செவ்வாய், பிப்ரவரி 18, 2014

அது ஒரு அழகிய நிலாக்காலம்.

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
எங்க ஊரில், பத்து பதினைந்து வருசத்துக்கு முன்னாடி திருமண விருந்து என்றால், நெய் சோறு, ஆட்டுக்கறி சால்னா, கத்தரிக்காய் குடல் சாம்பார், வெங்காய பச்சடி, என ஐட்டங்கள் இருக்கும். பண்டாரி அதாவது சமயல்காரர் வந்து நிற்பார், நாம அவரிடம் எத்தனை பேர் வருவார்கள் என்ற எண்ணிக்கையை சொன்னவுடன், மல, மல வென மேல சொன்ன ஐட்டங்களுக்கான சாமான்களை மூடையாகவும், கிலோவாகவும் சொல்லுவார். ஆடு பத்து, வெங்காயம் அஞ்சு மூடை, தக்காளி நாலு மூடை...... என பெரிய்ய லிஸ்ட் அது.

வெட்டுவது, நருக்குவது இந்த மாதிரியான வேலைகள் எதையும் அந்த சமையக்காரர் செய்யமாட்டார். அவருடைய வேலை விருந்து அன்னைக்கு வருவது, எடுத்து போடுவது, கிண்டுவது, இரக்கிவைப்பது அவ்வளவுதான். மசலாக்களை அறைப்பது, வெங்காயம் வெட்டுவது, இஞ்சு, பூண்டு நறுக்குவது, தேங்காய் சில் எடுப்பது, அதை மை போல அரைப்பது... என்று பெரிய்ய்ய்ய்ய வேலைகள் எல்லாம் அங்குள்ள பெண்கள் தலையில்தான் வந்து விடியும்.  

திருமணத்திற்கு முந்தய நாள் இரவு 10 மணிக்கு பந்தலுக்கு நடுவே, மேல் சொன்ன காய்கறி சாமான்கள் அனைத்தும் கொட்டி வைக்கப்படும் வெங்காயத்தை சுத்தி பத்து பெண்கள், இஞ்சியைச் சுற்றி பத்து பெண்கள், பூண்டினை சுற்றி பத்து பெண்கள் என அமர்ந்துகொண்டு, ஊர் கதை, உலக கதைகளைப் பேசியபடியே உரிக்கவும், வெட்டவும் ஆரம்பிப்பார்கள். கல்யாண பொண்ணு தவிர்த்து அனைத்து பெண்களும் அந்த இடத்தில் கூடியிருப்பார்கள். அதுவரைக்கும் நாம கண்டிராத பல 
முகங்களை அங்கு காண முடியும்.

“இவன் தான் கடக்குட்டி, பத்தாவது படிக்கிறான்” என அவர்களிடம் நம்மை அறிமுகம் செய்து வைப்பார்கள், உடனே நாமளும் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பதை “நீங்க யாருன்னு எனக்கு தெரியல?” என்ற டோனில் சொல்லனும். உடனே பக்கத்துல இருப்பவர் “இதுதான்டே, வீராநல்லூர் தோனுவி (திவான் பீவி) நன்னியோட (பாட்டி) மூத்த மகள் பரீதா பானு வீட்டுக்காரர், அப்துல்காதர்” என்று சொல்லுவார்கள். இத கேட்டவுடனே “யாரு அந்த திவான் பீவி நன்னி?" ன்னு கேட்க தோணும், அப்படி கேட்டுட்டா, தேங்காய் உரிக்க சொன்னவன, வெங்காயம் உரிக்கச்சொல்லிருவானுங்க. அதுக்கு பயந்தே “ஓ, நல்லாயிருக்கீங்கலா?, நன்னி நல்லா இருக்காங்கலா?” ன்னு ‘உங்களை எனக்கு ரொம்ப நல்லா தெரியும்’ ரேஞ்சில் சொல்லனும். ‘நன்னி 
இறந்து வருசம் மூனு ஆச்சப்பா’ ன்னு சொல்லாத வரைக்கும் எல்லாம் நல்லபடியா போகும்.

டீம் ஒர்க் என்பதை திருமண விருந்துக்கு ஏற்பாடு செய்யுற இந்த இடத்துல கண் கூட பார்க்கலாம். பெண்கள் எல்லோருக்கும் மேல சொன்ன வேலைகள் இருக்கும், ஆண்களில் ஒரு குரூப்புக்கு தேங்காய் வெட்டிக்கொடுப்பது மட்டும்தான், மேலும் பெண்கள் டயர்டாகிவிட்டால், டீ, காபி சப்ளை செய்வது. இந்த குரூப் வேலை நேரம் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 3 அல்லது 4 மணிவரை இருக்கும். ஆண்களில் அடுத்த குரூப் அதிகாலை 3 மணிக்கு எழுந்து, கொஞ்சப்பேர் ஆடு வெட்டும் இடத்திற்கு சென்று கறிக்கடைக்காரன் தண்ணி சேர்க்காமல் இருப்பதையும், எடை போடுவதையும் கண்கானிக்கவேண்டும். இன்னும் கொஞ்சம்பேர் அரைப்பதற்கு எடுத்து வைத்திருக்கும் தேங்காய், கச கச..... போன்ற சாமான்களை எடுத்துகொண்டு போய், அரைத்துக்கொண்டு வரவேண்டும். தேங்காயை சால்னாவுக்கு, மையாகவும், சாம்பாருக்குமாக, சத சதப்பாகவும் அரைக்கவேண்டும. இந்த மாதிரி விசேச விருந்துகளுக்கு அரைத்துக் கொடுப்பதற்கென்றே சில வீடுகளில் பெரிய்ய கிரேண்டர்கள் உண்டு.

ஆண்களுக்காவது அந்த இரவில் கொஞ்சம் ஓய்வு என்பது இருக்கும், பெண்களுக்கு அதுவும் இருக்காது, காய்கறிகளை வெட்டி முடிக்க 3 மணிவரை ஆகும். பின்பு காலை டிபன் இட்லி, சாம்பார், சட்னிக்கு தயார் ஆகவேண்டும். இந்த இட்லியப் பத்தி சொல்லியே ஆகவேண்டும். அத்தினி இட்லியும் அத்தாந்தண்டி  இருக்கும், ஒரு இட்லிய சாப்பிடிவதற்கே ஒரு மணி நேரம் ஆகும், நல்லா இருக்கக்கூடாது என்று நினைத்து செய்வார்களா? இல்லை எப்படி செய்தாலும் நல்லா வராதா? ங்குற டவுட்டு எனக்கு இன்னமும் இருக்கிறது. மதியம் ஒரு கட்டு கட்டவேண்டும் என்ற நோக்கம் வேறு மனசில் இருப்பதால், “பெரியத்தா, வெற்றிலை வாங்கச்சொன்னாங்க” ன்னு சொல்லி எஸ்கேப் ஆகவேண்டிய நிலை உண்டாகும்.

“ஊர் சொல்ல போகுறவங்கள எங்கடா?’’ என்ற சவுண்ட் எப்படா கேக்கும்னு காத்துக்கொண்டிருக்கும் வாண்டுகள் கூட்டம். விருந்துக்கு அழைப்பது என்ற முக்கிய பொறுப்பு அவங்ககிட்டத்தான் கொடுக்கப்படும். மாமா மகன், அத்தை பையன், சித்தப்பா மகன், பெரியப்பா மகன், மற்றும் அவர்களுடய நண்பர்கள் என கும்பலா வந்து நிப்பானுங்க. தெற்குத்தெருவுக்கு ஒரு மூனு பேரு, நடுத்தெருவுக்கு மூனு பேரு, வட்டாரம் சொல்ல மூனு பேரு..........இப்படி தெருவுக்கு, தெரு ஆளை பிரித்துவிட்டபின்பு, சைக்கிள் வாடகைக்கு 5 ரூபா கொடுக்கனும். ஆக்சுவலா, அந்த வாடகை சைக்கிளுக்குத்தான் அவ்வளவு ஆர்வம். ஒருத்தன் ஓட்ட, இன்னொருத்தன் பின்னாடி உக்கார, மற்றொருவன் வண்டியைத்தள்ள இப்படி மாறி மாறி சைக்கிளை ஓட்டி எல்லா வீட்டுகளுக்கும் போய் விருந்துக்கு அழைக்கவேண்டும்.

சாப்பாட்டு அழைப்பு லிஸ்டை கொடுத்த பின்பு எல்லா வாண்டுகளையும் உட்கார வைத்து 10 நிமிட வகுப்பு நடக்கும். லிஸ்டில் ஒரு ஒரு வீடாக வாசித்து ‘இந்த வீடு எங்க இருக்கு, தெரியுமா? மக்கி ஹாஜா கடைக்கு அடுத்த ரெண்டாவது வீடு’, ‘இந்த வீடு, டர்ன்னா சாவுல் வீட்டுக்கு மேல் வீடு..................... என லோகேசகள் சொல்லிக்கொடுக்கப்பட்டாலும், ‘இது நம்ம கூட அஞ்சாவது படிச்ச ஆமினா வீட்டுக்கு எதிர் வீடு, அது மதரஸாவில் நம்ம கூட ஓதுற பாத்திமா வீடு, இது அலிபாத்து வீடு...........” என அவர்களுடய டேட்டா பேஸ்படி ஞாபகத்தில் வைத்துக்கொள்வார்கள். எப்படி அழைப்பது என்பது முதற்கொண்டு சொல்லிக்கொடுக்கப்பட்டு, ‘ம்ம் எல்லோரு சேர்ந்து ஒரு தடவ மொத்தமா சொல்லுங்க பார்ப்போம்?’ என்று சொல்லிகொடுத்தவர் கேட்க “அஸ்ஸலாமு அலைக்கும், வீட்டுல ஆள் இருக்கா?, கத்தரிக்கா சட்டி வீட்டு கல்யாணத்துல சாப்பாடு வச்சிருக்கு, எல்லோரும் கண்டிப்பா வாங்க” ன்னு கோரஸா சொல்லனும்.

விருந்துக்கு, பந்தியில் உட்கார்ந்துவிட்டால் மாப்பிள்ளை அப்பாவோ, ஏன், மாப்பிள்ளையோ பக்கத்தில் இருந்தாலும் யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள். பந்தியில் இருந்தால் ஒரே ஒருவருக்குத்தான் ஏக போக மரியாதை கிடைக்கும், அவர்தான் பண்டாரி (சமையல்காரர்). ஏன் என்றால் கறி வாலி அவரிடம் மட்டும்தான் இருக்கும். சோறு, சாம்பார் வாலியை யாரு வேண்டுமானாலும் எடுக்கலாம், ஆனால் கறி வாலி பண்டாரி கை விட்டு எங்கும் போகாது. அதற்கு காரணம் மற்றவர்களிடம் கொடுத்துவிட்டால், ஆள் பார்த்து கறியை அதிகம் வைத்து விடுவார்கள், பிறகு பின்னாடி சாப்பிட வருபவர்களுக்கு கறி இல்லை என்றால், ‘நீயெல்லாம் என்னடா பண்டாரி, நான் தான் இம்புட்டு பேரு வருவாங்கன்னு உங்கிட்ட சொன்னேன், நீயும் புடிங்கி மாதிரி 10 ஆடு போதுமுன்னு சொன்ன, இப்ப பாரு, கடைசி பந்திக்கு கறி இல்ல” என்ற ஏச்சு பேச்சுக்கு ஆளாகக்கூடாது என்ற எண்ணம் மட்டுமே. மாப்பிள்ளையே மன்றாடினாலும் எக்ஸ்ரா கறி கிடைக்குறது ரொம்ப கஷ்டம்தான். சில சமயத்துல “பொண்ண வேணும்னா விட்டுட்டு போ, கறி எல்லாம் எக்ஸ்ரா கிடையாது” ங்குற டயலாக் எல்லாம் வந்து விழும்.

இவ்வளவு வேலைகளைச் செய்ய ஒரு குடும்பம் போதாது, இதற்காகவே கல்யாணத்திற்கு அழைக்கச் செல்லும் போது, “இரண்டு நாளுக்கு முன்னாடியே வந்திடனும், வந்து எல்லா வேலைகளையும் நீங்க தான் எடுத்துபோட்டு செய்யனும்” என்ற சிறப்பு அழைப்பு வேறு இருக்கும். அப்படி அழைப்பவர்கள் ரத்த சொந்தமாகவோ, நெருங்கிய சொந்தமாகவோ கூட இருக்கமாட்டார்கள், எங்க ஒன்னுவிட்ட சித்தியோட ரெண்டுவிட்ட நாத்தனாரை கெட்டின குடும்பமாக இருக்கும். சொன்னதுமாதிரியே அவங்களும் வந்து, இத செய், அதை செய் என்ற ஒரு வார்த்தயையும் எதிர்பார்க்காம தன் வீட்டு வேலை மாதிரி இழுத்து போட்டு செய்வார்கள்.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, இந்த முறை எல்லாம் மாறிவிட்டது. இப்போது எல்லாம் பிரியாணி மட்டும்தான், இதற்கு பெரிய வேலைப்பாடுகள் எல்லாம் இல்லை என்பதாலும், இதற வேலைகளுக்கு கூட இப்போது சமையல்காரரே அதற்கான ஆட்களையும் கூட்டிகொண்டு வந்துவிடுவதால், அதிகமானவர்கள் தாலி கட்டும் நேரத்துக்கு வந்து, சாப்பாடு சாப்பிட்டுவிட்டு பஸ் ஏறிவிடுகிறார்கள், இதனால் சொந்தங்களின் பரீட்சயம் என்பது ரொம்ப, ரொமப் குறைந்து போய்விட்டது. முன்னாடி, அப்பாவுடைய சின்ன பாட்டனாரின் மகன்களை கல்யாணத்திற்கு சேர்க்கவில்லை என்றாலே அது பெரிய்ய குறையாக இருக்கும், ஆனால் இப்போது கூடப்பிறந்தவர்களை அழைக்காமல் கூட திருமணங்கள் நடைபெறுவது ‘ஜஸ்ட் லைக் தாட்’ டைப்பாகிவிட்டது.

எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதற்கும் அதிகமான சந்தோசம் அப்போது இருந்தது, உண்மையிலேயே அது ஒரு அழகிய நிலாக்காலம், அந்த விசயத்தில் எங்கள் அண்ணன்மார்களும், அக்காமார்களும் ரொம்ப கொடுத்துவைத்தவர்கள்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

6 கருத்துகள்:

 1. VERY NICE ARTICLE. ONCE AGAIN I REMEMBERED OUR NATIVE CULTURE.

  பதிலளிநீக்கு
 2. அன்பு யாசிர்...
  கல்யாண வீட்டு கலாட்டாக்களை ரொம்ப அருமையாக நினைவில் கொண்டு வந்து பதிவில் வடித்தீர்கள். இரசிகும்படியிருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அவர்தான் பண்டாரி (சமையல்காரர்). ஏன் என்றால் கறி வாலி அவரிடம் மட்டும்தான் இருக்கும். சோறு, சாம்பார் வாலியை யாரு வேண்டுமானாலும் எடுக்கலாம், ஆனால் கறி வாலி பண்டாரி கை விட்டு எங்கும் போகாது. //

   கறி வாளியில்தான் பண்டாரியின் திறமையே இருக்கின்றது - சரியாகச் சொன்னீர்கள்.

   நீக்கு
  2. // “பொண்ண வேணும்னா விட்டுட்டு போ, கறி எல்லாம் எக்ஸ்ரா கிடையாது” //

   - இதை
   'பொண்ண "வேணாம்னு" விட்டுட்டு போ; ஆனா
   கறி எல்லாம் எக்ஸ்ரா கிடையாது' என்றும் சொல்லலாம்.

   நீக்கு
  3. பிரியாணியைப் பற்றி எழுதவேண்டும் என்றுதான் நினைத்தேன், மேற்கோள் காட்டுவதற்காக எழுதியதே ஒரு பதிவாக வந்தது எனக்கே ஆச்சர்யம்தான். மறுமொழியிட்டமைக்கு மிக்க நன்றி.

   நீக்கு