ஞாயிறு, ஜூலை 31, 2016

ரஜினி.

சென்னை பெருவெள்ளத்தின் போது ‘’கன்னட நாய் ரஜினியே....’’ என தூற்றியவர்களை, கபாலி படத்தின் முதல் காட்சிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து படம் பார்க்கவைத்ததுதான் ரஜினி பவர். கண்டிப்பாக இது வேற எந்த நடிகனுக்கும் கிடைக்காத ஒரு வரம். மத்தப்படி ஒரு படத்தைப் பற்றி விமர்சனம் செய்வது என்பது அவர் அவர் விருப்பம். குத்துப்பாட்டை எதிர்பார்த்து ஏமாந்து குத்துவாங்கிய ஒருவன் கண்டிப்பாக படம் ‘நல்லா இருக்கிறது’ என்று எழுதப்போவது இல்லை. அதேவேலையில், முந்திய நாளில் லிங்காவைப் பார்த்துவிட்டு, இந்த படத்தை ‘மொக்கை’ என்றும் எழுதப்போவதில்லை. எல்லோரும் ‘’சூப்பர்’’னு சொல்லுறமாதிரி படம் பண்ணனும்னா அப்ப அஜித் நடிச்ச ‘ஆஞ்சிநேயா’வைத்தான் ரஜினியைவைத்து மறுபடியும் எடுக்கணும். 

மெட்ராஸ் படத்தை முதல் தடவை பார்க்கும் போது எனக்கு அந்த படம் சுத்தமாக பிடிக்கவில்லை. மரண மொக்கைன்னு பலபேரிடம் சொன்னேன். பிற்பாடு அந்த படத்தின் அரசியலை பொதுவெளியில் தெரிந்துகொண்டு பார்த்தபின்புதான் அது படமில்லை சிலரது வாழ்க்கைன்னு தெரிஞ்சிக்கிட்டேன். அணுவணுவா ரசிச்சேன். ஜானி கேரக்ட்டருக்கே மாறி மாறி பார்த்த படம். என்னைய மாதிரியேதான் இங்க பலபேர் கபாலியை புரிந்துகொண்டது. யார் யாருக்கு ரஜினியை, ஆண்டனியோட மோதற பாட்ஷாவாக பார்க்கப்பிடிக்குமோ அவர்களுக்கு கண்டிப்பாக  இந்த கபாலி பிடிக்காது. எனக்கு ‘’ஆறில் இருந்து அறுவது வரை’’ ‘’எங்கயோ கேட்ட குரல்’’ ‘’முள்ளும் மலரும்’’ ரஜினியைத்தான் பிடிக்கும். அதுனால எனக்கு கபாலியை ரொம்ப இல்லாட்டியும், பிடிச்சிருந்தது.

நேற்றுவரை ரஜினியை பிடிந்திருந்த உங்களுக்கு, ‘’மேட்டுக்குடியின் கூப்பாடு இனி நாட்டுக்குள்ள கேக்காது’’ என்று பாடிக்கிட்டு வரும் ரஜினியை பிடிக்கவில்லை என்றால், தப்பு ரஜினி மேல இல்ல, ரஜினியையும் தாண்டி உங்களுக்கு வேற ஒன்னு புடிச்சியிருக்குன்னு அர்த்தம். ரஜினியின் கெட்டப்பிற்காகவே இந்த படத்தை பார்க்கனும்னு முடிவுபண்ணியிருந்தேன். மம்முடி, அமிதாப்... என சீனியர் நடிகர்கள் எல்லாம் அவர்களோட வயதுக்கு ஒப்பான கதாபாத்திரத்தில் வெற்றிபெற முடியும் என்றால், ஏன் ரஜினியால் முடியாது? என பலநாட்கள் எனக்குள்ளே நான் கேட்டுக்கொண்டது. எப்படியோ ரஜினிக்கும் கேட்டுவிட்டது போல. கள்ள பிரிண்ட்ல பார்த்துவிட்டே, தன் மகளையும், தன் மனைவியையும் அடையாளம் காணும் இடத்தில் எனக்கு கண்ணுல இருந்து ஜலம் வந்திடுச்சின்னா, தியேட்டர்ல பார்த்திருந்தா கதறி அழுதிருப்பான் இந்த கைப்புள்ள.

ரஜினி என்ற ஒரு மகா நடிகனை, ‘’உங்க மாஸ் என்ன? உங்க வேலீவ் என்ன? உங்க லெவல் என்ன?’’ என்ற இன்ன பிற என்ன? என்ன?க்கு இரையாக்கிவிட்டோமேன்னு நினைக்கும் போது, வருத்தம்தான். இந்த படத்தில இருக்குற குறைகளை / லாஜிக் மிஸ்டேக்கை சுட்டிக்காட்டி படம் சரியில்லை என்று சொல்லுபவர்களுக்கும், வசனத்தையும், பாடலையும் சுட்டிக்காட்டி படம் சரியில்லை என்று சொல்லுபவர்களுக்கும் வித்தியாசம் என்ன என்று சொல்லித்தர தேவையில்லை.

ஒருவன் ‘’மணி சார் அளவிற்க்கு பா.ரஞ்சித்திற்கு ரஜினியை பயன்படுத்த தெரியவில்லை’’ என்று கமெண்ட் எழுதுகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனுடய கருத்து நூறு சதமானம் உண்மைதான், தளபதி ரஜினிக்கு பக்கத்தில் நிற்க்கக்கூட கபாலி ரஜினிக்கு தகுதியில்லை. ஆனால், அந்த கருத்தில் ஒரு அரசியல் இருப்பதை உங்களால் உணரமுடிகிறதா?. இல்லை என்றால். தெரிந்துகொள்ளுங்கள். மணிக்கு பின்னால் வரும் ‘சார்’ பா.ரஞ்சித்திற்கு பின்னால் வராததுதான் அந்த அரசியல்.

ரஞ்சித்தினுடய நேர்காணலை நீங்கள் பார்த்தீர்களேயானால், கபாலி கண்டிப்பாக ரஜினியின் படம் இல்லை என்பதை உங்களால் உணரமுடியும். ஆனால் ரஞ்சித்தையும் மீறி ரஜினியின் பெயர் வெளியே தெரிவதற்கு காரணம், தன்னுடய பாணி படம் இல்லை என்று தெரிந்தும் அதில் தன்னை இணைத்துக்கொண்டதற்கான ரஜினியின் வெற்றி அது. ஒரு நேர்காணலில் ரஞ்சித்திடம் கேள்வியாளர் ‘’இந்த படத்தில் சில அரசியலை பேசியிருக்குறீர்கள், அது மக்களிடம் ரீச் ஆனதாக நினைக்கின்றீர்களா?’’ என்று கேட்டதற்கு, ‘’கண்டிப்பா, அதனாலதான் கொஞ்சப்பேரு என்ன ரொம்ப திட்டிக்கிட்டு இருக்கானுங்க”” என ரொம்ப இயல்பா பதில் சொன்னார். பாலுமகேந்திரா, பாலச்சந்தருக்கு அடுத்ததாக ஒரு இயக்குனரிடம் இருந்து இவ்வளவு முதிர்ச்சியான இண்டர்விய்யூவை நான் பார்த்த்தே இல்லை.

கபாலி படத்தில் நிறைய ஓட்டைகள் இருக்கலாம், அல்லது ஓட்டையில் கபாலிப்படம் இருக்கலாம். அதையும் மீறி இதை பலபேர் கொண்டாடக் காரணம் ரஜினி என்ற ஒரு மிகப் பெரிய சக்திதான். படம் திரைக்கு வருவதற்கு முன்பாக மார்க்கெட்டிங்க் என்ற பெயரில் தாணு செய்த அழுச்சாட்டியங்கள் ரெம்ப அதிகம் என்ற போதிலும், ரஜினிக்காக அனைத்தும் மன்னிக்கப்பட்டது.

படத்தின் குறையாக சில பேர், குமுதவள்ளியை தேடிப் போகும் காட்சியை சொல்கிறார்கள். கண்டிப்பா அவனுங்க எல்லாம் பொண்டாட்டி மடியில தலை வச்சிக்கிட்டு, லேப்டாப்பில் டைப்பண்னுனவனுங்களா இருப்பானுங்க. குடும்பத்த பிரிஞ்சு பல வருசம் வெளியில இருந்துட்டு வீட்டுக்கு வருபவனுக்குத்தான் தெரியும் தனிமையோட வலி என்னன்னு. தன்னோட பொண்ணுகிட்ட ‘’நான்தான் உங்கப்பான்னு தெரியும்ல, பின்ன ஏம்ம என்ன வந்து பார்க்கல?’’ என்று சொல்லும் போதும், பொண்டாட்டிய பார்க்கப் போகுற ராத்திரியில் ‘’என்ன செய்றாளோ, எப்படி இருக்காளோ?’’ என ஏங்கும் காட்சியிலயும் சரி 25 வருசம் ஜெயில்ல இருந்த தனிமையின் வலியை அப்படி பிரதிபலிக்கும். இன்னும் எவனாவது குமுதாவைத் தேடிப்போனதுனாலத்தான் கபாலி எனக்கு பிடிக்கலன்னு சொன்னா, என்னோட பக்கத்து ரூமுக்கு ஆள் தேவைப்படுது, பயபுள்ளய புடுச்சி சவுதிக்கு அனுப்புவையுங்க.

மாய நதி பாடலில் வரும், நீ செத்துட்டேன்னு நெனச்சேன் வசனமும், அதில் வரும் முதிர்ச்சியான் காதல் விளையாட்டுகளும் சரி ‘’வந்திட்டாரு சொல்லு, திரும்ப ரஜினி வந்திட்டாருன்னு சொல்லு, முள்ளும் மலரும்ல எப்படி போனாரோ அப்படியே திரும்ப வந்திட்டாருன்னு சொல்லு’’ன்னு சொல்லத்தோணுது.

-----------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக