ஞாயிறு, டிசம்பர் 25, 2011

டாக்டர்........ 1 4 3

நம் அனைவரின் மீதும் ஆண்டவனின், சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
நான் 5ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, எனக்கு அடிக்கடி தலைவலி வருகின்றது என்பதை அறிந்து எங்கப்பாவிற்கு பெரிய தலைவலியாகப் போச்சு. சரின்னு பொது நல மருத்துவரிடம் காட்டி எல்லா பரிசோதனைகளும் செய்த பின்பு, அவருக்கு எதுவும் தப்பாக புலப்படாததால், என்னை கண் மருத்துவரிடம் காட்ட சிபாரிசு செய்தார். மருத்துவரின் சிபாரிசின் பேரில், திருநெல்வேலியில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சென்றோம். கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும், இடைவெளியில்லாமல், கண்ணுல ஆராய்ச்சி நடந்தது. என் கண்ணை வைத்து அங்குள்ள எல்லா ஜுனியர் டாக்டர்களுக்கும் பாடம் நடத்திவிட்டார்கள். ஒரு அடிம சிக்கினா விடுவாங்களா (சிக்கிய அடிமை மிகவும் திரைமைசாலி வேறு), பரிசோதனை இன்னும் முடியல, தம்பிய கூட்டிகிட்டு அடுத்தவாரம் வாங்கன்னு சொல்லியனுப்பினாங்க.

ஒருவாரம் விட்டு மறுபடியும் ஆராய்ச்சி கூடத்துல சிக்கின எலி மாதிரி, பரிசோதனைங்கிற பேருல, எனக்கு பெரிய சோதனையே நடந்துச்சு. எங்கப்பா நான் பிறந்த தினத்தில், வார்டுக்கு வெளியே கையைப் பிசைந்து கொண்டிருந்தது போன்ற ஒரு சீன் அங்கும் ரிப்பீட் ஆச்சு. ஒரு வழியா சாய்ங்காலமா எங்கப்பாவை உள்ள கூப்பிட்டு ‘உங்க பையனுக்கு ‘லேசி ஐ. அதாவது ஒரு கண்ணுல கொஞ்சம் பார்வை கம்மியாக இருக்குன்னு சொல்ல எங்கப்பாவுக்கு மிகப் பெரிய கவலையாகிவிட்டது.

ஏதாவது ஒரு கண்ண பொத்தியோ, அல்லது மூடியோ பார்க்கும் போது, அந்த கண், தற்செயலாகவே அதனுடைய பார்வையை இழக்கின்றது. டி.வி பார்க்கும் போதோ, அல்லது தொலைவில் உள்ளவரை பார்க்கும் போதோ, நீங்க கவனிச்சிங்கினா தெரியும், உங்க பையன் இடது கண்ண சுருக்கி, வலது கண்ண அகலமாக விரித்து பார்பான். இந்த மாதிரியான செயலால் தான் “லேசி ஐ உருவாகின்றது என்று சொல்லிமுடிக்க, எங்கப்பாவால தாங்கவே முடியல.

அப்ப இதுக்கு எதுவும் செய்யமுடியாதா டாக்டர்னு........ எங்கப்பா கேட்பதற்கு முன்பாகவே, ஒரு பச்சை நிற கண் திரை ஒன்றை காண்பித்து, இதன் மூலமாக வலது கண்ணை மறைத்து, இடது கண் மூலமாக கொஞ்ச காலம் பார்க்க்வைத்தால், அதன் பார்வை மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும் என்று சொன்னார். அந்த திரை கிட்டத்தட்ட அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்த ஒரு பாடலுக்கு அணிந்து வருவது போலவே இருக்கும்.

ஒரு நாள் ரெஸ்ட் கொடுத்துவிட்டு, அந்த திரையை மாட்டிக் கொண்டு பள்ளிக்கு, என்னை எங்கப்பா கூட்டிக்கொண்டு வந்தார்கள். வாத்தியாரிடம் நடந்ததை எல்லாம் சொல்லி, விட்டுவிட்டு போக, பள்ளிக் கூடத்துல ஏக மரியாதை நமக்கு. அதற்கு முன் எவனும் தன்னுடைய பெஞ்சில் இடம் தரமாட்டனுங்க, ஆனா திரையை கண்ணுல மாட்டிவிட்ட பின்பு, இங்க உக்காரு, பக்கதுல உக்காருன்னு ஏகத்துக்கு அன்பை, அண்டா, அண்டாவாக கொட்டினார்கள் நண்பர்கள்.

புதுப் பொண்டாட்டி கொஞ்ச நாளைக்குத்தான் அழகா இருப்பாங்கிறது மாதிரி, ஒரு வாரத்துக்கு நல்லாப் போகிக்கொண்டிருந்தது, அதற்கு பின்பு, அந்த திரை என் கண்களை அழுத்த கண்ணீர், கண்ணீராக வர ஆரம்பித்தது. மேலும் மற்ற வகுப்பு மாணவர்கள் எல்லோரும் என்னை ஒத்தக் கண் சிவராசன்னு கேலி பண்ண, என்னால அத தொடர்ந்து போடமுடியல. ஒத்தக் கண்ணன்னு சொன்ன மற்ற வகுப்பு மாணவர்களை என் வகுப்பு தோழர்கள் எனக்கு ஆதரவாக அடிக்க ஆரம்பிக்க ஒரு வகுப்பு கலவரமே நடந்தது. இனி இதை போடமாட்டேன்னு சொன்னா, எங்கப்பா முதுகுல போடுருவாங்களேன்னு எண்ணி, பள்ளிக்கு வரும் போது வீட்டில் வைத்து மாட்டிவிட்டு, பள்ளிக்கு வந்த பின்பு கழட்டி வைத்துவிடுவேன். லீவு தேவைன்னா உடனே எடுத்து மாட்டிக் கொண்டு, கண்ணீரை வேண்டுமென்றே வரவழைத்துக் கொண்டு, வாத்தியாரிடம் போய் ‘சார் கண்ணு ரொம்ம்ம்ம்ம்ம்ப வலிக்குதுன்னு சொன்னா, நம்ம துணைக்கு ஒரு பையனையும் அனுப்பி வைப்பார். சில சமயம் நண்பனுக்கு லீவு வேண்டும் என்பதற்காகவும் ஆக்டிங் செய்ததுண்டு.
இரண்டு மாதத்திற்கு ஒரு முறை செக்கிங்கிற்காக செல்லவேண்டும். ஒரு கண்ணை மூடிவிட்டு போர்டில் உள்ள ஆங்கில எழுத்துக்களை படிக்கவைப்பார்கள். ஒவ்வொரு வரியும் போக, போக சிறிது, சிறிதாக இருக்கும். முதலில் வலது கண், இந்த கண்ணில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லாததால் கடைசியாக இருக்கும் சின்ன எழுத்துக்கள் வரை படிக்க முடியும். அடுத்து இடது கண், இதுல முதலாவதாக இருக்கும் பெரிய எழுத்தே, கொஞ்சம் மங்கலாகத்தான் தெரியும். அடுத்த வரியில் உள்ளது, ஏதோ இருப்பது போல தெரியும் என்றால் பின்வரும் எழுத்துக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். நாம தான் அந்த கண் திரையை பயன்படுத்தவேயில்லையே, இதுல எங்க இம்புருமண்ட் ஆகுறதுக்கு. ஆனா, உண்மையைச் சொன்னம்னா, வேறு ஏதாவது டெரர்ரான்ன ஐ.டியாவ குடுத்துடுவாங்களோன்னு பயந்து, இம்புருமண்ட் இருக்குன்னு காட்ட, வலது கண்ணால படிக்கின்ற சமயத்தில், முதல் இரண்டு வரியில் உள்ள எழுத்துக்களை மனப்பாடம் செய்து வைத்துக்கொள்வேன், இடது கண்ணால் வாசிக்கச் சொல்லும் போது, மனப்பாடம் செய்துவைத்ததை அப்படியே ஒப்பித்து விடுவேன் (வாட்ட ஐடியா சேட்ஜி.........)

பிறகு என்ன, உங்க பையனுக்கு நல்லா இம்புருமண்ட் ஆகியிருக்குன்னு, டாக்டர் எங்கப்பாவிடம் சொல்ல, அன்னைக்கு திருநெல்வேலியில், இருட்டுக் கடை அல்வாதான்.........., நியாஸ் ஹோட்டலில் சாப்பாடுதான்............... கலகட்டும்.

இப்படியா, இரண்டு, தடவை டிமிக்கு கொடுத்துகொண்டிருந்தேன். பல நாள் திருடன், ஒரு நாள் அகப்படுவான் என்பது போல 3வது செக்கிங்கில் மாட்டியாச்சு!!!!!. எப்போதும் போல முதலில் வலது கண்ணால் படிக்கச் சொல்ல, A, K, J, K, N, O, Z, J, I, K, V, O, P, Q, W, X, R ……ன்னு அய்யா ஷேக்ஸ்பியர் பேரன் மாதிரி, பொழந்துகட்ட. இப்ப இடது கண்ணால படிங்கன்னு சொல்லிக்கிட்டே டாக்டரம்மா போர்டை, நம்பர் இருக்கும் பக்கம் திருப்ப, செத்தடா செல்லக்குட்டின்னு நினைத்துக்கொண்டு,

7......... .............. ..1...........................................8..........................................ன்னு இழுக்க,

ம்ம்ம் சொல்லு தம்பி அடுத்து என்ன தெரியுது? இது டாக்டர்.

டாக்டர்........ 1 4 3 ன்னு நான் சொல்ல,

தம்பி, இப்படி போர்டுல இல்லாததை எல்லாம் வாய்க்கு வந்த படி சொல்லக் கூடாதுண்ணு சொல்லிவிட்டு,

முதல் லைன்ல இரண்டாவது நம்பர் என்ன?

4லா?

நான் உங்கிட்ட கேட்டா நீ, எங்கிட்ட கேக்குற?

சரி, 5 வது லைன்ல, முதல் நம்பர் என்ன?

5 வது லைன்னா..........., அது எங்க இருக்கு? நான் பாவமாக கேட்க,

இத கேட்ட டாக்டருக்கு கிருகிருன்னு வந்திருச்சு.சரி, இதுக்கு மேல உண்மையை மறைக்க கூடாதுண்ணு, ஒன்னுமே தெரியலன்னு சொல்லிவிட்டேன். ஆக அன்னைக்கு அல்வாவும், புரோட்டாவும் கட்டு.

பிறகு, காலம் மாற, மாற இப்போது கண்ணாடியில் வந்து நிக்குது. இந்த வார குமுதம் ரிப்போட்டரில் இதைப்பற்றிய ஒரு கட்டுரையைப் படித்த போது எனக்கு இந்த ஞாபகம் எல்லாம் வந்தது. அதில் அவர்கள் சொல்லிய குணப்படுத்தும் முறைகள் யாவும் நான் செய்துபார்த்தது. கணக்கெடுப்பின் படி, நூற்றில் ஒருவருக்கு இந்த குறைபாடு இருப்பதாக தெரிவிக்கின்றது.

ஆக நான், உங்களைப் போன்று சாதாரணமானவன் அல்ல, நூற்றில் ஒருவன்.

----------------------------------அனைவருக்கும் கிரிஸ்மஸ் வாழ்த்துக்கள்-யாஸிர்.

2 கருத்துகள்:

  1. ஓர் உண்மை சம்பவத்தை சொல்லி( எழுதி)ய விதம் நகைச்சுவையாயிருந்தது.

    பதிலளிநீக்கு
  2. நன்றி சகோதரர் நிஜாமுதீன் அவர்களுக்கு,

    நகைச்சுவையால் பின்னப்பட்டதுதான் வாழ்க்கை. நான் எழுதிட்டேன் நீங்க எழுதல அவ்வளவுதான் வித்தியாசம்.

    பதிலளிநீக்கு