புதன், ஜூன் 13, 2012

நாத்தீகவாதி மாதிரி, நீ என்ன பேய்த்தீகவாதியா


நம் அனைவரின் மீதும், இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
“அய்யய்ய்ய்ய்யோ....................

டாக்டர். எம் புருசனுக்கு என்ன ஆச்சு, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை எம்புருசன எப்படியாவது காப்பாத்திருங்கஎன அழுகையும், பதட்டமுமாக ராஜி விஜயா ஹாஸ்பிடலில் டாக்டரிடம் முறையிட்டுக் கொண்டிருந்தாள்.

“ஒன்னுமில்லம்மா, பயப்படாதீங்க. உயிருக்கு ஒன்னும் ஆபத்தில்ல. ஆனா இன்னும் கண்ணு முழிக்கல.

“என்ன ஆச்சு டாக்டர்?, எப்படி ஆச்சு?

“அதுதாம்மா எனக்கும் புரியல, அத தெரிஞ்சிக்கலைன்னா என் மண்டயே வெடிச்சுடும், அதுக்காகத்தான் உன் புருசன் கண்விழுக்கும் வரை இங்கேயே இருக்கேன். என டாக்டர் ஒரு புறமும், ராஜி ஒரு புறமும் பெட்டில் அமர்ந்திருந்தனர்.

5 மணி நேரத்துக்கு முன்பு

ஒரு வியாபார விசயமாக, பிரதீஷ்க்கு திருநெல்வேலிக்கு போய்விட்டு திரும்ப சொந்த ஊர் திருச்சுக்கு வருவதற்கு மணி நல்லிரவு 1.30 ஆகிடுச்சு. எப்போதும் பயணத்தை பிளான் பண்ணி செய்யும் பிரதீஷுக்கு, தமிழ்நாடு பேருந்து பாதிவழியில் பாயைப் போட, மூன்று மணி நேரம் தாமதமாக திருச்சு வந்தது. திருச்சின்னாலும் அவர் வீடு, 6 கி.மீட்டர் தூரம் இருக்கும் பாரதி நகர்தான். பாரதி நகருக்கு, பகல் நேரத்துல போகுறதுக்கே பஸ்ஸு பல்லக் காட்டும், இதுல அண்-டயத்துல எப்படி?.

இருட்டுன்னா கும் இருட்டு, அவன் இதுவரைக்கும் இந்த நேரத்துல உலகத்த பார்த்ததே இல்லை, அதுவும் ஆள் நெருக்கடி அதிகமா இருக்கும் திருச்சி பஸ்டாண்டை பார்த்துவிட்டு, ஆளேயில்லாம அந்த இடத்த பார்க்குறதுக்கு அவனுக்கு என்னமோ மாதிரியிருந்தது.

“இந்த நேரத்துக்கு பஸ் எல்லாம் கிடையாது சார், ஒரு ஆட்டோ புடிச்சிட்டு கிளம்புங்கன்னு அங்க தூக்கத்துல டூட்டி பார்த்துக்கொண்டிருக்கும் டைம் கீப்பர் சொல்ல, அங்கிருந்து ஆட்டோ கிடைக்கும் இடத்திற்கு நடந்தான். பஸ்டாண்டுக்கு வெளியே போகுறதுக்குள்ள அவனுக்கு போதும், போதும்னு ஆகிடுச்சு. பேருக்குத்தான் பெரிய பஸ்டாண்டு, விட்டு விட்டு எரியும் இந்த லைட்ட பார்க்குறதுக்கு எவனையும் காணோம். என்று தன் எரிச்சலை, மனசுக்குள் சப்தம் போட்டு கத்திக்கொண்டிருந்தான்.

ஆண் நாய், பெண் நாயிக்கு சிக்னல் கொடுக்கும் சப்தம், மார்கழி பனி, என அவனது கோபத்தை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தியது.  “ச்சே இன்னைக்கு நான் பண்ணிவச்ச பிளான் எல்லாம் வீணா போயிடும் போலிருக்கே, திருநெல்வேலியில் இருந்து வாங்கி வந்த அல்வாவை நம்ம வாயிலேயே வச்சிட்டானுங்களே.ம்ம்ம்ம் அல்வாவை வச்சி, ஒரு பாக்கியராஜ் படத்த ஓட்டிரலாமுன்னு பார்த்தா, இப்படி ஆகிடுச்சே

“சார் ஆட்டோ வேணுமா சார்,

“ஆமாப்பா, பாரதிநகருக்கு எவ்வளவு?

“300 ரூபா கொடுங்க சார்.

“என்னது 300 ரூபாயா? யோவ் திருநெல்வேலியில இருந்து வந்ததுக்கே எனக்கு 250 ரூபாதான் ஆச்சு, நீ என்னமோ, 300 ரூபா கேட்குற?

“சார் நைட் டைம், டபுள் சார்ஜ், அதுமட்டுமில்ல, பெட்ரோல் விலை எல்லாம் ஏறிடுச்சு.

“பெட்ரோல் விலையெல்லாத்தையும் பத்தி, மன்மோகன் சிங்க் உன் ஆட்டோவுல சவாரி வரும் போது பேசிக்க, கடைசியா சொல்லு எவ்வளவு வேணும்.

“275.

“ஒரு 150 ரூபா தாரேன். வர்ரியா?
ஆட்டோ கிளம்பியது, ஆனால் பிரதீஷ் என்னமோ அடுத்த ஆட்டோவிற்காக, அதே இடத்தில்தான் நின்றுகொண்டிருந்தான். இப்படியாக பேசி, பேசி ஐந்து ஆட்டோவை விட, ஒரு ஆட்டோ தூரத்தில் வந்து கொண்டிருந்தது. இப்பவே மணி 2 ஆகிடுச்சு, இதுக்கு மேல லேட் பண்னினோம்னா நல்லாயிருக்காது. அவன் கேட்குற காசை கொடுத்துவிட்டு, பேசாம வீடு போய்சேரவேண்டியது தான், என்று எண்ணிக்கொண்டான்.

“தம்பி பாரதி நகருக்கு போகனும், எவ்வளவு வேணும்?

“நீங்க எவ்வளவு கொடுப்பீங்க?

“150 ரூபா

“வாங்க

பார்ரா, இம்புட்டு நல்லவனா இருக்கான். ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னாடியே வந்திருந்தான்னா, நமக்கு நேரமாவது மிச்சமாகியிருக்கும். ம்ம்ம்ம் இப்பவாவது வந்தானே, மாராசன்.

வண்டி அமைதியாகவே போய்கொண்டிருந்தது. பிரதீஷுக்கோ, இப்படி வாய மூடிக்கொண்டு வருவது சுத்தமாக பிடிக்காது. திருநெல்வேலியில் இருந்து வரும்போது கூட்டம் அலைமோதிய வண்டியில் கூட இவன் இருந்த சீட்டிக்கருகில் உள்ள சீட் காலியாகவே இருந்ததது என்றாள் பார்த்துக்கங்க.

“என்னப்பா இப்படி அமைதியா வார?. ஏதாவது பேசிக்கிட்டே வரலாமுல்ல?

“இல்ல சார் எனக்கு அமைதியா இருக்குறது தான் பிடிக்கும்

“அப்படியெல்லாம் இருக்க கூடாது. நாலு பேருகிட்ட பேசினாத்தான், நமக்கு ஒரு நாலு பேரு நல்லவங்க கிடைப்பாங்க.

ம்ம்ம்ம்ம்ம்.......

என்னடா இது எப்படி பேசினாலும் வழிக்கு வரமாட்டேங்குறானே என்று மன்சுக்குள்ள நினைத்துக் கொண்டே, போகும் போது

“க்க்க்க்க்க்க்க்கிரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச். என ஆட்டோ டிரைவர்  பிரேக் அடிக்க. பிரதீஷின் மூஞ்சு, முன்னாடியிருந்த கம்பியில் இடித்து, தடவியபடியே,

“யோவ், என்னயா ஆச்சு, வேகத்தட வருவது கூடவா கண்ணுக்கு தெரியல, அதுவும் காலில் இருக்குற பின் பிரேக்க அழுத்தாம, கையில இருக்குற முன் பிரேக்க அழுத்துற. எத்தன நாளாயா ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருக்குற?

“மன்னிச்சுக்கங்க, எப்போதும் நான் டே டூடிதான் பார்பேன், நைட் டூட்டி எனக்கு புதுசுங்க.

“நல்ல ஓட்டுன போ, ஆட்டோவ. சரி சரி போகும் போது, நாகா தியேட்டருல என்ன படம் போட்டிருக்கானுங்கன்னு பார்த்துட்டு போகனும். அந்த வழியா போ.

“நாகாலயா சார். காஞ்சனா போட்டிருக்கான்.

“நீ பார்த்திட்டியா?, எப்படி இருக்கும் படம்?

“சார் நான் போஸ்டரத்தான் பார்த்தேன். படம் பார்க்கல, பார்க்கவும் இஷ்டம் இல்லை

“ஏன்?.

“பிறகு என்ன சார், சரத்குமாரெல்லாம் பேயா வந்தா எவன் போய் பார்ப்பான், அதுக்கு லட்சுமி ராய பேயா காட்டிருக்கலாம். அதுமட்டுமில்லாம எனக்கு இந்த, பேய், பிசாசு மேல எல்லாம் நம்பிக்கையில்ல சார்.

“என்னய்யா சொல்லுற, பேய் எல்லாம் இருக்கு. சும்மாவா பெரியவங்க சொல்லுவாங்க.  நாத்தீகவாதிமாதிரி நீ என்ன பேய்த்தீகவாதியா
“அப்படியெல்லாம் இல்ல சார். தம்மேல நம்பிக்கையில்லாதவன் தான் பிறரைப் பார்த்து பயப்படுவான். அதுமட்டுமில்லாம எவனோ, காசு சம்பாதிக்கனும் என்பதற்காக கட்டவிழ்த்துவிட்ட நாடகம். அந்த காலத்து ராஜாக்களிடமிருந்தும், ஜமீந்தார்களிடமும் இருந்த பணத்தை அபகரிக்க, ஒரு பயத்துக்காக உருவாக்கப்பட்டது தான் இந்த பேய் கதை எல்லாம்.

“அப்படியெல்லாம் சொல்லாதயா, தன்னுடைய ஆசை நிரைவேறாம செத்தவங்கதான் பேயா அலையுறாங்க.

“ஹா, ஹா, ஹா..... எந்த மனுசன் தான் எல்லா ஆசையையும் பூர்த்தி செஞ்சிட்டு செத்துருக்கான் சொல்லுங்க பார்போம். பணத்தாசையில்லாத மனுசன் இருக்கானா இந்த உலகத்துல?. எல்லோருக்கும் பணம் வேணும். இல்லாதவனுக்கு கொஞ்சம் வேணும், இருக்குறவனுக்கு இன்னும் கொஞ்சம் வேணும். இப்படி பார்த்தா செத்தவனுங்க எல்லோரும் பேயாத்தான் திரியனும். இதுலாம் ஒரு மூட நம்பிக்கை சார். பார்த்த படிச்சவராட்டம் இருக்கீங்க, நீங்களுமா நம்புறீங்க?

“என்னதான் சொன்னாலும் எனக்கு ஏத்துக்குறதுக்கு கொஞ்சம் இதாத்தான் இருக்கு

ஆட்டோ டிரைவர் விடுவதாக இல்லை, “இப்போ நீங்க சொல்லுறமாதிரி, எல்லா பேய்களும் பழிவாங்க கிளம்பியிருக்குன்னா, மாமியார் செத்த எந்த வீட்டிலாவது மருமகள்கள் உயிரோடு இருப்பாங்களா?

“அதுவும் சரிதான். நீ சொன்னதுக்கப்புறம்தான் எனக்கு உண்மையே புரியுது

“சரி சார் உங்க வீடு வந்திருச்சு, இறங்குங்க

“ரொம்ப தேங்க்ஸ் தம்பி, இந்தா உன்னோட பணம்

“என்ன சார் 50 ரூபா அதிகமா இருக்கு

“பரவாயில்லப்பா வச்சிக்க

“இல்ல சார் எனக்கு வேண்டாம். இந்த பணத்த வச்சு நான் ஒன்னும் பண்ணப்போறது இல்ல. நீங்களே வச்சுக்கங்க

(உணர்ச்சிவசப்பட்டவனாக) “இவ்வ்வ்வ்வளவு நல்லவனா இருக்கீயேப்பா, உன் பேரு என்ன?

“(சிரித்தவனாக) ஆட்டோவுக்கு பின்னாடி இருக்கு, பார்த்துக்கங்க சார்என் கூறிவிட்டு ஆட்டோவை கிளப்பினான். ஆட்டோவின் பின்புறம்,

*

*

*

*

*

அவனது போட்டோவுடன் ஒட்டப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில்

பெயர் = விஜய குமார்
தோற்றம் = 12.06.1976
இறப்பு = 12.06.2012

-----------------------------------------------------------------------------------யாஸிர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக