திங்கள், ஜூலை 16, 2012

நாய் பொழப்புடா இது.....


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
இறைவன் அருமையான இந்த உலகத்தை மனிதனுக்காகவே படைத்தான். உலகத்தை உருவாக்கியவுடனே அவன் மனிதனை உருவாக்க விரும்பாமல், மனித ஜாதி இந்த உலகில் நல்ல முறையில் வாழ அவனுக்கு துணையாக சில மிருகங்களை படைத்தான்.

முதல் நாள் ஒரு பசுவை உருவாக்கினான். பின்பு அதனிடம் “ஏய் பசுவே! உன்னை நான் படைத்ததற்கான காரணம், நீ பூமியில், விவசாயின் கட்டளைப்படி நடந்துகொள்ளவேண்டும், அவனுடய தொழுவத்தில் இருந்து, வெயிலில் கஷ்டங்களை அனுபவித்தாலும், மனிதனுக்கு பால் கொடுத்து அவனுக்கு துணையாக இருக்க வேண்டும், இதற்காக உனக்கு 60 ஆண்டுகால வாழ்க்கைய தருகிறேன்என்று கூறினான்.

அதற்கு பசு, இறைவனிடம் “பிரபு, தாங்கள் கட்டளைக்கு கீழ்படிந்து நடக்கின்றேன், ஆனால் இந்தமாதிரியான ரணமான வாழ்க்கைக்கு எனக்கு 60 வருடம் என்பது அதிகம், ஆகையால் 20 ஆண்டுகளை நான் எடுத்துக் கொண்டு, 40 ஆண்டுகளை திரும்ப கொடுத்துவிடுகின்றேன் என்றது. இறைவனும் பசுவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டான்.

இரண்டாவது நாள், ஒரு குரங்கினை படைத்தான், அதனிடம் “குரங்கே, நீ மனிதனுக்கு வேடிக்கை காட்டவும், சில செயல்களை செய்து அவர்களை சிரிக்கவைக்கவும் படைக்கப்பட்டிருக்கின்றாய், அதற்காக உனக்கு 20 ஆண்டுகால வாழ்க்கையை உனக்கு பூமியில் நான் அளிக்கின்றேன். என்றான் இறைவன்.

அதனைக் கேட்டுக்கொண்ட குரங்கு, இறைவனிடம் “இறைவா, மற்றவர்களை மகிழ்விப்பது என்ற பணி எனக்கு கொடுக்கப்பட்டதற்கு எனக்கு சந்தோசம் தான், ஆனால் 20 ஆண்டுகாலம் என்பது அதிகம், ஆகவே அதனை 10 ஆண்டுகளாக குறைத்து அருளவேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இறைவனால் குரங்கின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மூன்றாவது நாள், இறைவன் மனிதனுக்காக நாயைப் படைத்தான். மேலும் அதனிடம் “வீட்டிற்கு பாதுகாப்பாக இருக்க, வேகமாக வரும் புது நபர்களை வீட்டு முற்றத்திலே நிருத்த, மெதுவாக செல்பவர்களை வேகமாக ஓடவைக்க உன்னை படைத்துள்ளேன். நீ வீட்டின் வாசற்படியில் கிடந்து அவர்களுக்கு உதவ வேண்டும், இதற்காக உனக்கு நான் 20 ஆண்டுகால வாழ்க்கையை அளிக்கின்றேன் என்றான். இதனைக் கேட்ட நாயோ “மற்றவர்கள் கூறியதைப் போன்றே நானும் கூற ஆசைப்படுகின்றேன். 20 ஆண்டுகாலம் என்பது எனக்கு அதிகம், ஆகவே எனக்கும் 10 ஆண்டுகளாக என் வாழ்க்கையை குறைத்து அருளும்படி வேண்டுகின்றேன் என்று வேண்டியது. இறைவனும் அதற்கு சம்மதித்தான்.
இறுதியாக, இறைவன் மனிதனைப் படைத்தான். அனைவரிடமும் சொன்னைப் போல் மனிதனிடமும் “உண்டு, உறங்க, மகிழ்ச்சியாக இருக்க, திருமணமுடித்து குழந்தைக்களைப் பெற்றுக் கொள்ள உனக்கு பூமியில் 20 ஆண்டுகால வாழ்க்கையை தருகின்றேன் என்றான்.

இதனைக் கேட்ட மானிடன் “ஓ மை காட், இவ்வளவு செயல்களை நான் பூமியில் செய்ய எனக்கு வெறும் 20 ஆண்டுகள் போறவே போறாது, ஆதலால் பசு கொடுத்த 40 ஆண்டுகள், குரங்கு, நாய் திரும்ப கொடுத்த பத்து, பத்து ஆண்டுகளை எனக்கே வழங்கிட வேண்டுகிறேன், மை லாட். இறைவனும் மனிதனின் வேண்டுதலை ஏற்றுக் கொண்டு, பசு, குரங்கு, நாய் திரும்ப கொடுத்த வருடங்களை மனிதனுக்கே கொடுத்து அனுப்பினான்.

ஆகையால்தான் நாம் முதல் இருபது வருடங்களில் உண்ண, உறங்க, விளையாடி பொழுதை கழிக்கின்றோம். பின்பு அடுத்த 40 வருடங்களில் பசுவைப் போல வெயில், மழை பாராது உழைத்து, நமை அண்டியிருப்பவர்களுக்காக வாழ்கின்றோம். அடுத்த 10 வருடத்தில் குரங்கைப் போல பேரக்குழந்தைகளுக்கு வேடிக்கைகள் காட்டி, மகிழச்செய்கின்றோம். இறுதியான 10 ஆண்டுகள், வீட்டிற்கு வெளியே கட்டிலில் கிடந்தபடி நாயைப் போல, வீட்டிற்கு வருகிறவர், போகிறவர்களை நிறுத்தி கேள்விகேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

--------------------------------------------------------------------------------------யாஸிர்.

வியாழன், ஜூலை 12, 2012

நமிதாவை, எனக்கு ஏந்தெரியுமா பிடிக்கும் ????


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
ரசனை இல்லாதவன் சொரனை கெட்ட மனிதன் என்பது பழமொழி. அதுக்காக எல்லோருக்கும் ஒரே மாதிரியான ரசனை இருக்காது. நமக்கு சிலபேரை கண்டாலே பிடிக்காது, அதே மாதிரி சில பேரை பார்க்கும் போதே பிடிச்சுடும். அதுக்கெல்லாம் காரணம் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. கல்லூரி காலத்துல உடன் இருக்கும் நண்பர்களிடம் அடிக்கடி கட்டயகொடுப்பதுண்டு. அதுக்கு பதிலாக என்னை கவுக்குறதுக்கு அவனுங்களுக்கு இருக்கும் ஒரே சாக்கு நான் ஜோதிகா ரசிகனாக இருந்தது மட்டும்தான். எவனாவது சிக்கிட்டான்னா, திருவிழா தீயா கொண்டாடிக்கிட்டு இருக்கும் போது, திடிரென “நீ என்னடா பெரிய ஒழுங்கா, ஜோதிகாவுக்கு உலகத்துலயே நீ ஒருத்தன்தாண்டா ரசிகன், அந்த குண்டம்மாவயும் ரசிக்கிற ரசனகெட்ட பயதாணடா நீயி என்று சொன்னவுடனே, வேதம் புதிது படத்துல சத்தியராஜ் கன்னதுல விழும் அடி, என் தலையில விழுந்த மாதிரி இருக்கும்.

‘உனக்கு என்னடா தெரியும் தலைவிய பத்தி, இப்படி இப்படி ஆடும்டா என் தலைவின்னு சொல்லிக்கிட்டே ஜோதிகாவின் டான்ஸ் ஸ்டெப்ப போட்டுகாட்டி, அதுக்கும் ஏறு வாங்குவேன். தனி ஆளா நான் எத்தன பேரைத்தான் சமாளிக்குறதுன்னு எண்ணி, எண்ணி ரூமுக்குள்ள போயி, ரூம பூட்டிக்கிட்டு தேம்பி தேம்பி கண்ணீர்விட்ட காலங்கள் எல்லாம் இருக்கு.

அப்பத்தான் என் எதிர் வீட்டு பாப்பாவின் (யோவ், சின்ன குழந்தயா, புத்தி போகுது பாரு...) 3ம் வகுப்பு பாடத்துல வருகுற கதைய படிச்சேன். ஒரு சிங்கம், ஒரு மாட்ட துரத்திக்கிட்டு ஓடி, கொன்று திண்ணும். இப்படியா பல நாட்கள் நடந்துகொண்டிருக்கும் போது, மாடுகள் எல்லாம் ஒன்று கூடி, அவர்களின் பலத்தை கூட்டமாக சென்று காட்ட, சிங்கம் காட்டவிட்டே ஓடும். ஆஹா என்ன அற்புதம், என்ன அற்புதம் நாம ஒண்டியா இருக்குறதுனாலத்தான் இந்த (அ)சிங்கங்கள் எல்லாம் அல்டாப்பு வேல பண்ணுதுங்க. இனி அப்படி நடக்காது, ஹாஸ்டல் புல்லா ஜோதிகாவின் ரசிகர்களை திரட்டி, யாருக்காவது ஏதாவது பிரட்சனைன்னா நாம ஒன்னா நின்னு எதிரிய ஓட, ஓட விரட்டனும் என்ற கொள்கை முடிவுடன், நோட்ட தூக்கிகிட்டு கணக்கெடுக்க ஒவ்வொரு ரூமா போனா...................சிம்ரன்ங்கரான், மீனாங்குரான், ரம்பாங்குரான், தேவையானிங்குறான், ஏன் மஜ்னு படத்த பார்த்துட்டு டுயுங்கிள் கபாடியாவுக்கு கூட ஒருத்தன் இருந்தான், ஆனா தமிழக விடிவெள்ளி, தங்க சிலை, தாயுள்ளம் கொண்ட ஜோதிக்காவுக்கு மட்டும் எவனும் சிக்கல.
கங்கூலி இந்திய டீமில் கேப்டனாக இருக்கும் போது எனக்கு பிடிக்கவே பிடிக்காது. எந்த மேட்சு பார்த்தாலும் “ஆண்டவா இந்த மேட்சுல இந்தியா ஜெயிக்கனும், அதோட கங்கூலி டக் அவுட் ஆகனும் என்றமாதிரியெல்லாம் வேண்டியிருக்கேன். பத்து ரன்னுக்கு மேல அடிச்சுட்டா, என் நகத்த கடிச்சிக்கிட்டு, எப்பண்டா அவுட் ஆகுவான்னு எல்லாம் காத்துக்கொண்டிருந்தேன். 2003ல் இந்தியா உலக்கோப்பை இறுதிப் போட்டிக்கு போனதும், எல்லா எலக்ஷனிலும் ராமதாஸுக்கு இருக்கும் மனநிலையில் தான் அப்போ இருந்தேன், ஆஸ்திரேலியாவி சப்போர்ட் பண்ண முடியாது அதே நேரத்துல இந்தியா டீமுக்கு வேண்டினா, கேப்டன்ங்குற முறையில கங்கூலி கப்ப தூக்கிகிட்டு நிப்பானே என்ற குழப்பத்துல முடிவுக்கு வருவதற்கு முன்பாகவே கப்ப, கங்காரு கவ்விக்கிட்டு போயிடுச்சு.

தமிழ்நாட்டுக்காரனுங்க எல்லோரும் “செண்டிமெண்டல் இடியட்ஸ்என்பது பாக்ட், பாக்ட், பாக்ட்ன்னு எனக்கு என்ன பார்த்தபின்னாடி தான் தெரிஞ்சுது. உலக கோப்பை முடிந்தபின்பு, கோச்சுக்கும், கங்கூலிக்கும் நடந்த பிரட்சனையில் கங்கூலிய படுத்துன பாட்டைபார்த்து, மனம் நொந்து “சே இந்த உத்தமன போய், இப்படியெல்லாம் பேசிட்டோமே!!! என்று வருத்தப்பட்டு. தாதா வாழ்க, தாதா வாழ்கன்னு என்னுடய ரசனையெல்லாம் மாறிவிட்டது.
நான் ரசிக்கிர அனைவரையும், என் நண்பர்களும் ரசிக்கிறானுங்க, ஆனா என்ன கலாய்ச்சு சரித்திரத்துல நீங்கா இடம்பெறவேண்டும் என்ற ஒத்தக் கொள்கைக்காக, கொள்ளையில போறவனுங்க என் ரசனையை உவ்வ்வ்வே.....லிஸ்டில் சேர்த்துவிடுகிறார்கள். எனக்கு பொண்ணுங்க கொஞ்சம் புஸு, புஸுன்னு இருந்தா தான் பிடிக்கும் என் ரசனை அப்படி, இலியானவை எல்லாம் பார்த்தா எடக்கு முடக்கா கோபம் வரும், அதே நேரத்துல ஹன்ஸிகா மோத்வானினா முகத்துல ஈ ஆடும், வாயில நீர் ஓடும். நமிதாவை எனக்கு பிடித்திருந்தது, எப்பத்துல இருந்துன்னு கேட்டா பொசுக்குன்னு சொல்லிருவேன் ‘எங்கள் அண்ணா படம் பார்த்ததில் இருந்து என்று. அந்த படத்துல நமி அவ்வளவு....., அம்புட்டு.............., அத்தனைக்கு........ அழகாக இருக்கும், விஜயகாந்துடன் இருக்கும் காட்சிகளில் இன்னும் அதிகம்.

ஒன்னு புரிஞ்சிக்கங்க மக்களே, நான் என் ரசனையை எந்த காலகட்டத்துல சொல்லுறனோ, அந்த காலத்து நமிதாவைத்தான் நீங்க பார்க்கனும். “அர்ஜுனா, அர்ஜுனா......... பாட்டுல நமிதாவை பிடிக்காதவன் யாரும் தமிழ்நாட்டில் கிடயாது. அந்த நமிதாவைத்தான் நான் சொலுகிறேனே (ரசிச்சேனே) தவிற இப்ப இருக்குற நமீமீமீத்த்த்தா.......வை அல்ல. “தில்லானா மோகனாம்பாள் படத்த பார்த்திட்டு பத்மினி சூப்பர் பிகர்ன்னு சொன்னா, “பூவே பூச்சூட வாபடத்துல வர்ர பத்மினிய சொன்னதா நினத்து, சுத்தியிருக்குரவனுங்க கொடுக்குற குடைச்சல் தாங்கமுடியல. மானாட மயிலாடயில வர்ர நமிய யாருக்குத்தான் பிடிக்காது. லாதா மாஸ்டர் பக்கத்துல இருக்கும் போது நமிதா ஒல்லியா இருந்துச்சு, அழகா தெரிஞ்சிச்சு. அது நம்ம தப்பு இல்லே. இப்படி பேச்சுல பல இச்சு, சுச்சு வச்சி பேசும் போது பிடிக்கலன்னு சொல்லுறவன் எல்லாம் தமிழனா, நான் கேட்கிறேன் தமிழனா?. எவ்வளவோ பேரு தமிழை அழகாக பேசியிருக்கலாம், ஆனால் இதுவரைக்கும் தமிழை யாராவது இவ்வளவு இனிப்பாக பேசியது உண்டா?.  தமிழ தாய் மொழியா கொண்ட திரிஷா, “ஹாய் ஃபேன்ஸ் என்று சொல்லும் போது, குஜராத்தி பொண்ணு “மச்சான் எப்படி இருக்கு என்று முறை வச்சு கூப்பிடுது, தமிழ்நாட்டுல பல பேரின் முறைப் பெண்கள் கூட இப்படி கூப்பிட்டிருக்க மாட்டார்கள்.

ஆறடி உயரம், அழகிய உருவம் இப்ப கொஞ்சம் அகோர உருவமாகிவிட்டது. இருந்தாலும் சில்க் வேஷத்துக்காக “பட்னி கிடக்குது, வெஜ் சாப்டுது, டயட் இருக்குது, எக்ஸசைஸ் பண்து, இன்னு குஞ்ச நால்லே நா சிலிம் ஆகுது என்று ஒரு பேட்டி கொடுத்து எங்க வயித்துல பால வாத்திருக்கு. நமிதாவின் கவர்ச்சி, நாளைய தமிழகத்தின் எழுச்சி என்பதை கவனத்தில நாம் கொண்டு நாவில் நரம்புடன் பேசகற்றுக் கொள்ளவேண்டும்.

இசைன்னா எஸ்.ஏ. ராஜ்குமார், எஸ்.ஏ. ராஜ்குமார்னா இசைன்னு ஒரு காலத்துல என்னோட இசை ரசனை இருந்துச்சு. என்னது எஸ்.ஏ. ராஜ் குமார்ன்ன்ன்ன்னா யாருன்னு தெரியலையா?. அட இவர்தாங்க வானைத்தைப் போல படத்தின் இசை அமைப்பாளர். இவர் மேல நான் வச்ச ரசனையில, ரத்த கலவரமெல்லாம் நடந்திருக்கு. ல லால்லா ல லலால்லா, ல லல்லலால்ல்லா.......
----------------------------------------------------------------------------------யாஸிர்.

திங்கள், ஜூலை 09, 2012

சரித்திரத்த கொஞ்சம் திருப்பி பாருங்க.....01.


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
ஜெயபிரகாஷ் நாராயணன் அக்டோபர் 11, 1902ல் சித்தப்தியரா எனும் உத்திர பிரதேசம், பீகார் மாநில எல்கையை ஒட்டிய ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். இவரது அப்பா ஹர்சுதயால் ஜுனியர் ஆபிஸராக வேலைபார்த்தார். பாவுல் என்று செல்லமாகவும் ஜெ.பி அழைக்கப்பட்டார். கல்லூரிப்படிப்பு அந்த கிராமத்தில் சாத்தியப்படாததால் பாட்னாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கிருந்துதான் இவருக்கு விடுதலை வேட்கை ஆரம்பமானது.

ரவுலட் சட்டத்தை எதிர்த்து காந்தி கொண்டுவந்த ஒத்துழையாமை இயக்கத்தினை நாடு முழுவதும் பிரபலப்படுத்த பல இடங்களில் மாநாடுகள் நடத்தப்பட்டது. பாட்னாவில் அபுல் கலாம் ஆசாத்தினுடய பேச்சினை கேட்க, நண்பர்களுடன் ஜெ.பியும் சென்றார். வார்த்தை வித்தகர் ஆசாத்தின் பேச்சில், காற்றில் அசையும் இலையாய் இருந்த ஜெ.பி, புயலில் பரக்கும் இலையாக, விடுதலைக்காக நேரடி களத்தில் இறங்கினார். ஆசாத்தின் கருத்துக்களை காதுவழியாக இதயத்தில் சுமந்துகொண்டு, ஆங்கிலேயர்களால் நடத்தப்படும் அந்த கல்லூரியில் இருந்து, தேர்வுக்கு 20 நாட்களே மீதமிருந்த நிலையிலும், அங்கிருந்து விடைபெற்றார்.

அங்கிருந்து காங்கிரஸினால் நடத்தப்படும் பீகாரில் அமைந்திருந்த வித்ரபீத் எனும் கல்லூரியில் பயின்றார். கிழக்கு உ.பியில் நடந்த சோரி செளரா நிகழ்வுக்குப்பின்பு, காந்தியால் ஒத்துழையாமை இயக்கம் திரும்பபெற, அனைத்து மாணவர்களும் பழைய கல்லூரிக்கே செல்லவேண்டியதாகிற்று, ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள மனமில்லாத ஜெ.பி வெளிநாடு சென்று கல்விபயில தயாரானார்.

காந்தி, நேரு, பட்டேல் போன்றவர்கள் இங்கிலாந்தில் “பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்கள். ஆனால் தாய்மண்ணை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஒரு நாட்டின் மீது அடியெடுத்து வைக்கவிரும்பாமல், அமெரிக்காவில், கலிபோர்னியா பல்கலைகழகத்தில் மேற்படிப்பை தொடர்ந்தார். கல்விச் செலவினை ஈடுகட்ட ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் அயராது உழைத்தார், எச்சித்தட்டை கழுவுவது, கழிப்பரையை சுத்தம் செய்தல், காலணிகளுக்கு பாலிஷ் போடுதல், ஆரஞ்சு பழங்களில் அழுகியவற்றை நீக்குதல் என்று பல பணிகளைச் செய்தார். அமெரிக்காவில் ஏழாண்டுகள் தங்கி, ஐந்து பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர் ஜெ.பி!. இளமையில் ஓர் ஆணழகனாகத் திடழ்ந்தவரை.. பல பெண்கள் தங்களின் வலையில் வீழ்த்த நினைத்து தோற்றனர். மகாத்மாவின் கட்டளைப்படி தன் காதல் மனைவி, பிரபாவதியிடம் இறுதிவரை பிரம்மச்சரியத்தை கடைபிடித்த பீஷ்மர்.
அமெரிக்காவில் வைத்து காரல் மார்ஸ் புத்தகங்களின்பால் ஈர்க்கப்பட்டு, மார்க்ஸீஸியத்தின் மூலமே விடுதலை பெறமுடியும் என ரஷ்ய புரட்சியை மேற்கோள் காட்டி முடிவுக்கு வந்தார். இந்தியாவில் மார்க்ஸீஸியத்தை வலுப்பெறச்செய்தவர். பின்பு காந்தி, நேருவின் நேரடி அழைப்பினை ஏற்று காங்கிரஸில் ஐக்கியமானார். 1930ல் தண்டியாத்திரையின் போது பல முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கைதானபோது, இவர் தப்பித்து தலைமறைவு வாழ்வில் ஈடுபட்டார். அப்போது காவல்துறை அறியாது பல மாநிலங்களுக்குச் சென்று, காங்கிரஸின் கொள்கைகள், விடுதலைக்கு நாம் செய்யவேண்டிய கடமைகள் பற்றி தெருமுனைப் பிரச்சாரம், துண்டு பிரசுகங்கள் வினியோகம் என தன் பணியை செவ்வனே செய்தார். இவரது சென்னை வரவை அறிந்து, காவல்துறை இவரை கைது செய்தபோது அனைத்து பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்தியாக “காங்கிரஸின் மூளை கைது என்று வெளிவந்தது.

இரண்டாம் உலகப் போரின் போது, பிரிட்டனுக்கு இந்தியா உதவுவதை வன்மையாகக் கண்டித்து, அதை நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார். இதனால் தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார்.

“ஜெ.பி ஓர் மிகப் பெரிய போராளி, அவரது உழைப்பு ஓய்வறியாதது. துன்பங்களை சகித்துக் கொள்வதில் இவர் இணையற்றவர்என்று மகாத்மாவே மனம் நெகிழ்ந்து புகழ்ந்தார். ஆகஸ்ட் புரட்சியின் போது, ஹசாரிபாக் சிறையில் வைக்கப்பட்ட ஜெ.பி 17 அடி உயர சிறைச்சுவரைத்தாண்டி தன் தோழர்களுடன் தப்பினார். ராம் மனோகர் லோகியாவுடன் இணைந்து நேபாளத்தில் புரட்சிப்படையை உருவாக்க நினைத்தார். கைகளில் விலங்கு பூட்டப்பட்டு லாகூர் கோட்டையில் இருட்டரையில் தனிமைச்சிறையில் வாடிய ஜெ.பி பனிக்கட்டிகளின் மீது படுக்கவைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டார். லாகூர், ஆக்ரா சிறைகளில் இவர் அடைந்த இன்னல்களை இன்றய அரசியல்வாதிகள் கற்பனை செய்துகூட பார்க்கலாகாது.
நாடு விடுதலை பெற்ற பின்பு நேருவின் அமைச்சரவையில் ஜெ.பிக்கு இடம்தர மவுண்ட் பேட்டன் விரும்பியபோதும், நேருவே மீண்டும், மீண்டும் வற்புறுத்தியபோதும் அதிகார பீடத்தில் அமர அவர் ஆசைப்பட்டதில்லை. காங்கிரஸ் தலைவர் பதவியை காந்தி கையில் கொண்டுவந்து கொடுக்க விரும்பியபோதும் இணங்கவில்லை. “இந்தியாவின் விதியை ஒரு நாள் ஜெ.பி எழுதுவார்என்று நேரு வானொலியில் உரைக்க உரைத்தார். நேருவிற்கு பிறகு யார்? என்ற புத்தகத்தை எழுதிய மைக்கேல் பிரெச்சர் ஜெ.பியையே கைகாட்டினார். ஆனால் காந்திய வழியில் அதிகாரம் சார்ந்த எந்த பதவியிலும் அமராத அரிய மனிதர் ஜெ.பி.

ஒழுக்கமும், நேர்மையும் இந்திய அரசியலில் இருந்து விடைபெறுவதைக் கண்டு இதயம் ரணப்பட்ட ஜெ.பி, ஊழலுக்கு எதிராகப் பொங்கி எழுந்தார். முழுமையான புரட்சிக்காக இளைஞர்களிடம் முழங்கினார். ‘லோக் நாயக் ஜெ.பியின் குரலுக்கு கிடைத்த மரியாதையின் உடனடி விளைவுதான் மத்தியில் காங்கிரஸ் அல்லாத ஜனதா ஆட்சி. ஆனாலும் ஜெ.பியின் கனவுகள் நனவாகவில்லை. மகாத்மாவைப் போல மனமுடைந்த மனிதராக அக்டோபர் 8, 1979ம் ஆண்டு மரணமடைந்தார்.

அரசியல் ஆசைகளற்ற, ஒரு செப்புகாசிலும் நாட்டம் செலுத்தாத ஜெ.பியை நெஞ்சில் நிறுத்திப் பொதுவாழ்வில் படிந்து கிடக்கும் அழுக்குகளை அகற்ற நாம் அனைவரும் முன்வரவேண்டும்.

----------------------------------------------------------------------------------யாஸிர்.

ஞாயிறு, ஜூலை 01, 2012

பாஸ் (எ) பச்சோந்தி உயர் அதிகாரி.


நம் அனைவரின் மீதும் இறைவைனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
சாமி வரம் கொடுத்தாலும் அத பூசாரி நமக்கு கொடுக்காது என்பது பழமொழி இத கிட்டத்தட்ட, வேலை பார்க்கும் அனைவரும் அனுபவித்து இருப்போம். சாமிங்குறது முதலாளி, பூசாரி என்பது உயரதிகாரி. “இந்த வருசம்தான் நமக்கு நல்ல லாபம் கிடச்சிருக்கே, நம்ம ஊழியர்களுக்கு ஏதாவது, ஊக்கத்தொகை கொடுக்கலாமான்னு நம்ம மேலதிகாரிங்ககிட்ட முதலாளி கேட்டா, “அய்யய்யோ அப்படியெல்லாம் முடிவெடுக்காதீங்க முதலாளி, பிறகு,  வருசம் வருசம் அதை எதிர்பார்ப்பாங்க என்று தன்னுடைய செக்கை கையில் வாங்கியவுடன் கடைமையுணர்வை கண்டெய்னர் கண்டெய்னராக காட்டும் கயவர்கள்.

அதுவும் இந்த அரபிங்ககிட்ட வேல பாக்குறது இருக்கே, அப்பப்பா.......... நாக்கு தள்ளிரும், அரை மணி நேரம் பேசுவானுங்க, ஆனா ஒன்னுமே விளங்காது. கடைசியா அங்க அங்க ஒன்னு, ரெண்டு வார்த்தைகளை வச்சு, “ஓ இதத்தான் தடியன் சொல்லவருகிறான்னு ஒரு முடிவுக்கு வரனும். எதுவும் புரியல என்றாலும் புரிஞ்ச மாதிரி தலை ஆட்டவேண்டு. “ஆர் யு காட் மை பாய்ண்ட்னு சொன்னவுடனே, “எஸ் சார் காட் யுவர் பாய்ண்ட் ஸார்னு போஸ் பட ஹீரோ ஸ்ரீகாந்த் மாதிரி வெரப்பா நின்னு சொல்லனும் இல்லன்னா, புரியவைக்கிறேன்னு சொல்லி, பக்கத்துல உட்கார வச்சு, மூஞ்சில பூரா எச்சி துப்பி வச்சிருவானுங்க.
ஒரு இந்திய டாக்டரும் ஒரு அரபி டாக்டரும் சேர்ந்து ஒரு மூளை சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு, கிடைத்த ரிசல்டை ஒரு மனிதனுக்கு பொருத்தி, சோதனை செய்து பார்க்க அவங்க இரண்டு பேரும் கெஞ்சாத ஆள் இல்லை, எவனும் பரிசோதனைக்கு ஒத்துக் கொள்ளவேயில்லை. அரபி டாக்டருக்கு ரொம்ப கோவம் வந்து, என்னுடைய மூளையை எடுத்துக் கொண்டு நீ சோதனையை ஆரம்பம் செய். வெற்றி நமக்கே, வீர வேல், வெற்றி வேல் என கூறிக்கொண்டே, ஆபரேசன் தியேட்டருல போயி படுத்துக்கிட்டார். நம்ம இந்திய டாக்டர், அருவை சிகிச்சை மூலமாக மூளைய வெளியில் எடுத்து, ஆராய்ச்சு கூடத்தில் வைத்துவிட்டு திரும்பி வந்து பார்த்த போது, அரபி டாக்டரை காணவில்லை!!!!!!!!!!!!!!!. இந்திய டாக்டருக்கு ஒரே படபடப்பாகி, ஊர் முழுக்க தேடிப்பார்த்தார், கண்டே பிடிக்கமுடியவில்லை.

ஒரு வாரம் ஒரு மாதம் ஆனது ஒரு மாதம் ஒரு வருடம் ஆனது, டாக்டரால் அவரது நண்பனை கண்டுபிடிக்க இயலவில்லை. ஒரு நாள் பஸ்ஸுக்காக, பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கும் போது, தெய்வ அதிஷ்டமாக அவரது நண்பரை கண்டுபிடித்துவிட்டார். ஆனால் இந்திய டாக்டரால் நம்ப முடியாத மாற்றம். மூளையோட இருக்கும் போதே, பரதேசி மாதிரி இருப்பான். இப்ப என்னடான்னா, கோர்ட், சூட் எல்லாம் போட்டு அஜித்துக்கு போட்டியா வந்து நிக்கிறானேன்னு ஒரே ஆச்சர்யம்.

இதுக்கு மேல நாம கேக்கலன்னா அவ்வளவுதான் மண்டயே வெடிச்சுடும் என்று எண்ணி, தன் நண்பனிடம் கேட்டான் “ஆமா நண்பா, நான் தான் உன் மூளையை எடுத்துவிட்டேன், ஆனாலும் நீ, எப்படி? அதுவும் இப்படி?........... என்று இழுக்க. “அது ஒன்னு இல்ல நண்பா, நீ மூளையை எடுத்த உடனே நான் ஒரு கன்ஸ்ட்ரக்சன் கம்பெனிக்குள்ள போனேன். அரபில பேசினேன். உடனே என்ன புராஜக்ட் மேனஜராக்கிவிட்டார்கள் என்றாராம்.

இது ஒரு நகைச்சுவைக்கு சொல்லப்பட்டாலும், கிட்டத்தட்ட இங்க இருக்கும் புராஜக்ட் மேனஜர்களுக்கு அப்படியே அச்சு அசலா செஞ்சு வச்சமாதிரியே பொருந்தும். மீட்டிங்னு சொல்லி கூட்டிகொண்டு போவானுங்க, இந்த வாரம் அத முடிக்கனும், இத ஆரம்பிக்கனும்னு, மீட்டர், மீட்டரா பேசுவானுங்க. ஆனா, அந்த வாரம் மைக்ரோ மீட்டர் அளவுக்கு கூட வேலை ஆகியிருக்காது. மினிட்ஸ் ஆப் மீட்டிங்கில் பத்து வாரமும் ஒரே மேட்டர்தான் இருக்கும், தேதி மட்டும் மாற்றம் ஆகியிருக்கும் அவ்வளவுதான்.
போன ஜென்மம் செஞ்ச புண்ணியத்துல எப்போதாவது ஒரு நாள் லீவு கிடைக்கும், அன்னைக்கும் அரை நாள் வேலை வச்சு, ஆறு வருச புராஜெக்டை அந்த அரை நாளில் முடிப்பானுங்க. அதுவும் அந்த லீவு ஞாயிற்றுக் கிழமை வந்து இப்படி ஒரு சம்பவம் நடந்துச்சுன்னா, நாங்க கேக்குற கேள்விய யாராச்சும் அரபில மொழிமாற்றம் செய்து அவன் பொண்டாட்டி, அம்மா, பாட்டி, கொள்ளுப்பாடி, எள்ளுப்பாட்டிக்கிட்ட சொன்னானுங்க................தொங்கிருவாளுங்க!!!!!!, ................தொங்கிருவாளுங்க!!!!! அப்படி இருக்கும் வார்த்தைகளின் வீரியம்.

முதலாளியே, லீவுக்கு கையெழுத்து போட்டு மெமோ அனுப்பிய பின்னாடி, இந்த உயர் அதிகாரிகள் இந்த மாதிரி செஞ்சா, நாங்க அவன் ஒன்னுக்கு போகுற இட த்துல கட்டிவர,.......ன்னு காசுவெட்டி போடுறோமே, நாங்க செய்யுறது தப்பா? நீங்க சொல்லுங்க தப்பா?. அதுவும் பாதி நாள் வேலை வச்சுட்டு, அவன் மட்டும் வீட்டுல இருப்பான்.

அது ஒரு கன்ஸ்ட்ரக்சன் ஆபீஸ், புதுசா சைட் இஞ்சினியர் வேலைக்கு வந்த டிரைனி பசங்க மூணு பேரு, மேனஜரை பார்க்க வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். ஆனால், அங்கு வேலை செய்யும் மற்றவர்கள் எல்லோரும், ஏதோ குசு, குசுவென பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் காலில் வெந்நீர் ஊற்றியவாரு ஒரு இடத்தில் நிற்காமல், அங்கு ஓடுவது இங்கு ஓடுவதுமாக இருந்தார்கள். ஒருத்தன் போனில் யாரிடமோ பேசிய படி “அச்சச்சோ, இப்ப எப்படி இருக்குது நிலைமை?, “ஸ்ஸ்ஸ்ஸ் ஓஹோ. பார்த்தால் ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்பதை உணர முடிந்தது.

மூணு பேருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் முழுத்துக் கொண்டிருந்தார்கள். “டேய் ரவி எல்லோரிடமும் கலெக்ட் பண்ணு, முதல்ல பிளானிங்க் டிப்பார்ட்மெண்டுல இருந்து ஆரம்பி என கட்டளையிட்டுக் கொண்டே, டெண்சனோடு, கையை பிசைந்து கொண்டிருந்த அவரிடம், அந்த மூன்று பேரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டபின்பு, “என்ன சார் என்ன ஆச்சு?, ஆபிஸே பூகம்பம் வந்த பீலிங்ல இருக்கு? என்று ஒருவன் கேட்க. “ஒன்னுமில்ல தம்பி, நம்ம புராஜக் மேனஜரை கடத்திட்டானுங்க, நம்ம குவாண்டிட்டி சர்வேயர் நியாயமா போட்ட பில்ல, அந்த காண்ராக்ட்காரனுக்கு கொடுக்காம, கமிஷன் பேசினாரு, அதுதான் சமயம் பார்த்து தூக்கிட்டானுங்க
“ஓ காட், என்ன சார் சொல்லுறீங்க? இப்படியெல்லாமா நடக்கும்? சரி இப்ப கடத்துனவங்க என்னதான் சொல்லுறாங்க?
“என்ன செய்யுறதுன்னே புரியல, அத பத்தின டிஸ்கசன்லதான் நாங்க இருக்கோம். கடத்துனவங்க அவர விடுவிக்க 5 கோடி ரூபாய் கேட்குறாங்க, அப்படி கொடுக்கலன்னா, உடம்பு பூரா பெட்ரோலை ஊற்றி, தீ வைத்து கொளுத்திடுவானுங்களாம்?. அதனால எங்களால முடிஞ்ச அளவுக்கு நாங்க இங்க இருக்குறவங்ககிட்ட கலெக்ட் பண்ணிக் கொண்டு இருக்கோம். உங்களால முடிஞ்சதை நீங்களும் கொடுங்க.

“ம்ம்ம் நாங்க புதுசு சார். எங்களுக்கு எவ்வளவு கொடுக்கனும்னு தெரியலை. எல்லோரும் எவ்வளவு கொடுக்குறாங்கன்னு சொன்னீங்கன்னா நாங்களும், அதே அளவு கொடுக்கிறோம். ஆவரேஜா எல்லோரும் எவ்வளவு கொடுகுறாங்க சார்?.

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

ஒரு லிட்டர் பெட்ரோல்.

----------------------------------------------------------------------------------யாஸிர்.