திங்கள், ஆகஸ்ட் 27, 2012

விடை கொடு அமீரகமே...


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
நான் அமிரகம் வந்த புதிதில், பழக்கமான அனைவரிடமும் கேட்பது “நீங்க இங்க வந்து எத்தன வருசம் ஆச்சு?”. ஒருத்தன விடுறது கிடையாது எல்லாரிடமும் கேட்டாகிவிட்ட கேள்வி. இப்போதும் எவனாவது இந்த கேள்விய கேட்டா, ஆடு சந்தைக்கு புதுசுன்னு நாம முடிவு பண்ணிக்கொள்ளலாம். 5வருசம், 7வருசம், 10வருசம் ஆச்சு தம்பின்னு சொல்லும் போது, வந்து பத்து நாள் கூட இருக்க முடியலியே இவங்க எல்லாம் எப்படித்தான் இத்தன வருசம் இருக்குறானுங்களோன்னு ஒரே பிரமிப்பா இருக்கும். இது எல்லாம் துபாய் செட் ஆகுற வரைக்கும் தான். அப்புறமா கம்பெனிக்காரன் ‘தம்பி ஒரு வருசம் ஆகிடுச்சு, வெக்கேசன் போறியா இல்ல டிக்கெட் காச வாங்கிட்டு இங்கேயே இருக்கியா?’ அப்பிடின்னு போன் பண்ணி கேட்டபின்னாடி தான் தெரியும், ஓஹ் ஒரு வருசம் படம் ஓடிரிச்சான்னு. 

துபாய் செட் ஆகுற வரைக்கும்தான்னு சொன்னேன், எப்படீன்னு சொன்னேனா?. ம் சொல்லுறேன். நமக்கு துபாய் செட் ஆகிடுச்சா?, ஆகலையா? என்பதை நாமே கண்டுபிடிச்சுடலாம். ரோட்டுல போகிறப்ப பிலிப்பினோ பொண்ணுங்க தெரியக்கூடாத பாகங்களை நல்லா தெரியுறமாதிரி டிரெஸ் போட்டு போகின்றபோது ‘ச்ச்சீய்ய்ய் என்ன டிரெஸ்ஸுடா இது?’ அப்படின்னு நமக்கு சொல்ல தோனுச்சுனா துபாய் உனக்கு இன்னும் செட் ஆகலன்னு அர்த்தம். அதே மாதிரியான பொண்ண பார்த்து ‘ம்ம்ம்ம் என்ன...... டிரெஸ்ஸ்ஸ்ஸுடா...... இது?’ ன்னு இழுத்து சொல்ல தோனுதா, கங்குராஜுலேசன் நீங்க துபாய்காரனாகிட்டீங்க. பெரிய பெரிய மால் எல்லாத்தையும் மல்லாக்க படுத்துக்கிட்டு பாக்குறது, மெட்ரோ ரயில் டிரைவர்கிட்ட ஆட்டோகிராப் வாங்க அவர தேட அலையுறது, ஒரு புரோட்டா 1 திருகாம்ஸ்னு சொன்னா ‘அடேங்கப்பா 15 ரூபாயா?’ ன்னு வாய பொழக்குறது இது எல்லாம் முதல் மாச சம்பளம் எடுக்கும் வரைக்கும்தான், அப்புறமா எல்லாம் அன்லிமிடட் புரோட்டா, சால்னா தான்.

நான் இங்க வந்து 4 வருசம் ஆகுது, இது என்னோட இரண்டாவது கம்பெனி, முதல் கம்பெனி இந்தியாவில், அங்கயும் 4 வருசம் இருந்தேன். ஆனா முதல் 4 வருசம் என்னோட வசந்த காலம்முன்னு சொல்லுவேன். அந்த 4 வருசம் ஏதோ 40 வருசம் மாதிரியான உணர்வு. வேலையில கற்றுக்கொண்டது கொஞ்சம் என்றாலும் அது அங்க மட்டும் தான். ஆனா இங்க வாழ்க்கையைப் பற்றி கற்றுக் கொண்டது அதிகம், 4 வருசம் என்பது எப்படி போச்சுன்னே தெரியல. ஏதோ ஒரு மாசத்துக்கு முன்னாடி விமானத்துல வந்துட்டு, திரும்ப போகுற ஒரு உணர்வுதான். அதிக சோம்றியாக்கிய, கற்றுக் கொண்டதை மறக்க செய்யும்படியான வேலையாக இருந்தது நான் இங்கு பார்த்த வேலை. அதனால இந்த வேலையை விட்டுவிட்டு போகுற பீலிங்க் கொஞ்சம் கூட இல்லை. ஆனா சில நல்ல உள்ளங்களின் அன்பை இனி நேரடியாக பெறமுடியாமல் போனில் மூலமாகமட்டுமே பெறப்போவதை எண்ணி அதிக, அதிக வருத்தம். 
கஷ்டத்துக்காக வந்தோம், இஷ்டப்பட்டு அல்ல என்று பலரது வாழ்க்கை நஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. நானும் அப்படித்தான், கஷ்டம் ஒரு பச்சோந்தி, நிலைமைக்கு தகுந்தவாரு மாறுபடும். பத்தாயிடம் சம்பாதிக்கும் போது, கஷ்டத்தின் மதிப்பு 50 ஆயிரமாக இருந்தது. 50 ஆயிரம் சம்பாதிக்கும் போது, கஷ்டத்தின் மதிப்பும் கூடி லட்சமாக முகம்காட்டுகிறது. ஆக கஷ்டம் என்பது மாறாதது, நிலைக்கு ஏற்ப பரிணாமம் அடைகின்றது அவ்வளவுதான். 

என்னமோ இப்படியெல்லாம் எழுதுவதால், இந்த தம்பி இந்தியாவுக்கு போயி பொண்டாட்டி நகையை வச்சு, பக்கத்து வீட்டுக்காரி பேருல கன்ஸிட்ரக்சன் கம்பெனி ஆரம்பிக்க போகிறான்னு மட்டும் நனெச்சுடாதீங்க. போயிட்டு வாரேன்னு தான் சொல்லியிருக்கேனே தவிர, போறேன்னு சொல்லல. இந்தியாவில் மன்மோகன் சிங்குடன் இருந்து நிதி நிலையை சீராக்க ஒன்னும் நாங்க அங்க போகல பாஸ். திரிஷ்ஷா இல்லன்னா திவ்யா அப்படீங்குறமாதிரி, துபாய் இல்லன்னா கத்தார் என்ற நிலைதான் இப்ப நமக்கு. யாருக்கு தெரியும் மறுபடியும் திரிஷா தான் நமக்கு ஏத்தவங்கன்னு தெரிஞ்சா, கொஞ்சம் கூட கூசாம வந்து நிப்போம்.

நான் பெங்களூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, துபாயில் இருந்து நண்பர்களின் போன் வரும் அப்பவெல்லாம் ‘என்ணடா எப்ப துபாயிக்கு வார?’ என்ற கேள்விகள் எழும். ‘வருவோம் கொஞ்ச நாள் ஆகட்டும்’ என்று சொன்னதுண்டு. துபாய்க்கு வருவதற்கு முன்னாடி நல்லா ஊரை சுத்தி பார்த்துக்க, ஒரு தடவ துபாய்காரண்ட பாஸ்போர்ட கொடுத்துட்ட, அம்புட்டுத்தான், நம்ம வாழ்க்கை இனிமே இங்கேயேதான் என்று சிரிச்சிக்கிட்டு சொன்னது, இங்க பல பேருக்கு உண்மையாகியிருக்கு.

கத்துக்கிட்டதுன்னு சொன்னா, சமையல். என்னனே தெரியாம சமைப்போம், ஆனா ‘என்னே டேஸ்டு’ ன்னு சாப்பிடுறவங்க சொல்லும்படி வைப்போம். கத்தரிக்கா, முருங்கக்காய் போட்டு, மிளகாய் பொடி போட்டா சாம்பார். கத்தரிக்காய்க்கு பதிலா கறிய போட்டா மட்டன் குழம்பு. எங்க சமையலின் கைப்பக்குவத்தினை எங்க வயிற்ருப்பகுதியின் வட்ட அளவு சொல்லும். இதில் மட்டும்தான் எங்களுக்கு டபுள் புரமோசன் கிடைக்கும். பேண்ட் சைஸ் 28 ஆக இருந்தால், 32 ஆகும். 32 ஆக இருந்தால் 36 ஆக மாறும். 

(கஷ்டங்கள் தொடரும்)

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்.

வியாழன், ஆகஸ்ட் 16, 2012

மாணவனின் கேள்வியும், சோனியாகாந்தியின் பதிலும்.


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
சோனியா காந்தி ஒரு கல்லூரிக்கு சென்றார், அங்கு மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க சம்மதித்திருந்தார். அதன்படி மாணவர்கள் தத்தம் கேள்விகளுடன் தயாராகி இருந்தனர். சோனியா சொன்னபடி துள்ளியமாக சொன்ன நேரத்திலிருந்து தாமதமாக வந்தார்.

சோனியா : உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் பெருமகிழ்சியடைகின்றேன், அத்துடன் உங்களது கேள்விகளுக்கு பதிலளிக்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன். உங்களது கேள்விகளை நீங்கள் கேட்களாம்.

பாபர் : எனக்கு 3 கேள்விகள் உள்ளன, அதற்கு உங்களது பதிலை அறிய ஆசைப்படுகின்றேன்.

கேள்வி 1. இந்தியாவில் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் அதிக அளவில் நடந்தும், இந்திய அரசாங்கம் அதற்கு ஆதரவாக லோக்பால் மசோதாவை இன்னும் நிறைவேற்றாதது ஏன்?

கேள்வி 2. இந்தியாவில் விவசாயம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது, அதனை மேம்படுத்த இதுவரை நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

கேள்வி 3. வருமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு சோற்றுக்குப் பதிலாக, செல்போன் வழங்குவதால் என்ன லாபம்? யாருக்கு லாபம்?

ட்ட்ரீங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க் (ரீசர்ஸ் பெல் அடிக்கின்றது)

சோனியா : ஓஹோவ்................. ரீசர்ஸ் பெல் அடிச்சிடுச்சே. சரி எல்லோரும் வெளியே போய்விட்டு வந்தவுடன் நம்ம நிகழ்ச்சி மறுபடியும் தொடரும்.

15 நிமிடம் கழித்து மீண்டும் நிகழ்ச்சி தொடங்கியது.

சோனியா : ஓகே, நீங்கள் கேட்கும் கேள்விகளை கேட்களாம். அடுத்து யாரு?

ராமன் : எனக்கு 5 கேள்விகள் உள்ளன, அதற்கு உங்களது பதிலை அறிய ஆசைப்படுகின்றேன்.

கேள்வி 1. இந்தியாவில் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் அதிக அளவில் நடந்தும், இந்திய அரசாங்கம் அதற்கு ஆதரவாக லோக்பால் மசோதாவை இன்னும் நிறைவேற்றாதது ஏன்?

கேள்வி 2. இந்தியாவில் விவசாயம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது, அதனை மேம்படுத்த இதுவரை நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

கேள்வி 3. வருமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு சோற்றுக்குப் பதிலாக, செல்போன் வழங்குவதால் என்ன லாபம்? யாருக்கு லாபம்?

கேள்வி 4. எப்போதும் அடிக்கும் ரீசர்ஸ் பெல் ஏன் இன்று அரை மணி நேரத்திற்கு முன்பாகவே அடித்தது?

கேள்வி 5. முன்பு உங்களிடம் கேள்வி கேட்ட என் நண்பன் பாபர் இப்போது எங்கே?

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்.