கு அவன் அதை தடுத்திருக்கவில்லை என்றால், இன்று மோடிக்கு ‘’சவுதி சிறையிலிருந்து உயிரைக் காக்குமாறு’’ மனு அனுப்பிக்கொண்டிருந்திருப்பேன்.    
மொழிக்கும் அறிவிற்கும் சம்பந்தமில்லை என்று படித்திருந்தாலும், நேரில் உணர்ந்த தருணம் அது. அஞ்சு வருசம் அரியர் வைத்து எழுதும் சப்ஜெக்டை எல்லாம் ‘’இதெல்லாம் உங்க ஊருலதாண்ட பஸ்ஸு, சவுதியில இதுக்கு பேரு குப்ப லாரி’’ன்னு பிரிச்சு மேய்வான். இதுக்கும் அவன் ஆவரேஜ் ஸ்டூடண்டாம். சீமான்னு நெனச்சவன் சர்.சி.வி.ராமனா தெரிஞ்சான்.
அப்துல்லாவுக்கு ஆங்கிலம் கற்றுக்கொள்ள பயங்கரமான ஆர்வம். ‘’நான் உனக்கு அரபி கத்துத் தாரேன், நீ எனக்கு இங்கிலீஷ் கத்து கொடு’’ன்னு சொன்னான். ‘’அதுக்கு முதல்ல உனக்கு இங்கிலீஷ் தெரிஞ்சுருக்கனுமே’’ன்னு உங்களுக்கு தோணுனதுமாதிரி எனக்கும் தோனுச்சு. ‘’நான் பேசுவதுதான் இங்கிலீஷ்னு நெனக்கிறவன் ஆசையில ஏன் மண்ணள்ளிப் போடனும்’’னு விட்டுட்டேன். அவன் என்னிடம் ஆங்கிலத்தில் பேசுவான், நான் அவனிடம் அரபியில் பேச வேண்டும் என்பதுதான் டீல்.
ஒருமாதிரியான வேற்றுமொழிப் படங்களைத்தான் சப் டைட்டில் இல்லாமல் பார்ப்பேன். சப் டைட்டில் இல்லாமல் அரபியை கற்றுக்கொள்வது எனக்கு பெரிய கஷ்டமாக இருந்தது. ஆனால் அப்துல்லாவிற்கு அப்படி இல்லை. பய பயங்கர ஸ்மார்ட். அதிக முன்னேற்றம். நம்மா நாக்கு இன்னும் ‘’அக்கிள் மாபி’’ ‘’சுகுல் கலாஸ்’’ ரேஞ்சிலேயே நிக்குது.
அவனிடம் நிறைய பேசும்படி ஆனது. கிளைண்ட் கூட இருப்பதினால், மேனஜரும் ஒர்க் விசயமாக விவாதிப்பதாக நினைத்துக்கொள்வார். ஆனால் மியா கலீபா கலைச் சேவையைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருப்போம். பேசிய பின்புதான் தெரிந்தது,  இன்னும் அப்துல்லா அந்த விசயங்களில் அப்டேட் ஆகவில்லையென்று. லுசி சென், ஷாசா க்ரெய், சன்னி லியோன்....பற்றி சொல்லி சில வெப் ஐடிகளையும் கொடுத்திருக்கிறேன்.
செல்லப் பெயராக அவனுக்கு நாங்கள் வைத்திருப்பது ‘’அதிர்ச்சி அப்துல்லா’’. எதெர்கெடுத்தாலும் அதிர்ச்சியாகி, கண்களை விரித்து ‘’வல்லா...’’என்பான். எங்கள் கல்லூரியில் பெண்களும் படிப்பார்கள் என்றபோது ‘’வல்லா..’’ என்று அதிர்ந்தான் பொருத்துக்கொண்டேன். ‘’வல்லா...உங்க அப்பாவிற்கு ஒரு மனைவிதானா’’ என்று அதிர்ந்தான் பொங்கிவிட்டேன்.
அப்துல்லாவின் அப்பாவிற்கு மூன்று மனைவிகள், சவுதி, அபுதாபி, பஹ்ரைன் என ஒவ்வொரு நாட்டிலும் ஒன்று. நான்காவது என்று கேள்விப்பட்டால் மவுத்தாகிவிடுவாய் என்று அவன் அம்மா எச்சரித்ததால் அடங்கியிருப்பதாக சிரித்துக்கொண்டே சொன்னான். எனக்கு அவன் சிரிப்பைப் பார்த்து ஆச்சிரியமாக இருந்தது. ‘’எப்படி உன்னால் இதை ஈஸியாக எடுத்துக்கொள்ள முடிகிறது?’’ என்று கேட்டால், ‘’அது அவர் வாழ்க்கை, அவர் வாழ்கிறார், எந்த விதத்திலும் எங்களுக்கு குறைவைக்கவில்லை. ஒரு வேளை என் அம்மாவிற்கு வருத்தம் இருக்கலாம், ஆனாலும் அவள் சம்மதத்துடன்தான் மற்ற திருமணங்களும் நடந்தது’’ என்றான்.
அவன் அப்பா பெரிய பிசினஸ் மேன், கொஞ்சம் பணமுள்ள ஆளும் கூட, அதனால் மூன்று மனைவிகள், அவர்களின் குழந்தைகளை எந்த குறையின்றி கவனித்துக்கொள்கிறார். அப்பாவிடம் பணம் இருக்கிறது என்பதற்காக இங்கு யாரும், அப்பாவை நம்பி இருப்பதில்லையாம். அவனவன் சம்பாத்தியத்தில்தான் அவனவன் கல்யாணம் செய்துகொள்ளவேண்டுமாம். நம் நாட்டின் முறைக்கு நேர் எதிர் இங்குள்ள கல்யாண சம்பர்தாயம். எல்லா செலவும் மாப்பிள்ளயோடது. தனி வீடு, மணமகளுக்கான நகை, கல்யாண செலவு.... என அனைத்தும். கல்யானத்திற்கே பெரிய தொகை தேவைப்படும் என்பதற்காகவே நான் வேலக்கு வந்ததாகக் கூறினான் அப்துல்லா.
அடிக்கடி நம்பிக்கை இன்றி ‘’ஒரே கிளாஸ்?, கேள்ஸ்ஸும் இருப்பாங்களா?’’ என்று கேட்டு அதிர்ந்தவனுக்கு என்னுடய கிளாஸ் குரூப் போட்டோவைக் காட்டினேன். அதிலிருக்கும் அனைவரையும் பார்த்தபின்பு ‘’இதுக்கு பேசாம நீ சவுதியிலேயே வந்து படிச்சிருக்கலாம்’’னு சொன்னான். ‘’உனக்கு எத்தனை தம்பி தங்கை’’ என்று கேட்டேன். இரண்டு மூன்று தடவைக்கு மேல் விரல்களை மடித்து மடித்து எண்ணிக்கொண்டிருந்தான்.
அப்துல்லாவிற்கு இந்தியாவின் கடற்கரை சுற்றுலாத் தளங்களுக்கு வர மிகவும் ஆசை. கல்யாணமாகி ஹனிமூனுக்கு கோவா வருவதாகச் சொன்னான். இப்படித்தான் இருக்கும் ‘’கோவா’’ என்று நெட்டில் சில போட்டோக்களை காண்பித்தேன். அதில் சில பெண்கள் பிகினியில் குளிப்பது போல் இருந்தது. ‘’இப்படி இருக்குமா?’’ என்று அதிர்ச்சியாய் கேட்டான். ‘’இது என்ன பிரமாதம் இத விட ஒரு ஸ்பெசல் அய்ட்டம் ஒன்னு இருக்கு?’’ன்னு ஒன்னொரு போட்டோவைக் காண்பித்தேன். கல்யாணத்திற்கு முன்பாகவே கோவா வருவதாக சொல்லியிருக்கின்றான். 
-------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

புதன், மே 17, 2017

அந்த ரசத்த ஊத்தூ....


எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, காலேஜ் முடிக்கும் போது என்னோட எடை 52 கிலோ, பெங்களூரில் நாலு வருசத்தில் அது 58 கிலோவானது. அதற்குப் பின்பு எடை படிப்படியாக கூடினாலும், கடைசி மூன்று வருடங்களாக 69 கிலோதான். 69 கிலோவாக இருந்தது எனபதைவிட, 69 கிலோவாக இருக்கும்படி வைத்துக்கொண்டேன். ஏன்னா, 69 என்பது ஒரு கிக்கான நம்பர் என்பதற்காக. மே 13, சன்னி லியோனின் பிறந்த நாள் என்று தெரிந்த இந்த சமூகத்திற்கு 69ன் மகிமையை மேற்கொண்டு விளக்க விருப்பமில்லை.

அடிக்கடி எடை பார்க்கும் பழக்கம் இல்லை. விமானத்தில் லக்கேஜ் 30 கிலோவிற்கு மேல் அனுமதிப்பதில்லை என்பதால் ஊருக்குச் செல்லும்போது, லக்கேஜ் எடைபார்க்கும் சமயத்தில் மட்டும் என்னுடய எடையையும் பார்த்துக்கொள்வேன். இந்த முறையும் 69. சொந்த சமயலினால் நாவில் ஏற்பட்ட சூனியத்தை, ஊரில் இறங்கியதும் நல்ல சாப்பாடு சாப்பிட்டு பரிகாரம் செய்யவேண்டும் என்று எண்ணினேன். இந்த எண்ணம் ஒவ்வொரு முறையும் ஏற்படுவதுதான்.

காலையில் புரோட்டா என்றால், மூழி கடை, தோசை என்றால் தென்காசி தோசை கார்னர். மதியம் சைவம் என்றால் ராஜ் மெஸ், அசைவம் என்றால் அல்மாசி ஹோட்டல். இரவு, பார்டர் ரஹ்மத் புரோட்டாவுடன் நாட்டுக்கோழி பிரை. இந்த மாதிரி லிஸ்ட் ரொம்ப பெருஸ்ஸா இருக்கும். ஆனால், ‘’என்னாது புரோட்டா பத்து ஓவாயா?’’ என விலைவாசியை நினைத்து ஏங்கும் போதே லிஸ்ட் தனக்குத் தானே தீவைத்துக்கொள்ளும்.

எங்க அம்மாவிடம் ஒரு ஸ்பசாலிட்டி இருக்கு. ‘’என்னடா சமைக்கனும்?’’ ன்னு கேக்கும்போது, ‘’எதாவது சமம்மா’’ன்னு சொல்லிறனும். அதவிட்டுட்டு, அத பண்ணு, இத பண்ணுன்னு சொல்லிட்டா, சோலி சுத்தம். ‘’புள்ள ஆச ஆசயா கேட்டுட்டா’’ன்னு பரபரப்புல பால் ஊத்தாமலே பால் பாயசம் வைக்கும். இப்படித்தான் ஒருதடவ, ‘’இறால் குழம்பு சாப்பிட்டதே இல்ல’’ன்னு சொல்ல, பாதி ராத்திரில எங்க அப்பாவ எழுப்பிவிட்டு இறால் வாங்கிவரச் சொல்லி, இறால் குழம்பு வச்சிச்சு. ஆனா, வாய்லதான் வைக்கமுடியல. அன்னையோட இறால் திங்குற ஆசை விட்டுப்போச்சு. இன்னமும் சூப்பர் மார்க்கெட்ல, இறால்ல பாக்கும்போதெல்லாம், அந்த ஃபன்னி இன்சிடெண்ட்தான் ஞாபகம் வரும்.

இம்முறை, டெங்கு காய்ச்சல் காரணமாக, ஜமாத் ‘’இறைச்சி, மீன் சாப்பிட வேண்டாம்’’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தது. பொதுவா ஜமாத் ஏதாவது சொன்னால் எவனும் மதிக்கிறது இல்லை. ஆனா இந்த விஷயத்தில் ‘’ஜமாத் சொன்னதே கட்டளை, கட்டளையே அதன் சாசனம்’’னு குனியச் சொன்னால் குப்புறவே படுத்துவிட்டார்கள். ‘முள்ளங்கி’ய வச்சு தொக்கு செய்யலாங்குற விசயமே எனக்கு இந்த தடவதான் தெரியும்.  ‘கொள்ளு’ங்குற ஒரு ஐட்டம் குதிரை திங்குறதுன்னு கேள்விப்பட்ட எனக்கு, கொள்ளுத் துவயல வச்சே மூனு நாள் சோறு போட்டாங்க. மறுநாள், அதுல கொஞ்சம் தண்ணி ஊத்தி ‘’கொள்ளுச்சட்னி’’ங்குற பெயருல தோசைக்குத் தந்தாங்க.

சவ்சவ், கொத்தவரங்காய், தடிமங்காய்....என ஒன்னாம் வகுப்பு பாட புத்தகத்தில் படம் பார்த்த அனைத்தும் நான் சாப்பிடும் தட்டில் ஒருநாள் கெடக்குமென்று கனவுகூட கண்டதில்லை. ஏழு தலைமுறைக்கு முன்பாக நாங்கள் சைவ பிள்ளைமார்களாம், முன்பு ஒரு முறை அப்பா சொன்னார். எனக்கு என்னவோ இந்த முறை கர்வப்சி முறையில் திரும்ப சைவ பிள்ளைமார்களாகவே மாறிவிட்டதுபோல் ஆகிவிட்டது. ஹரே ஓ சம்போ.

இன்னும் ரெண்டுநாள் இருந்திருந்தா, புண்ணாக்குல பாயாசம், தவிடுல புளிக்குழம்புன்னு தர லோக்கலுக்கு போயிருப்பாங்க. ‘’நான் அடிச்ச பெல்லு, ஆண்டவனுக்கு கேட்டுச்சோ இல்லையோ, அரசாங்கத்துக்கு கேட்டுருச்சு, அடிச்சாம்பாரு அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டரு’’ன்னு வடிவேல் சொன்னதுமாதிரி ‘’நான் கதரி அழுதது கடவுளுக்கு கேட்டுச்சோ இல்லையோ கம்பெனிக்காரனுக்கு கேட்டிருச்சு, அடிச்சாம் பாரு மெயிலு’’ன்னு கிளம்பி ஓடிவந்துட்டேன்.

பையன் ஒரே வெஜ்ஜா சாப்பிடுறானேன்னு கொஞ்சம் இரக்கப்பட்டு இரண்டு கல்யாண வீட்டு விருந்திற்கு போகச் சொன்னார்கள். முன்னாடி கல்யாண வீட்டு விருந்துன்னா குஸ்கா சோறு, முதல் ரவுண்ட் மட்டன் குழம்பு, ரெண்டாவது ரவுண்ட் தால்சா சாம்பார்னு ரவுண்ட் கட்டி சாப்பிடலாம். இப்ப எல்லா கல்யாண வீட்டிலும் பிரியாணி என்றாகிவிட்டது. முதல்ல சொன்ன ஐட்டங்களில் இருக்கும் டேஸ்ட் பிரியாணியில் இருப்பதில்லை. ரெண்டு கல்யாண வீட்டிலுமே விருந்து பரிமார வெளி ஆட்களுக்கு கான்ராக்ட் விட்டிருந்தார்கள்.

ஏதோ, கட்சி பொதுக்கூட்டத்திற்குப் போய், பிரியாணி பொட்டலத்தில் சாப்பிட்டது போலாகிவிட்டது. ‘’வாங்க’’ என்று அழைப்பதற்கு சொந்தக்காரர்களோ அல்லது தெரிந்தவர்களோ இல்லை. கேட்டரிங்க் ஆட்கள் முதல்தடவை வந்து பிரியாணியை தட்டுவதோடு சரி, அதற்கு பின்பு யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லை. தண்ணி வேண்டும் என்றாலோ, அல்லது சாம்பார் வேண்டும் என்றாலோ கத்தி அழைத்தபின்பு ஏனோ தானோ என்று வந்து விழம்பிவிட்டு போவார்கள்.

முன்னாடியெல்லாம், விருந்து நடக்கும்போது, சாப்பாடு பரிமாறுவது எல்லாமே சொந்த பந்தங்கள்தான். போதும் என்றாலும் ‘’அவரு அப்படித்தான் சொல்லுவாரு கொஞ்சமா வச்சிவுடு’’ என ஒரு பெரியவர் சொல்லிமுடிப்பதற்குள், சோறு இலையில் விழுந்துவிடும். அந்த கவனிப்பிற்காகவே பெல்டை லூஸ் செய்து இலையில் இருப்பதை காலி செய்யவேண்டும். கான்ராக்ட் ஆட்கள் பரிமாருவதையாவது பொருத்துக்கொள்ளலாம், ஆனால் அவனுங்க போட்டுவருகிற கம்பெனி டீ சர்டைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கர்மம் என்ன கலர்னே கண்டுபிடிக்க முடியவில்லை. ‘’துவைச்சாவது போட்டுவரலாமேடா’’ன்னு சொல்லத் தோனும்.

ஊரில் இருந்து கிளம்பும் போது, லக்கேஜை வெயிட் பார்த்தபின்பு எனது வெயிட்டை பார்த்தேன். 74 கிலோ. முப்பது நாளில் எப்படி 5 கிலோ கூடியது என்று மயக்கமே வந்தது. எடை கூடியதுகூட எனக்கு கவலையில்லை ஆனால் 69 போய்விட்டதே என்ற கவலைதான் கண்ணை கெட்டியது. ‘’நம்மள பிரிஞ்சி போறத நெனச்சுத்தான் புள்ள கவலப்படுது’’ன்னு அம்மாவோட அன்பு அட்ராசிட்டி வேறு. இந்தியன் டாய்லெட்டில் குத்தவைத்து கக்கா போகும் போது மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது, பேலன்ஸ் மிஸ் ஆவதில் இருந்தே தெரிந்தது எடை கூடிய விசயம். ஆனால் 5 கிலோ என்பது மெடிக்கல் மிராக்கிள்.

முன்னாடி, ஊருக்குப் போனால், தாலுகா ஆபிஸ், ரெஜிஸ்டர் ஆபிஸ், பேங்க், லைசன்ஸ் ரினிவல், நகராட்சி என எங்காவது ஒரு வேலை இருக்கும். சாப்பிட்டபின்பு அங்க இங்கன்னு அலையும்போது எடை அதிகமாக வாய்ப்பு இருந்ததில்லை. இந்த முறை வெயில் விட்டு விளாசியதால் வெளியே எங்கும் நகரவில்லை. சாப்பாடு, தூக்கம், தூக்கம் சாப்பாடு என்றே நாட்கள் ஓடியது. இருந்தாலும் கத்தரிக்காய், முட்டைக் கோஸ், பீக்கங்காய் எல்லாம் சாப்பிட்டு 5 கூடியதை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை.

எவன் எப்படிப் போனா என்ன நீ அந்த ரசத்த ஊத்து...........ன்னு வஞ்சனயே இல்லாம திண்ண நான், 69 யை மீட்டெடுக்க இப்போது வாக்கிங், ஜாக்கிங்க், டயட்டிங்ன்னு தீயா வேலை செஞ்சிக்கிட்டு இருக்கேன். 

----------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.