பத்து நாட்கள் வாழ்க்கை ஜாலியோ ஜிம்கானாவாக
போய்கொண்டிருந்தது. இப்படி பக்தன் பரவச நிலையில் இருப்பதை, ஏனோ பரலோகத்தில்
இருக்கும் பரமபிதா விரும்புவதில்லை. விளைவு, சண்டையிட்ட மனைவி மறுபடியும் பேச
ஆரம்பித்துவிட்டாள். கஷ்டங்களை கொடுத்து ‘கடவுள் உளேன்’ என்பதை அடிக்கடி
நிரூபித்துக்கொண்டிருக்கிறார். இதோடு, ரூமிற்கு இன்னொரு ஆள் தேடும் பெரும் கஷ்டம்
வேறு.
என்னோடு ரூமில் இருந்த பீகாரிக்கும், உ.பிக்காரனுக்கும்
சண்டை. அது ஒரு சிறிய சண்டையாகத்தான் இருந்தது. என்னுடய ஓட்டை ஹிந்தியைக்கொண்டு
‘சமாதானம் செய்துவைக்கிறேன்’ என்று நான் களத்தில் இறங்கிய பின்புதான் அது பெரிய
சண்டையாகி, கைகலப்பில் முடிந்தது. கைகலப்பாகும் என்று தெரிந்தவுடனேயே
களண்டுவிட்டேன். அதுதானே உலக வழக்கம். அதைவிடுத்து மீண்டும் ‘சமாதானம் செய்கிறேன்’
என்று முருக்கிக்கொண்டு நின்றிருந்தால், இந்நேரம் சமாதியாகி இருப்பேன். முடிவில் உ.பிக்காரன் ரூமை காலிசெய்து
போய்விட்டான். இது நடந்து ஒரு மாதம் இருக்கும்.
உ.பிக்காரன் காலிசெய்த கட்டிலுக்கு, விசிட் விசாவில்
வேலைதேடி வந்த ஒரு மலையாளி கிடைத்தான். நைட் ரெண்டு மணியாகிவிட்டால், ‘’அம்மு
மோலேய்....அவிடிருந்து இவிட கொண்டுவரணும், இங்கிருந்து அவட கொண்டோனும்....அம்மு
மோலே, மனசிலாயோ’’ என தூக்கத்தில் பினாத்திக்கொண்டிருப்பான். புதிதாக கல்யாணமாகி
இருந்ததால் மனைவியிடம் பேசிக்கொண்டிருக்கிறான் என்று நினைத்தோம். மேலும், ரெண்டு
மணிக்கு எழுந்து ‘’என்ன நடக்கிறது?’’ என்பதை வேவு பார்ப்பது முடியாத காரியம்.
அதோடு, இவன் அமுக்கு அமுக்கி பேசுவதால் எங்களின் தூக்கத்திற்கு பெரிய அளவில்
தொல்லையில்லை எனவே நாங்களும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
ஒருநாள் கனவில், அந்த நம்பர் நடிகை வந்த நேரம், ‘’அம்மு
மோலே, மனசிலாயோ...’’ சப்தம் கேட்டு நம்பர் காணாமல் போய்விட்டாள். பெருங்கோபம்
கொண்டு, போர்வையை தூக்கிவீசி, சேட்டனை தும்சம் செய்ய தூக்கத்திலிருந்து பொங்கி
எழுந்தால், மலையாளி புத்தகத்தை வைத்துக்கொண்டு யாருக்கோ பாடம் நடத்திக்கொண்டிருந்தான்.
மூஞ்சில் டார்ச் லைட் வெளிச்சத்துடன், லேப்டாப் முன்பாக குத்தவைத்து
உட்கார்ந்திருந்த நிலையைப் பார்த்தபின்பு, என்னிடம் கோபம் போய், பயம் கவ்விக்கொண்டது.
மறுநாள் விசாரித்ததில், அமெரிக்காவில் இருக்கும் ஒரு மலையாளி பேமிலியின் 10ஆம்
வகுப்பு படிக்கும் பெண்ணிற்கு கணக்கு பாடம் எடுப்பதை பார்டைம் ஜாப்பாக
செய்துகொண்டிருக்கின்றானாம்.
உலகத்தில் இதுபோன்ற வேலைகள் இருப்பது பற்றி அப்போதுதான்
எனக்கு தெரியும். நம்மிடம் கணக்கு பயிலவந்தால், நாம் கணக்கு பண்ணிவிடுவோம் என்பது
தெரிந்துதான் யாரும் பக்கத்தில் கூட அண்டுவதில்லை. இவனை விரட்டிவிட்டால், அடுத்து
ஆள்பிடிப்பதற்கு நாம்தான் கஷ்டப்படவேண்டும் என்பதை அறிந்து அவனின், இரவு இரண்டு
மணி இம்சையை பொருத்துக்கொண்டோம். பேஜ்சிலர்ஸ் ரூமில் எல்லாமே டைமிங்க் என்பதை
சொல்லித் தெரியவேண்டியதில்லை. காலையில் பாத்ரூம் போவதற்கு என்னுடய நேரம் 6.30 டு
7.00 வரை. எனக்கு பின்பு, பீகாரி செல்வான். மலையாளிக்கு வேலை இல்லை என்பதால்,
7.30ல் இருந்து அவனுக்குத்தான்.
நாளை தனக்கு இண்டர்வியு இருப்பதால், பீகாரியின் பாத்ரூம்
டைமில் அவன் செல்வதற்கு அனுமதிகேட்டான். அவனும் ஒ.கே சொல்லிவிட்டு, என்னிடம்
அரைமணி நேரத்திற்கு முன்பாக 6.00 மணிக்கு பாத்ரூம் போகச்சொன்னான். நானும்
சம்மதித்தேன். பேசியதுபோல நான் 6.00 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு, பீகாரி
பாத்ரூமில் இருந்து வருவதற்கு முன்பாகவே ரூமைவிட்டு கிளம்பிவிட்டேன். மாலை, ரூமிற்கு
வந்தவுடன், மலையாளி தனக்கு வேலை கிடைத்துவிட்டதாகவும், தான் இன்னும் இரண்டு
நாட்களில் சார்ஜா செல்வதால் ரூமை காலி செய்வதாகவும் சொன்னான்.
அதற்கு நான், ‘’ரூமை காலிசெய்யவேண்டும் என்றால் ஒரு மாதத்திற்கு
முன்பாகவே சொல்லவேண்டும், இப்படி திடீரென காலிசெய்தால், ஏழு நாளில் எப்படி நாங்கள்
அடுத்த ஆளை தேடுவது, எனக்கு பிரச்சனையில்லை என்றாலும், பீகாரி சம்மதிக்கமாட்டான்’’
என்று கூறினேன். ‘’பீகாரியிடம் ஏற்கனெவே போனில் பேசிவிட்டேன், அவன் ஒ.கே என்று
சொல்லிவிட்டான்’’ என்று மலையாளி கூற எனக்கு ஒரே ஆச்சர்யம். ‘பீகாரி ரொம்ப
ஸ்ட்ரிக்ட் ஆபிசராச்சே எப்படி சம்மதித்தான்?’ என்று குழப்பம்வேறு. எப்போதும்
ரூமிற்கு சீக்கிரம் வரும் பீகாரி, அந்த மலையாளி ரூமை காலிசெய்வதுவரை, நைட்
லேட்டாகவே வந்தான்.
வெள்ளிக்கிழமை, மலையாளி ரூமை காலி செய்யும்போது, பீகாரி
ரூமில் இல்லை. ‘’பிரத்தியேகம் ஆ சேட்டனிடம் நன்னி பரையனும், மறக்கரது,
பிரத்தியேகம் பரயனும்’’ என்று அவனுடய நன்றியை கண்டிப்பா பீகாரியிடம் சொல்லவேண்டும்,
கண்டிப்பாக என்று திரும்ப திரும்ப சொன்னான். எனக்கு மண்டை வெடித்திடும்போல் இருந்தது.
பீகாரி ரூமில் வந்ததும், மலையாளி பரஞ்ச பிரத்தியேக நன்னியைச் சொல்லிவிட்டு,
அதற்கான காரணத்தைக் கேட்டேன். அவனும் சொன்னான் . --இதுதான் ரொம்ப பயங்கரமான இடம்,
மனச தேத்திக்கங்க--
சம்பவநாள் அன்று காலை 7.0 மணிக்கு குளித்து ரூமில் டிரஸ்
மாற்றிக்கொண்டிருந்தான் பீகாரி. அவனது இடதுபுறம் மலையாளி கட்டில். பீகாரி பாத்ரூமிலிருந்து
வரும்வரை, அவன் தூங்கிக்கொண்டு இருந்தானாம். ‘’இண்டர்வியு என்று சொன்னான், இன்னும்
தூங்கிக்கொண்டிருக்கிறானே???, சரி, டிரஸ் மாற்றிவிட்டு எழுப்பலாம்’’ என்று பீகாரி எண்ணிக்கொண்டே,
லுங்கியை லூஸ் செய்து, பல்லில் கடித்துக்கொண்டு ஜட்டியைப் போட முயன்றிருக்கிறான்.
அப்போது, மலையாளி மொபைலில் அலாரம் கொடூறமான ரிங்டோன் சவுண்ட்டில் அலற, பீகாரி உடலெல்லாம்
நடுங்கி, பயத்தில் பல்லில் இருந்த லுங்கி கீழே விட்டுவிட்டான். லுங்கி கீழே போகவும், மலையாளி கண் முழிக்கவும் ♫♪ தந்தன,
தந்தன, தந்தன, ஆ ஆ ஆ ஆ ஆ.... ♪♫.
நாங்கூட மலையாளி இண்டர்வியு போய்த்தான் ஆபர்லெட்டர்
வாங்கினதா நினைத்தேன். இப்பதான தெரியுது, ஆபர்லெட்டரை பார்த்த பின்னாடிதான்
இண்டெர்வியூக்கே பயபுள்ள போய்யிருக்குன்னு. இதுக்குத்தானாடா, பீகாரிக்கு அந்த
பிரத்தியேக நன்றி???. அந்த சம்பவத்திற்கு பின்பு, சங்கூச்சத்தினால் பீகாரி அவன்
முன்னால் செல்வதில்லையாம். அவன் ரூமை காலி செய்தவுடன்தான் பீகாரிக்கு ஒரு
ஆசுவாசம். ஆனாலும் இன்னொரு ஆளுக்கு எங்கே போவது?. இண்டெர்நெட்டில் விளம்பரம்
கொடுத்தும், தெரிந்தவர்களிடம் கேட்டும் ஒருவரும் அமைவதாக இல்லை. ரூம் காண
வருகின்றவர்கள் அனைவரும் நொட்ட காரணம் சொல்லி தவிர்த்தார்கள்.
‘கிச்சன் இருந்தால் வரலாம்’ என்று சிலபேர் சொன்னார்கள்,
ஆனால் கிச்சனிலும் கட்டில்போட்டு ஓனரும், அவர்மேல் அவர் நண்பரும்
படுத்திருப்பார்கள். அய் மீன், ஓனர் கீழ் கட்டிலிலும், அவர் நண்பர் மேல்
கட்டிலிலும் படுத்திருப்பார்கள். சில பேர் ‘வாஷிங் மெசின் இருந்தால் வரலாம்’
என்றார்கள். சிலர் பக்கத்தில் புது பில்டிங்க் கட்டும் சப்தம் கேட்டு வரமறுத்தார்கள்.
ஒரு நாள் ஆபிசில் இருக்கும் போது பீகாரி எனக்கு போன் செய்து, ரூமிற்கு ஒரு
பாக்கிஸ்தானி கிடைத்துவிட்டான், ஒரு மாசத்துக்கு அவனை வைத்து சமாளிக்கலாம் பின்பு
வேறு யாராவது இந்தியன் கிடைத்தால் மாற்றிக்கொள்ளலாம் என்று கூறினான். நானும் சரி
என்று கூறினேன்.
‘’பாக்கிஸ்தானியா? ஒரு ஓவருக்கு ஏழு பால்னு சொல்லி
சண்டைக்கு வருவானுங்களே? எப்படி ஒரு மாசம் சமாளிப்பது?’’ என்ற யோசனையில் ரூம்
கதவைத் திறந்தால், ஆறு அடி கட்டிலில் பாக்கிஸ்தானியின் கால் நாலு அடிக்கு வெளியே
கிடந்தது. படுத்துக்கிடக்கும் போதே ஷங்கரின் படம் போல பிரம்பாண்டமாக இருந்தான்.
எழுந்து ‘’அஸ்ஸலாமு அலைக்கும் யாசிர் பாய், கியா ஆலே...’’ என்று கைகொடுக்க
வரும்போது, பாகுபலி படத்தின் சிலையை நிப்பாட்டிவைத்ததுபோல் இருந்தான். இவன்
கேட்டால் ‘’ஓவருக்கு பத்து பால் என்று சொல்லிவிடவேண்டியதுதான்’’ என அப்போதே
முடிவுசெய்துவிட்டேன்.
‘’ஹரே அல்லாஹ், நம்மல் என்ன பாவம் பண்ணான்? நம்மல்,
ரூமிற்கு உயர்ந்த உள்ளம் கொண்ட ஒருவனை கேட்டான்? ஆனால் நிம்மல் உயர்ந்த உருவத்தை
கொடுத்திருக்கான்‘’ என அல்லாஹ்விடம் பேசிக்கொண்டிருந்தேன். சைடில் பாக்கிஸ்தானி அவனைப்
பற்றி ஏதேதோ சொல்லிக்கொண்டு இருந்தான். அதைக்கேட்டு நானும் ‘’ஒரு ஓவருக்கு பத்து
பால்தான் ஜி’’ என்றே தலையாட்டிக்கொண்டிருந்தேன். ரூமிற்கு வந்த முதல் நாளிலேயே
அவனுக்கு ரூமைப் பற்றி தெரிந்துவிட்டது. அவனுக்கு ரூம் பிடிக்கவில்லை. எனக்கு ‘’அப்பாட’’
என்று இருந்தது.
கிச்சன் இல்லை, சாப்பாட்டிற்கு 400 திர்ஹம்ஸ் செலவாகும்.
வாஷிங்க் மெசின் இல்லை, லாண்டரிக்கு 100 திர்ஹம்ஸ் செலவாகும், ரூமில் லாக்கர்
இல்லை. கட்டில் மட்டும்தான் உள்ளது மெத்தை இல்லை..................என எப்போது பார்த்தாலும்
ஒரே புலம்பல். நானும் எத்தனை முறைதான் ’ஒரு ஓவருக்கு பத்து பால்தான் ஜி’’ என்று
சொல்வது. கோபத்தில் விரலை மடித்து கையை முருக்கி ஓங்கி ஒன்ற டன் வெயிட்டில்
குத்துவிடவேண்டும் என்று தோன்றும். மெடிக்கல் இன்சூரன்ஸ் கார்டு எக்ஸ்பயரி ஆனது நினைவுக்கு
வந்தவுடன், டு ஸ்டெப் பேக். ‘’நாற்காலியில் ஏறினால்தான், குத்து அவன் நெஞ்சில் விழும்’’
என்பதிலிருந்து அவன் உயரத்தையும், ‘’நாற்காலி இல்லை என்றால், குத்து எங்கு விழும்’’
என்பதை யோசித்து என்னுடய உயரத்தையும் தெரிந்துகொள்ளவும்.
---------------------------------------------------------------------------------------யாஸிர்
அசனப்பா.
ஆத்தாடி....! பயமாத்தான் இருக்கு...!
பதிலளிநீக்குஎது? பீகாரி லுங்கி மேட்டரா?
நீக்குvayiru valikka siriththen........
பதிலளிநீக்குரொம்ப நன்றி தோழர்
நீக்குபீகாரியிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்று கொள்ளவேண்டும் போல இருக்கே...நான் பொதுவா சொன்னேன்...:)
பதிலளிநீக்குகற்றுக்கொள்வதை விட, பார்த்து தெரிந்துகொள்ள பல விஷயங்கள் இருப்பதாகவே நான் எண்ணுகின்றேன். இந்த மாதம், பாக்கிஸ்தானி காலி செய்துவிடுவான், அந்த கட்டிலுக்கு அண்ணன் வருவதற்கு ஆர்வமிருந்தால் ஆன்லைனில் வந்து புக்கிங் செய்யவும்.
நீக்குநண்பரே கத்தாரில் ஐந்து வருடம் துபாயில் இரண்டு வருடம் ஓமானில் நான்கு வருடம் குப்பை கொட்டிவிட்டு இப்போது கலிபோர்னியா வந்துள்ளேன். இங்கேயே இருந்து விடுகின்றேன். அந்த அறை அடியேனுக்கு வேண்டாம்.
நீக்குநண்பரே கத்தாரில் ஐந்து வருடம் துபாயில் இரண்டு வருடம் ஓமானில் நான்கு வருடம் குப்பை கொட்டிவிட்டு இப்போது கலிபோர்னியா வந்துள்ளேன். இங்கேயே இருந்து விடுகின்றேன். அந்த அறை அடியேனுக்கு வேண்டாம்.
நீக்குஇப்படி சொன்னா எப்படி? நீங்கள் பார்க்கும் எதற்கும் அடிசனல் சார்ஜ் கிடையாது. 10% டிஸ்கவுண் செய்துதரப்படும்.
நீக்குஉங்கள் பதிவு பாகிஸ்தானியர்களை பற்றிய நினைவுகளை என் மனதில் கிளறிவிட்டு விட்டது.
பதிலளிநீக்குபொதுவாக விற்பனை துறையில் இருக்கும் பாகிஸ்தானிகள் இந்தியர்களை விட மிக கனிவாகவும் தன்மையாகவும் நடந்து கொள்பவர்கள். அதே போன்று அவர்களது உணவகங்களில் உள்ள உணவுகளும் விலை மலிவாகவும் சுவையாகவும் இருக்கும். சமீபத்தில் நீயா,நானாவில் வட இந்திய உணவா/ தென் இந்திய உணவா என விவாதம் நடந்தது. என்னை கேட்டால் நான் பாகிஸ்தான் உணவின் பக்கம்தான், தந்தூரி ரொட்டியும்- சிக்கன் கடாயும் ஆஹா.... உணவகங்களின் முன்னே பெரிய திரையில் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பும் பொழுது இந்தியர் பாகிஸ்தானியர் இருவரும் சேர்ந்து ஆரவாரத்துடன் போட்டிகளை இரசிப்பதும் இனிமையான காட்சி. அவர்களுடனான கிரிக்கெட் டோர்னமெண்ட்டிலும் என் நிறுவனத்தை சார்ந்த நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். எனது தமிழ் நண்பர்களின் அறையில் மாட்டிக்கொண்ட இரண்டு பாகிஸ்தானியர்களை, நம்மவர்கள் மரணகலாய் கலாய்ப்பார்கள், ஆனால் அவர்களோ சிரித்து கொண்டே சென்றுவிடுவர். இவையனைத்தும் ஒமானில் ஆறு ஆண்டுகளில் எனக்கு கிடைத்த அனுபவம்.
பாகிஸ்தானை எதிர்த்தால்தான் தேசபக்தி என இந்துத்துவ வானரங்கள் குரல் கொடுக்கும் பொழுதெல்லாம், அவர்களுக்கு எதிரான வெறுப்புனர்வை நம் திரைப்படங்கள் விதைக்கும் பொழுதெல்லாம் இந்நினைவுகள் நெஞ்சில் எழுந்து வேதனையளிக்கும். நம்மை போன்ற சாதாரண உழைக்கும் மக்களே அங்கும் ஏராளம். தேவையற்ற வெறுப்புணர்வை களைவோம், அன்பை வளர்ப்போம்.
கடைசியா ஒரு சின்ன சந்தேகம்? அந்த மலையாளிக்கு கண்ணு கெட்டு போகலையா!
''அதெல்லாம் தெரியாது, பச்ச சட்ட போட்டா நாங்க அடிப்போம்'' என்று சொன்னால்தான் இந்தியாவில் அரசியல் செய்யமுடியும். பாக்கிஸ்தானிகளிடம் பெரிய அளவிற்கு பழக்கம் இல்லை, இப்போது ரூமில் இருப்பவனிடம் பழகலாம் என்று, இரண்டு மார்க் கொஸ்டின் கேட்டால், இவன் ஐம்பது மார்கிற்கு பதில் சொல்லுகிறான்.
நீக்குமலையாளிக்கு கண்ணு கெட்டுப்போச்சா? என்று தெரிய்வில்லை, ஆனால் வாழ்க்கை ரொம்ப பிரகாசமாகிவிட்டது.
///ஹரே அல்லாஹ், நம்மல் என்ன பாவம் பண்ணான்? நம்மல், ரூமிற்கு உயர்ந்த உள்ளம் கொண்ட ஒருவனை கேட்டான்? ஆனால் நிம்மல் உயர்ந்த உருவத்தை கொடுத்திருக்கான்‘’ என அல்லாஹ்விடம் பேசிக்கொண்டிருந்தேன்///
பதிலளிநீக்குENNA MANUSAIYA NEENGA EPPAA..... PIRAVI NAKAISUVAI ELUTHALANAIYYA NEER ...VAZHA