புதன், ஆகஸ்ட் 03, 2016

அல்பைக் எனும் அம்மா உணவகம்.

எந்த புது இடத்துக்குப் போனாலும் என்னோட முதல் பிரட்சணை சாப்பாடுதான். ஆறுமாத புராஜெட்டுக்காக சவுதி ஜித்தா வருவதற்கு முன், ‘’சேட்டன் கடை மோட்டா ரைஸ் விண்வெளியிலேயே கிடைக்கும் போது, ஜித்தாவில் கிடைக்காதா என்ன?’’ என்று எண்ணிக்கொண்டுதான் வந்தேன். ஆனால் வந்தபின்புதான் தெரிந்தது, சேட்டன்கள் எல்லாம் அரபியாக கன்வெர்ட்டாகி சுட்ட கோழி விற்றுக்கொண்டிருக்கும் கொடூறம். சுட்ட கோழி சாப்பிடுவது என்பது எனக்கு பழகிப்போனது என்றாலும், முப்பது நாள் மூணு வேளையும் சுட்டகோழி என்றால், குஷ்டமாகும்தானே.

வெரைட்டியாக வேறு ஏதாவது சாப்பிடச் சென்றால், பர்சுக்கோ அல்லது வயிற்றுக்கோ பங்கம் வந்துவிடுகிறது. இங்கு சுட்டுப்போட்டால் கூட யாரும் அரபி தவிர்த்து வேறு மொழி பேசுவதில்லை. சுற்றி இருக்கும் ஒரு மலையாளி கடையில் கூட ‘என்ன வேண்டும்?’ என்பதை அரபியில்தான் கேட்கிறான். சிலரின் முகத்தைப் பார்த்து இவன் இன்னவன் என்று கண்டுகொள்வது கடினம், ஆனால் என் மூஞ்சைப் பார்த்தால் என் தெரு பெயர் முதல் பாஸ்போர் நம்பர் வரை தெரியும். தெரிந்தும் என்னிடம் அரபி அல்லது ஹிந்தியில்தான் பேசுறானுங்க. ஒரே ஒருதடவை மட்டும் தமிழ் கடைக்குச் சென்றேன். மலையாளியே பராவாயில்லை என்று தோன்றியது. ஆர்டர் எடுப்பவன் மாஸ்டரிடம் ‘’மூணு தோசைய்ய்ய், அதுல ஒன்னு மொருவலா’’ என்று சொல்லிவிட்டு, நம்மிடம் வந்து ‘’அவுர் ஆப்கா கியா சாயியே’’ன்னு கேட்டான். இதுக்கும் அவன் காதுபடவே கபாலி படத்தில் குமுதவள்ளியாக நடித்த ராதிகா ஆப்தேயின் கும்ம்மான போட்டோ ஷீட்டைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். 

அரபி சாப்பாடு சாப்பிட ஆசைப்பட்டு, சில அரபி ஹோட்டலுக்குச் சென்றால் சர்வநாசம். மெனுகார்டுகூட அரபியிலேயே அச்சடிக்கப்பட்டிருக்கும். இருந்தாலும் அதில் இருக்கும் படத்தைச் சுட்டிக்காட்டி ஆர்டர் செய்துவிட்டு டேபிளில் அமர்ந்தால், நான்குபேர் சாப்பிடும் அளவிற்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய தட்டில் கொண்டுவந்து வைப்பார்கள். இல்லையென்றால் சின்ன தட்டில் கொண்டுவருவார்கள் ஆனால் நான்கு நாளுக்கான சாப்பாட்டுப் பைசாவை புடுங்கிவிடுகிறார்கள். துபாயில் எட்டுவருடம் இருந்தும் அரபிமொழி கற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதில்லை, ஆனால் சவுதியில் இறங்கிய எட்டாவது நிமிடமே அந்த கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. இப்பவெல்லாம் ஊருக்கு போன் செய்தாலே ‘’பாப்பா, மாமா கெய் பாலக், குல்லு தமாம்?’’ என்றுதான் வாயில் வருகிறது. நமக்கு சோறுதானே முக்கியம்.

இப்படி சாப்பாட்டுக்காக நான் படும் கஷ்டத்தை நண்பன் ஒருவனிடம் சொல்லி அழ, அவன்தான் அல்பைக் ரெஸ்டாரண்ட் பற்றி சொன்னான். இதுவும் KFC போன்றதுதான் என்றாலும், ஆந்திரா மெஸ்ஸில் சோறு போடுவதுபோல 10 ரியாலுக்கு இரண்டு பன்னு, 5, 6 சிக்கென் பீஸ், பிரென்ச் பிரைஸ் என அள்ளிக் கொட்டிவிடுகிறார்கள். முதல்முறையாக சாப்பிடுவதாலோ என்னவோ டேஸ்ட் சூப்பரோ சூப்பர். தொடர்ந்து சாப்பிட்டால் ஒருவேளை பொண்டாட்டி சமையல்மாதிரி சப்பென்று இருக்கலாம். லைட்ட பசிச்சா 5 ரூபாய் சான்விச், ஹெவியா பசிச்சா பத்து ரூபாய் சான்விச் என காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. பெரிய சைஸ் சான்விச்சை காலையில் வாங்கிவைத்து கடிக்க ஆரம்பித்தால், ஆபிஸ் முடிந்து வீட்டுக்ப்போகும் போது கூட மிச்சம் இருக்கும். எவ்ளோ ‘’பெரிய்ய்ய மாத்திர.....’’ தேவையானி ரியாக்சன் மாதிரி அவ்ளோ பெரிய்ய சான்விச் அது.

அம்மாவைப் பார்த்த பின்புதான் ஹிலாரி கிளிங்டன் கட்சியின் அதிபர் வேட்பாளராகியிருப்பதைப் போல், அம்மா உணவகத்தைப் பார்த்துத்தான் அல்பைக்கும் ஆரம்பிக்கப்பட்டதாக எழுதாலாம் என்று நினைத்தேன். எதையும் நம்பும் தமிழரல்லவா நாம், ஆனால் என் சொந்தக்காரர் நேற்று இரவுதான் தண்டனைக்காக தலையை வெட்டும் இடத்தைக் காண்பித்தார்.  ஜித்தா எப்படி? என்று கேட்பவர்களிடம், ரைமிங்காக தப்பாக எதுவும் சொல்லிவிட்டு, நாட்டிற்கு நாக்கில்லாமல் வர எண்ணமில்லை, ஆகையால், ம்ம்ம்ம் ஓக்கே, பரவாயில்லை, நல்லாயிருக்கு என கவுண்டர் சொல்லுவது போல ‘’ஈயம் பூசுனதுமாரியும் இருக்கனும் பூசாததுமாரியும் இருக்கனும்’’ என்ற லெவலை மெயிண்டெய்ன் செய்கிறேன்.

இங்கு, டாக்ஸி எல்லாம் பாக்கிஸ்தான் நாட்டுக்காரர்களுக்கு பட்டாப்போட்டு கொடுத்துவிட்டார்கள் போல, மீட்டர் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏரியா பெயரைச் சொன்னால், 40 ரூபாய் என்பார்கள், நாம் 10 ரூபாயில் இருந்து பேரத்தை ஆரம்பிக்கவேண்டும். பத்து நிமிடத்தில் போய்ச்சேர வேண்டிய இடத்திற்கு இருபது நிமிடம் பேரம் பேசி 25 ரூபாய்க்கு முடிக்கவேண்டும். இங்கு எனக்கு என்னுடய சொந்தக்கார மச்சான்தான் வழிகாட்டி. முதல்நாள் அவர், ‘’டாக்ஸியில் ஏறியதும் பாக்கிஸ்தானி எந்த ஊரு? எங்க வேலைபார்க்குற? என கேள்விகேட்பான், அடிச்சிகூட கேட்பான், நீ இஞ்சினியர்னு மட்டும் சொல்லிறாத, இல்லாட்டி இறங்கும் போது கூட பத்து கொடு, இருபது கொடு என்று சண்டைக்கு வருவான்’’ என்று சொன்னார்.

இதுவரைக்கும் நிறைய முறை டாக்ஸியில் ஏறியிருக்கின்றேன், அவர் சொன்னது போலவே, ‘’என்ன தம்பி? எந்த ஊரு? எங்கயிருந்து வர்றீங்க?’’ என்ற கேள்விகளை ஹிந்தியில் கேட்பார்கள் நானும், ‘’இந்தியா, மெட்ராஸ், மதராசி’’ என பதில் சொல்லுவேன். ஆனால், ‘’என்ன வேலை பாக்குற?’’ என்ற கேள்வியை கேட்டுவிட்டு, “ஆபிஸ் பாய்?, ஹவுஸ் டிரைவர்?, கிளினர்?...” என அவர்களே பதிலும் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். ‘’என்னடா இது ஜித்தால ஒரு பொறியாளனுக்கு வந்த உச்சகட்ட சோதனை’’ என்று நானே நினைத்துக்கொள்வேன். எங்கம்மா சத்தியமா நான் இஞ்சினியர்னு சொன்னால் கூட நம்பமாட்டார்கள் போல. நம்ம டிசைன் அப்படி. டாக்ஸிக்காரர்களுக்கு பத்து ரூபாய் அதிகம் கொடுப்பதில் கூட பிரட்சனையில்லை, சிலபேர் வண்டியில் நாத்தம் குடலைப் புடுங்கும். பின் சீட்டில் போய் உட்கார பின் கதவைத் திறந்தால், வம்படியாகப் பிடித்து முன்னாடி உட்காரவைத்து கையை தூக்கி தூக்கி தும்சம் செய்வார்கள். ஒருமுறை பொறுமையிழந்து ‘’குழிக்க வேண்டியதுதாணடா?”” என கேட்டுவிடலாம் என்று தோணியது, ‘’குளிச்சிட்டேனே, வேணும்னா மோந்துபாரு” என்று சட்டயை கழட்டி மூஞ்சை அக்குள்குள்ள கொண்டுபோயிருவானோ? என்ற மரணபயத்தில் வாயையும் மூக்கையும் பொத்திக்கொண்டு உயிர் பிழைத்தேன்.

என் வாழ்வில், இன்னும் என்னென்ன கொடுமைகளை காட்டக் காத்திருக்கிறதோ இந்த உலகம்?. 


--------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.      

ஞாயிறு, ஜூலை 31, 2016

ரஜினி.

சென்னை பெருவெள்ளத்தின் போது ‘’கன்னட நாய் ரஜினியே....’’ என தூற்றியவர்களை, கபாலி படத்தின் முதல் காட்சிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து படம் பார்க்கவைத்ததுதான் ரஜினி பவர். கண்டிப்பாக இது வேற எந்த நடிகனுக்கும் கிடைக்காத ஒரு வரம். மத்தப்படி ஒரு படத்தைப் பற்றி விமர்சனம் செய்வது என்பது அவர் அவர் விருப்பம். குத்துப்பாட்டை எதிர்பார்த்து ஏமாந்து குத்துவாங்கிய ஒருவன் கண்டிப்பாக படம் ‘நல்லா இருக்கிறது’ என்று எழுதப்போவது இல்லை. அதேவேலையில், முந்திய நாளில் லிங்காவைப் பார்த்துவிட்டு, இந்த படத்தை ‘மொக்கை’ என்றும் எழுதப்போவதில்லை. எல்லோரும் ‘’சூப்பர்’’னு சொல்லுறமாதிரி படம் பண்ணனும்னா அப்ப அஜித் நடிச்ச ‘ஆஞ்சிநேயா’வைத்தான் ரஜினியைவைத்து மறுபடியும் எடுக்கணும். 

மெட்ராஸ் படத்தை முதல் தடவை பார்க்கும் போது எனக்கு அந்த படம் சுத்தமாக பிடிக்கவில்லை. மரண மொக்கைன்னு பலபேரிடம் சொன்னேன். பிற்பாடு அந்த படத்தின் அரசியலை பொதுவெளியில் தெரிந்துகொண்டு பார்த்தபின்புதான் அது படமில்லை சிலரது வாழ்க்கைன்னு தெரிஞ்சிக்கிட்டேன். அணுவணுவா ரசிச்சேன். ஜானி கேரக்ட்டருக்கே மாறி மாறி பார்த்த படம். என்னைய மாதிரியேதான் இங்க பலபேர் கபாலியை புரிந்துகொண்டது. யார் யாருக்கு ரஜினியை, ஆண்டனியோட மோதற பாட்ஷாவாக பார்க்கப்பிடிக்குமோ அவர்களுக்கு கண்டிப்பாக  இந்த கபாலி பிடிக்காது. எனக்கு ‘’ஆறில் இருந்து அறுவது வரை’’ ‘’எங்கயோ கேட்ட குரல்’’ ‘’முள்ளும் மலரும்’’ ரஜினியைத்தான் பிடிக்கும். அதுனால எனக்கு கபாலியை ரொம்ப இல்லாட்டியும், பிடிச்சிருந்தது.

நேற்றுவரை ரஜினியை பிடிந்திருந்த உங்களுக்கு, ‘’மேட்டுக்குடியின் கூப்பாடு இனி நாட்டுக்குள்ள கேக்காது’’ என்று பாடிக்கிட்டு வரும் ரஜினியை பிடிக்கவில்லை என்றால், தப்பு ரஜினி மேல இல்ல, ரஜினியையும் தாண்டி உங்களுக்கு வேற ஒன்னு புடிச்சியிருக்குன்னு அர்த்தம். ரஜினியின் கெட்டப்பிற்காகவே இந்த படத்தை பார்க்கனும்னு முடிவுபண்ணியிருந்தேன். மம்முடி, அமிதாப்... என சீனியர் நடிகர்கள் எல்லாம் அவர்களோட வயதுக்கு ஒப்பான கதாபாத்திரத்தில் வெற்றிபெற முடியும் என்றால், ஏன் ரஜினியால் முடியாது? என பலநாட்கள் எனக்குள்ளே நான் கேட்டுக்கொண்டது. எப்படியோ ரஜினிக்கும் கேட்டுவிட்டது போல. கள்ள பிரிண்ட்ல பார்த்துவிட்டே, தன் மகளையும், தன் மனைவியையும் அடையாளம் காணும் இடத்தில் எனக்கு கண்ணுல இருந்து ஜலம் வந்திடுச்சின்னா, தியேட்டர்ல பார்த்திருந்தா கதறி அழுதிருப்பான் இந்த கைப்புள்ள.

ரஜினி என்ற ஒரு மகா நடிகனை, ‘’உங்க மாஸ் என்ன? உங்க வேலீவ் என்ன? உங்க லெவல் என்ன?’’ என்ற இன்ன பிற என்ன? என்ன?க்கு இரையாக்கிவிட்டோமேன்னு நினைக்கும் போது, வருத்தம்தான். இந்த படத்தில இருக்குற குறைகளை / லாஜிக் மிஸ்டேக்கை சுட்டிக்காட்டி படம் சரியில்லை என்று சொல்லுபவர்களுக்கும், வசனத்தையும், பாடலையும் சுட்டிக்காட்டி படம் சரியில்லை என்று சொல்லுபவர்களுக்கும் வித்தியாசம் என்ன என்று சொல்லித்தர தேவையில்லை.

ஒருவன் ‘’மணி சார் அளவிற்க்கு பா.ரஞ்சித்திற்கு ரஜினியை பயன்படுத்த தெரியவில்லை’’ என்று கமெண்ட் எழுதுகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனுடய கருத்து நூறு சதமானம் உண்மைதான், தளபதி ரஜினிக்கு பக்கத்தில் நிற்க்கக்கூட கபாலி ரஜினிக்கு தகுதியில்லை. ஆனால், அந்த கருத்தில் ஒரு அரசியல் இருப்பதை உங்களால் உணரமுடிகிறதா?. இல்லை என்றால். தெரிந்துகொள்ளுங்கள். மணிக்கு பின்னால் வரும் ‘சார்’ பா.ரஞ்சித்திற்கு பின்னால் வராததுதான் அந்த அரசியல்.

ரஞ்சித்தினுடய நேர்காணலை நீங்கள் பார்த்தீர்களேயானால், கபாலி கண்டிப்பாக ரஜினியின் படம் இல்லை என்பதை உங்களால் உணரமுடியும். ஆனால் ரஞ்சித்தையும் மீறி ரஜினியின் பெயர் வெளியே தெரிவதற்கு காரணம், தன்னுடய பாணி படம் இல்லை என்று தெரிந்தும் அதில் தன்னை இணைத்துக்கொண்டதற்கான ரஜினியின் வெற்றி அது. ஒரு நேர்காணலில் ரஞ்சித்திடம் கேள்வியாளர் ‘’இந்த படத்தில் சில அரசியலை பேசியிருக்குறீர்கள், அது மக்களிடம் ரீச் ஆனதாக நினைக்கின்றீர்களா?’’ என்று கேட்டதற்கு, ‘’கண்டிப்பா, அதனாலதான் கொஞ்சப்பேரு என்ன ரொம்ப திட்டிக்கிட்டு இருக்கானுங்க”” என ரொம்ப இயல்பா பதில் சொன்னார். பாலுமகேந்திரா, பாலச்சந்தருக்கு அடுத்ததாக ஒரு இயக்குனரிடம் இருந்து இவ்வளவு முதிர்ச்சியான இண்டர்விய்யூவை நான் பார்த்த்தே இல்லை.

கபாலி படத்தில் நிறைய ஓட்டைகள் இருக்கலாம், அல்லது ஓட்டையில் கபாலிப்படம் இருக்கலாம். அதையும் மீறி இதை பலபேர் கொண்டாடக் காரணம் ரஜினி என்ற ஒரு மிகப் பெரிய சக்திதான். படம் திரைக்கு வருவதற்கு முன்பாக மார்க்கெட்டிங்க் என்ற பெயரில் தாணு செய்த அழுச்சாட்டியங்கள் ரெம்ப அதிகம் என்ற போதிலும், ரஜினிக்காக அனைத்தும் மன்னிக்கப்பட்டது.

படத்தின் குறையாக சில பேர், குமுதவள்ளியை தேடிப் போகும் காட்சியை சொல்கிறார்கள். கண்டிப்பா அவனுங்க எல்லாம் பொண்டாட்டி மடியில தலை வச்சிக்கிட்டு, லேப்டாப்பில் டைப்பண்னுனவனுங்களா இருப்பானுங்க. குடும்பத்த பிரிஞ்சு பல வருசம் வெளியில இருந்துட்டு வீட்டுக்கு வருபவனுக்குத்தான் தெரியும் தனிமையோட வலி என்னன்னு. தன்னோட பொண்ணுகிட்ட ‘’நான்தான் உங்கப்பான்னு தெரியும்ல, பின்ன ஏம்ம என்ன வந்து பார்க்கல?’’ என்று சொல்லும் போதும், பொண்டாட்டிய பார்க்கப் போகுற ராத்திரியில் ‘’என்ன செய்றாளோ, எப்படி இருக்காளோ?’’ என ஏங்கும் காட்சியிலயும் சரி 25 வருசம் ஜெயில்ல இருந்த தனிமையின் வலியை அப்படி பிரதிபலிக்கும். இன்னும் எவனாவது குமுதாவைத் தேடிப்போனதுனாலத்தான் கபாலி எனக்கு பிடிக்கலன்னு சொன்னா, என்னோட பக்கத்து ரூமுக்கு ஆள் தேவைப்படுது, பயபுள்ளய புடுச்சி சவுதிக்கு அனுப்புவையுங்க.

மாய நதி பாடலில் வரும், நீ செத்துட்டேன்னு நெனச்சேன் வசனமும், அதில் வரும் முதிர்ச்சியான் காதல் விளையாட்டுகளும் சரி ‘’வந்திட்டாரு சொல்லு, திரும்ப ரஜினி வந்திட்டாருன்னு சொல்லு, முள்ளும் மலரும்ல எப்படி போனாரோ அப்படியே திரும்ப வந்திட்டாருன்னு சொல்லு’’ன்னு சொல்லத்தோணுது.

-----------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

திங்கள், ஜூலை 25, 2016

வந்துட்டேண்ணு சொல்லு.

என்னோட கல்யாணத்திற்கு நான் ஊருக்கு போயிருந்த சமயம், சொந்தக்காரங்க யார்? யாருக்கு நான் நேரப் போய் அழைக்கவேண்டும் என்ற லிஸ்டை எங்க அப்பா எங்கிட்ட கொடுத்தாங்க. ‘’நான் இன்னாருடய பையன், எனக்கு கல்யாணம், எல்லோரும் வந்து சிறப்பிக்கனும்’’ என்று சொல்லிய முக்கால்வாசி வீட்டில் ‘’என்னது? அவரோட பையனா? நான் இதுவரைக்கும் உன்ன பார்த்ததே இல்லையப்பா?’’ என்ற ரியாக்சன்தான் வந்தது. அமைதின்னா அம்புட்டு அமைதி, இத எதுக்கு சொல்லுறேன்னா....

இந்தமுறை ஊருக்கு சென்ற முதல் நாளில் இருந்து, டாக்ஸி பிடித்து திரும்ப போகும்வரை ‘’உன் பையன் எம்புள்ளய குத்திட்டான், கைய கடிச்சிட்டான், முடிய பிடிச்சு இழுத்துட்டான், கண்ண நோண்டிட்டான், நகத்த வச்சி கீரிட்டான்.....’’ என்று என் பையனைப் பற்றி சொந்தம், அக்கம் பக்க வீட்டு புகாருக்கு காது கொடுக்கவே நேரம் சரியாக இருந்தது. தட் ‘’அந்த தெய்வத்தின் மகனா இவன்.....? நெவர்’’ பீலிங்க்.

முன்னாடியெல்லாம், வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றவன் ஊருக்கு வந்தால், அவனைப் பார்க்கவரும் முதல் ஆட்கள், சொந்த பந்தங்களாகத்தான் இருப்பார்கள். ஆனா இப்போ, புரோக்கர்கள்தான் முன்னாடி வந்து நிற்கிறார்கள். ‘’அந்த ஏரியாவுல ஒரு பிளாட் வருது’’ என சொன்னவருடன் சென்று பார்த்தால், நாங்கள் கிரிகெட் விளையாடிய குளம்!, என்னங்க குளத்த காட்டுறீங்க? என்று கேட்டாள், அதுதான் சொன்னல்ல தம்பி இது ‘’ஏரி’’யான்னு என்று தலையை சொரிந்தவாரே பதில் வருது. சரி, கடையநல்லூரிலேயே ஹாட்டான இடத்தில் ஒரு பிளாட் இருக்குன்னு சொன்னீங்களே அத காட்டுங்கன்னு கேட்டா, சுடுகாட்டை காட்டுறானுங்க. இதை எல்லாம் பார்க்கும்போது

‘’எனது புறநகர் குடியிருப்பு
வயல்களின் சமாதி என்று
நினைவுபடுத்தியவை
தவளைகளே!’’
கவிஞர் சுகுமாரின் கவிதைதான் ஞாபகம் வருது.

ஒருநாள் மதுரைக்கு போயிருந்தேன். பஸ்ஸில் ஸ்மார்ட் போன் இல்லாதவன் முகம் எல்லாம் அவ்வளவு பிரகாசமா இருந்தது. ஸ்மார்ட் போன் வச்சிருக்குறவன் எல்லாம் கொஞ்சம் உர்ர்ர்ர்ன்னே இருந்தானுங்க. சுவாதி மேட்டரோ, ஒய்.ஜி மகேந்திரனோ, குண்டுவெடிப்போ பெரும்பாலனவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. தெரிந்தவர்கள் எவரும் பொதுவெளியில் விவாதிப்பதாக தெரியவில்லை. புதிய விடியலுக்காக திருநீரோடு அந்த அதிகாலையிலும் தான் உண்டு, தன் வேலயுண்டு என்று உலகம் பரபரப்பாகவே இருந்தது. பேஸ்புக் காட்டும் உலகத்திற்கும், நிஜமான உலகத்திற்கும்தான் எவ்வளவு வேறுபாடு?.

ஒருவன் அனுமார் வேடம் போட்டு பிச்சை எடுப்பதை பார்த்தேன், எவனும் காசு போட்டதுபோல் தெரியவில்லை. ஆனால், பேஸ்புக்கில் ஏதாவது அனுமார் கிராபிக்ஸ் போட்டு ‘’இதை பத்து செகண்டுக்குள் மற்றவர்களுக்கு ஷேர் செய்தால் உங்களுக்கு அடுத்த ஒரு மணி நேரத்தில் நல்ல செய்தி வரும்’’ என்ற போஸ்டை மாஸ்டர் டிகிரி படித்த பல பேர் ஷேர் செய்வதை பார்த்திருக்கிறேன். இந்த கேட்டகிரியில் என்னோட பிரண்ட் ஒருவர் இருக்கிறார், அவர் பண்ணிய ஷேருக்கு இந்நேரம் ‘’நல்ல செய்தி’’ நாலாயிரம் ஏக்கர்ல இருக்கணும் ஆனா பாருங்க எப்ப பேசினாலும் அவரோட கஷ்டத்தை கண்டெய்னர், கண்டெய்னரா வந்து இரக்குவார். இப்படித்தான் இன்னொருவன், ‘’இதுதான் பழைய மெக்கா’’ என்று ஒரு சதுர கட்டிடம், அதை சுற்றி ஒரு 30 ஆட்கள், ஒரு கிணறு இருக்கும் படத்தை போட்டிருந்தான். அனுமாரை பத்தி சொன்னால்தான் பஞ்சாயத்தாகும், இது நம்ம பங்காளிங்கதானன்னு நெனச்சு ‘’அப்ப கிணத்து பக்கத்துல நிக்குறதுதான் முஹம்மது நபியா?’’ன்னு கேட்டுட்டேன். ஒன்னு ஆமான்னு சொல்லனும் இல்ல, இல்லைன்னு சொல்லனும் அதவிட்டுவிட்டு என்னை காபிர் என்று சொன்னான். இங்க நாம உண்மையச் சொன்னாலோ அல்லது அவர்களுக்கு பதில் தெரியவில்லை என்றாலோ தேஷ்ஷ துரோகியாகவோ, காபிராகவோ மாறவேண்டியிருக்குது. இருந்தாலும் ‘லத்திக்கா’ பவர்ஸ்டார் படம், ‘லிங்கா’தாண்டா சூப்பர்ஸ்டார் படம்னு சொல்லுவது நமது கடமையில்லையா?.

சுவாதி கொலையக் கண்டித்து ‘’ஓ திறமையற்ற அரசாங்கமே...” என்று நீட்டி நிமித்தி ஒரு கட்டுரை எழுதி பிளாக்கில் போடுவதற்கு சற்று முன்பாக பிலால் மாலிக் என்ரியாகிவிட்டார். அந்த சூழ்நிலையில் அதை போஸ்ட் செய்தால், ‘’இவன் யார்?’’ என்று என் பேண்ட் ஜிப்பை அவிழ்த்துப்பார்க்கும் அவலம் நடந்திருக்கும். ஒரு வேலை பிலால் மாலிக் என்ரி இல்லாமல் இருந்து, என் போஸ்ட்டை பலபேர் படித்திருந்தால் அ.தி.மு.க அரசாங்கமே ஆட்டம் கண்டிருக்கும். இன்நேரம் பன்னீர் பதவி ஏற்று இருந்திருப்பார். என்ன சொல்ல, எல்லாம் பன்னீரின் போறாத காலம்.

இடைப்பட்ட காலங்களில் கொஞ்ச கட்டுரைகள் எழுதினேன். ஆனால், என்னுடய மெடிக்கல் இன்சூரன்ஸ், கை, கால் முறிவுக்கு கவராகாது என்று தெரிந்துகொண்டதால் அவற்றை போஸ்ட் செய்ய இயலவில்லை.

கொஞ்ச காலமாக வாழ்க்கை என்னை மூத்திர சந்துக்குள் வைத்து கும்மிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கையை எதிர்த்து நெஞ்ஞை நிமிர்த்தி நின்றால் அது குஞ்ஞிதபாதத்தில் எத்தி மிதித்து மீன்பாடி வண்டியில் ஏற்றி இப்போது சவுதி ஜித்தாவிற்கு அனுப்பி வைத்திருக்கிறது. பார்க்கலாம் என்று முடிவுசெய்துவிட்டேன். அதாவது வாழ்க்கை ஜெயிப்பதை ரத்தக்களரியோடு வேடிக்கை பார்க்கலாம் என்று முடிவுசெய்துவிட்டேன்.

------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

புதன், டிசம்பர் 16, 2015

நடிகன்னா மிதிப்போம்..

மழை வெள்ளத்தைப் பற்றி எழுதவில்லை என்றால் நீங்கள் ஒரு ‘’பிரபல வலைப்பதிவாளர்’’ கிடையாது, என்ற எழுதப்படாத விதியின் கீழ் இந்த கட்டுரை அவசரமாக எழுதப்படுகின்றது. ‘’ஆனா நீதான் பிரபல வலைப்பதிவாளரே கிடையாதே?’’ என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. ‘’பிரபலம்’’ என்பதை ஏற்கமறுப்பீர்கள் என்றால் ‘’ஓரளவு’’ என்பதை அதோடு இணைத்துக்கொள்ளவும் (அதுக்கும் கீழ் எல்லாம் இறங்க முடியாது). ‘’என்னடா? பிளாக் எழுத எதுவும் சப்ஜெக்ட் கிடைக்கலியா? கொஞ்ச நாளா எதுவும் எழுதல?’’ என்று சிலபேர் கேட்பதுண்டு. சப்ஜெட்டிற்கெல்லாம் பஞ்சமே கிடையாது. பேஸ்புக்கில் பத்து நிமிஷம் குந்தி இருந்தால் போதும், கொள்ள போஸ்ட் போடலாம். வர வர எழுதுவதற்கு கொஞ்சம் சோம்பேறியாக இருக்கிறது.

சென்னை வெள்ளத்தைப் பற்றி வட இந்திய மீடியாக்கள் மூச் விடாதைத் பற்றி இங்கு பல பேர் பொருமுவதை என்னவென்று சொல்வதுதென்றே புரியவில்லை. சென்னை வெள்ளம் என்றுதான் சொல்ல சொல்கிறோமேயொழிய தமிழ்நாடு வெள்ளம் என்று இல்லை. சென்னை மூழ்கிய அதே நாளில்தான், கடலூரும் மூழ்கியது ஆனால் தமிழ்நாட்டில் எத்தனை பேர் கடலூர் வெள்ளத்தைப் பற்றி பேசினோம்?, ஆக நாமேக்கே சென்னை வேறாகவும் கடலூரூர் வேறாகவும் தெரியும்போது வட இந்தியா மீடியா வந்து வட சுடவில்லை, சட்னி ஊத்தவில்லை என்று புலம்புவது என்ன நியாயம்?. நிவாரணப் பொருட்களின் மீது ஸ்டிக்கர் ஒட்டியதை வாய் கிழிய பேசும் நாம், காஷ்மீர் வெள்ளத்தில் தவித்தவர்களின் நிவாரணப் பொருட்களில் ‘’இது இந்தியாவின் பரிசு’’ என்று வாசகம் ஒட்டியபோது ‘’ஏன்?, காஷ்மீர் இந்தியாவில் இல்லையா?’’ என்று எதிர்த்து வாய் திறக்காதது எதற்கு?. அப்போது, நாம் மட்டும் அது வட இந்தியா என்று பார்க்கவில்லையா?.

ரஜினிகாந்தின் தற்போதைய சொத்து மதிப்பு பத்தாயிரம் கோடியாம். ஆனால் அவர் வெள்ள நிவாரணத்திற்கு கொடுத்தது வெறும் பத்து லட்ச ரூபாயாம். என்னமோ இவனுங்கதான் ரஜினிகாந்த் அக்கவுண்ட்ஸை எல்லாம் ஆடிட் பண்ணமாதிரி அள்ளிவிடுறது. லாரன்ஸ் ஒரு கோடி ரூபாய் கொடுத்ததால், லாரன்ஸின் மூத்திரத்தை ரஜினிகாந்த் குடிக்கனுமாம். அதுசரி என்றால், ரஜினி படத்தின் 100 ரூபாய் டிக்கெடை 500 ரூபாய்க்கி வாங்கி படம்பார்த்த நாம் ரஜினி மூத்திரத்தைதான் குடிக்கவேண்டும். அவ்வளவு மூத்திரத்திற்க்கு பாவம் ரஜினி என்ன செய்வார்?. எல்லா நடிகருக்கும், பணக்காரனுக்கும் ஒரு டிரஸ்ட் இருக்கும், அது எதற்கு என்று எவனுக்காவது தெரியுமா?. கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவதற்குத்தான் என்று நாம சொன்னாலாவது புரியுமா?. இவனிடம் இவ்வளவு சொத்து இருக்கிறது, ஆகையால் இவன் இவ்வளவு ரூபாய் நிவாரண நிதியாக கொடுக்கவேண்டும் என்று சொல்லுவதற்கு நீங்க யாருடா?. அப்படியென்றால், நான் நிதி கொடுக்கவேண்டும் என்றால் என்னுடய சம்பள ஸிலிப்பை யாரிடம் அனுப்பி, எவ்வளவு நிதி கொடுக்கவேண்டும்? என்று கேட்பது?.

கோச்சடையானில் பத்து கோடி, லிங்காவில் இருபது கோடி நஷ்டம் என்று ரஜினிகாந்த் அறிக்கைவிட்டால், அந்த நஷ்டத்தை கொடுக்க நாம் தயார் என்றால், ரஜினியை வெள்ள நிவாரண நிதிக்கு ஆயிரம் கோடி கொடுக்கச்சொல்லலாம். கவித்துவமான, காவியத்துவமான, இலக்கியத்துவமான ‘’லிங்கா’ படத்தை வெற்றி பெறச்செய்து வசூல் சாதனை படைக்கவைக்க நமக்கு துப்பு இல்லை, இந்த தள்ளாத வயதிலும், பாராசூட்டில் பாய்ந்து பாய்ந்து பைட் செய்த சாதனையை பாராட்ட துப்பு இல்லை. நிதி வேணுமாம் நிதி. தூக்கிப்போட்டு மிதி.

அரசாங்கத்தை எதிர்த்து கேள்விகேட்க வக்கில்லாத நாம், நம்முடைய கோபத்தை வெளிக்காட்ட ஒரு ‘’அமிதாப் மாமா’’ தேவைப்படுகிறது. அந்த ‘’அமிதாப் மாமா’’தான் இந்த நடிகர்கள். பொய்யையாவது கொஞ்சம் நம்பும்படி சொல்ல முதலில் கத்துக்கனும், ஒரு பொய்சொன்னா அதுல கொஞ்சம் உண்மையும் கலந்து இருந்தாத்தான் அதை கொஞ்சம் அறிவிருக்கிறவன் நம்புவான். இதெல்லாம் சதுரங்க வேட்டை படம் பார்த்தாலே புரியும். எங்க? நாமதான் எப்போ கபாலி ரிலீஸீன்னு காத்துக்கிட்டு இருக்கோமே. ஆர். ஜே பாலாஜி ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்ததாக ஒரு படிக்காத பக்கி  கிளப்பிவிட்டதை, கார்பிரேட் கிளர்கில் இருந்து கம்யூட்டர் இஞ்சினியர் வரை ஷேர் செய்திருக்கிறார்கள். ஷேர் செய்த எவனுமே ‘’ஒரு கோடி ரூபாய் நிதி கொடுக்குற அளவுக்கு ஆர் ஜே பாலாஜியிடம் சொத்து இருந்தால், அவர் எதுக்கு சின்ன சின்ன காமெடி வேடத்தில் நடிக்கணும்?. கேவலம் உதயநிதியே ஹீரோவா நடிக்கும்போது, ஆர்.ஜே பாலாஜி ஹிரோவா நடிச்சிருப்பாரே?’’ என்ற ஒரு சின்ன கேள்விகூட அவர்களுக்கு எழவில்லை. ஏனென்றால், ரமணா படத்தி வருவது போல நாமெல்லாம் ‘’செண்டிமெண்டல் இடியட்ஸ்”. அதேமாதிரித்தான் ஷாருக்கான் 100 கோடி கொடுத்ததாக உடான்ஸ். அதில் 50 கோடி பணமாகவும், 50 கோடி பொருளாகவும் என்ற டீட்டெய்ல்லு வேற.

நடிகனோட தொழில் நடிக்குறது, அதை அவர்களை செய்யவிடவேண்டும். சும்மா, சும்மா, காவிரியில தண்ணிவரல, கக்கூஸ்ல கக்கா போகல என்பதற்காக எல்லாம் போராட்டம் செய்ய இழுத்தால் என்ன நியாயம்?. அப்படி போராட்டம் செய்ய வருகிறவனுக்கு காவேரி பற்றி தெரியுமான்னு கேட்டா, என்னோட அடுத்த பட ஹீரோயின்னுதான் சொல்லுவான். ஒரு படம் நல்லா இருந்தா, ஒருதடவை தியேட்டர்ல பாரு, அடுத்து டாரண்ட்ல நல்ல பிரிண்ட் வந்தவுடன் 10 தடவ பாரு. அதவிட்டுப்புட்டு, ‘’உங்கபடத்தை திருட்டு விசிடில பாக்குறது தப்பே இல்லடா?’’ என்று எதற்கு போஸ்ட்?, என்னமோ நேற்றுவரை எல்லா படத்தையும் தியேட்டர்ல போய் துட்டுகொடுத்து பார்த்தமாதிரி.

‘’தேரை இழுத்து தெருவில் விடுவது’’ என்று தமிழில் ஒரு சொல் உண்டு. நமக்கு கிடைத்த மற்றுமொரு அமிதாப் மாமாதான் கலெக்டர் சகாயம். நேர்மையான அதிகாரிக்கு சப்போர் செய்வதை விட்டுவிட்டு, எலக்சனில் நிக்கவைக்க ஒரு குரூப் கிளம்பி இருக்கு. அவர் எப்போது அரசியலுக்கு வருவதாக சொன்னார், இல்லை ஒரு அபிப்பிராயம் இருக்கிறது என்றாவது சொன்னாரா?.  அவர் அரசியலுக்கு வந்தால் எத்தனைபேர் தெருவில் இறங்கி அவருக்காக வேலை செய்வார்கள்? எவனும் செய்யமாட்டான். வேண்டுமென்றால் அவரைப் பற்றி பேஸ்புக்கில் பத்து போஸ்ட் போடுவான் அவ்வளவுதான். என்னமோ அரசியல் கட்சி ஆரம்பிக்கிறதுங்குறது அரிசி கடை ஆரம்பிக்கிற லெவலுக்கு போயிடுச்சு. இவனுங்க நம்பி சகாயம் அரசியலுக்கு வந்தால் ‘’நாம் பாட்டுக்கு ச்சேவனேன்னு தாண்டா இருந்தேன், யாரு வம்பு தும்புக்கும் போனேனா.......’’  என டிபாஸிட் போனபின்னாடி புலம்ப வேண்டியதுதான்.

சகாயம் அரசியல் வருவதை நான் எதிர்க்கவில்லை, ஆனால் அவர் யாரை நம்பி வரவேண்டும் என்பது ரொம்ப முக்கியம். பேஸ்புக்கில் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவனையா? அல்லது தெருவில் நின்று அநியாயத்திற்கு எதிராக போராடுபவனையா?. பேஸ்புக்கில் இப்போது அவருக்கு ஆதரவாக போஸ் போடுபவன் எல்லாம், நாளை அவர் அரசியலுக்கு வந்த பின்னாடி புதுசு புதுசா கேலி செய்து மீம்ஸ் போட ஆரம்பித்துவிடுவான். அவனுக்கு தேவை ஆயிரம் லைக். அவ்வளவே. 
   
சென்னையில் தண்ணீர் வற்றியவுடன் ‘’பிரே ஃபார் சென்னை’’ ‘’ஹெல்ப் ஃபார் சென்னை’’ புரபைலை மாற்றியாகிவிட்டது. ஆனால் கடலூர்?. நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டியதை பேசினோம், கடலூரில் சொந்த ஜாதிக்கு மட்டும் நிவாரண பொருட்களை புடிங்கிய, புடுங்கிகளைப் பற்றி ஏன் பேச மறுக்கிறோம்?. சென்னை இழப்பிற்கும், கடலூர் இழப்பிற்கும் நிறைய வேறுபாடு உண்டு. தண்ணீர் சூழ்ந்த நிலையை வைத்துக்கொண்டு, இரண்டும் ஒன்றே என்ற நிலைப்பாட்டை மாற்றவேண்டும். இந்த வெள்ளத்தில், சென்னை மக்களின் வாழ்க்கையில் சில இழப்புகள் உண்டு, அதை அவர்கள் (90% பேர்) இரண்டு, மூன்று மாதங்களில் சரிசெய்துவிடமுடியும். ஆனால் கடலூர் அப்படியல்ல, எல்லாமே விவசாயிகள், ஏழைகள், இந்த வெள்ளத்தில் அவர்களின் மொத்த வாழ்க்கையுமே இழப்பு. தயவுசெய்து கடலூர் மக்களின் குடிசை வெள்ளத்தில் சென்றதை, சென்னை மக்களின் டி.வி, பிரிட்ஜ் ரிப்பேர் ஆனதோடு ஒப்பிடாதீர்கள்.

பீப் சாங் வந்து வெள்ளம் பற்றிய செய்திகள் கடந்துபோனது, ஆகவே சிம்பு அவர்களே இதுவும் ஒரு நாள் கடந்துபோகும். இறுதியாக, மதிப்பும், மரியாதைக்கும் உரிய மாண்புமிகு புரட்சித்தலைவி, தங்கத்தாரமை அம்மாவின் ஆணைக்கினங்க முடித்துக்கொள்கிறேன்.


------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.