திங்கள், ஜூலை 09, 2012

சரித்திரத்த கொஞ்சம் திருப்பி பாருங்க.....01.


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
ஜெயபிரகாஷ் நாராயணன் அக்டோபர் 11, 1902ல் சித்தப்தியரா எனும் உத்திர பிரதேசம், பீகார் மாநில எல்கையை ஒட்டிய ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். இவரது அப்பா ஹர்சுதயால் ஜுனியர் ஆபிஸராக வேலைபார்த்தார். பாவுல் என்று செல்லமாகவும் ஜெ.பி அழைக்கப்பட்டார். கல்லூரிப்படிப்பு அந்த கிராமத்தில் சாத்தியப்படாததால் பாட்னாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கிருந்துதான் இவருக்கு விடுதலை வேட்கை ஆரம்பமானது.

ரவுலட் சட்டத்தை எதிர்த்து காந்தி கொண்டுவந்த ஒத்துழையாமை இயக்கத்தினை நாடு முழுவதும் பிரபலப்படுத்த பல இடங்களில் மாநாடுகள் நடத்தப்பட்டது. பாட்னாவில் அபுல் கலாம் ஆசாத்தினுடய பேச்சினை கேட்க, நண்பர்களுடன் ஜெ.பியும் சென்றார். வார்த்தை வித்தகர் ஆசாத்தின் பேச்சில், காற்றில் அசையும் இலையாய் இருந்த ஜெ.பி, புயலில் பரக்கும் இலையாக, விடுதலைக்காக நேரடி களத்தில் இறங்கினார். ஆசாத்தின் கருத்துக்களை காதுவழியாக இதயத்தில் சுமந்துகொண்டு, ஆங்கிலேயர்களால் நடத்தப்படும் அந்த கல்லூரியில் இருந்து, தேர்வுக்கு 20 நாட்களே மீதமிருந்த நிலையிலும், அங்கிருந்து விடைபெற்றார்.

அங்கிருந்து காங்கிரஸினால் நடத்தப்படும் பீகாரில் அமைந்திருந்த வித்ரபீத் எனும் கல்லூரியில் பயின்றார். கிழக்கு உ.பியில் நடந்த சோரி செளரா நிகழ்வுக்குப்பின்பு, காந்தியால் ஒத்துழையாமை இயக்கம் திரும்பபெற, அனைத்து மாணவர்களும் பழைய கல்லூரிக்கே செல்லவேண்டியதாகிற்று, ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள மனமில்லாத ஜெ.பி வெளிநாடு சென்று கல்விபயில தயாரானார்.

காந்தி, நேரு, பட்டேல் போன்றவர்கள் இங்கிலாந்தில் “பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்கள். ஆனால் தாய்மண்ணை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஒரு நாட்டின் மீது அடியெடுத்து வைக்கவிரும்பாமல், அமெரிக்காவில், கலிபோர்னியா பல்கலைகழகத்தில் மேற்படிப்பை தொடர்ந்தார். கல்விச் செலவினை ஈடுகட்ட ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் அயராது உழைத்தார், எச்சித்தட்டை கழுவுவது, கழிப்பரையை சுத்தம் செய்தல், காலணிகளுக்கு பாலிஷ் போடுதல், ஆரஞ்சு பழங்களில் அழுகியவற்றை நீக்குதல் என்று பல பணிகளைச் செய்தார். அமெரிக்காவில் ஏழாண்டுகள் தங்கி, ஐந்து பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர் ஜெ.பி!. இளமையில் ஓர் ஆணழகனாகத் திடழ்ந்தவரை.. பல பெண்கள் தங்களின் வலையில் வீழ்த்த நினைத்து தோற்றனர். மகாத்மாவின் கட்டளைப்படி தன் காதல் மனைவி, பிரபாவதியிடம் இறுதிவரை பிரம்மச்சரியத்தை கடைபிடித்த பீஷ்மர்.
அமெரிக்காவில் வைத்து காரல் மார்ஸ் புத்தகங்களின்பால் ஈர்க்கப்பட்டு, மார்க்ஸீஸியத்தின் மூலமே விடுதலை பெறமுடியும் என ரஷ்ய புரட்சியை மேற்கோள் காட்டி முடிவுக்கு வந்தார். இந்தியாவில் மார்க்ஸீஸியத்தை வலுப்பெறச்செய்தவர். பின்பு காந்தி, நேருவின் நேரடி அழைப்பினை ஏற்று காங்கிரஸில் ஐக்கியமானார். 1930ல் தண்டியாத்திரையின் போது பல முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கைதானபோது, இவர் தப்பித்து தலைமறைவு வாழ்வில் ஈடுபட்டார். அப்போது காவல்துறை அறியாது பல மாநிலங்களுக்குச் சென்று, காங்கிரஸின் கொள்கைகள், விடுதலைக்கு நாம் செய்யவேண்டிய கடமைகள் பற்றி தெருமுனைப் பிரச்சாரம், துண்டு பிரசுகங்கள் வினியோகம் என தன் பணியை செவ்வனே செய்தார். இவரது சென்னை வரவை அறிந்து, காவல்துறை இவரை கைது செய்தபோது அனைத்து பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்தியாக “காங்கிரஸின் மூளை கைது என்று வெளிவந்தது.

இரண்டாம் உலகப் போரின் போது, பிரிட்டனுக்கு இந்தியா உதவுவதை வன்மையாகக் கண்டித்து, அதை நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார். இதனால் தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார்.

“ஜெ.பி ஓர் மிகப் பெரிய போராளி, அவரது உழைப்பு ஓய்வறியாதது. துன்பங்களை சகித்துக் கொள்வதில் இவர் இணையற்றவர்என்று மகாத்மாவே மனம் நெகிழ்ந்து புகழ்ந்தார். ஆகஸ்ட் புரட்சியின் போது, ஹசாரிபாக் சிறையில் வைக்கப்பட்ட ஜெ.பி 17 அடி உயர சிறைச்சுவரைத்தாண்டி தன் தோழர்களுடன் தப்பினார். ராம் மனோகர் லோகியாவுடன் இணைந்து நேபாளத்தில் புரட்சிப்படையை உருவாக்க நினைத்தார். கைகளில் விலங்கு பூட்டப்பட்டு லாகூர் கோட்டையில் இருட்டரையில் தனிமைச்சிறையில் வாடிய ஜெ.பி பனிக்கட்டிகளின் மீது படுக்கவைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டார். லாகூர், ஆக்ரா சிறைகளில் இவர் அடைந்த இன்னல்களை இன்றய அரசியல்வாதிகள் கற்பனை செய்துகூட பார்க்கலாகாது.
நாடு விடுதலை பெற்ற பின்பு நேருவின் அமைச்சரவையில் ஜெ.பிக்கு இடம்தர மவுண்ட் பேட்டன் விரும்பியபோதும், நேருவே மீண்டும், மீண்டும் வற்புறுத்தியபோதும் அதிகார பீடத்தில் அமர அவர் ஆசைப்பட்டதில்லை. காங்கிரஸ் தலைவர் பதவியை காந்தி கையில் கொண்டுவந்து கொடுக்க விரும்பியபோதும் இணங்கவில்லை. “இந்தியாவின் விதியை ஒரு நாள் ஜெ.பி எழுதுவார்என்று நேரு வானொலியில் உரைக்க உரைத்தார். நேருவிற்கு பிறகு யார்? என்ற புத்தகத்தை எழுதிய மைக்கேல் பிரெச்சர் ஜெ.பியையே கைகாட்டினார். ஆனால் காந்திய வழியில் அதிகாரம் சார்ந்த எந்த பதவியிலும் அமராத அரிய மனிதர் ஜெ.பி.

ஒழுக்கமும், நேர்மையும் இந்திய அரசியலில் இருந்து விடைபெறுவதைக் கண்டு இதயம் ரணப்பட்ட ஜெ.பி, ஊழலுக்கு எதிராகப் பொங்கி எழுந்தார். முழுமையான புரட்சிக்காக இளைஞர்களிடம் முழங்கினார். ‘லோக் நாயக் ஜெ.பியின் குரலுக்கு கிடைத்த மரியாதையின் உடனடி விளைவுதான் மத்தியில் காங்கிரஸ் அல்லாத ஜனதா ஆட்சி. ஆனாலும் ஜெ.பியின் கனவுகள் நனவாகவில்லை. மகாத்மாவைப் போல மனமுடைந்த மனிதராக அக்டோபர் 8, 1979ம் ஆண்டு மரணமடைந்தார்.

அரசியல் ஆசைகளற்ற, ஒரு செப்புகாசிலும் நாட்டம் செலுத்தாத ஜெ.பியை நெஞ்சில் நிறுத்திப் பொதுவாழ்வில் படிந்து கிடக்கும் அழுக்குகளை அகற்ற நாம் அனைவரும் முன்வரவேண்டும்.

----------------------------------------------------------------------------------யாஸிர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக