ஒன்னு மட்டும் எனக்கு புரியவே
இல்ல, நாம எதுக்கு எல்லா போராட்டத்துக்கும் நடிகர் நடிகையோட சப்போர்ட்டை
எதிர்ப்பாக்குறோம்?. சினிமாக்காரன் கு பின்னாடி நின்னு போராட்டம் பண்ணினால்தான்
மதிப்பா?. நேத்துவரை ‘’ரஜினி எதுக்கு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை?’’
என கண்டனம் தெரிவித்தவர்கள், ஆதரவு தெரிவித்தவுடன் ‘’உன் ஆதரவு யாருக்கு வேண்டும்,
முதல்ல உன் மகளையும், மருமகனையும் பீட்டாவை விட்டு வெளியேறச் சொல்லு?’’ என அடுத்த
கண்டனம்.
சினிமா துறை சார்ந்தவர்கள்
அவர்களுடய தனிப்பட்ட ஈடுபாட்டின் பேரில் கலந்துகொள்வது என்பது வேறு, அவர்களை
கட்டாயப்படுத்தி அல்லது கிட்டத்தட்ட மிரட்டி சப்போர்ட் செய்யவைப்பது என்பது வேறு.
காவிரிப் பிரட்சனையில் சினிமாத் துறையின் அனைத்து போராட்டங்களும் /
உண்ணாவிரதங்களும் மேற்கூறிய இரண்டாம் வகையே. அதன் மூலமாக நாம் சாதித்தது என்ன?.
தண்ணீர் வந்துவிட்டதா?. மக்களின் போராட்டத்திற்கு அஞ்சாத அரசா, சினிமாக்காரர்களின்
‘உ.வி’க்கு அஞ்சி தண்ணி திறந்துவிடப்போகிறது?.
சல்லிக்கட்டு விவகாரத்தில், ஹிப் ஹாப் தமிழா ஆதி தவிர்த்து, இதனை
ஆதரிக்கும் எந்த சினிமா பிரபலங்கள் மீதும் எனக்கு நம்பிக்கையே இல்லை. ஆதி
ஒருவர்தான் முதலிருந்தே இந்த விஷயத்தை தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறார்.
மற்றவர்கள் எல்லாம், தற்போதய போராட்ட வீரியத்தைக் கண்டு களத்திற்கு வந்தவர்கள். சிம்பு,
ஜி.வி பிரகாஷ்சை எல்லாம் நம்புவது என்பது வளர்மதியை நம்பும் அதிமுககாரன்
மாதிரிதான். சிம்பு பேட்டியை பார்க்கும்போதே இது பக்கா ஸ்கிர்ப்ட் என தெரியும்,
தெரியவில்லை என்றால் நம்மக்கு முன்னாடி ஒரு உணர்ச்சித் திரை இருக்கிறது என
பொருள்படுக.
ஒரு தலமை இன்றி, எந்தவித சுய
ஆதாயமும் இன்றி இவ்வளவு பெரிய போராட்டம் நடப்பது என்பது மிகப்பெரிய ஆச்சர்யம்,
அதிசயம். சல்லிக்கட்டு விசயத்தில் இது மிகப்பெரிய நம்பிக்கை தரக்கூடியது. களத்தில்
போராடும் இளைஞர்களுக்கும், மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள். கூட்டம் கூடுவதோ
அல்லது கூட்டுவதோ பெரிய விசயமில்லை, ஆனால் தொடர்ந்து மூன்று நாட்கள், நான்கு
நாட்கள் என நீண்டுகொண்டு போவதுதான் பிரமிப்பை தருகிறது.
இது சல்லிக்கட்டு என்ற ஒன்றுக்கான
போராட்டம் மட்டுமில்லை.
சல்லிக்கட்டிற்காகத்தான் இந்த
போராட்டம் என்றால் அது இரண்டு வருடத்திற்கு முன்பாகவே நடந்திருக்க வேண்டும். ‘’குட்டுப்பட்ட
குட்டுப்பட்ட கூட்டம், குனிந்த கதை போதும், பொறுமை மீறும் போது, புழுவும்
புலியாகும்’’ என்ற சிட்டிசன் பாடல் வரியின்படி, தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்ற
ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த போராட்டம் இது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இந்த
போராட்டம் நடந்திருக்குமா? என்றால், என்னைப் பொருத்தவரை, நடந்திருக்கும் ஆனால்
இந்த அளவிற்கு பெரிய அளவிற்கு நடந்திருக்காது.
பன்னீர் செல்வத்தினாலோ, அல்லது
சசிகலாவாலோ இதை தடுத்திருக்க முடியுமா? என்றால்,
முடியும். ஆனால், அதில் ஏதாவது பிசுறு ஏற்பட்டால், அதை வைத்து மத்திய அரசு
ஏதாவது செய்துவிடும் என்ற பயமோ அல்லது சசிகலா முதல்வராக கூடுதல் எதிர்ப்பு
ஏற்படுமோ என்ற பயமோ காரணமாக இருக்கலாம். ‘’இல்லாட்ட மட்டும் கிளிச்சுத்
தள்ளியிருப்பாய்ங்க’’ என்று உங்களுத் தோன்றலாம். ஒன்றும் சொல்வதற்கில்லை.
என்னோடு (சவுதியில்) ஒரு கர்நாடகப்
பையன் வேலை செய்கிறான், சல்லிக்கட்டிற்கான போராட்டம் பற்றி அவன் இன்றுதான் என்னிடம்
‘’ நீ ஏன் சல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை?’’ என்று கேட்டான். ‘’ ’நானும்
சல்லிக்கட்டை ஆதரிக்கிறேன், எதுக்கு கேக்குற?’’ என்று கேட்டேன். ‘’இல்ல என்னோட
தமிழ் பிரண்ட்ஸ் எல்லோரும் சப்போர்ட் பண்ணி நிறைய போஸ்ட் போடுறாங்க ஆனா உன்னோட
பே.புக்கில் அதுமாதிரி ஒன்னுமே இல்லையே அதனால கேட்டேன்’’ என்றான். ‘’ ரெண்டு
மாசத்துக்கு முன்னாடி உள்ள போஸ்ட்ட போய் பாரு, பொது சிவில் சட்டத்துக்கு எதிரா
போஸ்ட் போட்டிருப்பேன்’’ என்றேன். அவனுக்கு புரியவில்லை என்பதிலிருந்து ‘’இன்னும்
பயிற்சி வேண்டும்’’ என்று எண்ணிக்கொண்டேன்.
பொது சிவில் சட்டம்
கொண்டுவந்துட்டா சல்லிக்கட்டு மாதிரி பண்பாடு, கலாச்சாரம், இனம், மொழி......etc., சம்பந்தமான ஆயிரம் அடையாளங்களை
அழிச்சிடலாம். அதுக்கப்புறம் ‘’கம்பங்கூழ் நான் ஏன் குடிச்சு ஆரோக்கியமா
இருக்கக்கூடாது?’’ன்னு நீ கேட்க முடியாது. ‘’கோக்’’தான் நீ குடிச்சு வயிறு
புண்ணாகி சாகனும்னு அவன் சொல்லுறதத்தான் கேட்கணும். மாநிலத்துக்குன்னு எதுக்கு ஒரு
அரசு வேண்டும்? அதற்கு என்று எதற்கு சில அதிகாரங்கள் வேண்டும்? என்பதை
விளங்கவேண்டும். அதுபோன்ற மாநில அதிகாரங்களைக் கொண்டுதான் நாம் நம்முடைய வாழ்க்கை
முறை, கலாச்சாரம், பண்பாட்டை......etc காத்துக்கொள்ள முடியும்.
இனி மாநிலத்திற்கு ஒரு மண்ணும்
கிடையாது எல்லா ஆணியையும் நாங்க புடிங்கிக்கிறோம்னு சொன்னா, சல்லிக்கட்டு மட்டும்
இல்ல, நாம் கும்புடுற சுடல மாடசாமி, கரடி மாடசாமி எல்லாம் சாமியே இல்லன்னு
சொல்லுவான். நாமளும் மூடிக்கிட்டு ‘’கும்புடுறேன் சாமி’’ன்னு கைகட்டி நிக்கனும்..
இங்க பலருக்கு ஏன் நீட் (NEET) மருத்துவத் தேர்வை எதிர்கிறார்கள்? என்றே
தெரியவில்லை. கல்வி விசயத்துல மாநில உரிமையை பறிப்பதுதான் நீட் (NEET) தேர்வு முறை. தமிழகத்திற்கான
மாணவர் எண்ணிக்கையில் குறைவு வராது, இது திறமையை கண்டறியும் தேர்வு என்று வடை
சுடுபவர்களிடம் ஒன்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. அந்த திறமையை நாங்களே தேர்வு
வைத்து கண்டுபிடிச்சிக்கிறோம். நீங்க ஒரு முடியையும் புடுங்கவேண்டாம். பொறியியல்,
மருத்துவத்திற்கான நுழைவுத் தேர்வு என்பது தமிழ்நாட்டில் ஏற்கனெவே நடைமுறையில்
இருந்ததுதான். அதையே நாங்க திரும்ப கொண்டுவந்துகொள்கிறோம்.
இந்த போராட்டம் விவசாயிகள்
மரணத்திற்கும் மற்ற இன்ன பிற விசயங்களுக்கும் இனி நடக்கும் என்பதை என்னால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது ஏதோ உணர்ச்சி வசத்தால் பேசுவதாகவே நான்
கருதுகிறேன். அப்படி நடைபெற்றால் உண்மையில் சந்தோசம்தான். சல்லிக்கட்டில் சாதிய
சார்பு இல்லாதது என்பதை ஒட்டுமொத்தமாக புறம் தள்ளிவிடமுடியாது, இது போராடுற
பலபேருக்குத் தெரியும், இருந்தும் எல்லோரும் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக நிற்க
காரணம், இப்பவும் சொல்கிறேன் இது சல்லிக்கட்டிற்கான போராட்டம் மட்டும் அல்ல,
சல்லிகட்டின் பெயரில் நடக்கும் தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வுப் போராட்டம்.
காவிரி, முல்லைப் பெரியாறு,
மீத்தேன் திட்டம், சம்ஸ்கிரத / இந்தி திணிப்பு, பொங்கல் விடுமுறை என
வஞ்சிக்கப்பட்ட ஒரு இனத்தின் உணர்ச்சி வெடிப்பு. சமூக வலைதளங்களின் மூலமாகத்தான்
இந்த எழுச்சி ஏற்பட்டது எவ்வளவு உண்மையோ
அதே அளவு அபத்தங்கள்தான் சல்லிக்கட்டை முன்வைத்துக்கொண்டு அங்கு நடந்துகொண்டிருப்பது. திரிசா,
விஷால் மேட்டர், பஞ்சாப் அரசியல் கூட்டம் போட்டோவை மதுரை சல்லிக்கட்டு போராட்டம் என
கூறுவது என எவ்வளவோ இருக்கிறது. முக்கியமான ஒன்று, தமிழகத்தில் இதுதான்
முதன்முறையான அறப் போராட்டமாம்??? பார்த்தவுடனே தொங்கிரலாமுன்னு
தோணுச்சு. மருந்திற்குக் கூட கூடங்குளம் போராட்டம் பற்றி
அவர்கள் அறிந்திருக்கவில்லை.
‘’இந்த சுதந்திரத்தால் ஆதிக்க
சாதியினர் கைதான் ஓங்கும், ஆகையால் ஆகஸ்டு 15 கருப்பு நாள்’’ என்று பேசிய பெரியாரை
தேசதுரோகி என்ற நாம்தான், இன்று குடியரசு தினவிழாவை கருப்பு தினமாக கடைபிடிக்கச்
சொல்கிறோம். லத்தி சார்ஜ்ஜை கண்டித்து தமிழ்நாடு இனி தனி நாடாகும் என்று
கொதிக்கும் நாம் பெல்லட் குண்டில் செத்த காஷ்மீர்காரர்களைப் பார்த்து நகைத்தோம்.
எவ்வளவு நடைமுறை முறண் ?.
தன்னோட உரிமையை பறிக்கும்போது,
தன்னுடய கலாச்சாரத்தில் கைவைக்கும்போது, உணர்சியைத் தூண்டும்போது, அங்கு போராட்டம்
/ புரட்சி வெடிக்கும். இது எல்லா இடத்திற்கும் பொருந்தும். இதுமாதிரியான
போராட்டங்களை அரசு எப்படி கையாளுகின்றது பெல்லட் குண்டு வைத்தா? லத்தி ஜார்ஜ்
செய்தா? அல்லது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டேவா? என்பதில்தான் அது காஷ்மீரா,
தமிழ்நாடா இல்லை மற்றவையா என்பது தெரியும்.
ரெண்டு வருசத்துல 20க்கும்
மேற்பட்ட அவசரச் சட்டம் போட்டவர்களுக்கு, சல்லிக்கட்டிற்கு ஒரு அவசரச் சட்டம்
கொண்டுவர முடியாதா?. முந்தய ஆட்சியில் ஊழல் நடந்ததாகச் சொல்லப்பட்டு தடைசெய்த நிலக்கரி
ஏல முறையை, அவசர சட்டம் கொண்டு மீண்டும் ஏலம் விட்டவர்களால் இதற்கு ஒரு அ.சட்டம்
கொண்டுவருவதா கஷ்டம்?
அரசியலை நாம் ஆழப்
படிக்காவிட்டாலும் அளவாகவாது படிக்கவேண்டும்.
---------------------------------------------------------யாஸிர்
அசனப்பா.
இந்த அறப்போராட்டம் மற்ற அனைத்து விசயங்களில் தொடரும் என்று நமபிக்கையும் வருகிறது தோழர்...
பதிலளிநீக்கு//மருந்திற்குக் கூட கூடங்குளம் போராட்டம் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை
பதிலளிநீக்குஅசிங்கம். ஆனால் உண்மை
//லத்தி சார்ஜ்ஜை கண்டித்து தமிழ்நாடு இனி தனி நாடாகும் என்று கொதிக்கும் நாம் பெல்லட் குண்டில் செத்த காஷ்மீர்காரர்களைப் பார்த்து நகைத்தோம். எவ்வளவு நடைமுறை முறண் ?.
பதிலளிநீக்குதன்னோட உரிமையை பறிக்கும்போது, தன்னுடய கலாச்சாரத்தில் கைவைக்கும்போது, உணர்சியைத் தூண்டும்போது, அங்கு போராட்டம் / புரட்சி வெடிக்கும். இது எல்லா இடத்திற்கும் பொருந்தும். இதுமாதிரியான போராட்டங்களை அரசு எப்படி கையாளுகின்றது பெல்லட் குண்டு வைத்தா? லத்தி ஜார்ஜ் செய்தா? அல்லது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டேவா? என்பதில்தான் அது காஷ்மீரா, தமிழ்நாடா இல்லை மற்றவையா என்பது தெரியும்//
The Best