புதன், ஆகஸ்ட் 28, 2013

வேதியியல் (கெமிஸ்ட்ரி) வாத்தியார்.

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
இவர் இன்ன பாடம்தான் எடுக்கிறார் என்று வாத்தியார்களின் முகத்தைப்பார்த்தே கண்டுபிடிச்சிடலாம். கணக்கு வாத்தியார் என்றால் முகத்தில் கொஞ்சம் தெய்வகடாச்சனம் தெரியும், தமிழ்வாத்தியார் என்றால் மீசை கொஞ்சம் பெரிய சைசில் இருக்கும், அறிவியல் வாத்தியார் என்றால் கொஞ்சம் சிரிச்சமுகமாக இருப்பார். வரலாறு வாத்தியார் முகம் மோனோலிசா ஓவியம் மாதிரி ஒரு சிறு கவலை ஒட்டிக்கொண்டிருக்கும், ஆங்கிலவாத்தியார் என்றால் கிளீன் ஷேவ்வாக இருப்பார். நான் சொல்கிறது 80% பொருந்தும், சில சமயங்களில் மாறுதலுக்குட்பட்டது. ஆனால், 100% உத்திராவதம் கொடுத்து சொல்லுவேன், எந்தகாலத்திலும் மாறாத, மாறவும் போகத ஒரு முகத்தோற்றம் உண்டு என்றால் அது வேதியல் வாத்தியார்களுடயதுதான், வேப்பங்க்கொட்டய திண்ணவனுங்க மாதிரி மூஞ்சி ‘உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ன்னு இருக்கும்.

‘இதுதான் எங்க கெமிஸ்ட்ரி சார்’, ‘இவர் எங்க கெமிஸ்ட்ரி வாத்தியார்’, ‘அங்க நிக்குதுபாரு அதுதான் எங்களுக்கு கெமிஸ்ட்ரி எடுக்குது’ இப்படி பல நண்பர்களின் கெமிஸ்டரி வாத்த்தியார்களைப் பார்த்த அனுபவத்தில் சொல்லுகிறேன். வேண்டும் என்றால் உங்களது வாத்தியாரை கொஞ்சம் கண்ணை மூடி நினைத்துப்பாருங்கள் (கண்டிப்பா யாரும் அந்த முகத்தை மறந்திருக்கமாட்டீர்கள் என்றே நம்புகிறேன்) நான் சொன்னது உண்மையென விளங்கும். ஏன்னா, குழந்தைங்க பொய் சொல்லமாட்டாங்க. பள்ளிக்கூடத்துல, எங்க வாத்தியார்களுக்கு எங்களது உடலின் ஒவ்வொரு பகுதியையும் பிரித்துகொடுத்துவிடுவோம். உயிரியல் டீச்சருக்கு, காது. கணக்கு மேடத்துக்கு கை, பிஸிக்ஸ் வாத்தியாருக்கு தலை (கொட்டி கொட்டியே தலை கொட்டாங்குச்சி அளவுக்கு வீங்கிடும்), ஆங்கில வாத்தியாருக்கு கக்கா போற ஏரியா, இந்த லிஸ்டில் கெமிஸ்ட்ரி சாருக்கு கன்னமும், அதைச் சார்ந்த இடமும்.

அடி ஒன்னும் இடி மாதிரி விழும். கன்னம் என்று கரெக்டா சொல்லிவிட முடியாது. அவரது உள்ளங்கை கன்னத்திலும், பெருவிரல் கண் புருவத்திலும், நடுவிரல் காது மேல்செவிலிலும் இருக்கும். சொன்னது மாதிரி, உங்க வலதுகையை இடது கன்னத்தில் வச்சிப்பாருங்க ஏரியா உங்களுக்கு புரியும். கிட்டத்தட்ட பாதி முகத்தை கவர்பண்ணிருவாரு. கை விரல் ஒன்னு ஒன்னும் அத்தித் தண்டியிருக்கும். மற்ற ஆசிரியர்கள் அனைவரும் அடி விழும்போதே, எதுக்கு அடிக்கிறோம், ஏன் அடிக்கிறோம் என்பதை சொல்லி சொல்லி அடிப்பார்கள். ஆனால் எங்க கெமிஸ்ட்ரி சார் மட்டும்தான், பேப்பர் கொடுக்கும்போதும் சரி, தப்பு செய்துவிட்டு தண்டனைக்கு நிற்கும் போதும் சரி, 5 நிமிடம் பொறுமையாக காரணத்தை சொல்லிவிட்ட பின்புதான் அடிப்பார், ஏன் என்றால் அவரிடம் அடிவாங்கியபின்பு அரை மணிநேரத்துக்கு காது, கேக்காது. அரைமணி நேரம் கழித்த அடுத்த 10 நிமிசத்துக்கு ‘கொய்ய்ய்ங்ங்’ன்னு ஒரு சப்தம் வரும். இப்படி பார்ட் பை பார்ட்டாக வேதியல் மாற்றங்கள் எல்லாம் நடந்து முடிந்து இயல்பு நிலைக்கு வருவதற்கு சுமார் ஒரு மணி நேரம் ஆகும்.

‘சல்பேட்’ க்கும் ‘சல்ஃபைடு’ க்கும் எனக்கு வித்தியாசமே முதலில் தெரியாது. ‘இரண்டும் ஒன்றுதான், புக் பிரிண்ட் அடிக்கிறவன் போதையில இருக்கும்போது தப்பாக போட்டுட்டான்’னு நினைத்ததுண்டு. பின்பு மேலே சொன்ன ஒரு மணிநேர டிரீட்மெண்டுக்கு அப்புறம், ரெண்டு கன்னத்திலும் கையைவைத்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஆழமாக புரிந்துவிட்டது. எவ்வளவு பெரிய இரும்பு மனசுனாலும், எஃகு உடம்புனாலும் அவரு கை தான் கவிதை வாசிக்குமே அன்றி கம்புல கை வைத்து பார்த்ததே இல்லை. ‘வெற்றிவேல், வால்த்தர் வெற்றிவேல்’ மாதிரி இவர் ‘சக்திவேல், கெமிஸ்ரி சக்திவேல்’. இவர் +1, +2க்கு மட்டும்தான் பாடம் எடுப்பார். அதே ஸ்கூலில் தான் நான் 9ல் இருந்து படித்துக்கொண்டிருந்தேன், ஆகையால் அவரைப்பற்றிய போதுமான பயம் எனக்கு அப்போதே இருந்தது.
ஸ்கூல் முடிந்து பஸ்ஸுக்காக பஸ் ஸ்டாப்பில் நிற்கும்போது, +1, +2 மாணவர்கள் அவரைப்பற்றி பேசுவதை கேட்கும்போதே ‘13ம் நம்பர் வீடு’ படம்பார்த்த மாதிரி த்திர்ல்லா இருக்கும். ‘இந்த வாத்திக்காகவே நாம +1, +2 வேற ஸ்கூலுக்கு போயிறனும்’ என்று முடிவெடுத்திருந்தேன். ஆனா, எங்க அப்பா சம்மதிக்கவில்லை. பத்தாவது முடிந்து, மார்க் ஸீட் வாங்கி நேராக அடுத்த கவுண்டரில் போய் நின்றார். “என்னால இங்க படிக்கமுடியாது, தயவுசெய்து நம்ம ஊருல சேத்திருப்பா” ன்னு துடிச்சேன், துள்ளினேன், கத்துனேன் கதருனேன். ம்ம்ம்ம்கும் பெரிய மனுசருக்கு மனசு இறங்கலை. இந்த ஸ்கூல்லதான் சேர்ப்பேன்னு முடிவா சொல்லிட்டாரு. ‘சரி அப்படின்னா ஒரு டீலு, அதுக்கு சம்மதித்தால், இந்த ஸ்கூல்ல படிக்கிறேன்’ என்று அப்பாவிடம் சொன்னேன். ‘என்னல டீலு?, சொல்லு?’ னு கேட்டார். ‘இந்த ஸ்கூல்லேயே படிக்கிறேன், ஆனா ஹிஸ்டரி குரூப்தான் எடுப்பேன், சரியா?”. ‘யல நீ அப்பனா?, நா அப்பனா?, ரொம்ப பேசுத, சமட்டி, சங்குல மிதிச்சிருவேன், நீ டாக்டர் ஆகனும், அதுக்கு முதல் குருப்தான் எடுக்கனும்’ ன்னு கண்டிப்போடு சொன்னார். “அதுக்கு நான் பேசாம, படிக்காம முதலமைச்சர் ஆயிடுறேன்?, முதல் குரூப் என்றால் இந்த ஸ்கூல் வேணாம்பா” என்று கெஞ்சி கூத்தாடினேன். ஆனால் என் கண்ணீருக்கு மதிப்பில்லாமல், கட்டாயத்திருமணம் மாதிரி அந்த நிகழ்வு நடந்திருச்சு.

முதல் ஒரு வாரம் ஏர்வாடியில சேர்த்த சேது மாதிரி போகுறது வருகிறது என்றுதான் இருந்தது. ஒரு வாரத்துக்கு அப்புறமாக கொஞ்சம் தெம்பு வந்திருந்தது, அதற்கு காரணம், பத்தாவது வகுப்பு வரை மற்ற ஸ்கூலில் படித்துவிட்டு, +1, +2 படிக்கிறதுக்கு இந்த ஸ்கூலுக்கு வந்த சில அடிமைகளின் நட்புதான். முக்கியமானது, முஹம்ம்பது அலி, களஞ்சிய சுந்தரம், அருன்குமார், டைட்டஸ், சண்முகசுந்தரம், செல்வராஜா, பைரோஸ்தீன், முருகேசன்”. இவங்களை எல்லாம் “பக்கீங்க அடிவாங்குறதுக்குன்னே பஸ்ஸேரி வந்திருக்குங்க பாரு” ன்னு நினைத்து, நினைத்து ஆரம்பகாலத்தில் மனதுக்குள் அதிகமா சிரித்திருக்கிறேன். முதல்முறையாக கெமிஸ்ரி சாரிடம் அடிவாங்கும் போது எனக்கு எந்த ஒரு உணர்ச்சியுமே இல்லை, உண்மையை சொல்லப்போனால் கொஞ்சம் சிரிப்புதான் வந்தது. நானாவது பரவாயில்லை 400 மார்க், அடிவாங்குறதுக்கு எனக்கு முன், வரிசையில நின்றது எல்லாம் மேல் கூறிய பிரஸ்பதிகள்தான். அவர்கள் மார்க் 480, 475, 450, 485.... கெமிஸ்ரி சார் மாணவர்களை மட்டும் தான் அடிப்பார், மாணவிகளை தொடமாட்டார் என்று கேட்டவுடன், ‘ச்சே பேசாமா, பொம்பள புள்ளையாவாவது பிறந்திருக்கலாம், இல்லன்னா பாம்பேல போய் ஆப்ரேசன் பண்ணிக்கலாம்’ என்ற எண்ணமெல்லாம் இருந்தது. ஆனால், அடிக்குப் பதிலாக, அவர் திட்டுற திட்டு இருக்கே........அதுக்கு பேசாம அவரு பொண்ணுங்கன்னுகூட பார்க்காம தூக்கிப்போட்டு ரெண்டு மிதி அதிகமா மிதிச்சிருக்கலாம். அந்த திட்டு எல்லாத்தையும் காதால கேட்டதுக்கு அப்புறம் ‘அப்பாட பாம்பே போற செலவுமிச்சம்” ன்னு தோணுச்சு.
    
பத்தாவது படிக்கிறவரை வேதியியல் என்றால், ‘பியூரட்’ ‘பிப்பட்’ CO2’ ‘H2O’ மட்டும்தான். +1க்கு வந்த பின்பு ‘ஆர்கானிக்’ ‘இன்ஆர்கானிக்’ என்று ஏது ஏதோ சொல்ல ‘ஒரு பூகம்பம் வராதா? பூமாதேவி சிரிக்கமாட்டாளா? பூமிக்குள்ள போயிறமாட்டோமா?’ என்ற லெவலுக்கு தற்கொலை என்னமெல்லாம் மேலோங்கிவிட்டது. அதுவும் கெமிஸ்ரி லேப் எல்லாம் ரொம்ப கொடுமை. ‘பியூரெட்ட எடு, சொட்டு சொட்டா ஊத்து, பிப்பட்ட வச்சு உறிஞ்சு, குவளையை சூடாக்கு, குடுவையை கலக்கு” என்கிற வார்த்தைகளை எல்லாம் இன்னும் கேட்டால் ஒரு நடுக்கம் வரும். ஏதோ ஒரு ஆக்ஸைடை எடுத்து ஏதேதோ அமிலத்துடன் சேர்த்து, என்னவெல்லாமோ செய்து கடைசியா கலர் மாறுவதற்கு குடுவையை, சூடான டீயை கையில்வைத்து ஆற்றுவது போல, சுற்றிக்கொண்டிருக்கையில் “என்ன யாஸிர் ரிசல்ட் வத்திருச்சா?” என்பதை ‘ஜுராசிக் பார்க் படத்தில திடிரென டைனசோர் வந்து கத்தும் குரலில் கேட்பார், கேட்டமாத்திரத்தில் பதற்றத்தில் கையில இருந்த குவளையை தரையில விழுந்து உடைந்துவிடும், “மாடு, மாடு, அறிவுகெட்ட மாடு. ஒரு ரிசல்ட ஒழுங்க கொண்டுவரத்தெரியல, நீயெல்லாம் எங்க உருப்படப்போற, நீ எல்லாம் எரும மாடு மேய்க்கத்தான் லாயிக்கு’ ன்னு அர்ச்சனை எல்லாம் நடக்கும். இப்படியா பல குவளைகள், பியூரெட்டுகள், பிப்பெட்டுக்கெல்லாம் காசு கெட்டினாத்தான் +2 மார்க்சீட்டை தருவேன் என்று சொல்ல இறுதியில் பைசா பாக்கியில்லாமல் பைசல் செய்யப்பட்டது.
கெமிஸ்ரி புக் கடைசி 10 பக்கத்துல, உப்பு என்ற பெயரில் ஒரு பெரிய வேதியியல் அட்டவனை இருக்கும் அதை படி படின்னு சொல்லி உயிரெடுத்துட்டாரு. கொடுமை என்னவென்றால், அந்த அட்டவனையில் முதல் இரண்டுபக்கத்தை படித்துவிட்டு மூன்றாவது பக்கத்திற்கு போனால், முதல்ல படிச்ச இரண்டுபக்கமும் மறந்திடும். அட்டவனையோடு கட்டி புரண்டு, எழுதி, எழுதிப் பார்த்து மனப்பாடம் செய்துவிட்டு, அவர் முன்னாடி போய் நின்றால், சம்பந்தமே இல்லாம புதுஷ்ஷா ஒன்னு கேப்பாரு, ‘நம்மளை முட்டாளாக்கப் பாக்குறாரு’ ன்னு மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டே ‘இது அவுட்டாஃப் சிலபஸ் சார்’ என்று சொல்லிமுடிக்குறதுக்குள்ள. “அட்டவனை பக்கம் 5, பகுதி எண் 12” ன்னு சொல்லிமுடிச்சதுக்கப்புறம். காதுல கொய்ய்ய்ய்ய்ங்ங்க்க்க்க்க். கன்னத்த தடவிக்கொண்டே வீட்டுக்கு வந்து அட்டவனையை திருப்பி பார்த்தா, அதை படிச்ச மாதிரித்தான் இருக்கும், ‘ச்சே! கேள்விய சரியா புரிஞ்சிக்கலை, இல்லன்னா சரியா பதில் சொல்லியிருப்பேன், அடுத்த முறை கேள்வியை நல்லா புரிஞ்சி பதில் சொல்லனும்’ என்று முடிவெடுத்து போய் நின்றால், ரெண்டு முறை கேள்வியை கேட்டபின்பும், கேள்வி ரொம்ப புதுசா இருக்கும் “என்ன சார், இன்னொரு தடவ சொல்லுங்க?”ன்னு கேட்பேன் “இன்னொரு தடவ சொல்லிட்டாமட்டும் பதில் சொல்லி கிழிச்சிருவியாக்கும், மாடு, மாடு” ன்னு சொல்லிட்டு எக்ஸ்ட்ராவாகவும் திட்டுவார், அப்படி எக்ஸ்ட்ராவா திட்டுறது எதையும் நான் காதுகொடுத்து கேட்பதே இல்லை, ஏன்னா, கொய்ய்ய்ய்ங்ங்ங்க்க்க்.

அவர் அடில இருந்து மட்டும் எவ்வளவு பெரிய மன்னாதி மன்னன் என்றாலும் தப்பிக்க முடியாது. அவரது வலது கையை ஓங்குவாரு, நாம தப்பிக்குறதுக்கு முகத்தை இடது பக்கம் திருப்பினால், முழுசா திருப்புறதுக்கு முன்னாடியே இடதுபக்கத்தில் அடி விழுந்திருக்கும். ஆச்சிரியப்பட்டு நிமிர்ந்துபார்த்தால் வலதுகன்னத்தில் கையிருக்கும். “சொத்”ன்னு சின்னதாகத்தான் சவுண்ட் வரும், ஆனா, அம்மக்கட்டு வந்தவன் மாதிரி கன்னம் எல்லாம் வீங்கிப்போகும். காலேஜ் படிக்கும் போது ஒரு முறை அவரை பார்க்க நேர்ந்தது, அதிக மரியாதையுடனும், ஒரு சின்ன பயத்துடனும் வணக்கம் வைத்தேன், ‘என்னப்பா நல்ல இருக்குறியா?” என்பதைக்கூட “நீயெல்லாம் எங்க நல்லா இருக்கப்போற” என்ற தோரணையிலேயே கேட்டார். வேலைக்கு எல்லாம் சென்றபின்பு அவரைப் பற்றிய ஞாபகம் வர, என் நண்பனிடம் அவரைப் பற்றி கேட்டேன், அவர் பள்ளியை விட்டு சென்றுவிட்டதாகவும், விருதுநகரில் ஒரு கல்லூரியில் வேலை செய்வதாகவும் சொன்னான். நான் காலேஜ் விருதுநகரில் படித்திருந்ததால் அங்குள்ள கல்லூரிகளைப் பற்றி தெரிந்திருந்ததால்  ‘விருதுநகரிலா? எந்தகாலேஜ் டா?” என்று நண்பனிடம் விசாரித்தேன். நண்பன் அந்த கல்லூரி பெயரைச் சொன்னதும், நான் மூச்சை இழுத்துவிட்டேன். இனிமேல் அவரைப்பற்றிய கவலை நமக்கு வேண்டாம், இனி அந்த மாணவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று சாந்தமாகிவிட்டேன். கேண்டினில் இருக்கும், உளுந்த வடையில ஓட்டை இருக்குது, பருப்பு வடையில ஏன் ஓட்டை இல்லை என்ற கருத்தாழமிக்க ஒரு ஆய்வுக்காக காலவரையின்றி கல்லூரியை மூடவைத்த மாண்புமிகு மாணவர்கள், கண்டிப்பாக எனது வாத்தியாரை நல்லபடியாக பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


என்னுடய +2 மொத்த மதிப்பெண்களில், கெமிஸ்ரியில் தான் மார்க் மிக அதிகம். அதற்காக நான் கொடுத்த விலையும் (கொய்ய்ய்ய்ங்ங்ங்க்) ரொம்ப அதிகம்.

________________________________________________________________________________________யாஸிர். 

2 கருத்துகள்: