புதன், அக்டோபர் 19, 2011

தொலை பேசி முதல் கைபேசி வரை.....


நம் அணைவருக்கும் ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.....

கொஞ்சம், நேரம் கிடைக்கும்போதெல்லாம், பிளாக் எழுதலாம் என்று நினைத்து தான், பிளாக்கை நான் ஆரம்பித்தேன். ஆனால் நேரம் கிடைத்தால் மட்டும் போதாது, மனசும் நிம்மதியாகவும் இருக்கவேண்டும், என்பது கட்ந்த வாரங்களில், சொந்தங்களால் ஏற்பட்ட சில  கடுப்பான விஷயங்களால் அனுபவம் ஆனது.

சொந்தங்களினால் ஏற்பட்ட கசப்பை கொஞ்சம் மறந்து (முழுவதும் மறக்க கூடியது அல்ல) பிளாக்கில் அலப்பரையைத் தொடர என்னை நானே தயார் படுத்திக் கொண்டேன்.
சிலருக்கு சில பொருட்கள், செண்டிமெண்டலாக ஸ்பெஷலாக இருக்கும், அம்மா கொடுத்த செயின், காதலி கொடுத்த பேனா (ரூ 10க்கு உள்ள தான் இருக்கும்), அப்பா கொடுத்த வாட்ச், கணவன் கொடுத்த புடவை, காதலன் கொடுத்த மோதிரம் (நம்மாளுங்க எப்போதும் காஸ்ட்லி தான்) ...... இப்படி.

என்னுடைய செல்போன், எனக்கு அந்த மாதிரியான ஒரு செண்டிமெண்டான பொருள்.
எங்க அண்ணன் எனக்கு 2005ல் துபாயில் இருந்து, செகன்ட் ஹேன்டாக எனக்கு வாங்கி வந்தது கொடுத்த்து. இதுவறைக்கும் ஆச்சு, அது என்ன மாடல்னு கூட எனக்கு தெரியாது (இப்ப மார்கெட்ல இருக்குதான்னு கூட தெரியல).

கடந்த 7 வருஷமா நான் கொண்டடிய சந்தோசமான நிகழ்வுகளயும் சரி, அழுது புரன்ட துன்பமான விஷயங்களையும் சரி, எனக்கு கொண்டுவந்து சேர்த்த ஒரு உயிரில்லா உயிர்.
சர்வீசுக்குன்னு இதுவரை கொடுத்தது இல்லை, பல முறை தவறிவிழுந்த போதும், தண்ணியில பேன்டை முக்கிவைத்திருந்த போதும்.... ஒரு நாள், ரெஸ்ட் எடுத்துவிட்டு, அடுத்த நாள் கைக்கு வ்ந்துவிடும்.

ரொம்ப பேரு “என்ன இந்த மொபைல வைத்திருக்கிறாய்ன்னு சொன்னபோதும் கூட, மாற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்ததே இல்ல. ஆன ஒரு 6 மாசத்திற்கு முன்பு, எதிர் முனையில் இருந்து வரும் சப்தம் சரியாக கேட்கவில்லை என்று கூறி, என் அப்பாவிடம் கொடுத்துவிட்டேன். ஒரு மாதத்திற்கு பிறகு, சரி செய்துவிட்டேன்னு சொல்லி, நான் கேக்காமலே என் அப்பா அதை திரும்ப அனுப்பிவிட்டார்.

உண்மைய சொல்லனும்னா, அந்த இடைப் பட்ட காலத்தில் நான் உபயோகம் செய்த போனில் இருந்து நல்ல விஷம் ஒன்னு கூட வரல. அந்த நேரத்துல இந்த பழய மொபைல் வர, ஏதோ பிரிந்த நண்பர்கள் மீண்டும் சந்தித்துக் கொண்ட மாதிரியான ஒரு சந்தோஷம் (ஸ்ஸ்சுரேஷ்.......டேய் ரமேஷ்....)

2005ல் என்னுடன் இருந்த சக நண்பரிகளிடம் யாரிடமும் கலர் மொபைல் இல்லை, என்னுடையது தான் கலர் மொபைல் என்ற எகத்தாலத்துல நடந்து திரிந்த நாட்களும் உண்டு.

புது செல்போன் வாங்கும் ஆசை இல்லாவிட்டாலும், வீட்டில் உள்ளவர்களை கடுப்பேத்தனும் என்ற சால சிரந்த நோக்கத்துடன், “இத வித்துட்டு (எவனும் வாங்க மாட்டான், அது வேற விஷயம்) புது செல்லு வாங்கனும்னு சொல்லி வாய் மூடுவதற்கு முன்னாடியே, சொல்லி வச்சது மாதிறி எங்கப்பா ஆரம்பிப்பாங்க “அந்த காலத்துல எல்லாம்........ அய்யோயோ போதும் என்ற சொல்லவே தோனாது. சொல்லுர விஷயங்களும் ரொம்ப சுவாரஸ்யமானதாக இருக்கும்.

எங்க தாத்தா காலத்தில் இருந்து, எங்களுக்கு வெங்காய வியாபாரம் தான். கேரளாவிற்கு வெங்காயம் அனுப்பி வியாபாரம் நட்ந்தது. அனுப்பின மூட்டை சேர்ந்த்தா, வேரு ஏதாவது ஆர்டர் இருக்கான்னு எல்லாம் போன் பண்ணித்தான் கேட்டாக வேண்டும். அப்படி போன் பண்ண வேண்டும் என்றால் போஸ்ட் ஆபிசுக்கு போயித்தான் “ட்ரங்க் கால் பண்ணி பேசனும்.

இந்த ட்ரங்க் கால் என்பது முதலில் நம்பரை, கொடுத்துவிட்டு, அடுத்த லைனுக்கு கனெக்ஷ்ன் கொடுக்கும் வரை காத்திருந்து பேசும் முறை. சில சமயங்களில் கனெக்ஷ்ன் கொடுக்க ரொம்ப நேரம் கூட எடுத்துக்குமாம். இரவு எல்லாம் விழித்திருந்த கதை கூட உண்டாம். அப்படியே கிடைத்தாலும், விஷயத்தை ரத்தின சுருக்கமாக சொல்லிவிட வேண்டும், இல்லை என்றால் பைசா போய்விடுமாம்.

நான் சின்ன வயசாக இருக்கும் போது, எங்க ஏரியாவில் 10, 15 தெருவில், எங்க வீட்டில் மட்டும் தான் போன் இருந்தது (அதே வெங்காய வியாபாரத்திற்காக).அந்த 15 தெருவில் உள்ளவர்களுக்கு, வெளி-நாட்டில் இருப்பவர்கள் (எங்க ஊரில் அதிக அளவு, வெளி-நாடுகளில் வேலை செய்பவர்களே) எங்க வீட்டிற்கு தான் போன் செய்து பேசுவார்கள். அரை மணி நேரத்திற்கு முன்பாகவே போன் செய்து, நான் இந்த வீட்டு பையன், எங்க அம்மாவிடம் பேசவேண்டும் என்று சொல்லிவிடுவார். அந்த தகவல் என் மூலமாகவோ, இல்லை என் அண்ணன் மூலமாகவோ அங்கு சொல்லியனுப்பும். நாங்க சொல்லிவிட்டு, வீட்டுக்கு வருவதற்கு முன்பாகவே, சொந்தங்கள் புடை சூழ வீடு நிறைந்திருக்கும்.

யாருக்கு போன் வந்திருக்கு என்று கூட கேக்காமல், ரிங்க் வந்தவுடனையே எடுத்து ‘ஹலோ எத்தா மைதீன் எப்படிமா இருக்க, உடம்பு எப்படி இருக்கு....... என்று கேட்டு விட்டு, எதிர் முனையில் “அசனப்பா அண்ணாச்சி இல்லையா, அவருகிட்ட கொஞ்சம் போன் குடுங்கன்னு எங்கப்பா பெயரை சொன்னதுக்கப்புறம் தான் தனக்கான போன் இல்லை என்பதே தெரியும் அவர்களுக்கு. எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் வீட்டில் 5 பேருமே துபாயில் இருந்தார்க்கள். அவங்க அப்பா ரொம்ப வயசான ஆள், ஒரு முறை எடுத்து 5 நிமிடமா, ஹெலோ, ஹெலோன்னு சொல்லிக்கிட்டே இருந்தாரு, என்னவென்று பார்த்தால் காதுக்கு பதிலாக வாயிக்கும், வாயில் வைப்பதை காதிலும் வைத்துப் பேசிக் கொண்டிருந்தார் பாவம்.

வெள்ளிக் கிழமை இரவுகளில் எங்க வீட்டில், வெளி நாட்டு போன் காலுக்காக ஏகப்பட்ட மக்கள் காத்திருக்கும். “சம்பளம் அதிகமாக கிடைத்திருக்கிறது என்று சொன்னால், மாஷா அல்லாஹ், மாஷா அல்லாஹ் என்றும், “வேலை ரொம்ப கஷ்ட்டம், உடம்பு எல்லாம் ஒரே வலி என்று சொல்லிவிட்டால், யா அல்லாஹ் ஏன் எம்புள்ளய இப்படி சோதிக்க, யா ரகுமானே ன்னு அவருடைய அம்மா, அக்கா முதல் தங்கச்சி பையன் வரை ஒரே அழுகையாக இருக்கும்.
இந்த மாதிரியான அழுகையை கேட்டு எங்கப்பா “நம்ம புள்ளைங்கள வெளி நாட்டுக்கே அனுப்ப கூடாதுன்னு நெனச்சேன், ஆனா அது முடியல ன்னு வருத்தமா சொன்னது இன்னும் எனக்கு நினைவிலேயே இருக்கு.

அந்த 5 நிமிட பேச்சில் “உடம்ப நல்லா பார்துக்கோ என்ற வார்த்தை மட்டும் சுமார் 20 முறைக்கு மேலாக, இரண்டு பக்கத்தில் இருந்தும் வரும். 

முதல் முதலாக எனக்கு நினைவு தெரிந்து, எங்கள் வீட்டில், ஒரு கருப்பு நிற, நம்பரை சுற்றும் வகை டெலிபோன் தான் இருந்தது. ரிப்பேர் ஆகிவிட்டால், பட்டன் டைப்  புது டெலிபோன் கிடைக்கும் என்று பல தில்லாலங்கடி வேலை எல்லாம் செய்ததுண்டு.

B.E முடித்துவிட்டு வேலை தேடி சென்னை சென்ற போது, பஸ்ஸிலேயே என் மொபைல் போனை ஆட்டயப்போட்டுட்டானுங்க, இந்த ஒரே காரணத்துக்காகவே எனக்கு இன்னைக்கு வரைக்கும் சென்னையை பிடிக்காது. அது தான் என்னுடையா முதல் செல் போனாக இருந்தது.

நான் 2008ல் துபாய் வந்த போது, எனக்கு முன்னால் சுமார் 12 வருடங்கள் முன்பு வந்த எனது மாமி மகன், என் அண்ணன் எல்லோரும் துபாய் பற்றி சொன்ன விசயங்களில், டெலிபோன் ரொம்ப முக்கியமானது. வெள்ளிக் கிழமை லீவு என்பதால், அன்று தான் ஊருக்கு போன் செய்ய நேரம் இருக்கும், ஆனால் அதற்காக நீண்ட தூரம் இருக்கும் வரிசையில் நிற்க வேண்டியிருக்குமாம். 10 நிமிட்த்திற்கு மேல் பேசினால் பின்னாடி இருக்கும் நபர் “பாய் கொஞ்சம் சீக்கிரம், அவசரமா வீட்டுக்கு பேசனும்னு தொல்லை வேற. செல் போன் வந்த பிறகு அந்த போன்.கள் எல்லாம் அனாதையாக நடு ரோட்டில் நின்று கொண்டுதான் இருக்கின்றன. ஒரு முறை நடந்து செல்லும் போது என்னயும் அறியாமல், அந்த போன் பாக்ஸில் முட்டிக் கொண்ட போதும் ஏனோ கோவப்பட தோனவேயில்லை. தலையை மட்டும் சிரு புன்னகையுடன் தடவிக் கொண்டே கிளம்பிவிட்டேன்.

இன்றய நிலவரப் படி, செல்போன் வைத்திருப்பவர்களில் 5ல் ஒருவர் இந்தியராம். இன்னும் கொஞ்ச வருடம் விட்டு பார்த்தால், இந்தியாவில் செல்போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை, அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்குமாம்.

பெருமை கொள்ளுவோம் செல்போன் வைத்திருக்கும் இந்தியன் என்று.

நம் முன்னோர்கள் பட்ட கஷ்ட்டத்தை, நமக்கு கொடுத்திடாத செல்போனை, அதன் பெயர் கெட்டிறாத அளவிற்கு நல்ல விசயங்களுக்கு பயன்படுத்தி, பயனடைவோம்.


வாழ்க வளமுடன்.
--------------------------------------------------------------------------யாஸிர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக