தென்காசிக்கு போவதாக இருந்தால்,
போகும் போது பஸ்ஸில் வலது புறமும், திரும்பும் போது இடது புறமும் உட்காரும்படியாக
பார்த்துக்கொள்வேன். எங்க ஊரில் இருந்து ஏழு கிலோ மீட்டரில் . கி.பி 1888ல்
ஆரம்பித்த அந்த பள்ளிக்கூடத்தில் தான் நான் படித்தேன். சினிமா கிராபிக்ஸ்ஸை
மிஞ்சும் இயற்கையான எளில்மிகு லோக்கேஷனில் அமைந்திருக்கும்.. பள்ளிக்கு பின்னாடி
சின்ன ஓடை. முன்னாடி ஒரு ஆலமரம் அதன் அடியில் சின்ன புள்ளையார் கோவில். பக்கத்தில்
உலகத்தில் எங்கயுமே கிடைக்காத நாலே நாலு திண்பண்டங்கள் கொண்ட ஒரு குட்டி
பெட்டிக்கடை. எதிர்புற வலது பக்கத்தில் கரடிமாட சாமி, தெற்கில் சுடலைமாட சாமி என
காவல் தெய்வங்கள், அதை ஒட்டி விளையாட்டு மைதானம் என்ற பெயரில் ஒரு புதர்காடு. சாலை
இருபுறமும் புளியமரம் என இயற்கை சூழ் ரம்மியமான இடம்.
பின்னாடி இருக்கும் அந்த சின்ன
ஓடையில் ஒரு நாளைக்கு 10.30, 1.00, 3.30 என்ற மூன்று வேளைகள் மட்டுமே தண்ணீர்
பெருக்கெடுத்து ஓடும். முனிசிபாலிட்டியில் திறந்துவிடுவதாக நினைக்க வேண்டாம்,
அதுதான் எங்கள் இண்டெர்வெல் பிரீயெட். அந்த ஓப்பன் ஏரியாவில் வானத்தைப்
பார்த்துக்கொண்டு உச்சா போகுற சுகமே தனி. புள்ளையார் கோவிலில் அடிக்கடி பூஜை நடக்கும்.
ஆனால், புளியோதரையோ, பொங்களோ, பிரசாதமோ கொடுத்துப் பார்த்ததே இல்லை. அந்த காண்டு
புள்ளையாருக்கே இருந்திருக்கும் போல, ஊரே ‘’புள்ளையார் பால் குடிக்குறாரு’’ ‘’புள்ளையார்
பால் குடிக்குறாரு’’ன்னு பூரித்த நாட்களில், டீச்சர்கள் ஆர்வத்தோடு தூக்குச்
சட்டியில் கொண்டுவந்த பாலை துப்பி அனுப்பிவிட்டார். ‘’புள்ளையார் கோவமா
இருக்காரு’’ன்னு புரிந்து அன்று நாள் மட்டும் சக்கரை பொங்கள் தந்தார்கள்.
ஒருநாள் தென்காசிக்கு போகும்போது
பஸ்ஸில் பயங்கர கூட்டம், இடைகாலில் எங்க எட்டாம் வகுப்பு கிளாஸ் டீச்சர் ஏறினாங்க.
அவங்க பெயர் வனஜா. பார்த்துவிட்டு பயங்கர சந்தோசம். ‘’என்னய ஞாபகம் இருக்குமா?,
ஞாபகம் இல்லன்னா என்னா?, நான் உங்க ஸ்டூடண், இஞ்சினியரா இருக்கேன்னு சொல்லுவோம். ச்சே,
ச்சே இஞ்சினியர்ன்னு சொல்ல வேணாம், நம்ப மாட்டாங்க. நான் நல்லா இருக்கேன், நீங்க
நல்லா இருக்கீங்களா டீச்சர்’’ன்னு கேட்கலாம்னு ஒரு ஸ்டெப் முன்னாடி எடுத்து
வச்சேன். ‘’ஏய், அறிவிருக்கா இப்படி இடிச்சுக்கிட்டு நிக்க, கொஞ்சம் தள்ளி
போவேண்டியதுதானே.........’’ “நவளு நவளுன்னா இங்க என்ன நாலு செண்ட் இடமா கெடக்கு...””என
பக்கத்தில் இருந்த பெண்ணிடத்தில் கத்தி சண்டை போட்டுக்கொண்டிருந்தார்.
கிட்டத்தட்ட 20 வருசத்துக்கு
முன்னால ‘’எல இத மட்டும் நீ நாளைக்கு படிக்காம வா, அப்பிருவேன் அப்பி’’ என
கோவத்துல கத்துன அதே கம்பீர குரல் இன்னும் அப்படியே இருந்தது. ஒரு வேளை நான்
குருடனாக இருந்திருந்தால் கூட குரலைவைத்து ‘’வனஜா டீச்சர்’’தான்னு சொல்லியிருப்பேன்.
டீச்சரோடு சரிக்கு சமமா சண்டை போட்ட பெண் ஆஜான பாகுவா, அமரேந்திர பாகுபலியையும்,
பல்வால் தேவனையும் ஒன்றாக கட்டிவைத்தது போல் இருதார். டீச்சரைப் பார்க்க ஒன்
ஸ்டெப் முன்னாடி சென்ற நான், அந்த பெண்ணை பார்த்தபின்பு டூ ஸ்டெப் பின்னாடி
வந்துவிட்டேன். டீச்சரிடம் குசலம் விசாரிப்பதை பார்த்துவிட்டு. இறங்கும் போது
டீச்சர் மேலுள்ள கோவத்தையெல்லாம் ஆஜான பாகு என் மீது இறக்கிவிட்டால்????????.
நினைத்த போதே ஒரு பக்க ஷோல்டர் இறங்கியது போல இருந்தது.
எட்டாம் வகுப்பில் அவங்கதான் எங்க
கிளாஸ் டீச்சர். லேட்டா வருகிறவன், வீட்டுப் பாடம் செய்யாதவன், டீச்சர் இல்லாத
நேரத்தில் பேசுகிறவன்.........என எல்லோருக்கும் 25 காசு ஃபைன். என் கூட படிஞ்ச 90%
மாணவர்களுக்கு 25 காசு என்பது பெரிய விசயம். காசு எல்லாம் கிளாஸ் லீடரிடம்
இருக்கும், தினமும் டீச்சரிடம் கணக்கு காட்ட
வேண்டும். அந்த காசு எல்லாத்தையும் மொத்தமாக சேர்த்து வருட கடைசியில்
அதிகமாக முதல் மூன்று ரேங்க் எடுத்தவர்கள், தமிழில் அதிகம் மதிப்பெண்
எடுத்தவர்களுக்கு, பேனா, பென்ஸில், ஸ்கேல்......என பரிசு வழங்குவார். எனக்கு ஒரு
பேனா, இரண்டு பென்சில் கிடைத்ததாக ஞாபகம்.
5 நாள் சுடலைமாட சாமி கோவில்கொடை.
5 நாள் கரடிமாட சாமி கோவில்கொடை என வருடத்தில் அந்த 10 நாட்கள் மட்டும் பாடம்
எதுவும் நடக்காது. நடக்காது இல்லை நடத்த விட மாட்டார்கள். பெரிய பெரிய கூம்பு
ஸ்பீக்கர் எல்லாம் பள்ளி முன் இருக்கும் மரத்தில்தான் இருக்கும். பள்ளியில் கடவுள்
வாழ்த்து முடிந்தவுடன் ஸ்பீக்கரில் சாமிப் பாட்டு ஆரம்பமாகிவிடும். அவர்கள்
வைக்கும் சவுண்டிற்கு, சில மாணவர்களுக்குள் சாமியே இறங்கி ஆடியிருக்கிறார்.
இதுமாதிரியான ஒரு திருவிழா
நாளில்தான், அப்பா பள்ளிக்கூடத்திற்கு வந்து ‘’பையன் எப்படி படிக்கிறான்’’ன்னு
டீச்சரிடம் கேட்க, ‘’படிப்பெல்லாம் நல்லாத்தான் படிக்கிறான், கடையநல்லூர் குசும்புதான் கொஞ்சம்
ஜாஸ்தியா இருக்கு’’ன்னு சொல்லிடுச்சு. இதுதான் சந்தர்ப்பம்னு எங்கப்பா வீட்டுல
இருந்து எழுதி எடுத்துட்டு வந்த மொத்த டயலாக்கையும் மூச்சுவிடாம சொல்லிட்டாப்புல.
அதுல ஒன்னு, எங்கப்பா படிக்கிற போது எங்க தாத்தா அவர் கிளாஸ் டீச்சர்ட சொன்ன அந்த
டயலாக் ‘’முட்டிக்கு கீழ விட்டு வெளுத்துருங்க டீச்சர்’’. சொல்லிவிட்டு பெரிய
மனுஷன் திரும்பி போகவும், ஸ்பீக்கரில் ‘’கோட்டய விட்டு வேட்டைக்குப் போனா
சுடலமாடசாமி, சுடலமாட சாமியும் நீதான்........’’ன்னு பாட்டு ஒலிக்கவும் சரியாக
இருந்தது. அதுவரைக்கும் கையால அடிச்ச டீச்சர், அந்த சம்பவத்துக்கு அப்புறமா
பிரம்பால பின்னி எடுக்கும்.
இப்படி ராஜமாதா சிவகாமிதேவி மாதிரி
இருந்த எங்க வனஜா டீச்சரயே நிலைகுலையச் செய்து நாற்காலியில் தடுக்கி விழும்படி ஒரு
சம்பவம் நடந்தது. அவன் பெயர் முத்துச்சாமி. அவன நாங்க செல்லமா சுருக்கி
‘’முச்சாமி’’ன்னு கூப்பிடுவோம். அவன் மூன்று நாள் ஸ்கூலுக்கு வரல. நாலாவது நாள்
வனஜா டீச்சர் கேட்டுச்சு ‘’எ மூதி மூன்னாள்ளு வர்ல, எங்க கிளிக்க போன’’. முச்சாமி
‘’புண்ணு டீச்சர்’’ன்னு சொன்னான். ‘’மைனருக்கு, எந்த எடத்துல புண்ணு’’ன்னு டீச்சர்
கேட்டுச்சு. ‘’அந்த இடத்துல டீச்சர்’’ன்னு முச்சாமி சொல்ல டீச்சருக்கு புரியல.
‘’அதுதான் மூதேவி எந்த இடத்துல’’ன்னு கொஞ்சம் சவுண்டா கேட்க, முச்சாமி ரொம்ப
மெல்லுசா ‘’அந்த்த்த்த்த.....இடத்த்த்துல டீச்சர்’’ன்னு காலை ஒடிக்கு
வைத்துக்கொண்டு இடுப்பை லைட்டா ஆட்டிச் சொன்னான்.
டீச்சருக்கு ‘’இடம்’’ புரிஞ்சு
போச்சு. இருந்தாலும் முத்துச் சாமி மேல நம்பிக்கை இல்லை. பொய் சொல்லுவதாக நினைத்து
‘’அப்படியா, காட்டுடா, புண்ண பாக்கலாம்’’ன்னு டீச்சர் சொல்ல, அவனும் ‘’வேணா
டீச்சர்’’ன்னு ரெண்டு, மூனு தடவ வெக்கம் கலந்த சோகமா சொன்னான். டீச்சர்க்கு கோவம்
அதிகமாகி எழுந்து ‘’பொய் சொல்லுதியோ, அவுருல பாப்போம்’’ன்னு சொல்லி
முடிக்குறதுக்குள்ள, முச்சாமி டவுசரை ..................... (எஸ் யூ ஆர் ரைட்). டீச்சர் பதறிப் போய் முகத்தை
திருப்பிக்கொண்டு ‘’பரதேசி, பரதேசி, நம்புதேன், மூடுல மொதல்ல’’ன்னு சொல்லியவாரே
நாற்காலியில் தடுமாறி விழுந்துவிட்டார். எங்களுக்கு அதைப் பார்த்து (அய் மீன்,
அந்த சம்பவத்தை பார்த்து) சிரிப்பு வந்தாலும் 25 காசு போய்விடுமே என்று பயந்து
அடக்கிக்கொண்டோம். அடுத்த ஒரு வாரம் வனஜா டீச்சர் ‘’எப்ப என்ன நடக்குமோ’’ங்குற
மாதிரியான பீதியான மனநிலையிலேயே இருந்தார்.
விசயம் அதோடு முடியவில்லை,
மதியம் பாடவேலையில் சாந்தி டீச்சர்
கணக்கு பாடம் எடுக்க வந்தது. அல்ஜிப்ராவோ, ஏதோ ஒரு கணக்கு பாடம்.
எடுத்துக்கொண்டிருக்கும் போது ‘’முதல் கூட்டுத்தொகையை, ரெண்டாவது கூட்டுத்தொகையால்
வகுக்க வேண்டும்’’ன்னு சொல்லிவிட்டு
‘’என்னடா முச்சாமி புரிஞ்சிச்சா, ‘’வகுக்க’’னும்டா
‘’வகுக்க’’னும், ‘’அவுக்க’’னும் இல்ல’’ என சொல்ல மொத்த கிளாஸும், வனஜா டீச்சர்
சம்பவத்துக்கும் சேர்த்து சிரித்தது. (சாந்தி டீச்சர் கிளாஸுக்கு 25 பைசா ஃபைன்
கிடையாது). பாவம் முச்சாமி சூம்பிப் போனான், ஏன்னா அவனுக்கு உண்மையிலேயே புண்
இருந்தது. ‘’அது எப்படி உனக்கு தெரியும்?’’னு கேட்காதீங்க. உச்சா போகும் போது எல்லா
நாளுமா வானத்தைப் பார்பார்கள்? சில சமயங்களில் கண்ணு அங்க இங்க போகத்தான்
செய்யும்.
-----------------------------------------------------------யாஸிர் அசனப்பா.
அருமையான பதிவு... செம சிரிப்பு...
பதிலளிநீக்குlei...
பதிலளிநீக்குஅருமை யாசீர்.. .வகுப்பதற்கும் அவுப்பதற்கும் இம்புட்டு வித்தியாசமா? சொல்லவே இல்லையே.
பதிலளிநீக்குஉங்கள் பாணியிலே சரவெடி நகைசுவை... ரசித்தேன்.