செவ்வாய், ஏப்ரல் 24, 2012

விழிநீர் வழிய வீதியில் நாம்.


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதான்மும் உண்டாவுவதாக.
எனக்கு தெரிந்த ஒரு நண்பரை வாரம், வாரம் காணச்செல்லும் போது, அவர் நாட்டில் நடக்கும் விசயங்களை சட்டசபை நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிந்துகொண்டிருப்பார் ஜெயா டி.வியின் மூலமாக. “ஜென்ம சாபம் கொண்டேனும் ஜெயா டி.வி காணேன்என்று வீரவசனம் பேசிய என்னை “அம்மா என்ன சொல்லுறாங்க பாத்திங்களான்னு, சும்மா, சும்மா சீண்டுவார்.

நெல்லும் உயிர் அன்றே, நீரும் உயிர் அன்றே
மன்னன் உயிர்தே மலர்தலை உலகம்:
அதனால், யான் உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே”--------புறநானுறு

நாட்டிற்கு நெல்லும், நீரும் முக்கியமில்லை, அந்த நாட்டை ஆளும் அரசனே முக்கியம். இதனை அவன் உணர்ந்து மக்களுக்கு வேண்டியதை செவ்வனே செய்திடல் வேண்டும் என்பது அதன் பொருள். அப்படியா நடக்கின்றது இங்கு. நல்ல வேலை எழுதியன் இறந்துவிட்டான் இல்லன்னா, நிற்க இடமில்லாதவன் பெயரில், நில அபகரிப்பு புகாரில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பான்.

இன்னும் என்னமோ இந்த அம்மையாருக்கு, எம்.ஜி.ஆருடன் நடிப்பதாகவே நினைப்பு, சட்டசபையில், எவனோ எழுதிக் கொடுத்த காகிதத்தினை படிக்க, எதற்கு இவ்வளவு ஒப்பனைகள். ரெண்டு பட்டி, பர்ஸ்ட் கோர்ட், செகண்ட் கோர்டு என ஒரு வீட்டுக்கு பெயிண்ட் அடிச்சமாதிரி, முகத்துக்கும், கழுத்துக்கும் அத்தனை கலர் வித்தியாசம்.

தப்பித்தவறி கூட தி.மு.க, எம்.எல்.ஏ தெரிந்துவிட கூடாத அளவிற்கு ஒரு நேர்த்தியான ஒளிப்பதிவு / எடிட்டிங். சும்மா, சும்மா, மைனாரிட்டி தி.மு.க அரசு, கி.மு 4 ம் நூற்றாண்டில் நடந்த சம்பவம், மதுரை ஆதினம் சொன்னார்... இப்படி நாட்டிற்கு மிகவும் தேவையானவை மட்டும் விவாதிக்கப்படும் அதி புத்திசாலிகள் நிறைந்த சபையைக் காண, கண்கோடி வேண்டும். ஒரு சாதாரண மக்கள் பிரச்சனையை தீர்த்ததற்காக, மாநாட்டு போட்டு பேசுறது மாதிரியான சஞ்சாலப்புகள்.

கலைஞர், தன்னைப் புகழ்பாட வேண்டும் என்று கூறினாலும், அது கலைஞர் அரங்கத்தில் மட்டுமே அறங்கேறியது, இப்போது சட்டசபையில் அமோகமாக அமர்களப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இரண்டு நிமிடத்தில், கேட்க வேண்டிய ஒரு கேள்வியை, 10 நிமிடத்திற்கு பெத்த தாய கூட அம்மான்னு கூப்பிடாத பல பக்கிகள், அம்மா, அம்மாவென புகழ்பாடுகின்றார்கள். எங்கே போகுது நம்ம நாடு.
மக்கள் பிரச்சனை எதையாவது பேசுகிறார்களா என்றாள், எதுவுமில்லை. ஒரு மணி நேர அந்த நிகழ்சியில் ஒரு லட்டம் “தங்க தாரகை, ஒரு லட்சம் “தாயுள்ளம் கொண்ட தலைவி, ஒரு லட்சம் “புரட்சித் தலைவி, .... இப்படி லட்ச லட்சமான துதிகளை அள்ளிவிட்டு கோடிளை கைப்பற்றி, லட்சியங்களை கோட்டையிலேயே கோட்டை விட்டுவிடுகிறார்கள். எண்பது வயதுக்காரனுக்கும் இந்த அறுபத்தந்து வயதுக்காரர் தான் அம்மாவாம், எங்கு காணமுடியும் இந்த அறிவியல் அதிசயத்தை.
தமிழ் புத்தாண்டு, சித்திரையிலா, தையிலா என்ற பட்டிமன்றம் நடுவர் இல்லாமலே நடந்து கொண்டிருக்கின்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள், இவர்களது சண்டையில், (தலை)வலிதான் பிறக்கிறது. ஒரு பேயை விரட்ட ஆசைப்பட்டு, ஒரு பிசாசு நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது வேதனை. விதியின் வழியில் தான் மதி செல்லும் என்று கூறிக்கொண்டு இருந்திடத்தான் வேண்டுமோ?

இனிமேல், ஜெயலலிதா இருக்கும் வரை (ஆட்சியில்) தமிழ்நாட்டிற்கு போகவே கூடாதுங்குற நிலைமைக்கு வந்துவிட்டேன், இந்த பாழாய்போன பவர்கட்டினால். எங்க ஊருக்கு பரவாயில்லை, பக்கத்து ஊர் சங்கரன் கோவிலில் ரொம்ப அனியாயம். இடைத்தேர்தலை முன்னிட்டு, 24 மணி நேர பவர் சப்ளைக்கு சேத்து மாத்தாக இப்ப 12 மணி நேர பவர்கட்டாம்.

எங்கும் ஆடம்பரம், எதிலும் ஆடம்பரம் என்று எங்கு திரும்பினாலும் ஒரே அலப்பரையாகத்தான் இருக்கின்றது. 5 லட்சம் பெருமானமுள்ள உதவிதொகை கொடுக்கவரும் முதல்வருக்கு 15 லட்சம் ரூபாய் செலவில் பேனர்களும், ஃபிளக்ஸ்களும் தெருவெங்கும் தொங்குகின்றன. இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு சொத்து, அந்த கட்சிக்காரன் காசா?. இல்லை ஆட்சியினால் லாபம் கொழுத்த பணக்கார முதலாலிகளின் காசா?. வரி செலுத்துபவன் வறுமையின் பக்கம். செலவழிப்பவன் சுகங்களின் பக்கம். விழிநீர் வழிய வீதியின் ஓரத்தில் விழுந்து கிடக்கின்றோம் நாம்.
காமராஜர் ஆட்சிகாலத்தில், அவருடைய நண்பர் எஸ்.டி சுந்தரம், காமராஜரிடம் சொன்னாராம், நீங்கள் எவ்வளவோ சிறப்பான செயல்திட்டங்களை அறிமுகப்படுத்தி அதனை வெற்றிகரமாக செய்துகொண்டிருக்கின்றீர்கள், பல பேருக்கு கல்வி அறிவு கொடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள் இதை எல்லாம் ஒரு வீடியோ படமாக எடுத்து வைத்தால் அதனை மக்களுக்கு எளிதாக கொண்டுபோய் சேர்த்துவிடலாம் என்று சொல்ல, அதற்கு காமராஜர் எவ்வளவு செலவாகும் என கேட்க, 3 லட்சம் ஆகும் என்று நண்பர் சொல்வதைக்கேட்டுவிட்டு, காமராஜர் சொன்னாராம் அந்த 3 லட்சத்தை வைத்து நான் இன்னும் 10 பள்ளிக்கூடம் திறந்துவிடுவேனே என்று, பின்பு நண்பரிடம் நடையை கட்டுமாறு கூறிவிட்ட அந்த மகான்களைப் போன்ற அரசியல்வாதி இனி எப்போது நமக்கு கிடைப்பார்கள்.

தலைமை கொஞ்சம் தகிடதத்தோமாக இருக்கும் போது, அமைச்சர்கள் அதன் அச்சாரமாக இருக்க வேண்டும், நேரு பிரதமராக இருந்த போது, அவர் அமைச்சரவையில் இருந்த அவருடைய மருமகனே ஒரு ஊழல் புகாரை நிரூபித்து, சம்பந்தப்பட்டவர்களை, பதவி நீக்கம் செய்யவைத்தார். அப்படியா இருக்கின்றது இப்போது. வாயைத்திறக்காமல் இருக்கும் போதே, வளர்ப்பு பையன் மேல், கஞ்சா கேஸ் விழுக்கின்றது, இதைக்காணும் யாராவது தலைமைக்கு எதிராக பேசிவிடமுடியுமா என்ன?. ஒரு நல்ல அமைச்சர் எப்படி இருக்கவேண்டும் தெரியுமா?

ஒரு நாள், அரசனுடன் முல்லாவும் காட்டில் வேட்டையாடிவிட்டு அரண்மனை நோக்கிவந்து கொண்டிருக்கையில், அரசன் முல்லாவிடம் கேட்டார் “முல்லாவே என் ஆட்சி பற்றி மக்கள் என்ன நினைக்கின்றார்கள். முல்லா முன்னும், பின்னும் நோட்டமிட்டபோது ஒரு கழுதையினைக் கண்டார். சுமக்கமுடியாத அளவிற்கு சுமைகளுடன், வாயில் ஒரு பூட்டு போடப்பட்டிருந்தது, அதனுடன் ஒரு தடியுடன் ஒரு வணிகன் வந்தான். அரசே அந்த கழுதையை கவனியுங்கள் என்று கூற அரசனுக்கு ஒன்றும் புலப்படவில்லை. பின்பு முல்லா சொன்னார்

“அந்த கழுதைக்கும், நம் குடிமக்களுக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை

-------------------------------------------------------------------------யாஸிர்.

2 கருத்துகள்:

  1. அருமையாக எழுதி இருக்கிறீர் நன்றி சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  2. @புலவருக்கு
    ஆலமரம், ஒரு சிறு செடியின் வளர்ச்சிகண்டு பாராட்டியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு