சனி, நவம்பர் 12, 2016

வாழ்த்துக்கள் மோடி.

இந்தியாவின் தற்போதய நிலவரப்படி 15% குறைவானவர்களுக்கே வங்கிகளின் மூலமாக சம்பளம் பட்டுவாடா செய்யப்படுகின்றது. மிச்சம் இருக்கும் 85% பேர்களின் வருமானம் வங்கி சார்ந்தது இல்லை. அவர்கள் ஒரு தினக்கூலியாகவோ, விவசாயியாகவோ, குறுந் தொழில் செய்பவராகவோ, வண்டியில் காய்கறி விற்பவராகவோ, உயிரைப் பணயம் வைத்து சாக்கடை சுத்தம் செய்பவனாகவோ இருக்கலாம். நம் நாடு வலிமை பெற இரண்டு நாட்கள் கஷ்டங்களைப் பொ’றுத்துக்கொள்ள அறிவுரை  வழங்கும் மெத்தப்படித்த மேதாவிகள் வேறு யாரும் அல்ல, மேலே சொன்ன 15%ல் ஒருவனாக இருக்கக்கூடும். சாப்பிட்டுவிட்டு காசு அட்டையையோ அல்லது கடன் அட்டயையோ தேய்ப்பவனுக்கு, 500 ரூபாய் கொடுத்து சாப்பிட்டு மீதி சில்லரை வாங்கிச் செல்பவனின் கஷ்டம் தெரியாது. கம்பெனி கால் டாக்ஸிகளில் நோகாமல் பயணிப்பவனுக்கு, ஷேர் ஆட்டோக்காரனிடம் சில்லரைக் காசுக்களை தேடிக்கொடுப்பவனின் கஷ்டம் கண்டிப்பாகத் தெரியாது. மாத தவணையில் வீட்டிற்கே பால் பாக்கெட் வரும் அப்பார்ட்மெண்ட் அப்பாட்டக்கர்களுக்கு, லைனில் நின்று காசுக்கு பால் வாங்குபவனின் கஷ்டத்தை தெரிந்துகொள்ள முடியாது. 

500, 1000 ரூபாய் தடை செய்த இந்த திட்டம் நல்லதா? கெட்டதா? என்பது ‘’கபாலி’’ நல்ல படமா? மொக்கப் படமா? என்கிற குழப்பமான மன நிலையிலேயேதான் நான் இன்னும் இருக்கின்றேன். சிலர் சொல்லுவதைப் போல, ‘’இப்போதுதான் டாஸ் போட்டிருக்கிறார்கள், இனி பேட்டிங்க் பண்ணனும், பவுலிங்க் போடனும், பீல்டிங்கெல்லாம் செய்யனும் அப்புறம்தான் வெற்றியா, தோல்வியா என்பது தெரியும்’’ என்று கூறி நாலு மாசம் வெயிட் பண்ணச் சொல்வதால், நானும் நாலுமாதம் இல்லை, மிச்சம் இருக்கிற இரண்டரை வருடம் வரை வெயிட் செய்யலாம் என முடிவு செய்துவிட்டேன்.

இந்த திட்டம் பற்றிய என்னுடய நிலைப்பாடுதான் மேலே சொன்னவை. ஆனால், திட்டத்தை நடைமுறைப்படுத்திய விதம் அபத்தத்தின் உச்சம். ஒரு நாட்டைப் பற்றி அறியாத, நாட்டு மக்களின் நிலை பற்றிய அறிவு இல்லாத ஒருவன் செய்த செயலாகவே நினைக்கின்றேன். இந்தியா இன்னும் 50% மேலாக படிப்பறிவு இல்லாத நாடு. நாம் இன்னும் வளரும் நாடுதான். திட்டத்தை நடைமுறைப்படுத்திய விதம் ஏதோ வளர்ந்த நாடுகளில் செய்வதுபோல செய்வது சிறுபிள்ளைத்தனம். ‘’வாழும் லீ குவான் மோடி’’யாம் ......க்காளி நமக்கு இந்தியா பத்தியும் தெரியல, சிக்கப்பூர் பத்தியும் தெரியலடா.

இந்த திட்டத்தில் மூலமாக எப்படி பணக்காரர்கள் பாதிக்கப்படப்போவது இல்லையோ அதே போலத்தான் பரம ஏழையும் (500 ரூபாய்க்குகூட வழியில்லாதவன்). பாதிப்பு என்பது நடுத்தர வர்க்கத்திற்கு மட்டுமே. விரிவாக சொல்ல வேண்டும் என்றால் சின்னதாக மலிகைக்கடை வைத்திருப்பவன், டீக்கடை வைத்திருப்பவன், காய்கறி வியாபாரம் செய்பவன், தினசரி வியாபாரி போன்றவர்கள்தான். அவர்களுக்கான முதலீடு, சொத்து, கையிருப்பு என எல்லாமே ‘’ஐந்து லட்சம்’’தான். அந்த பணத்தைத்தான் அவர்கள் திரும்ப திரும்ப முதலீடு செய்து, கிடைக்கும் லாபத்தைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டியாக வேண்டும். அவர்களால் அந்த பணத்தை பேங்கில் போட முடியாது, கையில்தான் வைத்திருக்க வேண்டும்.

எங்க ஏரியா மீன்கார பெண்மனி இரண்டு லட்சத்தை வைத்துக்கொண்டு அதிகாலையில் மீன்வாங்குவார். மாலையில் வியாபரம் ஆனபின்பு கிடைக்கும் ஆயிரம், ஐநூறு லாபத்தை எடுத்துவிட்டு, மறுநாள் அதிகாலை அதே இரண்டு லட்சத்தைக்கொண்டு மீன்வாங்கச் செல்வார். இப்படி தின வியாபரம் செய்பவரிடம் சென்று, ‘’அந்த இரண்டு லட்சத்தையும் பேங்கில் போடுங்கள், பின்பு புது நோட்டாக திரும்ப எடுத்துக்கொள்ளுங்கள்’’ என்று சொல்வது கேலிக்கூத்து. அதன் நடைமுறைச் சிக்கலைப் பார்க்கவேண்டும். இரண்டு லட்சத்தை பேங்கில் போடவே நான்கு நாட்கள் ஆகும் (ஒரு நாளைக்கு 49,000ம்தான் போடமுடியும்). அதை திரும்ப எடுக்க எத்தனை வாரம் தேவை? (வாரத்திற்கு 20,000 மேல் எடுக்கமுடியாது). அந்த காலகட்டங்களில் அவர்களால் எப்படி தொழில் செய்யமுடியும்?

அதே நிலைமைதான் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவைனிலிருந்து டீக்கடை வைத்திருப்பவன் வரை. இவர்களைப் போன்றவர்களை அதிகம் கொண்டிருப்பதுதான் நம் நாடு. அது அல்லாமல் பேஸ்புக்கில் ‘’நாடு வலிமை பெற மூன்று நாள் சோறு திங்கலைன்னா ஒன்னும் செத்துரமாட்டீங்க’’ என போஸ்ட் போடுபவர்கள் அல்ல. ‘’மடியில் கனமில்லை என்றால் நீங்கள் ஏன் பயப்படவேண்டும்’’ என வாய் கிழிய பேசுறவன் எவனும் பேங்கில் பணம் மாற்ற லைனில் இல்லை. அவர்களால், குறைந்தது அவர்களைச் சுற்றி இருக்கும் படிப்பறிவில்லாதவர்களுக்கோ, முதியவர்களுக்கோ பணத்தை மாற்றிக்கொடுக்க உதவி செய்வார்களா?. லைனில் நிற்பனை பார்த்தவாரே ஆபிஸ் சென்று பேஸ்புக்கில் ‘’எவரித்திங்க் கோயிங்க் குட், பாரத் மாத்தாக்கீ ஜே’’ என வடை சுடுவார்கள்.

இன்னும் சொல்கிறேன் இது நல்லதிட்டமாகக்கூட இருக்கலாம். அதை நடைமுறைப்படுத்தியவிதம் முட்டாள் தனமானது. ஒரு ஜனநாயக நாடு என்பது, அரசை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்கும் நிலையில் இருப்பது. நல்ல ஜனநாயக நாடு என்பது, மக்களின் கேள்விக்கு அரசு பதிலளிக்கும் நிலையில் இருக்கவேண்டும். இப்படி பல் இழித்துக்கொண்டு இருக்கக்கூடாது. ‘’மோடி கொண்டுவந்த திட்டம் என்பதற்காகவே இதை எதிர்க்கிறார்கள்’’ என்று கொதிப்பவர்களிடம், மோடி முன்பு கொண்டுவந்த மேக் இன் இண்டியா, டிஜிட்டல் இண்டியா, சுச்சா பாரத்....................... ரிசல்ட்டைப் பற்றி கேட்டால், ஆசான வாயையும் சேர்த்து மூடிக்கொள்கிறார்கள்.

மோடி அல்லாது, ராகுல்காந்தி பிரதமராக இருந்து இந்த திட்டத்தை இப்படி நடைமுறைப் படுத்தியிருந்தால் அது வேறு. ராயல் குடும்பத்தில் பிறந்த ஒருவரால் நடுத்தர இந்திய மக்களின் பிரட்சனையோ / வாழ்க்கையோ தெரிந்திருக்காது என்று எண்ணிக்கொள்ளலாம். ஆனால் மோடியோ, டீக்கடை வைத்து வாழ்க்கையில் முன்னேறியவர். அவருக்குகூடவா ஒரு டீக்கடைக்காரனின் தினசரி வாழ்க்கை, வருமானம் பற்றி தெரியாமல் போனது?. மோடி டீக்கடை வைத்திருந்தபோது முதலீடு, லாபம் அனைத்தையும் பேங்க் மூலமாகத்தான் செய்துகொண்டிருந்தாரா?. சில்லரைகளை செக் போட்டுக்கொடுத்தாரா?. அவர் டீக்கடை வைத்திருந்ததற்கும், இப்போது டீக்கடை வைத்திருப்பவனுக்கும் என்ன பொருளாதார முன்னேற்றம் வந்துவிட்டது?.

‘’பிச்சைக்காரன்’’ படத்தில் வரும் ஒரு காட்சியை வைத்துக்கொண்டு மோடியின் இந்த முடிவை ‘’ஆஹா’’ ‘’ஓஹோ’’ என்று புகழ்பவர்கள் உடனடியாக பஜன்லால் சேட்டிடம் அடகுவைத்த மூளையை மீட்டுக்கொண்டு வருவது நலம். அந்த  காட்சியில் வரும் பிச்சைக்காரன் 500, 1000 ரூபாயை தடைபண்ணத்தான் சொல்லியிருப்பான், மோடிபோல பழய 500, 1000 ரூபாய்களுக்கு புது நோட்டுக்களைக் கொடுக்கச் சொல்லவில்லை. ‘’500, 1000 ரூ நோட்டுக்களை தடைசெய்வதால், பணக்காரர்களால் கள்ளப்பணத்தை இனி பெரிய பண்டிலாக கட்டிக்கொண்டு போக முடியாது’’ என்று சொல்பவர்களிடம், எதற்காக 2000 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்படுகிறது என்று கேட்டால், ‘’பாக்கிஸ்தானுக்கு போ’’ என்பது பொருத்தமான பதிலா?.

என்னைப் பொருத்தவரை புழக்கத்திலுள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளைத் தடைசெய்ததின் மூலம் நடுத்தர வர்க்க மக்களுக்கும் வங்கிகளுக்குமான உறவு அதிகரிக்கும். தேவைக்கு அதிகமான இருப்பை கையில் வைத்திருப்பதை விட வங்கிகளில் போட்டுவைக்கும் மனப்பாங்கு மக்களிடம் அதிகரிக்கும். கள்ளப் பணம் என்றாலும் கையில் வைப்பது பற்றிய பயம் இருக்கும். நடுத்தர மக்களின் பணப் புழக்கம் கூடும். இதற்காக மட்டும் இந்த திட்டத்தை நம்மால் ஆதரிக்க முடியும். அதற்காக மோடிக்கு வாழ்த்துக்கள். அதே நேரத்தில் ‘’எங்கே பேங்கில் போட்டுவைத்திருக்கும் பணத்தை மல்லையாவிற்கு கடன் கொடுத்துவிடுவார்களோ?’’ என்ற மக்களின் பயத்தை அரசு நீக்கவேண்டும்.

மற்றப்படி, பஜனை கோஷ்டிகள் சொல்வதுபோல கருப்புப் பணத்தை வெளியே கொண்டுவருவது, கள்ள நோட்டை தடுப்பது என்பது எல்லாம், கல்யாண வீட்டில் மாப்பிள்ளை சீப்பை மறைத்துவைத்துவிட்டு கல்யாணத்தை நிறுத்திவிடலாம் என்பது போன்ற அபத்தம். இன்னும் நாம் சினிமாக்களில் காட்டுவது போல கள்ள ணங்கள் கட்டுக்கட்டாக பூஜை அறைக்கு அடியிலும், பெட்டுக்கு அடியிலும் மறைத்துவைக்கப்பட்டிருக்கும், கண்டெய்னர் பணமும், ரயிலில் களவாடப்பட்ட பணமும் இன்றுவரை கத்த கத்தையாக நோட்டாகவே இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருப்போமேயானால், நாம் அரை நூற்றாண்டு பின்தங்கியே இருக்கிறோம்.

இந்தியாவில் இருக்கும் மொத்த ரூபாய் நோட்டுக்களில் 80% 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள்தான். அதை தடைசெய்துவிட்டு 20% மட்டுமே இருக்கும் 100,50,10 நோட்டுக்களால் எப்படி நிலையை சமாளிக்கமுடியும். இதை எல்லாம் யோசித்துதான் செய்தார்களா? என்று குழப்பமாகவே இருக்கிறது. 500ம் 1000மும் பணக்காரர்களிடம்தான் இருக்கும் என்றால் அப்போ இந்தியாவில் 80% பணக்காரர்களா என்ன?.

10 லட்ச ரூபாய் வீட்டுமனைக்கு 6 லட்சம் கைட்லைன் வேல்யூ என்றால், மீதம் 4 லட்சம் கருப்பு பணம்தான். அந்தமாதிரியான கருப்பு பணம், மோடியை எதிர்ப்பவர்களிடம் மட்டுமல்ல, ஜி.பி.எஸ் வசதிகொண்ட 2000 ரூபாய் நோட்டுக்கு சப்போர்ட் செய்பவர்களிடமும் உண்டு. சொந்த மனை இருக்கும் அனைவரிடமும் இந்த கருப்பு பணம் இருக்கும். இந்த கருப்பு பணத்திற்கு மக்களா காரணம்? 10 லட்சம் மதிப்புள்ள மனையை 6 லட்சம் என்று சொல்வது மக்களா? அரசா?. கட்சிகளுக்கு வரும் பணத்திற்கு வரி கட்டச் சொல்லும் போது கட்சி சார்பு இல்லாமல் அதை எதிர்க்கும் அரசியல்வாதிகள், மக்களுக்கு வரியைப் பற்றியும், கள்ளப்பணம் பற்றியும் பாடம் எடுப்பது இந்த நாட்டின் சாபம்.    

என்னிடம் 25 லட்சம் கள்ளப்பணம் இருந்தால், என் உறவினர் 10 பேரின் அக்கவுண்ட்டில் போட்டுவிட்டு திரும்ப எடுத்துவிடமுடியும். என்னைப் போல சாதாரண ஒருவனாலேயே 25 லட்சத்தை மாற்றிவிட முடியும் என்றால், பத்து கோடி பணமாக பதுக்கியவன் ஒன்றும் மங்கூனியாக இருக்கமாட்டான். கள்ளப்பணத்தில் 2% அரசுக்கு வந்தாலே பெருயவிஷயம் ஆனால் அதற்காக மக்கள் படும் அவஸ்தை அதைவிட அதிகம். கள்ளப்பணத்தை மீட்க இவ்வளவு ஆர்வம் இருக்கும் மத்திய அரசு, அதை வைத்திருக்கும் 100 பேர்களின் பட்டியலை வெளியிட ஏன் மறுக்கிறதுய. பனாமா விவகாரத்தில் வாய் திறக்க மறுப்பது ஏன்?. 

எமர்ஜென்ஸி ஹாஸ்பிடல் செலவிற்காக எங்கள் வீட்டில் எப்போதும் ஒரு லட்சம் தனியாக இருக்கும். இப்போது அதை இரண்டு தவணையாக பேங்கில் போட்டாகிவிட்டது. அது திரும்ப வரும் வரை என் அம்மாவிற்கு கால்வலியோ, கற்பமாக இருக்கும் என்மனைவிக்கு வேறு எதுவுமோ நடக்காமல் இருக்க ஆண்டவனிடம் வேண்டும் அதேவேளையில் மேக் இன் இண்டியா திட்டத்தில் உருவான 251 ரூபாய் ஸ்மார்ட் போன் படுதோல்வியைப் போல அல்லாமல், இந்த திட்டமாவது வெற்றி பெற துவா செய்கிறேன்.

ஜனவரி 1ல் மோடி கண்டிப்பாக மக்களிடம் வானொலியில் ‘’கருப்பு பணம் ஒரு லட்சம் கோடி அரசிற்கு கிடைத்துவிட்டது’’ என்று பீத்துவார். அதற்கு ‘’ஆதரம் தாருங்கள்’’ என யாராவது பதில் எதிர்பார்பீர்களேயானால் அவர் பாரிசுக்கு கிளம்பிவிடுவார். மற்றப்படி என் நண்பர்கள் சொல்லுவது போலவும், உலகப் பொருளாதார மேதை எஸ்.வி.சேகர் சொல்வது போலவும் ஒரு அமெரிக்க டாலர் மூன்று ரூபாயாக வரும் நாளை எதிர் நோக்கியே காத்திருக்கிறேன். 

இந்தமுறை எதிர்ப்பு அதிகமாக இருக்கக் காரணம், ‘’நாய்க்கு பேர் வெச்சியே, சோறு வச்சியாடா?’’ என்று கடந்தகால திட்டங்கள் எல்லாம் பெயர் அளவிலேயே பப்படமானதுதான். ‘’ஊழல்’’, ‘’கருப்பு பணம்’’ ஆகியவற்றில் பி.ஜே.பியும் காங்கிரஸும் ஒன்றுதான். என்ன, காங்கிரஸை எதிர்த்து கேள்விகேட்டபோது என்னை ‘’இந்தியன்’’ என்றவர்கள் இப்போது ‘’பாக்கிஸ்தானி’’ என்கிறார்கள்.  பாக்கிஸ்தானுக்குப் போய் ஆலு புரோட்டா திண்பதற்கு பதிலாக பேசாமல் நானும் பக்தாளாக மாறிலாம்னு முடிவுபண்ணிண்டேன். எங்க எல்லாரும் கோரஸா சொல்லுங்கோ ‘’ஹர ஹர மகா தேவிக்கீய்............’’

------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.  

18 கருத்துகள்:

 1. எந்த ஒரு பிரச்சனையிலும் முதலில் பாதிக்கப்படுவது நடுத்தர மக்கள்தான். கருப்பு பணம் வரும் வழிகளை தடுக்காமல் அதை அழிப்பது அவ்வளவு சுலபமில்லை. திட்டத்தை நடைமுறை படுத்திய விதம் சரியில்லை, தெளிவான நடைமுறைகளும் கடைப்பிடிக்க வில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு கிளவியின் கண்ணீர் என்னை எழுதவைத்தது. இன்னும் அந்த கிளவியின் நியாபகமாகவே இருக்கிறது. பாவம்.

   நீக்கு
 2. //// இந்தமுறை எதிர்ப்பு அதிகமாக இருக்கக் காரணம், ‘’நாய்க்கு பேர் வெச்சியே, சோறு வச்சியாடா?’’ என்று கடந்தகால திட்டங்கள் எல்லாம் பெயர் அளவிலேயே பப்படமானதுதான். ////

  Supppeeeeeeeeeer.

  M. Syed
  Dubai

  பதிலளிநீக்கு
 3. well said,but unfortunately half baked middle class minds saying its a great movement of Modi to stop the block money.Its once againn proving that we have a knowledge only on shallow not in depth in anything including the fellow human lives.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ''ஒரு வலிமையான இந்தியா உருவாகும்'' என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் பலரில் அவர்களும் ஒருவர்தான். ''நம்பிக்கை அதானே எல்லாம்'' என்பதில் நம்பிக்கை உடையவர்கள்.

   நீக்கு
 4. Please visit ...

  http://vishcornelius.blogspot.com/2016/11/500-1000.html

  and give me your approval. Apologies if I have taken too much liberty.

  Visu

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணே, தேவையில்லாம லிங்கா படத்துக்கெல்லாம் போஸ்டர் ஒட்டுறீங்க. நாளப்பின்ன ஏதாவது ஏடாகூடம் ஆகிடுச்சுன்னா தம்பி மனசு தாங்காது பாத்துக்கங்க.

   நீக்கு
 5. அது சரி .. பொருளாதார மேதை ௧ டாலர் மூணு ருவாவா வரும்ன்னா சொன்னார்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க முழு வீடியோ பாக்கலைன்னு நினைக்கிறேன். எதோ ஷகீலா படத்துல வர்ற பிட்டமட்டும் பார்த்தமாதிரி அங்க அங்க பார்த்திருக்குறீங்க.

   நீக்கு
 6. Hi, Visuawesome enna adivayiru kalenguda, when are you returning to India.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த கவலையே வேண்டாம் பெயரில்லா... ஒரு ரூபா 2௦௦௦ டாலர் கொடுத்தாலும் நான் இடம் மாறுவதா இல்லை.

   நீக்கு
  2. ஆமாமா. கூடிய சீக்கிரம் மோடி $1 ரவுண்டாக 100 ரூபாய் என்ற லெவலுக்கு கொண்டு வந்து விடுவார். பெட்ரோல் விலையும் ஏறி விட்டால் அப்போது புரியும் மோடியும் ஜெட்லீயும் வேலைக்கு ஆகாதவர்கள் என்று..

   நீக்கு
  3. அண்ணே, நீங்க இந்தியா வந்தீங்கன்னா, இந்தியா ஒரு வல்லரசு அளவு இல்லைன்னாலும் ஒரு நரசிம்மா லெவலுக்காவது முன்னேற்றம் அடையும்.

   நீக்கு
 7. //‘’மோடி கொண்டுவந்த திட்டம் என்பதற்காகவே இதை எதிர்க்கிறார்கள்’’ என்று கொதிப்பவர்களிடம்,

  மோடி கொண்டுவந்த திட்டம் என்பதற்காகவே இதை ஆதரிப்பவர்கள் என்ன செய்வார்கள் பாவம்.

  எந்த பிரச்சனையையும் அறிவுபூர்வமாக மக்கள் அணுகாதவரை முன்னேற்றம் சிரமம் தான்.

  Excellent writing

  பதிலளிநீக்கு