திங்கள், ஆகஸ்ட் 26, 2013

பலமொழித் திறமை-1.

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவுவதாக.
நான் பள்ளிப்படிப்பை தமிழ்வழியில்தான் படித்தேன். அதுவரையில் எனக்கு மற்றமொழிகளைப் பற்றிய அறிவு பெரியதாக இருந்ததில்லை. ஆங்கிலம் உற்பட (ஆங்கில அறிவை அறிய, முந்தய பதிவுகளை பார்த்து அறி(திர்)ந்துகொள்ளலாம்). “தமிழ் அம்மா” தான் எங்களுக்கு தழிழ் வகுப்பு எடுத்தது, அன்னை தெரசாவுக்கும் எங்க தமிழ் அம்மாவுக்கும் பெரியவேறுபாடு எல்லாம் கண்டுபிடிக்கமுடியாது. பூமிக்கு வலிக்குமேன்னு நினைத்து மெதுவாத்தான் நடக்கும். பவர் ஸ்டாரை பக்கத்துல போய் குளோசப்ல, பார்க்கச் சொன்னாலும் பொறுமையா பார்க்கும். பொறுமைன்னா அப்படி ஒரு பொறுமை. ‘என்னுடைய 30 வருச சர்வீஸில், உன்னைய மாதிரி ஒரு மாணவனை நான் பார்த்ததே இல்லை, இவ்வளவு மோசமா தமிழை எவனாலும் வாசிக்கமுடியாது. ஒரு பக்கத்தை வாசிக்கிறதுல இத்த்த்த்தனை தப்புவிடுற, நீ எல்லாம் எப்படி +2க்கு வந்த?, சங்கரேஸ்வரிய பாரு, 10 வகுப்பு வரை இங்கிலீஸ் மீடியத்துல படிச்சிட்டு வந்தாலும் எவ்வளவு நல்லா தமிழ்வாசிக்குது, முட்டாள், முட்டாள், என் கண்ணுமுன்னாடி நிக்காத, புக்க தூக்கிட்டு கிளாஸை விட்டு வெளியே போ.............”ன்னு சொல்லிடுச்சு. எனக்கு அப்படியே ‘தாலி காத்த காளியம்மன்’, ‘ராஜகாளியம்மன்’ பட கிளைமாக்ஸ பாக்குறமாதிரி இருந்துச்சு. சூலாயுதத்துக்கு பதிலா தமிழம்மா கையில பிரம்ப வெச்சிக்கிட்டு சாமி ஆடிருச்சு. இந்த ஒரே ஒரு சம்பவத்தின் மூலம், ‘தமிழ் அம்மா பொறுமையையே சோதிச்சவன்’ ‘தமிழ் அம்மா பொறுமையையே சோதிச்சவன்’ என்று பெயரில் பள்ளிக்கூடம் முழுவதும் அனைவருக்கும் தெரிந்த முகம் ஆகிப்போனேன்.

தாய்மொழி அறிவே இப்படின்னா, மற்றமொழியெல்லாம் கேட்கனுமா என்ன?. கலேஜுக்கு போனவுடன் எல்லாமே இங்கிலீஸ், +2 வரை, ஒரு பக்க எஸ்ஸேயை (Easy)  மக்கப்பண்ணுறதே ஏழுமலையான் புண்ணியம், இதுல புக்கு புக்கு, பக்கத்துக்கு பக்கம் இங்கிலீஸ்னா என்னபண்ணுறது. முதல் நாள் பகல் கிளாஸ் முடிந்து சாப்பிட ஹாஸ்டல் போகும் போது பக்கத்துல இருக்குறவனிடம் “அடேங்கப்பா... பெரிய்ய்ய காலேஜ்லதாண்டா சேர்ந்திருக்கோம், இங்கிலீஸ்க்கு மட்டுமே 4 வாத்தியார்னா பாரேண்”ன்னு சொன்னேன். “டேய் பொறம்போக்கு, இங்கிலீஸ்ல பாடம் நடத்துனா எல்லோரும் இங்கிலீஸ் டீச்சரா?, அவங்க எல்லாம் கம்யூட்டர், கெமிஸ்டிரி, மெக்கானிக், மேத்ஸ் வாத்தியாருங்கடா, இங்கிலீஸ் டீச்சர் மதியம் 2 வது கிளாஸுக்கு வருவாங்க.”ன்னு கோபமா சொல்லிட்டு கிளம்பிட்டான். ரொம்ப அறிவாளியா இருக்கான், இவன நம்ம பக்கத்துல வச்சிக்கிடனும்னு, சாப்பிட்டுவிட்டு வந்து பார்த்தா, பயபுள்ள பத்து பென்ஞ்ச் தள்ளிபோய் உட்கார்ந்திருந்தான். ஆங்கிலத்தில் அசிங்கப்பட்டதை எழுதிக்கொண்டே போனால் ஒரு முடிவுக்கு வருவது கஷ்டம்

இந்த இரண்டுமொழிகளுக்கு அடுத்ததாக, புதுசா இரண்டு மொழிகள் ஒரே நேரத்துல நம்ம வாழ்க்கையில வந்தது. ஒன்னு ஹிந்தி, இரண்டாவது கன்னடம். கல்லூரி முடித்தபின்பு, பெங்களூரில் வேலை கிடைத்தது. இண்டர்வியு முடிந்து பெங்களூரில் வேலை என்று சொன்னபோது, ‘சார், போஸ்டிங் சென்னையில இருந்தா நல்லா இருக்கும்’ என்று தயங்கி, தயங்கி கேட்டேன்’ ‘என்ன ஆளுய்யா நீ, பெங்களூர போய் வேணாங்குற, கிளைமேட் எல்லாம் சூப்பரா இருக்கும், அங்க உள்ள பிகருங்க அதவிட சூப்பரா இருக்கும்’ என்று சொன்ன உடனேயே ‘எப்ப சார் ஜாயிண்ட் பண்ணனும்?’னு கேட்டுவிட்டு அடுத்தவாரமே ஜாயிண்ட் பண்ணினேன். ஹிந்தி பேசுறவர்களும், கன்னடம் பேசுகிறவர்களும் அங்கு வேலை செய்ததால் இந்த இரண்டு மொழிகளையும் கற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டது. என்னுடன் வேலைபார்த்த அனைத்து இன்ஞ்சினியர்களும் தமிழர்களே, ஒருவனைத்தவிற. அவன் பெயர் நேரு பாபு, அவன் ஆந்திராக்காரன். முதல் மூன்று நாட்கள் கண்ணகெட்டி காட்டுல விட்டமாதிரி இருந்துச்சு. ஒரு குரூப் வரும், டிராயிங்க வச்சிக்கிட்டு எதையோ பேசுவானுங்க, அப்புறம் அவனுங்களே போயிருவானுங்க. அடுத்த குரூப் வரும் அவனுங்களும் எதையோ சொல்லுவானுங்க. ‘ஒகே சார்’னுட்டு போயிறுவானுங்க. என்னோட கவலை, எதைப் பற்றி பேசுனானுங்க என்பது அல்ல, என்ன பாஷை பேசுனானுங்க என்பதுதான். இப்படியா வருகிறவன் போகிறவன், ஹிந்தி பேசுறானா? இல்ல கன்னடம்? பேசுறானான்னு தெரிஞ்சிக்கிறதுக்குள்ள 3 மாசம் ஓடிருச்சு.
இனிமேலும் சும்மா இருந்தா மோசம்போயிறுவோம் என்று எண்ணி, ‘30 நாளில் ஹிந்தி கற்றுக்கொள்வது எப்படி?’, ‘30 நாளில் கன்னடம் கற்றுக்கொள்வது எப்படி?’ என்ற புத்தகத்தை வாங்கி, பத்தே நாளில் படித்துமுடித்து ஹிந்தி, கன்னடம் பேச ஆரம்பித்தேன். ‘ஹெஸ்ரேனு?” என்று எவனாவது கன்னடத்தில் ‘உன் பெயர் என்ன?’னு கேட்டா ‘மேரா நாம் யாஸிர் ஹே’ன்னு ஹிந்தில பதில் சொல்லுற அளவுக்கு இரண்டு பாஷைகளும் நம்ம வாழ்க்கையில ஒன்றாக கலந்திடுச்சு. பாஷையை நல்லா படிக்கனும்னு வீம்புக்குன்னு ரெண்டு லேபர உட்கார வச்சு, சொந்த கதை, சோகக் கதை எல்லாம் பேசுறது. சில சமயம் நாம பேசுறத கேலிபண்ணி சிரிப்பானுங்க, நானும் சிரிச்சிக்கிட்டே அவன புகழ்றது போல ‘போடாங்க்.... த்தா, நாயே, மொள்ளமாறி’ என்று வஞ்சனயை தீர்த்துக்கொள்வதும் உண்டு. தமிழையும், இங்கிலீஷையும் கலந்து ‘தமிலீஷ்’ பேசுவது போலத்தான், தமிழையும் ஹிந்தியையும், கலந்து ‘தமிந்தி’ யாக பேசிக்கொண்டிருந்தோம் (இப்பவரையில் அப்படித்தான்). ‘என்னப்பா, அவனுங்க இப்படி மெதுவா வேல பார்க்குறானுங்க, போயி, வேகமா வேலையை பார்க்கச்சொல்லு’ன்னு சொல்லிட்டு புராஜெக்ட் மேனஜர் போயிருவாரு. எனக்கு எப்படி சொல்லுறதுன்னு தெரியாது. எடுப்பேன் கையில 30 ஹி.ப.எ?. வேகமான்னா ஹிந்தியில ‘ஜல்தி’ வேலைக்கு ‘காம்’ பாருங்கடாக்கு என்ன?ன்னு தேடுனா கிடைக்காது. சரி இருக்குறத வச்சிக்கிட்டு ஒப்பேத்துவோன்னு, கோபமா மூஞ்சிய வச்சிக்கிட்டு “ஜல்தி காம் பாருங்கடா” ‘ம்ம்ம் காம் ஜல்தி பாருங்கடா” ன்னு மூச்சப்போட்டு தொலைக்கனும். அப்புறம் கொஞ்ச நாள் கழித்து ‘பாருங்க’க்கு ‘கரோ’ ங்குறது தெரிவந்தது. அப்புறம் என்ன “வேகமா காம் கரோங்கடா’, ‘ஜல்தி கரோங்கலேண்டா’ தான்.

கன்னடம் என்னைய ரொம்பவெல்லாம் படுத்தி எடுக்கல. ‘ஏனெப்பா, செனாஹிதியா?’ ‘ஊட்டா ஆய்த்தா?’ (நல்லாயிருக்கியா?, சாப்பிட்டாச்சா?) இந்த ரெண்டு பார்மல் கேள்விக்கு அப்புறம் தமிழ்லதான் பேசுறது. பெரும்பாலும் அவர்களுக்கு புரிந்துவிடும். அப்ப, அப்ப மானே, தேனே பொன்மானே, மாதிரி அங்க அங்க ஒன்னு ரெண்டு கன்னடவாக்கியங்களை போட்டு பேசிவிடுவதால் பெரிய கஷ்டம் எல்லாம் இருந்ததில்லை. இருந்தாலும் கன்னடக்காரர்களுக்கு அவங்க மொழிமேல ரொம்ப பற்று. ‘ஏனு சார், கன்னடத்தல்லி, மாத்தாடுத்தாயில்லா நீவு’ (என்ன சார் நீ, கன்னடத்துல பேசவே மாட்டேங்குற?) என்று சில சமயம் என் மேல செல்லமா கோவப்படுவார்கள். ‘என்னடா இப்படி கேட்டுட்டீங்க, உங்களுக்கு கன்னடத்துலதானடா பேசனும், நான் பாட்டே பாடுறேன் பாரு?”ன்னு சொல்லி ♪♫” உட்டிதரே கன்னடதல்லி உட்டாபேக்கு, மெட்டிதரே கன்னடதல்லி மெட்டபேக்கு............♫♫♪ன்னு கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் பாட்டை பாடுனதும் ரெம்ப சந்தோசமாயிடுவானுங்க. “இங்க தமிழ், கன்னடர் கலவரம் அடிக்கடி வரும், அந்த நேரத்துல உசுருக்கு பங்கம்வந்திருச்சுன்னா இந்த பாட்டை பாடி தப்பிச்சிக்கோ” ன்னு ஒருத்தன் சொல்லிக்கொடுத்தது, இந்த பாசப்பிறவிகளுக்காக பயன்பட்டது. ‘பிறந்தால் கன்னடனாக பிறக்கவேண்டும், தின்றால் கன்னட சோற்றை தின்னவேணும்’ என்பதுமாதிரியான ஒரு மொழிப்பற்று பாடல் அது.

இந்தமாதிரியான கண்ணாம்பூச்சி விளையாட்டு எல்லாம் தொழிலாளர் வர்க்கத்தில் மட்டும்தான் செல்லுபடியானது. எங்களுடைய கிளைண்ட் இஞ்சினியர்கள் (client engineer) அனைவரும் கன்னடர்கள். நான் பொதுவாக அவர்களிடம் ஆங்கிலத்தில்தான் அலவுவது. நான் பில்லிங்க் இஞ்சினியர் என்பதால் மாதம், மாதம் முதல்வாரம் பில்லைக்கொண்டு நீட்டி பணம் வாங்கவேண்டும். அப்போ கிளண்ட் (client) இஞ்சினியர்கள் 4 பேர் இருந்தார்கள். கொண்டுப்போகுற பில்லை 4 பங்காக பிரித்து எல்லோரும் திருத்தி அப்ரூவ் செய்வார்கள். அதில் 3 பேருக்கு தமிழ் நன்றாக தெரியும், ஒருத்தருக்கு சுத்தமாக தெரியாது. நான் கன்னட அடிமைகளிடம் பேசுற அப்பாட்டக்கர் கன்னடத்த பார்த்த அந்த மனுசன், ‘எங்கிட்டயும் நீ கன்னடத்துல பேசனும், அப்படின்னா மட்டும் பில்லை திருத்துவேன், இல்லன்னா, பில்லை திருத்தமாட்டேன், கொண்டு ஓடிப்போயிரு’ ன்னு சொல்ல மிரண்டுட்டேன். ‘இந்த நேரம்னு பார்த்தா செய்யாத வேலைக்கும் சேர்த்து 5 லட்சத்துக்கு பில்ல போடுவேன். நாம பேசுற கன்னடத்துல கடுப்பாகி, செய்த வேலைக்கு உண்டான 10 லட்சத்தையும் தரலண்னா என்ன செய்ய?’ என்று மனதுக்குள் எண்ண ஓட்டம். அதுக்கு முன்னாடியெல்லாம் அவரிடம் நான் என்னுடய ஓட்டை இங்கிலீஸைக் கொண்டு விளக்கம் கொடுப்பேன், அதை அவருடய பெரிய்ய்ய்ய ஓட்டை இங்கிலீஸை வைத்து அர்த்தம் புரிந்து கொண்டு அப்ரூவல் செய்வார்.
அவருக்கு சப்போர்ட்டாக மற்ற இஞ்சினியர்களும், ‘இந்த முறை ஜெகனாத் கிட்டயே எல்லாத்துக்கும் அப்ரூவல் வாங்கிடு, நீ கன்னடத்துல பேசுறத நாங்க பார்க்கனும்’ சொல்லி சுத்தி உட்கார்ந்து கொண்டார்கள். வேற வழியே இல்ல, கன்னடத்துலதான் பேசியாகனும். நான் அவர்கிட்ட பேச, பேச சுத்தியிருக்குற மற்ற இஞ்சியர்கள் விழுந்து, விழுந்து சிரிச்சானுங்க, எனக்கு ஒரே ஆச்சர்யம், ‘நாம கன்னடத்துல காமெடி பண்ணுற அளவுக்கு டெவலப் ஆகிட்டோமேன்னு’ பெருமையா இருந்தது. பேச ஆரம்பித்து ரெண்டாவது நிமிசத்துலேயே, ஒரு பைசாவைக்கூட கட் பண்ணாம, எல்லா பில்லையும் அப்ரூப் பண்ணிட்டு, கிளம்பு, ரொம்ப சந்தோசம்னு, பெருய கும்பிடு போட்டு அனுப்பிட்டாரு. எனக்கு என்ன நெனச்சு நெனச்சு ஒரே பூரிப்பு. அதுல இருந்து கூடவேலை பார்த்த தமிழ் இஞ்சினியர்களிடம் கூட கன்னடத்தல்லினே மாத்தாடுது. கன்னட இஞ்சினியரில் ஒருவர் பெயர் நாராயனப்பா. அவரிடம் மறுநாள் “ஏனு சார், செனஹிதிரா?’ (என்ன சார், நல்லாயிருக்குறீங்களா?)ன்னு கேட்டதுதான் தாமதம் பாய்ந்து வந்து அடுத்த கேள்விய கேக்குறதுக்குள்ள வாய பொத்திகிட்டு தனியா தள்ளிக்கிட்டு போயிட்டாரு.

‘டேய், எனக்குத்தான் தமிழ் தெரியுமே, நேற்றுவரை தமிழ்ல தானே எங்கிட்ட பேசுன, இன்னைக்கு என்ன செனாஹிதிரா?, தமிழ்லேயே பேசு போதும்.’

‘ஏனு சார், ஈத்தர மாத்தாடுத்தாயிதிரா?’

‘டேய் உன்ன கொன்னே போட்டுருவேன். ஒழுங்க தமிழ்லேயே பேசிரு’

‘என்னசார், இப்படி பேசுரீங்க?, கன்னடத்துல பேசுறது நல்லதுதானே, எனக்கு கன்னடம் தெரிஞ்சமாதிரி இருக்கும். நேற்றுமட்டும், சிரிச்சு, சிரிச்சு ரசிச்சீங்க.’

‘நேற்று அவர்கிட்ட என்ன பேசுன, அத தமிழ்ல சொல்லு?’ ன்னு நாராயணப்பா கேட்டாரு.

அவர் கேட்டபின்பு, எனக்கு ஒரே குழப்பம், நேற்று பக்கத்துல இருந்து கேட்டவருக்கு அதுக்குள்ள எப்படி மறந்துச்சு. எதுக்கு மறுபடியும் தமிழ்ல கேட்குறாருன்னு குழப்பத்துக்கு முடிவுதெரியாமல் நான் நேற்று கன்னடத்தில் சொன்னதை திரும்ப தமிழில் சொன்னேன் ‘உங்களைப் பற்றி எனக்கு தெரியும், நீங்கள் ரொம்ப நல்லவர், என்னுடய எல்லா பில்லையும் சீக்கிரம் அப்ரூவ் பண்ணிவிடுவீர்கள்..................................’ என்று மூன்றாம் வகுப்பு மாணவன் கணித வாய்ப்பாடு சொல்லுறமாதிரி சொல்லிக்கொண்டிருந்தேன்.

‘நீ சொல்ல நினைத்தது அது, ஆனால் நீ கன்னடத்தில் சொன்னது அப்படியல்ல’ என்று நாராயணப்பா சொல்ல, ‘என்ன சார் சொல்லிறீங்க, அப்ப நான் என்னதான் சொன்னேன்?’ பரிதாபமாக கேட்டேன்.

‘உன்னப்பத்தி எனக்கு தெரியாதா? நீ நல்லவனா? என்னுடய எல்லா பில்லையும் சீக்கிரம் அபேஸ் பண்ண நினைச்சியா?........................’ என்று அவர் சொல்ல சொல்ல எனக்கு அந்த குளிரிலும் அப்படி வேர்த்துக்கொட்டியது. ‘இப்படி கேள்விக்குறியா கேட்டு, நம்ம வேலையே கேள்விக்குறியாடுச்சே, கண்டிப்பா இன்னைக்கு அக்கவுண்ட செட்டில் பண்ணிருவானுங்க’ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. மற்ற இஞ்சினியர்கள் எல்லாம் நான் கூறவந்ததைக் கூற, அவரும் புரிந்து கொண்டு, அந்த விசயத்தை அப்படியே விட்டுவிட்டார். ஆனால் ‘அடுத்த மாசத்துக்கும் அவர்கிட்டத்தான பில்லக்கொண்டு போகனும், எப்படி அவர் மூஞ்சில முழிக்கிறது’ என எனக்கு சங்கோஜமாக இருந்தது.

அடுத்தமாசம்

‘வாப்பா யாஸிர், என்னே இந்தேமாசம் எத்னே கோடி பில்லு இருக்குதுஉ?’ என விஜயகாந்த் பட ஆப்கானிஸ்தான் வில்லன் மாதிரி ஜெகனாதன் தமிழ்லில் கேட்க எனக்கு ஒரே ஆச்சர்யம், ‘தமிழ் தெரிஞ்சிக்கிட்டே நம்மகிட்ட தெரியாதமாதிரி இவ்வளவு நாளா நடிச்சிருங்காரு’ன்னு மனதில் நினைத்தது அவருக்கு கேட்டுவிட்டது போல. ‘ஏனு நீ மட்டு தான் எங்கே பாஷையை கொல்லை (கொலை) பண்ணுவியா, நான் உங்கே பாஷையை பண்னேக்கூடாதா, ஸோ, நா தமிழ் காத்துக்க (கற்றுக்கொள்ள) ஆரம்பிச்சிட்டேன்’ என்று சொல்ல, அன்னையில இருந்து கனவுல என்னை வள்ளுவர் வாளோடு துறத்துராரு.


________________________________________________________________________________________________யாஸிர்.

3 கருத்துகள்: