நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும்
உண்டாவுவதாக.
"என்ன யாஸிர், துபாயில் இருந்து எப்ப வந்த?"
"ஒரு வாரம் ஆச்சு?"
"எத்தன நாள் லீவு?"
"இல்ல்ல்ல்ல்ல….முடிச்சிட்டு வந்திட்டேன்?"
“என்ன்ன்ன்ன முடிச்ச்ச்ச்சிட்ட்ட்டுடுடு வந்திட்டியா……………?”
இந்த ரியாக்சன் என் அப்பாவோட ரியாக்சன் இல்ல, எங்க அப்பாவோட பிரண்டோட ரியாக்சன்.
பொதுவா அவர் வீட்டு முன்னாடி உள்ள ஒரு திண்டில் தான் நண்பர்கள்
ஒன்று கூடுவோம். இந்த ரியாக்சன் கொடுத்தபின்னாடி அவரின் அறிவுரைகளைக் கேட்ட பின்பு,
அவர் எப்பவெல்லாம் வீட்டில் இருக்கமாட்டார் என்பதை தெரிந்து கொண்டு மறைமுகமாக ஒன்று
கூடிக்கொண்டிருக்கின்றோம். இந்திராக்காந்தி எமர்ஜென்ஸி காலத்தில் தி.மு.க காரன் வாழ்க்கை
மாதிரி ஆகிடுச்சு, எங்க வாழ்க்கை.
ஒரு உண்மையைச் சொல்லக்கூட வழியில்லாமல் போயிடுச்சு. இவர்கிட்ட
என்ன வந்திரப்போகுதுன்னு எண்ணி “கத்தாரில் எனக்கு வேலை கிடச்சிடுச்சு, என்னுடைய சர்டிஃபிக்கெட்டை
அந்த நாட்டு எம்பசியில் அட்டஸ்டட் பண்ண கொடுத்திருக்கிறேன், வந்தவுடனே கிளம்பிவிடுவேன்னு”
சொன்னேன். இதைக் கேட்டுவிட்ட பின்பு அவருடைய முகத்தை பார்த்த போதே தெரிந்துவிட்டது
அவர் என்னை நம்பவில்லை என்று. என்னடா இது நாம உண்மையைச் சொன்னாலும் நம்பாம இருக்காறேன்னு
வருத்தத்துல வந்து நம்ம வருத்தப்படாத வாலிபர் சங்கத்து உறுப்பினர்களிடம் சொல்ல “எப்படி
நம்புவாரு, எப்படி நம்புவாருங்குறேன், நீ சொன்னதத்தான் அவர்கிட்ட 5 வருசமா மண்ட மகன்
சொல்லிக்கிட்டு இருக்கான், பின்ன உன்னை எப்படி நம்புவாரு?”
“ஓ, இந்த படம் 5 வருசத்துக்கு முன்னாடியே ரிலீஸ் ஆகிடுச்சா?”
என நானே நொந்துகொண்டேன்.
வளைகுடா நாட்டில் இருக்கும் போது, ஒரு வருசம் ஓடுறதே தெரியாது.
ஆனா இங்க ஒரு மாசத்துக்கு மேல இருக்கமுடியல, கரண்ட் கட்டை சமாளிக்க இன்வெர்ட்டர் மாட்டினா, ச்சார்ச் ஆகுறதுக்கு கூட கரண்ட் இல்ல. மழையில்லாம குற்றாலத்துல தண்ணியில்ல, மழை பெய்த
பின்பு, குற்றாலத்துல ஏற்பட்ட வெள்ளத்துனால குளிக்குறதுக்கு அனுமதியில்ல. இப்படி வாழ்க்கை
இல்ல, இல்லன்னே போய்கிட்டு இருக்கு.
இவ்வளவு துன்பத்துக்கு இடையிலும், பிறந்த நாள் அன்றைகாவது
சந்தோசமாக இருக்க பக்காவா பிளான் பண்ணிவச்சிருந்தேன். “கல்யாண நாளை மறந்தாலும் மறப்பனே
ஒழிய, உங்க பிறந்த நாளை மட்டும் நான் மறக்கவே மாட்டேன்.” என்று என் மனைவி போன பிறந்த
நாளில் (கல்யாணத்துக்கு முன்னாடி) சொன்ன போது “இறைவா யு ஆர் கிரேட், எனக்கு இப்படி
ஒரு மனைவியை கொடுத்ததுக்கு நன்றி, நன்றி, நன்றி” ன்னு பிளக்ஸ்ல அடிச்சு ஒட்டாத குறைதான்.
ஆனா இன்றைக்கு, பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவா, சொல்லுவான்னு காலையில இருந்து பின்னாடியே
சுத்துரேன், ம்ம்ம்ம் ஒன்னும் நடக்கல. எப்போதும் எக்ஸ்ட்ராவா (extra) திட்டுறவ, இன்னைக்குன்னு
பார்த்து எக்ஸ்ட்ராடுனரியா (extraordinary) திட்டுறா. வீட்டுல
இருக்குறவங்க நான் பிறந்ததையே மறந்துட்டாங்க, பிறந்த தேதியையா ஞாபகம் வச்சியிருக்க
போறாங்க, ஆகையால் அதை நான் எதிர்பார்க்கவேயில்லை.
யாரு சொன்னாலும், சொல்லலைன்னாலும்
என் நண்பர்கள் சொல்ல மறக்கமாட்டானுங்க என்ற நம்பிக்கையில், பேஸ்புக்கை பார்க்க,
கரண்ட் எப்படா வரும் என்று எதிர்நோக்கி காத்திருந்து, பேஸ்புக்கை ஓப்பன் பண்ணினா, “இறைவா,
யு, ஆர் டபுள் கிரேட், பொண்டாட்டி விசயத்துல கொஞ்சம் என்னை சுரண்டிப்
பார்த்துட்டாலும், நண்பர்கள் விசயத்துல கைவிடல”. இதுவரைக்கும் “ஹாய்”ன்னு சொல்லாத
நண்பர்கள் கூட “பாய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று போட்டு என்னை தேம்பி,
தேம்பி அழவைத்துவிட்டார்கள்.
“பக்ரீத் அன்று நான் மட்டன்
சாப்பிட்டேன்” னு பேஸ்புக்கில் போஸ்ட் பண்ணினா, அத பாடகி சின்மயி பார்த்துட்டு
போலிஸுல போய் புகார் கொடுத்திடுமோன்னு பயந்து, பேஸ்புக் அக்கவுண்டையே
தூக்கிறலாமுன்னு தோன்றிய எனக்கு, பிறந்த நாள் வாழ்த்துக்களை கண்டவுடன், இந்த
மாதிரியான நண்பர்களின் வாழ்த்துக்களை பெற, குண்டா சட்டத்துல கூட கைது ஆகலாமுன்னு
முடிவுபண்ணிட்டேன். காலேஜில படிக்கும் போதுதான் நான் பிறந்த நாளை கொண்டாட
ஆரம்பித்தேன். அதுவும் எனக்காக அல்ல, நண்பர்களுக்காக. ஆம், நண்பர்களின் பிறந்த
நாள் டிரீட்டில் முதல் பந்தியில் உட்கார்ந்து, கடைசி பந்தியில் எழும் நான், “நான்
எல்லாம் பிறந்த நாள் கொண்டாடமாட்டேன், எனக்கு அதுவெல்லாம் பிடிக்காதுன்னு” சொன்னா
அவ்வளவுதான், எல்லா பிராண்ட் செருப்பு நகல்கள் என் மூஞ்சியில் இருக்கும். அதுக்கு
பயந்தே பிறந்த நாளை கொண்டாடினேன்.
இந்த பிறந்த நாள்த்தான் என்
நண்பர்கள் சுற்றியில்லாமல் இருக்கும் பிறந்த நாள். நண்பர்கள் சுற்றியிருந்துட்டா
ஒவ்வொரு நாளும், நமக்கு பிறந்த நாள் தான்.
ரசித்து படிக்க ஆங்காங்கே நிறைய பஞ்ச்... அதுக்கு முத்தாய்ப்பா அந்த கடைசி வரிகள் அருமை நண்பா ....இனிய நண்பனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி நன்றி நன்றி
நீக்கு