செவ்வாய், டிசம்பர் 31, 2013

'தேம்ம' செய்யதுவும், காலித் vs பாத்திமாவும்.


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.

எனக்கு ஒரு பிளாக் இருக்குதுங்குறதே அடிக்கடி மறந்து போயிடுது. ஏதாவது ஒரு நல்லவுள்ளம், ரெண்டு வருசத்துக்கு முன்னாடி நான் கிறுக்கினத படிச்சி கமெண்ட் எழுதும் போது, அது நம்மளோட மெயிலுக்கு வரும். அத பார்த்தபின்னாடிதான், “ஆத்த்தி நாமளும் பிளாக் வச்சிருக்கோம்ல”ன்னு ஞாபகம் வரும். இன்னைக்கு கூட அப்படித்தான் ஏதோ பழைய போஸ்ட பார்த்து பாராட்டி வந்த மெயிலில் புண்ணியத்தில நினைவு திரும்பியது.

பேஸ்புக் வந்தபின், புது பொண்டாட்டி பின்னாடி அலையுற புது மாப்பிள்ளை மாதிரி ஆகிடுச்சு. அதனால பிளாக்கை ஏற்றெடுத்துகூட பார்க்கமுடியவில்லை. பிளாக்னா கம்பராமாயணம் மாதிரி கத கதையா எழுதனும், அந்த கஷ்டம் பேஸ்புக்குகு இல்ல திருவள்ளுவர் மாதிரி ரெண்டே ரெண்டடியில சொன்னா போதும். பத்து கமெண்டு (எதுவும் நல்லவிதமா இருக்காது), பதினைந்து லைக்குன்னு அலப்பரபண்ணலாம்.

இப்பெல்லாம், பேஸ்புக்குல ரெண்டு லைன் போஸ்ட் போடுறதுக்கே வக்கத்து போய் திரியவேண்டியதாயிருக்கு, இதுல பிளாக்குல என்ன எழுத? எங்கூடி எழுத?. ஒரு காலத்துல கற்பனைத்திறனும், கவித்திறனும் கரைபுரண்டு ஓடுச்சு, இப்ப கஞ்சிக்கு வழியில்லாம காய்ஞ்சிபோய் கிடக்குது. ஆனாலும் எழுதனுமேன்னு எழுதுறதுதான் இது. அதையும் நீங்க படிக்கனுமேன்னு படிச்சிக்கிட்டு இருக்கீங்க.

“தேம்ம செய்யது” ன்னு ஒரு ஆளு எங்க ஊருல இருந்தாராம், அவரைப்பற்றிய கதைகள் எங்க ஏரியாவில் ரொம்ப பிரபலம். அது உண்மையான கேரக்டரா? இல்ல நம்மாளுங்க உருவாக்குனதா? என்பது எல்லாம் நமக்கு தேவையில்லை. ஏரியாவுக்கு ஏரியா அந்த பெயர் மாறியிருக்கும் ஆனா கதை ஒன்னாத்தான் இருக்கும். அவருக்கு வேலை வெட்டின்னு எதுவுக் கிடையாது, சும்மா தேம்மேன்னு இருப்பாரு. இதுதான் ‘செய்யது’ “தேம்ம செய்யது” ஆன கதை.

இந்தமாதிரி சும்மா இருக்குற ஆளுங்களுக்குத்தான் ஊருல நடந்த, நடக்குற, நடக்கப்போகுற அனைத்து விசயமும் தெரியும். கிட்டத்தட்ட அவர் எங்க ஊரின் என்சைக்லோபிடியா. இந்த வீட்டுல யார் யாரு இருக்கா, என்ன என்ன செய்யுறாங்க என எல்லா டீட்டெய்ல்லும் அத்துபடி. இம்புட்டு திறமை இருக்குற ஒரு ஆளு சும்மா இருக்குறது எங்க ஊரு இன்னொரு பெருசுக்கு பொறுக்கல, தேம்ம செய்யதுகிட்ட போய் அவருடைய திறமையை எல்லாம் எடுத்து சொல்லி, “நீ ஏன் ஒரு கல்யாண புரோக்கரா ஆகக்கூடாது? கல்யாணம் பண்ணிவச்சதுமாச்சி, உனக்கு புரோக்கர் கமிசன் கிடச்சதுமாச்சி” என ஆலோசனையை வழங்க, தேம்ம செய்யதுக்கு ‘ச்சே, நமக்குள்ள இம்புட்டு திறம இருந்தும் தேம்மேன்னு இருந்துட்டோமே” ன்னு எண்ணி, புரோக்கரா உருவாகிட்டாரு.

முதல் ஆர்டர், கைத்தரி ஆலிமூசா மகன் காலித். பல இடத்துல சுத்தி, தேம்ம செய்யது புரோக்கரா புரமோட் ஆனத கேள்விப்பட்டு, அவர்கிட்ட வந்து நின்னிருக்கானுங்க. கல்யாண மாலை புரோக்கிராமுல வர்றது மாதிரி ஆலிமூசா தன்னுடைய பைய்யனைப் பற்றி “என் பையன் பேரு காலித், 10ம் வகுப்பு காலாண்டு பரீட்சை வரை படிச்சிருக்கான், அழகான, மாமனார், மாமியாரை அனுசரிச்சு போகுற பெண்ணா எதிர்பார்க்குறோம்” ன்னு சொல்லுறதுக்கு முன்னாடியே, “இவ ஓ புள்ள காலித்துதாண, போனவாரம் சந்தனக்கூடு விழாவுல, 10வது தெருல 12ம் நம்பர் வீட்டு புள்ளய கையப்புடிச்சி இழுத்து அடிவாங்குனவந்தான” என புள்ளிவிவரத்தை சொல்ல, மிரண்டுபோச்சு மாப்பிள்ளை வீடு,

ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணி வைக்கனும், ஆனா முதல் கஸ்டமர் என்பதால் கூட ஒரு பூஜ்ஜியத்தை கடைசியில் சேர்த்து, அல்லாப்பிச்ச மகள் பாத்திமாவுக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டார். அதுல இருந்து தேம்ம செய்யது ரொம்ப அதிகமா பிரபலம். குறைந்த காலத்தில் செஞ்சூரி அடிச்ச விராத் ஹோலி சாதனையை எல்லாம் நம்மாளு அந்தக்காலத்துல தூக்கி எறிஞ்சவருக்கு, மனசுல சின்ன உருத்தல் மட்டும் இருந்துக்கிட்டே இருந்தது.

அது என்னன்னா, முதலில் கல்யாணம் பண்ணிவச்ச காலித்-பாத்திமா ஜோடிக்கு வயித்துல ஒரு புளூ, பூச்சி உண்டாகலையேன்னு தான். இருந்தாலும் அவரு அதை பெரிசுபடுத்தல. தேம்மே செய்யதுவின் வரவால், மிரண்டு வரண்டு போன புரோக்கர்கள் அவரை காணும் இடமெல்லாம் அதை சொல்லிச் சொல்லியே கடுப்பேத்திக் கொண்டிருந்தார்கள்.பல நேரங்களில் பொறுமையாக இருந்தவர், அன்று, அதிகாலை தொழுகை முடித்துவிட்டு சாயக்கடையில் சாய குடித்துக்கொண்டிருந்த போது, மேரேஜ் அசம்பிளர் சங்க தலைவர், சுமார் நூறு பேர் கூடியிருந்த அந்த சபையில் “என்னப்பா செய்யது, நீ முதல்முறையா செஞ்சுவச்ச கல்யாண ஜோடிக்கு புள்ள இல்லாம ஆயிடுச்சே?” என தேம்ம செய்யதுவை சீண்டியிருக்கிறார்.

“இங்க பாரு, கரைசேராததுக்கும், காலங்கழிஞ்சு போனதுக்கு கல்யாணம் பண்ணிவைச்சதே பெருசு, கல்யாணம் பண்ணி வைக்குறதோட என் வேலை முடிஞ்சுது, அவனுக்கு புள்ள இல்லங்குறதுக்காக, ராத்திரி அவன் ரூமுக்குல்ல உக்காந்துக்கிட்டு “எல காலித்து நீ கைலிய தூக்கு, எலா பாத்துமா நீ பாவடைய தூக்கு” ன்னாடா சொல்லிக்குடுக்கமுடியும்.” ன்னு பொங்கி எழுந்துட்டாரு.

விவேகானந்தரின் ஐ.நா சபை சொற்பொழிவும், அண்ணாவின் பாராளுமன்ற பேச்சும் எவ்வளவு பிரசித்தியோ அதுமாதிரி தேம்ம செய்யதுவின் அந்த எதுகை மோனை பேச்சு அவ்வளவு பிரபலம் எங்க ஏரியாவுல.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக