ஞாயிறு, ஜூலை 14, 2013

ஆஹா, கவிதை, கவிதை....

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
காலேஜ் படிக்கும் போது, ஒரு நாளுக்கு இருக்கும் 8 பிரியடுகளில், நமக்கு பிடிக்காத, குறைந்த பட்ச 8 பிரியடுகளில் கவிதை எழுதுவது தான் வேலை. எல்லாமே “தங்கச்சிக்கு கல்யாணம், தங்கச்சிக்கு கல்யாணம்.....” ரேஞ்சுக்கு உண்டான காவிய கவிதைகளாகத்தான் இருக்கும். சில சமயத்துல எனக்கே பிடிச்சமாதிரியா கவிதை அமைச்சிரும். “அய்யாய்யோ நாட்டாமை தம்பி, டீச்சர வச்சிருக்காண்டோய், இந்த ரகசியத்த யாருகிட்டயாவது சொல்லணும்டோய்” கவுண்டமணி மாதிரி எவண்டா வருவான்னு காத்திகிட்டு இருப்பேன், பின்னாடியிருந்து ஒரு குரல் வரும் “குட்மானிங்க் சீனியர்”ன்னு சொல்லி ஜீனியர் பசங்கவந்து நிப்பானுங்க. கசாப்புக்கடைக்கு, ஆடுகள் அணி அணியா வந்தா சும்மாவிடமுடியுமா?. வாங்கடா, நான் ஒரு கவிதை எழுதியிருக்கேன் கேளுங்கன்னு உக்கார வச்சி என் கவிதை சொற்பொழிவை ஆத்து, ஆத்துன்னு ஆத்துவேன். கேட்டுவிட்டு, “ஏண்ணா இந்த கவிதையை எல்லாம் உங்க கிளாஸ் பசங்ககிட்ட சொல்லமாட்டேங்குறீங்கன்னு” ஒருத்தன் கேட்க, “அங்க போனா அவங்க சாத்து, சாத்துன்னு சாத்திருவானுங்க அது தானண்ணா?” ன்னு இன்னொருத்தன் நம்மளையே கலாய்ப்பான். “போங்கடா, போய் கிளாஸ்ஸ அட்டண்ட் பண்ணுங்க, இல்லனா இன்னொரு கவித சொல்லனும்மா?”ன்னு டெரர் லுக்குவிட்டா ஒரு பய இருக்கமாட்டான்.

எங்க கிளாஸில் சந்தோஷ்ன்னு ஒருத்தன் இருந்தான். அவங்கிட்டமட்டும்தான் நான் என்னுடய கவிதைகளை சொல்லுவேன். ஏன்னா? அவன் மட்டும்தான் காதுகொடுத்து கேட்பான், கேட்டுட்டு நல்லாயிருக்குன்னும் சொல்லமாட்டான், நல்லாயில்லைன்னு சொல்லமாட்டான். என்ன பொருத்தவரை முதல்ல இருக்குறது அவசியமே இல்லை. இரண்டாவதுதான் முக்கியம். சந்தோஷ் எந்தமாதிரின்னா. செமஸ்டர் ஸ்டடி லீவில் எல்லாரையும் போல நாங்களும் மொத்தமா உட்கார்ந்து ஆளு, ஆளுக்கு “ஏ” ஜோக்கு சொல்லி சிரிச்சிக்கிட்டு இருப்போம், நம்ம பய மட்டும்தான் “பே” ன்னு இருப்பான். 5 நிமிச ஜோக்கின் உள்ளார்ந்த அர்த்தத்தை படமெல்லாம் போட்டு அரைமணி நேரமா புரியவைக்க முயற்சி செய்வோம். கடைசிவரைக்கும் கேட்டுவிட்டு “ஙே”ன்னு இருப்பான்.

என்னை நான் ஒரு சுமாரான கவிஞனாகத்தான் (நானே) நினைத்துக்கொண்டேன், ஆனால் எனக்கும் வைரமுத்துவுக்குமான இடைவெளி ஒரு இஞ்ச் அளவுதான் என புரியவைத்த பெருமை என்னுடய மெக்கானிகள் நண்பன் ராஜா ராமனுடையது. ராஜாராமன், விஜயராகவன், கார்திக் இவங்க மூணு பேரும் ஒரே ரூம். என்னுடைய ரூமில் இருந்து பத்து ரூம் தள்ளி. பொதுவா ஞாயிற்றுக்கிழமை மதியம் சாப்பிடபோகும் போது மட்டும் கார்தியுடன் செல்வேன், ஏன்னா, அவன் சிக்கன் சாப்பிடமாட்டான், அதனால அவன்கூட போனால், அவன் சிக்கன் நம்ம தட்டுல தவம் இருக்கும். இப்படியான ஒரு ஞாயிறு அன்று, ராஜாராம் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தான். மத்த ரெண்டுபேரும் ஒரு பேப்பர கையில வச்சிக்கிட்டு, பேயரஞ்சமாதிரி இருந்தானுங்க. எனக்கானா ஒரே பயம், “ஆஹா, நம்ம ரூம்ல இருந்து, ஏதாவது கவிதை பேப்பர், காத்துல அடிச்சு வந்துவந்திருக்குமோ, எடுத்து படிச்சிட்டானுங்களோ, அப்ப இன்னைக்கு சிக்கன் கட்டா????” இப்படியா மைன்டுல ஓடிக்கிட்டு இருக்கும்.

“டேய், என்னங்கடா, என்ன ஆச்சுடா உங்களுக்கு?” நான் கேட்டேன்.

“ராஜாராம் ஒரு கவிதை எழுதியிருக்கான், அத எங்ககிட்ட கொடுத்து வாசிக்கச்சொன்னான், அத வாசிச்சிட்டுத்தான் இப்படி.....”ன்னு விஜயராகவன், விம்பி, விம்பியபடியே சொன்னான்.

“என்னது............ஒரு உறையில ரெண்டு கத்தியா?”, என கத்தியபடியே கவிதையை நான் வாசிக்க ஆரம்பித்தேன்.

“ஃபேன் (Fan) காற்றே போ, போ,
தென்றல் காற்றே வா, வா.
பேனாவே போ, போ,
எழுதுகோலே வா, வா.
டியூப் லைட்டே போ, போ,
எரிவிளக்கே வா, வா.

........இப்படியாக பல பல வா,வா, போ, போ. இறுதியில்

மொத்தத்தில்
செயற்கையே போ, போ.
இயற்கையே வா, வா. ன்னு முடிச்சிருந்தாரு.

படிச்சிப்பார்த்தபின்பு ராஜா ராமன் ரொம்ப ஆர்வமா எங்கிட்டவந்து “எப்படிடா யாஸிர் இருந்துச்சு?” ன்னு கேட்டாரு.

“அர்ரேஹ் வா(வ்), வா(வ்)”

இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் தெரிந்து கொண்டது, புரிந்து கொண்டது, அறிந்து கொண்டது இரண்டு விசயம், ஒன்று, இதுக்கு “நாமே தேவலை”, இரண்டாவதுதான் ரொம்பமுக்கியம் “கவிதை எழுதுறதவிட கஷ்டமான விஷயம், அடுத்தவன் கவிதையை படிக்கிறது”. அதுக்கப்புறம் எவங்கிட்டயும் போயி என் கவிதையை படின்னு கேட்டதும் இல்லை, எவனும் படிச்சதும் இல்லை.
“காதலிச்சா, கவிதை கண்டெய்னர் கண்டெய்னரா வந்து இறங்கும்” எவனோ சொன்னதமட்டும் கேட்டு, கண்ணாடியில மூஞ்சபார்க்கம, இருக்குற டீக்கடை, பள்ளிக்கூட வாசல், சந்து, பொந்து எல்லா இடத்துலயும், நின்னு, உட்கார்ந்து, தர்ணா எல்லாம் பண்ணிபார்த்தும்கூட யாரும் சீண்டல.“இயற்கையை ரசிக்கும் போது கவிதை தானா வரும்னு” இன்னொருவன் சொன்னான். சிவகாசியில இயற்கையை தேடிக்கண்டுபிடிக்கிறதுக்குள் தாவு தீந்திரும். அடுத்த பாயிண்ட் “அழகான பொண்ணுங்கள பார்த்த, கவிதை வரும்” னு மற்றொருவன் கூற, “ம்க்கும் அதுக்கு கண்டிப்பா நம்ம காலேஜில சான்ஸ் இல்ல. அதுவும் நம்ம சிவில் டிப்பார்ட்மெண்டுல்ல............. சுத்தம், டிப்பார்ட்மெண்ட் ஹிஸ்டரில தேடினாக்கூட இருக்காது”. இப்படியா பல முட்டுக்கட்டைகளால் கவிதை எழுதுவதையே மறந்துட்டேன்.

ஐன்ஸ்டீன் விதி, பிதாகரஸ் விதி, அரிக்மெட்டிஸ் விதி, ஹூக்ஸ் விதி, ஜீல்ஸ் விதி....இதுமாதிரி நான் புத்தகத்தில் படித்த பல விதிகள், வாழ்க்கையில பயன்பட்டதே இல்லை அதுக்கு நானும் கவலைப்பட்டதும் இல்லை, ஒன்றைத்தவிற அது ‘நியூட்டனின் மூன்றாம் விதி”. என்னுடய கவிதைகளை பிறரை படிக்கச்சொன்னதன் விளைவு, ராஜா ராமின் கவிதையால் திரும்பகிடைத்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். என் மனைவி ரூபத்தில் இன்னும் “ரிலோட்”டாகி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஐந்து யாஸிர், பத்து ராஜா ராமன் கவிதையின் கலவை என் மனைவியின் கவிதை. விகடனில் சொல்வனத்தில் வரும் கவிதையை கூட சொல்லவராது, “அன்பே ஆருயிரேய்” ங்குறத படிச்சுட்டு, எங்கிட்ட வந்து “அன் பேய்.... அரு உயிரே” ன்னு சொல்லுவாள். கவித சொல்லிட்டு புருஞ்சிதான்னு கேட்டவுடனே “சூப்பர், புரிஞ்சுது”ந்னு சொல்லிருவேன். “இல்ல, புரியல”ன்னு சொன்னா. ம்புட்டுத்தேன் மறுபடியும் முதல்ல இருந்து வாசிச்சுகாமிக்க ஆரம்பிச்சிடுவாள். அதனால், இப்பெல்லாம் கவிதை சொல்ல ஆரம்பிச்சவுடனே “அர்ரேஹ் வா(வ்), வா(வ்)” தான். அவளுக்கு அவளுடய கவிதையை தொகுத்து புத்தகமா போடனும்மாம். “இப்ப வேண்டாம், கொஞ்ச நாள் கழித்து போடலாம், ஏன்னா வடக்க இப்பத்தான் ஒரு பேரழிவு நடந்திருக்கு, அதுக்குள்ள தெற்க வேண்டாம், நாடு தாங்காது” ன்னு சொன்னேன் “சரிங்க” ன்னு கேட்டுகிட்டு சமத்தா போயி, சோத்துல உப்பள்ளி போட்டுட்டா. திண்ணுட்டு கண்ணுல தண்ணி வச்சுண்டன்.

வீட்டம்மா, அவங்க சொல்லுறதோட மட்டும் விடாம, நீங்களும் ஏதாவது கவிதை சொல்லுங்கன்னு சொல்லி நச்சரிக்கும். நானும் குமுதம், ஆ.வி, குங்குமத்தில் வரும் கவிதையை நானே எழுதியது போல, வறுமையின் நிறம் சிகப்பு “தையன தத்தன...”பாடலில் வரும் கமல் ரேஞ்சுக்கு சிந்திச்சு, சிந்திச்சு சொல்லுவேன். கேட்டுவிட்டு “ம்ம்ம்ம் ஒன்னும் புரியலை, என் அளவுக்கு இல்லன்னு” சொல்லுவாள், இதுக்கும் அந்த கவிதை எல்லாமே ரூ10,000 பரிசு பெற்றதாக இருக்கும். இப்படியான ஒருநாளில் கவிதை கேட்டபோது, ஸ்டாக் வச்சிருந்த கவிதை எல்லாம் காலியாகிவிட, சரி இன்னைக்கு தூக்கிகிடக்கும் கவிஞரை தட்டி எழுப்பி சொந்தமா ஒரு கவிதை சொல்லலாமென்று, என் மனைவி, கருப்பு பர்தாவோடு மூணாறு பூந்தோட்டத்தில் பூக்களுக்கிடையில் எடுத்தபுகைப்படத்தை வைத்து ஒரு கவிதை சொன்னேன். எப்போதும் போலவே அவளுக்கு புரியவில்லை. என்னடா இந்த கவிஞனின் கவிதைக்கு வந்த சோதனைன்னு ரொம்ப சோகமாகிடுச்சு. உங்களுக்காவது புரியுதா பாஸ்....

“இது என்ன,
இது என்ன ஆச்சர்யம்!!!!!!!
வண்ணமலர்களுக்கிடையே ஒரு
கருப்பு வெள்ளை ரோஜா”


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++யாஸிர்.

2 கருத்துகள்: