புதன், ஜூன் 20, 2012

எனது வலைத்தளத்தின் முதல் பிறந்த நாள்.


நம் அனைவரின் மீதும் இறைவனின், சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
இதுவரையிலும் என்னால் நம்ப முடியாத ஒரு நிகழ்வாகவே இருக்கின்றது. ஒரு ஆண்டு கழிந்துவிட்டது நான் பதிவுலகில் பாதம் பதித்து. ரொம்ப ஆச்சர்யம் கலந்த ஆனந்தத்துடன் என்னை நான் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். என்னால் எந்த ஒரு விசயத்தையும் சீக்கிரமாக ஆரம்பித்து விட முடியும். ஆனால் அதனை தொடர்ந்து நடத்தும் தகுதி சுத்தமாக என்னிடம் இருந்தது இல்லை. நகம் கடிப்பது, கெட்டவார்த்தை பேசாமல் இருப்பது, உடம்பை குறைக்க உடற்பயிற்சி செய்வது, வேலையை பெண்டிங் வைக்காமல் இருப்பது என பல பல விசயங்களை நான் ஆரம்பித்து பார்த்ததுண்டு, எல்லாம் முதல் மூன்று நாட்களுக்கு முத்து முத்தாய் நடக்கும், பத்தாவது நாளில் பால் ஊற்றப்பட்டுவிடும்.

இரண்டாவது ரேங்க் எடுக்கும் ஒருவன், முதல் ரேங்க் எடுப்பதில் இருக்கும் சந்தோசம் என்பது, ஐம்பதாவது ரேங்க் எடுக்கும் ஒருவன் நாற்பத்தி ஒன்பதாவது ரேங்க் எடுக்கும் சந்தோசத்திற்கு முன்னால் ஒன்றும் கிடையாது. அது மாதிரித்தான் என்னுடைய சந்தோசமும். பத்து வருசம் பதிவு போடுறவன் எல்லாம் சும்மா இருக்கும் போது இவன் தொல்ல தொண்டய கவ்வுதேன்னு நீங்க நினைக்கலாம், ஆனா என்னுடய சந்தோசத்த, நீங்க நானா இருந்தால்தான் உண்மையா உணரமுடியும்.

என்னை பதிவுலகின்பால் தர, தரவென இழுத்துவந்த இரண்டு நண்பர்களின் (பிரவின், அருண் பிரகாஷ்), வலைத்தளங்களில் ஏனோ இப்போது பதிவுகள் வருவதே இல்லை. அவர்கள் இருவருக்கும் இந்த நாளில் என் நன்றியினைத்தெரிவித்துக் கொள்கின்றேன் (பதிவு போடாமல் இருப்பதற்கு அல்ல, எனக்கு பதிவுலகை அறிமுகப்படுத்தியமைக்கு)

எத்தனை பேர் எவ்வளோ விசயங்களைப் பற்றி தெரிந்து வைத்திருக்கின்றார்கள். சில இணைய தளத்தில் கிடைக்காத விசயங்கள் எல்லாம் இந்த பதிவுலகில் கிடைக்கின்றது. முகம் தெரியாத பல மகாத்மாக்களின் வாழ்க்கை வரலாறு இலவசமாக பதிவுலகில் பரவிக் கிடைக்கின்றது. சொந்த கதை, சோகக்கதை, காதல் கதை, கட்டுக்கதை என எத்தனை எத்தனை.

பதிவுலகில் அடியெடுத்து வைக்கும் போது இரண்டு விசயங்களை நான் செய்வது கூடாது என எண்ணியிருந்தேன், அது சினிமா செய்தி / விமர்சனம் போடுவது, சிலருக்கு / சில விசயங்களுக்கு ஜால்ரா அடிப்பது. இந்த இரண்டில் இதுவரைக்கும் நான் தடம்புரண்டதாக எண்ணவில்லை. மலையாளிகளிடம் பேசும் போது ஒரு விசயம் நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும், அவர்களுடய பேச்சில் சினிமா சம்பந்தப்பட்ட விசயங்களே இருக்காது. எப்போதும் அரசியல், வியாபாரம், குடும்ப சூழல், எதிர்காலம் இதைப்பற்றியதாகவே இருக்கும். ஆனால் நாம் நம் நண்பர்களிடம் பேசும் 90% சினிமா, சினிமா, சினிமா மட்டுமே. எனவே, ரூமில் போயும் சினிமா, பதிவுலகத்திலும் சினிமா என சினிமாத்தனமாக மாறிவிடக்கூடாது என எண்ணித்தான், அந்த மாதிரியான பதிவுகளை நான் இடுவதில்லை. அதே நேரத்தில் சினிமாவை திருத்திவிட துடிக்கும் ஒரு சாதாரண ரசிகனின் உணர்ச்சியை வெளிப்படுத்த தயங்கியது இல்லை.
பதிவுலகில் வந்த பின்புதான் எனக்கு புத்தம் படிப்பதன் ஆர்வம் அதிகமானது. எனக்கு எப்போதும் வரலாற்று சம்பந்தமான புத்தகங்களைப் படிப்பது மிகவும் பிடிக்கும். வலைப்பதிவுக்குள் வந்த பின்பு, கதை, கட்டுரைகளை படிப்பதில் ஆர்வம் அதிகமாகிவருகின்றது. எனக்கு தெரிந்து இதற்கு முன்பு நான் படித்த ஒரே ஒரு புத்தகம் என்றால் அது பா.ராகவன் எழுதிய “நிலமெல்லாம் ரத்தம்தான். ஆனால் நான் பதிவுலகில் பலருடைய பதிவுகளைப் பற்றி படிக்கும் போது எவ்வளவோ புத்தகங்களுக்கு அறிமுகம் கொடுத்து நம்மை அதன்பால் அழைத்துச் சென்றார்கள்.

புத்தகங்கள் அதிகமாக படித்த பின்பு, கல்கி, பா.ராகவன், சாரு நிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன், மருதன், கண்ணதாசன், தமிழருவி மணியன், ஜெய காந்தன்......... இப்படி எண்ணற்ற எழுத்தாளர்களைப் பற்றி அறிய வாய்ப்புக் கிடைத்தது. இப்போது என்னுடைய அறை நண்பர்களின் அரட்டயில் 90% சதமானமாக இருந்த சினிமா விசயங்கள், குறையத்தொடங்கி, 75% புத்தகங்கள், நூலாசிரியர்கள் என விவாதமாக ஆரோக்கியத்துடன் சென்று கொண்டிருக்கின்றது. “என்னங்க சாரு, எஸ்.ராவைப் பற்றி இப்படி பேசிட்டாரு, இருந்தாலும் மனிஷ்ஷிய புத்திரன் இப்படி சொல்லியிருக்க கூடாது, காந்தி கொலைவழக்கு படிச்சீங்களா? என எங்களை அறியாமல் எங்களுடய பேச்சுக்கள் வெளிப்படுகின்றன.

ஆனால் பலரது வலைத்தளங்கள், பாதி ஆடையில் நடிகைகளே பவனிவருகிறார்கள். பத்திரிக்கைகளில் படித்த சினிமா கிசு, கிசுவை இவர்கள் என்னவோ, அந்த நடிகரின் கட்டிலுக்கு அடியில் இருந்துகொண்டு கண்டாவாறு காட்சிப்படுத்துவது, சினிமா விமர்சனத்தில் சித்திரம் வரைவது, என எங்கும் சினிமா, எதிலும் சினிமாவாகவே மாறிக்கொண்டிருக்கின்றது. சினிமா வேண்டும் ஆனால் சினிமா மட்டுமே வேண்டும் என்று நினைப்பது அபத்தம். சிலரது வலைத்தளங்கள் ரொம்ப அற்புதமாக இருக்கும், கிட்டத்தட்ட என்னை ஒரு அடிமைபோல மாற்றிவிட்ட பதிவாளர்களும் உண்டு.
புலவர், சா இராமாநுசம், ஆரூர் மூனா செந்தில், கேபிள் சங்கர், இவர்களின் பதிவுகளை எதிர் நோக்கி காத்திருக்கும் வாசகனாகிப் போனேன். புலவரின் புலமை நமை புல்லரிக்க வைக்கும், எதுகை, மோனையில் விளையாடுவார். நரைத்த முடிக்காரரின் எழுத்து என்னவோ அத்தனை இளமையாக இருக்கும். வார்த்தைகளில் ஒரு வீரியம் இருக்கும், சமுகம், அரசியல் பற்றிய இவரின் கவிதைகளில் நெருப்பின் சூடு தெரிக்கும். எதைப் பற்றியும் கவிதை எழுதும் ஆற்றல் பிரம்மிப்பூட்டும். மண், மனிதன், மடு வரை இவர் வரி வரையரையின்றி விரியும்.

கண்ணதாசன் தன்னுடய சுய சரித்ததில் எழுதியிருப்பான், ஒருவன் சுய சரிதம் எழுதும் போது அவன் தன்னை நிர்வாணப்படுத்திக் கொண்டு எழுதவேண்டும், அதாவது தன்னைப் பற்றி எந்த ஒரு ஒளிவு மறைவு இன்றி எழுதவேண்டும் என்று. அந்த வகையில் ஆருரார் கண்ணதாசனின் வாரிசு, அவ்வளவு அழகாக எழுதுவார். தண்ணியடித்தது, வாந்தி எடுத்தது, சீன் படத்துக்கு போனது, முதல் முதலில் சீன் புக் எழுதியது என அத்தனையிலும் இவரை கண்ணதாசன் சொன்னது போலக் காணலாம்.  இவரின் சினிமா சம்பந்தப்பட்ட எழுத்துக்களை அவ்வளவாக படிப்பது இல்லை, அதே நேரத்தில் இவர் இடும் மற்ற பதிவுகளை தவரவிடுவதில்லை. சரித்திர நாயகர்களின் எழுவது ஆண்டு கால வாழ்க்கை வரலாறு, அவர்களைப் பற்றிய ஆயிரம் பக்கம் கொண்ட புத்தகம் அனைத்தும் இவர் இடும் ஐம்பது வரிகளின் பதிவில் அடங்கிவிடும்.

கேபிள் சங்கர், அனேகமாக பதிவுலகில் அனைவரும் அறிந்திருக்கும் நபர், எனக்கு தெரிந்தமையில் ஆச்சர்யம் இருப்பதற்கில்லை. சினிமா குடும்பத்தில் இருக்கும் இவரின் அதிக பதிவுகள் இவரின் பெரிய பெரியப்பா ஹாலிவுட், சின்ன பெரியப்பா பாலிவுட், அப்பா கோலிவுட் என்றே இருக்கும். ஆனாலும் அதையெல்லாம் மீறி என்னை அவர்பால் இட்டுச்சென்றது அவருடைய கதைகள், மொக்கை என்ற பெயரில் அவர் இடும் கவிதைகள், இதையெல்லாம் மீறி மனுசனுக்கு எப்படித்தான் பாய்ஸ் படத்தில் வரும் செந்திலிடம் இருந்த அந்த “இன்பர்மேசன் டேடா பேஸ்”  இவரிடம் கிடைத்ததோ தெரியவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை ருசிமிக்க ஹோட்டல்களும் தெரிந்துவைத்திருக்கின்றார். அதுவும் ஹோட்டலின் சிறப்பு, வரலாறு, ரேட், செல்லும் பாதை, அதன் முதலாளி என அத்தனையையும் அடக்கிவிடுவார். கதைகள் அப்படி சூப்பரா இருக்கும், அதன் முடிவுகள் அனைத்தும் சும்மா நச்ச்ச்ச்ச்.

தொடங்க காரணமாக இருந்தது இரண்டு பேர் என்றாலும், இந்த ஒரு வருடத்திற்கு என்னை கை பிடித்து கூட்டிக்கொண்டுவந்தவர்களில் இந்த மூன்று பேருக்கும் பங்கு உண்டு. ஆகவே அவர்களுக்கும் எனது நன்றி. இன்னும் நிறைய புத்தகங்கள் சம்பந்தமான விமர்சனங்கள், அறிமுகங்கள் என நாம் நமை மேம்படுத்திக் கொள்ளவேண்டும். பதிவுலகர் பெருமக்களின் அறிமுகத்தால் என்னால், நல்ல, நயமான அதே சமயத்தில் நியாயமான புத்தகங்களை படிக்க நேர்ந்தது.

புத்தகத்தில் இது மாதிரியான வகைப் புத்தகங்களைத்தான் படிபேன் என்று இருமாப்புடன் இருந்த என்னை, அவர்கள் கொடுக்கும் புத்தகம் பற்றிய அறிமுகங்கள், ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து அந்த புத்தகத்தினை வாங்கிவிட துடிக்கும். இப்படியா பல புத்தகங்கள், மருதனின் “இந்தியப் பிரிவினைவாதம்”, பா.ராகவனின் “ஆர்.எஸ்.எஸ்”, கண்ணதாசனின் “வனவாசம், கோபிநாத்தின் “நீயும், நானும், தமிழருவி மணியனின் “எங்கே போகிறோம் நாம், என அதன் லிஸ்ட் கொஞ்சம் அதிகம்.

கிடைத்த புத்தகத்தை எல்லாம் படிக்கும் ஆள் கிடையாது நான். ஒரு புத்தகத்தினை எடுத்தால் அந்த புத்தகத்தினை வாசித்து முடித்த பின்பே என்னால் மற்ற / அடுத்த புத்தகத்தில் கவனம் செலுத்த இயலும். எனது கல்யாணத்தில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு, என் மனைவிக்கு அடுத்து, ஒரு நண்பர் அளித்த இரண்டு புத்தகங்கள் “கலீபாக்கலின் வாழ்க்கை வரலாறு “இஸ்லாத்தின் வழியில் இல்லறம். இந்த புத்தக பரிசு முறை என்னை ரொம்ப ஈர்த்த்து, நானும் அந்த முயற்சியில் இப்போது. எப்போதும் புத்தகம் வாசிக்கும் நான் கல்யாண வாழ்க்கைக்குப் பின்பு, மனைவியை வாசிப்பதில் கவனம் செலுத்தியதால், இதில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் விடுவதாக இல்லை, மனைவியையும், புத்தகத்தையும்.


அற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா,
அற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா!,
எல்லோரும் இன்புற்றிருப்பது மட்டுமே அன்றி,
யாமொன்றும் அறியோம் பராபரமே!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்.

17 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் !!!தொடரட்டும் உங்கள் எழுத்துக்கலை,எதோ விளையாட்டாய் தொடங்கிய எனது வலைதளத்தை நீங்கள் குறிப்பிட்டவரின் படைப்புகள் அர்த்தமுள்ளதாக்க தூண்டியது,இன்னும் எனக்கு நெடுந்தூரம் பயணம் தேவை முழுவதும் சொந்தமாய் எழுதுவதற்கு ................

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா,
      அற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா!,

      எழுத எதிர்வீட்டை காண வேண்டாம், நம்மிடம் உண்டு நாளுக்கு ஆயிரம் கதைகள்.

      நீக்கு
    2. நன்றிகள் பல, மறுமொழியிட்டமைக்கு

      நீக்கு
  2. கல்யாண வாழ்க்கைக்குப் பின்பு, மனைவியை வாசிப்பதில் கவனம் செலுத்தியதால், இதில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் விடுவதாக இல்லை, மனைவியையும், புத்தகத்தையும்.//
    அருமை..
    சிகரம் தொட வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் பல. வாழ்த்துக்களுக்கும், வாழ்த்தியமைக்கும்.

      நீக்கு
  4. எனது வலைத்தளத்தை பாராட்டி எழுதியதற்கு நன்றி யாசிர். என்னை விட பல நல்ல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பதிவுகளையும் படியுங்கள். முதல் ஆண்டை கடந்ததற்கு பாராட்டுகள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள் யாசிர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில வலைத்தளங்களை பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும், ஆனா உங்க வலைப்பதளத்தை மட்டும் தான் பார்த்தவுடன் பிடிக்கும். உங்களுக்கு கடமை அதிகம் இருக்குதுணே, கைய ப்டிச்சுக்கிட்டு வருகிறேன், நெடுதூரம் நோக்கி.....
      வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  5. பல்லாண்டு எழுத வாழ்த்துக்கள் யாஸிர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நன்றி சகோதரரே. எல்லாம் உங்களோட மேலான ஆதரவுடன்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. ரொம்ப கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சு, ரிமூவ் செய்துவிட்டேன். நன்றி சகோ.

      நீக்கு