செவ்வாய், ஜூன் 06, 2017

பாக்கிஸ்தானி ஜிந்தாபாத்.

ராகுல் டிராவிட் என்னைக்கு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாரோ, அன்னையில இருந்து கிரிக்கெட் மீது இருந்த ஆர்வம் கொறஞ்சு போச்சு.  ஆனா என்னைக்கு ‘வி. வி. எஸ். லட்சுமனனை’யெல்லாம் 20-20க்கு செலக் செஞ்சானுங்களோ அன்னைல இருந்து ‘’இந்த கிரிக்கெட்டெல்லாம் அழிஞ்சாத்தான் என்ன?’’ன்னு தோண ஆரம்பிச்சிடுச்சு
எங்க ஆபிஸில் ஒரு பாக்கிஸ்தானி இருக்கிறான். அவன் சொல்லித்தான் அன்று இந்தியா-பாக்கிஸ்தான் மேட்ச் என்பதே தெரியும். முன்னாடியெல்லாம் இந்தியா-பாக்கிஸ்தான் மேட்ச் என்றால் ஒரு மாதத்திற்கு முன்பாகவே ‘’ஸ்கூல எப்படி கட் அடிக்கலாம்’’, ‘’எந்த தாத்தாவ சாவடிக்கலாம்’’.....என பக்காவாக ஸ்கெட்ச் போட்டு ரெடியாவோம். இப்போது அதுமாதிரியான பெரிய இண்டிரஸ்ட் யாருக்குமே இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
பழைய கம்பெனியில் நான் கேம்பில் தங்கியிருந்தேன். என்னோட புராஜெக்ட்டில் அன்சர்னு ஒரு பாக்கிஸ்தானி இருந்தான். என்னய பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு அனாத புள்ளய பாக்குறது மாதிரி ஆதரோவோடு பார்ப்பான். பேசும் போது கேன்ஸர் பேசண்டிடம் பேசுறமாதிரி ரொம்ப கருணையா பேசுவான்.   முதலில்,  ‘’நாம துபாய்க்கு புதுசுங்குறதுனால இப்படி ஆதரவா இருப்பதாக’’ நினைத்தேன்.
ஒரு நாள் என்னுடய கேபினுக்கு வந்தான். ஆதரவு ஐந்து கிலோவை, கருணை கால் கிலோவோடு பிசைந்து (எப்போதும் போல) பேசினான். அவன் பேசும் தோணியைப் பார்த்த போது, ஏதோ என்னிடம் கேட்பதற்கு தயங்கி நிற்பதுபோல் தெரிந்தது. கொஞ்ச நேரத்திற்குப் பின்பு அவனாகவே கேட்டான். ‘’உனக்கு எப்படி இந்த சின்ன வயதில் சொட்டை விழுந்தது?’. ‘’அதே கேள்வி’’ நான்கு திசைகளிலிருந்தும் எக்கோ அடித்தது.  எந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாம, இந்தியாவுல இருந்து ஓடி வந்தேனோ அதே கேள்வி. ‘சிவாஜி’ பட வசனம்போல ‘’இன்னும் எத்தனவாட்டிடா இந்த கேள்விய கேப்பீங்க”ன்னு என்னை நானே நொந்துகொள்வேன். ‘’எங்க வீட்டில் எல்லோருக்கு இப்படித்தான், எங்க தாத்தா, அப்பா, அண்ணன்....’’ என சேலம் சிவராஜ் சித்த வைத்திய சாலைக்கு அடுத்தது  எனது பரம்பரை பாரம்பரியம்தான்னு சொன்னேன்.
‘’நீ ஏன் விக்கு வைக்கக்கூடாது?’’ என்று கேட்டான். ‘’இல்லடா, விக்கு எல்லாம் சரிப்பட்டு வராது, அலர்ஜி பயம் இருக்கிறது, அதுமட்டுமல்ல எந்த இடத்திலாவது விக் கழண்டு விழுந்தால் ரொம்ப அவமானமாகப் போகும்’’ என்று கூறினேன். ‘’அப்படியெல்லாம் இல்லை, அலர்ஜி எல்லாம் வராது, கிளிப் டைப் விக் எல்லாம் இருக்கிறது, அது எங்கயும் கழறாது..’’ என கூறிக்கொண்டே ஆள் காட்டி விரலை அவனது காது பக்கத்தில் அழுத்தி விக்கை தூக்கிக் காட்டினான். ஆடிப் போனேன். யாரோ என் பிரடியில் விரகுக் கட்டையால் அடித்தது போன்று இருந்தது.
அப்பதான் தெரிந்தது அந்த ஷண்டாலன் கண்ணில் தெரிந்தது கருணை இல்லை அத்தனையும் குரூரம் என்று. அவன் ஒரு கிரிக்கெட் பைத்தியம். பாக்கிஸ்தான் உள்ளூர் மேட்ச்சைக் கூட விடாமல் பார்த்துவிட்டு, என்னிடத்தில் கமெண்டரி பண்ணிக்கொண்டிருப்பான். பக்கத்து ரூம் வேறு. இந்தியா-பாக்கிஸ்தான் மேட்ச் என்றால் பிரியாணி சமைத்து வைத்து உலக பாக்கிஸ்தானிகளை எல்லாம் அழைத்து வந்து பெரிய கும்பலாக மேட்ச் பார்ப்பான்.
பாக்கிஸ்தான் தோற்றுவிட்டால், ஒரு குயர் நோட்டு, பேனாவுடன் அவன் ரூம் பக்கத்தில் நின்று கொண்டால் போதும். உருது, ஹிந்தி மொழிகளிலுள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளையும் எழுதிவிடலாம். ‘’தற லோக்கல்’’ கெட்ட வார்த்தை தெரிந்துகொள்ளவும் ஒரு வழி உண்டு. ‘’இவன எதுக்கு எடுத்தோம்’’னு செலக்சன் போர்டுக்கும் தெரியாம, ‘’நம்மள எதுக்கு எடுத்தானுங்க’’ன்னு அவனுக்கும் தெரியாம ‘முஹம்மது கைப்’ மாதிரி கொஞ்சப் பேர் பாக்கிஸ்தான் டீமிலும் இருப்பான். அவனப் பத்தி அந்த நேரத்தில் அன்சரிடம் லைட்டா கிளறிவிடவேண்டும். நமக்கு சுட சுட ‘’தற லோக்கல்’’ கெட்டவார்த்தை டேட்டா பேஸ் தயார்.
இப்ப இருக்குற கம்பெனியில் ஒரு பாக்கிஸ்தானி இருப்பதாக சொன்னேன்ல, அவன் பெயர் நவீத். அவன் தான் என்னுடய அரபி டிரான்ஸ்லேட்டர். சில சமயங்களில் நான் பேசும் ஆங்கிலம் எதிர்தரப்பு அரபிக்காரனுக்கு புரிந்து ‘’ஒகே. ஒகே’’ என்பான். அந்த ‘’ஒகே ஒகே’’வைக்கூட நவீத் எனக்கு மொழிபெயர்த்து ‘’ஒகே ஒகே’’ என்பான். அந்த அளவிற்கு வெகுளி. நிறைய பாக்கிஸ்தானிகள் வெகுளிகள் தான் (நான் பார்த்தவரை). கொஞ்சம் வயதானவர்களை ‘’சாச்சா” (சித்தப்பு) என்றோ ‘’ஜனாப்’’ (உயர்திரு) என்றோ கூப்பிட்டுவிட்டால் ரொம்ப குஷியாகிவிடுவார்கள். தனியா ஒரு பாக்கிஸ்தானி சாப்பிட்டு பார்த்ததில்லை. ஒரு ரொட்டி என்றாலும் நாலு பேர் சுத்தி இருந்துதான் சாப்பிடுவார்கள்.
இங்கு முக்கால்வாசி டாக்ஸி டிரைவர்கள் பாக்கிஸ்தானிகள் தான். பெரும்பாலானவர்களுக்கு இந்தியாவில் ‘’மதராஸி’’ என்றால் தெரியவில்லை. எல்லோருக்கும் ரஜினிகாந்த்தை தெரிந்திருக்கிறது, ஆனால் அவர் படம் பார்த்ததில்லையாம். ‘’ஏக் து ஜே கேலியே’‘ படம் தெரிகிறது ஆனால் அதில் நடித்தவர்தான் கமல் என்று தெரியவில்லை. ‘’அந்த படத்தில் கமல் பேசுவாறே அந்த பாஷைதான் எங்க பாஷை’’ என்பேன்.  ‘’இல்ல இல்ல’’ என்றால் என்ன அர்த்தம்? என்று கேட்பார்கள் (அந்த படத்தில் கமல் அதிகமாக ‘’இல்ல இல்ல’’ன்னுதான் சொல்லுவாராம்)
நவீத், நிறைய விசயங்கள் பேசுவான். எல்லா நாட்டு செய்திகளைப் பற்றியும் தெரியும். என்னோட மேனஜெர் ஒரு ஜோர்டானி. அவரிடம் பேசும் போதுகூட அந்த நாட்டு அரசியலைப் பற்றி அவருக்கு தெரியாத சில விசயங்களைச் சொல்லுவான். ஜோர்டான் பற்றி தெரிந்து வைத்திருப்பவன் பக்கத்து நம் நாட்டைப் பற்றி தெரிந்து வைத்திருக்க மாட்டானா?. சர்ஜிகல் ஸ்ட்ரைக், டிமானிடேசைசேசன், மாட்டுக்கறி.......என எல்லாத்தைப் பற்றியும் கேட்பான்.
ஒருமுறை ‘’சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தியதில், எங்க நாட்டுமேல உங்களுக்கு பயங்கரமா கோவம் இருக்குமே?’’ன்னு கேட்டேன். ‘’எங்க கோவத்தை விடு, உங்க நாட்டுலேயே சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடந்ததுக்கான ஆதரம் கேட்டும் கொடுக்க முடியாம மோடி கோவமா இருக்காறாமே?’’ன்னு திருப்பிக் கேட்டான். ‘’இது எப்ப.......???’’ன்னு தெரியாம பேந்த பேந்த முழுத்தேன்.
‘’இந்தியாவில், மாட்டுக்கறி மேட்டரில் முஸ்லீம் அல்லாதவர்கள் கூட நிறைய போராட்டம் செய்கிறார்கள். அதுமாதிரி அவங்களோட பிரட்சனைக்கு முஸ்லீம்கள் நீங்க போராடுவீங்களா?’’ன்னு கேட்டான். ‘’பாலுங்குறது உங்க பேரு, தேவர்ங்குறது நீங்க வாங்கின பட்டமா?’’ன்னு கேட்டுவுடனே பொழேர் பொழேர்னு அறை விழுமே. அதுமாதிரி இருந்துச்சு எனக்கு, ஆனா பதில் சொல்லியாகனுமே.
‘’நாங்களும்..........போர்ராட்டம்........ பண்னுவ்வோம்ம்ம், ஆனா போலிஸ் எங்களை மட்டும் துறத்தி துறத்தி அடிக்கும்’’ன்னு இழுத்து சொன்னேன்.
 ‘’எதுக்கு?’’ன்னு கேட்டான்.
‘’ஆமா , அவர்களுக்கு பிரட்சனைன்னா குரான், ஹதீஸ்ஸை ஆராய்ந்து, உலமாக்கள் சபை, ஜமாத் எல்லாத்தையும் கலந்து ஆலோசித்து போராட்டம் பண்ண சென்றால்........., ‘’ஏண்டா போராட்டம் முடிஞ்சு ஒரு வாரம் ஆகுது இப்ப எங்கடா வந்திங்க’’ன்னு கேட்டு போலிஸ் ஓட ஓட விரட்டி அடிக்கத்தானே செய்யும்’’ன்னு சொன்னத கேட்டு ரொம்ப நேரம் சிரிச்சான்.
நவாப் ஷெரீப் ஆட்சி பற்றி கழுவி கழுவி ஊற்றுவான். அரசை விமர்சிக்கும் போது, யாரும் ‘’ஆன்டி பாக்கிஸ்தானி, இந்தியாவுக்கு போ’’ன்னு சொல்லமாட்டாங்களான்னு கேட்டேன். ‘’ஆண்டி ஆண்டிதான் அதுல என்ன பாக்கிஸ்தான் ஆண்டி, இந்தியா ஆண்டி’’ன்னு கண்ணடித்தான்.
இந்த விஷயத்துல பூராப் பயலும் நம்மள மாதிரியே..............

---------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

5 கருத்துகள்:

  1. ////இந்த விஷயத்துல பூராப் பயலும் நம்மள மாதிரியே..............///

    உண்மைதான்

    பதிலளிநீக்கு
  2. இன்னாது? இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் ஆடிச்சா? இன்னுமே இவங்கள நம்புறாங்க நம்ம ஆளுங்க.

    ரொம்பவே ரசித்தேன் யாசிர். வழக்கம் போல் அருமையான நகைசுவை பாணியில் எழுதி இருந்தீர்கள்.

    இந்த பதிவை உங்கள் அனுமதியோடு என் தளத்தில் போடுகிறேன். விருப்பம் இல்லையேல் சொல்லுங்கள் எடுத்து விடுகிறேன்.,

    பதிலளிநீக்கு
  3. //ஒரு நாள் என்னுடய கேபினுக்கு வந்தான். ஆதரவு ஐந்து கிலோவை, கருணை கால் கிலோவோடு பிசைந்து (எப்போதும் போல) பேசினான்.//
    மாஸ்
    //தனியா ஒரு பாக்கிஸ்தானி சாப்பிட்டு பார்த்ததில்லை. ஒரு ரொட்டி என்றாலும் நாலு பேர் சுத்தி இருந்துதான் சாப்பிடுவார்கள்.//
    வாவ்

    வெகு இயல்பாக வருகிறது நகைச்சுவை... அற்புதம் பாஸ் தொடருங்கள்...

    பதிலளிநீக்கு