புதன், மே 17, 2017

அந்த ரசத்த ஊத்தூ....


எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, காலேஜ் முடிக்கும் போது என்னோட எடை 52 கிலோ, பெங்களூரில் நாலு வருசத்தில் அது 58 கிலோவானது. அதற்குப் பின்பு எடை படிப்படியாக கூடினாலும், கடைசி மூன்று வருடங்களாக 69 கிலோதான். 69 கிலோவாக இருந்தது எனபதைவிட, 69 கிலோவாக இருக்கும்படி வைத்துக்கொண்டேன். ஏன்னா, 69 என்பது ஒரு கிக்கான நம்பர் என்பதற்காக. மே 13, சன்னி லியோனின் பிறந்த நாள் என்று தெரிந்த இந்த சமூகத்திற்கு 69ன் மகிமையை மேற்கொண்டு விளக்க விருப்பமில்லை.

அடிக்கடி எடை பார்க்கும் பழக்கம் இல்லை. விமானத்தில் லக்கேஜ் 30 கிலோவிற்கு மேல் அனுமதிப்பதில்லை என்பதால் ஊருக்குச் செல்லும்போது, லக்கேஜ் எடைபார்க்கும் சமயத்தில் மட்டும் என்னுடய எடையையும் பார்த்துக்கொள்வேன். இந்த முறையும் 69. சொந்த சமயலினால் நாவில் ஏற்பட்ட சூனியத்தை, ஊரில் இறங்கியதும் நல்ல சாப்பாடு சாப்பிட்டு பரிகாரம் செய்யவேண்டும் என்று எண்ணினேன். இந்த எண்ணம் ஒவ்வொரு முறையும் ஏற்படுவதுதான்.

காலையில் புரோட்டா என்றால், மூழி கடை, தோசை என்றால் தென்காசி தோசை கார்னர். மதியம் சைவம் என்றால் ராஜ் மெஸ், அசைவம் என்றால் அல்மாசி ஹோட்டல். இரவு, பார்டர் ரஹ்மத் புரோட்டாவுடன் நாட்டுக்கோழி பிரை. இந்த மாதிரி லிஸ்ட் ரொம்ப பெருஸ்ஸா இருக்கும். ஆனால், ‘’என்னாது புரோட்டா பத்து ஓவாயா?’’ என விலைவாசியை நினைத்து ஏங்கும் போதே லிஸ்ட் தனக்குத் தானே தீவைத்துக்கொள்ளும்.

எங்க அம்மாவிடம் ஒரு ஸ்பசாலிட்டி இருக்கு. ‘’என்னடா சமைக்கனும்?’’ ன்னு கேக்கும்போது, ‘’எதாவது சமம்மா’’ன்னு சொல்லிறனும். அதவிட்டுட்டு, அத பண்ணு, இத பண்ணுன்னு சொல்லிட்டா, சோலி சுத்தம். ‘’புள்ள ஆச ஆசயா கேட்டுட்டா’’ன்னு பரபரப்புல பால் ஊத்தாமலே பால் பாயசம் வைக்கும். இப்படித்தான் ஒருதடவ, ‘’இறால் குழம்பு சாப்பிட்டதே இல்ல’’ன்னு சொல்ல, பாதி ராத்திரில எங்க அப்பாவ எழுப்பிவிட்டு இறால் வாங்கிவரச் சொல்லி, இறால் குழம்பு வச்சிச்சு. ஆனா, வாய்லதான் வைக்கமுடியல. அன்னையோட இறால் திங்குற ஆசை விட்டுப்போச்சு. இன்னமும் சூப்பர் மார்க்கெட்ல, இறால்ல பாக்கும்போதெல்லாம், அந்த ஃபன்னி இன்சிடெண்ட்தான் ஞாபகம் வரும்.

இம்முறை, டெங்கு காய்ச்சல் காரணமாக, ஜமாத் ‘’இறைச்சி, மீன் சாப்பிட வேண்டாம்’’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தது. பொதுவா ஜமாத் ஏதாவது சொன்னால் எவனும் மதிக்கிறது இல்லை. ஆனா இந்த விஷயத்தில் ‘’ஜமாத் சொன்னதே கட்டளை, கட்டளையே அதன் சாசனம்’’னு குனியச் சொன்னால் குப்புறவே படுத்துவிட்டார்கள். ‘முள்ளங்கி’ய வச்சு தொக்கு செய்யலாங்குற விசயமே எனக்கு இந்த தடவதான் தெரியும்.  ‘கொள்ளு’ங்குற ஒரு ஐட்டம் குதிரை திங்குறதுன்னு கேள்விப்பட்ட எனக்கு, கொள்ளுத் துவயல வச்சே மூனு நாள் சோறு போட்டாங்க. மறுநாள், அதுல கொஞ்சம் தண்ணி ஊத்தி ‘’கொள்ளுச்சட்னி’’ங்குற பெயருல தோசைக்குத் தந்தாங்க.

சவ்சவ், கொத்தவரங்காய், தடிமங்காய்....என ஒன்னாம் வகுப்பு பாட புத்தகத்தில் படம் பார்த்த அனைத்தும் நான் சாப்பிடும் தட்டில் ஒருநாள் கெடக்குமென்று கனவுகூட கண்டதில்லை. ஏழு தலைமுறைக்கு முன்பாக நாங்கள் சைவ பிள்ளைமார்களாம், முன்பு ஒரு முறை அப்பா சொன்னார். எனக்கு என்னவோ இந்த முறை கர்வப்சி முறையில் திரும்ப சைவ பிள்ளைமார்களாகவே மாறிவிட்டதுபோல் ஆகிவிட்டது. ஹரே ஓ சம்போ.

இன்னும் ரெண்டுநாள் இருந்திருந்தா, புண்ணாக்குல பாயாசம், தவிடுல புளிக்குழம்புன்னு தர லோக்கலுக்கு போயிருப்பாங்க. ‘’நான் அடிச்ச பெல்லு, ஆண்டவனுக்கு கேட்டுச்சோ இல்லையோ, அரசாங்கத்துக்கு கேட்டுருச்சு, அடிச்சாம்பாரு அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டரு’’ன்னு வடிவேல் சொன்னதுமாதிரி ‘’நான் கதரி அழுதது கடவுளுக்கு கேட்டுச்சோ இல்லையோ கம்பெனிக்காரனுக்கு கேட்டிருச்சு, அடிச்சாம் பாரு மெயிலு’’ன்னு கிளம்பி ஓடிவந்துட்டேன்.

பையன் ஒரே வெஜ்ஜா சாப்பிடுறானேன்னு கொஞ்சம் இரக்கப்பட்டு இரண்டு கல்யாண வீட்டு விருந்திற்கு போகச் சொன்னார்கள். முன்னாடி கல்யாண வீட்டு விருந்துன்னா குஸ்கா சோறு, முதல் ரவுண்ட் மட்டன் குழம்பு, ரெண்டாவது ரவுண்ட் தால்சா சாம்பார்னு ரவுண்ட் கட்டி சாப்பிடலாம். இப்ப எல்லா கல்யாண வீட்டிலும் பிரியாணி என்றாகிவிட்டது. முதல்ல சொன்ன ஐட்டங்களில் இருக்கும் டேஸ்ட் பிரியாணியில் இருப்பதில்லை. ரெண்டு கல்யாண வீட்டிலுமே விருந்து பரிமார வெளி ஆட்களுக்கு கான்ராக்ட் விட்டிருந்தார்கள்.

ஏதோ, கட்சி பொதுக்கூட்டத்திற்குப் போய், பிரியாணி பொட்டலத்தில் சாப்பிட்டது போலாகிவிட்டது. ‘’வாங்க’’ என்று அழைப்பதற்கு சொந்தக்காரர்களோ அல்லது தெரிந்தவர்களோ இல்லை. கேட்டரிங்க் ஆட்கள் முதல்தடவை வந்து பிரியாணியை தட்டுவதோடு சரி, அதற்கு பின்பு யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லை. தண்ணி வேண்டும் என்றாலோ, அல்லது சாம்பார் வேண்டும் என்றாலோ கத்தி அழைத்தபின்பு ஏனோ தானோ என்று வந்து விழம்பிவிட்டு போவார்கள்.

முன்னாடியெல்லாம், விருந்து நடக்கும்போது, சாப்பாடு பரிமாறுவது எல்லாமே சொந்த பந்தங்கள்தான். போதும் என்றாலும் ‘’அவரு அப்படித்தான் சொல்லுவாரு கொஞ்சமா வச்சிவுடு’’ என ஒரு பெரியவர் சொல்லிமுடிப்பதற்குள், சோறு இலையில் விழுந்துவிடும். அந்த கவனிப்பிற்காகவே பெல்டை லூஸ் செய்து இலையில் இருப்பதை காலி செய்யவேண்டும். கான்ராக்ட் ஆட்கள் பரிமாருவதையாவது பொருத்துக்கொள்ளலாம், ஆனால் அவனுங்க போட்டுவருகிற கம்பெனி டீ சர்டைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கர்மம் என்ன கலர்னே கண்டுபிடிக்க முடியவில்லை. ‘’துவைச்சாவது போட்டுவரலாமேடா’’ன்னு சொல்லத் தோனும்.

ஊரில் இருந்து கிளம்பும் போது, லக்கேஜை வெயிட் பார்த்தபின்பு எனது வெயிட்டை பார்த்தேன். 74 கிலோ. முப்பது நாளில் எப்படி 5 கிலோ கூடியது என்று மயக்கமே வந்தது. எடை கூடியதுகூட எனக்கு கவலையில்லை ஆனால் 69 போய்விட்டதே என்ற கவலைதான் கண்ணை கெட்டியது. ‘’நம்மள பிரிஞ்சி போறத நெனச்சுத்தான் புள்ள கவலப்படுது’’ன்னு அம்மாவோட அன்பு அட்ராசிட்டி வேறு. இந்தியன் டாய்லெட்டில் குத்தவைத்து கக்கா போகும் போது மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது, பேலன்ஸ் மிஸ் ஆவதில் இருந்தே தெரிந்தது எடை கூடிய விசயம். ஆனால் 5 கிலோ என்பது மெடிக்கல் மிராக்கிள்.

முன்னாடி, ஊருக்குப் போனால், தாலுகா ஆபிஸ், ரெஜிஸ்டர் ஆபிஸ், பேங்க், லைசன்ஸ் ரினிவல், நகராட்சி என எங்காவது ஒரு வேலை இருக்கும். சாப்பிட்டபின்பு அங்க இங்கன்னு அலையும்போது எடை அதிகமாக வாய்ப்பு இருந்ததில்லை. இந்த முறை வெயில் விட்டு விளாசியதால் வெளியே எங்கும் நகரவில்லை. சாப்பாடு, தூக்கம், தூக்கம் சாப்பாடு என்றே நாட்கள் ஓடியது. இருந்தாலும் கத்தரிக்காய், முட்டைக் கோஸ், பீக்கங்காய் எல்லாம் சாப்பிட்டு 5 கூடியதை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை.

எவன் எப்படிப் போனா என்ன நீ அந்த ரசத்த ஊத்து...........ன்னு வஞ்சனயே இல்லாம திண்ண நான், 69 யை மீட்டெடுக்க இப்போது வாக்கிங், ஜாக்கிங்க், டயட்டிங்ன்னு தீயா வேலை செஞ்சிக்கிட்டு இருக்கேன். 

----------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

5 கருத்துகள்:

 1. Adikadi vaanga brother. weekly once you publish article.

  A Abdul Rahim

  பதிலளிநீக்கு
 2. சாப்பாட்டு விஷயமே ரசமானது தானே...அருமையான ரசம்.

  பதிலளிநீக்கு
 3. //இந்தியன் டாய்லெட்டில் குத்தவைத்து கக்கா போகும் போது மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது// இதுதான் எனது தொந்திக் கவிதை பிறக்கக் காரணம் :) http://ibnuzubairtamil.blogspot.in/2017/06/blog-post_13.html

  பதிலளிநீக்கு
 4. //Adikadi vaanga brother. weekly once you publish article. //

  வழி மொழிகிறேன்

  பதிலளிநீக்கு