பணநீக்க விவாத நிகழ்ச்சியில் ‘’பூக்காரி’’,
‘’மீன்காரி’’ என்று ஒருத்தர் பேசியதற்கு, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர் ‘’பூக்காரம்மா’’,
‘’மீன்காரம்மா’’ என ஏன் கூப்பிடக்கூடாது? என கோபப்பட்டார். அது சமூக வலையதளங்களில்
ரொம்ப பிரபலமான வீடியோவாகி பலரால் பகிரப்பட்டது. அப்படி பகிர்ந்தவர்கள் எல்லாம், ‘’பூ
விக்கிரவங்க, மீன் விக்கிறவங்க என்ன கொறச்சலா?’’ என்று சோசியலிசம் பேசினார்கள். அதே
சேகுவேராக்களும், காஸ்ட்ரோக்களும்தான் இன்று சசிகலாவை ‘’வேலக்காரி’’ எனவும் ‘’ஆயா’’
எனவும் அர்சணை செய்துகொண்டிருக்கிறார்கள்.
சோசியல் மீடியாவில் இருக்கும்
அதிகமானவர்களுக்கு கொள்கை, கோட்பாடு எல்லாம் இருப்பதில்லை. லைக், ஷேர் இதைப்
பொறுத்துத்தான் அவர்களின் கொள்கை, கோட்பாடுகள் எல்லாம். காங்கிரஸ்காரன் மோடியைப் பார்த்து ‘’டீ விற்றவன்
எல்லாம் பிரதமரா?’’ என்று கேட்கும் போது வந்த கோவம், தி.மு.ககாரன் ‘’வேலைக்காரி
முதல்வராவதா?’’ என்று கேட்கும் போது ஏன் வரவில்லை?. ஏன்னா நம்ம டிசைன் அப்படி. சசிகலா
மீது ஆயிரம் விமர்சனங்கள், லட்சம் புகார்கள் இருக்கலாம் ‘’வேலைக்காரி’’ என்றால் அவ்வளவு
இழக்காரமா என்ன?.
‘’சசிகலாவிற்கு நாங்கள்
ஓட்டுப்போடவில்லை, அதனால் அவரை எங்களால் முதல்வராக ஏற்றுக்கொள்ள முடியாது?’’ என்று
சட்டமன்ற தேர்தலில் ஓட்டே போடாதவர்கள் வளைகுடாவில் இருந்தும், அமெரிக்காவில்
இருந்தும் பொரும்புகிறார்கள். நான் கேட்கிறேன், முதன்முறையாக ஜெயலலிதா பன்னீர்
செல்வத்தை முதல்வராக அமர்த்திய போது, நீங்கள் எல்லோரும் பன்னீர் செல்வம் முதல்வராக
வேண்டும் என்றா ஓட்டு போட்டீர்கள்?. அன்னைக்கு பொங்கியிருந்தால் பொங்களாகி
இருப்பீர்கள்.
சசிகலா முதல்வராவதை எதிர்ப்பது எல்லாம் ஓகே, ஆனால் பன்னீர்
செல்வத்தை எல்லாம் எப்படி / எந்த அடிப்படையில் ஆதரிக்கின்றீர்கள்? என்றே
புரியவில்லை. ஒருவன் கண்ணீரோடு, கொஞ்சம் சோகமா நின்று பேட்டி கொடுத்தால் அவன் நல்லவன்
என்பது சிவப்பா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான் என்பது மாதிரியான முட்டாள்தனம். அடிமையா இருந்தவர்கள் எப்படி இன்னொரு அடிமையின்
கீழ் இருப்பார்கள்?. ஓபிஎஸ், ஜெயலலிதாவின் ஆதரவைப் பெற்றவர் என்றால் எந்த வகையில்?
நிர்வாகத்தில் சிறந்தவர் என்றா? படித்த புத்திசாலியானவர் என்றா?. இல்லையே. ஜெயலலிதாவிற்கு
சாவி கொடுத்தால் பேசுகிறமாதிரியான ஒரு பொம்மை தேவைப்பட்டது அந்த பொம்மைதான் பன்னீர்
செல்வம். ஜெ உத்தரவு இல்லாமல் இவர் ஆட்சியில் இருக்கும் போது செய்த ஒரு நல்ல காரியம்
சொல்லுங்கள் பார்ப்போம்?.
ஓபிஎஸ் விசுவாசமான ஆள்
என்கிறார்கள், இருக்கலாம். அந்த விசுவாசத்தைத்தான், போன முறை 7 நாட்கள் வீட்டுச்
சிறையில் வைத்து ஜெயலலிதா சோதனை செய்தார். விசுவாசத்தின் அடிப்படையில் பார்த்தால் பன்னீரை
விட சசிகலாதான் உயர்ந்தவர். ஜெயலலிதா, வா என்றவுடன் கட்டின புடவையோடு
மட்டுமல்ல, கட்டுன புருசனையே விட்டுவிட்டு
போனவர். இப்போது இருக்கிற பல எம்.எல்.ஏக்களை ஜெயலலிதாதான் தேர்வு செய்தார் என்று
நீங்கள் நம்பினால் சத்தியமாக உங்களுக்கு, அ.தி.மு.க பற்றியும் தெரியவில்லை, மன்னார்
குடி பற்றியும் தெரியவில்லை.
‘’ஜெ இறந்த போது யாரும் அழவில்லை’’
என்று கூப்பாடு போடுபவர்கள், ஜெக்காக அழுத்தில் மேட்டூர் டாமே நிறைந்துவிட்டதா
என்ன?. டீலா நோ டீலா என்ற கேமில் இரண்டு
மாதத்தில் டீல் படியாததால் வெளியே வந்தவர்கள். அவ்வளவுதான். அதற்காக அவர்கள் எல்லாம்
உத்தமர்கள் என்றால் எப்படி?. ‘’எனக்கு மரியாதை தரவில்லை’’ ‘’என்னை மதிக்கவில்லை’’
என பல அமைச்சர்களின் பெயரைச் சொல்லும் பன்னீர், மதித்தவர்களின் சில பெயரையாவது
சொல்லியிருக்கலாம் அல்லவா? ஏன் சொல்லவில்லை? ஏனென்றால் ஒரு பய மதிக்கவில்லை என்று
அர்த்தம்.
ஜெ இறந்து ஒருவாரத்திலேயே ‘’கட்சியையும்,
ஆட்சியையும் சசிகலாதான் தலமை ஏற்க வேண்டும்’’ என்ற குரல் கிளம்பியது. ஆனால்
பன்னீர் என்னவோ நேற்றுவரை இவரை அமைச்சர்கள் மதித்துவிட்டு இன்றுதான் மதிக்காதது
போல பேட்டி கொடுப்பது பெரிய காமெடி. அமைச்சர்களை
விடுங்கள், முதலமைச்சரிடம்தான் காவல்துறை இருக்கும், அவர்களாவது மதித்தார்களா?.
சட்டசபையில் தேசவிரோத கும்பல் என ஒரு போட்டோவைக் காட்டி இது காவல்துறை கொடுத்தது
என்றார். அடுத்த பத்தாவது நிமிசம் பிரஸ்மீட்டைக் கூட்டி ‘’அப்படியான ஒரு புகைப்படத்தை
நாங்கள் முதல்வருக்குக் கொடுக்கவில்லை’’ என்கிறார் காவல்துறை ஆணையாளர். இதுதான்
பன்னீர் ஆட்சி செய்த லட்சணம்.
மெரினாவில் நேற்று பேசிய போது, சசிகலாவை
‘’சின்னம்மா’’ என்றே சொன்னார், அதிலிருந்தே அது ஒரு பக்கா ஸ்கிரிப்ட் என்பது தெரிந்துகொள்ளலாம். எழுதியதை
ஒப்பிப்பது போல இருந்தது. ஹிந்தியில்
எழுதி கொடுத்திருப்பானுங்க போல அதுதான் ஜெ சமாதி முன்னாடி நின்று தமிழிலில் ஒரு
முறை கண்மூடி பேசிப்பார்த்திருப்பார். இது தெரியாம நம்மாளுங்க தியானம்னு கிளப்பிவிட்டுட்டானுங்க. ‘’ஆவி’’, ‘’ஆன்மா’’.... எல்லாம்
இனி வேலைக்கு ஆகாது என்று தெரிந்துதான் லாரன்ஸே ‘’மொட்ட சிவா கெட்ட சிவா’’ன்னு
போயிட்டாரு. இப்பவந்து அம்மா ஆன்மா சொல்ல சொல்லுச்சுன்னு சொல்லி கிச்சி கிச்சு
மூட்டிக்கிட்டு. போங்க பன்னீர்.
கொஞ்சப் பேரு தீபாவை தலமை ஏற்க
அழைக்கிறார்கள். அது அடுத்த நகைச்சுவை. அந்த அம்மா என்னவோ கொஞ்சம் நிருத்தி நிதானமாக
பேசினால் ஜெயலலிதாவாகவே ஆனதான நினைத்துக்கொண்டிருக்கிறது. வார்டுனா என்ன?, வட்டச்
செயலாளர்னா என்ன? என இன்னும் பல என்ன? பற்றி எந்த வெண்ணையாவது சொல்லிக் கொடுத்திருப்பாங்களா
என்பது சந்தேகம்தான். சமூக வலைதளங்களை மட்டும் வைத்துக்கொண்டு, எப்படி சசிகலாவிற்கு
எதிர்ப்பு, பன்னீருக்கு ஆதரவு, தீபாவை முதல்வராக பெரிய ஆதரவு என்பதை ஒட்டுமொத்த மக்களின் முடிவாக முடிவு செய்கிறார்கள்?.
சமூக வலைதளங்களை மட்டும் வைத்துப்
பார்த்தால், டெல்லியில் ஆம் ஆத்மி வென்றபோது, தமிழ்நாட்டு தேர்தலில் அவர்கள் 150
இடங்களில் வென்றிருக்க வேண்டும். கிரானைட் ஊழல் வழக்கு விசாரணையின் போது சகாயம்
முதல்வராக வந்திருக்க வேண்டும். இவ்வளவு ஏன் மெரினா போராட்டத்தைப் பார்த்து ஆர் ஜே
பாலாஜி முதல்வராக வந்திருக்க வேண்டும். இப்படித்தான் சென்னை வெள்ளத்திற்கு
ரஜினிகாந்த் உதவி செய்யவில்லை என்று கூறி அவரோட கபாலியை கைமா செய்வோம் என்றார்கள். நடந்தது என்ன? அதுதான் தமிழ் திரையுலகின் வசூல் சாதனை படம்.
பன்னீரா? சசிகலாவா? என்றால் என்னை
பொருத்தவரை சசிகலாதான். அட்லீஸ்ட் யாருக்கும் பயப்படாமல் ஆட்சி நடக்கும்,
குறிப்பிட்ட சிலர் கொள்ளையடிப்பார்கள், (நல்லவற்றிற்கு) அதிகாரத்தை தைரியமாக பயன்படுத்தலாம். இதே பன்னீர்
என்றால், பயந்து பயந்து ஆளவேண்டும், எவன் எப்போ பிச்சிக்குவான்னு தெரியாது, யாரிடமும் மரியாதை கிடைக்காது (அவரும்
எதிர்பார்க்க மாட்டார்), ஆதரவு கொடுக்கும் அத்தனை எம்.எல்.ஏக்களும் கொள்ளையடிப்பார்கள்,
ஏன்? என்று எதிர்கேள்விகூட கேட்கமுடியாது.
சசிகலா வேண்டாம் என்றால், ஜனநாயக
முறைப்படி இடைத்தேர்தலில் தோற்கடிப்போம் (1.5 லட்சம் மொத்த ஓட்டில், 2 லட்சம்
ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்பார் என்பது வேறுவிசயம்). சசிகலா கொள்ளைக்காரி,
கொலைகாரி என்றால் அப்போ ஜெயலலிதா மட்டும் யாரு?. பன்னீர் என்ன கை சுத்தமானவரா?.
நிராகரிக்கும் பட்சத்தில் எல்லோரையும் நிராகரிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ரத்தம் - தக்காளி சட்னி மாதிரி பேசக்கூடாது.
அண்ணா நாமம் வாழ்க,
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நாமம் வாழ்க, அம்மா நாமம் வாழ்க. நமக்கு கடைசியில் நாமம் மட்டுமே வாழ்க
வாழ்க.
----------------------------------------------------------------------யாஸிர்
அசனப்பா.
நல்ல அலசல் பொறியாளரே, சமூக வளைத்தலங்கள் உண்மைநிலவரத்தின் 10 ல் ஒரு பங்கை கூட தெரியப்படுத்துவதில்லை. தீர ஆராய்ந்து முடிவெடுக்கும் சமுதாயமாக நாம் மாற வேண்டும்.
பதிலளிநீக்குSUPER, NALLA ORU POLITICAL ARTICLE NICE.
பதிலளிநீக்குA Abdul Rahim
நகைச்சுவை திலகம் பொங்குவதும் பொருத்தமாயிருக்கே.
பதிலளிநீக்குஅறிவார்ந்த அரசியல் அலசல்.