திங்கள், டிசம்பர் 19, 2011

விஜய் டி.வி


நம் அனைவரின் மீதும், ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
தொலைக்காட்சிகளிலே, எனக்கு மிகவும் பிடித்த சேனல் என்றால் அது விஜய் தொலைக்காட்சி தான். அதற்காக 100% என்று என்னால் சொல்ல இயலாது. நான் காலேஜ் முடித்து, ஒருவருடம் தமிழ்நாட்டிலேயே வேலை செய்ததால் டி.வி பார்க்கும் நேரம் குறைவாக இருந்தது. பின்பு பெங்களூரு சென்ற பின்பு, கம்பெனி கொடுத்த வீட்டில் நானும், எனது நண்பர்களும் சேர்ந்து டி.வி வாங்கி, கேபில் கனெக்சன் எல்லாம் கொடுத்து, புல் செட்டப்பில் செய்துவைத்திருந்தோம். அந்த காலத்தில் ஏற்பட்ட அறிமுகம் தான் விஜய் டி.வி.

அதற்கு முன்பு சன் டி.வி, ராஜ் டி.வி....ன்னு பல சேனல்கள் பாத்திருந்தாலும், விஜய் டி.வி கொஞ்சம் வித்தியாசமான நிகழ்சிகளின் மூலம் எங்களை ஈர்த்தது. பொதுவா சிவில் இன்ஞ்சினியர் என்பதால், எங்களுக்கு வேலை எல்லாம் முடிந்து, வீட்டிற்கு வர இரவு 9.00 மணி ஆகிவிடும். அந்த நேரத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ்காக டி.வியை போட்டுப்பார்த்தால், ஒரே அழுகாச்சி சீரியல்களாகத்தான் இருக்கும். அந்த நேரத்தில் தான் விஜய் டி.வியின் பல விதமான நிகழ்சிகள் ஒளிபரப்பாகின. வித்தியாசமான நிகழ்சிகள், கலக்கப் போவது யாரு?, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், நீயா? நானா?....மூலமாக நாங்கள் வேறு எந்த சேனல்களுக்கும் திரும்ப போவது இல்லை.


அரசியல் சம்பந்தமான நிகழ்ச்சிகள் முன்னாடி அதிக அளவு வந்துகொண்டிருந்தது, ஆனால் ஏனோ அது இப்போது வருவதில்லை. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் அவர்களின் கணிப்பு, மற்றும் அரசியல் தலைவர்களின் நேர்முக விவாதம் என பட்டைய கிளப்பிக்கொண்டிருந்தார்கள். மற்ற நிகழ்ச்சிகளை விட எனக்கு இந்த அரசியல் விவாத நிகழ்ச்சி ரொம்ப, ரொம்ப பிடித்திருந்தது, காரணம் மற்ற சேனல்கள் எல்லாம் தத்தம் அரசியல் தலைவர்களை மட்டுமே உயர்வாக பேசி / துதி பாடிக்கொண்டிருக்கும் வேலையில், நடு நிலையோடு நிகச்சிகளை வழங்கியது தான்.

அதிகளவிலான நிகழ்ச்சிகள், இந்த டி.வி சேனலில் இருந்தே, மற்ற டி.வி சேனல்கள் காப்பியடித்துக் கொண்டிருந்தன. விஜய் டி.வியில் பிரபலம் அடைந்தது போல், வேறு எந்த டி.வி நிகழ்ச்சிகளிலும் எவரும் பிரபலம் அடைந்தது இல்லை என்பது உண்மை. சந்தானம், மதுரை முத்து முதல் இன்று உள்ள சிவ கார்த்திகேயனும் ஒரு உதாரணம். ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்சிகளை அதிகமாக பார்பதுண்டு, இருந்தாலும் அந்த சீசன் முடிந்த பின்பு, அவர்கள் ஒளிபரப்பும் புளூபர்ஸ் எனப்படும் மேக்கிங் ஆப்பை நான் மிஸ் செய்வது இல்லை.


இவர்களின் நிகழ்சிகளை தொகுத்து வழங்கும், தொகுப்பாளர்களும் சரி, தொகுப்பாளினிகளும் சரி, அவ்வளவு கன கச்சிதமாக அந்த நிகழ்சிகளுக்கு பொருத்தமாகயிருப்பார்கள். காலம் மாற, மாற தொகுப்பாளர்களும் மாறிக்கொண்டே இருக்கின்றார்கள். முன்பு எந்த நிகழ்ச்சியானாலும், தீபக், டி.டி (திவ்யதர்சினி) தான் வருவார்கள், பின்பு அது கோபினாத்துக்கு சென்று, இப்போது சிவ கார்த்திகேயனிடம் வந்துள்ளது. இடையிடையில், அர்சனா, உமா ரியாஸ்கான், மிமிக்கிரி சேதுவும் கலக்கினார்கள்.

விஜய் டி.விமுன்பு போல இப்போது இல்லை என்பது தான் உண்மை. உதாரணமாக விஜய் அவார்ட்ஸில், இப்போது அதிக பாரபட்சம் காட்டப்படுவதாகவே நான் நினைக்கின்றேன். முதல் 2 ஆண்டுகள் நன்றாக இருந்தது, அதன் பின்பு, கமலஹாசன், விஜய், சூர்யாவின் ரசிகர்களுக்காகவே இது நடத்தப்படுவது போன்ற மாயையை உருவாக்கியுள்ளது. தசாவதாரம் படத்திற்கு, இவர்களின் விருது ரொம்ப ஓவர், சிறந்த காமெடியெனும் கமலஹாசன் தான் என்று சொன்னது, தொலைக்காட்சி வரலாற்றில் மிகப்பெரிய காமெடி. கண்டிப்பாக நான் கமலுக்கு எதிரானவன் அல்ல, ஆனால் அந்த வருடம் வெளியான படங்களில் இதைவிட அதிக அளவில், நகைச்சுவை செய்திருந்த நடிகர்கள், பல படங்களும் உண்டு, கமலுக்கு கொடுக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, கொடுக்கப்பட்டது. அந்த வருடம் கமலுக்கு 5 விருதுகள், நடிகர், திரைக்கதை, வில்லன், கமெடி, குணச்சித்திரம் என்று. பின்பு சூர்யாவிற்கு, கிட்டத்தட்ட சூர்யாவிற்கு விருது கொடுக்காத கடைசி 3 வருடங்கள் இல்லை என்றே சொல்லலாம். எதாவது ஒரு கேட்டகரியில் விருது, அவர் எந்த கேட்டகரியிலும் வரவில்லை என்றால், அவருக்காகவே ஒரு புது கேட்டகரியை உருவாக்குவது என்று கடுப்பேத்தினார்கள். கடைசியாக அவருக்கு கொடுத்த விருது என்ன தெரியுமா?, சமுக சேவையில் சிறந்த நடிகர் – சூர்யா. என்ன கொடும இது, நடிப்புக்கும், சமுக சேவைக்கும் என்ன சம்பந்தம், அதற்கு எதற்கு சினிமா விழாவில் விருது. ஒரு ரோட்டரி கிளப்பில் சிறந்த நடிகருக்கு விருது கொடுப்பது எப்படி தவறானதோ அது போலத்தான் இதுவும். சமுக சேவகருக்கா விருது கொடுக்க 1000 அமைப்புகள், இயக்கங்கள் உள்ளன, இவர்கள் எதற்கு?, ஏன்?. விஜய் அவார்ட்ஸின், முதல் வருடத்தின் உண்மையான விருது, அதாவது ஃபேவரட் ஆக்டர் (அதிகளவு விரும்பப்படும் நடிகர்) விருது அஜித் குமாருக்கு தேர்வானது. ஆனால் அஜித் குமார் அதை வாங்க, அந்த நிகழ்ச்சிக்கு வராத ஒரே காரணத்திற்காக, இதுவரை அஜித்குமார் புறக்கணிக்கப்படுவதாகவே நான் நினைகின்றேன்.


வர வர விஜய் டி.வியின் தனித்தன்மை குறைவதாகவே எனக்கு தோன்றுகின்றது. கடைசியாக நான் பார்த்த நீயா? நானா? வில் இது அப்பட்டமாக தெளிவானது. சமுகத்தில் இருக்கும் பிரட்சனைகளைப் பற்றி விவாதம் நடத்தும் நிகழ்ச்சியில், ரஜினிகாந்தின் பெருமை பற்றி பேசும்படியாக ஆனது மிக மிக கேவலம். அதிலும் பாரதியாரின் பிறந்த தினத்தில் இந்த கொடுமை. நீயா?, நானா? அன்று நீயும், நீயும் என்றாகிப் போனது.

ஜீனியர் சூப்பர் சிங்கர்னு ஆரம்பிச்சு, அந்த பிஞ்சுகள், சூப்பர் சீனியர் ஆகும்வரை விடுவதில்லை. இந்தமாதிரியான குறைகள் இருந்தாலும், ஜாக்கிசானையும், ஜேம்ஸ் பாண்டயும் தமிழ் பேசவைத்தது, காமெடியான பல் நிகழ்ச்சிகள், அற்புதமான மேடைகள், வித்தியாசமான நிகழ்ச்சிகளை கொடுப்பது என்று பார்க்கும் வகையில், விஜய் டி.வி தான் பெஸ்ட், மற்ற தமிழ் டி.வி சேனல்களுடன் கம்பெர்பன்னும் போது மட்டும்.

-------------------------------------------------------------------------யாஸிர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக