ஞாயிறு, செப்டம்பர் 18, 2011

ஆனால் நேரம் கடந்துவிட்டது.....


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உண்டவுவதாக.

########ஒரு ஆங்கில கவிதை.

நான் சிறுவனாக இருந்தபோது,
இந்த உலகை மாற்ற ஆசைப்பட்டேன்,
நடக்கவில்லை.
இளைஞனான போது ஊரைத்
திருத்த முனைந்தேன்,
முடியவில்லை.
குடும்பத் தலைவன் ஆனபோது,
குடும்பத்தையாவது திருத்த விழைந்தேன்,
இயலவில்லை.
தந்தையான போது,
பிள்ளைகளை மாற்றிவிட துடித்தேன்,
எவரும் என் பேச்சை கேட்கவில்லை.

இவ்வளவு முயற்சிகள் செய்ததற்குப் பதிலாக,
"நான் கொஞ்சம் மாறியிருக்கலாம்" என்று
மரணப் படுக்கையில் தான் புரிகின்றது எனக்கு,

ஆனால் நேரம் கடந்துவிட்டது.....

----------------------------------------------------------------------------------------யாஸிர்.

திங்கள், செப்டம்பர் 12, 2011

கண்ணாம் பூச்சி ரே, ரே.....

கோலி குண்டு, டிப்பி, சீட்டுக் கட்டு, தெலுக்கா, கம்பு தூக்கி, 7 ஸ்டோன்.... இந்த மாதிரியான  விதவிதமான் விளையாட்டுகள் எல்லாம் இந்த காலத்துப் பசங்களுக்கு ரொம்ப தூரமாகப் போய்க்கொண்டிருக்கின்றது. இந்தமாதிரியான விளையாட்டுகளில் நானும், எனது சக நண்பர்களும், சோறு, தண்ணிரெல்லாம் மறந்து ஒன்னோடு ஒன்னா பின்னிக் கிடந்தோம்.

மேல சொன்ன விளையாட்டுகளில் இப்போது நான் என் அக்கா பிள்ளைகள் மூலமாக சாகாமல் கண்டது, கோலி குண்டு மட்டும் தான். மற்ற விளையாட்டைப் பற்றி கேட்டால், பத்திரிக்கைகாரன் கேள்விக்கு மன்மோகன் சிங் பதில் தெரியாம முழிப்பாரே அது மாதிரி முழிக்குதுங்க. என்ன மாதிரித்தான் உங்களில் பல பேரும், உங்கள் ஊர்களில் கண்டிருக்கலாம், இவையாவும் எல்லா ஊர்களிலும் விளையாடக் கூடிய ஒரு விளையாட்டு, பேர்கள் தான் திரிந்திருக்குமேயொழிய, விளையாட்டு என்னமோ ஒன்றாகத்தான் இருக்கும்.

டிப்பின்னு நான் மேல சொன்னது கூல்டிரிங்ஸ் பாட்டில் மூடி, 7அப்னா, கோக்க கோலா தான் அதிக மதிப்புள்ளது, அதற்கு குறைந்தது காளி மார்க், ஐஸ்வர்யா.... போன்ற கூல்டிரிங்ஸ் வகைகள். இந்த மாதிரியான டிப்பிகளை கலெக்ட் பண்ண, தெருத்தெருவா, கடைகடையாக அலைந்ததுண்டு. 7அப் எல்லாம் அப்ப வீட்டுக்கு யாராவது கெஸ்ட் வந்தால் தான் கிடைக்கும், அதற்காகவே ஏதாவது சொந்தக்காரனுங்க வாரானுங்களானு வாசலயே பார்த்துக் கொண்டு இருப்போம். வந்துட்டா போதும், எங்கப்பா சொல்லுறாறோ இல்லயோ, கடைக்கு சிட்டா பறந்து போய் 2 பேருக்கு 1 வீதம் 3 வாங்கிட்டுவர்றது. இப்படி வங்கிவிட்டு வருகிற நேரத்துல, சொந்தக்காரங்க போய்ட்டா......., அப்பா திரும்ப கொடுக்கச் சொல்லிருவாரேன்னு எண்ணி கடக்காரன்கிட்டயே உடச்சி வீட்டுக்கு எடுத்துக் கொண்டு வருவோம் (அப்பவே கிரிமினலா வேல பாத்திருக்கோம்ல).

இப்படியா ரொம்ம கஷ்டப்பட்டு சேர்த்து வச்சது எல்லாம், முதல் நாள் அட்டத்துலயே புஸ்ஸாகிடும் (அது தான் தோற்றுவிடும்). மறுபடியும் என்ன.............,    எந்த சொந்தக்கார பயபுள்ளய்ங்க வாரனுங்கனு தேமேன்னு வாசலேயே பார்கவேண்டியது தான்.

இத மாதிரித்தான் சீட்டும். சீட்டுன்னு சொன்ன உடனேயே நீங்க ரம்மி, மங்காத்தான்னு எல்லாம் தப்பா நினச்சிடக்கூடாது. சிகரெட் அட்டக்கித்தான் இந்த பேரு. டிப்பில இருந்தது மாதிரி இதுலயும் பல கிரேடு இருக்கு, சிசருக்கு ஒரு ரேஞ்சு, பனாமாக்கு ஒரு ரேஞ்சுனு பல வகை இருக்கு, அதுல வில்ஸ்க்குத்தான் அப்ப அதிக மவுசு. இந்த அட்டைக்காக புகைப்பவர்களிடம் அதிக நட்பு ஏற்படுத்திக் கொண்டதுன்டு, புகைபழக்கம் இல்லாதவரிடம் "உங்க அழகுக்கு நீங்க சிகரெட்டு குடிச்சிங்கன்னா எப்படி இருக்கும் தெரியுமா?" ரஜினிகாந்து மாதிரி இருக்குமுன்னு ஏத்திவிட்டு, சீட்டு அட்டையை ஆட்டயப்போட்டதுன்டு.

அப்ப எல்லாம் சிகரெட் பிடிச்சாலே பொண்ணு கிடைக்காது (இப்ப தண்ணியடிச்சலே கிடைக்குது), அவ்வளவு பெரிய தெய்வ குத்தம். அப்படியே அவங்க வீட்டுக்கு தெரிஞ்சி, அவங்க அப்பாக்கள் கேட்டா "ச்சீ, ச்சீ அண்ணன மாதிரி வருமா.....".ன்னு எங்க சுயநலத்துக்காக பொய் சொன்னதுண்டு (நாலு பேரு நல்லா இருக்கனும்னா எதுவும் தப்பில்ல). இது என்ன, எங்க வீட்டுலயே, என் அண்ணன் சிகரெட் அடிப்பதைக் கூட, என் வீட்டில் சொன்னதில்லை. நான் சொல்லிவிட கூட்டாதுன்னுதான், ஒரு வேளை வெரும் அட்டைகளை விட்டுவிட்டு பொயிருப்பானோன்னு இப்பா தோனுது.

தெலுக்கா, இத தான் எப்படி சொல்லனும்னு தெரியல, இது ஒரு வகையான கொட்டை, எதிலிருந்து கிடைக்கும்னு எல்லாம் தெரியாது, ஆனா காசு கொடுத்தா கடையில கிடைக்குங்கிறது மட்டும் தெரியும். இந்த தெலுக்கா காலம் வரும் போது மட்டும் எங்கப்பாவிற்கும், என் அம்மாவிற்கும் சண்டை அடிக்கடி வரும், எதுக்கா....

என்னய கேக்காம, கழட்டிப் போட்ட சட்டயில இருந்து ஏன் காச எடுத்த?,
அய்யோ.............................. நான் எடுக்கலயே!!!!!!!!!!!!!...
பிறகு யாரு உங்கப்பனா வந்து எடுத்தான்.
இங்க பாருங்க என் குடும்பத்த இழுக்காதிங்க.......

இப்படியான சண்டயிக்கு நடுவே, நம்ம எடுத்த காசு, கடைக்கு போயி, நம்ம கையில தெலுக்காவாகி, அடுத்த ஒரு மணி நேரத்துல அடுத்தவ கையிக்கு கைமாறி போயிரும். துக்கம் தாங்காம, சோகமா வீட்டுக்கு வந்தா, அப்பவும் சண்ட ஓய்ந்திருக்காது, அட சண்ட போடதிங்க ஏட்டய்யா...ன்னு எங்கப்பாவை சமாதானப் படுத்தி, அடுத்து எங்கடா சட்டய மாட்டப் போறாருன்னு நோட்டம் விட்டுகிட்டே இருக்கனும். இந்த தெலுக்காவிற்காக மட்டும் களவை, (அதிகமாக) கற்று, கற்று, மறந்திருக்கின்றேன்.

பம்பரம், குச்சி தூக்கி, செல்லாங்குச்சி (கில்லி) ... இந்த மாதிரியான பலவகை விளையாட்டுகள், இன்று காணாமல் போய் கொண்டிருப்பது ரொம்ப வருத்தமளிக்கின்றது. என் பேரன் காலங்கள் எல்லாம் வரும் போது, என்னிடம் "ஹவ் வாஸ் பம்பரம்?" .னு கேட்டா, சின்ன கவுண்டர் படத்துல, விஜயகாந்த், சுகன்யாவை படுக்கபோட்டு விடுவாரே (....ச்சி அசிங்கமா எதயாவது கற்பனை பன்னாதிங்க, நான் பம்பரத்தை தான் சொன்னேன்) அதைத்தான் எடுத்துப் போட்டு காட்ட வேண்டும்.

கண்ணாம் பூச்சி ரே, ரே.....கண்டு பிடி யாரு.. சின்ன வயசுல இது எங்களோட இன்னொரு தாலாட்டாக இருந்தது. என்னோட சின்ன வயசுல எங்க தெருவில் மட்டுமே 4 கிரிகெட் டீம் இருந்தது, ஆனா இப்போ எங்க ஏரியாவிலே , டீமுன்னா, தேடித்தான் பார்கனும் போல. இப்பவுள்ள பயலுங்க எல்லாம், கிரிகெட், புட் பாலை எல்லாம் கம்பியூட்டரில் விளையாட ஆரம்பித்துவிடுகின்றான்.

அதுபோக, விடியோ கேம் வேற, வீட்டுக்குள்ள போனாலே ஏதோ ஆப்கானிஸ்தானுக்கு போன ப்பீலிங், டமால், டுமீல்னு, துப்பாக்கி, குண்டு சப்தம் தான். அந்தா அங்க வந்திட்டான், அவன் தலையில குண்டப் போடு, இங்க கன்னி வெடிய செட் பன்னுன்னு அவன சுத்தி சக நண்பர்களின் கமென்ட் வேற, உலகம் எங்கோ போய் கொண்டிருப்பது மட்டும் தெரிகின்றது.

எங்க ஊருக்கார பயலுக ஜாலியா இருக்குறத பார்த்துவிட்டு, அப்பாவ எப்படியாவது சமாளித்து, 9ம் வகுப்புக்கு, நம்ம ஊருக்கு வந்து படிக்கனும்னு ஆசை. 8ம் வகுப்பு முடிந்தவுடன், அடுத்து அதே ஊரில் இங்க தான் சேர்க்கப்போகிரேனு எங்கப்பா கைகாட்டியதும், உங்க பேச்ச நான் எப்படிப்பா தட்டுவேன்னு, பா.மா.க ஸ்டைல்ல, அந்தல் பல்டி அடிச்சதுக்கு ஓரே காரணம் அந்த பள்ளியுடைய விளையாட்டு மைதானம் மட்டுமே. பள்ளிக்கு உள்ளே காலை எடுத்துவைத்தவுடன் வருவது, பேட்மிட்டன் கோர்ட். அடுத்தது பேஸ்கட் பால் கோர்ட்....இதயெல்லாம் கடந்துதான், வகுப்பறைக்கே செல்லவேண்டும். இந்த மாதிரியான ஸ்கூல விட்டுவிட எப்படி மனசு வரும்.

அப்ப எல்லாம் வாரத்திற்கு 2 கிளாஸ் விளையாட்டு நேரம் இருக்கும். இப்ப எல்லோரும் படிப்புக்கு மட்டுமே, கவனம் செலுத்துவதால், பேருக்கு மட்டுமே P.T வகுப்பு, ஆனால் அந்த நேரத்தில் ஏதாவது கெமிஸ்ரி வாத்தியார் எக்ஸ்ரா வகுப்பு எடுத்துக் கொண்டிருப்பார்.

நான் 9ம் வகுப்பு சேர்ந்த பின்பு, கால அட்டவனை கொடுத்தவுடன் முதல் முதலில் பார்த்தது எப்படா P.T வகுப்புன்னுதான். அந்த நாளுக்கு இரண்டு நாள் முன்பே பேஸ்கட் பாலுக்கு மனதலவில் தயாராகிக் கொண்டிருந்தேன். எங்க P.T வாத்தியார் பெயர் திரு.நெல்லை நாயகம், இவருட்ட பிடித்தது, இவருடய ஆர்வத்தை மாணவர்களிடம் தினிப்பது இல்லை, அதே சமயம், அறிவுரை வழங்குவதுண்டு. எவனுக்கு என்ன விருப்பமோ, அதுக்காக அவர்களை தயார்

யார் யாருக்கு என்ன விருப்பம்னு, கேட்ட பின், பேஸ்கட் பாலுக்கு விருப்பமானவர்கள் எல்லாம், அதற்கான் கிரவுன்டுக்கு போங்கனு சொன்னது தான் தாமதம், கண்ணமூடிகிட்டு ஓரே ஓட்டம் ஓடுனா, கண்ண திரந்துகிட்டு ஓடி வந்த கூட்டம் எனக்கு முன்னாடி லைன் கட்டி நின்னுச்சு, வகுப்புல முக்காவாசிப்பேரு, என்ன மாதிரின்னு, அப்ப தான் தெரிஞ்சுது. எல்லோரயும் வரிசையா நிக்க வச்சு கூடையில போடச் சொன்னாரு, எவனும் போடவேயில்ல, என்னோட டெர்ன் வந்தது, என்ன பார்த்தவுடனேயே, "ஏன்டா முதல் பென்ஞ்ல முதல் ஆளே நீ தான், அப்படியிருக்கும் போது எப்படிடா பேஸ்கட் பால் உனக்கு சரிப்பட்டு வரும் (நான் கொஞ்சம் குள்ளம்), இருந்தாலும் என் ஆர்வத்த பார்த்துட்டு, குறுக்க நிக்காம,  சரி போடுன்னு சொன்னாரு, எவனுமே கரெக்டா போடாத போது நான் மட்டும், கரெக்டா போட்டேன்............
எங்கனு கேக்குறீங்களா?????????????????, வாத்தியார் மண்டையில தான்.

அடுத்த சீனுல, அய்யா வாலிபால் கோர்ட்டுல தான், தலைல வங்கின அடிய எல்லாம் மனசுல வச்சிக்காம, நல்ல முறையில டிரெனிங் கொடுத்து ஸ்கூல் ஜுனியர் டீமுக்கு கேப்டனாக எல்லாம் ஆக்கினாரு.எங்க மாவட்டத்துல பல ஊருக்கு, போட்டிகெல்லாம் கூப்பிடிடு போயிருக்காரு. கூப்பிட்டு போனங்க சரி, ஜெயிச்சியான்னு எல்லாம் கேக்க கூடாது (ஜெயிச்சிருந்தாததான் சொல்லாம விட்டுருப்போமா?) அவரு புன்னியத்துல தான் வாலிபாலுக்கு ஒரு 10 சர்ட்டிபிக்கேட் வச்சிருக்கேன்.

இப்ப கல்விக்கு இருக்கிற முக்கியத்துவத்துல கொஞ்சம் விளையாட்டுக்கும் கொடுக்கனும். P.T பிரியடுல, மாணவர்களை விளையாட மட்டுமே அனுமதிக்க வேண்டும். இதுபோன்ற விசயங்களில் அரசாங்கம் தலையிட்டு, அடுத்த தலைமுறையை மனநோயாளிகளாக மாறாமல் இருக்க வழிவகை செய்யவேண்டும்.

இதுபோன்று விளையாட்டிற்கு முக்கியத்துவம் இல்லாமல், படிப்பை மட்டுமே, முக்கியம் என்று கருதினால் அடுத்த தலைமுறைக்கு கிரிக்கெட் விளையாடக் கூட ஆள் இருக்காது.

இன்று ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கப் பதக்கமாவது வாங்காதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாம்,  நாளை ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக விளையாட, யாராவது கிடைக்கமாட்டர்காளா? என்று ஏங்கும்படி ஆகாமல் நம்மை ஆண்டவன் காப்பாற்றுவானாக.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்

செவ்வாய், செப்டம்பர் 06, 2011

வாத்திகளை வாழ்த்திஇன்று நம்முடைய நாடே ஆசிரியர் தினம் கொண்டாடிக் கொண்டு இருக்கும் போது நம்ம மட்டும் எப்படி கொண்டாடாம இருப்பது, அது தப்பாச்சேன்னு எண்ணி, இந்த பதிவின் மூலமாக எனது மனம் கவர்ந்த ஆசிரியர்களைப் பற்றி எழுதி, அவர்களுக்கு நன்றி சொல்வதன் மூலமாக அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் வாழ்த்துக்களையும் சொல்லிவிடலாமுன்னு நினைத்து இதை ஆரம்பிக்கின்றேன்.

ஆசிரியர்களை என்னால் இரண்டு விதமான வகையில் பிறிக்க முடியும். ஒன்னு பள்ளி ஆசிரியர்கள், இன்ன ஒன்னு கல்லூரி ஆசிரியர்கள். இவங்க இரண்டு பேருக்குமே எனக்கு தெரிந்த வித்தியாசம், பள்ளி ஆசிரியர்களிடம் பிரம்பு இருக்கும், அப்படியே கட் பன்னி கல்லூரியில ஓப்பன் பன்னினா அந்த பிரம்பு, மாணவனிடம் இருக்கும் (ஆனா எங்க காலேஜில எல்லாம் அப்படி இல்ல). எனக்கு தெரிந்து என் பள்ளி நாட்களில் எந்த வாத்தியாரும் பிரம்பை மறந்துவைத்து விட்டு வகுப்புக்கு வந்தது மாதிரியெல்லாம் தெரியல. 

என்னுடைய பள்ளிக் காலம் முடிந்து சுமார் 11 வருடம் இருக்கும். இந்த இடைப்பட்ட காலங்களில் ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும் இடையிலான உறவில் பல மற்றங்கள் வந்ததாகவே எனக்கு தோன்றுகின்றது, காரணம் எங்க பள்ளிக்காலங்களில் வாத்தியார் அடிச்சிட்டாரு, மாணவன் தந்தை போலிஸில் புகார்னு ஒரு செய்தி வந்தது இல்ல, ஆனா இப்போ தின மலர் தலைப்பு செய்தியே "ஆசிரியர் டுமீல், மாணவன் டமார்னு" 2 நாளுக்கு ஒரு தடவையாவது வந்துவிடுகின்றது, இந்த அரசியல், சினிமா கிசு, கிசுக்னு தனி ரிப்போர்ட்டர்கள் இருப்பது போல இந்த விசயத்த பத்தி செய்தி சேகரிக்கன்னு ஒரு தனி குழு இருக்கும் போல....

எனக்கு என்னமோ இந்த காலத்து ஆசிரியர்களுகுக்கு பொறுமை குறைந்துவிட்டதாகத் தோனவில்லை, மாறாக இந்த காலத்து மாணவர்களுக்கு ஆசிரியரின் பொறுமையை சோதிக்கிற அளவு, மற்றும் ஒரு கொடூர குணம் இருக்குமுன்னு நினைக்கிறேன். இந்த மாதிரியான குணம் படைத்த ஒரு சில மாணவர்கள் நான் படிக்கும் போதும் உண்டு

அந்த டீச்சர் பேரு சாந்தி(மல்லிகா டீச்சர் இல்லையான்னு எல்லாம் கேக்க கூடாது), பொறுமைனா அப்படி ஒரு பொறுமையான டீச்சர், கணக்கு பரிட்சை ஹாலில் அறிவியல் பாட பதில் எழுதுவது தெரிந்தும் எக்ஸ்ரா பேப்பர் கொடுத்து 15 நிமிடம் அதிகம் ஆனாலும், பொறுமையா இருந்து வாங்கிட்டுத்தான் போகும், பாருங்க எந்த அளவுக்கு பொறுமன்னு. அப்படி பட்ட டீச்சரையே பொங்கி எழ வச்சிட்டான் என் சக மாணவன் ஒருவன். மூல விஷயம் எல்லாம் எனக்கு மறந்து போச்சு, ஆனா 25 17 போச்சின்னா எத்தனை வரும்ங்கிரது தான்,
மூர்த்தி எந்திரிச்சு பதில் சொல்லு.... 

ம்ம்ம்ம்ம் 10 டீச்சர்

எப்படிப்பா 10 வரும். சரி உன்கிட்ட 25 ரூபா இருக்கு, 17 ரூபா செலவாகிடுச்சினா எவ்வளவு இருக்கும். 

ம்ம்ம்ம்ம் 12 ஆ டீச்சர்

உப்ப்ப்ப்ப்.... எப்படிடா 12 இருக்கும், சரி உன்கிட்ட 25 காரு இருக்கு, 17 கார வித்துட்ட அப்ப மிச்சம் எவ்வளவு இருக்கும்?. 

ம்ம்ம்ம்ம்ம்ம்........
 .
.
.
இப்படியா பல உதாரணங்களுக்கு அப்புரம்

உங்கம்மா உனக்கு 25 இட்லி வக்கிராங்க, அதுல நீ 17 இட்டிலிய சாப்பிட்டுட்டா எத்தன மீதி இருக்கும்? ணு கேட்டு முடிக்கல நம்மாலு 8 நு டான்னு சொல்லிட்டான். வந்திச்சே டீச்சருக்கு கோபம், ஏன்டா ராஸ்க்கல், பணம், புஸ்தகம்னு அவ்வளவு உதாரணம் சொல்லும் போது எல்லாம் தப்பு தப்பா சொல்லிட்டு, தின்ங்கிர ஐட்டம் சொல்லும் போது தான் உனக்கு தெரியுதா......ன்ன்னு, பொங்கி எழ ஆரம்பிச்சிருச்சி. வாழ்க்கைல நான் பார்த்த மோசமான அடி, இல்ல பேரடி அப்பத்தான். 

 இத மாதிரி 8 வகுப்பு அப்பத்தான் போயிருக்கு, B செக்ஸன் தான் வேணும்னு அடம்பிடித்து முதல் நாள் கிளாஸுக்கு போயாச்சு. மூக்கையா சாருக்காகத்தான் அந்த கிளாசுக்கு அவ்வளவு டிமான்ட், ஏன்னா யாரையும் அதட்டி கூட பேசமாட்டாருன்னு எல்லோருக்கும் தெரியும். முதல் நாள், முதல் வகுப்பு, 7 வகுப்பில் வேற, வேற, செக்ஸனில் படித்தவர்கள் வந்திருப்பதால், எல்லோரும் அவர், அவர்களை அறிமுகப்படுத்துமாறு, சார் சொல்ல, எல்லோரும் அறிமுகப்ப்டுத்திக் கொண்டோம், அப்போது தான், ஒருவன் எழுந்து பே பேன்னு முழிச்சுக்கிட்டே இருந்தான், சார் பார்த்துவிட்டு

உன் பேர் என்ன அத முதல்ல சொல்லு?

எ பேரு, ம்ம்ம்ம் எ பேரு..... சொல்லமாட்டான் சார்.

எந்த பேருனாலும் பரவாயில்லடா சொல்லு?

எ பேரு, ம்ம்ம்ம் எ பேரு..... சொல்லமாட்டான் சார்.
.
.
.
என் பொறுமையை சோதிக்காதே, டேய் சொல்லிரு?

சொல்லமாட்டான் சார்.

என் இத்தனை வருச சர்வீசுல, முதல் முறையா என்ன அடிக்கும் படி வச்சிராத, ஒழுங்கா மாதிரியா சொல்லிரு, பேரூ என்ன?

சொல்ல மாட்டன் சார்.

வாத்தியாருக்கு பொறும தாங்க முடியாம, அத்தன வருஷ விரதத்தை கலச்சிட்டாரு.

அடின்னா அடி அப்படி அடி ஒரு கொக்காமக்கா அடி.

அடிச்சு கலச்சுப் போயி, மறுபடியும் கேட்டாரு

உன் பேரு என்ன?

சொல்லமாட்டன் தான் சார், சொல்லமாட்டன் தான் சாருன்னு பாவம் அழுது ஒப்பாரி வச்சபின்னாடி தான், அவனுடையா நண்பன் எழுந்து சார், அவன் பேரு, சுடலை மாடன் சார்,

அதத்தான் அவன் அப்படி சொல்லுரான்னு சொல்ல, வகுப்புல ஒரே சிரிப்பு சப்தம் தான். இருந்தாலும் அவரு அடிச்ச அடி, எப்பேய்ய்ய்ய்ய்ய்........ இன்னைக்கு வரைக்கும் மறக்கமுடியல.


என்னை கவர்ந்த ஆசிரியர்கள்.

6 ஆம் வகுப்பு வரை நான் என் ஊரிலயே படிச்சிருந்தாலும், நினைவில் வைத்துக் கொள்ளும் படியான வாத்தியார்கள் இருந்தது 7 வகுப்பில் இருந்து தான்.

1.ஆண்டாள்
ஸ்ரீ கைலாசா நடு நிலைப்பள்ளியில் நான் 7 & 8 ம்  வகுப்பு படித்த போது, 8ம் வகுப்பு கணக்கு டீச்சர் தான் இவங்க. அதுக்கு முன்னாடி எல்லாம் கணக்கு என்றாலே அஜித் குமாருக்கும், டான்ஸுக்கும் உள்ள இடைவெளி தான். இவங்க பாடம் எடுக்க ஆரம்பித்த பின்பு, கமலுக்கும், ஹீரோயின் உதட்டுக்கும் உள்ள இடைவெளி அளவிற்கு வந்துவிட்டது. பிரம்பு சும்மா பேருக்கு இருக்குமேயொழிய, அத வச்சு அடிக்குரது எல்லாம் இல்ல. ரொம்ப சிம்பிலா சொல்லித்தருவாங்க, அதே போல ரொம்ப தெளிவா சொல்லி தருவாங்க. கணக்கு பாடத்து கூட படம் வரைந்து சொல்லி கொடுத்திருக்காங்கன்னா பாருங்களேன். மாணவர்களை அழைப்ப்தில் ஒரு கண்ணியம் இருக்கும், சில வாத்தியார்கள் அழைப்பது போல், எலே, ஒலே லாம் கிடையாது, என்னய்யா, போப்பா, வாப்பா தான். அதுனால தான் மாணவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

2. முருகன் 
இவர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் நான் 9 டு 12ம் படித்த போது, 10ம் வகுப்பு கணக்கு வாத்தியார். கொஞ்ச வயசுக்காரர், 9ம் வகுப்பில் எனக்கு அறிவியல் பாடம் எடுத்தவர். ஓரளவிற்கு கணக்கு பாடம் நல்லா பன்னிவேன்னு நினைத்து, ரொம்ப பாசம் இருந்தது, எந்த ஒரு நமக்கு பிடித்த விஷயமானாலும், அதுல ஒரு பிடிக்காத விசயமும் இருக்கும், அதுபோலத்தான், கணக்குல எனக்கு பிடிக்காத விசயம் இந்த  cos@, sing@, tan@.... அவர் வைத்த வாரந்திர டெஸ்ட் எல்லாத்திலயும் குறைந்த மதிப்பெண் பெற்றுவந்ததால், என்னைப் போல குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, தனியா பாடம் நடத்தி, மறுபடியும் டெஸ்ட் வைத்திருந்தார், அன்று பள்ளியில் அனகோன்டா படத்திற்கு கூப்பிட்டு போவதால், டெஸ்ட் இருக்காது என்று எண்ணி படிக்காமல் பள்ளி சென்று படமும் பார்த்துவிட்டு, சீட்டை விட்டு எழுந்த சமயத்தில், தியேட்டர் திரையில் "10B மாணவர்கள் டெஸ்ட் எழுதிவிட்டு வீட்டிற்கு செல்லவும்" என்ற மெஸஜை பார்த்துவிட்டு, அடிவயிற்றில் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தை வெளிக்காட்டாமல், டெஸ்ட் எழுதி முடித்தவுடன், அடுத்த ஷாக். இவர் அப்பவே பேப்பரையும் திருத்த ஆரம்பித்து விட்டார். சரிதான்னு முதுகு பக்கத்த நல்ல விறப்பாக்கிக் கொண்டு திருத்தின பேப்பர வாங்கிப் பாத்தா பேரதிர்ச்சி, 10 மார்க்கு தான் வரும்னு பார்த்தா 15 மார்க் (100க்கு தான்). இருந்தாலும் விழுந்த அடில ஒன்னும் குறையில்ல, தயாராக்கி வச்சிருந்த முதுகு தவிற எல்ல இடத்திலயும் கணக்கு பாடம் நடத்திவிட்டார். மறுநாள், நான் அடிக்கும் போது எவனோ பூனை மாதிரி கத்தினானே யாரு அதுன்னு? கேட்டது தான் தாமதம் எல்லோரும் யாஸிருன்னு ஏகோபித்த குரலில் சொன்னது இன்னும் காதில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

3. சிவன்
 
மெப்கோ பொறியியல் கல்லூரியில் நான் படித்த போது, 2ம் ஆண்டில் எங்களுக்கு C புரோக்கிராம் பிராக்டிக்கெல் பேப்பர் இருந்தது. அதுல எல்ல பயபுள்ளைங்களயும் பாஸாக்கிப் போடனும்னு ரொம்ப கஷ்டப்பட்ட ஜீவன். இதுக்கு முன்னடி சொன்ன எல்லோரும், எங்கள கொஞ்சம் கஷ்ட்டப்படுத்தியவர்கள், ஆனா இவர் எங்களிடம் ரொம்ப கஷ்ட்டப்பட்டவர். இவரும் சிவில் லெக்சரர் தான், இருந்தாலும் கம்பூட்டர் பத்தி கொஞ்சம் தெரிந்ததால், எங்கள சமாளிக்க சொல்லி மேல் மாட்டம் அனுப்பியிருந்தது. 3ம் வருடம் சிவில் சம்பந்தமான ஒரு பேப்பரும் எடுத்திருந்தார். இவர் 3ம் வருட மாணவர் ஹாஸ்டலுக்கு வார்டனாகவும் இருந்திருந்தார், அந்த வருசத்துல தான் நான் எழுதிய அப்பாலஜி லெட்டர் அதிகம். இவருடன் நாங்கள் சென்ற 3ம் ஆண்டு சுற்றுலாவையும் மறக்க முடியாது. இவர் மளையாலி, இவர் பேசும் தமிழ், இப்ப நமிதா மேடம் பேசுராங்கலே, அதுமாதிரி இருக்கும். "என்னே யாசிர் சாரே, நல்லா இரிக்கா" .னு அவர் அன்பா கேட்டத கூட அவர்கிட்ட சொல்லி கிண்டல் பண்ணியிருக்கோம்.

கண்டிப்பா இவர்கள் என்ன மாதிரியான 1000 மாணவர்களைப் பார்த்திருப்பார்கள், ஆனால் நான் பார்த்த சுமார் 50 ஆசிரியர்களில் இவர்கள் முக்கியமானவர்கள், பிடித்தமானவர்களும் கூட.
மீண்டும் ஏதாவது ஒரு சந்திப்பில் சந்திப்பதற்காக காத்திருக்கும் பழைய மாணவன் புது வெர்ஷனில்


அனைவருக்கும் ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------
யாஸிர்