திங்கள், ஜனவரி 09, 2012

ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்.....


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
காதர் மொகையதீன் குத்பா பள்ளி (பேட்டை ஜமாத்)
ஒவ்வொரு வருசம் ஆரம்பிக்கும் போதும், நான் ஏதாவது ஒரு உறுதிமொழி எடுப்பதுண்டு. பொய் பேசக்கூடாது, நகம் கடிக்க கூடாது, அடுத்தவன் புண்படும் படி காமெடி பண்ணக்கூடாது..... இப்படியா இருந்தது என்னுடைய உறுதிமொழிகள். பெரும்பாலும் அனைவரைப் போலவே, நானும் பின்பற்றுவது இல்லைதான், ஆனால் முதல் மூன்று மாதங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு கடைபிடித்துவிடுவேன்.

வெறும் மூன்று மாதத்திற்கு மட்டும், எதற்கு உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டும் என்று எரிச்சப்பட்டு, இந்த ஆண்டு எதுவும் எடுக்கவில்லை. பெரும்பாலான உறுதிமொழிகளுக்கு உடனடியாக சங்கு ஊதப்பட்டாலும், நகம் கடிக்க கூடாதுன்னு நான் எடுத்த உறுதிமொழி மட்டும் இன்னும் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றேன் (சில நேரங்களில் மாறுதலுக்குட்பட்டது). டைரி எழுதவேண்டும் என்று எடுத்துக் கொண்ட உறுதிமொழி 4 மாதங்களாக தொடர்ந்தது, அதற்கு பின்பு அதுவும் பெப்பே ஆகிவிட்டது.
ஆனால் எடுத்த உறுதிமொழியை ஒரு நாள் கூட கடைப்பிடிக்காமல், ராஜபாட்டை படம் மாதிரி அட்டர் பிளாப் ஆனது 2007ல் எடுத்த உறுதிமொழிதான். சின்ன வயதில் குர்ஆன் ஓதியது மறந்துவிட்டபடியால், மீண்டும் அதற்கு முயற்சி செய்து, ஓதவேண்டும் என்றாக இருந்தது அந்த உறுதிமொழி.

எங்க ஜமாத்தை சேர்ந்த பள்ளிவாசலில் இலவசமாகவே ஓதல் சொல்லிக்கொடுக்கப்பட்டது. நான் 6ம் வகுப்பு வரை என்னுடய சொந்த ஊரில் படித்தபோது, வாரத்தில் வெள்ளிக்கிழமை தவிர, மற்ற நாட்களில் காலை 6.00 முதல் 7.00 பள்ளிவாசலுக்கு ஓத செல்வதுண்டு, இரவு 7.00 முதல் 8.00 வரையும் ஓதல் இருந்தது, ஆனால் நான் காலையில் மட்டும்தான் சென்றதுண்டு. பள்ளிக்கூடத்து வாத்தியாருக்கு பயப்படக்கூடியதை விட அதிகமாக ஓதல் சொல்லிக் கொடுக்கும் அசரத்துகளுக்குத்தான் அப்ப அதிகளவு பயம் இருக்கும். தமிழில் ழ, ள, ல, எழுத்துக்களுக்கு எப்படி உச்சரிப்பு மாறுபடுமோ அதே போல அரபி எழுத்துக்களிலும் உண்டு, காஃப், ஹே, ஃகே,.... எல்லாத்தையும் சரியாக உச்சரிக்கலைனா, பிரம்பால், முதுகில் உலக மேப்பே வரைந்துவிடுவார்கள்.

அங்கும் பள்ளிக் கூடங்கள் மாதிரியே, அ, ஆ, இ, ஈ பிரிவுகளும் உண்டு, கிட்டத்தட்ட, ஒரு பத்து அசரத்தாவது இருப்பார்கள், ஒரு அசரத்துக்கு குறைந்த்து 25 பேரு வீதமாக, 250 பேர் ஓதுவார்கள். பெரும்பாலான அசரத்துகளின் பெயர்கள் எங்களுக்கு தெரியாது, அவர்களின் வீட்டு பேயரைச் சொல்லியே அழைப்பதுண்டு. ஊசிமண்ட அசரத்து, புளிக்காரர் அசரத்து, உப்புக் கண்ட அசரத், லெப்ப அசரத்துண்ணு லிஸ்டு நீளும். எனக்கு தெரிந்து சொந்த பெயரில் அழைத்த அசரத்துன்னா அது அப்துல் அசரத்துதான். அவரிடம் தான் நான் ஓதினேன். இன்னும் அவர் எங்கள் தெரிவில் நடந்து வந்தாலும், ஒரு பயம் கலந்த மரியாதை இருக்கும்.

காய்தா குர்ஆன், எஸென்யே குர்ஆன், 5 ஜுஸ், 30ம் ஜுஸ்ன்னு, குரானை அடிப்படையில் இருந்து ஓத சொல்லிக்கொடுப்பார்கள். பெரும்பாலும் ஓதலுக்கு யாருமே கட் அடிக்கமாட்டார்கள், காரணம் நண்பர்களுக்குள் உள்ள போட்டி மனப்பான்மை தான். முதலில் நமக்கு நாமே, ஓதிப் பார்த்துவிட்டு, அசரத் முன்பு தனியாக, குரானைப் பார்த்து ஓதிக்காட்டவேண்டும். பெரும்பாலும் 2 பக்கம் அல்லது 3 பக்கம் ஓதிக்காட்டும் படியாக இருக்கும். என் செட்டு பசங்க எல்லோரும், ஒரே நாளில் தான் ஓதல் ஆரம்பிப்போம், ஏதாவது ஒரு நாள் போகவில்லை என்றால், நம்மை விட அவன் அதிக பக்கம் ஓதிவிட்டு அடுத்த லெவல் குர்ஆன் ஆரம்பித்துவிடுவான் என்ற எண்ணம் காரணமாகவே யாரும் ஓதலுக்கு கட் அடிப்பதில்லை. சில சமயங்களில் அசரத்துக்கு நேரம் இல்லை என்றால், ஏதாவது சீனியரிடம், “ஒரு பத்து பேரிடம் நீ பாடம் கேட்டுவிடு என்று சொல்லிவிட்டு செல்வார்.

அந்த நேரத்திற்காக காத்திருந்தவர்கள் போல, நான், நீன்னு ஒரே போட்டியாக இருக்கும். இந்த மாதிரி சான்ஸ், அதிகமா கிடைக்காது, இதுக்கு இரண்டு காரணம், ஒன்னு அசரத் மாதிரி இவர் அடிக்க மாட்டார், திருத்தி சொல்லுவதோட சரி. மற்றொன்று “அண்ணே ப்பிளீஸ், ப்பிளீஸ்ன்னு சொல்லி கூட இரண்டு பக்கம் ஓதி காட்டிவிடலாம்.
30ம் ஜுஸ் என்பது தான் முழு குரான். இது ஆரம்பிக்கும் அன்று சிலர், புது டிரஸ் போட்டு வருவார்கள், சிலர் சாக்லெட் கொடுப்பார்கள். நம்ம செட்டு பசங்க யாராவது நமக்கு முன்னாடியே 30 ஜுஸு தொடங்கிவிட்டால் அவ்வளவு தான், “இவன் அசரத்துகிட்ட பாடம் கொடுக்கலடா, அந்த அண்ணங்கிட்ட பாடம் கொடுத்துட்டு இப்படி வேகமா 30 ஜுஸிக்கு வந்திட்டான்னு பொறாமையில் பொங்குறதுண்டு. சில சமயங்களில் நாமும் 30ஜுஸுக்கு போகவேண்டும் என்று எண்ணி, சில பல பக்கங்களை அசரத்து, அசந்த நேரமா பாத்து திருப்பிவிடுவது எல்லாம் நடக்கும்.

செட்டு சேர்த்துக் கொண்டுதான் ஓதல் போவோம், போகின்ற வழியில் கடலை சாப்பிடுவது, மிட்டாய் வாங்குவது  என்று ஒரே கல கலப்பாகத்தான் இருக்கும். பெரும்பாலும் நிலக்கடலைதான் வாங்குவோம், ஏன்னா மற்ற மிட்டாய் வாங்கினால் நண்பர்களுக்கு பிரித்து கொடுப்பது கஷ்டம், இதுன்னா ஆளுக்கு கொஞ்சம், கொஞ்சம், இல்லனா எண்ணிக்கையிலும் கொடுப்பதற்கு ஏதுவாக இருக்கும். இப்படியா பிரிச்சு கொடுக்கும் போது, கொஞ்சம் கடலை கீழே விழுந்துவிட்டால், எடுக்கவும் மனசு வராது, விடவும் மனசு வராது, உடனே நண்பன் சொல்லுவான் “விடுடா அது அல்லாஹ்விற்கு என்று. ஆக அப்பவே அல்லாஹ்விற்கு அன்னதானம் வழங்கியவர்கள் நாங்கள்.

காலம் மாற, மாற எல்லாம் பக்கத்து ஊரு ஆங்கில பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்துவிட்டதால், ஆங்கில மோகத்தினால், ஓதல் அப்படியே நின்றுவிட்டது இந்த காலங்களில். ஆனாலும் இப்போதும், கோடை விடுமுறை, தேர்வு விடுமுறை, வார விடுமுறை நாட்களில் சில பள்ளிவாசல்களில் ஓதல் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தாலும், அப்போதிருந்த உற்சாகமும், கூட்டம் இப்போது இல்லை.

7ம் வகுப்பில் இருந்து அரபி மொழியில் குர்ஆன் ஓதுவதை விட்டுவிட்டபடியால், மீண்டும் ஓதவேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது, பார்கலாம் இந்த வருடத்திலாவது நடக்குமா என்று நம்பிக்கையோடு.

-----------------------------------------------------------------------யாஸிர்.

2 கருத்துகள்: