புதன், ஏப்ரல் 11, 2012

ங்ங்கொய்யால ஊராடா இது.......


நம் அனைவரின் மீதும், இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
எனக்கு தெரிந்து, என்னுடய ஊரில், அதிக நாட்கள் இருந்தது இந்த முறையாகத்தான் இருக்கும். முழுமையான 60 நாட்கள் (இந்த முறை இரண்டு மாதம் விடுமுறைக்கு காரணம் எனது கல்யாணமாக இருந்தது). பெங்களூரிலும் சரி, துபாய்கு வந்தபின்பும் சரி, இத்தனை நாட்கள், நான் எனது ஊரில் விடுமுறையை செலவழித்ததே இல்லை. அதனால் தான் என்னமோ எனக்கு, எங்க ஊரை இதற்கு முன்பு அவ்வளவு பிடித்திருந்தது.

எல்லோரும் துபாயில் இருந்து வந்தவுடன், அவர்களிடம் கேட்கும் முதல் கேள்வி, “என்னப்பா எப்போ வந்தாய்? என்று, ஆனால் எனது ஊரில் “எத்தன மாதம் லீவு?, எப்ப மறுபடியும் பயணம்? இந்த கேள்வி, எனது பக்கத்து வீடு, சொந்தங்களுக்கு கல்யாணப் பத்திரிக்கை கொடுக்கச் சென்ற போது, எதிர் கொண்டது. எப்படி இருக்கும் நமக்கு. நான் கல்யாணத்திற்கு வந்திருக்கன்னு தெரிஞ்சிருந்தும், பக்கிகள் அந்த கேள்விய அழுத்தி, அழுத்தி கேட்குதுங்க.

எங்க ஊரைப் பொருத்தவரை, துபாயில் இருந்து கிளம்பும் தேதிய நாம முடிவு செய்யணும், துபாய்கு வரும் தேதிய எதிர்வீட்டுக்காரன் தான் முடிவு செய்வான். காலையில வீட்டவிட்டு கிளம்பும் போது, எங்கடா போற? ன்னு கேட்டா, போகுற காரியம் போக்காயிருமுன்னு எங்கப்பாவே கேட்கமாட்டாறு, பக்கத்து வீட்டுக்காரன், கொட்டாவிய, கம்முகட்டு வழியா விட்டுக்கிட்டே “எங்க....த்தா கா....லயிலே கிளம்பியாச்ச்ச்ச்ச்ச்சு ங்ங்க்ஸ்ஸ்ஸ்? ன்னு கேட்டுகிட்டே வண்டிமுன்னாடி வந்து நிப்பான். ஒன்னுமில்ல மாமா, சும்மா ரோட்டுக்கு........ன்னு பல்ல கடிச்சி, வாய சிரிச்ச மாதிரியே வச்சிகிட்டு பதில் சொல்லனும்.
ஊருக்குள்ள, எவனையும், எவனுக்கும் பிடிக்கல. பேசுறவனெல்லாம், அவன பெரிய யோக்கியன்னு நினைச்சுக்கிட்டு பேசுறான். தன்னை, தன்னுடைய மாமன், மச்சான் நல்லவன்னு சொல்லனுங்குறதுக்காக, அடுத்தவன் பேருல, லோன் எடுத்து, இவன் வட்டிக்கி கொடுக்குறான். சமுதாயத்த நான் தூக்கி நிப்பாட்டுறன்னு வேட்டிய தூக்கிகிட்டு வந்தவன், துண்டக்காணம், துணியக் காணமுன்னு ஓடுறான். விவசாயம் பாக்கலாமுன்னு துபாயில வேலைய விட்டு வந்தவனப்பத்தி வஞ்சகம் பேசி, பேசி சவுதிக்கு சானியள்ள அனுப்பிட்டானுங்க. லட்சங்கள் எல்லாம் போயி, கோடியில பேசுதுங்க, பத்துரூபா கூட சம்பாதிச்சு கொடுக்காத, கோட்டிகள்.

ஊரைப் பொருத்தவரை ஒன்னே ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது. எல்லோருக்கும் தான், தலைவன் ஆகனும்னுங்குற எண்ணம் வந்திருச்சு. வீட்டுப் பிரச்சனைக்கு வீதியில வந்து சண்ட போடுறன், ஊருப் பிரச்சனைக்கு ஓடி ஒளியிறான். சாக்கடை அடச்சிருக்கு, நம்ம ஏரியா தண்ணி பைப்பை திருப்பி, அடுத்த ஏரியாவிற்கு கொண்டுபோகுறான், இத எதிர்த்து போராட்டம் பண்ண வாங்கன்னு அந்த வார்டு கவுன்சிலர் கூப்பிட்டா, இந்த கிளம்பிட்டாரு அன்னா ஹசாரேன்னு, கேலி பேசுறான். ஊர் தலைவர் பதவிக்கு நடக்கும் சண்டய வேடிக்கை பார்க்க, வேகம் எடுத்து செல்கிறது எங்க ஊருக்காரனுங்க கால்கள்.

அமைப்புகள் அதிகமாகிவிட்டது,
-அதனால்
அமைதி குறைந்துவிட்டது.

எத்தனை அமைப்புகள்தான் இருக்கவேண்டும் ஊரில், அத்தனை அமைப்பும் அங்கொன்னும், இங்கொன்னுமாக எண்ணிக்கையில் அடங்காது. எத்தனை அமைப்பு இருக்கோ, அத்தனை அமைப்பிற்கும் ஒரு, ஒரு பள்ளிவாசல்கள். முன்பு தொழுகைக்கு 1000 பேர் ஒன்னா வருவான். இப்போ பத்து, பத்து பேரா 100 பள்ளிவாசல்களில் தொழுகிறான். ஊர் பணம், உறங்கிக்கொண்டிருக்கின்றது. அந்த பணத்தை வைத்து ஊருக்கு என்ன நல்லது செஞ்சிருக்கீங்கன்னு கேட்க ஆள் இல்லை. பொதுத் தேர்வு நடைபெறும் இந்த நேரத்தில், கரண்ட் இல்லாத இரவு நேரத்தில், மாணவர்களுக்கு ஜெனரேட்டர் மூலமாக படிக்கவைக்க பள்ளிவாசலை ஏற்பாடு செய்யலாம். கோடை விடுமுறையில் பெண்களுக்கு தையல் போன்ற சுய சம்பாத்திய பயிற்சிகளை கொடுக்கலாம். ஆங்கில வகுப்புக்கு ஏற்பாடு செய்யலாம். வட்டியில்லா கடன் கொடுத்து கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவலாம்.............. ஒரு மண்ணும் கிடையாது.
ஊரில் படிப்பாளிகள் அதிகமாகிவிட்டார்கள் என்று சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கும் கூட்டத்தப் பார்த்து “மடையர்கள் என்று சொன்னால் என்ன தப்பு. படிப்புக்கும், அறிவிற்கும் வித்தியாசம் தெரியாமல் போன வீணர்கள். கம்யூட்டர் சயின்ஸ் படித்தவனுக்கு மானிட்டருக்கும், கீ போர்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. பிறகு அவன் படிச்சு என்ன புண்ணியம். துபாயில் வேலை செய்கிறவனில் எத்தனை பேர், அவனவன் படித்த படிப்பிற்கான வேலையை செய்கின்றான்?. M.C.A படிச்சவனுக்கும், சீப்போர்டு டிராலி கிளார்க் வேலைக்கும் என்ன சம்பந்தம். B.B.A படிச்சவனுக்கு, பலுதியா ஹெவி டிரைவர் வேலைக்கு என்ன தொடர்பு. திரிஷா இல்லன்னா, ஒரு திவ்யான்னது மாதிரி, கிடைக்குறத ஏத்துகிற கூட்டமாகிவிட்டது கொடுமை. துட்டு, டப்பு, மாலு இந்த மூணும் எங்க கிடைக்கோ அதுதான் முக்கியமே ஒழிய, M.C.A, B.B.A எல்லாம் சும்மா லுலுலாய்க்குத்தான்.

துபாயின் புண்ணியத்தில், பணம் புறழ்கிறது, பொண்டாட்டிகள் பல்லிளித்து பக்கத்து வீட்டுக்காரியிடம் வாசலில் இருந்து பொறம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தெருவில் ஒரு ஆண் வருகிறார் என்றால், அடிப்பாங்கறைக்கு ஓடும் பெண்கள் போய், பெண்கள் இருக்கிறார்கள் என்று விலகிச் செல்லும் ஆண்கள் அதிகமாகிப் போனார்கள்.
விலைநிலங்கள் எல்லாம் விலை மதிப்பில்லா, பிளாட்டுகளாகிப் போயின. வாங்குவது என்பது முடிவாகிப் போன நிலையில், பார்த்து வாங்க வேண்டாமா? அப்ரூவல் இருக்கா?, நேரான பாதை இருக்கா? எதனையும் யோசிப்பது இல்லை. இப்புட்டுத் தானோ!!!!!!!!!!, வெரும் @#$%& லட்சமா!!!!!!!!!!! என்று ஆச்சிரியக் குறியே ஆச்சரியப் பட்டுப் போகும் அளவிற்கு, அதிசய்ங்கள் நடந்துகொண்டிருக்கின்றது. இதெல்லாம் எதுவரைக்கும், துபாய், சவுதி ஷேக்குகள் எல்லாம், பேக்குகலாக இருக்கும் வரை மட்டும். அதுக்கு அப்புறம்?????????????????

“பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.

என்ற வள்ளுவனின், கூற்றுப்படி எது, எது ஒரு நல்ல ஊரில் (நாட்டில்) இருக்கக்கூடாதோ, அதெல்லாம் இருப்பதுவே கடையநல்லூர். இப்ப சொல்லுங்க என் தலைப்பு சரி தானே.

இவ்வளவு சொல்லுறியே, நீ என்ன உத்தமனான்னு கேட்டா, சத்தியமா இல்ல, மேலே சொன்னதுல பாதி என் வீட்டிலும் நடக்குது, ஏன்னா நாங்களும் கடையநல்லூர்காரங்கதானே......

-------------------------------------------------------------------------யாஸிர்.

8 கருத்துகள்:

  1. உங்ககோபம் நியாயமானது ஆனால் இப்போது எல்லா ஊரும் இப்படித்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @மோகன்,
      தரவரிசைப் படி, அட்டவணை இட்டால் எங்க ஊரு தான் முதலில் வரும். கிட்டத்தட்ட ஒரு செண்ட் பிளாட்டின் விலை, சென்னை அண்ணா சாலையின் விலையை விட அதிகம்.

      நீக்கு
  2. அருமை யாசிர், //விலைநிலங்கள் எல்லாம் விலை மதிப்பில்லா, பிளாட்டுகளாகிப் போயின//

    விளைநிலங்கள் எல்லாம் விலை மதிப்பில்லா, பிளாட்டுகளாகிப் போயின?... மத்தபடி எல்லாத்தயும் திருநெல்வேலி தமிழ்ல பொலம்புற மாதிரி எழுதி இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் நண்பா..
    --- உன் கல்லூரி நண்பன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @என் கல்லூரி சகாவிற்கு,

      கோபத்திற்கு பாஷை தேவையில்லை நண்பா, பதபதப்பில் தட்டச்சு செய்தது. ஒருவேளை அப்படி செய்திருந்தால் பல சொற்களுக்கு, பின் குறிப்பிட்டு அர்த்தம் போடவேண்டியதாக இருக்கும். (பிரவின், புண்ணைவனம், லெனின், இவர்கள் மூவரில் யாராவதாகத்தான் இருக்க முடியும்)

      நீக்கு
  3. கரண்ட் இல்லாத இரவு நேரத்தில், மாணவர்களுக்கு ஜெனரேட்டர் மூலமாக படிக்கவைக்க பள்ளிவாசலை ஏற்பாடு செய்யலாம். கோடை விடுமுறையில் பெண்களுக்கு தையல் போன்ற சுய சம்பாத்திய பயிற்சிகளை கொடுக்கலாம். ஆங்கில வகுப்புக்கு ஏற்பாடு செய்யலாம். வட்டியில்லா கடன் கொடுத்து கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவலாம்.............. ஒரு மண்ணும் கிடையாது./

    தூங்கும் முத்லீடு கனக்கச் செய்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @இராஜ ராஜேஸ்வரி,

      தூங்குவது முதலீடு மட்டும்மல்ல, எங்களின் அறிவும் தான்.

      நீக்கு
  4. //இவ்வளவு சொல்லுறியே, நீ என்ன உத்தமனான்னு கேட்டா, சத்தியமா இல்ல, மேலே சொன்னதுல பாதி என் வீட்டிலும் நடக்குது, ஏன்னா நாங்களும் கடையநல்லூர்காரங்கதானே//

    One has to be Roman in Rome. If not people will treat us like lunatic. We all have the similar experiences. Good writing indeed!

    பதிலளிநீக்கு