நம் அனைவரின் மீதும்
இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
கல்யாணம் ஆனாலும்
ஆச்சு நமக்கு, பிரைவசியே போச்சு, ஊருக்கு போனா இரவு 11.00 வரைக்குமாவது
நண்பர்களிடம் அரட்டை அடித்துவிட்டு உறங்கச் செல்வது, மாலையில் பத்து பைசா பையில்
இல்லைனாலும் பந்தாவுக்கு ஒரு குறைச்சலும் இல்லாமல் நண்பர்களின் தயவில் கிடைக்கும்
டீயை முதல் ஆளாக வாங்கி ருசிப்பது, ஒரு பைக் கிடச்சா 3 பேர் சேர்ந்து தண்ணியே
விழாத குற்றாலத்துக்கு டிரிப் அடிப்பது என்று ரசித்து, ருசித்த என் வாழ்க்கை
அப்படியே சுனாமி வந்த மாதிரி திருமணத்தால் திருப்பி போடப்பட்டுவிட்டது.
போனில் நண்பர்களுடன்
பேசும் சுதந்திடம் கூட போய்விட்டது. கொஞ்சம் அதிக நேரம் பேசிவிட்டால் போதும்
அருகில் உட்கார்ந்து கொண்டு என்னையே பார்த்துக்கொண்டிருப்பாள், அந்த பார்வைக்கு
அர்த்தம் “அவன் பாவம் ஏன் வீணா மொக்கய போடுற”. நமக்குத்தான்
டெலிபதி தெரியுமே, அவள் நினைப்பதனை தெரிந்து கொண்டு கட் செய்துவிட்டு, அவள்
பார்வைக்கான நான் கண்ட அர்த்ததினை சொல்லும் போது “சே, சே நான் அப்படியெல்லாம்
நினைக்கல, இவ்வளவு நேரம் பேசினா, துட்டு வேஸ்டா போகுமேன்னு நெனச்சேன்”. இப்படி ஒரு பிட்ட
போட்டு அவங்க ஒரு குடும்ப (இ)ஸ்திரிங்குறத நிலைநாட்டிவிட்டு செல்வார்கள்.
கல்யாணத்திற்கு
முன்னாடி ரோட்டுல ஒரு பொண்ணு போனா, எதை எதையோ பார்த்துப் பழகிய எனக்கு,
கல்யாணத்திற்கு பின்னாடி அதையெல்லாம் விட்டுவிட்டு, கையில எந்த மாதிரியான வளையல்
போட்டிருக்கா, காலில் ஹீல்ஸ் அளவு எவ்வளவு இருக்கும், ஹேண்ட் பாக் எந்த மாதிரியான
டிசைன்,...................இப்படியா பார்க்கவேண்டியதாகிவிட்டது. நாங்க டூருக்கு
போன போது தான் எனக்கு தெரிந்தது, அவளுக்காக நான் ரொம்ப ஹோம் ஒர்க் பண்ணவேண்டும்
என்று. விலை கூட இருந்தாலும் பரவாயில்லை, இதை எடுத்துக்கோ என்று ஒன்றைச் சொன்னால்,
“அட நீங்க வேற இது 2006 மாடல்” என்று வருடக்கணக்கில் அடுக்குகிறாள். ம்ம்ம்
நாம 6 வருசம் பின்னாடி இருக்கோம் என்று என்னை நானே நொந்துகொண்டு, இப்ப உள்ள ட்ரெண்டுக்கு
வர, போர, வார பொண்ணுங்க கையில
கிடக்குறது, காதுல கிடக்குறத எல்லாம்
கண்ணால் கிளிக் பண்ணிக்கொண்டிருக்கிறேன்.
ரொம்ப கஷ்டப்பட்டு
ஒரு ஹேண்ட் பாக்க ஆசையாசையாக வாங்கிட்டு போனா, “ம்ம்ம்
நல்ல்ல்ல்ல்லாத்த்த்த்த்தான் இருக்க்க்க்க்க்குகுகுகுகுகுகுகுகுகு....., ஆனா கீழ்
பாகம் இன்னும் கொஞ்சம் கனமா இருக்கனும், சைடுல செல்போன் வக்கிறமாதிரியா
இருந்திருக்கனும், இந்த சைடுல ஒரு கீ செயின் தொங்குறமாதிரி இருந்திருக்கனும், மேல
உள்ள் சிப்பு எல்லாம் ரொம்ப சிம்பிளா இருந்திருக்கலாம், பேக் கலர் இன்னும் கொஞ்சம்
லைட் கலரா இருந்திருக்கலாம்” என்று என்னடா கொய்யால உன் டேஸ்டுன்னு சொல்லாம
சொல்லிட்டா. நல்லா இல்லன்னு சொல்லிட்டா, கிடைக்குறதும் கிடைக்காம
போயிரும்ங்குறதுனால இப்படி ஒரு இழுவ.
புனே வாரியர்ஸ்
விளையாடுதேன்னு ரொம்ப குஷியாக ஐ.பி.எல் பார்க்க ரிமோட்டை தூக்கினா, மனைவி
பக்கத்துல வந்துகிட்டு,
நடராஜுக்கு என்ன
ஆச்சு?
யாரு அந்த நடராஜ்?
"ஐயோ உங்க கிட்ட போயி
கேட்டேன் பாரு. சன் டி.வி வைங்க"ன்னு ரிமோட்டை அவள் பிடிங்கிக்கொண்டாள்.
அழகி இன்னும் போடல?
அழகியா?? அந்த படத்த எந்த
டி.வியில போடுறான் அதுவும் இந்த நேரத்துல.
அட நீங்க வேற அது
படமில்ல, சீரியல்.
சீரியல் எல்லாம்
நாளைக்கு பார்த்துக்கலாம், கிரிகெட் வையேன்.
கொஞ்சம் இருங்க
நடராஜ் வீட்டுக்கு வந்தானா இல்லயான்னு பார்போம். அது தெரிஞ்சவுடனே நான் ரிமோட்டை
தந்துடுவேன்.
அந்த பரதேசி எப்ப
வீட்டுக்கு வந்து நாம எப்ப கிரிகெட் பாக்குறதுன்னு மனசுக்குள்ள திட்டினாலும்,
முகத்துல சந்தோசம் கரைபுரண்டு ஓடுவது போல் ஆக்டிங் செய்யனும் (அப்படியில்லன்னா
அன்னிக்கு ராத்திரி தனியாத்தான் படுக்கனும்).
(அரை மணி நேரம்
கழித்து)
“சே, நட்டு இன்னும்
வீட்டுக்கு வரலன்னு” சொல்லிட்டு ரிமோட்டை எனக்கு
பக்கத்துல பொட்டுன்னு போட்டுகிட்டு போவாள். அப்பாட இப்பவாவது கெடச்சுச்சேன்னு
எண்ணி அவசர, அவசரமா சேனலை மாத்தினா
***************************************************************************************** (கரண்ட் கட்)
யான் பெற்றயின்பம் பெருக இவ்வையகம்
ஆதலால் அனைவரும் திருமணம் செய்வீர்.
---------------------------------------------------------------------------------யாஸிர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக