புதன், டிசம்பர் 21, 2011

திரும்பி பார்க்கின்றேன்....


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின், சாந்தியும் சமாதானமும் உண்டாவுவதாக.

நான் +2 படித்துவிட்டு, இஞ்சினியரிங்கிற்காக, எண்டிரன்ஸ் எக்ஸாமுக்கு தயாராகிக் கொண்டிருந்தேன். பொதுவா எனக்கு அப்போது எதிர்காலத்துல, அப்படியாகனும், இப்படியாகனுங்கிற எண்ணம் எல்லாம் இல்ல, எங்க வீட்டில் என் அண்ணங்க யாரும் காலேஜுக்கு போகாததால, என்னை எப்படியாவது இஞ்சினியர் ஆக்குவது என்று என் அப்பாவின் முடிவாகயிருந்தது. சின்ன குழந்தைங்ககிட்ட எதிகாலத்துல நீ என்னவா ஆகப்போறன்னு கேட்டா, டாக்டர்னு பட்டுன்னு எதையும் யோசிக்காம சொல்லுறது மாதிரித்தான் நானும், இஞ்சினியராவேன்னு சொல்லிக்கொண்டிருந்தேன். அப்ப எல்லாம் சத்தியமா எனக்கு செமஸ்டர், அரியர், பஸ்ட் கிளாஸ், புராஜெக்ட், பிராக்டிகல்..... இப்படியான டிபிகள்ஸ் இருக்குமுன்னு தெரியாது.

எண்டிரன்ஸ் கிளாஸுக்கு போகனும்னு, என் நண்பர்கள் அனைவரிடமும் ஐடியா கேட்டு, தென்காசியில் சேரலாமுன்னு முடிவுபன்னி, அப்பாகிட்ட சொல்லுறதுக்கு முன்னாடி, என் அப்பா “நாளைக்கு சீக்கிரம் ரெடியாகு, எம்மோசிக்கு போகனும்

என்னதுதுதுதுதுது எம்மோசியாஆஆஆஆஆஆஆ
எம்மோசி - Muslim Orphanage Committee (MOC), ஒரு முஸ்லீம் பள்ளிக்கூடம் (அனாதையாக இல்லாதவர்கள், காசு கொடுத்து படிக்க வேண்டும்), திருநெல்வேலியில் இருக்கு, அங்க எண்டிரன்ஸுக்கு வகுப்பு எடுப்பதாகவும், சிறந்த ஆசிரியர்களின் சீறான மேற்பார்வையில், சிறப்பான கல்வின்னு, ஏதோ ஒரு நாதாரி ரைமிங்க என் அப்பாகிட்ட சொல்ல, எங்கப்பாவும், நாம் புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு சொன்னா, நம்ம புள்ளயாண்டான் நம்மள பேசி சமாளிச்சி அங்க போகவேமாட்டான்னு தெரிஞ்சிகிட்டு, முயலுக்கு காலே இல்லங்குற அளவுக்கு விடாப்பிடியாக நின்றதால, வேற வழிதெரியாம, ஒரு மாசம் திருநெல்வேலியில் தங்கிப்படிக்க, பெட்டிகட்டி பஸ்ஸுல பயணித்துக்கொண்டிருந்தேன்.
பஸ்ஸுல போகும் போது, ஜன்னல் ஓரமான சீட்டில் சாய்ந்துகொண்டு, இந்த சினிமாவுல வருகின்ற மாதிரியான பிளாஸ்பேக். எங்க குடும்பத்தில், என் அண்ணன், என் அத்தை மகன்கள், பெரியப்பா பையன், மற்றும் என் சொந்தத்தில் உள்ள அனைத்து குடும்பத்தில் இருந்தும் யாராவது ஒரு ஆள், எம்மோசியில் படித்தவர்களாக இருந்தார்கள். அங்க படிச்ச யவனும் பத்தாவது தாண்டவில்லை, அப்படியோரு ராசியான பள்ளிக்கூடம் அது.
அவங்க, அங்க படிக்கும் போது, நான் ரொம்ப சின்னபையன், என் அப்பா, என் அண்ணன், மற்றும் சொந்தகார பயலுகள பாக்குறதுக்கு என்னையும் அழைத்துக்கொண்டு, திண்பதற்கு எல்லோருக்கும் ஏதாவது வாங்கிக்கொண்டு போவார்கள். சொன்னா நம்ப மாட்டீங்க, உண்மையில், சேது படத்துல வருகின்ற சீன்மாதிரியே இருக்கும் (சேது படம் பார்த்தபோது எனக்கு, இந்த சின்ன வயது ஞாபகம் தான் வந்தது), எல்லோரையும் மொட்டையடித்து, தட்டுடன், ஒரு கைலியோடு பார்க்கும்போது......என்னால தாங்கவே முடியாது. எங்கப்பா வந்ததும், எங்க ஊருக்காரங்க வந்து, சாப்பாடு சரியில்ல, கொசு கடிக்குது, வாத்தியார் அடிக்குறாருன்னு, எங்கப்பாவ வரசொல்லுங்கன்னு ஏகப்பட்ட புகார்களும், வீட்டுக்கு சொல்லியனுப்புற விசயங்களுமாய் இருக்கும். (எங்க குடும்பத்து பசங்க, படிக்காம போனதுக்கு இந்த பள்ளிக்கூடம்தான் காரணம் என்று நான் கண்டிப்பா சொல்லுவேன்).
அங்குள்ள கொடும தாங்க முடியாம, இரவுல சுவர்யேரி குதித்து, வீட்டுக்கு ஓடி வந்தவங்கள, அடியடின்னு அடிச்சு மறுபடியும் அங்கயே அனுப்பிவைக்கிறது, வெங்காயத்தை நைத்து, அக்குளுக்குள்ள வைத்து, வேண்டுமென்றே காய்ச்சல் வரவழைத்து ஊருக்கு வருவது. பள்ளிக் கூடத்துல இருந்து ஓடிவந்து, அப்பாக்களின் அடியிலிருந்து தப்பிக்க, தாத்தாவிற்கு வடை, பஜ்ஜி வாங்கி கொடுத்து நிலைமையை சமாளிக்க, அனைவரும் பரிதவித்த முகத்துடன் லைன் கட்டி நின்னது...................எல்லாம் என் கண்முன்னாடி வந்து போனது.
நீங்களே சொல்லுங்க, இவ்வளவு பெரிய ட்ராஜடியான பிளாஸ்பேக்க வச்சிகிட்டு, என்னால எப்படி அங்க படிக்கமுடியும்???????.
அப்ப எங்களுக்குன்னு (என் கேஸ் மாதிரி, அங்கும் எங்க ஊருக்காரங்க 10 பேரு இருந்தாங்க) இருந்த ஒரே ஆருதல்னா அது, அந்த பள்ளிய தொட்டடுத்து, மெடிக்கல் காலேஜ் லேடீஸ் ஹாஸ்டல் மட்டும் தான். கலையில கூட்டம், கூட்டமாக பொண்ணுங்க எல்லாம் போகும், ஆனா நல்ல பிகரா, இல்லா சொத்த பிகரான்னு பாக்குரதுக்கு சுவர் ஏறித்தான் குதிக்கனும். என்னடா வாழ்க்க இது, விதி இப்படி, ஸ்டம்ப ஊனி, பேட், பாலுடன் கிரிகெட் விளையாடுதேன்னு எண்ணி ரொம்ப கான்டாயிடுச்சி. என் அண்ணன்மார்களோட காலத்தில் ஏற்பட்ட கொடுமையை விட, இது பெருங்கொடுமையா இருக்கேன்னு வாழ்க்கையை வெறுத்து, விட்டுட்டு போன ஒரே வாரத்துல, ஐயா, பேக் டு பெவிலியன்.
நான் ஏதோ செய்யாத குற்றத்த சென்ஞ்ச மாதிரி என் அப்பா, எண்ரன்ஸ் எக்ஸாம் முடிஞ்சு, ரிசல்ட வரும் வரை எங்கிட்ட பேசவேயில்லை. இப்ப நினைக்கும் போது கொஞ்சம் வருத்தம்தான் எனக்கு, ஆனா அந்த நேரத்துல அது ரொம்ம வசதியா இருந்திச்சு. நான் நினைத்த இடத்துலயே படித்தேன், சினிமாவிற்கு போனேன், நல்லா ஊர் சுத்தினேன், கிரிகெட் விளையாடினேன்..... ஆனா புத்தகத்த மட்டும் தொடவேயில்ல.
ரிசல்ட் வந்ததும் மார்க்க பார்த்துவிட்டு (அடிங்ங்க..., யாருடா அவன்..., மார்க் எத்தனன்னு கேட்கிறது?), என் அப்பா சொன்னது, “என் பேச்ச கேட்டிருந்து எம்மோசியில் படிச்சிருந்தா................., இன்னும் நல்ல மார்க் வாங்கியிருந்திருப்பான்.
அந்த வசனத்த கேட்டுவிட்டு நான் சொன்ன பஞ்ச் டயலாக் (எங்கப்பா போனதுக்கு அப்புறம் தான்) என்னனு தெரியுமா???
.
.
.
.
.
.
.
எங்க படிக்கிறோம்ங்குறது முக்கியமில்ல,

எப்படி படிக்கிறோமுங்குறது தான் முக்கியம்.
--------------------------------------------------------------------------யாஸிர்

திங்கள், டிசம்பர் 19, 2011

விஜய் டி.வி


நம் அனைவரின் மீதும், ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
தொலைக்காட்சிகளிலே, எனக்கு மிகவும் பிடித்த சேனல் என்றால் அது விஜய் தொலைக்காட்சி தான். அதற்காக 100% என்று என்னால் சொல்ல இயலாது. நான் காலேஜ் முடித்து, ஒருவருடம் தமிழ்நாட்டிலேயே வேலை செய்ததால் டி.வி பார்க்கும் நேரம் குறைவாக இருந்தது. பின்பு பெங்களூரு சென்ற பின்பு, கம்பெனி கொடுத்த வீட்டில் நானும், எனது நண்பர்களும் சேர்ந்து டி.வி வாங்கி, கேபில் கனெக்சன் எல்லாம் கொடுத்து, புல் செட்டப்பில் செய்துவைத்திருந்தோம். அந்த காலத்தில் ஏற்பட்ட அறிமுகம் தான் விஜய் டி.வி.

அதற்கு முன்பு சன் டி.வி, ராஜ் டி.வி....ன்னு பல சேனல்கள் பாத்திருந்தாலும், விஜய் டி.வி கொஞ்சம் வித்தியாசமான நிகழ்சிகளின் மூலம் எங்களை ஈர்த்தது. பொதுவா சிவில் இன்ஞ்சினியர் என்பதால், எங்களுக்கு வேலை எல்லாம் முடிந்து, வீட்டிற்கு வர இரவு 9.00 மணி ஆகிவிடும். அந்த நேரத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ்காக டி.வியை போட்டுப்பார்த்தால், ஒரே அழுகாச்சி சீரியல்களாகத்தான் இருக்கும். அந்த நேரத்தில் தான் விஜய் டி.வியின் பல விதமான நிகழ்சிகள் ஒளிபரப்பாகின. வித்தியாசமான நிகழ்சிகள், கலக்கப் போவது யாரு?, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், நீயா? நானா?....மூலமாக நாங்கள் வேறு எந்த சேனல்களுக்கும் திரும்ப போவது இல்லை.


அரசியல் சம்பந்தமான நிகழ்ச்சிகள் முன்னாடி அதிக அளவு வந்துகொண்டிருந்தது, ஆனால் ஏனோ அது இப்போது வருவதில்லை. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் அவர்களின் கணிப்பு, மற்றும் அரசியல் தலைவர்களின் நேர்முக விவாதம் என பட்டைய கிளப்பிக்கொண்டிருந்தார்கள். மற்ற நிகழ்ச்சிகளை விட எனக்கு இந்த அரசியல் விவாத நிகழ்ச்சி ரொம்ப, ரொம்ப பிடித்திருந்தது, காரணம் மற்ற சேனல்கள் எல்லாம் தத்தம் அரசியல் தலைவர்களை மட்டுமே உயர்வாக பேசி / துதி பாடிக்கொண்டிருக்கும் வேலையில், நடு நிலையோடு நிகச்சிகளை வழங்கியது தான்.

அதிகளவிலான நிகழ்ச்சிகள், இந்த டி.வி சேனலில் இருந்தே, மற்ற டி.வி சேனல்கள் காப்பியடித்துக் கொண்டிருந்தன. விஜய் டி.வியில் பிரபலம் அடைந்தது போல், வேறு எந்த டி.வி நிகழ்ச்சிகளிலும் எவரும் பிரபலம் அடைந்தது இல்லை என்பது உண்மை. சந்தானம், மதுரை முத்து முதல் இன்று உள்ள சிவ கார்த்திகேயனும் ஒரு உதாரணம். ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்சிகளை அதிகமாக பார்பதுண்டு, இருந்தாலும் அந்த சீசன் முடிந்த பின்பு, அவர்கள் ஒளிபரப்பும் புளூபர்ஸ் எனப்படும் மேக்கிங் ஆப்பை நான் மிஸ் செய்வது இல்லை.


இவர்களின் நிகழ்சிகளை தொகுத்து வழங்கும், தொகுப்பாளர்களும் சரி, தொகுப்பாளினிகளும் சரி, அவ்வளவு கன கச்சிதமாக அந்த நிகழ்சிகளுக்கு பொருத்தமாகயிருப்பார்கள். காலம் மாற, மாற தொகுப்பாளர்களும் மாறிக்கொண்டே இருக்கின்றார்கள். முன்பு எந்த நிகழ்ச்சியானாலும், தீபக், டி.டி (திவ்யதர்சினி) தான் வருவார்கள், பின்பு அது கோபினாத்துக்கு சென்று, இப்போது சிவ கார்த்திகேயனிடம் வந்துள்ளது. இடையிடையில், அர்சனா, உமா ரியாஸ்கான், மிமிக்கிரி சேதுவும் கலக்கினார்கள்.

விஜய் டி.விமுன்பு போல இப்போது இல்லை என்பது தான் உண்மை. உதாரணமாக விஜய் அவார்ட்ஸில், இப்போது அதிக பாரபட்சம் காட்டப்படுவதாகவே நான் நினைக்கின்றேன். முதல் 2 ஆண்டுகள் நன்றாக இருந்தது, அதன் பின்பு, கமலஹாசன், விஜய், சூர்யாவின் ரசிகர்களுக்காகவே இது நடத்தப்படுவது போன்ற மாயையை உருவாக்கியுள்ளது. தசாவதாரம் படத்திற்கு, இவர்களின் விருது ரொம்ப ஓவர், சிறந்த காமெடியெனும் கமலஹாசன் தான் என்று சொன்னது, தொலைக்காட்சி வரலாற்றில் மிகப்பெரிய காமெடி. கண்டிப்பாக நான் கமலுக்கு எதிரானவன் அல்ல, ஆனால் அந்த வருடம் வெளியான படங்களில் இதைவிட அதிக அளவில், நகைச்சுவை செய்திருந்த நடிகர்கள், பல படங்களும் உண்டு, கமலுக்கு கொடுக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, கொடுக்கப்பட்டது. அந்த வருடம் கமலுக்கு 5 விருதுகள், நடிகர், திரைக்கதை, வில்லன், கமெடி, குணச்சித்திரம் என்று. பின்பு சூர்யாவிற்கு, கிட்டத்தட்ட சூர்யாவிற்கு விருது கொடுக்காத கடைசி 3 வருடங்கள் இல்லை என்றே சொல்லலாம். எதாவது ஒரு கேட்டகரியில் விருது, அவர் எந்த கேட்டகரியிலும் வரவில்லை என்றால், அவருக்காகவே ஒரு புது கேட்டகரியை உருவாக்குவது என்று கடுப்பேத்தினார்கள். கடைசியாக அவருக்கு கொடுத்த விருது என்ன தெரியுமா?, சமுக சேவையில் சிறந்த நடிகர் – சூர்யா. என்ன கொடும இது, நடிப்புக்கும், சமுக சேவைக்கும் என்ன சம்பந்தம், அதற்கு எதற்கு சினிமா விழாவில் விருது. ஒரு ரோட்டரி கிளப்பில் சிறந்த நடிகருக்கு விருது கொடுப்பது எப்படி தவறானதோ அது போலத்தான் இதுவும். சமுக சேவகருக்கா விருது கொடுக்க 1000 அமைப்புகள், இயக்கங்கள் உள்ளன, இவர்கள் எதற்கு?, ஏன்?. விஜய் அவார்ட்ஸின், முதல் வருடத்தின் உண்மையான விருது, அதாவது ஃபேவரட் ஆக்டர் (அதிகளவு விரும்பப்படும் நடிகர்) விருது அஜித் குமாருக்கு தேர்வானது. ஆனால் அஜித் குமார் அதை வாங்க, அந்த நிகழ்ச்சிக்கு வராத ஒரே காரணத்திற்காக, இதுவரை அஜித்குமார் புறக்கணிக்கப்படுவதாகவே நான் நினைகின்றேன்.


வர வர விஜய் டி.வியின் தனித்தன்மை குறைவதாகவே எனக்கு தோன்றுகின்றது. கடைசியாக நான் பார்த்த நீயா? நானா? வில் இது அப்பட்டமாக தெளிவானது. சமுகத்தில் இருக்கும் பிரட்சனைகளைப் பற்றி விவாதம் நடத்தும் நிகழ்ச்சியில், ரஜினிகாந்தின் பெருமை பற்றி பேசும்படியாக ஆனது மிக மிக கேவலம். அதிலும் பாரதியாரின் பிறந்த தினத்தில் இந்த கொடுமை. நீயா?, நானா? அன்று நீயும், நீயும் என்றாகிப் போனது.

ஜீனியர் சூப்பர் சிங்கர்னு ஆரம்பிச்சு, அந்த பிஞ்சுகள், சூப்பர் சீனியர் ஆகும்வரை விடுவதில்லை. இந்தமாதிரியான குறைகள் இருந்தாலும், ஜாக்கிசானையும், ஜேம்ஸ் பாண்டயும் தமிழ் பேசவைத்தது, காமெடியான பல் நிகழ்ச்சிகள், அற்புதமான மேடைகள், வித்தியாசமான நிகழ்ச்சிகளை கொடுப்பது என்று பார்க்கும் வகையில், விஜய் டி.வி தான் பெஸ்ட், மற்ற தமிழ் டி.வி சேனல்களுடன் கம்பெர்பன்னும் போது மட்டும்.

-------------------------------------------------------------------------யாஸிர்.

புதன், டிசம்பர் 14, 2011

ஹே, ஹே என்ன ஆச்சு எனக்கு....

நம் அனைவருக்கும் ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.


என்ன எனக்குள் இன்றிலிருந்து இப்படியொரு மாற்றம். விடுமுறை பற்றி நினைத்துக் கூட பார்க்காதவன். எத்தனை நாள் விடுமுறை எடுக்க வேண்டும் என்று யோசனையில் இப்போது. வங்கியில் பணத்தை எடுத்து, செலவு மட்டும் செய்யத்தெரிந்தவன், இப்போ மீதமுள்ளதை மிச்சப்படுத்த முயல்பவன். திருமணத்திற்கு திண்ண மட்டும் சென்றவன், அதற்காகும் செலவிற்கு கணக்கு பார்ப்பவனாக, நான் இப்போது.

கல்யாண தேதி குறிச்சதுக்கே, கண்ணாடி போட்ட எனக்கு இப்படி கண்ணகெட்டுதுன்னா, கல்யாணத்துக்கு அப்புறம்!!!!!!!!!!!!!!.

வீட்ட கட்டிப் பாரு, கல்யாணம் செய்து பாருன்னு ஒரு பழமொழியிருக்கு. எவ்வளவு உண்மை அது. சிவில் இன்சினியராக இருப்பதால், வீட்டை கட்டிப்பார்பதன் கஷ்டம் ஒரளவிற்கு தெரியும். இருந்தாலும் அப்படி ஒரு கஷ்டம் வந்திரக்கூடாதுன்னு, வீடு கொடுக்குற வீட்டுல தான் பொண்ணு எடுக்கனும்னு, பயங்கரமா பிளான் எல்லாம் போட்டுவைத்திருந்தேன். வைத்தது வைத்ததாகவே இருக்கு இன்னமும். ம்ம்ம்ம்ம்

இன்று பெண் வீட்டிற்கு சென்று கல்யாண தேதி குறித்தாயிற்று. சரி கல்யாணத்திற்கு எவ்வளவு செலவாகும்னு என் அப்பாகிட்ட கேட்டா, ஏதோ, தோசக்கடையில சொல்லுறமாதிரி சாதா, ஸ்பெஷல் சாதா, ஸ்பெஷல், ரோஸ்ட்ன்னு 4 விதமா சொல்ல, ரோஸ்டுக்கு ஆகும் விலையிலிருந்து கேட்டு, சாதாவே போதும்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்கே @!#% லட்சம் ஆகுமாம். அப்ப கட்டதோசை லெவலுக்கு இறங்கி எவ்வளவு ஆகுமுன்னு கேட்டா, என் குல பெருமை, குடும்ப பேரு எல்லாத்தயும் எங்கப்பா போனில், ஒரு பொசிசன்ல் நின்னு சொல்ல, பல்ல கடிச்சிகிட்டே, கடுப்போடு ஒகே, ஒகேன்னு சொல்லியிருக்கிறேன் (வேற வழி).

பொண்ணுக்கு பட்டு புடவை, அக்காவிற்கு நகை, அண்ணிக்கு செயின், அண்ணனுக்கு ஜவுளின்னு, வீட்டிற்கு பந்தல்ன்னு.........லிஸ்டு ஒரு குயர் நோட்டயும் தாண்டிப் போகுது. வாழ்கையில இந்தமாதிரியான விஷயம் எல்லாம் ஒரு முறைமட்டும் தான் வரும், அதனால செலவ எல்லாம் பார்க்கதே, சும்மா அடிச்சு தூள்பண்ணுன்னு என் நண்பன் சொன்னான். எனக்கு வந்ததே கோபம் அவன்மேல. வராத பின்ன, அந்த நாயி ஓடிப் போயி ரிஜிஸ்டர் மேரஜ் பன்னினவன், கூட வந்தவங்களுக்கு டீ கூட வாங்கிகொடுக்கல, பக்கி அது பேசுது.

கை நடுக்கம், சுவர்பார்த்து சிரிக்கிறது, வலது கால் ஷுவ இடது கால்ல போட்டுப்போறது, அடிவயிற்றில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், கண்ணடியில கீரல் விழுந்தாலும், கொடுறமா பார்த்துக்கிட்டு நிக்கிறது.... என்னதான் ஆயிரம் சொல்லுங்க,  இது கூட நல்லாத்தான் இருக்கு.
.
.
.
தூக்கை எதிர்நோக்கியிருக்கும் கைதி போலவும்,
பிரசவ நாளை எதிர்பார்த்திருக்கும் அன்னை போவும்
இப்போது நான் – ஆம்,
பிரம்மச்சரியத்தின் சாவு, சம்சாரியின் பிறப்பு ஒரே நாளில்
பிப்பிரவரி 19, 2012 (இன்ஷா அல்லாஹ்)
--------------------------------------------------------------------------------------யாஸிர்.

திங்கள், டிசம்பர் 05, 2011

இப்போ தெரியுதா..... இப்போ....


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.

தலைப்பை பார்த்தவுடன், ஏதோ ஜெயலலிதாவிற்கு ஓட்டுப் போட்டவர்களைப் பற்றியது என்று எண்ணிக்கொள்ள வேண்டாம். இந்தியாவில் இருக்கும் எனது நண்பர்கள் பலபேருக்கு தொலைபேசிமுலமாகவும், முகநூலின் (FACEBOOK) மூலமகவும் ஜெயலலிதாவிற்கு ஓட்டுக்கேட்டவர்களில் நானும் ஒருவன். எங்க!! ஆற்காடு மாவட்டத்தை அழகிரி மாவட்டமாகவும், செங்கல்பட்டு மாவட்டத்தை செல்வி மாவட்டமாகவும், கன்னியா குமரி மாவட்டத்தை கனிமொழி மாவட்டமாக மாற்றிவிடுவார்களோ என்ற அச்சப்பாட்டில் செய்தது, ஆனால் இப்போது இவங்க பன்னுகின்ற அலப்பரையா பார்த்தா, புதுச்சேரியையும், தமிழகத்தையும் ஒன்னா சேர்த்து புரட்சித் தலைவி மாநிலமாக மாத்திருவாங்களோன்னு பயந்து இருக்கு, அது சரி அரசியல் எல்லாம் நமக்கு எதுக்கு, விசயத்துக்கு வருவோம்.

கன்னியமான கல்லூரியில், சின்சியரான பசங்கன்னா சிவில் இஞ்சினியராகத்தான் இருப்பாங்கங்கிறது பழமொழி (பழமொழி சொன்னா அனுபவிக்கனும், ஆராயக்கூடாது). 
என் கல்லூரி நண்பர்களிடம் இன்னும் அடிக்கடி பேசுவதுண்டு, அப்படி பேசும் போது “டேய் நாயே நீ அப்படி பன்னுனவந்தானடா “நீ மட்டும் ஒழுக்கமா, நீயும் தான் இப்படி பன்னுனன்னு ஏதாவது ஒரு பழய ஞாபகங்கள், கதைகள் எல்லாம் பேச்சா வரும். சமீபத்தில் எனது நண்பனுடன் பேசியதில், ஞாபகம் வந்த நிகழ்வுதான் இந்த பதிவு.

கல்லூரி இரண்டாம் வருடம், 
A, B, C, D, E ன்னு முதல்வருடத்தில் அனைத்து துறை மாணவர்களுடன் ஒன்றாக படித்துவிட்டு, சிவில் டிபார்ட்மெண்ட் பிளாகிற்கு (கட்டிடத்திற்கு) வந்த நேரம். வந்த புதுசு என்பதால், யாரிடமும் அப்போது புத்தம் இல்லை. வரும் ஆசிரியர்கள் அனைவரும், தங்களை அறிமுகப்படுத்துவதிலும், மாணவர்களை அறிமுகப்படுத்தச் சொல்லியுமாக ஒருவாரம் ஓடியது. அதுலயும் சின்சியர் சிகாமணி ஒருவர் இருந்தார், முதல் நாளே பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டார். யாருக்கும் மனம் ஒப்பவில்லை. இப்படியாக ஒருவாரம் போய்விட்டது.

சம்பவநாள் அன்று, எப்போதுமே தாத்தா மாதிரியான சட்டை போடும் சின்சியர் சிகாமணி, அன்று சார்ட் சர்ட் போட்டிருந்தார். சார்டிலும் ரொம்ப சார்ட் சர்ட் அது, கிட்டத்தட்ட பேண்ட் போட்ட இடத்தில் இருந்து ஒரு இன்ஞ்தான் இரக்கம் இருந்திருக்கும். ஹைலேட் என்னனா, அவரு அன்னைக்கு பேண்டுக்கு ஜிப்பு போடலை. “லீ சார்ட்லியர் அப்பாரட்டஸ் என்ற ஒரு சிமெண்ட் தரத்தினை சோதனைசெய்யும் ஒரு கருவி பற்றி பாடம் எடுக்கத்தயாரானார்.

நான், அருன் பாபு, கார்த்திக், நாகவிஜயராஜன் முதல் பென்ஞில் இருந்துகொண்டு அவர் ஜிப் போடாதவிசயத்தை மற்ற மாணவர்களுக்கு பரப்பிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில்,  அவர் எங்களிடத்தில் புத்தகம் இல்லாத காரணத்தினால், இப்படித்தான் இருக்கும் என்று தன்னுடைய புத்தகத்தை நெஞ்சில் வைத்து காட்டிக் கொண்டிருந்தார். முதல் பென்ஞ்சில் இருந்த நாங்கள் வேண்டும் என்றே

“ சார் பின்னாடி உள்ளவங்களுக்கு தெளிவா தெரியலையாம் கொஞ்சம் தூக்கிக் காட்டுங்கான்னு சொல்ல. பாவம் நாங்க எதப்பற்றி சொன்னோம்னு கூட தெரியாம தலைக்கு பக்கத்துல புத்தகத்தவச்சி காட்டினார். அப்போவே ஜிப் பகுதியின் முக்கால்வாசி தெளிவாகத் தெரிய, வகுப்பில் சிரிப்பு சத்தம் கேட்க ஆரம்பித்த்து. அதோட மட்டும் நில்லாமல்

“சார் கடைசி பெஞ்சி பசங்களுக்கு தெரியல சார், இன்னும் நல்லா தூக்கினா, நல்லா தெளிவா தெரியும்னு நான் முதல் பெஞ்சில் இருந்து சொல்ல, மனுசன் தலைக்கு மேல, எக்கி நின்னு கையில புத்தகத்தை தூக்கி இப்போ தெரியுதா, இப்போ....ன்னு காட்டிக்கொண்டிருந்தார். அந்தநேரத்தில், அவருடைய தொப்புலே தெரிஞ்சிருந்தா, ஜிப் விசயத்தை நீங்களே நினைத்துப் பாருங்கள். நாங்க எதுக்கு சிரிக்கின்றோம் என்று கூட கேட்காமல் அவரும் சிரிச்சது தான் பெரிய சிரிப்பு எங்களுக்கு.

கடைசியாக சக மாணவன் ஒருவனுக்கு மனது கேட்காமல், காதில் போய் விசயத்தை சொல்ல, அவருடய ரியாக்சன் இருக்கின்றதே, 1000 சிவாஜி, 3000 கமல், 5000 விக்ரம் சேர்ந்தாகூட பன்னமுடியாது.

----------------------------------------------------------------------------யாஸிர்