சனி, ஏப்ரல் 14, 2012

கடவுள் எனும் தொழிலாளி கண்டெடுத்த முதலாளி.

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
 முகநூலில் நண்பர்கள் அனுப்பும் சில விசயங்களைப் பார்த்துவிட்டு ஒரு கணம் மனசு கிடந்து துடிக்கும். முன்பு, அப்படியான ஒரு விசயம் கபாடி உலக கோப்பையை வாங்கிவிட்டு நமது நாட்டு வீராங்கனைகள் நாடு திரும்பிய போது, திரும்பிப் பார்க்கக்கூட எவனும் செல்லாதது. இது மக்களின் தவறு இல்லை, இது முற்றிலுமான அரசாங்கத்தின் தவறு, மீடியாக்களின் தவறு. இந்த ஒரு சாதனையை இந்தியனாக நாம் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டிய விசயத்தினை முறையாக மக்களிடம் சென்று சேர்க்காதது அவர்களுடைய பொருப்பின்மையை காட்டுகின்றது. விமான நிலையத்தில் இருந்து, அவர்களின் வீட்டிற்கு ஆட்டோவில் 5 பேராக அட்ஜெஸ்ட் செய்து செல்லும்படியாக அலைக்கழித்தது அரசாங்கத்தின் குற்றம் இல்லையா?. இன்னும் நம்மில் பலருக்கு, கபாடி பெண்கள் பிரிவில் இந்தியா வென்றது தெரிந்திருக்கும் என்பது சந்தேகமே !. இன்று விவசாயத்திற்காக பாண்டிச் சேரியைச் சார்ந்த திரு. வெங்கடபதிக்கு பத்மஸ்ரீ பட்டம்பெற்றது பற்றியது.

ஒவ்வொரு முறையும், பத்மஸ்ரீ, பத்ம பூசன் விருதுகள் வழங்கும் போது, எத்தனை நடிகர், நடிகைகளுக்கு விருது கிடைக்கின்றது என்பதனை முதல் பக்கத்தில் போடும் எந்த எச்சக்கல பத்திரிக்கைகாரனும், அவன் பத்திரிக்கையில் இந்த உத்தமனுக்கு ஒரு பெட்டி செய்திக்குறிய இடம் கூட கொடுக்கவில்லை. இது ஒரு தமிழனுக்கு கிடைத்திருக்கின்ற காரணத்திற்காக அதை வெளிச்சம் போட்டு காட்டாததற்காக ஆதங்கப்படவில்லை, மாறாக அவரின் துறை சம்பந்தப்பட்டதற்காகவே என்னுடய கோபம். ஒவ்வொரு வருசமும் வானிலை மாற்றங்களினால் ஏற்படும் அவஸ்தைகளைப் பற்றி பக்கம் பக்கமாகப் போட்டு விட்டு, மரம் நடுவீர், நாட்டைக் காப்பீர் என்று போட்டுவிட்டு சமுதாயக் கடைமையாகக் காட்டிக்கொள்ளும் பேப்பர்காரனும் சரி, சேனல்காரனும் சரி சுயநலவாதிகள் தான். 

இந்த வார விகடனின் இரண்டு புத்தகங்களில் (ஆனந்த விகடன், ஜீனியர் விகடன்) இவரது பேட்டி மற்றும் அனுபவத்தினை நமக்கு அளித்ததில் சற்று ஆருதல் கொஞ்சம் ஆனந்தம் எனக்கு. எப்போதும் மிஸ்டர் மியாவ் படிக்கும் நான், ஏனோ என்னை அறியாமலேயே முதலில் பத்மஸ்ரீ வெங்கடபதி அவர்களைப் பற்றி படிக்க ஆர்வமாகினேன். இனி அவரைப் பற்றி அவர்.
''நான், பாரம்பரியமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். வீட்டுக்கு ஒரே பிள்ளைங்கறதால செல்லமாத்தான் வளர்ந்தேன். நாலாம் கிளாஸுக்கு மேல படிப்பு ஏறல. ஜாலியா சுத்திக்கிட்டிருந்த என்னோட போக்கை மாத்துறதுக்காக, 16 வயசுலேயே கல்யாணம் முடிச்சு வைச்சுட்டாங்க. 19வயசுலதான் எங்க குடும்பத்துக்குச் சொந்தமா இருந்த நிலத்துல கால் வெச்சேன். நெல்லு, கடலைனு வழக்கமான பயிர்கள்ல லாபமே இல்லை. லாபம் தேட ஆரம்பிச்சப்பத்தான், 'கனகாம்பரச் செடியைப் பயிர் செய்'னு பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி முதல்வர் சம்பந்த மூர்த்தி ஆலோசனை சொன்னார். அப்படியே செஞ்சேன், நல்ல லாபம் கிடைச்சுது.

பிறகு, சாகுபடிப் பரப்பை அதிகப்படுத்​தறதுக்காக நாற்றுகளை விலைகொடுத்து வாங்கினேன். அதுல தரம் இல்லை, பயங்கர நஷ்டம். 'நாற்றுகளை நாமளே உருவாக்குவோம்'னு தொடர்ந்து ஆராய்ச்​சியில இறங்கின எனக்கு 'கதிர் வீச்சுமுறை கைகொடுத்துச்சு. கல்பாக்கம் அணு மின் நிலைய உதவியோடு அதிலும் ஜெயிச்சேன். இதுக்கு உதவி செய்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரையே அந்த கனகாம்பர ரகத்துக்கு வெச்சேன். பிறகு, சவுக்கு மர ஆராய்ச்சியில இறங்கி, ஏக்கருக்கு 200 டன் மகசூல் கிடைக்கற ரகத்தை உருவாக்கினேன். இதுக்கு உதவி செய்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேரையே சவுக்குக்கு வெச்சேன்'' என்று சொன்ன வெங்கடபதி, ''கனகாம்பரம், சவுக்கு கன்னுகளை எல்லாம் குறைஞ்ச விலையிலதான் விவசாயிகளுக்குக் கொடுத்துட்டு வர்றேன். இப்ப இது ரெண்டும் இந்தியா முழுக்கப் பரவி, விவசாயிகளுக்கு பெரும் உதவியா இருக்கு. அந்த வகையில இந்த 'பத்மஸ்ரீவிருகுக்கு நான் தகுதியானவன்தான்னு நினைக்கிறேன்'’

அவரே தொடர்ந்து, ''விருது வாங்கினதுல சந்தோஷம்ன்​னாலும் ஒரு வருத்தமும் எனக்கு இருக்கு. விவசாயி​களை இந்த நாடு இன்னும் கூட சரியா மதிக்கலை. விருது வாங்கினவங்கள்ல நான் மட்டும்தான் விவசாயி. ஜனாதிபதி மாளிகைக்கு வந்திருந்த அரசியல்வாதிங்க, அதிகாரிங்க எல்லாருமே... விருது வாங்கின சினிமாக்காரர்கள், தொழில் அதிபர்கள், இசைக் கலைஞர்களை மதிச்சி, பக்கத்துல கூப்பிட்டுப் பேசினாங்க. போட்டோ எடுத்துக்கிட்டாங்க. ஆனா, ஒரு விவசாயியான என்னை யாரும் கண்டுக்கவே இல்ல.

ஆனா, ஒரு காலம் வரும்... அப்ப நிச்சயமா எல்லாருமே விவசாயிகளை மதிப்பாங்க'' என்கிறார் நம்பிக்கையுடன்.

அதே நம்ம்பிக்கையுடன் நாமும் இருப்போம். சும்மாவா சொன்னான் வள்ளுவன் அன்றே

"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை."
------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக