வியாழன், அக்டோபர் 27, 2016

நேரம் ரெக்கார்ட் டான்ஸ் ஆடியபோது.....

பொறந்த வீட்டுக்குப் போகும் புதுப்பெண் போல குவைத்திற்கு அவ்வளவு சந்தோசமாக சென்றுவிட்டு, புகுந்த வீட்டிற்கு திரும்புவது போல மூஞ்சை உர்ர்ர்ர் என்று வைத்துக்கொண்டு ஜித்தாவிற்கு திரும்பிச் செல்ல ஏர்போர்ட்டில் நின்றேன். (‘’இல்லன்னா மட்டும் உன் மூஞ்சு.....’’ என்ற மைன்ட்வாய்ஸ் வாலியூமை குறைத்துக்கொள்ளவும்). குவைத்தில் வந்து இறங்கிய போது முன்னழகால் முரட்டு முட்டு முட்டி ‘’வெல்கம் டு குவைத்’’ என்பதை உணர்த்திய அந்த பெண் இருக்கிறாளா? என பலமுறை திரும்பிப் பார்த்து ஏமாந்துபோனேன்.

பெட்டர்மாஸ் லைட்டேதான் வேண்டும் என்று அடம்பிடிப்பவன் அல்ல நான். ஒரு சிம்னி விளக்காவது இடிக்காதா? என்ற ஏக ஏக்கத்தில் ஸ்லோமோசனில் நடந்தேன். விளக்குகளின் அளவை வைத்து தவறாக எதையும் நினைத்து கற்பனைக் குதிரையை ஓடவிடவேண்டாம். துர்பாக்கிய துர்நாற்றத்தில் முகம் மேலும் உர்ர்ர்ர் என்று மாறியது (இங்கு மைன்ட்வாய்ஸை மியூட் செய்வது நலம்). பாஸ்போர்ட் கவுண்டரில் இருந்து வெயிட்டிங்க் ரூம் கிளீனர் வரை ஆணாதிக்க அசிங்கங்கள். எங்கே?, கடைசி ஆசை நிரைவேறாமல் தூக்குக் கயிற்றின் முன் நிற்கும் கைதிபோல சோகம் கவ்விய முகமாய் நின்றேன்.

விமானத்தில் ஏரியதும், ஏர் ஹோஸ்டர் ‘’உங்க பக்கத்து சீட்டு ஒரு லேடி, பரவாயில்லையா?’’ என்று கேட்டாள். ‘’மகாசக்தி மாரியம்மன்’’ பட கே.ஆர் விஜயாவே கேட்பது மாதிரி இருந்தது. ‘’தாயே உன் கருணையே கருணை’’ என்று கூறி சீட்டை நோக்கி உசைன் போல்டின் சாதனையை மிஞ்சும் வேகத்தில் ஓடினேன். இந்த சீட்டுதானா? என கன்பார்ம் செய்வதற்குள் அந்த லேடி எழுந்துவிட்டாள். தன்னால் ஒரு ஆண் பக்கத்தில் இருக்க முடியாது என கூறி வேறு சீட் கேட்டுச் சென்றுவிட்டாள். நான் இன்சல்ட் செய்யப்பட்டதாக நினைத்த அந்த ஏர் ஹோஸ்டர் என்னிடம் சில ‘’ஸாரி’’களைச் சொன்னாள். அப்போது மாரியம்மன் மார்டன் கேர்ள் கே.ஆர் விஜயாவாக காட்சியளித்தாள்.  உண்மையில் நான் தான் கே.ஆர்.விக்கு நன்றி சொல்லியிருக்க வேண்டும். பிரம்மனின் ஒர்க்-ஷாப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறின் பழைய மாடல் லாரி அந்த லேடி. ‘’நல்லவேளை தப்பித்தோம்’’ என முதலில் தோன்றினாலும், பின்பு ‘’ச்சே அந்த பாழடைந்த பங்களாகூட, நம்மை பால்காய்ச்ச வந்தவனாக நினைத்துவிட்டதே...’’ என்றெண்ணி மனது ரணமானது.

எனது தன்மானத்திற்கு ஏற்படுத்திய தவறுக்கு பிராயச்சித்தமாக கே.ஆர்.விஜயா அங்கும் இங்கும் போகும் போது என்னைப் பார்த்து சில சிரிப்புகளை சிதறவிடுவாள். நானும் பொறுக்கிக்கொண்டேன் என்பதை மெதுவாக கண்மூடி திறந்து தெரிவிப்பேன். இந்த சிம்பதியால், உணவு கொடுக்கும்போது ஒரு பன்னும் ஒரு ஆப்பிள் ஜீஸும் அதிகமாக வைத்துவிட்டுப்போனால். இது பிரம்மன் ஒர்க்ஷாப் தண்ணி லாரியில் அடிபட்ட வலியைவிட அதிகமாக இருந்தது. நான் மானஸ்தன் என்பதால் அவள் அதிகமாக கொடுத்த பன்னை தொடவில்லை. ‘’அப்போ, ஆப்பிள் ஜீஸ்?’’ என்றா கேட்டீர்கள்?, இல்லைதானே?.

ஜித்தாவில், எமிக்ரேசனின் லைனில் என்னை தள்ளிவிட்டு ஒருவன் முன்னேறினான். ஒரு ஸாரி கூட கேட்கவில்லை. ‘’இலியானா இடை இல்லையானா’’ பாடலில் விஜய்னா வைத்திருப்பது போன்ற மொன்ன தாடி வைத்திருந்தான். ‘’விஜய் மாதிரி இருந்தானா?’’ என்று கேட்டால், விஜய் அளவிற்கு இல்லையென்றாலும் கொஞ்சம் அழகாகவே இருந்தான். அவன் செய்ததுதான் சரி என்ற தொனியில் முன்னேறிச் சென்றான். பெரிய்ய லைன்னில் என் முறை வருவதற்கு ஒரு மணிநேரத்திற்கும் மேல் ஆனது. பாஸ்போர்ட்டைக் கொடுத்த பின்பு, கம்யூட்டர் கவுண்டருக்கு செல்லுமாறு கூறினார். என்னுடய சௌவுதி விசாவை கம்பெனி மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்திருந்தது. பொதுவாக இதுமாதிரியான கேஸ்கள் உடனடியாக கம்யூட்டரில் அப்டேட் ஆகாது என்பதை முன்பு அறிந்திருந்ததால், வேறு எதையும் யோசிக்கவில்லை. கம்யூட்டர் கவுண்டரில் இருக்கும் போலிஸ், கம்யூட்டர்ஜி உடன் பேசிவிட்டு என் முகத்தை பார்த்தார். கொஞ்சம் நேரம் உட்காரச் சொன்னார். பின்பு அரை மணி நேரம் கழித்து ‘’என் பின்னால் வா’’ என்று சைகையில் கூறினார். நானும் வீட்டுக்குத்தான் அனுப்புறானுங்களோன்னு நம்பி போனேன்.

‘’மச்சான் ஒருத்தன் சிக்கி இருக்காண்டா’’ ரேஞ்சில் என்னப் பார்த்துவிட்டு அண்டர் கிரவுண்ட்டில் நாலு போலிஸ் சுத்தி இருக்கும் வட்ட மேஜை மாநாட்டுக்கு கூட்டிச்சென்றார். என்னை, பக்கத்தில் இருக்கும் ஒரு சேரில் வெயிட் பண்ணச் சொன்னார்கள். எனக்கு முன்னாடி ஒருவனை வ.மேஜையில் வைத்து விசாரித்துக்கொண்டிருந்தார்கள். சினிமாவில் பார்த்த ஒரு சீனை நேரில் பார்க்கும் போது வயிற்றில் ஒரு பிரளயமே நடந்தது. கண்கள் சொறுகியது, காது அடைத்தது, தொண்டை வரண்டது. ‘’யாரை விசாரிக்கிறார்கள்?’’ என்பதை, பெண் பார்க்கும் படலத்தில் டீயை கொடுத்துவிட்டு தலையை தூக்கியும், தூக்காமலும் மாப்பிள்ளையைப் பார்க்கும் பெண் போல பார்த்தேன். மாப்பிள்ளை யாருமில்லை நம்ம தாடி விஜய்னா தான். அவனைச் சுற்றி சுறா, புலி, குருவி தயாரிப்பாளர்கள் போல போலிஸ் உட்கார்ந்து விசாரித்துக் கொண்டிருந்தார்கள். ‘’நான் யாரையும் தள்ளிவிட்டு முன்னாடி போகலியேடா?’’ என்ற நினைப்பில் பேந்த பேந்த முழுத்துக்கொண்டிருந்தேன்.

அவன் ஒரு மாத இடைவெளியில், லெபனான், எகிப்து, குவைத் நாட்டில் இருந்துவிட்டு இப்போது சவுதி வந்ததால், எதற்கு லெபனான் சென்றாய்?, எகிப்து சென்றாய்? யாரை பார்த்தாய், எங்கு இருந்தாய்? என்றவாரே கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதிலிருந்து இது ஒரு தீவிரவாத விசாரனை என்பதை உணரமுடிந்தது. கிட்டத்தட்ட நானும் துபாய், சவுதி, குவைத் என ஒரு மாதகாலத்தில் பயணித்துக்கொண்டிருந்ததால், வயிற்றில் புளி இல்லை புளியமரமே கரைத்தது. என் முறை வந்தபோது கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்த போலிஸ் குவைத் சென்ற காரணம்?, என்ன வேலை பார்கிறார்? என்பதைக் கேட்டார். காரணத்தைச் சொன்னபின்பும், இஞ்சினியர் என்பதை நம்பவில்லை என அவர் கண்ணிலிருந்து அறிந்துகொண்டேன். குவைத் விசாவிற்காக லேப்டாப் பேக்கில் இருந்த சர்டிபிகேட் காப்பியை காண்பித்தேன். மேலும் தீவிரவாதியா? என்ற கோணத்தில் விசாரிக்க ஆரம்பித்தால் ‘’சார் நான் அவ்வளவு ஒர்த் எல்லாம் இல்லை’’ என்ற எம்பெருமான் வடிவேலு வசனத்தைச் சொல்ல எத்தனித்தேன். பின்பு, அவரே, என் விசா வேலிட் முடிந்துவிட்டதாகவும், புது விசாவில்தான் இனி சவுதி வரமுடியும் என்றும் இது விசா விதிமீறல் எனவும் சொன்னார்.

என் விசா தேதி முடிய இன்னும் 15 நாட்கள் இருக்கிறது என்பதை கூறினாலும் எதையும் காதில் வாங்காமல் வெளியே கூட்டிச் சென்றார்கள். பின்னாடிசென்ற எனக்கு அதிர்ச்சி, பேரதிர்ச்சி. ஒரு அறையில் அடைத்துவிட்டு போய்விட்டார்கள். எனக்கு முன்பாகவே விஜய்னா கதை டிஸ்கஷனில் இருந்தார், மேலும் ஒரு பத்துப்பேர் இருந்தார்கள். தரையில் பெட் போட்டு, ஒரு கனமான ஜம்காளம் கொடுக்கப்பட்டது. என்னவென்றே தெரியாமல், கலங்கிப் போய் நின்றேன், கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது. போன் என்னிடமே இருந்ததால் இரவு என்றாலும் ஆபிஸின் அத்தனை பேருக்கும் போன் செய்து விஷயத்தைக் கூறினேன். அந்த ரூம் அண்டர் கிரவுண்டில் இருந்ததால் சிக்னெல் கொடுமைப்படுத்தியது.

நாக்கு வறட்சியில் தண்ணீர் தேவைப்பட்டது, சுற்றிப்பார்த்தேன் என் போலவே பலரும் தண்ணீருக்காக தவித்துக்கொண்டிருப்பது புரிந்தது. ஏ.சி குளிரில் உச்சா வேறு ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை முட்டியது. ஓரமான டாய்லெட் கொஞ்சம் பஸ்டாண்ட் பப்ளிக் டாய்லெட்டைவிட பரவாயில்லாமல் இருந்தது. இதற்கு அப்புறம் என்ன செய்வார்கள்?, எத்தனை நாள் அடைத்து வைப்பார்கள்? நரசிம்மா படம் போல ஆடை கழைந்து, ஐஸ் கட்டியில் படுக்கவைப்பார்களா?, கரண்ட் ஷாக் கொடுப்பார்களா? நகத்தை பிடுங்குவார்களா? என்ற பல கேள்விகளால் பைத்தியமே பிடிப்பதுபோல் இருந்தேன். ஆசுவாசமடைந்து சுற்றிப் பார்த்த போதுதான் தெரிந்தது, நான் ஒருத்தன்தான் பதறியபடியும், கண்ணீரோடும் இருப்பது, சுற்றி இருந்தவர்கள் எல்லாம் அப்பல்லோ ஆஸ்பிடல் முன் இருப்பவர்கள் போலவே கேஷுவலாக இருந்தார்கள். ஒரு பாக்கிஸ்தானி என்னிடம் வந்து, பிரட்சனையை விசாரித்தார். பின்பு ‘’இது ஒரு மேட்டரே இல்லை, நீ இப்போதே டிக்கெட் கொடுத்தால் உன்னை திரும்ப துபைக்கு அனுப்பிவிடுவார்கள், இல்லை என்றால் ஒரு நாள் வைத்திருந்து அவர்கள் செலவிலேயே இந்தியாவிற்கு அனுப்பிவிடுவார்கள் என்றார்’’. அதற்குப் பின்புதான் மூச்சே வந்தது. அவரிடம் பேசும் போது ‘’இந்த ரூம்’’, ‘’இந்த ரூம்’’ என்றே சொல்லிக்கொண்டிருந்தேன். அவர் சொல்லித்தான் தெரியும் அது ரூம் இல்லை ‘’ஜெயில்’’ என்று.

‘’நீ முன்பு சவுதியில் இல்லை என்பதால் கொஞ்சம் பய்ந்துவிட்டாய், மற்றப்படி இது அடிக்கடி நடக்கும் ஒன்று, சவுதிக்காரன் வந்து பேசினால் நாம் வெளியே போய்விடலாம், இல்லை என்றால் நம்மை திரும்ப அனுப்பிவிடுவார்கள்’’ என்றார். ஒவ்வொரு பிளைட் வந்து இறங்கும் போதும் இரண்டு, மூன்று பேர் வருவார்கள். அரபிகள் சிலர், இருந்தவர்களை கூட்டிக்கொண்டு போகவும் செய்தார்கள். இதுதான் சிறையா? என கண்கள் திறந்து பார்த்தேன். சிலருக்கு இப்படி அகப்படுவோம் என்று முன்பாகவே தெரிந்து சிகரெட் பாக்கெட் சகிதமாக வந்திருந்தார்கள். ஒரு பாயிண்டில் மூன்று, நான்கு பிளக்குகள் சொருகப்பட்டு மொபைல் சார்ஜ் செய்யப்படுகிறது. அதைக் கண்டு, சோக சீனிலும் புத்தி ‘’திரிசம்’’, ‘’போர்சம்’’மை நினைவுபடுத்தியது. எட்டும் உயரத்தில் இருந்த உடைந்த சுவிட்ச் பாக்ஸ் பயத்தை கொடுத்தது. சில ஒயர்கள் வெளியே நீட்டிக்கொண்டிருந்ததால் ‘’அந்த ஒயர கடிடா மாப்பிள’’ என ராம்குமார் கட்டளையிடுவது போன்ற மனபிராந்தி ஏற்பட்டது.
  
மறுநாள் அதிகாலை கம்பெனி டிக்கெட்டில் தனிவழியில் அழைத்துச்சென்று விமானத்தின் வாசலில் விட்டுச்சென்றார்கள். துபாய் இறங்கியபோது பார்த்தால், என்னுடய லக்கேஜ் மட்டும் வரவில்லை. என்னடா நம்ம நேரம் ரெக்கார்டு டான்ஸ் ஆடுது? என நொந்துபோனேன். ஒரே டிரஸ்ஸில் மூன்று நாட்கள் கழிந்தது, அதுவும் ஒரே ஜட்டி, பனியனில் மூன்று நாட்களில் இருப்பது நரகம். புரிந்தால் நலம் இல்லையென்றால் என்னைப் போன்று ஜட்டி, பனியன் அணிபவர்களிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்.

புது விசா அடிக்கும் பத்து நாட்களுக்கு துபை ஹெட்-ஆபிஸில் வேலைபார்க்கச் சொன்னார்கள். தீபாவளி நாட்களில் டி-நகர் மாதிரி பிஸியான ஆபிஸ் இப்போது புட்பால் விளையாடும் அளவிற்கு காலியாக இருந்தது. முக்கால்வாசிப்பேரை புது வேலை கிடைக்காததால் டெர்மினேட் செய்துவிட்டார்கள்.

துபை ஆபிஸில் வருகிறவன் போகிறவன் எல்லாம் வேலை கொடுத்து கடுப்பைக் கிளறினான். ‘’இது எல்லாம் எனக்கு பழக்கமில்லை’’ என்று சொல்லத் தோன்றினாலும் சொல்லவில்லை. சிறையில் இருந்த சிம்பதியை வைத்துக்கொண்டு பத்து நாட்களும் ஓப்பி அடித்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் நிலமையோ பருத்தி வீரன் கிளைமாக்ஸ் பிரியாமணி போல கண்டவனெல்லாம் வந்து என்னை கண்டம் செய்துவிட்டுப்போனான்.

-------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா. 

12 கருத்துகள்:

 1. திகில் அனுபவங்களையும் நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் ஒரு காலத்தில் கஷ்டமாக தெரியும் விஷயங்கள் பிற்காலத்தில் நம்மை பக்குவபடுத்துவதுண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்க அப்பாகூட நீங்க சொன்னதையேதான் சொன்னாறு.
   நன்றி சகா சோமு

   நீக்கு
 2. அதுக்குதானய்யா சொல்லுறது வேலை பார்க்கும் இடங்களில் உண்மையாக வேலை பார்க்கிறோமோ இல்லையோ ஆனால் வேலை பார்க்கிற மாதிரி நிறைய செல்ஃபியை எடுத்து வைத்து இருந்தால் போலீஸ்காரர்கள் உங்களை 5 ஸ்டார் ஹோட்டல் ரூமில் வைத்து விசாரித்து கொண்டிருக்கமாட்டார்கள்


  நண்பர் விசுதான் உங்கள் பதிவை அறிமுகப்படுத்தி வைத்தார் . அவரை போலவே உங்களுக்கும் நகைச்சுவை மிக அருமையாக வருகிறது...படிக்க சுவையாக இருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா. இப்ப எல்லாம் செல்பி ஸ்ட்ரிக்கோடவே தான் சுத்துறது.

   உங்களுக்கும் அண்ணன் விசுவிற்கு நன்றி.

   நீக்கு


 3. பாராட்டுக்கள் தொடர்ந்து எழுதுங்கள் நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
 4. excel;lent narration ji
  humour is your area....
  develop on this....
  good wishes

  பதிலளிநீக்கு