ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

அவன்.


நம் அனைவரின் மீதும் இறைவனின், சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
சிலரை நமக்கு உடனே பிடிக்கும், சிலரை போக, போக பிடிக்கும், அதே போல ஒரு சிலரை, அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் கூட பிடிக்கவே பிடிக்காது. அதுக்கு, ஒருத்தன பிடிப்பதற்கு எப்படி காரணம் சொல்லமுடியாதோ அதேமாதிரித்தான் சில பேரை பிடிக்காததற்கும் காரணம் சொல்லமுடியாது, அப்படீன்னு சொல்லியெல்லாம் எஸ்கேப் ஆக நான் விரும்பல, அந்த காரணத்த இந்த பதிவின் இறுதியில் கண்டு பிடித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு இரங்கியுள்ளேன். எத்தன நாளைக்குத்தான் நாம, நமக்கு பிடித்த பயபுள்ளைங்கலைப் பற்றியே எழுதுவது, ஒரு வித்தியாசத்திற்காக, எனக்கு பிடிக்கவே பிடிக்காத ஒருவனைப் பற்றிய பதிவு இது.

“ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை என்ற வாக்கின்படி, நானும் பல முறை யோசனை செய்து பார்த்துவிட்டேன், என்னை நானே கேட்டும் பார்த்தேன், அப்படி என்ன அவன் நமக்கு செய்துவிட்டான் அவனை எனக்கு இந்த அளவிற்கு பிடிக்காமல் போனதற்கு?. அவனுடைய பேச்சு என் நண்பர் கூட்டத்தில் எழும் போதெல்லாம், எழுந்து விடத் தோனுவது ஏன்?. ஒரு பிடியும் கிடைக்கவில்லை.

கிட்டத்தட்ட அவன் மூலமாகத்தான் என்னுடைய கேரியர் ஆரம்பித்தது என்று கூட சொல்லலாம். ஒரே கம்பெனியில் வேலை செய்தோம், ஆனால் வேறு, வேறு திட்டங்களில் இருந்தோம். வேறு, வேறான வேலையும் கூட. அவன் இருந்த திட்டத்தில் இருந்த எனது மற்ற நண்பர்களைப் பார்க்கும் போது, இவனைப் பற்றிய செய்திகள் மேலோங்கும், காரணம் இவன் ஒரு வெட்டி பந்தா, வெள்ங்காத சீண் பார்ட்டி. தன்னை ஒரு பெரிய பண்ணையார் வீட்டுப் பையன் லெவலுக்கு இவன் விடும் கதைகளை என்னிடம் அவர்கள் கூறுவதுண்டு. ஆனாலும் நான், அவனை தெரிந்தவன் போல் காட்டிக்கொள்வதில்லை. மேலும் எனக்கு அவனைப் பற்றி தெரியுமேயொழிய அவனுடய குடும்பம் பண்ணையார் குடும்பமா? இல்ல பரதேசி குடும்பமா என்பது எனக்கு அறியாது.
இவன் விடும் ஸீன்களை கேட்டு நம்பிய சில பேர், வாயடைத்துப் போய் நின்றது கூட உண்டு, அதனை நேரில் கண்டு நான் ஆச்சர்யப்பட்டதுவும் உண்டு. அந்த கம்பெனியில சில பொண்ணுங்களும் வேலை செய்தார்கள், கேட்கவா வேணும், பச்சத்தண்ணியில பாயாசம் போடுறவன், பாக்கெட் பால் கெடச்சா சும்மாவா விடுவான், சும்மா, ஆத்து, ஆத்துன்னு அவன் குல பெருமைகளை எல்லாம் ஆத்திட்டான். அதுவும் சுமாரான பிகரா இருந்தாலும் பரவாயில்லை எல்லாம் அட்டு பிகருங்கன்னு மனசாட்சிய கொன்னுட்டு என்னால சொல்லமுடியாது, ஏன்னா கரெக்ட் பண்ணுர கியூவியல் அவன் முதல் வரிசையில் முதலில் நின்றாலும், நான் 4 வது லைனில் நின்றிருப்பேன். ஆனால், அவன் முதலில் நிற்பதற்கான தகுதி அவனிடத்தில் இருந்தது அதில் மட்டும் நான் அவனை குறை கூறப்போவதில்லை ஏனென்றால் அவன் உண்மையிலேயே கொஞ்சம் அழகு. அந்த மூலதனத்தினை பயன்படுத்திக்கொண்டு இலாபம் அடைந்ததாகக் கூட அதிகாரப்பூர்வ தகவல் உண்டு. அதையெல்லாம் கேட்கும் போது, “சரி அவனுக்கு பல் இருக்கு பக்கோடா சாப்பிடுகிறான் என்று என்னை நானே தேற்றிக்கொள்வேன்.

அவனை பார்த்தவுடனேயே பிடிக்காமல் போன எனக்கு, அவனின் இந்தமாதிரியான ஓவர் பில்டப்களும், ஸீன்களும் என்னை அவன் பக்கம் போகாமல், இருந்த இடைவெளியினை அதிகப்படுத்தியது. ஒருமுறை என் அப்பாவை அவன் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட, அவன் என்னமோ தானே, அந்த கம்பெனியை தூக்கி நிறுத்துவதாகவும், என்னை நம்பியே அவன் இருக்கும் திட்டம் நடைபெருவதாகவும் அதற்கு காரணம் நான் சைட் இஞ்சினியராக இருப்பதால் தான், உங்கள் பையன் ஆபிஸினுள் வேலை செய்வதால் அத்தனைக்கு பெரியதாக சொல்லிக்கொள்ள ஒன்னுமில்லை என போகிற போக்கில் அவனால் முடிந்த அளவுக்கு அள்ளிப் போட்டுவிட்டு போக, அதன் விளைவு, அடுத்த அரை மணி நேரத்தில் தொலைபேசியில் தெரிந்தது. “உடனே உன் திட்டமேலாலரிடம் கேட்டு சைட்டுக்கு மாறிவிடு, ஆபிஸ் வேலை எல்லாம் வேணாம் என்று என் தகப்பனார் கொந்தளிக்க அவன் மேல் கொஞ்ச நாள் கொலைவெறியில இருந்தேன்.
கொஞ்ச காசை சுருட்டிக்கொண்டு, இதனை விட அதிக சம்பளம் கிடைத்தவுடன் அவன் கம்பெனிக்கு கம்பி நீட்டிவிட, அவனுடனான தொடர்பு எனக்கு அரிதானது. எப்போதாவது நேரில் காண்பதுண்டு, பார்த்தால் என் அருகில் வந்து பழைய கம்பெனியைப் பற்றி கேட்டு, அந்த மேலாளரிடம் நேற்றுதான் பேசினேன் என்று என்னிடமே அள்ளிவிடுவான். நானும் ஓ, அப்படியா என்று நழுவி விடுவேன். அடிக்கடி கம்பெனி மாறினால், கேரியருக்கு நல்லது இல்லை என எண்ணி அந்த கம்பெனியில் சுமார் 4 வருடங்கள் இருந்தேன். அதற்குள் அவன் 4 கம்பெனி மாறி என்னிலிருந்து ஒருபடி மேலோங்கியே இருந்தான்.
பிற்பாடாக அவனுடைய தொடர்பு முற்றிலுமாக நின்றாலும், மூன்றாவது நபர் மூலமாக அவனுடைய செய்திகளை அறிவதுண்டு. அவனுடய வேலை, வாழ்கைத் தரத்தினைப் பார்த்து நான் கொஞ்சம் பொறாமைப்பட்டதும் உண்டு. சில சமயங்களில் எதிர்காலத்தினை கணக்கில் வைத்து, நாம் அன்று செய்தது தவறு என்று அவனுடன் என்னை ஒப்பிட்டு நொந்ததுவும் உண்டு.

பிந்தய நாட்களில் என்னை அவனுடன் ஒப்பிட்டு பார்க்க்கும் பழக்கம் அதிகமாகிப் போனது. அதனால் அவனை முற்றிலும் ஒதுக்கவேண்டும், அல்லது ஒதுங்கிவிடவேண்டும் என்று எண்ணி அவனுக்கும் எனக்கும் உள்ள நடுத்தர நண்பர்களின் நட்பினைக்கூட குறைத்துக்கொண்டேன். விதி விட்டது யாரை?, நாம ஓடி போனாலும், சனியன் கால் டேக்ஸி பிடிச்சு நமக்கு முன்னால போய் நிற்கும், அது மாதிரி நானே வேண்டாம் என்று ஒதுங்கினாலும், அவனுடைய எல்லா அப்டேட்களும் என்னிடம் வந்து சேர்ந்து என்னை பாடாய் படுத்துகின்றது. கடந்தவாரமும் அதே போலத்தான் ஆகிவிட்டது, யாரோ ஒருத்தன், தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள, என்னை நானும் அறிமுகப்படுத்திக்கொண்டேன். உடனே அவன் கேட்டான் “அப்படீன்னா, உங்களுக்கு _____________ அவனைத் தெரிந்திருக்குமே?.”........................................................................ நீண்ட அமைதிக்குப் பின்பு “ஆம் தெரியும், ஆனா ரொம்ப பழக்கமில்லை என்று கூறி இடத்தினை காலிசெய்தேன்.

ஏன் நாம் நம்மை இவனுடன் இப்படி ஒப்பிட்டு பார்கிறோம் என்று எனக்கே ரொம்ப அசிங்கமாகப்பட்டது. ஆனா ஒரு விசயம், அவனை அறிந்த எவனும் அவனை கெட்டவன் என்று சொல்லவில்லை. மனிதன்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்வான், ஏன் நீ என்ன யோக்கியமா, நீ அள்ளிவிடாதவனா?, பொண்ணுங்ககிட்ட இளியாதவனா? என்ற கேள்வியை நான் கேட்டுப்பார்த்தேன். பதில் “ச்சீ நாம இவ்வளவு மோசமா என்று தோனியது. ஒப்பிட்டு பார்பதினை கொஞ்சம், கொஞ்சமாக நான் நிறுத்திக் கொள்ள ஆரம்பித்திருக்கின்றேன், எப்போது என்றால், கீழ்காணுவதை கண்டபோதிலிருந்து.

--------------------------------------------------------------------------யாஸிர்.

செவ்வாய், ஏப்ரல் 24, 2012

விழிநீர் வழிய வீதியில் நாம்.


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதான்மும் உண்டாவுவதாக.
எனக்கு தெரிந்த ஒரு நண்பரை வாரம், வாரம் காணச்செல்லும் போது, அவர் நாட்டில் நடக்கும் விசயங்களை சட்டசபை நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிந்துகொண்டிருப்பார் ஜெயா டி.வியின் மூலமாக. “ஜென்ம சாபம் கொண்டேனும் ஜெயா டி.வி காணேன்என்று வீரவசனம் பேசிய என்னை “அம்மா என்ன சொல்லுறாங்க பாத்திங்களான்னு, சும்மா, சும்மா சீண்டுவார்.

நெல்லும் உயிர் அன்றே, நீரும் உயிர் அன்றே
மன்னன் உயிர்தே மலர்தலை உலகம்:
அதனால், யான் உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே”--------புறநானுறு

நாட்டிற்கு நெல்லும், நீரும் முக்கியமில்லை, அந்த நாட்டை ஆளும் அரசனே முக்கியம். இதனை அவன் உணர்ந்து மக்களுக்கு வேண்டியதை செவ்வனே செய்திடல் வேண்டும் என்பது அதன் பொருள். அப்படியா நடக்கின்றது இங்கு. நல்ல வேலை எழுதியன் இறந்துவிட்டான் இல்லன்னா, நிற்க இடமில்லாதவன் பெயரில், நில அபகரிப்பு புகாரில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பான்.

இன்னும் என்னமோ இந்த அம்மையாருக்கு, எம்.ஜி.ஆருடன் நடிப்பதாகவே நினைப்பு, சட்டசபையில், எவனோ எழுதிக் கொடுத்த காகிதத்தினை படிக்க, எதற்கு இவ்வளவு ஒப்பனைகள். ரெண்டு பட்டி, பர்ஸ்ட் கோர்ட், செகண்ட் கோர்டு என ஒரு வீட்டுக்கு பெயிண்ட் அடிச்சமாதிரி, முகத்துக்கும், கழுத்துக்கும் அத்தனை கலர் வித்தியாசம்.

தப்பித்தவறி கூட தி.மு.க, எம்.எல்.ஏ தெரிந்துவிட கூடாத அளவிற்கு ஒரு நேர்த்தியான ஒளிப்பதிவு / எடிட்டிங். சும்மா, சும்மா, மைனாரிட்டி தி.மு.க அரசு, கி.மு 4 ம் நூற்றாண்டில் நடந்த சம்பவம், மதுரை ஆதினம் சொன்னார்... இப்படி நாட்டிற்கு மிகவும் தேவையானவை மட்டும் விவாதிக்கப்படும் அதி புத்திசாலிகள் நிறைந்த சபையைக் காண, கண்கோடி வேண்டும். ஒரு சாதாரண மக்கள் பிரச்சனையை தீர்த்ததற்காக, மாநாட்டு போட்டு பேசுறது மாதிரியான சஞ்சாலப்புகள்.

கலைஞர், தன்னைப் புகழ்பாட வேண்டும் என்று கூறினாலும், அது கலைஞர் அரங்கத்தில் மட்டுமே அறங்கேறியது, இப்போது சட்டசபையில் அமோகமாக அமர்களப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இரண்டு நிமிடத்தில், கேட்க வேண்டிய ஒரு கேள்வியை, 10 நிமிடத்திற்கு பெத்த தாய கூட அம்மான்னு கூப்பிடாத பல பக்கிகள், அம்மா, அம்மாவென புகழ்பாடுகின்றார்கள். எங்கே போகுது நம்ம நாடு.
மக்கள் பிரச்சனை எதையாவது பேசுகிறார்களா என்றாள், எதுவுமில்லை. ஒரு மணி நேர அந்த நிகழ்சியில் ஒரு லட்டம் “தங்க தாரகை, ஒரு லட்சம் “தாயுள்ளம் கொண்ட தலைவி, ஒரு லட்சம் “புரட்சித் தலைவி, .... இப்படி லட்ச லட்சமான துதிகளை அள்ளிவிட்டு கோடிளை கைப்பற்றி, லட்சியங்களை கோட்டையிலேயே கோட்டை விட்டுவிடுகிறார்கள். எண்பது வயதுக்காரனுக்கும் இந்த அறுபத்தந்து வயதுக்காரர் தான் அம்மாவாம், எங்கு காணமுடியும் இந்த அறிவியல் அதிசயத்தை.
தமிழ் புத்தாண்டு, சித்திரையிலா, தையிலா என்ற பட்டிமன்றம் நடுவர் இல்லாமலே நடந்து கொண்டிருக்கின்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள், இவர்களது சண்டையில், (தலை)வலிதான் பிறக்கிறது. ஒரு பேயை விரட்ட ஆசைப்பட்டு, ஒரு பிசாசு நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது வேதனை. விதியின் வழியில் தான் மதி செல்லும் என்று கூறிக்கொண்டு இருந்திடத்தான் வேண்டுமோ?

இனிமேல், ஜெயலலிதா இருக்கும் வரை (ஆட்சியில்) தமிழ்நாட்டிற்கு போகவே கூடாதுங்குற நிலைமைக்கு வந்துவிட்டேன், இந்த பாழாய்போன பவர்கட்டினால். எங்க ஊருக்கு பரவாயில்லை, பக்கத்து ஊர் சங்கரன் கோவிலில் ரொம்ப அனியாயம். இடைத்தேர்தலை முன்னிட்டு, 24 மணி நேர பவர் சப்ளைக்கு சேத்து மாத்தாக இப்ப 12 மணி நேர பவர்கட்டாம்.

எங்கும் ஆடம்பரம், எதிலும் ஆடம்பரம் என்று எங்கு திரும்பினாலும் ஒரே அலப்பரையாகத்தான் இருக்கின்றது. 5 லட்சம் பெருமானமுள்ள உதவிதொகை கொடுக்கவரும் முதல்வருக்கு 15 லட்சம் ரூபாய் செலவில் பேனர்களும், ஃபிளக்ஸ்களும் தெருவெங்கும் தொங்குகின்றன. இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு சொத்து, அந்த கட்சிக்காரன் காசா?. இல்லை ஆட்சியினால் லாபம் கொழுத்த பணக்கார முதலாலிகளின் காசா?. வரி செலுத்துபவன் வறுமையின் பக்கம். செலவழிப்பவன் சுகங்களின் பக்கம். விழிநீர் வழிய வீதியின் ஓரத்தில் விழுந்து கிடக்கின்றோம் நாம்.
காமராஜர் ஆட்சிகாலத்தில், அவருடைய நண்பர் எஸ்.டி சுந்தரம், காமராஜரிடம் சொன்னாராம், நீங்கள் எவ்வளவோ சிறப்பான செயல்திட்டங்களை அறிமுகப்படுத்தி அதனை வெற்றிகரமாக செய்துகொண்டிருக்கின்றீர்கள், பல பேருக்கு கல்வி அறிவு கொடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள் இதை எல்லாம் ஒரு வீடியோ படமாக எடுத்து வைத்தால் அதனை மக்களுக்கு எளிதாக கொண்டுபோய் சேர்த்துவிடலாம் என்று சொல்ல, அதற்கு காமராஜர் எவ்வளவு செலவாகும் என கேட்க, 3 லட்சம் ஆகும் என்று நண்பர் சொல்வதைக்கேட்டுவிட்டு, காமராஜர் சொன்னாராம் அந்த 3 லட்சத்தை வைத்து நான் இன்னும் 10 பள்ளிக்கூடம் திறந்துவிடுவேனே என்று, பின்பு நண்பரிடம் நடையை கட்டுமாறு கூறிவிட்ட அந்த மகான்களைப் போன்ற அரசியல்வாதி இனி எப்போது நமக்கு கிடைப்பார்கள்.

தலைமை கொஞ்சம் தகிடதத்தோமாக இருக்கும் போது, அமைச்சர்கள் அதன் அச்சாரமாக இருக்க வேண்டும், நேரு பிரதமராக இருந்த போது, அவர் அமைச்சரவையில் இருந்த அவருடைய மருமகனே ஒரு ஊழல் புகாரை நிரூபித்து, சம்பந்தப்பட்டவர்களை, பதவி நீக்கம் செய்யவைத்தார். அப்படியா இருக்கின்றது இப்போது. வாயைத்திறக்காமல் இருக்கும் போதே, வளர்ப்பு பையன் மேல், கஞ்சா கேஸ் விழுக்கின்றது, இதைக்காணும் யாராவது தலைமைக்கு எதிராக பேசிவிடமுடியுமா என்ன?. ஒரு நல்ல அமைச்சர் எப்படி இருக்கவேண்டும் தெரியுமா?

ஒரு நாள், அரசனுடன் முல்லாவும் காட்டில் வேட்டையாடிவிட்டு அரண்மனை நோக்கிவந்து கொண்டிருக்கையில், அரசன் முல்லாவிடம் கேட்டார் “முல்லாவே என் ஆட்சி பற்றி மக்கள் என்ன நினைக்கின்றார்கள். முல்லா முன்னும், பின்னும் நோட்டமிட்டபோது ஒரு கழுதையினைக் கண்டார். சுமக்கமுடியாத அளவிற்கு சுமைகளுடன், வாயில் ஒரு பூட்டு போடப்பட்டிருந்தது, அதனுடன் ஒரு தடியுடன் ஒரு வணிகன் வந்தான். அரசே அந்த கழுதையை கவனியுங்கள் என்று கூற அரசனுக்கு ஒன்றும் புலப்படவில்லை. பின்பு முல்லா சொன்னார்

“அந்த கழுதைக்கும், நம் குடிமக்களுக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை

-------------------------------------------------------------------------யாஸிர்.

திங்கள், ஏப்ரல் 16, 2012

அழகிய கன்னிகளின் அற்புத தீவு.....


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
கல்யாண தேதி குறித்தவுடன், எல்லோருக்கும் தோன்றுவது போல், எனக்கும் எனது மனைவியுடன் எங்க எங்கயெல்லாம் போகனுமோ, அந்த இடங்களை எல்லாம் குறித்து வைத்துக் கொண்டேன். இதுல முதலாவது, மனைவியுடன் பார்க்கும் முதல் படம். கல்யாணத்துக்கு ஒரு ரெண்டு மாசத்திற்கு முன்னாடியிருந்தே, நம்ம கல்யாணத்த ஒட்டி என்னென்ன படங்கள் வருகின்றன, யாரு யாரு நடிச்சிருக்கா, இயக்குனர் யாரு, காமெடி படமா இல்ல ஆக்சன் படமா?, ஒரே நேரத்துல 4 படம் ரிலீஸ் ஆனா, அதில் எந்த படத்துக்கு கூட்டிக்கொண்டு போவது என்ற பலவிதமான சிந்தனையில் மனசு ஆழ்ந்திருந்தது. எனக்கு அஜித்குமார் பிடிக்கும் என்பதாலும், பில்லா 2, முதலில் மார்ச் மாதம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டதாலும், சரி தல படமா, தல படத்தையே பார்த்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். கல்யாண தேதி நெருங்க, நெருங்க படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போகி, ஆசை நிராசையாகிவிட்டது.

இது சரிப்படாது என்று எண்ணி, என் மனைவியிடமே “ உனக்கு எந்த படத்துக்கு போகனும்னு சொல்லு, நாம அந்த படத்துக்கே போகலாம் என்று சொன்னேன். அவள் உடனே “நண்பன் என்றாள், எனக்கு நீ “எதிரி ஆகிடுவ, அந்த படத்தவிட்டு விட்டு வேறு ஏதாவது படம் சொல்லுன்னு நான் விஜயகாந்த் ஸ்டைல்ல சொல்ல, பேச்சுவார்தையில் உடன்பாடு எட்டப்படாமலே கூட்டம் கலைந்தது. ஆனாலும் விடலியே, மறுநாள், மறுபடியும் ஆரம்பமானது
சொல்லுமா எந்தப் படத்துக்கு போகலாம்?

ஒ.கே, ஒ.கே எப்ப ரிலீஸ்? என்று எதிர் கேள்வி கேட்டாள் அவள்

தெரியலியே, அடுத்தமாசம் தான் ரிலீஸ் ஆகுமுன்னு நினைக்கிறேன்.

ஓ, அப்படியா. அந்த படம் வந்த கண்டிப்பா பாக்கணும்?

பார்த்துட்டா போச்சு, ஆமா, அந்த படம் உனக்கு ஏன் பிடிக்கும்?, இயக்குனர் ராஜேஸுக்காகவா, இல்ல சந்தானத்துக்காகவா?

உதயநிதி ஸ்டாலினுக்காக.

உலக வரலாற்றிலேயே, நீ ஒருத்திதாண்டி, படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே, ஒரு நடிகனுக்கு ரசிகையானது.

அதுக்கு காரணம் இருக்கு மச்சான், என்ன தெரியுமா?

என்ன, அவன் ஸ்டாலின் பையங்குறதுனாலையா?

இல்ல, அவன் உங்கள மாதிரியே இருக்கான்?

!?!?!?!?!?!?!?!?!?! (இவ நம்மள அசிங்கப்படுத்துறாளா இல்ல உதயநிதிய அசிங்கப்படுத்துறாளா?)

இப்படி சொன்னதுக்கப்புறம் தான் உதயநிதி ஸ்டாலினை உற்றுப் பார்த்தேன், ஒரே மாதிரியான இரண்டு படத்துல 6 வித்தியாசம் கண்டுபிடிக்குற மாதிரி, ஒரு கையில கண்ணாடி, இன்னொரு கையில அந்த ஹீரோவின் படத்த வச்சிக்கிட்டு பார்த்துக்கிட்டு இருந்தேன். எல்லாமே வித்தியாசமாகத்தான் இருந்துச்சி, ஒரு ஒற்றுமை கூட இல்ல. ஆஹா இவ நம்மள் ஓவரா உட்டு கலாய்கிறாங்குற உண்மைய, எல்லாரையும் போலவே எனக்கும் ரொம்ம லேட்டாகத்தான் தெரிஞ்சுது.

என் வாழ்கையில பக்காவா பிளான் பண்ணி ஏதாவது செஞ்சா அது அட்டர் பிளாப் ஆகும். அது மாதிரித்தான் இதுவும் ஆகிவிட்டது. ஆனால் பிளான் பண்ணாம ஒரு நாள் அது நடந்தது.

குற்றாலத்துல திடிரென பெஞ்ச மழையால, அரிவியில் தண்ணீர் விழுகுதுன்னு என் மச்சான் ஒருவன் சொல்ல, சரி இன்னைக்கு போவமான்னு அவனே கேட்க, சரி போகலாமுன்னு நான் சொல்ல, ஒரு ஆட்டோ அமத்தி அவங்க அவங்க ஜோடியோட மதிய சாப்பாடு முடித்து போகலாமுன்னு முடிவானது.
இங்க தான் கதையில ஒரு டுவிஸ்டு. ஆட்டோ வரல, ஏதோ முக்கியமான வேலையிருக்குன்னு ஆட்டோ டிரைவர் (எனது மச்சானின் நண்பர்) சொல்ல பிளான் அல்மோஸ்ட் கேன்சல். இத கேட்ட மனைவிமார்கள் முகம் கோண, இன்னைக்கு போகலன்னா என்னைக்கும் போகமுடியாதுன்னு முடிவு பண்ணி, பைக்குல போகலாமுன்னு நான் என் வீட்டில் உள்ள ஸ்ப்பிளண்டரை ரெடி பண்ண, எனது மச்சான் டி.வி.எஸ் எக்ஸலுடன் நின்னான் (அவனுக்கு கியர் வண்டி ஓட்டவராது). பெரிய வண்டியும், சின்ன வண்டியும் மேச் ஆகாதுன்னு, நான் என் வீட்டில் அப்பாவிடம் இருந்த எக்ஸலை எடுத்துக் கொண்டு குற்றாலத்தை நோக்கி கிளம்பினோம்.

எங்க ஊருக்கும், குற்றாலத்துக்கும் மிஞ்சிப்போனா ஒரு 15 கி.மீட்டர் தான். அதையும் ஒரு மணி நேரமா ஓட்டு ஓட்டுண்ணு ஓட்டிக்கொண்டு போய் சேர்ந்தோம். வேறு எந்த அருவியிலும் தண்ணீர் விழாத காரணத்தால், ஐந்தருவியில் மட்டும் குளித்து விட்டு, சீக்கிரமாக வீடு திரும்ப திட்டமிட்ட நேரத்தில்,

என் மச்சான் சொன்னான். “அப்படியே தென்காசியில் படம் பார்த்துவிட்டு போகலாம்.

எனக்கும் ஆசை தான் இருந்தாலும் படம் ஒன்னு சரியில்லைய மச்சான், கொஞ்சம் உருப்படியான படம்னா அரவான் தான், ஆனா அது எப்படி இவள்களுக்கு பிடிக்கும்? என நான் கூற.

தாய்பாலாவில் “நாங்க இன்னைக்குத்தான் ரிலீஸ், வேணும்னா அதுக்கு போவமா?
நாங்கவா, சரி போவோம்னு சொல்லி, குற்றாலம் வழியாக தென்காசிக்கு (3.கி.மீ) செல்லும் வழியில் உள்ளது அந்த தியேட்டர். தியேட்டர் நெருங்கி வந்ததும், நான் ரோட்டைப் பார்த்து ஓட்டிக்கொண்டிருந்த போது, என் மனைவி பதறிய குரலில் சொன்னாள், “மச்சா, வேணாம், வண்டிய நிறுத்தாம அப்படியே ஓட்டுங்கன்னு. ஏண்டி இது தானே அந்த தியேட்டர் என்று, வண்டியை நிறுத்திவிட்டு போஸ்டரைப் பார்த்தேன்.

“அழகிய கன்னிகளின் அற்புத தீவு

போஸ்டரில் ஒரு அழகிய பெண், பாவம் ரொம்ப, ரொம்ப கஷ்டப்பட்ட பேமிலி போல, கொஞ்ச துணியோட சிரிச்சிக்கிட்டே, சும்மா கும்முன்னு நின்றது. ஓஹோ, இதுக்குத்தான் நீ, அப்படி அலரியடிச்சு வண்டிய நிப்பாட்டாதீங்கன்னு சொன்னியா? ன்னு என் மனைவியிடம் அசடுவழிய கேட்டேன். “அத வண்டிய கொஞ்சம் தள்ளிக் கொண்டு போயி, அங்கிட்டு நின்னு பேசலாமே என்று பல்லை கடித்துக் கொண்டு சொன்னாள்.

சரி வேறு வழியில்லை, அரவான் தான் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்து. இறுதியாக அரவானைப் பார்த்துவிட்டு வந்தோம். எங்க இவள்களுக்கு பிடிக்கப்போகிறது என்று நினைத்த எனக்கு, ஒரே ஆச்சர்யம், எனக்கு புரியாத சில இடங்களை, அவள், எனக்கு விளக்கிக் கொண்டிருந்தாள்.

படம் நல்லா இருந்தாலும், அந்த அழகிய கன்னிகளை மறக்க முடியவில்லை. மறு வாரம், ஒரு வேலையாக, தனியாக தென்காசி செல்லும் நிலை வந்த போது, அந்த தியேட்டருக்குப் போனேன். படத்த மாத்திட்டானுங்க, அட அது கூட பரவாயில்ல.

 தக்காளி.....அந்த போஸ்டரையும் மாத்திட்டானுங்க............

--------------------------------------------------------------------------யாஸிர்.

சனி, ஏப்ரல் 14, 2012

கடவுள் எனும் தொழிலாளி கண்டெடுத்த முதலாளி.

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
 முகநூலில் நண்பர்கள் அனுப்பும் சில விசயங்களைப் பார்த்துவிட்டு ஒரு கணம் மனசு கிடந்து துடிக்கும். முன்பு, அப்படியான ஒரு விசயம் கபாடி உலக கோப்பையை வாங்கிவிட்டு நமது நாட்டு வீராங்கனைகள் நாடு திரும்பிய போது, திரும்பிப் பார்க்கக்கூட எவனும் செல்லாதது. இது மக்களின் தவறு இல்லை, இது முற்றிலுமான அரசாங்கத்தின் தவறு, மீடியாக்களின் தவறு. இந்த ஒரு சாதனையை இந்தியனாக நாம் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டிய விசயத்தினை முறையாக மக்களிடம் சென்று சேர்க்காதது அவர்களுடைய பொருப்பின்மையை காட்டுகின்றது. விமான நிலையத்தில் இருந்து, அவர்களின் வீட்டிற்கு ஆட்டோவில் 5 பேராக அட்ஜெஸ்ட் செய்து செல்லும்படியாக அலைக்கழித்தது அரசாங்கத்தின் குற்றம் இல்லையா?. இன்னும் நம்மில் பலருக்கு, கபாடி பெண்கள் பிரிவில் இந்தியா வென்றது தெரிந்திருக்கும் என்பது சந்தேகமே !. இன்று விவசாயத்திற்காக பாண்டிச் சேரியைச் சார்ந்த திரு. வெங்கடபதிக்கு பத்மஸ்ரீ பட்டம்பெற்றது பற்றியது.

ஒவ்வொரு முறையும், பத்மஸ்ரீ, பத்ம பூசன் விருதுகள் வழங்கும் போது, எத்தனை நடிகர், நடிகைகளுக்கு விருது கிடைக்கின்றது என்பதனை முதல் பக்கத்தில் போடும் எந்த எச்சக்கல பத்திரிக்கைகாரனும், அவன் பத்திரிக்கையில் இந்த உத்தமனுக்கு ஒரு பெட்டி செய்திக்குறிய இடம் கூட கொடுக்கவில்லை. இது ஒரு தமிழனுக்கு கிடைத்திருக்கின்ற காரணத்திற்காக அதை வெளிச்சம் போட்டு காட்டாததற்காக ஆதங்கப்படவில்லை, மாறாக அவரின் துறை சம்பந்தப்பட்டதற்காகவே என்னுடய கோபம். ஒவ்வொரு வருசமும் வானிலை மாற்றங்களினால் ஏற்படும் அவஸ்தைகளைப் பற்றி பக்கம் பக்கமாகப் போட்டு விட்டு, மரம் நடுவீர், நாட்டைக் காப்பீர் என்று போட்டுவிட்டு சமுதாயக் கடைமையாகக் காட்டிக்கொள்ளும் பேப்பர்காரனும் சரி, சேனல்காரனும் சரி சுயநலவாதிகள் தான். 

இந்த வார விகடனின் இரண்டு புத்தகங்களில் (ஆனந்த விகடன், ஜீனியர் விகடன்) இவரது பேட்டி மற்றும் அனுபவத்தினை நமக்கு அளித்ததில் சற்று ஆருதல் கொஞ்சம் ஆனந்தம் எனக்கு. எப்போதும் மிஸ்டர் மியாவ் படிக்கும் நான், ஏனோ என்னை அறியாமலேயே முதலில் பத்மஸ்ரீ வெங்கடபதி அவர்களைப் பற்றி படிக்க ஆர்வமாகினேன். இனி அவரைப் பற்றி அவர்.
''நான், பாரம்பரியமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். வீட்டுக்கு ஒரே பிள்ளைங்கறதால செல்லமாத்தான் வளர்ந்தேன். நாலாம் கிளாஸுக்கு மேல படிப்பு ஏறல. ஜாலியா சுத்திக்கிட்டிருந்த என்னோட போக்கை மாத்துறதுக்காக, 16 வயசுலேயே கல்யாணம் முடிச்சு வைச்சுட்டாங்க. 19வயசுலதான் எங்க குடும்பத்துக்குச் சொந்தமா இருந்த நிலத்துல கால் வெச்சேன். நெல்லு, கடலைனு வழக்கமான பயிர்கள்ல லாபமே இல்லை. லாபம் தேட ஆரம்பிச்சப்பத்தான், 'கனகாம்பரச் செடியைப் பயிர் செய்'னு பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி முதல்வர் சம்பந்த மூர்த்தி ஆலோசனை சொன்னார். அப்படியே செஞ்சேன், நல்ல லாபம் கிடைச்சுது.

பிறகு, சாகுபடிப் பரப்பை அதிகப்படுத்​தறதுக்காக நாற்றுகளை விலைகொடுத்து வாங்கினேன். அதுல தரம் இல்லை, பயங்கர நஷ்டம். 'நாற்றுகளை நாமளே உருவாக்குவோம்'னு தொடர்ந்து ஆராய்ச்​சியில இறங்கின எனக்கு 'கதிர் வீச்சுமுறை கைகொடுத்துச்சு. கல்பாக்கம் அணு மின் நிலைய உதவியோடு அதிலும் ஜெயிச்சேன். இதுக்கு உதவி செய்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரையே அந்த கனகாம்பர ரகத்துக்கு வெச்சேன். பிறகு, சவுக்கு மர ஆராய்ச்சியில இறங்கி, ஏக்கருக்கு 200 டன் மகசூல் கிடைக்கற ரகத்தை உருவாக்கினேன். இதுக்கு உதவி செய்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேரையே சவுக்குக்கு வெச்சேன்'' என்று சொன்ன வெங்கடபதி, ''கனகாம்பரம், சவுக்கு கன்னுகளை எல்லாம் குறைஞ்ச விலையிலதான் விவசாயிகளுக்குக் கொடுத்துட்டு வர்றேன். இப்ப இது ரெண்டும் இந்தியா முழுக்கப் பரவி, விவசாயிகளுக்கு பெரும் உதவியா இருக்கு. அந்த வகையில இந்த 'பத்மஸ்ரீவிருகுக்கு நான் தகுதியானவன்தான்னு நினைக்கிறேன்'’

அவரே தொடர்ந்து, ''விருது வாங்கினதுல சந்தோஷம்ன்​னாலும் ஒரு வருத்தமும் எனக்கு இருக்கு. விவசாயி​களை இந்த நாடு இன்னும் கூட சரியா மதிக்கலை. விருது வாங்கினவங்கள்ல நான் மட்டும்தான் விவசாயி. ஜனாதிபதி மாளிகைக்கு வந்திருந்த அரசியல்வாதிங்க, அதிகாரிங்க எல்லாருமே... விருது வாங்கின சினிமாக்காரர்கள், தொழில் அதிபர்கள், இசைக் கலைஞர்களை மதிச்சி, பக்கத்துல கூப்பிட்டுப் பேசினாங்க. போட்டோ எடுத்துக்கிட்டாங்க. ஆனா, ஒரு விவசாயியான என்னை யாரும் கண்டுக்கவே இல்ல.

ஆனா, ஒரு காலம் வரும்... அப்ப நிச்சயமா எல்லாருமே விவசாயிகளை மதிப்பாங்க'' என்கிறார் நம்பிக்கையுடன்.

அதே நம்ம்பிக்கையுடன் நாமும் இருப்போம். சும்மாவா சொன்னான் வள்ளுவன் அன்றே

"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை."
------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்.

புதன், ஏப்ரல் 11, 2012

ங்ங்கொய்யால ஊராடா இது.......


நம் அனைவரின் மீதும், இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
எனக்கு தெரிந்து, என்னுடய ஊரில், அதிக நாட்கள் இருந்தது இந்த முறையாகத்தான் இருக்கும். முழுமையான 60 நாட்கள் (இந்த முறை இரண்டு மாதம் விடுமுறைக்கு காரணம் எனது கல்யாணமாக இருந்தது). பெங்களூரிலும் சரி, துபாய்கு வந்தபின்பும் சரி, இத்தனை நாட்கள், நான் எனது ஊரில் விடுமுறையை செலவழித்ததே இல்லை. அதனால் தான் என்னமோ எனக்கு, எங்க ஊரை இதற்கு முன்பு அவ்வளவு பிடித்திருந்தது.

எல்லோரும் துபாயில் இருந்து வந்தவுடன், அவர்களிடம் கேட்கும் முதல் கேள்வி, “என்னப்பா எப்போ வந்தாய்? என்று, ஆனால் எனது ஊரில் “எத்தன மாதம் லீவு?, எப்ப மறுபடியும் பயணம்? இந்த கேள்வி, எனது பக்கத்து வீடு, சொந்தங்களுக்கு கல்யாணப் பத்திரிக்கை கொடுக்கச் சென்ற போது, எதிர் கொண்டது. எப்படி இருக்கும் நமக்கு. நான் கல்யாணத்திற்கு வந்திருக்கன்னு தெரிஞ்சிருந்தும், பக்கிகள் அந்த கேள்விய அழுத்தி, அழுத்தி கேட்குதுங்க.

எங்க ஊரைப் பொருத்தவரை, துபாயில் இருந்து கிளம்பும் தேதிய நாம முடிவு செய்யணும், துபாய்கு வரும் தேதிய எதிர்வீட்டுக்காரன் தான் முடிவு செய்வான். காலையில வீட்டவிட்டு கிளம்பும் போது, எங்கடா போற? ன்னு கேட்டா, போகுற காரியம் போக்காயிருமுன்னு எங்கப்பாவே கேட்கமாட்டாறு, பக்கத்து வீட்டுக்காரன், கொட்டாவிய, கம்முகட்டு வழியா விட்டுக்கிட்டே “எங்க....த்தா கா....லயிலே கிளம்பியாச்ச்ச்ச்ச்ச்சு ங்ங்க்ஸ்ஸ்ஸ்? ன்னு கேட்டுகிட்டே வண்டிமுன்னாடி வந்து நிப்பான். ஒன்னுமில்ல மாமா, சும்மா ரோட்டுக்கு........ன்னு பல்ல கடிச்சி, வாய சிரிச்ச மாதிரியே வச்சிகிட்டு பதில் சொல்லனும்.
ஊருக்குள்ள, எவனையும், எவனுக்கும் பிடிக்கல. பேசுறவனெல்லாம், அவன பெரிய யோக்கியன்னு நினைச்சுக்கிட்டு பேசுறான். தன்னை, தன்னுடைய மாமன், மச்சான் நல்லவன்னு சொல்லனுங்குறதுக்காக, அடுத்தவன் பேருல, லோன் எடுத்து, இவன் வட்டிக்கி கொடுக்குறான். சமுதாயத்த நான் தூக்கி நிப்பாட்டுறன்னு வேட்டிய தூக்கிகிட்டு வந்தவன், துண்டக்காணம், துணியக் காணமுன்னு ஓடுறான். விவசாயம் பாக்கலாமுன்னு துபாயில வேலைய விட்டு வந்தவனப்பத்தி வஞ்சகம் பேசி, பேசி சவுதிக்கு சானியள்ள அனுப்பிட்டானுங்க. லட்சங்கள் எல்லாம் போயி, கோடியில பேசுதுங்க, பத்துரூபா கூட சம்பாதிச்சு கொடுக்காத, கோட்டிகள்.

ஊரைப் பொருத்தவரை ஒன்னே ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது. எல்லோருக்கும் தான், தலைவன் ஆகனும்னுங்குற எண்ணம் வந்திருச்சு. வீட்டுப் பிரச்சனைக்கு வீதியில வந்து சண்ட போடுறன், ஊருப் பிரச்சனைக்கு ஓடி ஒளியிறான். சாக்கடை அடச்சிருக்கு, நம்ம ஏரியா தண்ணி பைப்பை திருப்பி, அடுத்த ஏரியாவிற்கு கொண்டுபோகுறான், இத எதிர்த்து போராட்டம் பண்ண வாங்கன்னு அந்த வார்டு கவுன்சிலர் கூப்பிட்டா, இந்த கிளம்பிட்டாரு அன்னா ஹசாரேன்னு, கேலி பேசுறான். ஊர் தலைவர் பதவிக்கு நடக்கும் சண்டய வேடிக்கை பார்க்க, வேகம் எடுத்து செல்கிறது எங்க ஊருக்காரனுங்க கால்கள்.

அமைப்புகள் அதிகமாகிவிட்டது,
-அதனால்
அமைதி குறைந்துவிட்டது.

எத்தனை அமைப்புகள்தான் இருக்கவேண்டும் ஊரில், அத்தனை அமைப்பும் அங்கொன்னும், இங்கொன்னுமாக எண்ணிக்கையில் அடங்காது. எத்தனை அமைப்பு இருக்கோ, அத்தனை அமைப்பிற்கும் ஒரு, ஒரு பள்ளிவாசல்கள். முன்பு தொழுகைக்கு 1000 பேர் ஒன்னா வருவான். இப்போ பத்து, பத்து பேரா 100 பள்ளிவாசல்களில் தொழுகிறான். ஊர் பணம், உறங்கிக்கொண்டிருக்கின்றது. அந்த பணத்தை வைத்து ஊருக்கு என்ன நல்லது செஞ்சிருக்கீங்கன்னு கேட்க ஆள் இல்லை. பொதுத் தேர்வு நடைபெறும் இந்த நேரத்தில், கரண்ட் இல்லாத இரவு நேரத்தில், மாணவர்களுக்கு ஜெனரேட்டர் மூலமாக படிக்கவைக்க பள்ளிவாசலை ஏற்பாடு செய்யலாம். கோடை விடுமுறையில் பெண்களுக்கு தையல் போன்ற சுய சம்பாத்திய பயிற்சிகளை கொடுக்கலாம். ஆங்கில வகுப்புக்கு ஏற்பாடு செய்யலாம். வட்டியில்லா கடன் கொடுத்து கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவலாம்.............. ஒரு மண்ணும் கிடையாது.
ஊரில் படிப்பாளிகள் அதிகமாகிவிட்டார்கள் என்று சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கும் கூட்டத்தப் பார்த்து “மடையர்கள் என்று சொன்னால் என்ன தப்பு. படிப்புக்கும், அறிவிற்கும் வித்தியாசம் தெரியாமல் போன வீணர்கள். கம்யூட்டர் சயின்ஸ் படித்தவனுக்கு மானிட்டருக்கும், கீ போர்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. பிறகு அவன் படிச்சு என்ன புண்ணியம். துபாயில் வேலை செய்கிறவனில் எத்தனை பேர், அவனவன் படித்த படிப்பிற்கான வேலையை செய்கின்றான்?. M.C.A படிச்சவனுக்கும், சீப்போர்டு டிராலி கிளார்க் வேலைக்கும் என்ன சம்பந்தம். B.B.A படிச்சவனுக்கு, பலுதியா ஹெவி டிரைவர் வேலைக்கு என்ன தொடர்பு. திரிஷா இல்லன்னா, ஒரு திவ்யான்னது மாதிரி, கிடைக்குறத ஏத்துகிற கூட்டமாகிவிட்டது கொடுமை. துட்டு, டப்பு, மாலு இந்த மூணும் எங்க கிடைக்கோ அதுதான் முக்கியமே ஒழிய, M.C.A, B.B.A எல்லாம் சும்மா லுலுலாய்க்குத்தான்.

துபாயின் புண்ணியத்தில், பணம் புறழ்கிறது, பொண்டாட்டிகள் பல்லிளித்து பக்கத்து வீட்டுக்காரியிடம் வாசலில் இருந்து பொறம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தெருவில் ஒரு ஆண் வருகிறார் என்றால், அடிப்பாங்கறைக்கு ஓடும் பெண்கள் போய், பெண்கள் இருக்கிறார்கள் என்று விலகிச் செல்லும் ஆண்கள் அதிகமாகிப் போனார்கள்.
விலைநிலங்கள் எல்லாம் விலை மதிப்பில்லா, பிளாட்டுகளாகிப் போயின. வாங்குவது என்பது முடிவாகிப் போன நிலையில், பார்த்து வாங்க வேண்டாமா? அப்ரூவல் இருக்கா?, நேரான பாதை இருக்கா? எதனையும் யோசிப்பது இல்லை. இப்புட்டுத் தானோ!!!!!!!!!!, வெரும் @#$%& லட்சமா!!!!!!!!!!! என்று ஆச்சிரியக் குறியே ஆச்சரியப் பட்டுப் போகும் அளவிற்கு, அதிசய்ங்கள் நடந்துகொண்டிருக்கின்றது. இதெல்லாம் எதுவரைக்கும், துபாய், சவுதி ஷேக்குகள் எல்லாம், பேக்குகலாக இருக்கும் வரை மட்டும். அதுக்கு அப்புறம்?????????????????

“பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.

என்ற வள்ளுவனின், கூற்றுப்படி எது, எது ஒரு நல்ல ஊரில் (நாட்டில்) இருக்கக்கூடாதோ, அதெல்லாம் இருப்பதுவே கடையநல்லூர். இப்ப சொல்லுங்க என் தலைப்பு சரி தானே.

இவ்வளவு சொல்லுறியே, நீ என்ன உத்தமனான்னு கேட்டா, சத்தியமா இல்ல, மேலே சொன்னதுல பாதி என் வீட்டிலும் நடக்குது, ஏன்னா நாங்களும் கடையநல்லூர்காரங்கதானே......

-------------------------------------------------------------------------யாஸிர்.