செவ்வாய், ஆகஸ்ட் 06, 2013

ஒரு கடிதம் இன் இங்கிலீஷ்.

நம் அனைவரின் மீதும், இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.

பள்ளிக்கூட வாழ்க்கை முழுவதும் தமிழ், தமிழ், தமிழ் தான். ஆங்கிலத்துக்கும் நமக்கும், ஆகவே ஆகாது. என்ன மாதிரியே எங்க கிளாஸ்ல 45 பேர் இருந்தோம். என் கிளாஸ்ல மொத்த மாணவர்களும் 45 பேர்தான். தமிழ் அம்மாவைப் பார்த்தா சாஷ்டாங்கமா வணக்கம் வைப்போம், அதே நேரத்துல இங்கிலீஸ் சாரைப் பார்த்தா எரிச்சலா வரும், ஏன்னா அவருக்கு இங்கிலீஸ்ல தான் வணக்கம் சொல்லனும். இதனாலயே அவரு அப்படிக்கா வந்தா, நாங்க இப்படிக்கா ஓடிருவோம். வணக்கத்துல என்னடா வந்திரப் போகுதுன்னு நீங்க கேக்கலாம், ஆக்சுவலா எங்களுக்கு, “குட் மார்னிங்க்” காலையில சொல்லுறது என்பது மட்டும்தான் தெரியும், இந்த “குட் ஆஃப்டர் நூன்”, “குட் ஈவினிங்க்” எப்ப சொல்லனும்னே தெரியாது, இந்த குழப்பத்துல தப்பா சொல்லிட்டா, அம்டுத்தேன், சாரு, சார சாரயா உட்கார்ர இடத்துல எஸ்ஸே எழுதிடுவாரு. அரசாங்க ஆஸ்பித்திரியில் அரிசி, பழம், 500 ரூபாயும் வாங்கிட்டு வருகிற தோனியில எவனாவது இடுப்ப புடிச்சிக்கிட்டு, குனிஞ்சி நடந்து வந்தா, இங்கிலீஸ் சாரைப் பார்த்துட்டு வந்திருக்காருன்னு எண்ணிக்கிடனும். “தமிழ் எங்கள் பேச்சு, தமிழ் எங்கள் மூச்சு” இப்படியாக நாங்க நீட்டி நிமிர்ந்து முழங்குனதுக்கு காரணம் தமிழ் மேல் கொண்ட பற்று அல்ல, ஆங்கிலத்தின் மேல் கொண்ட வெறுப்பு.

ஷேக்ஸ்பியர் கையில கெடச்சா, செருப்பாலயே அடிப்பேன்னு, ஷூவ கழட்டி காட்டின காலம் அது. ஆங்கிலம் எல்லாம் பெரிய மேட்டரே இல்லன்னு சொன்ன ஒரு மகானிடம் (அப்ப அப்படித்தான் தெரிந்தாரு) “அண்ணே!, இந்த எஸ்ஸே (Essay), பொயட்டரி (Poet), பேரகிராஃப் (Paragraph) எல்லாம் நான் மக்கப்பண்ணிருவேன், ஆனா லெட்டர் எழுதுறது மட்டும் என்னால புரிஞ்சிக்கவே முடியல, அது மட்டும் புரிஞ்சு நல்லா எழுதிட்டா ஒரு 10 மார்க் கிடைக்கும், எப்படியாவது எனக்கு அதமட்டும் சொல்லிக்கொடுங்க” ன்னு கெஞ்சுவேன். “அடப்பாவி!!!!!!!!! ஆங்கிலத்துல ரொம்ப ரொம்ப ஈஸியானது லெட்டர் எழுதுறதுதாண்டா, வா நான் சொல்லிக்கொடுக்கிறேன்” ன்னு சொல்லி உட்கார வச்சு சொல்லிக்கொடுத்தாரு. “யாருக்கு எழுதனும்னு கேள்வியிலேயே இருக்கும், அத அப்படியே எடுத்து ‘டு’ ல எழுது, ‘ஃப்ரம்’ ல உன்னோட விலாசத்த எழுது, இதுக்கே உனக்கு 5 மார்க் வந்திடும், அப்புறமா ‘ஹாய்’ னு ஆரம்பிச்சு நான் இங்க நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க, அங்க எல்லோரும் சுகமா? ன்னு எழுதிட்டு, மறுபடியும் கேள்வித்தாள்ல இருக்குற எது சம்பந்தமான விசயமோ அதை எடுத்து அப்படியே எழுதிரு. கடைசியில உங்கள் உண்மையுல்ல, அன்புடன்னு முடிச்சிடு, அவ்வளவுதான்”.

அது ஒரு மாதாந்திர தேர்வு, மொத்தம் 20 மார்க்குத்தான், ரெண்டே கேள்வி தான் ஒன்னு “எஸ்ஸே (Essay) ” அதுக்கு பத்து மார்க், இரண்டாவது “லெட்டர்” அதுக்கும் பத்து மார்க். எல்லா பரீட்சையைப் போலவும் நான் படிச்சிட்டு போன எஸ்ஸே (Essay) வரவில்லை. ஆனா அண்ணன் சொல்லிக்கொடுத்த லெட்டர் வந்திருந்தது. அவர் சொன்னமாதிரியே கேள்வித்தாளில் ‘யாருக்கு’, ‘என்ன காரணத்திற்காக?’ எல்லாம் அதுலேயே இருந்ததுகண்டு ஒரே மகிழ்ச்சி, அந்த கணம் அண்ணன் தெய்வமா தெரிஞ்சாரு. இனிமே இங்கிலீஸ் பரீட்ச்சைக்கு மட்டும் “அண்ணன் துணை” போட்டதுக்கு பின்னாடிதான் பரீட்சையே எழுதனும்னு எல்லாம் முடிவுபண்ணியாச்சு. அவர் சொன்னமாதிரியே, அனுப்புனர், பெறுனர், ஹாய், நீங்க நல்லா இருக்கீங்களா, நான் நல்லா இருக்கேன் எல்லாத்தையும் எழுதிவிட்டு, கேள்வித்தாளில் இருந்த காரணத்தையும் அப்படியே எழுதி, அன்புடன் எல்லாம் போட்டுவிட்டு லெட்டரை முடித்தேன்.

பரீட்சை முடிச்ச பின்பு, நண்பர்களோடு சேர்ந்து, எழுதுனதுக்கு மார்க் போட்டு பார்க்குறது வழக்கம், “உனக்கு எத்தணடா வரும்?” என்று நண்பன் கேட்க “எஸ்ஸே நம்மளை கவுத்திருச்சுடா, இருந்தாலும் சங்கர சுப்புவைப் பார்த்து அப்படி இப்படின்னு எழுதியிருக்கேன், அதுக்கு 8 மார்க் கிடைக்கும், அப்புறம் லெட்டர் சூப்பரா எழுதியிருக்கேன் அதுக்கு கண்டிப்பா 10 விழுந்திரும், அது குறையுறதுக்கு சான்ஸே இல்ல. எப்படியும் 20க்கு 18 மார்க் வரும்டா” ந்னு பெருமையா சொன்னேன். “டேய்.........18ன்னா 11001நூற்றுக்கு 90 மார்க்காடா?” ன்னு ஏங்கிப்போயிட்டான் என் நண்பன். ‘உனக்கு இங்கிலீஸ்ல மட்டும் மார்க் வராது, இப்ப அதுலயும் 90ன்னா இந்த தடவ நீதாண்ட முதல் ரேங்க், பாவம் ஜேம்ஸ் இந்த தடவ இரண்டாவது இடத்துக்கு போயிறுவான்” என்று மற்றொரு நண்பனின் பக்கவாத்தியம் வேறு. ஹைய்யோ, ஹைய்யோ ஒரே குஷ்டமப்பா!!!!!!!

மறுநாள், மதியம் கணக்கு பரீட்சை, பெரும்பாலும், மதியம் பரீட்சை இருந்தால், காலையில வகுப்புகள் நடத்தாமல், மதிய பரீட்சைக்கு படிக்கச் சொல்லிருவாங்க. ஆனா அன்று, ஆங்கில வகுப்பு இல்லை என்றாலும் கூட, அறிவியில் வகுப்பை கடன் வாங்கிவிட்டு, இங்கிலீஸ் சார் நேற்று நடந்த பரீட்சை பேப்பரை திருத்திக் கொண்டு வந்தார். பேப்பர் கொடுக்கப் போகிறார் என்றது எனக்கு ஆர்வம் அதிகமாகியது, காரணம் நேற்று ஜேம்ஸ்ஸும் மார்க் போட்டுப்பார்த்த போது அவனுக்கும் 90 மார்க் வந்தது. யார் முதல்மார்க் என்று காண கிளாஸே காத்திருந்தது. அவர் எப்போதும் கடைசி மார்க் எடுத்தவர்களில் இருந்துதான் ஆரம்பிப்பார். முதல் மார்க் வாங்கியவனுக்கு கடைசியாகத்தான் கிடைக்கும். சார் எப்போதும், 70 மார்க்குக்கு மேல் வாங்கியவர்களை ஒன்றும் செய்வதில்லை. அதற்கு கீழ் வாங்குபவர்களுக்கு மார்க்கின் அடிப்படையில் குண்டியில் வீக்கம் இருக்கும்.

45 பேர்களில் 40 பேருக்கு பேப்பரை கொடுத்தாச்சு அதில் 35 பேருக்கு கு. வீங்கியும் போனது. அதுவரையில், எனது, ஜேம்ஸ் மற்றும் இன்னும் மூன்று பேர்களின் பேப்பர் வரவில்லை. அடுத்து அடுத்து மற்ற மூன்று பேர்கள் வர, இறுதியாக எனது பேப்பரும், ஜேம்ஸ் பேப்பரும் பாக்கி, அந்த நேரத்தில் ஆபிஸ் பாய் வந்து தலைமை ஆசிரியர் கூப்பிடுகிறார் என்று சொல்ல, சார் பேப்பரோடு 5 நிமிடத்தில் திரும்ப வருவதாக கூறிவிட்டு சென்றுவிட்டார். அவ்வளவுதான், ஒற்றுமையா இருந்த கிளாஸ் இரண்டாக பிரிந்தது, பாதிப்பேர் ஜேம்ஸ்ஸுக்காகவும், மீதிப் பேர் எனக்காகவும் பரிந்து பேசிக்கொண்டிருந்தார்கள். கடைசியாக கொடுத்தவனின் மார்க் 85, எப்படி பார்த்தாலும் நாம 85க்கு மேலதான். பார்த்திரலாம் இந்த பாட்ஷாவா இல்ல அந்த ஆட்டணியா ன்னு கிளாஸ்ஸே ஆவலாக இருந்தது. சார் வந்தார்.

அடுத்து யார் பேர சொல்லப்போகிறாரோ அவன் தோல்வி, “ஆண்டவா, உனக்கு 25 பைசா நத்தஹர் பள்ளிவாசல் உண்டியல்ல போடுறேன், கடைசி நானாகத்தான் இருக்கனும்” என்று கண்ணை மூடிக்கொண்டு வேண்டிக்கொண்டிருந்தேன். அடுத்து சார் கூப்பிட்ட பேர் ‘ஜேம்ஸ்’.

இறைவா!!!!!!!!!!!!!!!!!!!!!!!! உன் கருனையே கருணை, என்று இறைவனுக்கு நன்றி கூறினேன். கிளாஸே என்னைப் பார்த்து உதட்டை மூடி, தலையை வலதுபுறமாக மேல் நோக்கி தூக்கி ‘ம்ம்ம்ம்” என்று சொல்ல, அடடா என்ன ஆனந்தம், பேரானந்தம் அது.  ஜேம்ஸ் பேப்பரோடு என் பக்கத்தில் வந்தான், அவனது மார்க் 92. அப்படின்னா நாம 92க்கும்  மேல. "உன்னால மட்டும் எப்படிடா யாஸிர்னு"  மனசுக்குள்ள நினச்சுக்கிட்டேன்.

“இன்னும் ஒரே ஒருத்தனுக்குத்தான் பேப்பர் வரல இல்லையா, யாரு அது?” ன்னு சார் கேட்க, ஒட்டுமொத்த வகுப்புமே “யாஸிர்” ன்னு கத்துச்சு. அது எனக்கு என்னமோ குத்துச்சண்டயில கு.சண்டை வீர்ர் மேடைக்கு வரும் போது அவர் பேரை சொல்லுவது போல “யாஸிர்.....யாஸிர்......யாஸிர்......” என்று கேட்டது. நான் போய் சார் முன்னாடி புன்னகையுடன் நின்றேன்.

வட்டு எறிதலில் எப்படி உடம்பை வழைத்து வட்டை எறிவார்களோ, அதே மாதிரி, உடலை வழைத்து கையை முறிக்கிக்கிட்டு ஓங்கி ஒரு அறை செவில சேத்து உட்டாரு. “அப்பத்தான்ன்ன்ன்னு” அஞ்சு பெஞ்ச் தாண்டி பறந்து போய் விழுந்தேன். விழுந்தவன் காதை புடிச்சு தூக்கி, பிரம்பால பின்னு பின்னுன்னு பின்னி எடுத்திட்டாரு. மற்றவன் குண்டி எல்லாம் ‘சுமால் (Small)” “மீடியம்(Medium)” “லார்ஜ் (Large)” லேவலுக்கு வீங்கி இருக்க எனது பெட்டக்ஸ் மட்டும் “XXL” “XXXXXL” லெவலுக்கு வீங்கிடுச்சு.

“ஏண்டா, சாலை, தெருவிளக்கு வசதி கோரி கலெக்டருக்கு, லெட்டர் எழுதுடாண்ணா, ஹாய், ஹவ் ஆர் யூ, அயம் ஃபைன் (hi, how are you, I am fine) னாடா எழுதுற, காவாளிப்பயல! உனக்கு கலெக்டர் குடும்பத்தோட அவ்வள்வு நெருக்கமோ “ஹவ் இஸ் யுவர் பேமிலி” (how is your family) ன்லா எழுதியிருக்க” என்று சொல்லி சொல்லி அடி பிருத்திட்டாரு.

“இதெல்லாம் மன்னிச்சிருவேன், ஆனா.......”

அய்யய்யோ இன்னுமா???????? ன்னு மனசுக்குள்ள நினச்சிக்கிட்டு, அடுத்த ரவுண்டுக்கு ரெடியானேன்.

“எல்லாத்தயும் மன்னிச்சுருவேன், ஆனா கடைசில நீ எழுதுனதத்தாண்டா என்னால தாங்கிக்க முடியல” ன்னு சொல்லி அடுத்த 15 நிமிசம் நான் ஸ்டாப் கொண்டாட்டம்......

புரியுது, புரியுது......உங்க ஆர்வம் எனக்கு புரியுது. அந்த கடைசி வார்த்தை தானே....

Yours Lovely

Yasir

ஞாயிறு, ஜூலை 14, 2013

ஆஹா, கவிதை, கவிதை....

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
காலேஜ் படிக்கும் போது, ஒரு நாளுக்கு இருக்கும் 8 பிரியடுகளில், நமக்கு பிடிக்காத, குறைந்த பட்ச 8 பிரியடுகளில் கவிதை எழுதுவது தான் வேலை. எல்லாமே “தங்கச்சிக்கு கல்யாணம், தங்கச்சிக்கு கல்யாணம்.....” ரேஞ்சுக்கு உண்டான காவிய கவிதைகளாகத்தான் இருக்கும். சில சமயத்துல எனக்கே பிடிச்சமாதிரியா கவிதை அமைச்சிரும். “அய்யாய்யோ நாட்டாமை தம்பி, டீச்சர வச்சிருக்காண்டோய், இந்த ரகசியத்த யாருகிட்டயாவது சொல்லணும்டோய்” கவுண்டமணி மாதிரி எவண்டா வருவான்னு காத்திகிட்டு இருப்பேன், பின்னாடியிருந்து ஒரு குரல் வரும் “குட்மானிங்க் சீனியர்”ன்னு சொல்லி ஜீனியர் பசங்கவந்து நிப்பானுங்க. கசாப்புக்கடைக்கு, ஆடுகள் அணி அணியா வந்தா சும்மாவிடமுடியுமா?. வாங்கடா, நான் ஒரு கவிதை எழுதியிருக்கேன் கேளுங்கன்னு உக்கார வச்சி என் கவிதை சொற்பொழிவை ஆத்து, ஆத்துன்னு ஆத்துவேன். கேட்டுவிட்டு, “ஏண்ணா இந்த கவிதையை எல்லாம் உங்க கிளாஸ் பசங்ககிட்ட சொல்லமாட்டேங்குறீங்கன்னு” ஒருத்தன் கேட்க, “அங்க போனா அவங்க சாத்து, சாத்துன்னு சாத்திருவானுங்க அது தானண்ணா?” ன்னு இன்னொருத்தன் நம்மளையே கலாய்ப்பான். “போங்கடா, போய் கிளாஸ்ஸ அட்டண்ட் பண்ணுங்க, இல்லனா இன்னொரு கவித சொல்லனும்மா?”ன்னு டெரர் லுக்குவிட்டா ஒரு பய இருக்கமாட்டான்.

எங்க கிளாஸில் சந்தோஷ்ன்னு ஒருத்தன் இருந்தான். அவங்கிட்டமட்டும்தான் நான் என்னுடய கவிதைகளை சொல்லுவேன். ஏன்னா? அவன் மட்டும்தான் காதுகொடுத்து கேட்பான், கேட்டுட்டு நல்லாயிருக்குன்னும் சொல்லமாட்டான், நல்லாயில்லைன்னு சொல்லமாட்டான். என்ன பொருத்தவரை முதல்ல இருக்குறது அவசியமே இல்லை. இரண்டாவதுதான் முக்கியம். சந்தோஷ் எந்தமாதிரின்னா. செமஸ்டர் ஸ்டடி லீவில் எல்லாரையும் போல நாங்களும் மொத்தமா உட்கார்ந்து ஆளு, ஆளுக்கு “ஏ” ஜோக்கு சொல்லி சிரிச்சிக்கிட்டு இருப்போம், நம்ம பய மட்டும்தான் “பே” ன்னு இருப்பான். 5 நிமிச ஜோக்கின் உள்ளார்ந்த அர்த்தத்தை படமெல்லாம் போட்டு அரைமணி நேரமா புரியவைக்க முயற்சி செய்வோம். கடைசிவரைக்கும் கேட்டுவிட்டு “ஙே”ன்னு இருப்பான்.

என்னை நான் ஒரு சுமாரான கவிஞனாகத்தான் (நானே) நினைத்துக்கொண்டேன், ஆனால் எனக்கும் வைரமுத்துவுக்குமான இடைவெளி ஒரு இஞ்ச் அளவுதான் என புரியவைத்த பெருமை என்னுடய மெக்கானிகள் நண்பன் ராஜா ராமனுடையது. ராஜாராமன், விஜயராகவன், கார்திக் இவங்க மூணு பேரும் ஒரே ரூம். என்னுடைய ரூமில் இருந்து பத்து ரூம் தள்ளி. பொதுவா ஞாயிற்றுக்கிழமை மதியம் சாப்பிடபோகும் போது மட்டும் கார்தியுடன் செல்வேன், ஏன்னா, அவன் சிக்கன் சாப்பிடமாட்டான், அதனால அவன்கூட போனால், அவன் சிக்கன் நம்ம தட்டுல தவம் இருக்கும். இப்படியான ஒரு ஞாயிறு அன்று, ராஜாராம் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தான். மத்த ரெண்டுபேரும் ஒரு பேப்பர கையில வச்சிக்கிட்டு, பேயரஞ்சமாதிரி இருந்தானுங்க. எனக்கானா ஒரே பயம், “ஆஹா, நம்ம ரூம்ல இருந்து, ஏதாவது கவிதை பேப்பர், காத்துல அடிச்சு வந்துவந்திருக்குமோ, எடுத்து படிச்சிட்டானுங்களோ, அப்ப இன்னைக்கு சிக்கன் கட்டா????” இப்படியா மைன்டுல ஓடிக்கிட்டு இருக்கும்.

“டேய், என்னங்கடா, என்ன ஆச்சுடா உங்களுக்கு?” நான் கேட்டேன்.

“ராஜாராம் ஒரு கவிதை எழுதியிருக்கான், அத எங்ககிட்ட கொடுத்து வாசிக்கச்சொன்னான், அத வாசிச்சிட்டுத்தான் இப்படி.....”ன்னு விஜயராகவன், விம்பி, விம்பியபடியே சொன்னான்.

“என்னது............ஒரு உறையில ரெண்டு கத்தியா?”, என கத்தியபடியே கவிதையை நான் வாசிக்க ஆரம்பித்தேன்.

“ஃபேன் (Fan) காற்றே போ, போ,
தென்றல் காற்றே வா, வா.
பேனாவே போ, போ,
எழுதுகோலே வா, வா.
டியூப் லைட்டே போ, போ,
எரிவிளக்கே வா, வா.

........இப்படியாக பல பல வா,வா, போ, போ. இறுதியில்

மொத்தத்தில்
செயற்கையே போ, போ.
இயற்கையே வா, வா. ன்னு முடிச்சிருந்தாரு.

படிச்சிப்பார்த்தபின்பு ராஜா ராமன் ரொம்ப ஆர்வமா எங்கிட்டவந்து “எப்படிடா யாஸிர் இருந்துச்சு?” ன்னு கேட்டாரு.

“அர்ரேஹ் வா(வ்), வா(வ்)”

இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் தெரிந்து கொண்டது, புரிந்து கொண்டது, அறிந்து கொண்டது இரண்டு விசயம், ஒன்று, இதுக்கு “நாமே தேவலை”, இரண்டாவதுதான் ரொம்பமுக்கியம் “கவிதை எழுதுறதவிட கஷ்டமான விஷயம், அடுத்தவன் கவிதையை படிக்கிறது”. அதுக்கப்புறம் எவங்கிட்டயும் போயி என் கவிதையை படின்னு கேட்டதும் இல்லை, எவனும் படிச்சதும் இல்லை.
“காதலிச்சா, கவிதை கண்டெய்னர் கண்டெய்னரா வந்து இறங்கும்” எவனோ சொன்னதமட்டும் கேட்டு, கண்ணாடியில மூஞ்சபார்க்கம, இருக்குற டீக்கடை, பள்ளிக்கூட வாசல், சந்து, பொந்து எல்லா இடத்துலயும், நின்னு, உட்கார்ந்து, தர்ணா எல்லாம் பண்ணிபார்த்தும்கூட யாரும் சீண்டல.“இயற்கையை ரசிக்கும் போது கவிதை தானா வரும்னு” இன்னொருவன் சொன்னான். சிவகாசியில இயற்கையை தேடிக்கண்டுபிடிக்கிறதுக்குள் தாவு தீந்திரும். அடுத்த பாயிண்ட் “அழகான பொண்ணுங்கள பார்த்த, கவிதை வரும்” னு மற்றொருவன் கூற, “ம்க்கும் அதுக்கு கண்டிப்பா நம்ம காலேஜில சான்ஸ் இல்ல. அதுவும் நம்ம சிவில் டிப்பார்ட்மெண்டுல்ல............. சுத்தம், டிப்பார்ட்மெண்ட் ஹிஸ்டரில தேடினாக்கூட இருக்காது”. இப்படியா பல முட்டுக்கட்டைகளால் கவிதை எழுதுவதையே மறந்துட்டேன்.

ஐன்ஸ்டீன் விதி, பிதாகரஸ் விதி, அரிக்மெட்டிஸ் விதி, ஹூக்ஸ் விதி, ஜீல்ஸ் விதி....இதுமாதிரி நான் புத்தகத்தில் படித்த பல விதிகள், வாழ்க்கையில பயன்பட்டதே இல்லை அதுக்கு நானும் கவலைப்பட்டதும் இல்லை, ஒன்றைத்தவிற அது ‘நியூட்டனின் மூன்றாம் விதி”. என்னுடய கவிதைகளை பிறரை படிக்கச்சொன்னதன் விளைவு, ராஜா ராமின் கவிதையால் திரும்பகிடைத்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். என் மனைவி ரூபத்தில் இன்னும் “ரிலோட்”டாகி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஐந்து யாஸிர், பத்து ராஜா ராமன் கவிதையின் கலவை என் மனைவியின் கவிதை. விகடனில் சொல்வனத்தில் வரும் கவிதையை கூட சொல்லவராது, “அன்பே ஆருயிரேய்” ங்குறத படிச்சுட்டு, எங்கிட்ட வந்து “அன் பேய்.... அரு உயிரே” ன்னு சொல்லுவாள். கவித சொல்லிட்டு புருஞ்சிதான்னு கேட்டவுடனே “சூப்பர், புரிஞ்சுது”ந்னு சொல்லிருவேன். “இல்ல, புரியல”ன்னு சொன்னா. ம்புட்டுத்தேன் மறுபடியும் முதல்ல இருந்து வாசிச்சுகாமிக்க ஆரம்பிச்சிடுவாள். அதனால், இப்பெல்லாம் கவிதை சொல்ல ஆரம்பிச்சவுடனே “அர்ரேஹ் வா(வ்), வா(வ்)” தான். அவளுக்கு அவளுடய கவிதையை தொகுத்து புத்தகமா போடனும்மாம். “இப்ப வேண்டாம், கொஞ்ச நாள் கழித்து போடலாம், ஏன்னா வடக்க இப்பத்தான் ஒரு பேரழிவு நடந்திருக்கு, அதுக்குள்ள தெற்க வேண்டாம், நாடு தாங்காது” ன்னு சொன்னேன் “சரிங்க” ன்னு கேட்டுகிட்டு சமத்தா போயி, சோத்துல உப்பள்ளி போட்டுட்டா. திண்ணுட்டு கண்ணுல தண்ணி வச்சுண்டன்.

வீட்டம்மா, அவங்க சொல்லுறதோட மட்டும் விடாம, நீங்களும் ஏதாவது கவிதை சொல்லுங்கன்னு சொல்லி நச்சரிக்கும். நானும் குமுதம், ஆ.வி, குங்குமத்தில் வரும் கவிதையை நானே எழுதியது போல, வறுமையின் நிறம் சிகப்பு “தையன தத்தன...”பாடலில் வரும் கமல் ரேஞ்சுக்கு சிந்திச்சு, சிந்திச்சு சொல்லுவேன். கேட்டுவிட்டு “ம்ம்ம்ம் ஒன்னும் புரியலை, என் அளவுக்கு இல்லன்னு” சொல்லுவாள், இதுக்கும் அந்த கவிதை எல்லாமே ரூ10,000 பரிசு பெற்றதாக இருக்கும். இப்படியான ஒருநாளில் கவிதை கேட்டபோது, ஸ்டாக் வச்சிருந்த கவிதை எல்லாம் காலியாகிவிட, சரி இன்னைக்கு தூக்கிகிடக்கும் கவிஞரை தட்டி எழுப்பி சொந்தமா ஒரு கவிதை சொல்லலாமென்று, என் மனைவி, கருப்பு பர்தாவோடு மூணாறு பூந்தோட்டத்தில் பூக்களுக்கிடையில் எடுத்தபுகைப்படத்தை வைத்து ஒரு கவிதை சொன்னேன். எப்போதும் போலவே அவளுக்கு புரியவில்லை. என்னடா இந்த கவிஞனின் கவிதைக்கு வந்த சோதனைன்னு ரொம்ப சோகமாகிடுச்சு. உங்களுக்காவது புரியுதா பாஸ்....

“இது என்ன,
இது என்ன ஆச்சர்யம்!!!!!!!
வண்ணமலர்களுக்கிடையே ஒரு
கருப்பு வெள்ளை ரோஜா”


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++யாஸிர்.

செவ்வாய், ஜூலை 09, 2013

ஹிஸ்டிரின்னா வரலாறுதான....

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.

சின்னவயதில் “நீ பெரியவன் ஆனதும் என்னவாக ஆகப்போகிறாய்?” என்ற கேள்விக்கு, “கூடங்குளம் என்னைக்கு சார் ஓப்பன்னாகும்?” என்ற கேள்வியை கேட்டுமுடிப்பதற்குள், நம்ம அமைச்சர் நாராயணசாமி எப்படி “இன்னும் 15 நாளில்” என்ற பதிலைச் சொல்லுவாரோ அது மாதிரித்தான் நானும் “டாக்டர் ஆவேன்” னு சொல்லுவேன். எங்க ஊருக்காரனுங்க, எனக்கு முன்னாடியே கடையநல்லூரை கண்ணால பார்த்தவனுங்க, குரங்கு ரத்தம் குடிச்சா குசும்பு கூடும்னு, குற்றாலத்துல கூடராம் போட்டவனுங்க எப்படி இருப்பானுங்க. சின்னப்பயன்னு கூட பாராமல். “டாக்டர்னா எம்.பி.பி.எஸா?, இல்ல பிசியோதெரபியா, இல்ல பி.டி.எஸா? இல்லன்னா சித்தாவா?” என்று அடுத்த கேள்விகேட்க, நம்ம பதில், “ஙே”.

இனிமே எவன் கேட்டாலும் டாக்டர்னு சொல்லக்கூடாதுன்னு உறுதிமொழி எடுத்துக்கிட்டேன். இப்படித்தான் என் டாக்டர் கனவு காணாம போச்சு, (இதுக்கு இந்த சமுதாயம் பதில் சொல்லியே தீரணும்). டாக்டர் இல்லன்னா வேற என்னதான் சொல்லுறது, “இஞ்சினியர்” எஸ் இனிமே என்ன ஆகப்போறன்னு எவனாவது கேட்டா “இஞ்சினியர் ஆவப்போறன்லே” ன்னு சொல்லனும். “இஞ்சினியர்ல என்ன இஞ்சினியர்னு” கேட்டா?. “அது என்ன கேட்டா, கண்டிப்பா கேட்பானுங்க (மைண்ட் வாய்ஸ்). அப்போ எங்க மாம ஒருத்தரு இஞ்சினியர் படிச்சியிருந்தாரு. எங்க அப்பாக்கிட்ட போயி மாமா என்ன இஞ்சினியர்னு கேட்டுவச்சிக்கிட்டேன். அதிலிருந்து எவன் கேட்டாலும் “நான் இஞ்சினியர் ஆகப்போறேன்” என்று சொல்லி அடுத்த கேள்வியை எதிர்பார்த்து காத்திருப்பேன். அப்படி அவன் கேட்கலைன்னா “என்ன இஞ்சினியர்னு கேளுங்க?” ன்னு நானா கேட்கச்சொல்லி “இஞ்சினியர், சிவில் இஞ்சினியர்” ந்னு பாண்ட், ஜேம்ஸ் பாண்ட் ரேஞ்ச்சுக்கு சொல்லி ஸ்லோமோசன்ல ஒரு நடையப்போடுறது. இதுதான் நான் சிவில் இஞ்சினியர் ஆன கதை. “சே! இவன் டாக்டர் ஆகியிருந்தா நமக்கெல்லாம் இலவசமா வைத்தியம் பார்த்திருப்பான், நாம நோய் நொடியில்லாம 100 வயசுவரை பள்ளிவாசல்ல இருந்துகிட்டு புறம்பேசியிருந்திருக்கலாம். ம்ம்ம் இப்படி முடியாம போச்சே.......................”ன்னு எங்க ஊருக்காரனுங்க இப்ப வருத்தப்படுறதா ஒரு கேள்வி.

டாக்டர்ல ஆரம்பிச்சு, இஞ்சினியர், சாரி சிவில் இஞ்சினியர் ஆகுற இடைப்பட்ட காலங்களில் அப்படியாகனும், இப்படியாகனும்னு மனசு மரத்துக்கு மரம் தாவுச்சு, அதுதான் “அஸ் பாலோஸ் பிலோ”.

கிரிக்கெட் விளையாட ஒன்னு, ரெண்டு பேருக்கு பஞ்சம் வந்துச்சுன்னா, “அப்படி பார்த்தா அசாருதீன், இப்படி பார்த்த இம்ரான் கான், படுத்துக்கிட்டு பார்த்தா பட்டோடி, கவுந்து பார்த்தா காம்ளி மாதிரி இருக்கன்னு” ஐஸ்பேக்டிரியையே தலையில தூக்கிவச்சி நம்மள இஸ்த்துக்குன்னு போவானுங்க. அப்படி விளையாடும் போது ஏதாவது ஒரு மேச்சுல 10 ரன்னுக்கு மேல எடுத்துட்டா. போச்சு.... போச்சு..... அன்னைக்கு கனவுல கபில்தேவே எங்க வீட்டுக்கே வந்து எங்கப்பா கால்ல விழுந்து, “இந்திய மானத்த உங்கபையன அனுப்பிவச்சு நீங்கதான் காப்பாத்தனும்னு” கதறி அழுவாறு. சரி இனிமே நம்ம பாதை கிரிகெட், கிரிகெட், கிரிகெட்டுத்தான்னு சபதம் எடுத்து பேட்டோட இறங்கின அடுத்தடுத்த மேட்சுகளில் ரன் 2, 1, 3.5, 2.25, 1.75 வாகத்தான் இருக்கும். 

இருந்தாலும் கிரிக்கெட்ட விட மனசு வரல. சச்சின் டெண்டுல்கர் இல்லன்னா ஜவகல் ஸ்ரீநாத்ன்னு முடிவுபண்ணி, பவுலிங்கில் பவரக்காட்டனும்னு வீட்டு முத்தத்துல, இன் சுவிங்க், அவுட் ஸ்விங்க் போன்ற பல பயிற்சி எடுத்து போய் நின்னா, அன்னைக்குன்னு பார்த்து 11 பேர் கொண்ட அணிக்கு 18 பேர் வந்து நிப்பானுங்க. கடைசியா நாம விளையாண்ட 10 மேட்சுல, விட்ட போர்கள் 28 (அதுல தடுக்குறேன்ற பேர்ல நானா தள்ளிவிட்டது 9), விட்ட கேட்சுகள் 15, பவுலிங்க் போட்டு கொடுத்த ரன்கள் 658, ஒய்டு, நோ பால் என எல்லாமே இரண்டு டிஜிட், மூன்று டிஜிட்ல இருக்கும் ஆனா எடுத்த ரன்னுன்னு பார்த்த அது ஒரு டிஜிட்லதான் இருக்கும். இந்த ஹிஸ்டிரி, அக்கவுண்ட்ஸ், காமெர்ஸ் எல்லாம் கண்முன்னாடி வந்து போகும். இருந்தும் வெக்கத்தவிட்டு, கபில்தேவ் கண்ணீருக்காக முன்னாடி போய் நிப்பேன். “கவாஸ்கர் என் கனவுல வந்து, இந்த மேட்சுக்கு உன்ன எடுக்கவேண்டாம்ன்னு சொன்னாரு” என்று சொல்லிட்டு, அபூர்வ சகோதர்கள் அப்பு கமல்மாதிரி தனியா நிக்கவச்சிட்டு போயிருவானுங்க. கபில்தேவின் கண்ணீர், அந்த ஒரு சகாப்தத்தின் கண்ணீர் அஞ்சலியானது.
முன்னாடியெல்லாம் 8 மணிக்கு மேலதான் சீரியல், செய்திகள் எல்லாம் ஆரம்பிக்கும், அதுவரைக்கும் டி.வி ரிமோட் என் கையில்தான் இருக்கும். ஏதோ ஒரு சேனல்ல, ஏதோ ஒரு நிகழ்சியில ஓவியம் வரைவது எப்படி? ன்னு சொல்லிகொடுப்பாங்க. அத பார்க்க நோட்டு, பென்சிலோட டி.வி முன்னாடி உட்கார்ந்து வரைஞ்சு, வரைஞ்சு பார்ப்பேன். இனிமே கிரிகெட் கிடையாது நம்ம வாழ்க்கை. “ஓவியன்” இதுதான் இனி நம்ம புரஃபெசன்னு முடிவுபண்ணி, சிறுவர் மலரில் 1,2,3.... நம்பர சேர்த்து பென்சிலில் கோடுபோட்டா ஒரு பூனை, கோழி.....படம் எல்லாம் வரும். இப்படியா என் திறமைகளை மெருகேற்றிக்கொண்டிருந்த சமயம்,தனியாக ஒரு படம் வரையவேண்டும் என்று ஆர்வம் அதிகமாகி ஒரு நோட்ட எடுத்து, பாரதியார் படத்தை வரைந்தேன். நடிகை மீனா, முண்டாசு, பெரிய மீசை வச்சா எப்படி இருக்கும், அப்படி படம் வந்திருந்தது. எனக்கு ஒரு பக்கம் “ச்சே! படம் இப்படி ஆகிடுச்சேன்னு” வருத்தம் இருந்தாலும், இன்னொரு பக்கம் “பரவாயில்லை முண்டாசு, மீசையாவது நல்லா வந்துச்சே”ந்னு ஒரு பெரிய சந்தோசம். அன்னைக்கு கனவில் ஓவியர் உசேன் என்னை அவரின் கலைவாரிசுன்னு பத்திரிக்கை, மீடியாவிற்கு அறிமுகப்படுத்திவைக்கிறார். அடுத்த நாள் கலையில எங்கப்பா அந்த படத்தை கையில் வைத்துக்கொண்டு “இத யாருடா வரஞ்சா?”ன்னு கேட்டார், நான்தான்னு சொன்னவுடனே அவர் முகத்தில் ஏற்படும் பூரிப்பை பார்க்க புன்னகையுடன் ஏறெடுத்துப்பார்த்தேன், “பாய்ஞ்சி அடிச்சா பத்து டன்னு வெயிட்டுடா” ஸ்டைல்ல, நான் உன்னவிட பெரிய ஓவியண்டான்னு மூஞ்சி, முதுகுயெல்லாம் ஓவியத்த தீட்டு, தீட்டுன்னு தீட்டிட்டுபோயிட்டாரு. பின்ன, அவர் வியாபார வரவு, செலவு, கணக்கு புத்தகத்துல ஓவியம் வரஞ்சா சும்மாவாயிருப்பாரு, அன்னையோட அந்த ஓவியனும் செத்துட்டான். இல்ல சாகடிச்சிட்டானுங்க.

சின்னவயசுல இருந்தே பேப்பர் படிக்குறது, வார இதழ்கள் படிக்கிறதுல எனக்கு ரொம்ப ஆர்வம், ஜூனியர் விகடன் வாரம்தவறாம எங்கவீட்டுல இருக்கும் அத ஒன்னு விடாம எல்லாத்தையும் படிப்பேன். “ஜாதியால பிரிவு, மதத்தால வேறுபாடு, ஏழை-பணக்காரன் பாகுபாடு, அதிகார துஷ்புரயோகம், ஆற்றலற்ற அரசியல், ஆரோக்கியமற்ற வாழ்வு, கொலை, கொள்ளை, வரதட்சனை,.......இப்படி சாக்கடையா கிடக்கும் இந்த சமுதாயத்த சுத்தம் பண்ண ஒரே வழி நீ அரசியலுக்கு வரணும். முட்டிக்கு மேல கைலிய தூக்கி கட்டிக்கிட்டு ஒரு கையில விளக்குமாரு, இன்னொரு கையில பினாயில் பாட்டிலோட இறங்கி இந்த நாட்ட நீதான் சுத்தம் பண்ணனும்னு” ஏதோ ஒரு வாய்ஸ் சொல்ல, “ஆமா, நீங்க தான் சுத்தம் பண்ணனும், உங்களோட நாங்க இருக்கோமுன்னு” எங்க எதிர்வீட்டுக்காரன், பக்கத்துவீட்டுக்காரன் என பல்லாயிரக்கணக்கான மக்கள் என் வீட்டுமுன்னாடி துடப்பம், பிரஷ், ப்பிளிசிங்க் பவுடர், டெட்டாயில் பாட்டல் என கையில வச்சிக்கிட்டு என்னை அரசியலுக்கு அழைப்பது போல ஒரு கனவு. இந்த கனவப்பற்றி பொதுச் செயலாளர், பொறுளாளர், கொ.ப. செயலாளர், மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர்கள், தேர்தல் குழு உறுப்பினர்கள்.... என ஆகவேண்டியிருந்த எனது நண்பர்களிடம் விவாதித்தேன். எல்லோரும் ஒருமித்தகுரலில் “மாமா பிஸ்கோத்தே”ந்னு சொல்லுறதப்போல “நோ, இட்டிஸ் நாட்” ன்னு சொல்லிட்டானுங்க.
நான் விடாம, எண்டே தளபதி ஒருத்தன கூப்பிட்டு “ஏண்டா, ஏன்?” ந்னு கேட்டேன்.
“இல்ல, அது நமக்கு ஒத்துவராது, அதுவும் உனக்கு அரசியல் சுத்தமா ஒத்துவராது, விட்டுடுன்னு” சொன்னான்.

“அதுதாண்டா ஏன்னு கேக்குறேன்?”

“அய்யோ உங்கிட்ட எப்படி சொல்லி புரியவைப்பேன், ஒத்துவராதுன்னா விட்டுடுடா”

“ஏன்னு காரணம் மட்டும் சொல்லு?”

“புரிஞ்சிக்கடா, காரணம் ஏதும் கேட்காத, அது நமக்கு, எங்கள விடுடா உனக்கு ஒத்துவராது, உன்னால முடியாது, விட்டுடு”

“ஏன், ஏன், ஏன்”

“அய்ய்ய்ய்ய்யோ.........ஏன்னா, அரசியல்வாதியானா பொய் பேசணும், பொய் பேச உன்னால முடியுமா?”

இதுவரைக்கும் என் கனவுகளை பலபேர் சாகடிச்சிருக்கானுங்க. முதல் தடவையா என் கனவை நானே கழுத்த நெருச்சு துடிதுடிக்க கொன்னுட்டேன். அந்த நாள்....... (அய்யய்யோ தேதி மறந்திடுச்சே), ஆனா மறக்கமுடியாத நாள்.

அதுக்கு அப்புறம் ஒருநாள் கனவில்

“உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்,
உலகம் அர்த்தமாகும்,
ராத்திரியின் நீளம் விளங்கும்,
கையெழுத்து அழகாகும்,
தபால்காரன் தெய்வமாவான்........”அட நம்ம வைரமுத்து.


(கனவுகள் தொடரும்)----------------------------------+++++----------------------------யாஸிர்.

புதன், நவம்பர் 07, 2012

அப்பன் சொன்ன கதை.


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.

ஒவ்வொருத்தனுக்கும் போறாத காலமுன்னு ஒன்னு வரும், சில பேருக்கு மட்டும் அந்தகாலம் போய்கிட்டும், வந்துகிட்டும் இருக்கும். அது தலைவிதியின் அடிப்படையிலானது. வரனும்னு இருந்தா வந்துதான் ஆகும், படனும்னு இருந்தா பட்டுத்தான் ஆகனும். இதுமாதிரியான போறாத காலத்துல, தன்னுடைய தலையில எழுதியிருக்கும் விதியைப் பற்றி எங்க அப்பா சொன்ன கதை இது.

முன்னொரு காலத்துல ஒரு மந்திரவாதி இருந்தான். அவனுக்கு மனிதர்களுடைய தலையெழுத்த பற்றி தெரிஞ்சிக்கனும்னு ரொம்ப நாளா ஆராய்சி பண்ணிக்கொண்டிருந்தான். இதற்காக அடிக்கடி சுடுகாட்டிற்கு சென்று அங்க இருக்கும் மண்டை ஓட்டின் சில பகுதிகளை எடுத்து ஆராய்ச்சி செய்து கொண்டேயிருப்பான்.

நிறைய நாட்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு, தலையில எழுதியிருப்பதை படிக்ககூடிய அளவிற்கு அவனுக்கு வெற்றிகிடைத்தது. அதை வைத்துக் கொண்டு, எல்லா மண்டை ஒட்டையின் தலை எழுத்தினை படிக்க ஆரம்பித்தான். ஒவ்வொருத்தனுடய கஷ்டங்களும், சோதனைகளும் அவர், அவர் தலையில் எழுதியிருந்தது. எல்லா மண்டை ஓட்டின் இறுதியிலும் “கஷ்டங்கள் முடிந்தது” என்று எழுதியிருந்தது. ஆனால் ஒரே ஒரு மண்டை ஓட்டுல மட்டும் “கஷ்டம் இன்னும் இருக்கிறது” என்று எழுதியிருந்துச்சு.

மந்திரவாதிக்கு ஒரே குழப்பம், “என்னடா இது, நாம ஆராய்ச்சி செய்த மண்டை ஓட்டுகளிலேயே, இந்த மண்டை ஓட்டுடைய மனிதனுக்குத்தான் அதிக, அதிகமான கஷ்டம் இருந்திருக்கிறது, ஆனாலும் செத்தபின்னாடியும், கஷ்டம் தொடரும்னு எழுதியிருக்கே? அது எப்படி சாத்தியம்?. செத்த பின்னாடியும் இவன் என்ன கஷ்டத்தை அனுபவிக்கப் போகிறான்?” என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டு, விடை கிடைக்காமல் போக, சரி வீட்டுக்கு எடுத்துக் கொண்டு சென்று அங்க வச்சி ஆராய்ச்சி பண்ணலாம் என்று வீட்டிற்கு எடுத்துச் சென்றான்.


வீட்டுல் இதற்காக ஒரு தனி அறையை உருவாக்கி, அதில் அந்த மண்டை ஓட்டைப் பற்றி ஆராய்ச்சி செய்யத்தொடங்கினான். தன்னுடைய மனைவிக்கு தெரியாமல், ஒரு நாளைக்கு மூன்று, நான்கு முறை சென்று ஏதாவது மாற்றம் நிகழ்கிறதா? என்று பார்த்துக் கொண்டே இருந்தான்.

இவனுடய நடவடிக்கைகளை பார்த்துவிட்டு, மந்திரவாதியின் மனைவி இவன் மேல் சந்தேகப்பட்டு, இவன் இல்லாத ஒரு நாளில், பக்கத்து வீட்டுக்காரியை அழைத்துக் கொண்டு அந்த அறைக்குள் போய் பார்க்கும் போது, இந்த ஒரு மண்டை ஓடு மட்டும் இருந்தது.

“என்னக்கா இது, இந்த மண்டை ஒட்டையையா இப்படி ரகசியமா பாதுகாத்துகிட்டு இருக்காரு? அப்படி யாருடையதா இருக்கும்?” என்று பக்கத்துவீட்டுக்காரியிடம் மந்திரவாதியின் மனைவி கேட்க.

“அடி போக்கத்தவளே, இது கூடவா தெரியல, இது உன் புருசனோட கள்ளக்காதலி மண்டஓடுடி, அதுனாலதாண்டி உன் புருசன் உனக்கு தெரியாம, அவ ஞாபகம் வரும் போதெல்லாம் பார்த்துட்டு, பார்த்துட்டு போறான், இது இருக்குற வரைக்கும் உன் வாழ்க்கை நல்லா இருக்காதுடி, பார்த்துக்கோ” என்று ஏத்திவிட.

மந்திரவாதியின் மனைவி, மண்டை ஓட்டை எடுத்து, உரலில் போட்டு, உலக்கையால் குத்து, குத்து என குத்துவதை அங்கு வந்த மந்திரவாதி காண, பதறிப்போய் மனைவியை தள்ளிவிட்டு, நொருங்கி கிடந்த மண்டை ஓட்டை ஒட்டவைத்து பார்த்தபோது, அதில் எழுதியிருந்தது “கஷ்டங்கள் முடிந்தது” என்று. அதுமாதிரித்தான் என் விதியும்.. நான் இன்னும் கஷ்டங்களை அனுபவிக்கனும்னு இருக்கு. அனுபவிச்சுத்தான் ஆகனும் என்று சொல்ல, கதையை கேட்டவன், என்னவோ அவன் தலையில் உலக்கையால் குத்துவாங்கியது போல ஃபீல் பண்ணிக்கொண்டு வெளியேறிவிட்டான்.

எங்கப்பா எப்போதும் தொழுதபின்பு பிராத்தனை செய்யும் போது, “இறைவா, எனக்கு சோதனைகளையும், கஷ்டங்களையும் கொடுத்துவிடாதே” என்று கேட்பதற்கு பதிலாக “இறைவா, சோதனைகளையும், கஷ்டங்களையும் எதிர்கொண்டு, அதிலிருந்து மீளுகின்ற மன உறுதியை தருவாயாக” என்று பிராத்தனை செய்துகொள் என்றே கூறுவார்.

ம்ம்ம்ம்ம்.......எவ்வளவோ பார்துட்டோம், இத பார்திடமாட்டமா என்ன????????

“இறைவா, சோதனைகளையும், கஷ்டங்களையும் எதிர்கொண்டு, அதிலிருந்து மீளுகின்ற மன உறுதியை தருவாயாக"

-------------------------------------------------------------------------------------யாஸிர்.