தலையில்
முடியில்லாதவனோட வலி, இன்னொரு முடியில்லாதவனுக்குத்தான் தெரியும்.
என் வயது ஆண்கள்
எல்லாம் இணையதளத்தில் எதை எதையோ தேடும் போது, நான் மட்டும் எனக்கு பொருத்தமான
கெட்டப்பை தேடியே பல ஜி.பி டேட்டாக்களை காலி செய்திருக்கிறேன். இது இன்று அல்ல, இணையதளம் எனக்கு அறிமுகம் ஆன காலம் தொட்டு நடக்கும்
நொஸ்டால்ஜிக் (Nostalgic) கதை. படிக்கும் காலங்களில், நிறம், உயரம், எடை போன்ற அம்சங்களை கொடுத்தால்
நமக்குத் தேவையான தோற்றத்தை திரையில் காட்டும் இணையதளங்களை என் இமெயிலைவிட அதிகமாக
ஓப்பன் செய்து பார்த்திருக்கின்றேன்.
ஊரே ஒன்று கூடி
கம்யூட்டர் லேப்பில் வண்ணத்திரை நடிகைகளை வடியவிட்டு (வாயில்) பார்க்கும் அதே
நேரத்தில்தான் கார்னர் ஓரத்தில் இருக்கும் கம்யூட்டரிடம் என் சோகத்தைச் சொல்லி,
அழகு தோற்றம் பெற ஆலோசனைகள் கேட்பேன். அதை ஆலோசனை என்று கூற முடியாது, காளிதாஸ் படத்தில் காளியாயிடம் ‘’அறிவும்,
புத்தியும் கொடு, அது என்ன உங்கப்பன் வீட்டு சொத்தா?’’ என கேட்கும் சிவாஜி கணேசன்
போல வேண்டி, ‘’யார் தருவார் இந்த அரியாசணம்’’ என்ற சக்ஸஸ் ரிசல்ட்டிற்காக கிடந்த
தவம் என்றுதான் சொல்ல வேண்டும்.
எல்லா
வெப்சைட்களும் சொல்லிவைத்தது போல, ‘’வழுக்கைத் தலைக்காரர்கள் தாடி வைத்தால் அழகாக
இருக்கும்’’ என்றே சொல்லியது. முன்-சொட்டை என்றால், முழுதாடி. பின்-சொட்டை
என்றால், பிரஞ்ச் பியர்ட் என்ற பஞ்சதந்திர தாடி என வகை வகையான தாடிகளை கம்யூட்டரில்
கண்டு காண்டாகிக் கொண்டிருந்த காலம் அது. அந்த காலத்தில், ‘மீசை’க்காக முக்கிக்கொண்டிருந்த நான், தாடிக்கு எங்கு
போவேன்? யாரைக் கேட்பேன்?. இதுபோன்ற கொடுமையான நரக வேதனை, எனக்கு பெண் பார்த்து கட்டிவைத்தவர்களுக்குக்கூட
வரக்கூடாது.
‘’ஒல்லியான உடல்,
53 கிலோ எடை, வழுக்கை என்றோ இல்லை என்றோ உறுதிப் படுத்த இயலாத தலையுடைய
சிம்மராசிக்கார்களே........’’ என்று ஆருடம் சொன்ன வெப்சைட்டை நம்பி மீசை எடுக்கத்
தீர்மானித்தேன். ஆம், முதல் மீசை ஷேவிங். காலேஜ் முதல் வருடம், மீசையோடு
இருப்பவர்களை தேடிப் பிடித்து ஷேவிங்க் செய்வதையே பார் டைம் ஜாப்பாக சில மாணவர்கள்
செய்துகொண்டிருந்தார்கள். கடா மீசை வைத்திருந்தவனை எல்லாம், மீசை இல்லாமல்
பார்ப்பது என்பது ரெக்கை படத்தில் லெட்சுமி மேனனை குளோசப்பில் பார்ப்பது போன்ற
ஹாரர்ரான விஷயம்.
‘’மீசை எடுத்த
பின்பு சும்மா ஹிந்தி ஹீரோ மாதிரி இருந்தேன்’’. என்று சொன்னால் நம்பவா போகுறீர்கள்?.
இருந்தேன். ராசியான நம்பர் ஒன்பது என்று அங்கயும் இல்லாம, இங்கயும் இல்லாம. மீசை
எடுத்த பின்புதான் ஞாபகம் வந்தது நாலு நாள் லீவிற்கு ஊருக்குச் செல்ல வேண்டும்
என்பது. மீசை இல்லாமல் எப்படி ஊருக்கு போவது?. ‘’ஊரே, செத்த விட்டிற்கு துஷ்டி
கேட்க வருவதுபோல கிழவிகள் எல்லாம் சீலையால் மூக்கை பொத்திக்கொண்டு வருமே’’ என மனதில்
எழுந்த பல கேள்விகளுக்கு பதில் தெரியாமலேயே பஸ் ஏறினேன்.
‘’என்றா, நம்ம வீர்
வம்ச மீச எங்கடா?’’ என அப்பா கேட்கும் முன்பே, ‘’காலேஜ்ல சீனியர்ஸ் மீசை
வைக்கக்கூடாதுன்னு சொன்னதால எடுத்திட்டேன்பா’’ என்று சமாளித்தேன். மீசை இல்லாமல்
வெளியே போய் அசிங்கப்பட வெட்கப்பட்டு, நான்கு நாளும் வீட்டிலேயே இருந்தேன். அதைப்
பார்த்த அம்மாவும், அக்காவும் ‘’புள்ள நம்மள நெனச்சு ஏங்கிப் போய் கெடந்திருக்கு,
அதான் வீட்டையே சுத்தி சுத்தி வருது’’ என்ற பெருமை பீத்தல் வேறு. லீவு முடிந்து
காலேஜ் செல்ல தயாரான போது அப்பாவும் என்னோடு வர ரெடியானார். விசாரித்த போது,
‘’எங்க காலேஜ்ல ராக்கிங் எல்லாம் கிடையாதுன்னு உங்க பிரின்ஸ்பால் பெரிய்ய
இவனாட்டம் சொன்னான், இது மட்டும் என்னவாம்?’’ என மீசையைக் காட்டி நியாயம் கேட்க
நின்றார்.
''நியாயம்டா'', ''நேர்மைடா'', ''நாக்கப் புடுங்குறமாதிரி கேட்பேண்டா''.... என நாட்டமை விஜயகுமார் மாதிரி
விரைப்பாக நின்றவரைப் பார்த்து, அடுத்த வாரத்திற்கும் சேர்த்து ‘ஆய்’ வருவது போல
வயிறு கலக்கியது. கபாலம் கலங்கியது. ‘’உங்க பையன் பெரிய ’இஞ்சினியர்’ ஆகி
பக்கத்து கிராமத்துக்கு இலவசமா வைத்தியம் பார்க்கனும்னா, இத நீங்க பொருத்துக்
கொண்டுதான் ஆகவேண்டும்’’ என அப்பாவின் அறிவு விளக்கில் எண்ணெய் ஊற்றி, ஞான ஜோதியை எரியவிட்டு
பஸ் ஏறுவதற்குள், தலையில் இருந்த கொஞ்ச முடியும் விழுந்துவிட்டது.
‘’பின் வழுக்கை
விழுந்தவர்களுக்கு தாடி இருந்தால் அழகாக இருக்கும்’’ என்ற சொட்டகிரஸ் விதிப்படி,
உரம் போட்டு தாடி வளர்ந்து நிமிர்ந்தால், பின் வழுக்கை முன்னேறி முன் வழுக்கையாக
மாறி இருக்கும். ‘’முன் வழுக்கையை மறைப்பது எப்படி?’’ என்ற அகழ்வாராய்ட்சியில்
இறங்கினேன். ‘’சைடில் நன்றாக முடியை வளர்த்து அதை முன்பக்கமாக கொண்டு வந்து நிற்க
வைக்க வேண்டும்’’ என்பதை கண்டறிந்து, கண்ணாடியில் சைடைப் பார்த்தால், சைடிஷ்ற்கு தொட்டுத் திண்ணும் அளவிற்குத்தான் இருந்தது. மிஸன் கேன்சல்.
ஆராய்ச்சி ஒரு
புறம் நடந்த்கொண்டிருந்தாலும், காலம் என்னை கல்ஃபிற்கு (Gulf) கொண்டுவந்து சேர்த்திருந்தது. வளைகுடாவில் இந்த தலையுடன் வெளியே எங்காவது சென்றால், தெரிந்தவன் எல்லாம்
‘’கல்ஃப் கேட்’’டிற்கு போகச் சொன்னார்கள். நான் ‘கல்ப் கேட்’ என்றால் ஏதோ ‘இண்டியன்
கேட்’ போல ஒரு இடம் அங்கு எவனாவது வழுக்கைக்கு லேஹியம் கொடுப்பான், வாங்கி நக்கிக்
கொண்டு வரலாம் என்று நினைத்தேன். பின்புதான் தெரிந்தது அது ‘’விக்’’ வைக்கும் இடமென்று.
‘’தேவையானி புருசன் ராஜ்குமார்’’ என்று கேள்விப்பட்டதற்கு பின்பு, அன்றைக்குத்தான்
இரண்டாவதாக அந்த வார்த்தையைச் சொன்னேன் ‘’ஆண்டவா இது என்ன சோதனை’’.
வழுக்கையாக இருக்கும் ஹாலிவுட் நடிகர்களைப் பார்த்து அவர்களைப் போல் நாமும்
மாறிவிடலாம் என முடிவுசெய்து புரிந்த, புரியாத ஆங்கிலப் படங்களை எல்லாம்
பார்த்தேன். அதில் அகப்பட்டவர்தான் நடிகர் ‘’வின் டீசல்’’. அவரைப் போல் நானும்
மொட்டையடித்து, ஷேவிங் எல்லாம் செய்து கண்ணாடி முன்னாடி நின்றால், வின் டீசலை
டீசல் ஊற்றி கொழுத்திப்போட்டது போன்று இருந்தது. வி.டீசலுடய தலையையும், முகத்தைப்
பார்த்த நான் அந்த கட்டுடலில் வீங்கி இருக்கும் சதைப் பிண்டங்களை கண்டுகொள்ளாமல்
விட்டுவிட்டதன் விளைவு அது. நமக்கும் அது போன்ற வீக்கங்கள் வேண்டும் என்றால் பத்து
பேர் கும்மினால் ஜிம்மிற்கு செல்லாமலேயே வரும். அதோடு வின் டீசல் கெட்டப் விண்ணுலக
பதவி பெற்றது.
‘’ஜாசன் ஸ்டாத்தம்’’ மெக்கானிக் படத்தில் வரும் ஹீரோ. இவரும் நம்ம வ.வ.சங்க
உறுப்பினர்தான். வின் டீசல் அளவிற்கு பழனி படிக்கட்டுகள் இருக்காது, ஆனாலும்
கொஞ்சம் கட்டுமஸ்தான ஆளாகவே இருப்பார். இவர்தான் நமக்கு சரி என்று முடிவு
செய்தேன். இவர் முதலாமவரைப் போல வழு வழு மொழு மொழு என்று இல்லை. 2 மி.மீட்டர்
அளவிற்கு தலையிலும், கன்னத்திலும் முடிவைத்திருப்பார். ஆள் பார்க்க பேரழகாக
இல்லாவிட்டாலும் அளவாக அம்சமாக இருப்பார். இவர் கெட்டப்பை பின்பற்ற கொஞ்சம் உடம்பு
இளைக்கவேண்டியது இருந்தது.
பொதுவாக வழுக்கை உள்ளவர்கள் ரொம்ப ஒல்லியாகவோ, ரொம்ப குண்டாகவோ இருந்தால் பார்ப்பதற்கு
அழகாக இருக்காது. எனக்கு அப்போது 78 கிலோ. ஜாசன் ஸ்டாத்தம் போன்று ஆக வேண்டும்
என்றால் என் உயரத்திற்கு எடையை சுமார் 60 கிலோவாக குறைக்க வேண்டும். அப்போது
பேலியோ மருத்துவ நூல்கள் எட்டிப்பார்க்காத காலம். 18 கிலோ குறைப்பது என்பது சோதனை,
அதை சாதனையாக்கி காட்ட, ஒரு நாளைக்கு 5 கிலோ மீட்டர் தூரம் ஓட வேண்டும், இரண்டு
மாதம் டார்கெட். என்று பக்காவாக பிளான் செய்து, ஜாக்கிங்க் ஷீ, ஜெர்ஸி எல்லாம் போட்டுக்கொண்டு
ஓடினேன், ஓடினேன் அபுதாபியின் எல்லைக்கே ஓடினேன்.
முதல் வாரம் எல்லாமே ஷேமமாக நடந்தது, ஆனால் உடல் எடை குறையவில்லை. அடுத்த
வாரங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. எடை இல்லை, ஓடும் தூரம். ஆம், 5
கி.மீட்டர் 4 ஆகி, 3 ஆகி இறுதியில் ஓட்டப் பயிற்சிற்கு இறுதி மரியாதை
செலுத்தப்பட்டது. உணவு கட்டுப்பாட்டின் மூலமாக எடையை குறைக்க, சோற்றை விட்டு
பர்கர் சாப்பிட்டேன். பன் ஐட்டங்கள் சாப்பிட்டதால் வயிறு சுருங்கியது ஆனால்
‘’பம்’’ பெருத்துவிட்டது. பாக்கிஸ்தானியர்கள் இருக்கும் கேம்பில் பெருத்த
‘பம்’முடன் இருந்தால், ‘’பம்’’ பப்படமாகிப் போகும். அதற்குப் பயந்தே மறுபடியும் பல
முயற்சிகள் செய்து 65 கிலோவாக இழைத்தேன். ‘’ஜாசன் மாதிரி ஆகிவிட்டாயா?’’ என்று
கேட்பவர்கள் மெயில் ஐ.டி அனுப்பவும், ஆல்பத்தை அனுப்புகிறேன்.
என்னதான் நாம் சில ஹேர் ஸ்டைல்களை கற்பனை செய்து வைத்திருந்தாலும் முடி
வெட்டுபவனிடம் ‘’கிர்தாவை மேலே தூக்கு, மீசையை கீழா இறக்கு’’ என்றால் கத்தியை
கழுத்தில் இறக்கிவிடுவானோ? என்ற மரண பீதி படுத்தி எடுக்கும். புதிதாக ஏதேனும்
ஸ்டைலில் முடிவெட்ட வேண்டும் என்றால், ஊருக்குப் போகும் போது மட்டுமே முயற்சி
செய்வேன். அங்கு ஒரு பார்பர் இருக்கிறார், வீடு வீடாக வந்து சிகை சேவை செய்வார்.
நம்முடைய கற்பனையை கத்திரிக்கோலில் உதவியால் கச்சிதமாக செய்துகாட்டுவார்.
கட்டணமும் பெரியதாக இருக்காது. ஒரு செண்ட் பாட்டில் மட்டும் அதிகமாக
கொடுக்கவேண்டும்.
முதல் முதலாக அவரிடம் வெட்டும் போது, பாரதிராஜா படம் போலவே இருந்தது. வீட்டின்
முற்றத்தில் தரையில் உட்கார்ந்தவுடன், கையில் கண்ணாடியை கொடுத்து பார்த்துக்கொள்ளச்
சொன்னார். கரெக்சன் சொல்லும் அளவிற்க்கு எந்த குறையும் இல்லை. முடி வெட்டியபின்பு
கையை தூக்கச் சொன்னார். நான் முருகன் அருள் வழக்குவது போல, மணிக்கட்டை மடித்து
கையை உயர்த்தினேன். தூப்பாக்கியை தூக்கிக்காட்டும் போது கையை தூக்குவது போல
தூக்கச்சொன்னார். “எதுக்கு?” என்று யோசிப்பதற்குள், கத்தி அக்குளிள் பாய்ந்துவிட்டது.
‘’யோவ், உன்ன யார்யா அங்க எல்லாம் முடிய எடுக்கச் சொன்னா?’’ என கோவத்தில்
திட்டிவிட்டேன். (அங்கு முடியை எடுத்தால்தான் அவருக்கு ஒரு ஆத்ம திருப்தியாம்).
நான் சீரியசாக திட்டினாலும், அவர் ரொம்ப கூலாக ‘’சரி தம்பி எந்திச்சு, வேஷ்டிய........’’
என்று சொல்லி முடிப்பதற்குள் “யோவ், நான் கம்முக்கட்டுல கத்திய வச்சதுக்கே
கடுப்புல இருக்கேன், நீ என்னடான்னா வேற எங்கயோ....... ’’ என நான் முடிப்பதற்கு
முன்பாக சிரித்துக்கொண்டே ‘’இல்ல தம்பி, எந்திரிச்சு வேஷ்டிய உதருங்க, முடி கிடி ஒட்டியிருக்குமுன்னு
சொல்ல வந்தேன்’’ என்றார். மூன்றாவதாகச் சொன்னேன் ‘’ஆண்டவா இது என்ன சோதனை””.
--------------------------------------------------------------------------------------------யாஸிர்
அசனப்பா.
gee sirichu malala, such a hilarious writing.
பதிலளிநீக்குThank you bro
நீக்குWonderful writing, i enjoyed reading this article.....
பதிலளிநீக்கு‘’ஆண்டவா இது என்ன சோதனை’’என்று முதலும் கடைசியுமா சொல்லி இருப்பதில் நியாயம் இருக்கு !தேவயானியே சந்தோசமா ராம்குமாரை கட்டிக்கிட்டு வாழும் போது உங்களுக்கேன் ‘’ஆண்டவா இது என்ன சோதனை’’:)
பதிலளிநீக்குநீங்க இன்னும் தேவையானி புருசனை பார்க்கவில்லை என்றே நினைக்கிறேன். அதுதான் ராஜ் குமாரை ராம் குமார் என்று எழுதியிருக்கிறீர்கள். (இன்னும் ராம் குமார் மேட்டரில் இருந்து வெளியே வரலியோ?).
நீக்குoru manusanukku ivlo sodhanaiyaa...andavaa :) sooper machi...kalaasal
பதிலளிநீக்குஎப்படித்தான் தலையில முடிவெச்சிக்கிட்டு திரியிரியோ, அரிப்பா இருக்காது ????. எங்கள பாரு எவ்வளவு ஃபிரியா இருக்கோம்.
நீக்குநல்ல நகைச்சுவை இழையோடும் நடை. பிரமாதம்
பதிலளிநீக்கு- சரவணன்
Thank you saravanan
நீக்குBoss super ... sirichu sirichu tierd agitten
பதிலளிநீக்குSuper bro
பதிலளிநீக்குvery nice
பதிலளிநீக்கு