திங்கள், அக்டோபர் 05, 2015

டு மதுரை

ஞாயிற்றுக் கிழமை செல்லவேண்டிய மதுரை பயணம், திங்கள் கிழமைக்கு தள்ளிப்போனது. ஒருவார விடுமுறையில், ஒருநாள் மதுரைக்கு என்று அபுதாபியில் இருந்து புறப்படும்போதே முடிவானதுதான். ஒரு நாள் தள்ளிப்போனது கூட நல்லதற்க்குத்தான் என்று, பின்பு தெரிந்துகொண்டேன். எங்கள் ஊரில் இருந்து மதுரைக்கு 4 மணி நேர பஸ் பயணம். மணிக்கணக்காக பஸ்ஸில் பயணித்து ஆறு வருடங்களுக்கு மேல் இருக்கும், ரயிலில் போக சிலர் ஆலோசனைகள் வழங்கினாலும், பஸ்ஸில் பயணிப்பதையே நான் விரும்பினேன்.

தமிழ்நாட்டு பஸ்ஸிற்கும், அபுதாபி டு திருவனந்தபுரம் இந்தியன் எக்ஸ்பிரஸிற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. சொல்லப்போனால்,  இ.எ விட பஸ்ஸில் குலுக்கல் கொஞ்சம் கம்மிதான். நடுவானில், நடுக்கடலில் இ.எக்ஸ்பிரஸ் ஒரு குலுக்கு குலுக்கும் போது பயணிகள் கொடுக்கும் ‘’என்டே ஏசுவே ரச்சிக்கனே....’’ ‘’எண்டே குருவாயூரப்பா காக்கனே....’’ ‘’படச்சோனே பாதுகாக்கனே...’’ என்ற சேட்டன்களின் சப்தத்தில்தான் கேப்டனே தூக்கத்தில் இருந்து எழுந்திருப்பார்.

பயணம் ஒரு நாள் தள்ளிப்போனது நல்லதற்குத்தான் என்று சொன்னதன் காரணத்தை சொல்லவில்லையே. அது திங்கள் கிழமை அதிகாலை 5 மணி, வாரவிடுமுறைக்கு வந்து சென்ற காலேஜ் பெண்கள், அந்த காலை நேரத்திலும் குளித்து, அளவான மேக்கப், வாடாத மல்லிகையோடு மதுரை பஸ்ஸிற்கு காத்திருந்தார்கள். காலம்தான் எவ்வளவு மாறிப்போனது, நான் காலேஜ் படிக்கும் போது அதிகாலையில் எழுந்து பஸ் ஸ்டாண்ட் சென்றால், நாய் புடிக்கிறவன் மாதிரி நான் நிற்க, பன்னி மேய்க்கிறவன் போல் பக்கத்தில் ஒருத்தன் நிற்பான், எருமை மேய்க்கிறவன் போல் எதிர்தால்போல் மற்றொருவன் நிற்பான்.

‘’சார், நீங்க மதுரைக்குத்தானே போறீங்க, இந்த பொண்ணுங்கள பாத்துங்கங்க’’ என்று அங்கு நின்ற ஐந்து பெண்களின், ஏதாவது ஒரு அப்பனாவது சொல்லுவான், அதையே மூலதனமாகக் கொண்டு, மதுரை வரை கடலை பயிர்செய்துவிடலாம் என்று நானும் சுற்றி சுற்றி வந்தேன். ஒன்னும் நடக்கல. பஸ் வந்தது, நான் பின்புறம் ஏறுவதை கவனித்து. ஐந்து பெண்களையும் முன்புறமாக ஏற்றிவிட்டார்கள் பெற்றவர்கள். அப்பன் பேச்சைக் கேட்டதால், ஐந்து பெண்களும் நின்று கொண்டே வந்தார்கள், எனக்கோ ஜன்னலோர சீட்டு. அதோடு இளையராஜாவின் பாடல்கள் வேறு, கேட்கவேண்டுமா?. கனவுலகுக்கு அந்த ஐந்து பெண்களும் வெள்ளைக் கவுனில் வந்து, என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தார்கள்.

நான்கு பாடல்கள் முடிந்த நிலையில், முகத்தில் மழைத்துளி தூற, கனவில் கன்னிகளுடலான குஜாலை நிறுத்தி, மழையை ரசிக்க கண்விழித்தபோது அறிந்தேன், முகத்தில் விழுந்தது மழைத்துளி அல்ல. மூன்று சீட்டிற்க்கு முன்பாக இருந்தவன் காரிக் காரி துப்பிக்கொண்டிருந்தான். காற்றில் பறந்து வந்து என் முகம் முழுக்க வெள்ளாமை பண்ணியது. படிப்பறிவு இல்லாதவனாக இருக்க வேண்டும் அல்லது ஆறாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை உதறிய உதவாக்கரையாக இருக்கவேண்டும். ஏழாவது படித்திருந்தால் காற்றின் எதிர் விசை பற்றி அறிவியலில் படித்திருப்பானே!!!. துப்புவதை நிறுத்தவில்லை, பாவிப்பய.........., நாடிக்கமலத்தில் இருந்து இழுத்து இழுத்து துப்பிக்கொண்டிருந்தான். ‘’யோவ்...., அறிவிருக்கா, நீ துப்புறது என் மூஞ்சில வந்து விழுது’’ என்று சப்தம் போட்டவுடன். ‘’சாரி பாஸ்’’ என்று நிறுத்திக்கொண்டான்.

புளியங்கூடியில் அவன் துப்பியதை ராஜபாளையம் வரை துடைத்துக்கொண்டே வந்தேன். ராஜபாளையத்தில் பஸ் பத்து நிமிடம் நிற்க, பிசிலரி வாட்டர் வாங்கி முகத்தை கழுவினேன். வாஸ்த்துப்படி அந்த இடம் சரி இல்லாததால், எதிர் திசையில் அமர்ந்துகொண்டேன். ஒருவர் தினகரன் பேப்பருடன் ஏறினார். ‘’கொஞ்சம் படிச்சிட்டு கொடுக்கலாமா?’’ என்று கேட்டு வாங்கிக்கொண்டேன். ஒரு முறைப்புடன்தான் பேப்பரைக்கொடுத்தார். ‘’ரொம்ப திமிர் புடிச்சவனா இருப்பான் போல’’ என மனசுக்குள் நினைத்துக்கொண்டேன். கடன் வாங்கிய தினகரனினில் நாட்டிற்கும், வீட்டிற்கும், எதிர்கால சந்ததிகளின் நலனுக்கும் பயன்படக்கூடிய அனைத்து சினிமா செய்திகளையும் படித்துவிட்டு, திரும்ப கொடுக்கும் போது, சிவப்பு நிறத்தில் கட்டம்போட்ட சட்டையை கழட்டிவிட்டு போலிஸ் யூனிபார்மை மாட்டிக்கொண்டிருந்தார் அவர். ‘’பொம்பள படத்தை பாக்குறதுக்குத்தான் பேப்பரை வாங்கினியாக்கும்’’ என்று அவர் கூற முனையும் சமயத்தில், திருமங்கலம் – மதுரை பைபாஸில் நடந்த ஆக்ஸிடெண்டை பார்த்துவிட்டு ‘’ஓ!!!! ஏகாதிபத்திய அரசாங்கமே.................’’ என அரசுக்கு எதிராக முழங்கிக்கொண்டிருந்தார். பாவம், பஸ்ஸில் யாரும் அவரைக் கவனிக்கவில்லை.

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பாக பார்த்த மதுரை முற்றிலும் மாறி இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் மதுரை அப்படியேதான் இருந்தது, புது ரோடுகளோ, புது பாலங்களோ எதுவும் இல்லை, மக்கள் நெருக்கடிதான் மிகவும் அதிகரித்திருந்தது. மதுரை போக்குவரத்து இடைஞ்சல்ளுக்கான மாற்றுத் தீர்வுதான் என்னுடய இஞ்சினியரிங் புராஜெட்டாக இருந்தது. மதுரை முக்கிய ரோடுகளில் நின்று கொண்டு, பீக் ஹவர்ஸில், மணிக்கு எத்தனை வாகனங்கள் வருகின்றன, போகின்றன என்பதை அறிந்து அதற்கான மாற்று பாதையை கண்டறிவது, என்றாக இருந்தது அந்த புராஜெக்ட்.

மதுரையில் இரண்டு இடங்களைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஒன்று, எப்போது மதுரை சென்றாலும் காணக் கிடைக்கும் தங்க ரீகல் தியேட்டர், இந்த முறையும் கண்ணில்பட்டது. இரண்டாவது, ஒவ்வொருமுறையும் பார்க்க விருப்பப்பட்டு பார்க்காமல் போன அம்மா மெஸ், இந்த முறையும் தவறிப்போய்விட்டது. தங்க ரீகல் தியேட்டரை நான் பார்க்க ஆசைப்பட்டதன் காரணத்தை கூற வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன். அடுத்தது அம்மா மெஸ். மதுரையில் புராஜெட் செய்யும் போது, முக்கியமான ரோடுகளுக்கு அட்ரஸ் சொல்லும் எங்கள் புராஜெக்ட் கெய்டு ‘’அம்மா மெஸ்ஸில இருந்து 10A போகும்’’ ‘’பெரியார் பஸ்ஸ்டாண்டுக்கு, அம்மா மெஸ்ஸில் இருந்து 7 வது ஸ்டாப்’’ என அம்மா மெஸ்ஸை மையமாக வைத்துத்தான் வழி சொல்லுவார். அவ்வளவு புகழ்வாய்ந்த அந்த அம்மா மெஸ்ஸை இம்முறையும் பார்க்கமுடியாதது மிக துயரம்.

நண்பர்களுடன் அன்றய தினம் மிக வேகமாக சென்றது. ஊருக்கு திரும்பிச் செல்ல மாட்டுத்தாவணியில் பஸ்ஸுக்காக நின்றேன். அரசு பஸ்ஸை விட தனியார் பஸ் மிக வேகமாகச் செல்லும் என்று எண்ணி ஒரு தனியார் பஸ்ஸில் ஏறி மோசம் போனேன். ஷேர் ஆட்டோவை விட கேவலம், கை நீட்டினால் பஸ்ஸை நிறுத்தி ஆள் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். பஸ் காற்றுவாங்கிக் கொண்டுதான் இருந்தது. மூன்று சீட்டிற்கு முன்பாக ஆள் இல்லாதவரை, ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்திருந்தேன். அந்த சீட்டிற்கு ஆள் வர, நான் என் இருப்பை, சீட்டின் ஓரத்திற்க்கு நகற்றிக்கொண்டேன்.

ஒரு ஸ்டாப்பில், முழு போதையில் ஒருவர் ஏறினார். அவ்வளவு சீட் காலி இருந்தும், என் அருகில் வந்து அமர்ந்தார். ‘’குட் மார்னிங்க் பிரதர்’’ என்ற முகமன் வேறு. நானும் ‘’குட் மார்னிங்க்’’ என்றேன். ஆனால் அப்போதே தெரிந்துவிட்டது இது ஒரு ‘’வெரி பேட் ஈவினிங்க்’’ என்று. ‘’தம்பி, கொஞ்சம் டயர்டாக இருக்குது, திருச்சி வந்தவுடன் என்னை எழுப்பிடுங்க’’ என்று மல்லாக்க சாய்ந்துவிட்டார். ‘’என்னது திருச்சியா?, பிரதர் இது ராஜபாளையம் போகுற பஸ், நீங்க, தப்பா ஏறிட்டீங்க’’ என நான் சொன்னாலும் அவர் கேட்பதாக இல்லை. இல்லை, கேட்கக்கூடிய நிலையில் இல்லை.

கண்டெக்டரிடம் நிலமையைச் சொன்னேன். அவரோ ‘’யோவ், எங்கயா போகனும்?’’ என்று குடிமனிடம் கேட்டார். பதிலுக்கு கு.ம “அம்ரிக்கான்னா அங்க கொண்டுபோய் விட்டுறுவியா?, திருச்சிக்கு ஒன்னு கொடு’’ என்று எழுந்தெரிக்காமலே ஏழரையை கொடுத்துக்கொண்டிருந்தார். ‘’யார்டா இவன், கப்பித்தனமா காமெடி பண்ணிக்கிட்டு, திருச்சிக்கெல்லாம் போகாது, முதல்ல நீ பஸ்ஸவிட்டு இறங்கு’’ என கண்டெக்டர் சொன்னதுதான் தாமதம். ‘’டேய் என்ன இறக்கிருவியா? ஒம் பஸ்ஸு இனி ஓடிருமா?.........நான் யாருன்னு நினச்சே?’’ என சில மானே, தேனே போட்டு கண்டெக்டரை அர்ச்சனை செய்துகொண்டிருந்தார். ‘’நீ யாருன்னு இப்பத்தான் தெரியுது, வேட்டிய எடுத்து மூடு. இப்ப என்ன திருச்சிக்குத்தானே போகனும், 26 ரூபாய் கொடு’’ என வாங்கிக்கொண்டு டிக்கெட்டை கொடுத்தார்.

எனக்கு தலை சுற்றியது, ஒரே பஸ் எப்படி? திருச்சிக்கும், ராஜபாளையத்துக்கும்? என குழம்பிக்கொண்டிருந்தேன். சில மணி நேரத்திற்கு அப்புறம். ‘’யோவ், திருச்சி வந்தாச்சு, இறங்கு’’ என அந்த குடிமகனை, டி.கல்லுப்பட்டியில் இறக்கிவிட்டுவிட்டார் அந்த கண்டெக்டர்!!!!. நான் தூங்காமல், நடந்ததை கவனித்ததை, அந்த கண்டெக்டர் கண்டுவிட்டார்.

‘’என்ன தம்பி, நீங்களும் திருச்சிக்குத்தான் போகனுமா?’’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார் கண்டெக்டர்.

‘’இல்ல சார், ராஜபாளையத்துக்கே போய்க்கிறேன்’’ என்று உள்ளுக்குள் அழுதுக்கொண்டே சொன்னேன்.

மது வீட்டிற்க்கும், நாட்டிற்கும் மட்டுமல்லாது திருச்சி செல்வதற்க்கும் கேடு.


-------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

4 கருத்துகள்:

  1. bro antha 5 girl ah pathu jollu vittathu methuva sollung veetla evanachum potttu vitturuvan

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த விசயம் வீட்டுல தெரிஞ்சுதுனா, அதுக்கு உங்க அத்தாதான் காரணமா இருக்கும். அந்த பஸ்ஸ்டாண்டில் என்னை பார்த்த ஒரே நேரடி சாட்சி உங்க அத்தாதான்.

      நீக்கு