தலைப்பை பார்த்தவுடன்
நாம் தமிழர் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர் என்று என்னை எண்ணிவிடவேண்டாம்
என்னருமை தமிழ் சொந்தங்களே. நான் தமிழன்தான் ஆனால் நாம் தமிழர் அல்ல (?!?!?!). பக்ரீத்
பண்டிகையில் சமைக்கும் எண்ணெய் கறி, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாது, அது KFC போன்ற மல்டிநேசனல் கம்பெனிகளுக்கு கூட தெரியாத தொழில்
ரகசியம். பண்டிகை முடிந்து ஒரு மாதங்களுக்கு மதிய உணவில், எண்ணெய் கறி,
உப்புக்கண்டம், மிளகு கறி என ஏதாவது ஒரு மட்டன் வகை டிபன் பாக்ஸில் முக்கால்வாசி
அடைபட்டிருக்கும், அங்கு இங்கு சாதம் கொஞ்சம் ஒட்டிகொண்டிருக்கும். பத்துப்பேர்
படைசூழ வகுப்புத் தோழர்களுடன் மதிய உணவில் பகிர்ந்து உண்டதுண்டு.
அதன் பிறதிபலனாக,
தீபாவளியில் சுட்ட வடை, முருக்கு, சீடை என பலகார ஐட்டங்கள் சமூக அறிவியல்
பாடவேளையிலேயே காலிசெய்யப்படும். பத்துவீட்டு பலகாரத்தையும் நான் ஒண்டியாக
திண்ணவேண்டும், என்பது கொஞ்சம் கஷ்டம்தான் என்றாலும் இங்கிலீஸ் பாட எஸ்ஸே அளவுக்கு
கஷ்டமாக இருக்காது. சாயங்காலம் வீடு செல்லும் வேளையில் ஆளுக்கு இரண்டு கம்பி
மத்தாப்பு, மூன்று புஸ்வானம், சக்கர வெடி என அதுவும் ஒரு பை நிறைய கிடைக்கும்.
முஸ்லீம்கள் இருக்கும் எங்கள் தெருவில் தீபாவளி மறுநாள் எங்கவீட்டுக்கு மட்டும்
தனியாக ஒரு இரண்டுமணி நேரம் வந்துவிட்டு செல்லும். நம்ம நட்பு வட்டமும் என்னைப்
போன்று மிக தைரியசாலிகள் என்பதால், டமால், டுமீல் வெடிகள் எல்லாம் கிடைக்காது.
‘என்னடா? இந்த வருசமும் இதுதானா?, ரெண்டு அணுகுண்டு, அஞ்சு லெட்சுமி வெடி
கொண்டுவரலாம்ல?’ என வக்கனயாக வாய் பேசிக்கொண்டிருந்தாலும், கால்கள் கரகாட்டம்
ஆடும்.
அவர்களுடன் முஸ்லீம்
பண்டிகைகளை கொண்டாடுவதில் மிகப்பெரிய சந்தோசம் இருந்தாலும், மிகப்பெரிய துயரம்
இஸ்லாத்தைப் பற்றியும், அதில் கொண்டாடும் பண்டிகைகளைப் பற்றியுமான கேள்விகள்
மட்டும்தான். அதிகமுறை அப்பாவிடம் பதில்வாங்கி கொரியர் சர்வீஸ் செய்தாலும், எல்லாத்தையும்
அப்பாவிடம் கேட்டால் ‘இஸ்லாத்தைப் பற்றி ஒன்னுமே உனக்கு தெரியவில்லை, அதனால அதிகாலையில
குரான்னை எடுத்துக்கொண்டு ஊசிமண்ட அசரத்திடம் ஓதலுக்கு போ’ என அரசானை
பிறப்பித்துவிட்டால்???? ஆபத்து என்பதை முன்கூட்டியே உணர்ந்து, நானாக ஏதாவது கதை,
திரைக்கதை செய்து சமாளிப்பேன்.
‘எதுக்குடா பக்ரீத்
பண்டிகையில ஆடு அறுக்குறீங்க?’ என்று ஒருமுறை என் நண்பன் கேட்டு கழுத்தை
அறுத்தான். வாழ்க்கையில பொய் சொல்லலாம், பொய்யையே வாழ்க்கையா வச்சிருந்தா எப்படி?.
‘இறைவா இப்ப நான் சொல்லப்போகுற பொய்க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, பொய்
சொல்பவனை விட பொய் சொல்ல தூண்டும் என் நண்பனுக்கு அதிகபட்ச தண்டனையான எண்ணெய்
சட்டியில் போட்டும் என் சிறுவயதினை கருத்தில் கொண்டு மண்டயில் ஒரு கொட்டு மட்டும்
கொடுப்பாயாக’ என்று பிராத்தனை செய்துவிட்டு
‘அதுவாடா....., ஒரு மாசமா
காலையில இருந்து சாய்ந்தரம் வரை தண்ணி கூட குடிக்காம நோம்பு வைச்சிருப்போம்ல
அதுக்காக ‘அல்லா’ இப்படி ஆட்டுக்குட்டி அறுத்து, நல்லா கறி சாப்பிடுவதற்காக கொடுத்த பண்டிகைடா, அதுனாலத்தான் இது நோன்பு பண்டிகை முடிந்து 70 நாள் கழித்து வருது’ என
கூச்சமே இல்லாம பொய்சொன்னேன்.
‘அப்படின்னா, நோம்பு
பெருநாள் முடிந்து மறுநாளே பக்ரீத் வந்திருக்கனும்ல? ஏன் 70 நாள் கழிச்சி வருது?’
என அடுத்த கேள்வியை கேட்டவுடன் ஆடிவிட்டேன். ‘இப்படியெல்லாம் உன்ன யாருடா கேள்விகேட்க
சொல்லுறா? இதுக்காகவாடா சங்கரா உனக்கு ஈரல் கறி எல்லாம் தந்தேன்’ என மைண்ட்
மல்டிமீடியா மெசேஜ் அனுப்பிக்கொண்டிருந்தது.
‘இல்லடா சங்கரு, நோம்பு
இருப்பதால, குடல் எல்லாம் சுருங்கி போயிடும், நீ சொல்லுற மாதிரி நோம்பு
பெருநாளுக்கு மறுநாள் ஆடு அறுத்து பக்ரீத் கொண்டாடினா கறி குடலுக்குள்ள போகாதுல்ல
அதுனாலதான், 70 நாள் கழிச்சு பக்ரீத் கொண்டாடுறோம்’ என பதில் சொல்லிவிட்டு
‘நாளைக்கு போட்டிக் கறி கொண்டுவாரேன்’ என்று கூறி வாயை அடைத்துவிட்டேன். இல்லை
என்றால் ‘30 நாள் நோம்பு இருந்ததுக்கு, குடல் விரிய எதுக்குடா 70 நாள் ஆகுது’ன்னு
அடுத்த குண்டை போட்டுவிட்டால், பாவம் ‘அல்லா’ இருக்குற விலைவாசியில் எத்தனை
முறைதான் சங்கரை எண்ணெய் சட்டியில் போடுவார்.
தீபாவளிக்கு நம்ம டேர்ன்.
பதினைந்து பேர் சுற்றி உட்கார்ந்து அதிரசத்தை அரைத்துக்கொண்டிருக்கும் போது
‘எதுக்குடா நீங்க தீபாவளி கொண்டாடுறீங்க?’ என்று கேட்டேன். கேட்டதுதான் தாமதம்
அஞ்சு பேரு களண்டுவிட்டார்கள். அடுத்த அஞ்சு அப்ஸ்காண்ட் ஆகுறதுக்கு ரெடியானது
மாதிரி தெரிந்தவுடன் ‘டேய் ஒழுங்கா பதில் சொல்லிட்டுப்போங்க இல்ல, பூராப் பய
பேருலயும் காசுவெட்டிப் போட்டுருவேன்’ என மிரட்டியபின்பு வாய் திருந்தார்கள்.
‘அதுவாடா....., முன்னாடி
ஒரு பெரிய்ய்ய பொல்லாதவன் இருந்தாண்டா, அவன் ரொம்ப கொடுமை பண்ணினான், அவன் பேரு
நரகாசுரன், பாக்குறதுக்கு கொல்லக்கூட்டத்து தலைவன் மாதிரி இருப்பாண்டா......’ என
சொல்லிக்கொண்டிருக்கும் போதே
‘கொ.கூட்ட தலைவன் மாதிரின்னா?
நம்ம காந்தன் வாத்தியார் மாதிரி இருப்பானாடா?’ என என் சந்தேகத்தைக் கேட்டேன்.
‘ம்ம்ம்ம்..... இல்ல அவர்
அண்ணன் சண்முகையா வாத்தியார் மாதிரி இருப்பான்னு வச்சிக்கோயேன், அவன் எல்லோரையும்
இம்சை பண்ணிகொண்டிருந்தானாம், அதனால புள்ளையாருக்கு கோவம் வந்து, அவனை குத்தி கொல
பண்ணிட்டாரு’ அதோட ஞாபகத்துலதான் இந்த தீபாவளிய நாங்க கொண்டாடுறோம்.’ என எல்லோரும்
சேர்ந்து ஆளுக்கொரு வரியை பிச்சி பிச்சி சொல்லிமுடித்தார்கள். பத்து பேர்களை மொத்தமாக
உட்காரவைத்து கேள்விகேட்டதால், ஆளு ஆளுக்கு ஒன்னு சொல்லுறது 3 பேர் நாரதர்ன்னு
சொல்லுவானுங்க, 2 நாராயணர்னு சொல்லுவானுங்க, 5 பேர் நரகாசுரன்னு சொல்லுவானுங்க, யாருக்கு
மெஜாரிட்டியோ அந்த பெயரையே எடுத்துக்குறது. அப்படித்தான் புள்ளையாரும், 7 பேர்
அந்த பெயரை சொன்னதால நரகாசுரனை கொன்றது புள்ளையார் என முடிவெடுத்துக்கொண்டோம்.
பிற்காலத்தில், பக்ரீத்
பண்டிகையின் உண்மையான நோக்கம் அறிந்த போது ‘ச்சே நண்பர்களிடம் பொய் சொல்லிட்டோமே’
என்ற குற்றவுணர்ச்சி இருந்தாலும், தீபாவளி பண்டிகையின் நோக்கத்தை அறிந்த பின்பு ‘கொலுக்கொட்டையை
தின்றுவிட்டு செரிமானத்துக்கு ஆலமரத்தடியில ரெய்ஸ் எடுத்த புள்ளையாருதான்
நரகாசுரனை கொன்றது’ன்னு நம்மகிட்டயே அள்ளிவிட்டவனுங்களுக்காக என்ன ஃப்பீலிங்க்ஸ்
என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன்.
எங்க கூட்டத்துல ஏசுவின்
ஏரியா மேனஜர் ஒருத்தரும் இருந்தாரு. அவரு பெயர் சத்திய சீலன் (வச்சான் பாரு பேரு).
எல்லோரும் ஸ்கூலுக்கு 5 புத்தகத்தோடு
வந்தால் இவர் பைபிலையும் சேர்த்து 6 புத்தகமாக கொண்டுவருவார் அதுவும் இங்கிலீஷ்
பைபில். அப்போது எங்களுக்கு ஆங்கிலத்தில் வவ்வல்ஸாவது தெரிந்திருந்தது, ஏரியா
மேனஜருக்கு அதுகூட தெரியாது. ஆனால் ஒரே ஒரு பாடல் மட்டும் தெரியும் (அதுவும் தமிழ்லதான்)
‘’பாலன் ஜனனமான
பெத்தலேகம் என்னும் ஊரிலே
ஆச்சரிய தெய்வ ஜனனம்
அனைவரும் போற்றும் ஜனனம்.......” என்ற பாடல் அது.
ஏசுநாதர் யாருடா? என்று
கேட்டால், உடனே ‘’பாலன் ஜனனமான பெத்தலேகம் என்னும் ஊரிலே.....” என்று
ஆரம்பித்துவிடுவான். ஏண்டா அவர சிலுவைல அறைஞ்சாங்க? என்று கேட்டாலும் ‘’பாலன் ஜனனமான
பெத்தலேகம் என்னும் ஊரிலே.....”தான். மீண்டும் மீண்டும் எதையாவது கேட்டு எதற்கு
அவனையும் திரைக்கதை எழுதவைக்கவேண்டும் என்று எண்ணி விட்டுவிடுவோம். கோட்டான கோடி
நன்றிகள் ஏசப்பா, கோட்டான கோடி நன்றிகள்.
பேஸ்புக் பார்த்து
ஒன்றைப் பற்றிய தவறான முடிவுக்கு வருவதை விட்டுவிட்டால், இங்கு எல்லா மதமும் நல்ல
மதமே, எல்லா மனிதர்களும் யாஸிரே (ஒரு சின்ன விளம்பரம்.....), யாரோ ஒருவர் சொன்னது
போல ‘இப்போதெல்லாம் யானைகளுக்கு கூட மதம் பிடிப்பதில்லை. மனிதர்கள்தான் பாவம்...”
----- -------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்
அசனப்பா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக