திங்கள், செப்டம்பர் 26, 2016

அரபி வீட்டுக் கல்யாணம்.

அன்வர், ஜித்தா ஆபிசின் பி.ஆர்.ஓ வாக இருக்கிறார். சௌவுதிக்காரர். அரபி மொழி தவிர்த்து அவருக்கு வேறு எந்த மொழியும் தெரியாது. ஆங்கிலத்தில் நான் ‘ஒன்’ என்றால், ‘ஷீ?’ (என்ன?) என்று எதிர் கேள்வி கேட்கும் ஆள். என்னுடய விசா சம்பந்தமாக அவரிடம் பேசுவதாக இருந்தால், இரண்டு எனர்ஜடிக் டிரிங்க்ஸ் வாங்கி வைத்துக்கொள்வேன். சவுதிக்கு வந்த நாள் என்பதை அவருக்கு புரியவைக்க கையை விமானம் போல் இறக்கி ‘’ஆதா சவுதி டர்ர்ர்ர்ர்’’ என்றும், துபாய்க்கு சென்ற நாள் என்பதை அதே போல மேலே தூக்கி காட்டி ‘’ஆதா துபாய் சர்ர்ர்ர்’’ என்று மோனாக்டிங்க் செய்யவேண்டும்.

இப்படி பல டர்ர்ர்ர், புர்ர்ர்ர்களை செய்து காட்டினாலும் ரிசல்ட் என்னவோ டுர்ர்ர்ர்தான். அரபியில், அவர் சொல்வதில் எனக்கு புரிந்தது, நான் சொல்வதில் அவருக்கு புரிவது இரண்டு உண்டு என்றால் அது ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ ‘வ அலைக்கும் அஸ்ஸலாம்’ மட்டும்தான். ‘நேத்து விசா ரினிவல் பண்ணனும்னு சொல்லிவிட்டு ஏன் வரவில்லை?’ என மோன்-ஆக்டிங்கில் அரை மணிநேரம் விசாரித்தால், ‘’ஆதா கொர்ர்ர்’’ என தூங்கிவிட்டதாக, கண்ணை மூடி குரட்டை விட்டு காட்டுவார். 

இப்படித்தான் ஒரு நாள், பக்கத்து ரூமில் ஒருவனுடன் கையை குலுக்கி குலுக்கி பேசிவிட்டு, என் ரூமிற்கு வந்து கையை பிடித்து ‘’ஈஜி’’ ‘’ஈஜி லாஜிம் ஈஜி’’ என குலுக்கிவிட்டு அடுத்து மேனஜர் ரூமிற்கு போனார். மேனஜரிடம், என்னை கைகாட்டி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். அன்வர் குலுக்கியதில் பாதியும், நடப்பதை பார்த்து மீதியுமாக குலுங்கிப்போய் நின்றேன். வடிவேல் காமெடியில், தண்ணிக்குள்ள இருந்து திரும்பவந்து ‘சொல்லிறாதீங்க, அடிச்சி கேட்டாலும் சொல்லிறாதீங்க’ என்பது போல திரும்ப வந்து ‘’ஈஜி’’ ‘’ஈஜி லாஜிம் ஈஜி’’  என சொல்லிவிட்டு சென்றார்.

‘’மோன் ஆக்டிங்கில் ஏதும் தப்பா புரிஞ்சிக்கிட்டு கம்ளைண்ட் பண்ணுறாரோ?’’ என்ற பயம், அதே நேரத்தில் இந்த நாட்டின் தலை வெட்டும் தண்டனையும் எதேச்சையாக எண்ணத்தில் வந்து தொலைந்தது. மேனஜர் என்னிடம் வந்து ‘அவர் பொண்ணுக்கு கல்யாணமாம், கண்டிப்பா நாம எல்லோரும் கலந்துக்கனுமாம், உன்னையும் கூட்டிக்கொண்டு வரச்சொல்லிவிட்டு போகிறார்’’ என சப் டைட்டில் போட்டார். உயிர் வந்தது. ‘நாளைக்கு 11 மணிக்கு, நீ ரெடியா நில்லு நான் வந்து கூட்டிக்கொண்டு போகிறேன்’ என்றார் மேனஜர்.  
    
அபுதாபியில் ஏழு வருசம் இருந்தாலும், ஒரு முறைகூட அரபிகளின் கல்யாண கொண்டாட்டத்தில் கலந்துகொண்டது இல்லை. இதை, யாரும் என்னை கூப்பிடவில்லை என்றும் கூறலாம். 10.30 க்கு எல்லாம் ரெடியாகி மேனஜருக்காக காத்திருந்தேன். 10.45 ஆச்சு ஆளாக் காணோம். நாம போய் தாலி எடுத்துக்கொடுக்காம  மாப்பிள்ளை தாலி கட்டமாட்டானே என்ற பதட்டத்தில், மேனஜருக்கு போன் செய்தால் ‘’காலையில 11 மணி இல்ல, இரவு 11 மணி’’ என்றார். என்னது இரவு 11 மணியா? அடப்பாவிகளா, எங்க ஊர்லயெல்லாம் காலையில கல்யாணம் முடிஞ்சு, நைட்டு 11 மணிக்கு பாப்பாவுக்கு ரெடிபண்ணுற நேரம்மாச்சேடா????!!!!. தப்புப் பண்ண வேண்டிய நேரத்துல, தப்பு தப்பா பண்ணுரீங்களேடா. 
 
இரவு 11 மணிக்கு கல்யாண மண்டபத்திற்கு சென்றால், அங்கே இரண்டு வாசல், ஒன்னு பெண்களுக்கான ஹாலுக்கு, மற்றொன்று ஆண்களுக்கான ஹாலுக்கு. பெண்களுக்கான வாசல் வழியாக ஆண்களுக்கு அனுமதியில்லை. அரபிகளின் வழக்கப்படி, ஆண்களுக்கான வாசலில் அன்வர் நின்றுகொண்டு கன்னத்தோடு கன்னம் வைத்து முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் தெரிந்தது ஏன்? பெண்களுக்கான வழியில் செல்லக்கூடாது என்று. அரை தூக்கத்தில் உள்ளே சென்றால், அந்த அத்த ராத்திரியிலும் எல்லா அரபிகளும் டீயும், பேரிச்சம் பழம் கையுமாக ப்ரஷ்ஷாக இருந்தார்கள்.

என்னோட ஆபிஸில் இருக்கும் ஒருவனிடம் ‘’என்னடா? தி.மு.கவுல சேரவந்த தே.மு.க.காரனுங்க மாதிரி இவ்வளவு கூட்டம்? அதுவும் இத்தன மணிக்கு?’’ என்று கேட்டேன். இதுதான் சவுதியில் நடமுறையாம், 12 மணிக்கு ஆரம்பித்து, அதிகாலை 5 மணி வரை கல கல வென இருக்குமாம். என்னோட அகராதியில் கல்யாணத்தில் கல கல என்றால் அத்த பொண்ணுங்க, மாமன் பொண்ணுங்க பக்கத்துல உட்கார்ந்து பேசுறதுதான். அது இல்லாம என்ன மானங்கெட்ட கல கல?. சுத்தி சுத்தி பார்த்தா எல்லாம் உஜாலா விளம்பரத்துக்கு ஆடிசனுக்கு வந்தவனுங்க மாதிரி வெள்ள டிரஸ்ல அங்கயும், இங்கயும் சுத்திக்கிட்டு திரிஞ்சானுங்க. எல்லாமே வித்தியாசமாக இருந்தது / ரொம்ப புதுசாவும் இருந்தது.

சுத்தி ஷோபாக்களாக இருந்தது. ஒன்றில் அமர்ந்தவுடன், ஒரு சின்ன கிளாசில், இளம் பச்சை நிறத்தில் நல்ல வாசனையுடன் ஒன்றை தந்தார், ‘’சூப்பா?’’ என்று கேட்டேன், ‘’இல்லன்னா மட்டும் நீ வேணாம்னா சொல்லப்போற’’ என்ற அர்த்தத்தில் பார்த்துவிட்டு கொடுத்தான். அது ஒரு விதமான அரபிக் காவா டீ. குடித்தவுடனேயே குமட்டிக்கொண்டு வந்துவிட்டது. பின்பு அங்கு அடிக்கிவைக்கப்பட்ட பேரிச்சம் பழத்தில் ஒரு பத்து எண்ணத்தை பதம் பார்த்தபின்புதான், நாக்கு இயல்பு நிலைக்கே திரும்பியது.

நம்ம ஊர் கல்யாணத்திற்கும், அரபி கல்யாணத்திற்கும் ஒன்றைத் தவிர எல்லாமே வித்தியாசம். பொதுவான அந்த ஒன்று ‘’சாப்பிட வாங்க’’ என்றவுடன் மொத்தகூட்டமும் ராணுவ அணிவகுப்புடன் செல்வது. முதலில் எல்லோரும் எழுந்தவுடன், நான்கூட மாப்பிள்ளையை அழைத்துவருகிறார்கள் போல என எண்ணிக்கொண்டேன். பின்பு ஒவ்வொருவரின் வேகத்தைக் காணும் போதும் புரிந்துபோனது. பகலில் திருமணம் என்று எண்ணியபோது, அரபி சாப்பாட்டை ஒரு கை பார்த்திடவேண்டியதுதான் என்று நினைத்திருந்தேன். இரவு 11 மணி என்றவுடன், சாயாவும், பேரிச்சம் பழமும்தான் என்றுதான் நினைத்தேன். காரணம் ‘’12 மணிக்கு எல்லாம் யாரு சாப்பிடுவார்கள்?’’ என்று கப்பித்தனமான கால்குலேசன்தான்

டைனிங்க் ஹாலில் போய் பார்த்தால், யூ டூபில் பார்த்து, கீ போர்டில் எச்சிவிட்ட அரபி சாப்பாடு. ஒரு பெரிய்ய்ய தட்டில் இறைச்சியில் அங்க அங்க சில சாதங்கல் ஒட்டியிருந்தன, அதைச் சுற்றி ஜீஸ்கள், சோடாக்கள் என செரிமான அய்ட்டங்கள் வேறு. அன்னைக்கு என்று பார்த்து இரவுச் சாப்பாடை இரண்டுமுறை சாப்பிட்டிருந்தேன். வயிற்றில் கொஞ்சம் கூட இடம் இல்லை. ஒரு தட்டைச் சுற்றி என்னுடன் மேலும் இரண்டு பேர். பக்கத்து டேபில்காரகள் உட்பட அனைவரும் ஆக்ரோசமாக பந்தை மைதானத்திற்கு வெளியே பறக்க விட்டுக்கொண்டிருந்தார்கள். நானோ லெட்சுமணன் மாதிரி பந்தை காலுக்குள்ளேயே நிருத்திக்கொண்டிருந்தேன்.

 ‘’சாப்பாடு என்றால் இதுதாண்டி சாப்பாடு’’ என என் மனைவியை பிளைட் பிடித்துக்கொண்டு வந்து காட்டவேண்டும் போல இருந்தது. என்ன ஒரு டேஸ்ட். இந்த மாதிரி ஒரு விருந்து என்று அன்வர் சொல்லி இருந்தால், ஐந்து நாள் பட்டினி கிடந்திருப்பேனாடா. போச்சே.......போச்சே. சாப்பிட்டுவிட்டு வந்தவுடன் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற பெயரில் இசைக் கச்சேரி வைத்து கொன்று கொண்டிருந்தார்கள். பாடல்கள் எல்லாமே ‘’நின்னுக்கோர் ர்ரீஈஈஈ வர்ணம்’’ ரகம்தான். பாடலுக்கும், தாளத்துக்கும் சம்பந்தமே இல்லை. ‘’உங்களுக்கெல்லாம், சரணம், பல்லவி, அனுபல்லவி என்றால் என்னனு தெரியுமாடா?’’ என நாக்க புடுங்குறமாதிரி கேட்கணும் தோணுச்சு. ஆனால், ‘’அவங்களோட ரேட் என்ன?’’ என்று திருப்பிக் கேட்டுவிட்டாள்? நானெல்லாம் மானஸ்தன், தொங்கிருவேன்.

அன்வரை ''அவர்'' என்று மரியாதையோடு எழுதக் காரணம், ஆள் பார்க்க இரண்டு ஹல்க்கை இணைத்துவைத்ததுபோல் இருப்பார் என்பது மட்டுமல்லாது, அவருக்கு ரெண்டு பொண்டாட்டி. அதுவும் இருவரையும் ஒரே வீட்டில்வைத்துக் கொண்டு வாழுகிறார். இது போதாதா, ஒரு மனிதனுக்கு மரியாதை கொடுக்க. ஒருமுறை ‘’எப்படி அன்வர், ரெண்டு மனைவியையும் சமாளிக்கிறீங்க?’’ என்று கேட்டேன். அதற்கு அன்வரோ ‘நிறைய பாதாம் பருப்பு, பேரிச்சம் பழம், ஆவக்காடு ஜீஸ் சாப்பிடுவேன்’ என்றார். அடங்க்..... ‘’நான் அந்த சமாளிப்பைப் பற்றி கேட்கவில்லை, ரெண்டு மனைவியையும் ஒரே வீட்டில் எப்படி சமாளிக்கிறீங்கன்னு கேட்டேன்’’. அதற்கு அன்வர் ‘’ரெண்டிற்கும் சண்டை வரும் சமயத்தில் மூன்றாவது பற்றி பேசுவேன்’’ என்றார் கூலாக.

மண்டபத்தில் வலிமா எனப்படும் விருந்து மட்டுமே நடைபெருகிறது. திருமண ரிஜிஸ்டெர் பகலில் ஏதாவது ஒரு பள்ளிவாசலிலோ அல்லது அதற்கான கவர்மெண்ட் ஆபிஸிலோ சிம்பிளான கையெழுத்துடன் முடிந்துவிடுகிறது. இது அன்வரின் எத்தனையாவது மனைவியின், எத்தனையாவது மகள் திருமணம் என்று தெரியவில்லை, மேலும் எத்தனையாவதாக கட்டிக்கொடுத்தார் என்றும் தெரியவில்லை. வயிற்றில் இடம் இல்லாத போதும், அன்வரின் அன்புக்காக இறைச்சி மட்டும் இரண்டு கிலோ தின்று நடக்க முடியாமல் நடந்து ரூம் வந்து சேர்ந்தேன்.


------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.  

8 கருத்துகள்:

 1. நண்பரே மிகவும் அருமை, இப்படி ஒரு விருந்தை சாப்பிடவில்லையே என வருந்தவைத்து விட்டீர். கூட்டத்திற்க்கு என்ன ஒரு உவமானம். நம்ம ஊர் முஸ்லீம் வீட்டு கல்யாணத்திற்க்கும் அரபு கல்யாணத்திற்க்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு பதிவு எழுதினால் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துக்கு நன்றி. நம் நாட்டில் முஸ்லீம்களின் திருமணம் இந்து திருமணங்களிலிருந்து அக்னி குண்டம், தாலி, அய்யர் தவிர பெரிய வேறுபாடு இல்லை. நமக்குள் மதம் வித்தியாசம்தானே அன்றி கலாச்சாரம் ஒன்றுதான்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. நீங்க பார்த்து கண்ணு போட்டா? வயிறு வலிக்கும்ல அதுனாலதான் போடல.

   நீக்கு
 3. நான் ஓமானில் இருக்கும்பொழுது நானும் ஒரு அரபிவீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தேன். அங்கேயும் இரவுதான் திருமணவிருந்து. மணமகன் ஏழை என்பதால் மண்டபமெல்லாம் பிடிக்கவில்லை, அவரின் வீட்டருகிலேயே பெரிய மைதானத்தில் அனைவருக்கும் விருந்து. பெண்களெல்லாம் எந்த பக்கம்னே தெரியலை. இஸ்லாமிய முறைப்படி பெரிய தட்டை சுற்றி நானும், என் நிறுவனத்தில் பணியாற்றிய நான்கு ஓமானிகளும் உட்கார சாப்பிட முதலில் தயக்கமாயிருந்தாலும் பின்னர் சரியாகிவிட்டது. ஒரே தட்டன்றாலும் ஒரே பகுதியில் இருந்துதான் சாப்பிட வேண்டும் என்று தெரியாமல், அனைத்து பகுதியில் இருந்து அள்ளி சாப்பிட அவர்கள் சிரித்தார்களே தவிர வேறொன்றும் சொல்லவில்லை. பின்னர் ஓமானி நண்பர் விருந்து முடிந்த பின்பு இதைச்சொல்லி சிரித்தார், நான் முதல்முறை என்பதால், நீங்கள் ஏன் சொல்லவில்லை என நானும் சேர்ந்து சிரித்தேன். பசுமையான நினைவுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னுடன் இருந்தவர்கள் இங்கிலீஸ்காரன் போல ஸில்லித்தனமா ஸ்பூனில் சாப்பிட்டார்கள், ஆனால் மட்டன் துண்டு எதுவும் ஸ்பூனில் அடங்க மறுத்ததால், கடைசியில் என்னுடன் கையில் எடுத்தே சாப்பிட்டார்கள். சாப்பிட்ட பின்பு தட்டில் வெரும் சோறுதான் இருந்தது நாங்கள் மட்டனை எல்லாத்தையும் காலிசெய்துவிட்டோம்.

   நீக்கு