நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
சின்னவயதில் “நீ பெரியவன் ஆனதும் என்னவாக ஆகப்போகிறாய்?” என்ற கேள்விக்கு,
“கூடங்குளம் என்னைக்கு சார் ஓப்பன்னாகும்?” என்ற கேள்வியை கேட்டுமுடிப்பதற்குள்,
நம்ம அமைச்சர் நாராயணசாமி எப்படி “இன்னும் 15 நாளில்” என்ற பதிலைச் சொல்லுவாரோ அது
மாதிரித்தான் நானும் “டாக்டர் ஆவேன்” னு சொல்லுவேன். எங்க ஊருக்காரனுங்க, எனக்கு
முன்னாடியே கடையநல்லூரை கண்ணால பார்த்தவனுங்க, குரங்கு ரத்தம் குடிச்சா குசும்பு
கூடும்னு, குற்றாலத்துல கூடராம் போட்டவனுங்க எப்படி இருப்பானுங்க. சின்னப்பயன்னு
கூட பாராமல். “டாக்டர்னா எம்.பி.பி.எஸா?, இல்ல பிசியோதெரபியா, இல்ல பி.டி.எஸா?
இல்லன்னா சித்தாவா?” என்று அடுத்த கேள்விகேட்க, நம்ம பதில், “ஙே”.
இனிமே எவன் கேட்டாலும் டாக்டர்னு சொல்லக்கூடாதுன்னு உறுதிமொழி
எடுத்துக்கிட்டேன். இப்படித்தான் என் டாக்டர் கனவு காணாம போச்சு, (இதுக்கு இந்த
சமுதாயம் பதில் சொல்லியே தீரணும்). டாக்டர் இல்லன்னா வேற என்னதான் சொல்லுறது,
“இஞ்சினியர்” எஸ் இனிமே என்ன ஆகப்போறன்னு எவனாவது கேட்டா “இஞ்சினியர் ஆவப்போறன்லே”
ன்னு சொல்லனும். “இஞ்சினியர்ல என்ன இஞ்சினியர்னு” கேட்டா?. “அது என்ன கேட்டா,
கண்டிப்பா கேட்பானுங்க (மைண்ட் வாய்ஸ்). அப்போ எங்க மாம ஒருத்தரு இஞ்சினியர்
படிச்சியிருந்தாரு. எங்க அப்பாக்கிட்ட போயி மாமா என்ன இஞ்சினியர்னு
கேட்டுவச்சிக்கிட்டேன். அதிலிருந்து எவன் கேட்டாலும் “நான் இஞ்சினியர் ஆகப்போறேன்”
என்று சொல்லி அடுத்த கேள்வியை எதிர்பார்த்து காத்திருப்பேன். அப்படி அவன்
கேட்கலைன்னா “என்ன இஞ்சினியர்னு கேளுங்க?” ன்னு நானா கேட்கச்சொல்லி “இஞ்சினியர்,
சிவில் இஞ்சினியர்” ந்னு பாண்ட், ஜேம்ஸ் பாண்ட் ரேஞ்ச்சுக்கு சொல்லி ஸ்லோமோசன்ல
ஒரு நடையப்போடுறது. இதுதான் நான் சிவில் இஞ்சினியர் ஆன கதை. “சே! இவன் டாக்டர்
ஆகியிருந்தா நமக்கெல்லாம் இலவசமா வைத்தியம் பார்த்திருப்பான், நாம நோய்
நொடியில்லாம 100 வயசுவரை பள்ளிவாசல்ல இருந்துகிட்டு புறம்பேசியிருந்திருக்கலாம்.
ம்ம்ம் இப்படி முடியாம போச்சே.......................”ன்னு எங்க ஊருக்காரனுங்க
இப்ப வருத்தப்படுறதா ஒரு கேள்வி.
டாக்டர்ல ஆரம்பிச்சு, இஞ்சினியர், சாரி சிவில் இஞ்சினியர் ஆகுற இடைப்பட்ட
காலங்களில் அப்படியாகனும், இப்படியாகனும்னு மனசு மரத்துக்கு மரம் தாவுச்சு,
அதுதான் “அஸ் பாலோஸ் பிலோ”.
கிரிக்கெட் விளையாட ஒன்னு, ரெண்டு பேருக்கு பஞ்சம் வந்துச்சுன்னா, “அப்படி
பார்த்தா அசாருதீன், இப்படி பார்த்த இம்ரான் கான், படுத்துக்கிட்டு பார்த்தா
பட்டோடி, கவுந்து பார்த்தா காம்ளி மாதிரி இருக்கன்னு” ஐஸ்பேக்டிரியையே தலையில
தூக்கிவச்சி நம்மள இஸ்த்துக்குன்னு போவானுங்க. அப்படி விளையாடும் போது ஏதாவது ஒரு
மேச்சுல 10 ரன்னுக்கு மேல எடுத்துட்டா. போச்சு.... போச்சு..... அன்னைக்கு கனவுல
கபில்தேவே எங்க வீட்டுக்கே வந்து எங்கப்பா கால்ல விழுந்து, “இந்திய மானத்த உங்கபையன
அனுப்பிவச்சு நீங்கதான் காப்பாத்தனும்னு” கதறி அழுவாறு. சரி இனிமே நம்ம பாதை
கிரிகெட், கிரிகெட், கிரிகெட்டுத்தான்னு சபதம் எடுத்து பேட்டோட இறங்கின
அடுத்தடுத்த மேட்சுகளில் ரன் 2, 1, 3.5, 2.25, 1.75 வாகத்தான் இருக்கும்.
இருந்தாலும்
கிரிக்கெட்ட விட மனசு வரல. சச்சின் டெண்டுல்கர் இல்லன்னா ஜவகல் ஸ்ரீநாத்ன்னு
முடிவுபண்ணி, பவுலிங்கில் பவரக்காட்டனும்னு வீட்டு முத்தத்துல, இன் சுவிங்க்,
அவுட் ஸ்விங்க் போன்ற பல பயிற்சி எடுத்து போய் நின்னா, அன்னைக்குன்னு பார்த்து 11
பேர் கொண்ட அணிக்கு 18 பேர் வந்து நிப்பானுங்க. கடைசியா நாம விளையாண்ட 10 மேட்சுல,
விட்ட போர்கள் 28 (அதுல தடுக்குறேன்ற பேர்ல நானா தள்ளிவிட்டது 9), விட்ட கேட்சுகள்
15, பவுலிங்க் போட்டு கொடுத்த ரன்கள் 658, ஒய்டு, நோ பால் என எல்லாமே இரண்டு
டிஜிட், மூன்று டிஜிட்ல இருக்கும் ஆனா எடுத்த ரன்னுன்னு பார்த்த அது ஒரு
டிஜிட்லதான் இருக்கும். இந்த ஹிஸ்டிரி, அக்கவுண்ட்ஸ், காமெர்ஸ் எல்லாம்
கண்முன்னாடி வந்து போகும். இருந்தும் வெக்கத்தவிட்டு, கபில்தேவ் கண்ணீருக்காக முன்னாடி
போய் நிப்பேன். “கவாஸ்கர் என் கனவுல வந்து, இந்த மேட்சுக்கு உன்ன எடுக்கவேண்டாம்ன்னு
சொன்னாரு” என்று சொல்லிட்டு, அபூர்வ சகோதர்கள் அப்பு கமல்மாதிரி தனியா
நிக்கவச்சிட்டு போயிருவானுங்க. கபில்தேவின் கண்ணீர், அந்த ஒரு சகாப்தத்தின்
கண்ணீர் அஞ்சலியானது.
முன்னாடியெல்லாம் 8 மணிக்கு மேலதான் சீரியல், செய்திகள் எல்லாம் ஆரம்பிக்கும்,
அதுவரைக்கும் டி.வி ரிமோட் என் கையில்தான் இருக்கும். ஏதோ ஒரு சேனல்ல, ஏதோ ஒரு
நிகழ்சியில ஓவியம் வரைவது எப்படி? ன்னு சொல்லிகொடுப்பாங்க. அத பார்க்க நோட்டு,
பென்சிலோட டி.வி முன்னாடி உட்கார்ந்து வரைஞ்சு, வரைஞ்சு பார்ப்பேன். இனிமே
கிரிகெட் கிடையாது நம்ம வாழ்க்கை. “ஓவியன்” இதுதான் இனி நம்ம புரஃபெசன்னு
முடிவுபண்ணி, சிறுவர் மலரில் 1,2,3.... நம்பர சேர்த்து பென்சிலில் கோடுபோட்டா ஒரு பூனை,
கோழி.....படம் எல்லாம் வரும். இப்படியா என் திறமைகளை மெருகேற்றிக்கொண்டிருந்த
சமயம்,தனியாக ஒரு படம் வரையவேண்டும் என்று ஆர்வம் அதிகமாகி ஒரு நோட்ட எடுத்து,
பாரதியார் படத்தை வரைந்தேன். நடிகை மீனா, முண்டாசு, பெரிய மீசை வச்சா எப்படி
இருக்கும், அப்படி படம் வந்திருந்தது. எனக்கு ஒரு பக்கம் “ச்சே! படம் இப்படி
ஆகிடுச்சேன்னு” வருத்தம் இருந்தாலும், இன்னொரு பக்கம் “பரவாயில்லை முண்டாசு,
மீசையாவது நல்லா வந்துச்சே”ந்னு ஒரு பெரிய சந்தோசம். அன்னைக்கு கனவில் ஓவியர்
உசேன் என்னை அவரின் கலைவாரிசுன்னு பத்திரிக்கை, மீடியாவிற்கு அறிமுகப்படுத்திவைக்கிறார்.
அடுத்த நாள் கலையில எங்கப்பா அந்த படத்தை கையில் வைத்துக்கொண்டு “இத யாருடா
வரஞ்சா?”ன்னு கேட்டார், நான்தான்னு சொன்னவுடனே அவர் முகத்தில் ஏற்படும் பூரிப்பை
பார்க்க புன்னகையுடன் ஏறெடுத்துப்பார்த்தேன், “பாய்ஞ்சி அடிச்சா பத்து டன்னு
வெயிட்டுடா” ஸ்டைல்ல, நான் உன்னவிட பெரிய ஓவியண்டான்னு மூஞ்சி, முதுகுயெல்லாம்
ஓவியத்த தீட்டு, தீட்டுன்னு தீட்டிட்டுபோயிட்டாரு. பின்ன, அவர் வியாபார வரவு,
செலவு, கணக்கு புத்தகத்துல ஓவியம் வரஞ்சா சும்மாவாயிருப்பாரு, அன்னையோட அந்த
ஓவியனும் செத்துட்டான். இல்ல சாகடிச்சிட்டானுங்க.
சின்னவயசுல இருந்தே பேப்பர் படிக்குறது, வார இதழ்கள் படிக்கிறதுல எனக்கு ரொம்ப
ஆர்வம், ஜூனியர் விகடன் வாரம்தவறாம எங்கவீட்டுல இருக்கும் அத ஒன்னு விடாம
எல்லாத்தையும் படிப்பேன். “ஜாதியால பிரிவு, மதத்தால வேறுபாடு, ஏழை-பணக்காரன்
பாகுபாடு, அதிகார துஷ்புரயோகம், ஆற்றலற்ற அரசியல், ஆரோக்கியமற்ற வாழ்வு, கொலை,
கொள்ளை, வரதட்சனை,.......இப்படி சாக்கடையா கிடக்கும் இந்த சமுதாயத்த சுத்தம் பண்ண
ஒரே வழி நீ அரசியலுக்கு வரணும். முட்டிக்கு மேல கைலிய தூக்கி கட்டிக்கிட்டு ஒரு
கையில விளக்குமாரு, இன்னொரு கையில பினாயில் பாட்டிலோட இறங்கி இந்த நாட்ட நீதான்
சுத்தம் பண்ணனும்னு” ஏதோ ஒரு வாய்ஸ் சொல்ல, “ஆமா, நீங்க தான் சுத்தம் பண்ணனும்,
உங்களோட நாங்க இருக்கோமுன்னு” எங்க எதிர்வீட்டுக்காரன், பக்கத்துவீட்டுக்காரன் என
பல்லாயிரக்கணக்கான மக்கள் என் வீட்டுமுன்னாடி துடப்பம், பிரஷ், ப்பிளிசிங்க்
பவுடர், டெட்டாயில் பாட்டல் என கையில வச்சிக்கிட்டு என்னை அரசியலுக்கு அழைப்பது போல
ஒரு கனவு. இந்த கனவப்பற்றி பொதுச் செயலாளர், பொறுளாளர், கொ.ப. செயலாளர், மாவட்ட
செயலாளர், ஒன்றிய செயலாளர்கள், தேர்தல் குழு உறுப்பினர்கள்.... என ஆகவேண்டியிருந்த
எனது நண்பர்களிடம் விவாதித்தேன். எல்லோரும் ஒருமித்தகுரலில் “மாமா பிஸ்கோத்தே”ந்னு
சொல்லுறதப்போல “நோ, இட்டிஸ் நாட்” ன்னு சொல்லிட்டானுங்க.
நான் விடாம, எண்டே தளபதி ஒருத்தன கூப்பிட்டு “ஏண்டா, ஏன்?” ந்னு கேட்டேன்.
“இல்ல, அது நமக்கு ஒத்துவராது, அதுவும் உனக்கு அரசியல் சுத்தமா ஒத்துவராது,
விட்டுடுன்னு” சொன்னான்.
“அதுதாண்டா ஏன்னு கேக்குறேன்?”
“அய்யோ உங்கிட்ட எப்படி சொல்லி புரியவைப்பேன், ஒத்துவராதுன்னா விட்டுடுடா”
“ஏன்னு காரணம் மட்டும் சொல்லு?”
“புரிஞ்சிக்கடா, காரணம் ஏதும் கேட்காத, அது நமக்கு, எங்கள விடுடா உனக்கு ஒத்துவராது,
உன்னால முடியாது, விட்டுடு”
“ஏன், ஏன், ஏன்”
“அய்ய்ய்ய்ய்யோ.........ஏன்னா, அரசியல்வாதியானா பொய் பேசணும், பொய் பேச உன்னால
முடியுமா?”
இதுவரைக்கும் என் கனவுகளை பலபேர் சாகடிச்சிருக்கானுங்க. முதல் தடவையா என் கனவை
நானே கழுத்த நெருச்சு துடிதுடிக்க கொன்னுட்டேன். அந்த நாள்....... (அய்யய்யோ தேதி மறந்திடுச்சே),
ஆனா மறக்கமுடியாத நாள்.
அதுக்கு அப்புறம் ஒருநாள் கனவில்
“உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்,
உலகம் அர்த்தமாகும்,
ராத்திரியின் நீளம் விளங்கும்,
கையெழுத்து அழகாகும்,
தபால்காரன் தெய்வமாவான்........”அட நம்ம வைரமுத்து.
(கனவுகள் தொடரும்)----------------------------------+++++----------------------------யாஸிர்.
சே இந்த சமூகம் எவ்ளோ பெரிய்ய மருத்துவரை,கிரிகெட் வீரரை,ஒரு ஓவியரை, வீட்டை சுத்தப்படுத்தும் ஒரு அரசியல்வியாதியை சே வாதியை, இழந்து தவிக்கிறது இதை எப்படி ஈடு கட்டலாம் பாய்???....
பதிலளிநீக்குஎனக்குள்ள இருந்த கவிஞரை கொலை செய்ததை அடுத்தமுறை சொல்லுகிறேன்.
நீக்குரன் 2, 1, 3.5, 2.25, 1.75 வாகத்தான் இருக்கும். // இந்த அரை முக்கால் எல்லாம் ரன் அவுட்டா பாய்???
பதிலளிநீக்குஆமாங்க, பாதி, கால், முக்கால்வாசி பிட்சை கடக்கும் போது அவுட்டாக்கிட்டானுங்க.
நீக்குபொய் பேச உன்னால முடியுமா?”// அது ஏண்டா என்னையப் பார்த்தது அந்தக் கேள்வியைக் கேட்ட????
பதிலளிநீக்குபொய்ன்னு சொன்னவுடனே எனக்கு மயக்கவந்திடுச்சு. ஒரு மணி நேரம் என்னை சுத்தி என்ன நடந்துச்சுன்னே தெரியல.
நீக்குpunnaivanam here yasir : I was missing your blog for quite some time.. Keep writing... Un Eluthu Nadai arputham...
பதிலளிநீக்குநண்பேண்டா..............
நீக்கு