செவ்வாய், மே 29, 2012

சினிமா கிருக்கு


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவுவதாக.
அஞ்சாப்பு, ஆறாப்பு படிக்கும் போதெல்லாம் எனக்கு தமிழ் நாட்டுல ரிலீஸ் ஆகும் படங்கள பத்தி அதிகமா தெரியும். ஒரு படம் நல்லாயிருக்குன்னு ஏதாவது பேப்பர்ல படிச்சுட்டேன், எவ்வளவு கஷ்டப்பட்டுனாலும், அது எங்க ஊரு மங்களசுந்தரிக்கு வரும் போது பாத்துருவேன். ஒரு சினிமா பாக்குறத ஏம்ல பெருச பீத்துதன்னு நீங்க கேக்கலாம், ஆனா அப்பவெல்லாம் எங்க ஊர பொருத்தவரைக்கும் சினிமா தேட்டருக்கு போயி படம் பாக்குறது என்பது பெரிய குத்தம். பீடி குடிக்க்ககூடாது, பொய் சொல்லக்கூடாது இப்படிய நீதி போதனைகள் வூட்ல சொல்லித்தரும் போது, சினிமா பாக்கக்கூடாதுன்னு ஒரு வரியும் வரும். அப்படி பாத்துட்ட ஆண்டவ கண்ண குத்திருவான் என சொல்லித்தருவானுவோ.

அப்புட்டு சொல்லியும் நாம கேப்பமான்னா, அதெப்படி கேப்போம், நாமக்குத்தா அப்பவே, ஓடாத பாம்ப புடிச்சுட்டு வந்து மிதிக்குற வயசு.

ஒரு படத்த வூட்டுக்கு தெரியாம பாத்தாச்சு. ஆண்டவ கண்ண குத்தல, ரெண்டாவது தடவயும், அத்தா (அப்பா) சண்டயில இருந்து ரூவாய களவாண்டுகிட்டு போயி பாத்தாச்சு, அப்பயும் ஆண்டவ கண்ண குத்தல.

பாத்தியாலே, ஹாரிஸு, இவனுவ சொல்லுறது எதுவுமே உண்மயில்ல, சினிமா பாக்குறது தப்புன்னா, என்னய ஆண்டவன் ரெண்டுதடவலா கண்ண குத்தியிருக்கனும். பாரு, எனக்கு எப்படி கண்ணு நல்லா தெரியுது. அன்னா அங்க போறாளே அவ பசிரா தானே, அந்த ஓரத்துல நிக்குறவ நஜிமா அக்கா நத்தடம்மாதானே. இப்ப என்னல சொல்லுத. ஆண்டவ என்ன என் கண்ணயா புடிங்கிட்டான். இதெல்லாம் சும்மால, உலலாயிக்கு.

ஆமால, இவனுவ பொய்யி பொய்யாலா சொல்லித்தாரனுவோ,
மங்கள சுந்தரி டாக்கிஸ்
அதவுடு, வார ஆட்டுக்குட்டி பெருநாளுக்கு, மங்களசுந்தரியில சேதுபதி ஐ.பி.எஸ் வருது. நீ வாரியா, போவாமா?

எனக்கும் ஆசையாத்தாம்லே இருக்கு, ஆனா எங்க ராதா (தாத்தா) வுடமாட்டாரே?
9.00 மணிக்கு பெருநா தொழுவ முடிச்சு, குட்டிய 10 மணிக்கு அருத்தபின்னால நமக்கு என்னல வேல, எல்லாரும் குட்டிய வெட்டுரதுல பிஸியா இருப்பானுவ, அந்த நேரத்துல போயிட்டு வந்துருவோம். 11.00 மணிக்கு படம் போடுவான், 2.00 மணிக்கு முடிஞ்சிரும்ல. யாருக்கும் தெரியாது
.
ம்ம்ம்ம்ம் எங்க ராதா எங்கல போனன்னு கேட்டா நா என்ன சொல்ல?

என்னல ஆக்கங்கெட்ட கேள்வியா கேக்க, எல பிரியாணிய முன்னால வச்சிக்கிட்டு யவமுல ஓங்கிட்ட வந்து கேள்வி கேப்பான்?, அப்படியே கேட்டா, புளியமுக்கு தெருவுல, குட்டிய அருக்கும் போது, அது அவுத்துக்கிட்டு ஓடிருச்சு, அத புடிக்கபோனோமுன்னு, என்னயும் சேத்து சொல்லு.
ம்ம்ம்ம்ம்..

இது சரிப்படாது, நீ வேணாம், நான் ஒத்தயில போய் படம் பாத்துக்குரேன். என்னமோ இம்புட்டு யோசிக்க,

இல்லல...............ஆனா

என்ன நொல்லல, நோனான்னுக்கிட்டு, லாஸ்டா சொல்லு வாரியா? வர்லயா?.

(ஹாரிஸ் கொஞ்சம் யோசனையில் இருந்த மாதிரி இருந்துச்சு, ஆனால் ஒரு பேச்சுக்குத்தான், வந்தா வா, வராட்ட போன்னு சொன்னேன தவிர, ஒத்தயில போவ எனக்கும் பயமாக இருந்தது, அதனால எப்படியும் தாஜா பண்ணி தள்ளிகிட்டு போயிரனும்னு குறியா நின்னேன்)

நல்லா யோசிச்சுக்கோப்பா, விஜிகாந்த் சூப்பரா சண்ட போடுறானாம். கொள்ளகூட்டங்கள அடிபின்னுரானாம். செந்தில், கவுண்டமணியெல்லாம் கூட இருக்கானுங்க
..............................(ஹாரிஸ் இன்னும் யோசனையில்)

மீனாலாம் இருக்கா, இடுப்ப அப்படி இப்படியாட்டி ஒரு பாட்டு வரும், சூப்பரா இருக்கும்ல, நான் போன வாரம் ஒலியும், ஒளியும்ல பாத்தேன். அம்புட்டு அளகா இருக்கா. துப்பாக்கி சண்ட இருக்கு, டுப்பிக்கோ, டுபிக்கோன்னு சுடுவானுவோ பாரு.......

சரில, போவலாம், என்ன ஆனாலும் பரவாயில்ல நான் சமாளிச்சுக்கிடுதேன்.
(அப்பாட)

தொழ முடிஞ்சு, குட்டிய அருத்தவுடனே முக்கந்தில இருக்க பாட்டிகடைக்கு வந்திரு, அங்க நானு வந்துருதேன். ரோட்டு வழியா போனா, எவனும் பாத்துட்டு வூட்டுல சொல்லுருவானுவோ. நாம குண்டியடிச்சா பள்ளிக்கூடம் வழியா போயி, ஐ(ஹை)ஸ்கூல தாண்டி தியேட்டருக்கு போவாம்.
ஹஜ் பெருநாள் அன்று, ஆட்டுக்குட்டியை குளிப்பாட்டிவிட்டு, நானும் குளித்துவிட்டு, தொழுகைக்குச் சென்றேன். போகும் வழியில் ஹாரிஸைப் பார்த்து புரோகிராமை உரப்பித்து விட்டு, தொழுக்கையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவுடன், குட்டிய குர்பானி கொடுத்தபாடில்லை.

“என்னத்தா, என்ன ஆச்சு இன்னுமா அருக்கல? ன்னு எங்கப்பாகிட்ட கேட்க

இல்லல, உரிக்க ஆள்கெடச்சாத்தான, அருக்கமுடியும். அப்படியில்லனா, அருத்துப்போட்ட பின்னாடி உரிக்க கஷ்டமாயிருக்கும்.

உரிக்கிரவன் எப்ப கிடச்சு, நாம எப்ப படத்துக்கு போயி, “ஆண்டவா அந்த உரிக்கிறவன கொஞ்சம் வேகமா வரச்சொல்லக்கூடாதா? ன்னு மனசுக்குள்ள வேண்டுதல்.

உரிக்க ஆள் வந்தாச்சு, உரிக்க ஆள் வந்தாச்சு, எல்லோரு வாங்க, குட்டிய அருக்கப் போகுதுன்னு என் அண்ணன் சொல்லிக் கொண்டு வந்தான்.
கால்களை மடக்கிப் பிடித்து ஒருவரும், வயிற்றுப் பகுதியை இன்னொருவர் பிடித்துக் கொண்டும், இருக்க, எனது பெரியத்தா ஆட்டை அருப்பதற்காக தயாராகி, “அருக்கும் போது எல்லோரும் தக்பீரை உரைக்க சொல்லனும் என்று கட்டளையிட

அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர் (அய்யய்யோ டிக்கெட் கொடுக்க ஆரம்பிச்சுயிருப்பாங்களோ) லாயிலாஹ இல்லல்லாஹ்ஹூ அல்லாஹ் அக்பர் (படம் போட்டு எழுத்துக்கட்டம் ஆரம்பிச்சிருக்குமோ).

இனும ஒரு நிமிசத்தக்கூட தாமதப்படுத்தக் கூடாது கிளம்புலன்னு சொல்லி ஓட்டமா ஓடி, பாட்டிகடையில நின்ன சேக்காளியயும் கூட்டிக்கிட்டு, ஏற்கனவே போட்ட பிளானில் சின்ன சேஞ்சும் பண்ணாம தியேட்டரை எட்ட, டிக்கெட் கொடுக்க என எல்லாம் டைமிங்க் ஆக இருந்தது.

படம் முடிந்து வெளியே வந்ததும், “எல ஹாரிஸு, வூட்ல ஏதாவது கேட்டா நான் முன்னால சொன்ன பொய்ய சொல்லிரு, மாட்டிக்கிட்ட அவ்வளவுதா, கொள்ளையில போறவனுங்க கொன்னெடுத்துருவானுவோ, பாத்துக்கோ

மறுநாள்.

பத்துப்பேரு படை சூள, “டேய்ய்ய்ண்டான் (பேக்ரவுண் மியூசிக்), டுபில், டுபில்லு கொள்ளகூட்ட தலைவ அடிப்பான், விஜிகாந்த், சொவத்துல ஏறி ஓங்கி மூஞ்சில் மிதிச்சு தள்ளுவான், ரத்தமா வடியும் அப்போ, டுர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு ஸ்பீடா ஆம்புலன் வந்து மீனாவ ஏத்திட்டு போவும் என பாத்த படத்த, டிக்கெட் கொடுக்காம நண்பர்களிடம் பகிர்ந்து, “பாத்திங்களால, நா எம்புட்டு தயிரியமானவ, படத்துக்குலாம் போயிட்டு வந்துட்டேன். நம்பலன்னா ஹாரிஸ்ட கேளுங்கல, நானும் அவனும் தான் போனோம்.

அதே நாள் சாயங்காளம்,

ஏத்தா, அசனப்பா, என்னத்தா உ மவ, படத்துக்கெல்லாம் போனானாம், அதே மாதிரி நானும் படத்துக்கு போறேன்னு எ மவ அழுது அடம்பிடிக்கான்.

பெரிய வீட்டில் படித்துக் கொண்டிருந்த என் காதுக்கு அது கேட்க, “போச்சுடா பத்து பேயில, எந்த பேய பெத்தவன்னு தெரியலியே? ன்னு பார்த்தால், அது மைதீனோட அத்தா

“வா யாகத் அலி, உள்ளவாயேன், வெளியில நின்னு பேசிக்கிட்டு இருக்க, என்ன ஆச்சு, என்ன சம்பவம்ன்னு என் அப்பா கேட்க, ஒன்னு விடாம மைதீன் அத்தா சொல்ல.

பஞ்சாயத்து கூடிருச்சு..................

செல்லாது, செல்லாது, செல்லாது, நான் படத்துக்கே போவல, இவண்ட சும்மா அள்ளிவிட்டேன். அவ்ளோதான்.

“இல்ல, இல்ல, ஹாரிஸ் கூட போனான், அதுவும் சேதுபதி ஐ.பி.எஸ்ஸுக்கு என மைதீன் கூற,
யாருல ஹாரிஸு, அவன கூட்டிட்டு வால, அவங்கிட்ட கேக்குறேன். அதுக்குமுன்னாடி உண்மய சொன்னீன்னா, ரெண்டு, மூணு அடியோட வுட்டுருவேன். மைனா (மைதீன்) சொல்லுதது மட்டும் உண்மயா இருஞ்சி, பேவுள்ள உன்ன கொன்னேவுடுவேன்.

இல்லத்தா, நான் சும்மதான் சொன்னேன்னு சொல்லுதோம்லா, வேணும்னாலும் மம்மஸ்த பெருத்தா பேரன் ஹாரிஸ கூட்டிக்கிட்டு வாரேன், நீங்க கேளுங்க.

கூட்டுவால,

நண்பனை நோக்கி ஓட்டமா ஓடி, “எல ஹாரிஸு ஒரு தப்பு நடந்திருச்சில, நம்ம மைனா இல்ல மைனா, அவ எங்கத்தாட்ட போட்டுகொடுத்துட்டான்ல, நாம படத்துக்கு போனது எங்கத்தாவுக்கு தெரிஞ்சிருச்சு, நான் சமாளிச்சுட்டேன். உன்ன கூட்டிட்டுவந்து சொல்ல சொல்லுது, அதனால, நீ வந்து எங்கத்தாகிட்ட, நாங்க சினிமாக்குலாம் போவல, கிரிகெட் வெளயாண்டுக்கிட்டு இருந்தோமுன்னு சொல்லி என்ன காப்பாத்துல ன்னு அர மனசோடு இருந்தவங்கிட்ட கெஞ்சி கூத்தாடி, அவன கூட்டிக்கிட்டு போயி அங்கப்பாவின் முன்னால் நிறுத்தினேன்.
யாருல நீ?, ன்னு எங்கப்பா ஹாரிஸ பார்த்து கேட்க

நா, நா, நா, நா, ம்ம்ம்ம் மம்ஸ்தன் இருக்காங்கல்லோ அவுங்க பேரன், ஹாரிஸ். (அப்பவே அவனுக்கு வியர்க்க ஆரம்பிச்சுடுச்சு)

அடே, பாத்துமா மோவனா நீ, எத்தனாவது

6 வது.

6 வதா, எல அவளுக்கு மூணு புள்ளன்னுதான கேள்விப்பட்டேன். நீ என்னன்னா 6 வதுங்க.

இல்ல. நான் ரெண்டாவது பையன், 6 வது படிக்கன்னு சொல்லவந்தேன்.

“சரி அத உடுல, விசயத்துக்கு வருவோம் முன்னு சொல்லிக்கிட்டே எங்கப்பா பிரம்ப எடுக்க, எனக்கு தெரிஞ்சு போச்சு, மாப்புள எல்லாத்தயும் உலர போரான், நாமக்கு இன்னைக்கு டங்கு நக்கா, டனக்கு நக்கான் தான்.

“ம்ம்ம் சொல்லுல என்புள்ளய சினிமாவுக்கு கூட்டிட்டு போனியா? உண்மய சொல்லிரு இல்லன்ன அவ்ளோதான், என கொஞ்சமாத்தான் அரட்டுனாரு எங்கத்தா,

ஓ, ஓன்னு ஒப்பாறி வச்சிட்டு, “நான்லா கூட்டிட்டு போவல, அவந்தா என்ன கூட்டிட்டு போனான், நா வேணா, வேணான்னு தான் சொன்னே, அதெல்லா, ஆண்டவ கண்ண குத்தமாட்டான்........................... .என நான் சொன்ன எல்லாத்தயும் ஒன்னு விடாம சொல்லிட்டான்.

அடப்பாவி படத்துக்கு போனோம்னு சொல்லுறதோட நிறுத்த வேண்டியது தானே, ஆண்டவன் கண்ண குத்துறதயெல்லாம், ஏன் இந்த எடுவட்டவன் சொல்லிகிட்டு இருக்கான். என மனசுக்குள்ள நினச்சிக்கிட்டு இருக்கும் போதே,

“அதுமட்டுமில்ல, நீங்க என்ன கூட்டுவர சொன்ன போது, அரபாத் எங்கிட்ட வந்து, எங்கத்தா படத்துக்கு போனியான்னு கேக்கும், நீ இல்லன்னு சொல்லனும்னு வேற பொய் சொல்ல சொன்னான்
சுத்தம். சும்மா இருக்குற நிலத்துக்கே தண்ணி பாச்சுரவரு எங்கப்பா, இவ உழுது, பாத்தி கட்டி, வித விதச்ச நிலத்த குடுத்தா சும்மாவா இருப்பாரு.

அப்புறம் என்ன, பத்தல் போடல, மைக் செட் வைக்கல, டியூப் லைட் கெட்டல, ஆனா, திருவிழா மட்டும் கோலாகலமாக நடந்துச்சு. ஒங்க வூட்டு அடி, எங்க வூட்டு அடியில்லைலோ, ஊர் மொத்த வூட்டு அடியும் அன்னைக்கு நமக்குத்தான்.

“ஏம்ல சவட்டு மூதி, பொய்யால சொல்லுதன்னுஎங்கப்பா பிரம்ப தூக்கி அடிக்க, கை ஓங்குன வரைக்கும் எனக்கு ஞாபகம் இருக்குது, அதுக்கபுறமா மூணு நாள் நடந்தது எனக்கு எதுமே தெரியலைன்னா, எந்த அளவுக்கு திருவிழா இருந்திருக்கும்னு தெரிஞ்சிக்கங்க.

----------------------------------------------------------------------------------யாஸிர்.

1 கருத்து: